Monday, December 5, 2011

முஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்!!!!


Thank s by   Ahamed Jamani Ahamed Jamani
Email
  • jamai1977@yahoo.com

முஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்!!!! ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள். மூஸா நபியை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்குவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நாள் கர்பலாவால் மறைக்கப்பட்டு விட்டது. கதிரவனை மறைக்கும் கிரகணத்தைப் போல ஆஷூரா தினத்தை, கர்பலாவும், அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷூரா தினத்தை மையமாக வைத்து நடக்கும் பைத்தியக்காரத்தனமான செயல்பாடுகளையும், இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களையும், மாற்று மத அனுஷ்டானங்களையும் இப்போது பார்ப்போம். துக்க நாளாகி விட்ட ஆஷூரா ஹுசைன் (ரலி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒரு போதும் ஆகி விடாது. நபி (ஸல்) அவர்களிடம் திங்கள் கிழமை நோன்பு நோற்பது பற்றி வினவப்பட்ட போது, "அது நான் பிறந்த நாளாகும். அந்த நாளில் தான் நான் இறைத்தூதராக அனுப்பப் பட்டேன்'' என்று பதிலளித்தார்கள். (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1387 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை மரணித் தார்கள். (நூல்: புகாரி 1387) உலக வரலாற்றில் மிக மிக அருளுக்கும் ஆசிக்கும் உரிய நாள் அல்லாஹ்வின் வேதம் இறங்கிய நாளாகும். அந்த நாளை நபி (ஸல்) அவர்களின் மரணம் மறைத்து விடவில்லை. உலகில் நபி (ஸல்) அவர்களை விட சிறந்தவர் யாரும் கிடையாது. அப்படிப்பட்ட அவர்களின் மரண நாள் நினைவு கூரப்படுவதற்கு மிகவும் பொருத்தமான நாளாகும். ஆனால் அந்த நாளையே நினைவு நாளாக, சோக நாளாக அனுஷ்டிக்க அனுமதியில்லாத போது மற்ற நாளை எப்படி சோக நாளாக அனுஷ்டிக்க முடியும்? இப்படியே இஸ்லாத்திற்காக உயிரை விட்ட நல்லவர்களின் மரண நாட்களைப் பார்த்தோம் எனில் நம் வாழ்நாளில் ஒரு நாள் கூட சந்தோஷ நாளாக இருக்காது. ஒவ்வொரு நாளும் துக்க நாளாகவே இருக்கும். அதனால் இஸ்லாத்தில் நினைவு நாளோ, பிறந்த நாளோ கிடையாது. ஆண்டு தோறும் துக்கம் அனுஷ்டித்தல் இஸ்லாமிய மார்க்கம் உளவியல் ரீதியாக மக்களின் மனதைப் பக்குவப்படுத்தும் மார்க்கமாகும். அதனால் இரவுத் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களுக்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயித்தது போல் ஒரு குடும்பத்தில் ஓர் உறவினர் இறந்து விட்டால் அதற்காக சோகம் அனுஷ்டிக்கும் நாட்களுக்கும் ஓர் உச்சவரம்பை விதித்துள்ளது. இல்லையேல் அந்தச் சோகம் மனிதனின் உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்தி மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். அதனால் அவன் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவான். இதையெல்லாம் உடைத்தெறியும் விதமாக நபி (ஸல்) அவர்கள் இதற்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயிக்கின்றார்கள். இறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்த நாங்கள் தடுக்கப் பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின் அவனது மனைவி, நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். (அதாவது) இந்த நாட்களில் நாங்கள் சுர்மா இடவோ, நறுமணப் பொருட் களைப் பூசவோ, சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கு வதற்காகக் குளிக்கும் போது மணப் பொருட்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) நூல்: புகாரி 313 ஹுசைன் (ரலி) கொல்லப்பட்ட பின் மூன்று நாட்களுடன் அந்தச் சோகம் முடிந்து விடுகின்றது. இதை அவர்களது குடும்பத்தார் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டு, இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லி தங்களுடைய வாழ்நாளில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டனர். ஹுசைன் (ரலி)யின் குடும்பத்தார் ஒவ்வோர் ஆண்டும் முஹர்ரம் பத்தாம் நாளை சோக தினமாக அனுஷ்டிக்கவில்லை. ஆனால் ஷியாக்கள் இதற்கு ஒவ்வொரு ஆண்டும் புத்துயிர் கொடுத்து, இஸ்லாத்தின் உண்மையான சித்திரத்தைச் சிதைத்து வருகின்றனர் ஷியாக்கள் மட்டுமல்லாமல் சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக் கொள்வோரில் சிலரும் இந்தக் காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்யும் கூத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். இவர்கள் செய்யும் அனாச்சாரங்கள், அட்டூழியங்கள், கேலிக் கூத்துக்கள் ஆகியவற்றை முதலில் வரிசையாகப் பார்த்து விட்டு, மார்க்க அடிப்படையில் அவற்றின் விளக்கத்தைப் பார்ப்போம். பஞ்சா எடுத்தல் முஹர்ரம் மாதத்தின் முதல் பிறையிலிருந்து, பஞ்சா மையம் கொண்டிருக்கும் அலுவலம் களை கட்ட ஆரம்பித்து விடும். ஒரே ஊரில் தலைமை அலுவலகமும் இருக்கும், கிளை அலுவலகமும் இருக்கும். முஹர்ரம் 