Tuesday, August 2, 2011

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்!



முருங்கைப்பூ கூட்டு
தேவையானவை: முருங்கைப்பூ 1 கப், சின்ன வெங்காயம் 10, பச்சை மிளகாய் 2, பாசிப்பருப்பு கால் கப், மஞ்சள் தூள் 1 சிட்டிகை, உப்பு தேவைக்கேற்ப, சாம்பார்பொடி முக்கால் டீஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் 2 டீஸ்பூன், நெய் அரை ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1, கறிவேப்பிலை 1 ஆர்க்கு.
செய்முறை: முருங்கைப்பூவை சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் நெய்யை விட்டு, அதில் முருங்கைப்பூவைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக வேக வைக்கவும். அதில் நெய்யில் வதக்கிய பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து வேகவிட்டு, வெந்ததும் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்பவற்றை போட்டு தாளித்து கூட்டில் சேர்க்கவும். அனைவருக்குமே ஆரோக்கியத்தைத் தரும் இந்தக் கூட்டு, பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
கூழ் வற்றல் பொரியல்
தேவையானவை: கூழ் வற்றல் 25, சின்ன வெங்காயம் 1 கப், உப்பு தேவைக்கேற்ப, கடுகு அரை டீஸ்பூன். தாளிக்க: உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 3, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, எண்ணெய் 4 டீஸ்பூன்.
செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுடவைத்து, உப்பு சேர்த்து, அதில் கூழ்வற்றலையும் போட்டு வேகவைத்து நீரை வடித்து விடவும். பின் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து தாளிப்பவற்றை போட்டு, அவை பொரிந்து சிவந்ததும், வெங்காயம் கறிவேப்பிலையைப் போட்டு வதக்கி, வற்றலை அத்துடன் சேர்த்து கிளறி இறக்கவும்.
கூழ் வற்றல் செய்யும் முறை: 5 கப் பச்சரிசியை ஊற வைத்து, கால் கப் உப்பு சேர்த்து, முதல் நாள் மாலை நன்கு நைஸாக ஆட்டி வைக்கவும். மறுநாள் 1 கப் அரிசிக்கு 5 கப் என்ற அளவில் தண்ணீர் வைத்து கொதிக்கும்போது, அரைத்த மாவைக் கலக்கி ஊற்றவும். மாவு நன்கு வெந்ததும், Ôரிப்பன் பக்கோடாÕ அச்சில் வைத்து பிழிந்து விடவும். மறுநாள் உரித்தெடுத்து, நறுக்கிக் காய வைத்து எடுத்து வைக்கவும்.
கூழ் வற்றல் மசாலா
தேவையானவை: கூழ் வற்றல் 25, பெரிய வெங்காயம் 2, தக்காளி 1, மிளகாய்தூள் ஒன்றேகால் டேபிள்ஸ்பூன், மல்லித் தூள் அரை டேபிள்ஸ்பூன், தூள் உப்பு தேவைக்கேற்ப, கரம் மசாலா தூள் கால் டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, சோம்பு அரை ஸ்பூன், எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் 1 டீஸ்பூன்.
செய்முறை: வெங்காயத்தை மெல்லிசாக நீளவாக்கிலும் தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக்கொள்ளவும். கூழுவற்றலை சுடுதண்ணீரில் வேகவைத்து, பின் உப்பு சேர்த்து 5 நிமிடங்களில் நீரை வடித்துவிடவும். வாணலியில் எண்ணெயைச் சுடவைத்து சோம்பு போட்டு தாளித்து பெரிய வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கியதும், அதில் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். பொடிகளின் பச்சை வாடை போனதும் வற்றலை அத்துடன் சேர்த்து கிளறி இறக்கி, 1 ஸ்பூன் தக்காளி சாஸ் விட்டு கிளறி பரிமாறவும். அருமையான சைட் டிஷ் இது.
கூழ் வற்றல் குழம்பு
தேவையானவை: கூழ் வற்றல் 20, பூண்டு 20 பல், சின்ன வெங்காயம் 15, தக்காளி 1, புளி எலுமிச்சை அளவு, உப்பு தேவைக்கேற்ப, சாம்பார்பொடி இரண்டரை ஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் 7 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை.
செய்முறை: கூழ்வற்றலை கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைக்கவும் (அரை மணியிலிருந்து முக்கால் மணிநேரம்). வெங்காயம், பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மேலே கூறியுள்ள தாளிக்கும் பொருள்களை போட்டு, பொரிந்ததும் வெங்காயம்+பூண்டு சேர்த்து சற்று வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். புளியையும் உப்பையும் 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டி சாம்பார்பொடி சேர்த்து கலக்கி, வதங்கிய வெங்காயம் பூண்டு, தக்காளியுடன் ஊற்றவும். அது நன்கு கொதித்து காயில் உப்பு சார்ந்ததும், ஊறவைத்த வற்றலை அதில் இருக்கும் நீரை வடித்துவிட்டு குழம்பில் சேர்க்கவும். கால் மணிநேரம் கழித்து கெட்டியானதும் இறக்கவும்.
முருங்கைப்பூ துவட்டல்
தேவையானவை: புதிதாகப் பறித்த முருங்கைப்பூ (சுத்தம் செய்தது) 1 கப், தேங்காய் துருவல் 4 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் 10, பச்சைமிளகாய் 2. தாளிக்க: எண்ணெய் 2 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1.
செய்முறை: முருங்கைப்பூவை அலசிப் பிழிந்துவைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாகக் கீறவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிப்பவற்றை போட்டு, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பிறகு முருங்கைப்பூவை நன்கு சேர்த்து வதக்கி, லேசாக தண்ணீர் தெளித்து வேகவிடவும். அத்துடன் உப்பு சேர்த்து, சேர்ந்தாற்போல வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். சூடாக சாப்பிட வெகு சுவையாக இருக்கும் இந்த துவட்டல். உடலுக்கு மிகவும் நல்லது.
தயிர் இட்லி
தேவையானவை: இட்லி 6, தயிர் 2 கப், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2 (இரண்டாகக் கிள்ளியது), பெருங்காயம் 1 சிட்டிகை, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, கேரட் 1, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) 4 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் 3 டீஸ்பூன்.
செய்முறை: தயிரை, தண்ணீர் சேர்க்காமல் கடைந்து கொள்ளவும். அதில் உப்பு, மல்லித்தழை சேர்க்கவும். இட்லியை சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அதை தயிரில் ஊறவைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து தயிர் இட்லியில் விட்டு கலக்கிவிடவும். கேரட்டைத் துருவி மேலே தூவி, மல்லித்தழையையும் தூவி அலங்கரிக்கவும். இட்லி மிஞ்சினால் இனி கவலைப்பட வேண்டாம். தயிர் இட்லி ஆக்கிவிடுங்கள். பஞ்சாகப் பறந்துவிடும்.
சேமியா பகளாபாத்
தேவையானவை: சேமியா கால் கப், தயிர் (கடைந்தது) ஒன்றரை கப், உப்பு தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் 6, பச்சை மிளகாய் 1, இஞ்சி 1 கொட்டைப் பாக்கு அளவு.
தாளிக்க: எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 1, வறுத்த முந்திரி 3, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, மல்லித்தழை (இலைகள் மட்டும் பொடியாக நறுக்கியது) 2 டீஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, சேமியாவைக் கொட்டி, உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். (தண்ணீரை வடிக்க வேண்டாம்). வெங்காயத்தைப் பொடியாக, பச்சை மிளகாயை சிறு வட்ட வளையங்களாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, துருவிய இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, முந்திரிப் பருப்புடன் சேமியா கஞ்சியில் ஊற்றவும். பின் கடைந்த தயிரை அத்துடன் கலந்து, மல்லித்தழை தூவிப் பரிமாறவும். மாலை நேரத்துக்கான எளிய ஸ்நாக்ஸ் என்பதுடன், விருந்துகளிலும் சுவை கூட்டும் அயிட்டம் இது.
மாதுளை முத்து தயிர்ப்பச்சடி
தேவையானவை: மாதுளை முத்துக்கள் 1 கப், தயிர் ஒன்றரை கப், பெரிய வெங்காயம் சிறியதாக 1, பச்சை மிளகாய் 2, உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து பிசறி வைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து, அதில் தயிரை கலக்கவும். பரிமாறப்போகும் நேரத்தில் மாதுளை முத்துக்களையும் கலந்து பரிமாறவும். கண்ணைக் கவரும் நிறத்தில், பிரமாதமான சுவை கொண்ட தயிர் பச்சடி இது. செட்டிநாட்டுக் கல்யாண விருந்துகளில் பிரபலமானது.
பீட்ரூட் தயிர்பச்சடி
தேவையானவை: பீட்ரூட் 1, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, தயிர் ஒன்றரை கப், உப்பு தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் 3 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை.
செய்முறை: பீட்ரூட்டை கழுவி, தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாகக் கீறவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைப் போட்டு, பொரிந்து சிவந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கிளறு கிளறவும். சில நிமிஷங்கள் அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, பீட்ரூட் வெந்ததும் உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, ஆறியதும் தயிர் சேர்த்துக் கலந்து பரிமாறவும். கண்ணைக் கவரும் இந்த கலர்ஃபுல் தயிர்பச்சடி, குழந்தைகளின் ஃபேவரிட். கேரட்டையும் இதே முறையில் செய்யலாம்.
வெண்டைக்காய் தயிர்பச்சடி
தேவையானவை: வெண்டைக்காய் 6, பெரிய வெங்காயம் 1, தயிர் அரை கப், தேங்காய் துருவல் 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, சீரகம் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1, பெருங்காயம் 1 சிட்டிகை.
செய்முறை: வெண்டைக்காயை மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் லேசாக தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அதில் வெண்டைக்காயைப் போட்டுப் பொன் வறுவலாக வறுத்தெடுக்கவும். பின்னர் எண்ணெயைக் கொஞ்சம் வடித்துவிட்டு, மீதி இருக்கும் 2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதோடு அரைத்த விழுதையும் சேர்த்து, பச்சை வாடை போக வதங்கியதும் இறக்கி, ஆறியதும் தயிரில் கலக்கவும். வறுத்து வைத்திருக்கும் வெண்டைக்காய்களையும் கலந்து பரிமாறுங்கள். பரிமாறுவதற்கு முன், ஏற்கெனவே வறுத்து வைத்திருக்கும் வெண்டைக்காய் வில்லைகளை சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.
தேங்காய் கறிவடகத் துவையல்
தேவையானவை: தேங்காய் 1 மூடி (துருவிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் 4, புளி 1 சுளை, உப்பு தேவைக்கேற்ப, வறுத்த கறிவடகம் (வெங்காய வடகம்) 2, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை.
செய்முறை: தேங்காய், புளி, உப்பு, மிளகாய் ஆகியவற்றை வதக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைக்கவும். அதில் வறுத்த கறிவடகத்தைச் சேர்த்து அரைக்கவும். எடுப்பதற்கு முன், வாணலியில் எண்ணெயைச் சுடவைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் பொரித்து, அரைத்த விழுதில் கொட்டி இவற்றையும் சேர்த்து சற்று பெருபெருவென அரைத்தெடுக்கவும். வடக வாசனை தூக்கலாக இருக்கும் இந்தத் துவையல், கட்டுச்சாதத்துக்கு ஏற்ற ஜோடி. அம்மியில் அரைக்க, ருசி கூடும்.
வெங்காயம், தக்காளி சட்னி
தேவையானவை: காய்ந்த மிளகாய் 15, புளி 2 சுளை, உப்பு தேவைக்கேற்ப, தக்காளி 5, சின்ன வெங்காயம் 20, பூண்டு 4 பல், எண்ணெய் கால் கப், கடுகு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை.