1ல் இதன் நடைவாசல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக பஞ்சா கொலு வீற்றிருக்கும். பஞ்சா அலுவலகத்தில் பிரமாண்ட பந்தல். அதில் எப்போதும் மக்கள் வெள்ளம் தான். பலூன் வியாபாரிகள், மிட்டாய் வண்டிகள், பொம்மை வியாபாரிகள், ஐஸ் வண்டிகள் என இந்தப் பகுதி நிரம்பி வழியும். இந்தக் காட்சிகள் அனைத்தும் வேளாங்கண்ணி, திருப்பதி கோயில்களைத் தோற்கடித்து விடும். தெருமுனையில் திருக்கோயில் பொதுவாக தெரு முனைகளில் உள்ள நுழைவு வாயிலில் அரசாங்கமோ, அல்லது தனி நபர்களோ கட்டடம் எதுவும் கட்ட முடியாது. அப்படி யாராவது கட்டினால் அந்தத் தெருவே பொங்கி எழுந்து, அதனைப் பொசுக்கி விடுவர். ஆனால் சந்திப் பிள்ளையார் சன்னதி போல் இந்தப் பஞ்சா அலுவலகத்தை மட்டும் பக்கீர்கள் பரிபாலணக் கமிட்டி, தெருவின் மத்தியில் கட்டி பராமரிக்கும் போது அதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொள்வர். அது தெய்வீக அருளை அன்றாடம் அள்ளித் தரும் ஆனந்த பவன் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். அதனால் தான் முச்சந்தியில் நிற்கும் இந்த மணி மண்டபத்தை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை கூட முணுமுணுப்பதில்லை. பஞ்சாவின் உடல் கட்டமைப்பு பஞ்சா என்றால் ஐந்து என்று பொருள். ஐந்து ஆறுகள் ஓடுவதால் ஒரு மாநிலத்திற்கு பஞ்சாப் என்று பெயர். கிராமத்தில் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு அமைக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கமிட்டி பஞ்சாயத் என்று அழைக்கப்டுகின்றது. அது போன்று தான் முஹர்ரம் பத்தாம் நாள் ஹுசைன் (ரலி) நினைவாக எடுக்கப்படும் பஞ்சாவில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். இந்த ஐந்து விரல்களும் சிம்பாலிக்காக முஹம்மத் (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகியோரைக் குறிக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த ஐந்து பேர்களும் கடவுளாக உருவகப்படுத்தப் பட்டுள்ளனர். அதனால் தான் ஒரு கவிஞன், "எனக்கு ஐந்து பேர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் என்னை நரகிலிருந்து காப்பார்கள். அவர்கள் தாம் முஸ்தபா, முர்தளா (அலீ), பாத்திமா, அவர்களின் பிள்ளைகள் ஹசன், ஹுசைன்'' என்று பாடியுள்ளான். பஞ்சா என்று சொல்லப்படும் ஐந்து விரல்கள் கொண்ட வெள்ளி கைச் சின்னம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சட்டத்தினுள் ஜரிகைத் தாளைப் பின்னணியாகக் கொண்டு குடி கொண்டிருக்கும். இதைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்கள் வளைத்து நிற்கும். இது தான் பஞ்சா என்ற ஏவுகணையின் உடல் கட்டமைப்பாகும். அப்படியே இந்துக்கள் எடுக்கும் சப்பரத்திற்கு ஒப்பாக இந்தப் பஞ்சா அமைந்திருக்கும். ஏழாம் பஞ்சா பஞ்சா என்ற சப்பரம் பத்தாம் நாள் தான் தன்னுடைய தளத்திலிருந்து கிளம்பும். அதற்கு முன்னால் பக்த கோடிகள் இதனை விட்டு எங்கும் வெளியூர் போய் விடக் கூடாது என்பதால் ஏழாம் பஞ்சா என்று ஒன்று கிளம்புகின்றது. இந்த ஏழாம் பஞ்சாவில் ஹஸன், ஹுசைன் நினைவாக இரண்டு குதிரைகள் தயாராக நிற்கும். அதில் இரண்டு இளைஞர்கள் ஏறி அமர்வார்கள். இவர்கள் மீது அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறமான(?) பச்சை நிறத் துணி போர்த்தப்பட்டிருக்கும். இந்த வீரர்களைத் தாங்கி வரும் குதிரைகளுக்கு பக்தர்கள், பக்தைகளின் கூட்டம் வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கும். குடம் குடமாக வந்து தண்ணீரைக் கொண்டு வந்து குமரி மற்றும் குடும்பத்துப் பெண்கள் குதிரையின் கால்களில் கொட்டுவார்கள். இவ்வாறு கொட்டினால் அவர்களின் தேவைகள் நிறைவேறும் என்ற குருட்டு நம்பிக்கையில்! இரு குதிரைகளிலும் சவாரி செய்யும் இந்த வீரர்கள் யார் தெரியுமா? தங்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால், அல்லது தன் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தீர்ந்து விட்டால் அவனை முஹர்ரம் ஏழாம் நாளில் ஹஸனாகவும், ஹுசைனாகவும் கொண்டு வந்து குதிரையில் ஏற்றுவேன் என்று பெற்றோர்களால் நேர்ச்சை செய்யப்பட்டவர்கள். கர்பலாவின் லைவ் காட்சி பச்சைப் போர்வை போர்த்தப்பட்டு பவனி வரும் இவர்களின் பாதடிகளில் தண்ணீராலும் பன்னீராலும் மக்கள் கழுவிக் கொண்டிருப்பார்கள். இதனால் பற்பல பாக்கியங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்! குதிரையில் தங்கள் குழந்தைகளை ஏற்றுவதற்கும் போட்டா போட்டி நடக்கும். இதற்கென காசை வாரி இறைப்பர். அதிகமான பணம் கொடுத்து முன் பதிவு செய்பவர்களுக்கு எந்த ஆண்டு குதிரை சவாரி செய்ய வேண்டும் என்பதற்கான நாளை பக்கீர்கள் குறித்துக் கொடுப்பர். இவ்வாறு விசா கிடைத்து, குதிரையில் ஏறக் கொடுத்து வைத்த இவர்கள் முஹர்ரம் 10 நாளும் நோன்பு நோற்க வேண்டும். ஆஷூரா 9, 10 நோன்புகளைக் கூட ஹஸன், ஹுசைன் நினைவாகத் தான் பிடிப்பதாக இந்த மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தக் குதிரை வீரர்கள் போருக்குப் புறப்படுகின்றார்களா? என்று பார்த்தால் அவ்வாறு செய்வதில்லை. குதிரையில் ஆற்றுக்குச் சென்று குளிக்கின்றனர். இவ்வாறு செய்தால் ஷஹாதத் எனும் அந்தஸ்து (?) கிடைத்து விடுகின்றது. பக்தர்களின் வீட்டு வாசல்களுக்கு இந்தக் குதிரை வரும் போது, மக்கள் தாங்கள் நேர்ச்சை செய்திருந்த ஆடு, கோழிகளை இந்தக் கஞ்சா பக்கீர்களிடம் சமர்ப்பிப்பார்கள். பச்சைத் துணியால் மூடப்பட்ட இந்த இளைஞர்கள் அணிந்திருக்கும் கருப்புக் கண்ணாடியில் கர்பலாவின் காட்சி நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அது எப்படி? என்று யாராவது அந்த இளைஞரிடம் பேட்டி கேட்கும் போது, அவர் தான் கருப்புக் கண்ணாடியில் பார்த்ததைச் சொன்னால் தலை வெடித்து விடுமாம். பக்கீர்களின் பகுத்தறிவு சாம்ராஜ்யம் எப்படி கொடி கட்டிப் பறக்கின்றது என்று பாருங்கள். ஒரேயடியாக பத்தாம் நாள் மட்டும் பஞ்சா என்றால் அது பக்தர்களைத் தக்க வைத்துக் கொள்ள உதவாது என்பதால் எட்டாம் பஞ்சா, ஒன்பதாம் பஞ்சா என்று வகை வகையாக பஞ்சா எடுத்து பக்தர்களை மூளைச் சலவை செய்கின்றார்கள். மீன் சாப்பிடத் தடை இந்த முஹர்ரம் பத்து நாட்களும் மீன் சாப்பிடக் கூடாது என்று ஒரு விதியை இவர்களாக தங்கள் இஷ்டத்திற்கு ஏற்படுத்தி வைத்துள் ளார்கள். இதன் விளைவாக பஞ்சா எடுக்கப்படும் ஊர்களில் இந்தப் பத்து நாட்களும் மீன் மிகவும் மலிவு விலையில் விற்கப்படும். தாம்பத்தியத்திற்குத் தடை அது போல் முஹர்ரம் 10 நாட்களும் கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்தத் தடை இதற்கு மட்டுமல்ல! முக்கியமான மூன்று மவ்லிதுகளான சுப்ஹான மவ்லிது, முஹய்யித்தீன் மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிது போன்ற மவ்லிதுகள் ஓதும் நாட்களிலும் இந்தத் தடை அமுலில் இருக்கும். இந்தத் தடைகளை மீறி யாரேனும் மீன் சாப்பிட்டு விட்டால் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குப் பரிகாரமாக பஞ்சா எடுக்கும் பக்கீர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை காணிக்கை செலுத்த வேண்டும். எவ்வளவு திமிர் இருந்தால் இந்தத் தடைச் சட்டத்தை முஸ்லிம்கள் மீது திணித்திருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பத்தாம் பஞ்சா முஹர்ரம் பத்தாம் நாளை அரசாங்கம் முஹர்ரம் பண்டிகை என்று அறிவித்து அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மூஸா (அலை) அவர்களுக்குக் கிடைத்த அந்த வெற்றி நாள் மறக்கடிக்கப்பட்டு, தொலைக் காட்சிகளில் மாரடிக்கும் காட்சிகள் வெளியாகி இஸ்லாத்தின் தூய தோற்றத்தைச் சிதைத்து நாறடித்துக் கொண்டிருக்கின்றது. பத்தாம் நாள் கிளைமாக்ஸ்! நாஸாவிலிருந்து ஏவுகணை கிளம்புவது போன்று பத்தாம் நாள் தான் பஞ்சா என்ற பைத்தியக் காரத்தனத்தின் சின்னம் கிளம்பும் "கவுண்ட் டவுன்' நாள்! மாலையானதும் அதன் மையத்திலிருந்து பக்கீர்கள் தோள் பட்டையில், அல்லது வண்டியில் ஏறியதும் அதன் ஊர்வலம் துவங்கி விடும். பேண்டுக்கு மேல் ஜட்டி பஞ்சாவுக்கு முன்னால் சிலம்பாட்டப் படைகள் சிலம்பாட்டம் ஆடும். இவர்கள் வித்தியாசமாக பேண்டுக்கு மேல் ஜட்டி அணிந்து கொண்டு, பெண்கள் அணியும் நகைகளை அணிந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடுவார்கள். இந்த சிலம்புச் செல்வர்கள் பஞ்சாவின் முன்னால் வருவதற்கு முன், மேள தாளத்துடன் தெருத் தெருவாக சென்று தங்கள் வீரத்தை அரங்கேற்றுவர். அதன் பின் பஞ்சாவுக்கு முன்னர் வந்து ஆட்டம் போடுவர். தீப்பந்தம் சுழற்றுதல், பட்டை சுழற்றுதல், வாயில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு எரியும் தீக்குச்சியில் ஊதி தீப்பந்து உருவாக்குதல் போன்ற சாகசங்களைச் செய்து மக்களை பரவசத்தில் ஆழ்த்துவார்கள். புலி வேஷம் போடுதல் இந்தப் பஞ்சாவில் நேர்ச்சை செய்த சிலர் உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டு, கோயிலில் சாமி வந்தவர்கள் போல் சுற்றிக் கொண்டிருப்பர். சிலர் புலி வேஷம் போட்டு வந்து மக்களைப் புல்லரிக்கச் செய்வர். ஹுசைன் (ரலி) யின் போர்க்கள நினைவாக தங்களுடன் வாள்கள், ஈட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்கின்றனர். பக்கீர்கள் ஒரு விதப் பொடியைத் தூவி பக்தர்களை மகிழ்ச்சியூட்டுவர். உப்பு மிளகு போடுதல் புரதச் சத்து குறைவாக இருந்தால் உடலில் உண்ணிகள் தோன்றி துருத்திக் கொண்டிருக்கும். இதற்கு வைத்தியம் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இந்த உண்ணி போக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, பஞ்சா அலுவலகத்தில் கொண்டு போய், உப்பையும் மிளகையும் படைத்து விட்டு வந்தால் போதும். மின்னிக் கொண்டிருக்கும் உடல் உண்ணிகள் பறந்து போய் விடும். அப்படி ஒரு நம்பிக்கை! குழந்தைகள் வேண்டி கொழுக்கட்டை லிங்கம் ஆண் குழந்தை வேண்டுமா? ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து பத்தாம் நாளன்று இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்களிடம் விநியோகித்தால் போதும். ஆண் குழந்தை பிறந்து விடும். (பெண் குழந்தைகளை யாரும் வேண்டுவ தில்லை) யார் இந்த மாவு லிங்கத்தைப் பெறுகின்றாரோ அவர் பாக்கியம் பெற்றவராவார். இது தவிர ஹஸன், ஹுசைனின் வாள், வேல் போன்ற வடிவத்திலும் கொழுக்கட்டைகள் செய்து வீசப்படும். தீமிதியும், தீக்குளிப்பும் தனக்கு நல்ல கணவன் அமைந்தால் முஹர்ரம் பத்தாம் நாள் வந்து தீக்குளிப்பதாக பருவ வயதுப் பெண் நேர்ச்சை செய்வாள். நல்ல மாப்பிள்ளை வாய்த்த பின்னர் அந்தப் பெண்ணும், அவளது தாயாரும் பஞ்சாவுக்கு வந்து தங்களது தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டி நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். கோயில் திருவிழாக்களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீர, நாட்டம் நிறைவேற தீமிதியும் நடத்துகின்றனர். ஹஸன் (ரலி) அருந்திய நஞ்சு பானம் ஹஸன் (ரலி) அவர்கள் நஞ்சுண்டதன் நினைவாக மக்களும் புளி கலந்த ஒரு பானகரம் என்ற பெயரில் அருந்திக் கொள்கின்றனர். உண்மையில் இவர்களின் நம்பிக்கைப் படி ஹஸன் (ரலி) மீது அவர்களுக்குப் பற்று இருக்குமானால் இவர்கள் நஞ்சை அருந்த வேண்டும். அவ்வாறு நஞ்சை அருந்தினால் இது போன்ற பஞ்சாக்கள் எல்லாம் பஞ்சாகப் பறந்து போகும். காதலர் தினம் இந்தப் பஞ்சாவில் நடைபெறும் ஆனந்தக் கூத்துக்களைக் கண்டு களிக்க காளையரும், கன்னியரும் ஜனத் திரளில் சங்கமித்துக் கொள்வார்கள். ஹுசைன் (ரலி) உயிர் நீத்த அந்த நாளைக் காளையர்கள், கன்னியர்களைப் பார்த்துப் பார்த்து ஹுசைன் (ரலி) யை நினைத்து உருகுவார்கள். பதிலுக்குக் கன்னியரும் திரும்பப் பார்த்து ஹுசைன் (ரலி)யை நினைவு கூர்வார்கள். இவ்வாறாக வீரர் ஹுசைன் (ரலி)யின் நினைவாக இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமுதாய வீர உணர்வுகளை ஈரப்படுத்திக் கொள்கின்றனர். மாரடித்தல் ஒரு கூட்டம் இப்படி கொட்டு மேள, தாளத்துடன் ஹுசைன் (ரலி)யின் நினைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு கூட்டம் தங்கள் மார்களில் அடித்துக் கொண்டு ஹுசைன் (ரலி)யை நினைவு கூர்ந்து கொள்கின்றனர். அவர்கள் மாரடித்து அழுது புலம்பி கர்பலா நாளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். வெள்ளத்தில் மிதந்து வரும் விநாயகர் போல்.. விநாயகர் சதுர்த்தியன்று சிலையைத் தூக்கி வருவது போன்று பக்கீர்கள் தங்கள் தோள் புஜங்களில் இந்தப் பஞ்சாவைத் தூக்கி வருவர். அது வீதியில் உலா வரும் போது அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கும். மாலை மறைந்து இரவு வேளை ஆரம்பிக்கும். வெள்ளிக் கைச் சின்னத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் மஞ்சள் ஜரிகையில் பெட்ரோமாக்ஸ் விளக்கின் மஞ்சள் ஒளி பட்டவுடன் அது ஒரு தங்க ஆறு ஓடுவது போன்று காட்சியளிக்கும். இத்தகைய ஒளி வெள்ளத்திலும் அதனைச் சுற்றி மேக மூட்டத்தைப் போன்று மண்டிக் கிளம்பி மணம் பரப்பும் சாம்பிராணி புகை ஓட்டத்திலும் பக்தர்கள் தங்கள் மனதைப் பறி கொடுத்துக் கொண்டிருப்பார்கள். பச்சைத் தலைப்பாகையுடன் பக்கீர்கள் மயில் இறகைக் கொண்டு ஆண், பெண் பேதமில்லாமல் தடவி வருடி விடுவார்கள். இதில் பக்தர்களின் மலைகள் போன்ற பாவங்கள் மழையாகக் கரைந்து போய் விடுமாம். தாய்மார்கள் மனமுருக நின்று அதைப் பார்த்து பிரார்த்தனை புரிந்து கொண்டிருப்பார்கள். இவ்வாறாக இறுதியில் அதை ஆற்றில் கொண்டு போய் கரைத்து விட்டு வருவார்கள். அவ்வாறு கரைத்து விட்டு வரும் போது அந்தப் பஞ்சாவை வெள்ளைத் துணியால் மூடி விட்டு, ஒப்பாரி வைத்து ஓலமிட்டவாறே கலைந்த அந்தப் பஞ்சாவுடன் வீடு திரும்புவார்கள். இதன் பிறகு அது வரை தடுக்கப்பட்ட காரியங்கள் அனைத்தும் இவர்களுக்கு ஹலாலாகி விடுகின்றன. இது வரை நாம் கண்டது பஞ்சா பற்றி ஒரு நேர்முகத் தொகுப்பு என்று கூட கூறலாம். இதில் நீங்கள் கண்ட காட்சிகளைக் கீழ்க்கண்ட பாவங்களாகப் பிரித்துக் கூறலாம். 1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் 2. அல்லாஹ்வின் அதிகாரத்தைக் கையில் எடுத்தல் 3. மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல் 4. புதுப்புது வணக்கங்களை மார்க்கத்தில் புகுத்தும் பித்அத் நபி (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகியோரின் நினைவாக ஐந்து விரல்களை உருவாக்கி அவற்றுக்கு தெய்வீக அந்தஸ்து வழங்குவது, இறந்த பிறகும் அவர்களுக்கு ஆற்றல் இருக்கின்றது என்று நம்புவது கடைந்தெடுத்த ஷிர்க் ஆகும். குதிரையின் குளம்புகளிலும், குதிரையின் மீதிருக்கும் இளைஞனின் கால்களிலும் அருள் கொப்பளிக்கின்றது என்று நினைத்து அவர்களின் கால்களில் தண்ணீரைக் கொட்டுவதும் கொடிய இணை வைத்தலாகும். இறந்து விட்ட அந்த ஐவரிடமிருந்தும் இவருக்கு ஆற்றல் கிடைக்கின்றது என்று நம்புவது தான் இந்தச் செயல்களுக்கு அடிப்படை! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! "அவர்களுக்கு நடக்கிற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கிற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கிற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கிற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக! அல்குர்ஆன் 7:194,195 அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அல்குர்ஆன் 16:21 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்பட இறந்து விட்ட யாராக இருந்தாலும் அவர்கள் பார்க்கவோ, செவியுறவோ மாட்டார்கள் என்பதை இந்த வசனங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. குழந்தை பாக்கியம் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண் களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன். அல்குர்ஆன் 42:49,50 குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன. அதை அடியார்களிடம் கேட்பது பைத்தியக் காரத்தனமும் பகிரங்க இணை வைப்பும் ஆகும். படைத்தல் என்ற இந்தப் பேராற்றல் வல்ல நாயனின் ஆட்சிக்குரிய தனி வலிமை! அந்த வலிமையை உணர்த்தி வார்க்கப்பட்ட சமுதாயதம் தான் இஸ்லாமியச் சமுதாயம்! அப்படிப்பட்ட இஸ்லாமிய சமுதாயம் குதிரையின் குளம்படியில் வந்து கும்பிட்டுக் குப்புற வீழ்ந்து கிடப்பது வேதனையிலும் வேதனை. குழந்தை பாக்கியத்தை நாடி லிங்கத்தின் வடிவில் கொழுக்கட்டை செய்து கூட்டத்தில் விநியோகிப்பது இணை வைத்தல் மட்டுமில்லாமல் கேலிக் கூத்துமாகும். நேர்ச்சை ஒரு வணக்கமே! அனு தினமும் தொழுகையின் போது, அல்ஃபாத்திஹா அத்தியாத்தில், உன்னையே நாங்கள் வணங்கு கின்றோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்று தொழுபவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்கின்றார்கள். இதில் இடம்பெறும் வணக்கம் என்ற வார்த்தையில் நேர்ச்சை செய்தலும் அடங்கும். பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! அல்குர்ஆன் 22:29 இந்த வசனத்தின் படி நேர்ச்சையை அல்லாஹ்வுக்கு மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்றிருக்க இறந்து விட்ட அடியார்களுக்காக நேர்ச்சை செய்யும் அநியாயமும் அலங்கோலமும் இங்கே நடந்தேறுகின்றது. அதுவும் தீக்கங்குகளைத் தலையில் போட்டுக் கொண்டு இந்தத் தீ(ய) நேர்ச்சையெல்லாம் உடலுக்கு ஊறு விளைவிக்கின்ற, உயிருக்கு உலை வைக்கின்ற நேர்ச்சைகள். இவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவையாகும். அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் 2:195 ஒருவன் தன் கையாலேயே தனக்கு நாசத்தை ஏற்படுத்திக் கொள்ள அல்லாஹ் தடை விதிக்கின்றான். ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்களிடையே தொங்கிய படி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். "(கஅபாவுக்கு) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கின்றார்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "இவர் இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது'' என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 1865 அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் கூட, இது போன்று தம்மை வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்யக் கூடாது எனும் போது அதை மற்றவர்களுக்காகச் செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளங்கலாம். அப்படியே பாவமான காரியத்தில் நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்ற சட்டமும் இந்த மக்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 6696 இது வரை பஞ்சாவின் மூலம் இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதகம் நடப்பதைப் பற்றி பார்த்தோம். தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். அல்குர்ஆன் 4:48 தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். அல்குர்ஆன் 4:116 இந்த வசனங்களின் அடிப் படையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது அவனால் மன்னிக்கப்படாத பாவமாகும். சுவனத்திற்குச் செல்வதைத் தடுத்து நரகத்தில் நுழைத்து விடும் பாவமாகும். அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுதல் பஞ்சாவில் ஏற்படும் அடுத்த பாவம் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும். மார்க்கத்தில் சட்டம் இயற்றல் என்பது அவனுடைய தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளதாகும். அதை ஷியாக்களின் வாரிசுகளான இந்தப் பக்கீர் சாஹிபுகள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர். நாம் தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட காரியங்களை அல்லாஹ் தடுத்து விடுகின்றான். தொழுகையில் முதல் தக்பீரின் போது இந்தத் தடை அமுலுக்கு வந்து விடுவதால் இது தக்பீர் தஹ்ரீமா எனப்படுகின்றது. அது போல் ஹஜ்ஜுக்குச் செல்லும் போது இஹ்ராமை மனதில் எண்ணி அதற்குரிய ஆடை அணிந்து விட்டால் அது வரை நமக்கு ஹலாலாக இருந்த தாம்பத்தியம், வேட்டையாடுதல், திருமணம் போன்ற காரியங்கள் ஹராமாகி விடுகின்றன. இது போன்று சில குறிப்பிட்ட