செய்முறை: வெறும் வாணலியில் மிளகாயை வறுத்து கரகரப்பாக (நைஸாக அரைப்பதற்கும் சற்று முன்னதாக), பொடி செய்து கொள்ளவும். தக்காளி, பூண்டு, சின்ன வெங்காயம் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பின் 2 டீஸ்பூன் எண்ணெயை வாணலியில் விட்டு தக்காளி + புளியை தண்ணீர் சத்தில்லாமல் வதக்கவும். மிக்ஸியில் இதை விழுதாக அடித்துக்கொள்ளவும் (இதுதான் தக்காளி ப்யூரி). பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளித்து, வெங்காயம் + பூண்டை போட்டு வதக்கவும். அத்துடன் பொடித்த மிளகாய் பொடியை தூவி கிளறி, தக்காளி ப்யூரியை ஊற்றி, உப்பு + கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சட்னி சிறிது கெட்டியாகி, எண்ணெய் மேலே மிதந்து வரும்போது இறக்கி பரிமாறவும். இட்லிக்கு எடுப்பான ஜோடி இந்த சட்னி.
உப்புப் புளி
தேவையானவை: புளி 6 சுளை, உப்பு தேவைக்கேற்ப, காய்ந்த மிளகாய் 3 அல்லது 4, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, சின்ன வெங்காயம் 4, தக்காளி பாதி, சீரகம் அரை டீஸ்பூன்.
செய்முறை: தக்காளி, சின்ன வெங்காயம், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உப்பு + புளியை 2 டம்ளர் நீரில் கரைத்துக்கொள்ளவும். அதில் காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிபோட்டு, அதையும் கரைத்து தோலை எடுத்துவிடவும். பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளியைப் போட்டு கசக்கிவிட்டு கறிவேப்பிலை தூவி, சீரகத்தையும் தேய்த்துப் போட்டு கலக்கி பரிமாறவும். செட்டிநாட்டின் மிக எளிமையான சைட் டிஷ் இது. இரண்டே நிமிஷத்தில் தயாரிக்கலாம். தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள உப்பு, உறைப்பாக நன்றாக இருக்கும்.
கோசுமல்லி
தேவையானவை: பெரிய, விதையுள்ள கத்திரிக்காய் 2, சின்ன வெங்காயம் 15, பச்சை மிளகாய் 2, தக்காளி 1, உப்பு தேவைக்கேற்ப, புளி எலுமிச்சை அளவு, மல்லித்தழை சிறிதளவு,
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறவும். தக்காளி பொடியாக நறுக்கவும். உப்பையும் புளியையும் 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். கத்திரிக்காயைக் காம்பை நீக்கி, நான்காக நறுக்கி, வேகவைத்துக் கொள்ளவும். வெந்ததும், தோல் நீக்கவும். கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரில், வெந்த கத்திரிக்காயைப் போட்டு, கையால் நன்கு கரைத்து, சக்கையைப் பிழிந்து எடுத்துவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிப்பவற்றைப் போட்டு சிவந்ததும், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், கரைத்து வைத்திருக்கும் புளி + கத்திரிக்காய் கலவையை ஊற்றி, கொதித்ததும் மல்லித்தழையைத் தூவி இறக்கவும். விருப்பப்பட்டவர்கள், ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து, அதையும் கத்திரிக்காயோடு சேர்த்துப் பிசைந்துவிடலாம். இட்லி, தோசை, இடியாப்பத்துக்கு, செட்டிநாட்டில் மிகவும் பிரபலமான சைட் டிஷ் இது.
தெரக்கல்
தேவையானவை: கத்திரிக்காய் 3, உருளைக்கிழங்கு (பெரியதாக) 1, தக்காளி 1, பெரிய வெங்காயம் 1.
அரைக்க: பச்சை மிளகாய் 4, காய்ந்த மிளகாய் 6, சோம்பு அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், தேங்காய் 1 மூடி, முந்திரிப்பருப்பு 2, பொட்டுக்கடலை 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
தாளிக்க: எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், மிளகு 10, பட்டை 1 சிறிய துண்டு.
செய்முறை: கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மூன்றையும் சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை, ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். ஒரு வாணலியைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிப்பவற்றைப் போட்டுத் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய காய்கள், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின், அரைத்த விழுதையும் போட்டு, பச்சை வாசனை போகக் கிளறி, 4 அல்லது 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சேர்ந்தாற்போல வந்ததும் இறக்கி பரிமாறவும். இதுதான் செட்டிநாட்டு தெரக்கல். இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டாவுக்கான நல்ல ஜோடி. (கேரட், பட்டாணி, பட்டர் பீன்ஸ் சேர்த்தும் செய்யலாம்).
தக்காளி பச்சடி
தேவையானவை: துவரம்பருப்பு கால் கப், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, பழுத்த தக்காளி 4, சின்ன வெங்காயம் 1 கைப்பிடி, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, சாம்பார் பொடி 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, மல்லித்தழை அரை கப், எண்ணெய் 3 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 1.
செய்முறை: தக்காளியை சிறு சதுரங்களாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்துகொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக அவித்துக் கொள்ளவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, சாம்பார் பொடி சேர்த்து வேகவிடவும். வெந்ததும் உப்பு சேர்த்து, வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு தாளித்து, பருப்பு, தக்காளி கலவையில் சேர்க்கவும். இறக்கும்போது நறுக்கிய மல்லித்தழையையும் தூவி கொதித்ததும் இறக்கிவிடவும். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும், சாதத்துக்கு தொட்டு சாப்பிடவும் ஏற்ற பச்சடி இது.
பலவகை காய்களின் பிரட்டல்
தேவையானவை: கேரட் 2, உருளைக்கிழங்கு 1, பச்சைப் பட்டாணி கால் கப், பட்டர்பீன்ஸ் பயறு கால் கப், காலிஃப்ளவர் 4 துண்டுகள், தக்காளி 1, பெரிய வெங்காயம் 1. தாளிக்க: எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன். அரைக்க: காய்ந்த மிளகாய் 12, சோம்பு அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் 4 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை: கேரட், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றை சிறு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும். காலிஃப்ளவரை உப்பு சேர்த்த நீரில் போட்டு சுத்தம் செய்யவும். கேரட், பட்டாணி, பட்டர்பீன்ஸ் ஆகியவற்றை உப்பு சேர்த்து வேகவைக்கவும். பாதி வெந்துகொண்டிருக்கும்போது, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் ஆகியவற்றையும் சேர்த்து வேகவிட்டு, தண்ணீரை வடித்து விடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து, விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தாளித்து, வெங்காயம் + தக்காளியைப் போட்டு வதக்கி, அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும், வெந்த காய்களையும் சேர்த்து நன்கு கிளறி, சுருள வெந்ததும் இறக்கவும். சாதத்துக்கு மட்டுமல்ல, சப்பாத்தி, பூரி, பிரெட்டுக்கும் அருமையான ஜோடி இந்த பிரட்டல்.
காய் மண்டி
தேவையானவை: அரிசி கழுவிய கெட்டியான மண்டி (கழுநீரைத்தான் செட்டிநாட்டில் மண்டி என்போம்) 6 கப், கத்தரிக்காய் 1, முருங்கைக்காய் பாதி, கீரைத்தண்டு 6 துண்டு, வாழைக்காய் பாதி, வள்ளிக்கிழங்கு அல்லது உருளைக்கிழங்கு 4 துண்டுகள், மாங்காய் 4 துண்டுகள் அல்லது மாங்காய் வற்றல் 6, கூழ்வற்றல் 6, வறுத்த தட்டைப்பயறு கால் கப், பச்சை மிளகாய் 7, சின்ன வெங்காயம் 15, பலா விதை 5, உப்பு தேவைக்கேற்ப, புளி எலுமிச்சை அளவு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 1, எண்ணெய் 3 டீஸ்பூன்.
செய்முறை: கீரைத்தண்டையும், முருங்கைக்காயையும் நீளத் துண்டுகளாக நறுக்கவும். கத்திரிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கை சதுரத் துண்டுகளாக நறுக்கவும். கூழ்வற்றல், மாவற்றலை வெந்நீரில் ஊறவைக்கவும். சின்ன வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். பலா விதையைத் தோல் நீக்கி, இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கெட்டியான அரிசி மண்டி ஒரு கப் ஊற்றி, புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். மீதமுள்ள மண்டியை கொதிக்கவிட்டு, முதலில் தட்டைப்பயறைப் போட்டு சிறிது வெந்ததும், கத்தரிக்காய், வெங்காயம், முருங்கைக்காய், பலாவிதை, தக்காளி, பச்சைமிளகாய், வாழைக்காய், வள்ளிக்கிழங்கு, மாங்காய் அல்லது மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் கூழ்வற்றல், கீரைத்தண்டு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் உப்பு சேர்க்கவும். பிறகு, கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி, கொதிக்க விட்டு கெட்டியானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துக் கொட்டி இறக்கவும். இரண்டு நாளானாலும் இந்த மண்டி கெடாது. கட்டுச்சாதம், முக்கியமாக தயிர்சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன் இந்த மண்டி.
சேனைக்கிழங்கு குண்டு வறுவல்
தேவையானவை: சேனைக்கிழங்கு (தோல் நீக்கி, பட்டாணி அளவு துண்டுகளாக நறுக்கியது) 1 கப், உலர்ந்த திராட்சை 20, வேர்க்கடலை 2 டேபிள்ஸ்பூன், அச்சுக் கற்கண்டு 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு (வறுத்துப் பொடியாக நறுக்கியது) 4, எண்ணெய் கால் கப், உப்பு தேவைக்கேற்ப, மிளகாய் தூள் 2 டீஸ்பூன்.
செய்முறை: வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அதில் சேனைக்கிழங்கைப் போட்டு, நன்கு மொறுமொறுப்பாக வறுத்தெடுத்து, அதில் உப்பு, மிளகாய்தூள் பிசறவும். வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்தெடுக்கவும். பின்னர் முந்திரிப்பருப்பையும் கடைசியாக உலர்ந்த திராட்சையையும் வறுத்தெடுகக்வும். பிறகு அச்சுக் கற்கண்டுடன் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து குலுக்கி விட்டு பரிமாறவும். விருந்துகளுக்கு ஏற்ற, விசேஷமான அயிட்டம் இது. சிறு பிள்ளைகள் ரசித்து உண்பார்கள்.
சேனைக்கிழங்கு சாப்ஸ்
தேவையானவை: சேனைக்கிழங்கு கால் கிலோ, மஞ்சள் தூள் 1 சிட்டிகை, எண்ணெய் தேவைக்கேற்ப.
அரைக்க: தேங்காய் 1 மூடி, பூண்டு 4 பல், உப்பு தேவைக்கேற்ப, காய்ந்த மிளகாய் 12, சோம்பு 1 டீஸ்பூன்.
செய்முறை: சேனைக்கிழங்கை தோல் சீவி, சற்றுப் பெரிய சதுர வில்லைகளாக நறுக்கவும். அவற்றை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, வேக வைத்து, நீரை வடித்தெடுக்கவும். அரைக்கக் கொடுத்திருக்கும் பொருள்களை, விழுதாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுதை, வேகவைத்த கிழங்குத் துண்டுகளின் இருபுறமும் தடவவும். பின்னர் தோசைக்கல்லைக் காயவைத்து, அதில் 3 அல்லது 4 துண்டுகளாகப் பரப்பிவைத்து, அதைச் சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக விடவும். பின்னர் திருப்பிவிட்டு, மறுபுறமும் எண்ணெய் விட்டு நன்கு ரோஸ்ட்டாக வேகவிட்டு எடுக்கவும்.
பீட்ரூட் கோளா உருண்டை
தேவையானவை: பீட்ரூட் 1, பெரிய வெங்காயம் 1, துவரம்பருப்பு அரை கப், எண்ணெய் 1 கப்.
அரைக்க: காய்ந்த மிளகாய் 12, சோம்பு அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை: பீட்ரூட்டைக் கழுவி, தோல் நீக்கி துருவவும். துவரம்பருப்பை ஊறவைத்து, பெருவெட்டாக அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். துருவிய பீட்ரூட், வெங்காயம், அரைத்த பருப்புக் கலவை மூன்றையும் பிசறி, வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளிப் போட்டு, வெந்ததும் அரித்தெடுக்கவும். அடுப்பை குறைந்த தணலில் வைத்துக்கொள்ளவும். இது, மதிய உணவுக்கு மட்டுமல்ல. மாலை நேரத்துக்குமான டிபன்.
மீல்மேக்கர் குழம்பு
தேவையானவை: சோயா உருண்டை அல்லது மீல்மேக்கர் 15, சின்ன வெங்காயம் 10, பூண்டு 10 பல், தக்காளி 1, சாம்பார்பொடி 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, புளி 1 எலுமிச்சை அளவு. அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு 4, சோம்பு கால் டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெங்காயத்தையும் பூண்டையும் தோல் உரித்து வைத்துக்கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். சோயா உருண்டைகளை, கொதிக்கும் நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, பிறகு குக்கரில் 1 விசில் வரும் வரை வேகவைக்கவும். நீரை வடித்துவிடவும். வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்து, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் தக்காளியையும் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு உப்பு, புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார்பொடி சேர்க்கவும். நன்கு கொதித்ததும், சோயா உருண்டைகளை குழம்பில் போட்டு, சோயா உருண்டைகளில் குழம்பு சாரும் வரை கொதிக்க விடவும். குழம்பு சிறிது கெட்டியானதும் அரைத்ததைக் கரைத்து ஊற்றி, கொதித்ததும் இறக்கிவிடவும்.
சோள சூப்
தேவையானவை: முழு சோளம் 1, தக்காளி 2, பச்சை மிளகாய் 1, துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் 1 கப், உப்பு தேவைக்கேற்ப, மஞ்சள்தூள் சிட்டிகை. தாளிக்க: நெய் 2 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய்தூள் 1 சிட்டிகை.
செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை வகுந்துகொள்ளவும். சோளத்தை வேகவைத்து, உதிர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அதிலிருக்கும் நீரை மட்டும் வடிகட்டி, சக்கையை எடுத்துவிடவும். ஒரு வாணலியில் நெய் விட்டு, சோம்பு, ஏலக்காய்தூள் போட்டு தாளித்து, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பருப்பு வேகவைத்த தண்ணீரையும் அதில் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, சோளம் அரைத்து வடிகட்டிய தண்ணீரையும் சேர்க்கவும். அத்துடன் மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். பிரஷர் போனதும் திறந்து சூடாகப் பரிமாறவும். செட்டிநாட்டுக் கல்யாண விருந்தில் பிரபலமான சூப் இது.
பருப்பு அரைத்துக் கொதிக்க வைத்தது
தேவையானவை: துவரம்பருப்பு அரை கப், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, உப்பு தேவைக்கேற்ப, புளி நெல்லிக்காய் அளவு, மாவற்றல் 6, சின்ன வெங்காயம் 10.
அரைக்க: காய்ந்த மிளகாய் 12, சோம்பு அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், உப்பு சிறிது.
தாளிக்க: எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன், மிளகு 10, கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், பூண்டு பல்.
செய்முறை: பருப்பை ஊறவைத்து, மஞ்சள்தூள் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவற்றலை வெந்நீரில் ஊறவைக்கவும். வெங்காயத்தை தோலுரித்து, நைஸாக நறுக்கவும். பூண்டை நசுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்தெடுக்கவும். உப்பு, புளியைக் கரைத்து வடிகட்டி, அதில் அரைத்த பருப்பு மற்றும் மசாலாவைச் சேர்த்து, 5 கப் நீர் சேர்த்துக் கலக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தாளிப்பவற்றை சேர்த்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன், ஊறவைத்த மாவற்றலையும் போட்டு வதக்கி, அதில் கரைத்து வைத்திருக்கும் பருப்புக் கலவையை ஊற்றி, பூண்டையும் போட்டு, அடுப்பைக் குறைந்த தணலில் வைத்து, அடிப்பிடிக்காமல் கிளறவும். கரண்டியால் அடிக்கடி கிளறி, பச்சை வாசனை போய், கெட்டியாக வற்றியதும் இறக்கவும். செட்டிநாட்டின் பிரபலமான அயிட்டம் இது. பருப்பு அரைத்துக் கொதிக்க வைத்தால் வாசனை ஊரையே தூக்கும். கேழ்வரகு கூழுக்கும், குருணை சாததுக்கும் தொட்டு சாப்பிட அருமையான ஜோடி.
நச்சு கெட்ட கீரை சூப்
தேவையானவை: நச்சு கெட்ட கீரை இலை 6, பெரிய வெங்காயம் 1, தக்காளி 2, பச்சை மிளகாய் 2, நெய் 2 டீஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன், மிளகு 10, உப்பு தேவைக்கேற்ப, பட்டை 1 சிறிய துண்டு, துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, குழைய வேகவைத்து, கரைத்துக் கொள்ளவும். கீரையைக் கழுவி, நரம்பைக் கிள்ளிவிட்டு, பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக, நீளமாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறவும். வாணலியில் எண்ணெய் + நெய் விட்டு, காய்ந்ததும் கீரை, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்புடன் 3 கப் தண்ணீர் சேர்த்து, வதக்கிய கீரைக் கலவையில் ஊற்றவும். அத்துடன் உப்பு சேர்த்து, குக்கரில் வைக்கவும். ஒரு விசில் வந்ததும், அடுப்பை மிகக் குறைந்த தீயில் 5 நிமிடம் வைத்திருந்து, அடுப்பை அணைக்கவும். ஆறியதும் திறந்து, நெய்யில் சோம்பு, மிளகு, பட்டை தாளித்துக் கொட்டி, கொதிக்கவிட்டு இறக்கவும்.
வாழைக்காய் கல்யாணப் பொரியல்
தேவையானவை: நன்கு முற்றின வாழைக்காய் 2, உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் கால் கப், சோம்பு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன். அரைக்க: சோம்பு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 12, பொட்டுக்கடலை 2 டீஸ்பூன், கசகசா 1 டீஸ்பூன்.
செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி, சற்று கனமாக நீளத் துண்டுகளாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை பெருவெட்டாக அரைத்து, உப்பு சேர்த்து வாழைக்காய் துண்டுகளில் பிசறவும். பின்னர் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, சோம்பு தாளித்து, வாழைக்காய் துண்டுகளைப் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும். செட்டிநாட்டுக் கல்யாண விருந்தில், இது ஸ்பெஷல் அயிட்டம். "வாழைக்காய் கருவாட்டுப் பொரியல்" என்றும் இதைச் சொல்வார்கள்.
வாழைப்பூ வடை
தேவையானவை: வாழைப்பூ 2 கைப்பிடி அளவு, பெரிய வெங்காயம் 1, துவரம்பருப்பு அரை கப், காய்ந்த மிளகாய் 12, சோம்பு அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் 1 கப், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிது.
செய்முறை: வாழைப்பூவை நரம்பை எடுத்து சுத்தம் செய்யவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பை ஊறவைத்துப் பெருவெட்டாக அரைத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய் முதல் உப்பு வரையிலான பொருட்களை, லேசாக தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். வாழைப்பூவை அம்மியில் வைத்து, ஒன்றிரண்டாக அரைத்து, அதன் துவர்ப்பு போக, நன்றாகப் பிழிந்துவிடவும். அத்துடன் அரைத்த விழுது, பருப்புக் கலவையைக் கலந்து வெங்காயம், பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக வேகவைக்கவும். ருசியான வாழைப்பூ வடை ரெடி.
மிளகாய் மண்டி
தேவையானவை: பச்சை மிளகாய் 10, மொச்சை 4 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் 10, பூண்டு 10, புளி எலுமிச்சை அளவு, உப்பு தேவைக்கேற்ப, அரிசி கழுவிய கெட்டி மண்டி 5 கப், வெல்லத்தூள் 1 டீஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் 7 டேபிள்ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, பெருங்காயம் 1 சிட்டிகை.
செய்முறை: பச்சை மிளகாயை அரை இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், பூண்டை தோலுரித்துக்கொள்ளவும். மொச்சையை வறுத்து, குக்கரில் வேகவைத்து, நீரை வடித்துக்கொள்ளவும். அரிசி கழுவிய மண்டியில் உப்பு, புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்து, பூண்டு, வெங்காயம், மிளகாயைப் போட்டு வதக்கவும். வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி, கொதித்ததும் மொச்சையையும் போட்டு, கொதிக்கவிடவும். நன்கு கெட்டியாகி, எண்ணெய் மேலே மிதக்கும் சமயம் இறக்கி, வெல்லத்தூள் தூவிப் பரிமாறவும். ‘சுள்’ளென்ற உறைப்பும் லேசான இனிப்புமாக இருக்கும் இந்த மிளகாய் மண்டி இருந்தால், பழைய சாதம் கூட பஞ்சாமிர்தமாக இறங்கும்.
சுண்டைக்காய் பச்சடி
தேவையானவை: சுண்டைக்காய் 1 கப், தக்காளி 1, சின்ன வெங்காயம் 20, பச்சைமிளகாய் 2, உப்பு தேவைக்கேற்ப, துவரம் பருப்பு கால் கப், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, புளி 2 சுளை, சாம்பார்பொடி முக்கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 6 டீஸ்பூன்.
செய்முறை: குக்கரில் துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை அவியலாக வேகவைத்துக் கொள்ளவும். சுண்டைக்காயை காம்பு நீக்கி, நான்காக நறுக்கவும். (சுண்டைக்காயை நறுக்கியதும் சமைக்க வேண்டும். இல்லையெனில் கறுத்துவிடும். தண்ணீரில் சிறிது மோர் கலந்து, அதில் சுண்டைக்காயை நறுக்கிப் போட்டு, பிறகு பிழிந்துபோட்டு வதக்கலாம்). சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி, நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை நடுவில் வகுந்துகொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சுண்டைக்காய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கியெடுக்கவும். பிறகு தக்காளியையும் சேர்த்து, அனைத்தையும் பருப்போடு போட்டு வேகவிடவும். சாம்பார்பொடியை சேர்த்து வேகவிடவும். காய் வெந்ததும், உப்பு, புளி கரைத்து ஊற்றவும். பச்சடி நன்கு கொதித்து, கெட்டியானதும் (கூட்டு பதத்தில்) கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி இறக்கவும். செட்டிநாட்டு சமையலில், பச்சடிக்கு மிகவும் முக்கியமான இடம் உண்டு. சாதத்துக்கு பிசைந்து சாப்பிடவும், தொட்டுக்கொள்ளவும் ஏற்றது. வயிற்றுக்கு கேடு செய்யாத, சத்தான சைட் டிஷ்.
புளி இல்லாக் குழம்பு
தேவையானவை: சின்ன வெங்காயம் 10, தக்காளி 2, பூண்டு 2 பல். அரைக்க: சாம்பார்பொடி ஒன்றரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் (தோல் உரித்தது) 2, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, எண்ணெய் 3 டீஸ்பூன், மல்லித்தழை சிறிது.
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டை நசுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். இரண்டரை கப் தண்ணீரில் அரைத்த விழுதைக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, கரைத்துவைத்திருக்கும் கலவையை ஊற்றி, நசுக்கிய பூண்டைப் போட்டு, கொதித்ததும் இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும். வித்தியாசமான ருசி தரும் இந்தக் குழம்பு, சாதத்தில் பிசைந்து சாப்பிட ஏற்றது.