வணக்ககங்களில் அல்லாஹ் நமக்குச் சில தடைகளை விதித்துள்ளான். இந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான தனி அதிகாரமாகும். ஹஜ்ஜின் போது இந்தத் தடையை மீறி விட்டால் நாம் ஓர் ஆடு அறுத்துப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும். இதுவும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது தான். இப்படி குறிப்பிட்ட வணக்கங்களின் போதும், பொதுவாகவும் ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. பாருங்கள்! இந்த அதிகாரத்தை, பஞ்சா எடுக்கும் பக்கீர் பண்டாரங்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு முஹர்ரம் பத்து நாட்களிலும் மீன் சாப்பிடக் கூடாது என்று தடை! தாம்பத்தியத்திற்குத் தடை! இந்தத் தடைகளை மீறி விட்டால் அதற்கு ஆடு, கோழி போன்றவற்றைப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும் என்று வைத்துள்ளார்கள். இவர்களுக்கு எவ்வளவு துணிச்சலும் நெஞ்சழுத்தமும் இருந்தால், திமிர் இருந்தால் அல்லாஹ்வின் இந்த அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுப்பார்கள்? அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. அல்குர்ஆன் 42:21 இவர்களோ அல்லாஹ்வின் இந்தக் கேள்விக்கு, நாங்கள் இருக்கின்றோம் என்று பதில் கூறுவது போல் செயல்படுகின்றார்கள். நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்குர்ஆன் 66:1 என்று நபி (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் கேட்கின்றான். ஆனால் இவர்களோ அல்லாஹ் அனுமதியளித்ததை தங்கள் இஷ்டத்திற்கு ஹராமாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள். அல்குர்ஆன் 16:116 நிச்சயமாக இதையெல்லாம் மார்க்கம் என்ற பெயரில் இட்டுக் கட்டியதால் அல்லாஹ்வின் மீதே பொய்யை இட்டுக் கட்டிய மாபெரும் துரோகத்தைச் செய்தவர்களாகின்றனர். அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதை அல்லாஹ் மிக வன்மையாகக் கண்டிக்கின்றான். அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள். அல்குர்ஆன் 6:21 அறிவின்றி மக்களை வழி கெடுப்பதற்காக அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன் 6:144 மாற்று மதக் கலாச்சாரம் பஞ்சா எனும் சப்பரத்தை உருவாக்குதல், லிங்க வடிவில் கொழுக்கட்டை செய்தல், மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டித்தல், நினைவு நாள் கொண்டாடுதல் போன்றவை மாற்றுமதக் கலாச்சாரங்களில் உள்ளவையாகும். ஆண் குழந்தை வேண்டுமென்று ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து விளம்புவது ஆபாசம் இல்லையா? என்று கேட்டால், இது எங்கள் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது என்று கூறுகின்றார்கள். இதை அப்படியே அல்லாஹ் தனது திருமறையில் படம் பிடித்துக் காட்டுகின்றான். அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது "எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளை யிட்டான்'' என்று கூறுகின்றனர். "அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்குர்ஆன் 7: 27 லிங்கத்தை உருவாக்கி அதற்கு வழிபாடு நடத்துவது, அதைப் புனிதமாகக் கருதுவதெல்லாம் அவர்களது கலாச்சாரமாகும். இந்தக் கலாச்சாரத்தை அப்படியே இவர்கள் இந்தப் பஞ்சாவில் செயல்படுத்தித் தங்களின் வந்தவழி பாரம்பரியத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்குச் சரியான பாடத்தைப் புகட்டி, மாற்றுக் கலாச்சாரத்தை நம்மவர்கள் காப்பியடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். "தாத்து அன்வாத்' என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் �

Thursday, December 1, 2011

மொத்தமாய் விலைபேசப்படும் சில்லறை வியாபாரம்!



Thanks by
First Published : 26 Nov 2011 04:22:30 AM IST


இப்போது வருகிறது, அப்போது வருகிறது என்று "புலிவருது புலி' பாணியில் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருந்த சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு வந்தேவிட்டது. இந்தியச் சில்லறை வர்த்தகத்திலும் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவைத் திறந்தாகிவிட்டது.
 கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு மேலும் சரிவு, அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைவு, அன்னிய நிறுவனத் தொழில் முதலீட்டாளர்களின் முதலீடுகள் இந்தியாவிலிருந்து மீண்டும் வெளியேற ஆரம்பித்தது ஆகியப் பொருளாதார நிகழ்வுகளால் என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்திய அரசால் சரிந்து கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பையோ விலைவாசி உயர்வையோ கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொருளாதார சீர்திருத்தத்தில் அடுத்த கட்டம் என்ற பெயரில் அன்னிய பெருவர்த்தகர்களுக்கு இந்தியச் சந்தையில் புகுந்து விளையாடக் கதவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரசு.