Monday, August 1, 2011

பிசினஸ் ஸ்பெஷல் !


சூப்பர் டிப்ஸ்...

சூப்பர் டிப்ஸ்...
''அம்மா, நான் படிக்கறதை நிறுத்திட்டு, பிசினஸ் பண்ணி சம்பாதிக்கப் போறேன்!''

''என்னது... படிப்பை நிறுத்தப் போறியா...? படிக்கறது நாலாங்கிளாஸ். அதை நிறுத்திட்டு என்ன பிசினஸ் பண்ணிக் கிழிக்கப் போற?''

''மூணாங்கிளாஸ் பசங்களுக்கு டியூஷன் எடுக்கப்போறேன்!''

- என்ன... படித்ததுமே 'குபுக்' என்று சிரிப்பு பொங்கிக் கொண்டு வருகிறதா? கூடவே, இந்த 'எஸ்.எம்.எஸ்' ஜோக் புறப்பட்டதன் அடிநாதம்... இந்த உலகமே பிசினஸ் எனும் ஒரு புள்ளியை மையமாக வைத்துதான் சுழன்று கொண்டிருக்கிறது என்பதும் புரிந்திருக்குமே!

ஆம், எடுத்ததெல்லாம் பிசினஸ் என்பதாகிக் கொண்டிருக்கும் 'பிசினஸ் பெருங்காலத்தில்' நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதிமனிதனின் மட்பாண்டத்தில் ஆரம்பித்து, இன்றைய இன்டர்நெட் வரை எதை எடுத்தாலும் பிசினஸ்தான். இத்தகைய சுற்றுச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, தோள் கொடுக்கும் உற்ற தோழிதான் இனி படையெடுக்கும் அத்தனை டிப்ஸ்களும்!

இணையதளம்...அது உங்கள் களம்!

1. விளம்பரத்துறை அளிக்கும் வாய்ப்புகள் எக்கச்சக்கம். கற்பனை வளம்மிக்க வாசகங்கள் எழுதுவோர் 'ஃப்ரீலான்சர்' (Freelancer) என்ற வகையில் காப்பிரைட்டராக விளம்பர ஏஜென்சிகளுடன் பணியாற்றலாம். மிகப்பெரிய நிறுவனங்கள்கூட அவர்களுடைய தமிழ் விளம்பரங்களில் ஏடாகூடமாகத் தடுமாறியிருப்பதை அடிக்கடி காண முடியும். இதிலிருந்தே நல்ல தமிழ், கற்பனை வளம், சந்தைப்படுத்துதல் பற்றிய புரிதல்... இவை மூன்றும் இருப்பவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். www.freelanceindia.com என்ற இணையதளத்தில் நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வது இப்படிப்பட்ட வாய்ப்புகள் நம்மைத் தேடிவர உதவும்.

2. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்தை, இணையத்தில் பிரபலமாக்கும் வித்தைதான் எஸ்.இ.ஓ. (SEO-Search Engine Optimisation) அதிகம் பிரபலமாகாத... ஆனால், வேகமாக வளர்ந்து வரும் துறை இது. முறையான பயிற்சி பெற்றால், துணிந்து களம் இறங்கலாம், இணையவெளிக்குள்! இதைப் பயிற்றுவிக்கும் இணையம் மூலமாகவே ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்!

3. வலைப்பூ... ஒரு வரப்பிரசாதம். அதாங்க நெட்ல பிளாக் எழுதுவது. 'பொழுது போகாதவர்களின் இணைய விளையாட்டு அது!' என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நீங்கள் இருந்தாலோ, அல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராக இருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூ. போதுமான அளவு பார்வையாளர்கள் உங்கள் வலைப்பூவுக்கு உருவாகிவிட்டால், தங்கள் நெட்வொர்க்கில் வந்து இணையுமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் போவது யார் தெரியுமா... சாட்சாத் கூகுள்! ஆம், தன்னுடைய வாடிக்கையாளர்களின் விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் கூகுள் கொண்டு வந்து சேர்க்கும். இதற்கு பிரதிஉபகாரமாக, தன்னுடைய விளம்பர வருமானத்தில் உங்களுக்கு விகிதாச்சார பங்கு வைக்கும் கூகுள்! இதை மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்து காசு பார்ப்பவர்கள் அயல்நாடுகளில் எக்கச்சக்கம்.

4. www.franchiseindia.com போன்ற இணையதளங்களுக்குப் போய் பாருங்கள். சொற்ப முதலீட் டில் பெரிய நிறுவனங்களின் பிரான்சைஸ் வாய்ப்புகள் குவிந்திருப்பதைக் காணலாம். இதில் உங்களுக்கு ஆர்வமிருக்கும் துறையில் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து, நன்கு விசாரித்துத் தொழில் தொடங்கலாம்.

5. இபே (ebay) போன்ற நம்பிக்கையான வலைதளங்களில் பொருட்களை வாங்கி விற்பது ஒரு லாபகரமான வேலை. சிறிது நாள் இந்த 'இபே' செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்தபின் களத்தில் இறங்குவது நல்லது.

6. வெப் டெவலப்பர் – இப்போதைய ஹாட் வேலைகளில் ஒன்று. வீட்டில் இருந்தபடியே தனியாருக்குத் தேவையான வலைதளங்கள் உருவாக்கு வதுதான் இந்த வேலையே. இணையத்தில், இதற்கென இருக்கும் பகுதிகளில் உங்களைப் பற்றி ஒரு விளம்பரம் கொடுத்தால் வேலை தேடி வர வாய்ப்பு உண்டு.

7. 'புரூஃப் ரீடிங்', 'எடிட்டிங்' போன்ற வேலைகளைச் செய்வதற்கு இப்போது நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதிலும், வீட்டில்இருந்தபடியே செய்யத் தயாராக இருந்தால் வரவேற்பு நன்றாகவே இருக்கும். பத்திரிகை அலுவலகங்கள், பதிப்பகங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால்... வாய்ப்புகள் கிடைக்கும்.

8. டைப்பிங் நன்றாகத் தெரிந்தால் டேட்டா என்ட்ரி வேலை செய்யலாம். வீட்டில்இருந்தபடியே ஆவணங்களை கம்ப் யூட்டரில் டைப் செய்து ஏற்ற வேண்டும். பெரும்பாலும் அதுதான் வேலை. இந்த வேலைக்காக ஆள் கேட்டு பேப்பரில் வரும் விளம்பரங்களில் தொடர்புகொண்டு பணி தேடலாம். அதோடு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை ஏற்கெனவே பணி செய்பவர்களிடம் உறுதி செய்வதும் முக்கியம்.

9. வீட்டில் நான்கு கம்ப்யூட்டர் வைக்க இடமிருந்தால் போதும்... குழந்தைகளுக்கு கம்ப் யூட்டர் பயிற்சி கொடுக்கும் தொழிலை ஆரம்பிக்கலாம். அளவான வருமானத்துக்கும், உங்களின் பொழுது போக்குக்கும் இது உத்தரவாதம்.

10. கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தெரிந்தால்... வீட்டிலேயே ரிப்பேர் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். கம்ப்யூட்டர்தான் என்றில்லை... எந்தெந்த துறையில் எல்லாம் ரிப்பேர் பார்க்கும் திறமை உங்களுக்கு உண்டோ, அதிலெல்லாம் நுழையலாம்.

வீடே தொழிற்பேட்டை!

உங்கள் வீட்டைச் சுற்றி டெய்லரிங் கடைகள், ஹேட்டல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், பெரிய அபார்ட்மென்ட்கள் என்று இருந்தால், ஏகப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

11. வீட்டுக்கு அருகில் டெய்லரிங் கடை இருந்தால், பட்டன் தைத்தல், ஹெம்மிங் செய்தல், எம்ப்ராய்டரி என்று துணைத்தொழில்களை அவர்களிடம் இருந்து கேட்டுவாங்கி செய்து கொடுக்கலாம்.

12. ஹோட்டல்கள் மிகுந்த ஏரியா என்றால்... இலை மற்றும் தண்ணீர் சப்ளை செய்வ தற்கான வாய்ப்பை கேட்டுப் பெறலாம். சில ஹோட்டல் களில் மசாலா அரைத்துத் தருவது, பாத்திரம் கழுவித் தருவது போன்ற வேலைகளையே கான்ட்ராக்ட் ஆக தருகிறார்கள். ஆர்வம் இருப்பின் ஆட்களை வைத்துக் கொண்டு அதையும் முயற்சிக்கலாம்.

13. கடை வீதியாக இருந்தால், பல கடைகளுக்கு வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்க வேண்டிய வேலை இருக்கும். இதையும் கான்ட்ராக்ட் ஆக எடுத்து செய்தால்.. அதிலிருந்து ஒரு லாபத்தைப் பார்க்கலாம்.

14. வீட்டுக்குக் குறைந்த பட்சம் இரண்டு செல்போன் வைத்திருப்பார்கள். அதனால் ரீ-சார்ஜ் கூப்பன்கள் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம். மொத்தமாக நீங்கள் ரீ-சார்ஜ் கூப்பன் வாங்கும்போது சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திடம் இருந்து கமிஷன் கிடைக்கும்.

15. மொத்த விலையில் பாக்கெட் பால் வாங்கி, நீங்களாகவோ அல்லது ஆள் வைத்தோ வீடு வீடாக பால் சப்ளை செய்யலாம். வீட்டில் எப்போதும் ஸ்டாக் வைத்திருந்தால் தேவைப் படுபவர்களுக்கு விற்கலாம். தயிர், மோர், தண்ணீர் கேன் மற்றும் பாக்கெட் மாவு போன்றவற்றை விற்பனை செய்தால் கூடுதல் லாபம்.வீட்டிலேயே போதுமான இடவசதி இருந்தால்... குழந்தைகளுக்குரிய புத்தகங்களை வைத்து வாடகை நூலகம் நடத்தலாம்.

16. அண்டை வீட்டுப் பெண்களின் புடவைகளை சேகரித்து, நாமே டிரைவாஷ் செய்து தரலாம். அல்லது டிரைவாஷ் கடைகள் மூலம் செய்து தந்து அதற்கான கமிஷனைப் பெற்றுக் கொள்ளலாம்.

17. அண்டை வீடுகளில் அலுவலகம் செல்பவர்களாக இருந்தால், அவர்களுடைய மின்சாரம், தொலைபேசி போன்றவற்றின் கட்டணங்களைச் செலுத்துவது, சமையல் கேஸ் புக் செய்வது போன்ற வேலைகளை செய்து கொடுத்து கமிஷன் பெறலாம்.

18. வெட்டிங் பிளானர் என்பது திருமணங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணி. திருமண அழைப்பிதழ் எங்கே அச்சடிக்கலாம் என்று தொடங்கி, என்ன மாதிரியான சாம்பார் வைப்பது என்பது வரை பிளான் பண்ணும் வேலை. திறமையான சிலர் வேலைக்கு இருந்தால் மொத்தமாக ஆர்டர் பிடித்து நல்ல லாபம் ஈட்டலாம்.

19. ஒரு வீட்டுக்கு என்னென்ன தேவைப்படும் என்பதை பட்டியலிடுங்கள். அவற்றில் சிலவற்றைச் செய்து தரும் ஏஜென்ஸி போல செயல்படலாம். உதாரணமாக, வீடுகளுக்கு அலாரம் அமைப்பது, கொசு வராமல் ஜன்னல்களில் வலை அடிப்பது இப்படி சில. இதற்கான நிறுவனங்களை இணையதளம் வழியாக கண்டறிந்து மொத்த விலையில் கொள்முதல் செய்து, பின்னர் நிறுவனங்கள், வீடுகளில் கேன்வாஸ் செய்து ஆர்டர் எடுக்கலாம்.

20. உங்கள் வீட்டில் விசாலமான ஹால் அல்லது எக்ஸ்ட்ரா ரூம் இருந்தால், கம்ப்யூட்டர் கேம் ஆரம்பிக்கலாம். அக்கம் பக்கத்து குழந்தைகளை அழைத்து விஷயத்தைச் சொன்னால்... அந்த ஏரியாவுக்கே விஷயம் ஈஸியாக பரவிவிடும். மணிக்கு இவ்வளவு ரூபாய் என கணக் கிட்டு காசு பார்க்க லாம்.

கைகொடுக்கும் இயந்திரங்கள்!

வீட்டிலேயோ அல்லது சிறிய அளவிலான கடையிலேயோ வைத்து பிசினஸ் செய்யும் வகையில் எண்ணற்ற இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில கீழே அணி வகுக்கின்றன. உங்கள் வசதிக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.

21. மெழுகுவர்த்தி மெஷின்: 700 ரூபாயில் தொடங்கி 45 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. சிறிய மெஷினில் ஒரு மணி நேரத்தில் 55 மெழுகுவர்த்திகள் செய்யலாம். ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் பெரிய மெஷின் வாங்கலாம். இதில் 500 முதல் 1,000 மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம்.

22. சாக்பீஸ் மெஷின்: இதன் விலை 15 ஆயிரம் ரூபாய். நாள் ஒன்றுக்கு 10 கிலோ அளவுக்கு சாக்பீஸ் தயாரிக்கலாம்.

23. பவுச் மெஷின்: 1 ரூபாய், 2 ரூபாய் என்று விற்பனை செய்யப்படும் ஊறுகாய், வாஷிங் பவுடர், எண்ணெய் போன்ற பொருட்களை சாஷே பாக்கெட்டுகளில் அடைத்துத் தரும் மெஷின் இது. விலை ஒரு லட்சம். 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கலாம்.

24. பாப் கார்ன் மெஷின்: விலை 70 ஆயிரம் ரூபாய். மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இந்த மெஷினை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தால், நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.

25. பேப்பர் கப் மெஷின்: இதில் செமி ஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகை இருக்கிறது. ரூ. 5 லட்சம் முதல் 18 லட்சம் வரை விற்கப்படுகிறது (18 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும்போது, குறிப்பிட்ட கால அளவுக்கு மூலப்பொருட்களையும் சப்ளை செய்வார்கள். ஒரு வருட வாரன்ட்டியும் உண்டு). இதில், பேப்பர் பேக் கூட தயாரிக்கலாம்.

26. ஜூட் பேக் மெஷின்: சணல் பைகள், சணல் மிதியடி போன்றவை தயாரிக்கும் மெஷின் இது. 8 ஆயிரம் ரூபாயில் தொடங்கி பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. 2 மெஷினை வாங்கிப் போட்டு, ஒரு மாஸ்டர், 2 வேலையாட்களை வைத்தால்.. நல்ல லாபம் கிடைக்கும்.

27. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைக் குறைப்பது போன்றவை இப்போது அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. சணல் பைகள், பிளாஸ்டிக் பைகளின் இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்த வணிகம் வளரும் நிலையிலிருக்கும்போதே இதில் நுழைந்து பழகிக் கொண்டால்... பெரிய வருங்காலம் உண்டு (மேலும் விவரங்களுக்கு: ஷ்ஷ்ஷ்.ழீutமீ.நீஷீனீ).

பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிகளின் அருகில் நீங்கள் குடியிருந்தால் பல்வேறு வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன...

28. கேன்டீன் ஆர்டர் எடுக்கலாம்.

29. மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆட்டோக்கள் வாங்கி வாடகைக்கு விடலாம்.

30. பள்ளியின் அனுமதியுடன் ஸ்டேஷனரி கடை வைக்கலாம்.

31. டெய்லரிங் தெரிந்திருந்தால் பள்ளியில் மொத்தமாக ஆர்டர் எடுத்து யூனிஃபார்ம் தைத்துத் தரலாம்.

32. பள்ளிக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ ஜெராக்ஸ் கடை வைக்கலாம். கம்ப்யூட்டர் இருப்பின் பிரின்ட் எடுத்து தரும் வேலையையும் செய்யலாம்.

33. புத்தகங்களை பைண்டிங் செய்து தரும் வேலை நன்றாக கைகொடுக்கும்.

34. இப்போதெல்லாம் பள்ளிகளில் கிராஃப்ட் வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, நீங்கள் ஓரளவுக்கு அதில் கில்லாடி எனில், அக்கம் பக்கமிருக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தரச்சொல்லி உங்களை மொய்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பயிற்சியிலேயே பணம் பார்க்கலாம்!

35. 'நேர்மறை சிந்தனை, போதுமான பேச்சுத்திறன், தமிழ் மற்றும் ஆங்கில அறிவு... இதெல்லாம் எனக்கு உண்டு!' என்பவர்களை, மனிதவளத்துறை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. உங்கள் பேச்சைக் கேட்டு இதுவரை உங்கள் நட்பு வட்டம் மட்டுமே உத்வேகம் அடைந்திருக்கும். இனி, அதை உங்கள் தொழில் அடையாளமாக மாற்றிக் கொண்டு சுற்றுப்புறத்திலிருக்கும் பள்ளிகளை முதலில் அணுகுங்கள். கல்லூரி அளவில் பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றைப் பிரித்து மேய்வதற்கு பெரிய பெரிய புலிகள் இருக்கும்போது, பள்ளிகளில் இதற்கான முயற்சிகள் பெருமளவில் நடைபெறுவதில்லை என்பதே உங்களுக்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஆளுமை வளர்ச்சி பற்றிய டிப்ஸ், குட்டிக் குட்டி நீதிக் கதைகள் எனத் தொடங்கி சிறப்பான ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேஷனைத் தயார் செய்யுங்கள். நியாயமான சிறு தொகைக்கு பயிற்சி வகுப்பு எடுத்து, வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்படி செய்யுங்கள். முதல் மூன்று அல்லது நான்கு பள்ளிகள் தான், பிறகு உங்கள் டைரி எப்பவுமே ஹவுஸ்ஃபுல்தான்!

36. பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் திறமையை மேம்படுத்த பல்வேறு டிரெய்னிங் புரோக்ராம்களை நடத்துகின்றன. மென்கலைகள், கம்யூனிகேஷன், ஆங்கில உச்சரிப்பு போன்றவை சில உதாரணங்கள். நல்ல தெளிவான ஆங்கிலம் இருந்தால் இத்தகைய டிரெய்னிங் நடத்தித் தரும் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றலாம். தேவைப்படும்போது மட்டும் நிறுவனங்களுக்குச் சென்று டிரெய்னிங் கொடுக்க அழைப்பார்கள். மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருக்கலாம்.

37. செல்லப் பிராணிகளைக் கவனிப்பது, அதற்குப் பயிற்சி கொடுப்பது... இவையெல்லாம் நகர்ப்புறங்களில் நல்ல வருவாய் தரக்கூடிய பணி. ஒரு மணி நேர பயிற்சிக்கு சராசரியாக 200 ரூபாய் கிடைக்கும். அருகிலுள்ள பெட் ஷாப் மற்றும் வெட்னரி டாக்டர்களின் தொடர்பு எல்லையில் இருப்பது இதற்கு கைகொடுக்கும்.

38. சத்தமே போடாமல் சாதித்துக் கொண்டிருக்கிறது மொழிபெயர்ப்புத் துறை, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டால்... உள்நாட்டு மொழிபெயர்ப்பு முதல் பன்னாட்டு நிறுவன வாய்ப்புகள் வரை வாய்க்கும். சென்னையில் இருக்கும் அல்லயன்ஸ் பிரான்ஸ் (பிரஞ்சு மொழிக்கு), மேக்ஸ்முல்லர் பவன் (ஜெர்மன் மொழிக்கு) ஆகிய நிலையங்களில் இதுபற்றிய வழிகாட்டுதல் கிடைக்கும்.

ஏற்றம் தரும் ஏஜென்ஸிகள்!

39. கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை வாடகை சேவை மூலமாக அளிப்பது நல்லதொரு சுயதொழில். 'புத்தகங்களை நகலெடுப்பதைவிட, மலிவான வாடகைக்கு கிடைக்கிறதே' என்று மாணவர்களும் மொய்ப்பார்கள். இதில் ஆர்வமுடையவர்கள், எம்.வி. புக் பேங்க் போன்ற தென்னிந்திய அளவில் செயல்படும் புத்தக வங்கிகளை அணுகி, அவர்களின் ஏஜென்ஸியாக சுயதொழில் தொடங்கலாம்.

40. வீட்டில் இணையதள வசதியிருந்தால்... ரயில் மற்றும் பேருந்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்து தரும் ஏஜென்ஸியை ஆரம்பிக்கலாம்.

41. உங்கள் பகுதியில் சுற்றுலா முக்கியத்துவம் இருந்தால்... டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஏஜென்ட் ஆக மாறிவிடலாம். கையிலிருந்து முதலீடு போட்டு வாகனமெல்லாம் வாங்கித்தான் இதைத் தொடங்க வேண்டும் என்பதில்லை. சரியான நெட்வொர்க்கிங் திறன் இருக்கும்பட்சத்தில், லோக்கல் வாடகை வண்டி ஆபரேட்டர் களையே பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கும் வேலை கிடைத்த மாதிரி ஆகிவிடும்.

42. ஹெல்த் இன்ஷுரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு போது மான அளவில் இல்லை. ஆனால், தேவை இருக்கிறது. 'எந்த ஹெல்த் இன்ஷுரன்ஸ், தானே மருத்துவமனைக்குப் பணத்தை செலுத்தும் வசதி கொண்டது' என்பது போன்ற தகவல்களையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு ஹெல்த் இன்ஷுரன்ஸ் ஆலோசகராகக் கலக்கலாம். இன்ஷுரன்ஸ் கம்பெனிகள் தரும் கமிஷன், உங்களுக்குக் கைகொடுக்கும்.

43. ஹெல்த் இன்ஷுரன்ஸ் ஆலோசனைகளைத் தேடி வருவோரிடம்... வாகன இன்ஷுரன்ஸ், பயண இன்ஷுரன்ஸ் என அத்தியாவசிய இன்ஷுரன்சுகளை அறிமுகப்படுத்தலாம். கூடவே... வருமான வரி திட்டமிடுதல், ஆண்டு முதலீட்டுத் திட்டங்கள் என நம் சேவை தளங்களை மேலும் விரிவுபடுத்தினால் கூடுதல் லாபம்தான்!

44. இன்ஷுரன்ஸ் ஏஜென்ட் நல்ல வருமானம் தரக்கூடியத் தொழில். தொடர்புகளும், பேச்சுத் திறமையும்தான் முதலீடு. மாதம் ஒன்றுக்கு லட்ச ரூபாய் சம்பாதிக்ககூடிய ஏஜென்ட்கள்கூட நாட்டில் உள்ளனர். ஏஜென்ட் ஆவதற்கானப் பயிற்சியை இன்ஷுரன்ஸ் நிறுவனங்களே தருகின்றன. உங்கள் ஊரிலிருக்கும் எல்.ஐ.சி. கிளையின் மேனேஜரை அணுகினால் வழிகாட்டுவார்கள்.

45. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவைப்படும் கேட்டரிங் சேவை, புத்தகங்கள், காபி ஷாப் உள்பட ஏ டு இசட் சேவைகள் (மின்சார பில் கட்டுதல், டெலிபோன் பில் கட்டுதல்) போன்ற ஏரியாக்களை மூன்று நான்கு பெண்கள் ஒரு குழுவாக இணைந்து செய்து தரலாம். விசிட்டிங் கார்டு தயாரித்துக் கொண்டு தேவையுள்ளவர்களை சந்தித்து வாய்ப்புக் கேட்டால்... வெற்றி நிச்சயம். அது தொடர்பான இடங்களில் சிறிது காலம் பணியாற்றி அனுபவம் பெறுவது நல்லது.

46. ஏதேனும் வாங்க வேண்டும் என சிலரும், எதையேனும் விற்கவேண்டும் என சிலரும் தினமும் அல்லாடுவார்கள். இவர்கள் இருவருக்கும் தேவை ஒரு ஏஜென்ஸி. அதை நீங்களே ஆரம்பிக்கலாம். 'நெட்வொர்க்' எவ்வளவு விரிவாக... நம்பிக்கையாக இருக்கிறது என்பதன் அடிப்படையில் பிசினஸ் களைகட்டும்.

கலையிலும் கலக்கல் வருமானம்!

47. அனிமேஷன் துறை, புயல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. இத்துறையில் பயிற்சி தருவதற்கு சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை போட்டி போடுகின்றன. உள்ளுக்குள் ஊறியிருக்கும் படைப்புத் திறனை இவற்றில் மெருகேற்றிக் கொண்டால், முயற்சி திருவினையாக்கும்! அனிமேஷன் படிப்புக்கான குறுகியகால படிப்புகள் உள்ளன. விநாடி அடிப்படையில் வருமானத்தைக் கொட்டும் தொழில் இது.

48. ஸ்க்ரீன் பிரின்ட்டிங், ஃபேப்ரிக் பிரின்ட்டிங் போன்ற தொழில்கள் தொடங்க அதிகம் முதலீடு தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு வார பயிற்சி போதும். ஸ்க்ரீன் பிரின்ட்டிங்கில் பொதுவாக விசிட்டிங் கார்டுகள், திருமண அழைப்பிதழ்கள் என்று பிசியாகவே இருக்க முடியும். ஃபேப்ரிக் பிரின்ட்டிங்கைப் பொறுத்தவரை பெண்களுக்கான உடைகள் விற்கும் கடைகளோடு நல்ல தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது வளர்ச்சிக்கு உதவும்.

49. ஓவியம், கார்ட்டூன் போடும் கலை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா? பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் அதன் உதவி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுடன் மின்னஞ்சல், கடிதம் வழியாகத் தொடர்பு கொண்டு வாய்ப்புக் கேட்டு முன்னேறலாம்.

50. 'கிளாஸ் பெயின்ட்டிங்' இப்போது மிகவும் பாப்புலர். நல்ல கவன சக்தி இருந்தால் போதும் கண்ணாடி பெயின்ட்டிங்கில் கலக்கலாம். இன்ட்டீரியர் டிசைனரோடு தொடர்பில் இருந்தால் வாய்ப்புகள் தேடி வரும்.

51. ஃபேஷன் ஜுவல்லரி உருவாக்குவது இப்போதைக்கு சூப்பர் பிசினஸ். வேலையில் இருக்கும் பெண்கள்கூட ஓய்வு நேரங்களில் இதில் இறங்கி காசு பார்க்கிறார்கள். இதற்கான பயிற்சி நிலையங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. நகரங்களில் இதற்கென தனிக் கடைகள் உள்ளன.

52. ஃபேஷன் டிசைனிங்... வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய ஒரு நல்ல வேலை. நல்ல கற்பனை வளமும், உலக ஞானமும் இருந்தால் இதில் சாதிக்கலாம். ரெடிமெடு ஆடை நிறுவனங்களில் நிறைய வாய்ப்பு உள்ளது.

53. வீட்டு ஜன்னல் களுக்கு அழகழகாக கர்ட்டன் செய்து போடுவது ஒரு நல்ல கலை. சிறப்பாக வடிவமைக்க முடிந்தால்... அது ஒரு நல்ல தொழிலாகிவிடும். கொஞ்சம் டெய்லரிங், கொஞ்சம் கலையுணர்வு இரண்டும் இருந்தால்... நிறைய சம்பாதிக்கலாம்.

54. பொம்மை செய்வது பெண்களுக்கு எளிதான ஒரு பணி. பொம்மை உருவாக்கும் கம்பெனிகளிடமிருந்து ஆர்டர் பெற்று வீட்டிலேயே பொம்மைகளைத் தயாரிக்கலாம். அக்கம் பக்கத்து கடைகளிலேயே ஆரம்பகட்ட ஆர்டகளை கணக்கிட்டு, தொழிலைத் தொடங்கலாம்.

55. ஹேண்டி கிராஃப்ட் தொழிலில் நீங்கள் வல்லவர்கள் என்றால், நீங்கள் செய்த பொருட்களோடு சென்னையில் இருக்கும் காதி கிராஃப்டை அணுகுங்கள். அங்கே மிக குறைந்த விலையில் உங்கள் பொருட்களை வைப்பதற்கு இடம் தருவார்கள். வருபவர்களின் பார்வை உங்கள் பொருளில் பட்டால் லக் உங்களுக்குதான்.