 உள்நாட்டுப் பெருந்தொழில் நிறுவனங்களும் அயல் நாடுகளின் தொழில் நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக இடையறாமல் தூபம் போட்டு வந்த ""மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த'' நடவடிக்கைக்கு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது. இந்த சீர்திருத்தத்துக்காக ""பாடுபட்ட சக்திகள்'' வென்றுவிட்டன. ஆனால், ""இந்தியா'' தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை.
 பெருநகரங்களின் நலன்தான் இந்த அரசின் முக்கிய குறிக்கோள் என்பதை இந்த நடவடிக்கையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.
 இந்திய கிராமப்புறங்கள் குறித்தும் வேளாண்மை குறித்தும் இந்த அரசுக்குப் போதிய அறிவோ, அக்கறையோ இல்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.
 சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவால், இந்த வியாபாரத்தில் நாடு முழுவதும் ஈடுபட்டு வரும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் கிராமப்புற இந்தியாவில் இப்போது கிடைத்துவரும் உணவுப் பாதுகாப்பையும் இது சேர்த்தே அழித்துவிடும் என்பது பெரும்பாலானவர்களுக்கு இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.
 இந்திய சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கிராமங்களுக்கே சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அவர்களுக்கு நியாயவிலை கிடைக்க உதவும் என்பது முதல் வாதம். இதன் மூலம் விவசாயிகள் பணக்காரர்களாகிவிடுவார்கள் என்பது அரசு மற்றும் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்காகக் குரல் எழுப்புபவர்களின் இன்னொரு வாதம். இப்படிச் சொல்கிறவர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் என்பதுதான் நிஜம்.
 பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12) வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்தவும், அடித்தளக் கட்டமைப்பை உருவாக்கவும், உள்நாட்டு - வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெருக்கவும் தேவைப்படும் கொள்கைகளை வகுப்பதற்கான மத்திய திட்டக்குழுவின் செயல்திட்டக் குழு நாடாளுமன்றத்துக்கு அறிக்கை தயாரித்து அளித்தது.
 அதேசமயம், உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவும் அரசுக்கு அறிக்கை அளித்தது. இவ்விரு அறிக்கைகளையும் சேர்த்துப் படித்தால் கிராமப்புற இந்தியா எப்படி இருக்கிறது என்ற உண்மை புலப்படும்.
 இந்தியாவில் உள்ள விவசாயப் பண்ணைகளையும் வெளிநாடுகளில் உள்ள பண்ணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மை நிலவரம் புரியும்.
 இந்தியாவில் சுமார் 588 லட்சம் சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அதாவது 32 கோடிக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தியாவில் நிலங்களை நம்பி நேரடியாக வாழ்கின்றனர். சராசரியாக அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் அல்லது அதற்கும் கீழே.
 வெளிநாடுகளின் நிலைமை அதுவல்ல. கனடா நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி வைத்திருப்பது 1,798 ஏக்கர். அமெரிக்காவில் இது 1,089 ஏக்கர், ஆஸ்திரேலியாவில் 17,975 ஏக்கர், பிரான்சில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர்.
 அமெரிக்க விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவு, இந்திய விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் போல 250 மடங்கு அதிகம். ஆஸ்திரேலியாவிலோ இது 4,000 மடங்கு அதிகம்! எனவே அமெரிக்காவிலும் இதர மேற்கத்திய நாடுகளிலும் பண்ணை வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கிப்போகும் ""கொள்முதல் பாணி'' இந்தியாவுக்கு ஒத்துவராது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
 இந்தியாவில் கிராமங்களில் விளையும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை எப்படி சந்தைக்கு வருகின்றன, எப்படி கிராமங்களிலேயே வாங்கி உண்ணப்படுகின்றன என்பது தெரியாமல், இந்தியாவில் மேலைநாட்டுக் கொள்முதல் பாணியை அறிமுகப்படுத்த நினைக்கிறார்கள்.
 வால்மார்ட் போன்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களை அனுமதித்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற வாதம் சரியானதல்ல; இடைத் தரகர்கள் மட்டும் அல்ல, சிறு விவசாயிகளும் சேர்த்தே ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உண்மை. அது மட்டும் அல்ல, வேறு எதையெல்லாம் அந்தக் "கொள்முதல் பாணி' ஒழிக்கும் என்பதைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்.
 விவசாய வேலைகள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும். மிகப்பெரிய நிறுவனம்தான் ஆள்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அல்லது நீக்கும். பெரிய நிலப்பரப்பாக நிலங்கள் இணைக்கப்பட்டு இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும். பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.
 நிலங்களை அதிக பரப்பளவில் வைத்திருப்பவர்களால்தான் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகமாக வழங்க முடியும் என்பது உலக அளவிலான ஆய்வுகளின் முடிவு. ஆனால் இந்தியாவில் அதுவே தலைகீழாக இருக்கிறது.
 மொத்த சாகுபடிப் பரப்பில் 34% நிலத்தை சிறு, குறு விவசாயிகள்தான் பயிர் செய்கின்றனர். ஆனால், நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இவர்களுடைய பங்களிப்பு 41% ஆக இருக்கிறது. அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றவர்களைவிட 33% அதிகமாக இருக்கிறது.
 சிறு நிலங்களையெல்லாம் சேர்த்து பெரு நிலப்பரப்புகளாகவும் பெரும் பண்ணைகளாகவும் மாற்றினால் உடனடியாக தேசிய உணவு உற்பத்தியில் 7% குறைந்துவிடும்! உணவு தானியம் மட்டும் அல்ல பால் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும். கிராமப்புறங்களில் கிடைக்கும் 1,009 லட்சம் டன் பாலில் பெரும்பகுதிக்கு சிறு, குறு விவசாயிகள்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
 கிராமப்புறங்களில் உள்ள மக்கள்தொகையில் பாதியைக் குறைக்காமல் சிறு, குறு விவசாயத்தை ஒழித்துவிட முடியாது. திட்டக்குழு நியமித்த செயல்திட்டக் குழு தனது அறிக்கையின் இறுதியில் இவ்வாறு தெரிவிக்கிறது: ""சிறு, குறு விவசாயிகள் இந்தியாவில் இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கப் போவது நிச்சயம் - அதே சமயம் அவர்கள் ஏராளமான சோதனைகளை (அரசின் முடிவுகளால்தான்) சந்திக்கப் போவதும் நிச்சயம்; எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு என்ன நேரப் போகிறதோ அதைப் பொருத்துத்தான் கிராமப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் அமையும்''.