ஊட்டம் தரும் உணவு பிசினஸ்!

56. அலுவலகவாசிகளின் மிகப்பெரிய சிக்கலே வீட்டுச் சாப்பாடுதான். கேன்டீன், ஹோட்டல் என சாப்பிடும்போது பர்ஸ் காலியாவதோடு... வயிறும் பதம்பார்க்கப்படுகிறது. இவர்களை குறி வைத்து வீட்டுச் சாப்பாடு விற்பனையில் இறங்கினால்... கொடி கட்டலாம். ஒரு இடத்தில் வைத்து விற்பதானாலும் சரி, வேலையாள் மூலமாக அலுவலக வாசல்களில் விற்பதானாலும் சரி... சிறந்த வருவாய் தரக்கூடிய வேலை. வீட்டுக்கு அருகில் இருக்கும் அலுவலகங்களில் ஆர்டர் பிடிப்பதன் மூலம் பிள்ளையார் சுழி போடலாம்.

57. பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது சுவாரஸ்யமான வேலை. கேக் டெகரேஷன் பண்ணுவதே ஒரு கலை. அதைக் கற்றுக் கொண்டால் இதில் பிரகாசிக்கலாம். அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல் போன்றவற்றை அணுகுவது பயனளிக்கும்.

58. சமையலில் நீங்கள் கில்லாடி எனில், சமையல் பள்ளி ஒன்றை ஆரம்பித்தால்... சக்கை போடு போடலாம். சமைக்கத் தெரியாத பார்ட்டிகள்தான் இப்போது அதிகம் என்பதால்... உங்கள் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களே குவிய ஆரம்பித்துவிடுவார்கள்! புதுமையான விஷயமாகவும் இருக்கும்.

59. வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால்... மினி பேக்கரி நடத்தலாம். இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள் என ஆரம்பித்து... இடம், பொருள் அறிந்து செயல்பட்டால் விரிவாகவே பிசினஸை டெவலப் செய்ய முடியும்.

60. ஒரு ஜூஸ் ஷாப் ஆரம்பிக்கலாமே... முதலீடு கொஞ்சம் போதும். ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக இருக்கவேண்டும். நாலு பேருக்கு உங்கள் கடை ஜூஸ் பிடிக்கும் வரைதான் போராட்டம். பிறகு, ஆட்கள் தேடி வருவார்கள்.

61. மாலை நேர திடீர் கடை ஆரம்பித்து சூப், பிரட் ஆம்லெட், சாண்ட்விட்ச், சாலட் தயாரித்து விற்றுப் பாருங்கள். நல்ல ஆள் நடமாட்டமுள்ள பகுதியெனில் வியாபாரம் சூடு பிடிக்கும்.

62. இயற்கை உணவுகள் பற்றி பெரிதாக பலரும் பேச ஆரம்பித்திருக்கும் நேரமிது. கேழ்வரகு கூழ், கம்பங்கஞ்சி என்று சுத்தம் சுகாதாரமாக ஒரு கடையைப் போட்டுப் பாருங்கள்.... ஈஸியாக கல்லா நிறையும்.

மார்க்கெட்டிங்குக்கு மரியாதை!

63. எந்தப் பொருளைத் தயாரிக்க விரும்பினாலும், பிள்ளையார் சுழி போடுவதற்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டியது... விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதைத் தேடித் தெரிந்துகொள்வதைத்தான். அந்தப் பொருள் அந்தச் சூழலுக்குத் தேவையானதுதானா... அதை மக்கள் வாங்குவார்களா... என்பது போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு சிறிய அளவிலான சர்வே நடத்துவது மிக முக்கியம்.

64. உங்கள் பகுதியில் எந்த பொருளுக்கு சிறப்பான மரியாதை இருக்கிறது என்பதைக் கண்டறி யுங்கள். அதுவே கூட உங்களை உயர்த்திப் பிடிக்கக் கூடிய ஒரு தொழிலாக இருக்கக்கூடும். ஆம், பிற பகுதிகளிலும் அதற்கு சந்தை வாய்ப்பு இருக்கிறதா என்று தேடி அறிந்தால்... திருநெல்வேலி அல்வாவுக்கு சென்னையில் மவுசு இருப்பது போல, நீங்கள் கையில் எடுக்கும் பொருளுக்கும் மவுசைக் கூட்ட முடியும். பாக்கெட்டை நிரப்ப முடியும்! உதாரணத்துக்கு, உங்கள் பகுதியில் பனை பொருட்கள் அல்லது சுடுமண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றால், உள்ளூர் சந்தையில் ஒரு விலை இருக்கும். பிற நகரங்களுக்கு வந்துவிட்டால் அவற்றின் விலை வேறு. இந்த சூட்சமம் உங்களுக்குப் புரிந்துவிட்டால் உள்ளூர் அம்பானி... நீங்கள்தான் அம்மணி.

65. மார்க்கெட்டிங் ஒரு சிறப்பான வழி. குறிப்பாக 'ஆம்வே' போன்ற நம்பத் தகுந்த மார்க்கெட்டிங் குழுவில் இணைந்து பணியாற்றலாம். பேச்சுத் திறமை மட்டும் இருந்தால் போதும். அலுவலகத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை. உங்கள் பொருளை மார்க்கெட்டில் விற்கப் போகிறீர்கள் என்றால், கஸ்டமரிடம் தப்பித் தவறிகூட 'என் குடும்ப கஷ்டம் இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். தயவு செய்து இந்தப் பொருளை வாங்கிக் கோங்க...' என்று மட்டும் மூக்கை சிந்த ஆரம்பித்துவிடாதீர்கள். ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை பிச்சையாக விட்டெறிந்து கதவைச் சாத்திவிடுவார்கள். அதேபோல உங்களுடைய பெருமைகளை டமாரம் அடிக்கவும் செய்யாதீர்கள்

66. ஒரு தொழிலைத் திட்டமிடும் முன்பாக... எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிடுங்கள். பிறகு, அதைப்போல இரண்டு முதல் மூன்று மடங்கு வரை பணத்தைத் தயாராக வைத்துக் கொண்டு களமிறங்குங்கள்.

67. தோல்வி குறித்த பயமின்மை, சரியான தெளிவு, போதிய பண வசதி... ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு இவை மூன்றும்தான் முக்கியமான முதலீடுகள்.

கதம்பம்!

68. பியூட்டி பார்லர் ஆரம்பிப்பது சிறப்பான வருமானம் தரக்கூடிய வேலை. உங்கள் வீடு மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இருந்தால்... உடனடியாக ஆரம்பிக்கலாம். இதற்கென பயிற்சிகள் தர நிறைய நிறுவனங்கள் உள்ளன.

69. 'பொக்கே' கொடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மொத்த வியாபாரிகளிடம் தொடர்பு கொண்டால், தேவையான பூக்களை தினமும் வரவழைத்துத் தருவார்கள். அதை நம் கற்பனைக்குத் தக்கவாறு தயாரித்து விற்கலாம். முதலீடு இருந்தால் போட்டோ பிரின்ட்டிங், ஃபிரேமிங் போன்றவை ஆரம்பிக்கலாம். தொடர்புடைய நிறுவனங்களை அணுகி பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

70. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் என்றால்... வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுவதையே ஒரு தொழிலாகச் செய்யலாம். ரெஸ்யூம் எனப்படும் பயோடேட்டா தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்துகொடுத்து, தகுந்த சன்மானத்தைப் பெறலாம்.

71. போட்டோ ஷாப், இன்டிஸைன், போன்ற கோர்ஸ்களை பயின்றால் பத்திரிகை அலுவலகங்கள், அச்சகங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு உண்டு. ஆர்டர் வாங்கி வீட்டில் இருந்தும் தொழில் செய்யலாம். வீடியோவில் எடிட்டிங் செய்வது போன்ற பயிற்சிகளைப் பெற்றால் ஸ்டூடியோக்களில் பணி கிடைக்கும்.

72. டி.வி.டி., சி.டி., புத்தகம் போன்றவற்றை வாடகைக்கு விடும் கடையை வீட்டிலிருந்தபடியே நடத்தலாம். மெம்பர்ஷிப் அதிகம் கிடைத்தால்... பெரிய அளவில் விரிவுபடுத்தலாம்.

விவசாயத்துலயும் விஷயமிருக்கு!

லட்சங்களையும் கோடிகளையும் முதலீடு செய்தால்தான் பிசினஸா... மிகக்குறைந்த முதலீட்டிலும் லாபம் பார்க்கலாம் என்பதற்கு விவசாயம் சார்ந்த பிசினஸ்களே சரியான உதாரணங்கள்...

73. உங்கள் பகுதியில் எந்தெந்த பருவத்தில் என்னென்ன காய்கறிகள் அதிகம் கிடைக்கிறதோ... அவற்றை வாங்கி சுத்தப்படுத்தி காயவைத்து, காய்கறி வற்றல் தயாரிக்கலாம். பாலித்தீன் பைகளில் அடைத்து அருகில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் வரும். கொத்தவரங்காய், கத்திரிக்காய், சுண்டக்காய், பாகற்காய், மாங்காய் போன்ற வத்தல்களுக்கு எப்போதும் மவுசு உண்டு.

74. சுயஉதவிக் குழு பெண்கள் இணைந்து கிராமத்தில் இருக்கும் புளிய மரங்களை ஏலத்துக்கு எடுக்கலாம். புளியம் பழங்களை உதிர்த்து, புளியை இடித்துப் பதப்படுத்தி பேக் செய்து மொத்த வியாபரிகளிடம் விற்கலாம்.

75. நெல்லிக்காய் அதிகம் கிடைக்கும் சீஸன் என்றால்... அதை வாங்கி சுத்தப்படுத்தி, தேனில் ஊறவைத்து, நிழலில் காயவையுங்கள். பிறகு, 50 கிராம், 100 கிராம் என பாலித்தீன் பைகளில் பேக் செய்து மூலிகைக் கடைகளிலும், டவுனிலுள்ள மளிகைக் கடைகளில் கொடுக்கலாம். தொடர்ந்து செய்யும்போது ரெகுலர் கஸ்டமர்கள் கிடைப்பார்கள்.

76. உங்கள் வீட்டு புறக்கடையில் அதிக இடமிருந்தால்... நாட்டுக்கோழி வளர்க்கலாம். உள்ளுர் சந்தையிலேயே நல்ல வரவேற்பு இருக்கும். நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகளுக்கு எப்போதுமே கிராக்கிதான்.

77. வீட்டுக்கு அருகில் இடமிருந்தால்... நர்சரிகளில் விற்கும் செடிகளை வாங்கி வந்து விற்கலாம். அருகில் உள்ள தோட்டக்கலை மற்றும் வனத்துறையில் மிகக் குறைந்த விலைக்கு நாற்றுகள் கிடைக்கும். உங்கள் ஏரியாவில் நன்றாக வளரக்கூடிய செடிகளை விற்பதால் அதிக லாபம். செடிகளுக்கு போடக்கூடிய ஆர்கானிக் உரம், காய்கறி மற்றும் பூச்செடி விதைகள்கூட விற்கலாம். இதற்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மாநில தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை போன்றவற்றை அணுகலாம்.

78. வண்ண மீன் வளர்ப்பு என்பது நகர்ப்புறங்களில் பரபரப்பான விஷயமாக இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை கொளத்தூர் பகுதியில் வண்ண மீன் வளர்ப்புத் தொழில் பெரியளவில் நடைபெறுகிறது. இங்கு மொத்தமாக வாங்கி, சில்லறையாக விற்கலாம். தொட்டிகள் உட்பட மீன் வளர்ப்புக்குத் தேவையான பொருட்களையும் விற்கலாம்.

79. காளான் வளர்ப்பு பெரிய பிசினஸாக வளர்ந்து வருகிறது. வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே பயிர் செய்து, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு ரெகுலராக சப்ளை செய்தாலே... மாதாந்திர செலவுக்கு கைகொடுக்கும்.

80. கீரையைக் கிள்ளுவதுதான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனால், கீரையை வாங்கி சுத்தப்படுத்தி, அதைக் கிள்ளி பாக்கெட் போட்டுக் கொடுத்தால் பக்காவாக காசு பார்க்கலாம்.

பிசினஸைப் பதிவு செய்வது எப்படி?

81. பெயரில்லாத பிள்ளையை எப்படி அழைக்க முடியும்? எனவே, நீங்கள் தயாரிக்கும் பொருளுக்கு முதலில் தகுந்த பெயரை வைத்து விடுங்கள். அந்தப் பெயர் என்ன டிசைனில் வரவேண்டும் என்பதை தீர்மானித்த பிறகு, முறைப்படி பதிவு செய்யுங்கள். பதிவு செய்ய 3,500 ரூபாய் செலவாகும். விஷயம் தெரியாமல் ஏமாற்றுக்கார புரோக்கர்களிடம் சிக்கினால், குறைந்தது பத்தாயிரம் ரூபாய் காலி.

82. 'இந்தியன் கம்பெனீஸ் ஆக்ட்'படி உங்கள் கம்பெனிக்கான பின் நம்பரை வாங்க 
வேண்டும். இதற்காக நீங்கள் அணுகவேண்டியது 'ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ்' அலுவலகத்தைதான். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறீர்கள் என்றால், அதே அலுவலகத்தில் ஐ.இ. (இன்டர்நேஷனல் எக்ஸ்போர்ட்) கோட் நம்பர் வாங்க வேண்டும். இது இருந்தால்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.

83. www.ipindia.nic.in இந்த இணையதள முகவரி, உங்கள் பொருட்களுக்கான டிரேட்மார்க் பெறுவற்கான அப்ளிகேஷன் பதிவது முதல், சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கான இன்டர்நேஷனல் பின்கோடு வாங்குவது வரை அத்தனை வசதிகளையும் அளிக்கிறது.

84. ஃபேஷன் ஜுவல்லரி, தங்க நகைகள், டயமண்ட், ஆர்டிஃபீஷியல் ஜுவல்லரி உற்பத்தி செய்கிறீர்கள் என்றால் இந்திய அரசின் ஜெம் அண்ட் ஜுவல்லரி எக்ஸ்போர்ட்ஸ் புரமோஷன் கவுன்சிலில் உங்கள் பொருட்களின் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள். அவர்கள் வெளியிடும் புத்தகத்தில் உங்கள் பொருட்கள் பற்றிய தகவலும் இடம்பெறும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் நகை வாங்க வேண்டும் என்றால், இந்தக் கவுன்சிலைத்தான் அதிகம் தொடர்பு கொள்வார்கள். அந்த நிறுவனம் உங்கள் பெயர்களை பரிந்துரைக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. இதில் பதிவு செய்வதற்கு குறிப் பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். இணையதளம்: www.gjepc.org

உஷார்... உஷார்!

85. பக்கத்து வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார் என்பதற்காக அதேபோன்ற தொழிலில் நீங்களும் இறங்க வேண்டாம். உங்களுக்கு என்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

86. உங்கள் பார்டனராக நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமல்லாமல், பிசினஸில் முதலீடு போடுபவராகவும் இருக்கவேண்டும்.

87. சிறு தவறுகூட பெரிய நஷ்டத்தில் கொண்டு விடும். ஒரு தவறு நடந்துவிட்டால் உடனே சரி செய்ய முயற்சியுங்கள்.

88.உங்கள் பொருளுக்கு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட விவரங்களை சரி பார்த்து, கணக்குப் போட்டு சூட்டோடு சூடாக களம்இறங்குங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் வேறொருவர் கைக்கு ஆர்டர் கைமாறிவிடவும் வாய்ப்பு உண்டு.

89. நேரடியாக சென்று பொருட்களை விற்கும் தொழிலில் இறங்குகிறீர்களா... ஜாக்கிரதை. குறிப்பாக அதிக கூட்டமற்ற இடங்கள் மற்றும் இரவு, மதியம் போன்ற நேரங்களைத் தவிர்க்க வேண்டும்.

90. 'முன்பணம் அனுப்புங்கள்' என்று வரும் விளம்பரங்களில் 100% எச்சரிக்கை தேவை. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் ஆவணங்களை உருவாக்குவது முக்கியம்.

91. பொருட்களில் கண்டிப்பாக தரம் வேண்டும். 100 பொருட்களை நன்றாக செய்து, 101-வது பொருள் தரமில்லாததாக இருந்தால் உங்களது பெயர் கெட்டுவிடும்.

92. பொருட்கள் எவ்வளவு முக்கியமோ... அதே அளவு அதனை 'பேக்' செய்து கொடுக்கும் விதமும் அவசியம். பொருட்களை அழகாக பேக் செய்து கொடுப்பதை மறந்தால் வாய்ப்புகள் மங்கிவிடும்.

93. ஏற்றுமதி தொழில் என்றால், எதிர்த்தரப்பு நம்பகமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவது அதி முக்கியம். ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் பொருள் டெலிவரியான பிறகு, பணம் செட்டில் ஆகாமல் ஏமாற வாய்ப்புள்ளது.

94. நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளின் சந்தை வாய்ப்புகளை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். கண்மூடித்தனமாக உற்பத்தி செய்துவிட்டு, கடைசியில் மார்க்கெட்டிங் இல்லாமல் திண்டாடக்கூடாது.

95. ஒரு தொழிலைப் பார்ட்னராக தொடங்கியிருந்தால்... தொழிலாளர் பொதுச் சேமநல நிதித் (பி.பி.எஃப்.) திட்டத்தில் உடனடியாக ஐக்கியமாவது முக்கியம். தொழில் முனைவோரின் நீண்டகால சேமிப்புக்கும், ஓய்வுகால வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமானது இந்தத் திட்டம்.

இன்முகமே லாபம் தரும்!

96. பல சந்தர்ப்பங்களில் பேச்சை விட, சிரித்த முகங்களே வெற்றியை தானே வரவழைக்கும். அதனால் எந்த சந்தர்ப்பத்தையும் ஒரு புன்னகையோடு சமாளிக்கும் பாங்கு, எளிதில் யாரோடும் பேசிப் பழகும் தன்மை... இதெல்லாம் உங்களுக்கு முக்கியம்.

97. தனியார் அலுவலகங்களில் 'பப்ளிக் ரிலேஷன் ஆபீஸர்' என்ற பணிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கான குறுகியகால சான்றிதழ் பயிற்சிகள், தனியார் இன்ஸ்டிடியூட்களில் உள்ளன. ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களில் சேர்ந்து, படிப்படியாக மிகப்பெரிய நிறுவனங்களில்கூட வேலையில் அமரும் சாத்தியங்கள் உண்டு!

98. கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ... செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம்.

99. நிகழ்ச்சி மேலாண்மை (event management) இன்னுமொரு சுவாரசிய துறை. ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒருங்கிணைக்கும் திறன், ஒரு நிகழ்ச்சிக்குத் தேவையான அத்தனையையும் யோசித்து அவற்றைத் தயார் செய்வது போன்ற திறன்களை நம் பெண்கள் தனியே கற்க வேண்டுமா என்ன! நம் வீடுகளில் கல்யாணம், பண்டிகை என்றால் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்களாயிற்றே நாம். நிகழ்ச்சி மேலாண்மையின் முறைமைகளை மட்டும் கொஞ்சம் பழக்கப்படுத்திக் கொண்டால் போதும், ஒவ்வொரு வேலை நாளும் திருவிழாதான்! இத்தொழிலில் ஈடுபடுவோரிடம் முதலில் உதவியாளராக சேர்ந்து பயிற்சி பெறலாம். அல்லது சின்னச் சின்ன கல்லூரி நிகழ்ச்சிகள், போட்டிகள் என பழகிக் கொண்டு, சிறிய மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி வாய்ப்பு தேடுங்கள்.

பயிற்சி

100. இந்திய அரசின் 'மைக்ரோ ஸ்மால் அண்ட் மீடியம் என்டர்பிரைசஸ்' டெவலப்மென்ட் நிறுவனம் (MSME Development Institute) பெண்களுக்காக இலவசமாக ஒன்றரை மாத பயிற்சியை அவ்வப்போது நடத்தும். இதில், வாஷிங் பவுடர், சோப், பினாயில் போன்ற கெமிக்கல் பொருட்கள் மற்றும் ஊறுகாய், ஜூஸ், ஜாம், மசாலாத்தூள் போன்ற உணவு சார்ந்த பொருட்களைத் தயாரிக்க பயிற்சி அளிப்பார்கள். இதைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்குவதோடு தொழில் தொடங்க வழிகாட்டுவார்கள். மார்க்கெட்டிங்குக்கு தனியாக பயிற்சி வகுப்புகளும் உண்டு.

விவரங்களுக்கு:

கே.வி.ராவ், உதவி இயக்குநர்,
இந்திய அரசு வளர்ச்சி நிலையம்,

தொகுப்பு: அவள் விகடன் டீம்
நன்றி http://pettagum.blogspot.com