 இதைவிட முக்கியம், சிறு - குறு விவசாயிகள் எதை உற்பத்தி செய்கிறார்கள், எதை உண்கிறார்கள், எதை மற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பது. சிறு, குறு விவசாயிகளிடம் வியாபாரிகளுக்கு விற்பதற்காக உபரி உற்பத்தி ஏதும் இல்லை. இந்த நிலையில், வால்மார்ட் வகையறாக்கள் கிராமங்களில் நுழைந்தால், அவர்களுடைய உணவுப் பாதுகாப்பே பாதிக்கப்பட்டு விடும்.
 கிராமப்புற இந்தியா குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத உண்மை என்ன என்றால், இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்களில் 60%-க்கும் மேல் வியாபார ரீதியாக சந்தைக்கு வருவதில்லை, அவை கிராமங்களுக்குள்ளேயே விநியோகிக்கப்பட்டு உண்ணப்படுகிறது என்பது. சிறு விவசாயிகள் இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். தங்களுடைய நுகர்வுக்காகவும் தங்களிடம் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலிக்குப் பதில் கொடுப்பதற்காகவும்தான் இதை இப்படிப் பாதுகாக்கிறார்கள்.
 இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விவசாயிகளின் உற்ற நண்பர்களான கால்நடைகளுக்கும் கூட உணவாகப் பயன்படுகிறது. மிகவும் அவசியப்படும் நேரத்தில் கிராமத்தில் பிறருக்கும் விற்கப்படுகிறது.
 இந்த 60 சதவீதத்தில் ஒரு சிறு பகுதியையாவது வால்மார்ட் நிறுவனம் கொள்முதல் செய்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட, ""நகர்ப்புற விலை நிர்ணயம்'' கிராமங்களிலும் நுழைகிறது என்று பொருள்.
 நகரில் விற்கும் விலைக்கு கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகளும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் வாங்கிச் சாப்பிட முடியுமா?
 அப்படியொரு நிலை வந்தால் கொங்கணப் பிரதேசத்தில் பரவலாக விளையும் அல்போன்சா ரக மாம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலையும் கேரளத்தில் மீன்களுக்கு ஏற்பட்ட நிலையும்தான் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும்.
 இப்போதெல்லாம், அல்போன்சா ரக மாம்பழங்களைக் கண்ணால்தான் கொங்கணப் பகுதி மக்கள் பார்க்கின்றனரே தவிர சாப்பிடுவதில்லை. ஏற்றுமதிக்கே அனைத்தையும் கொடுத்துவிட்டு கிடைக்கும் ரூபாயில் நகர்ப்புறங்களிலிருந்து தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கின்றனர்.
 கேரள மீனவர்கள் மீன்களை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு கிடைக்கும் பணத்தில் வெளிநாட்டு மதுரகங்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர். காரணம், சொந்த ஊரில் யாருக்கும் அந்த மீன் மலிவு விலையில் கிடைப்பதில்லை.
 சில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு என்பது சிறு, குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை இப்படித்தான் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரு மடங்கு என்று கருதப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் விளைவிக்கும் பொருள்களே கிடைக்காத நிலையும் அதிக விலை கொடுத்துத்தான் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படும்!
 இது ஒருபுறம் இருக்க எஞ்சிய 40% உணவு தானியங்கள் எப்படி கிராமங்களிலும் பிற பகுதிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன? எஞ்சியுள்ள 40% உணவு தானியங்களில் சுமார் 35% அளவு, அதாவது பத்து டன்களில் 9 டன் அளவுக்கு தினசரி, வார கிராமச் சந்தைகள், திருவிழாச் சந்தைகள் மூலம்தான் விற்கப்படுகின்றன.
 கிராமங்களில் நடைபெறும் சந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 47,000. எஞ்சிய 5% உணவு தானியங்கள் மட்டுமே அரசின் கண்காணிப்பில் செயல்படும் 6,359 மொத்தவிலை மண்டிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.
 இந்த இடத்தில்தான் நாட்டின் உபரி உணவு தானிய உற்பத்தி நவீனச் சந்தை அமைப்பு மூலம் விற்கப்படுகிறது. இந்த உணவு தானியத்தைத்தான் அரசு பொது விநியோகத்துக்காக வாங்கி, பத்திரப்படுத்துகிறது. மொத்த விளைச்சலில் எந்த அளவுக்கு பொதுச் சந்தைக்கு வருகிறது என்று பாருங்கள்.
 வார, தினச் சந்தைகள் எப்படிச் செயல்படுகின்றன? முக்கால்வாசிச் சந்தைகள் வாரத்தில் ஒரு முறை கூடுகின்றன. ஐந்தில் ஒரு பகுதி வாரத்தில் இருமுறை கூடுகின்றன. இருபதில் ஒரு மடங்கு தினசரி கூடுகின்றன.
 ஒரு சந்தை, சுமார் 14 கிராமங்களுக்குப் பொருள்களை விற்கிறது. எல்லாச் சந்தைகளும் சேர்ந்து 6.58 லட்சம் இந்தியக் கிராமங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்களையும் இதர வேளாண் பொருள்களையும் விற்கின்றன.
 மூன்றில் இரு மடங்கு சந்தைகள் கிராமங்களிலிருந்து அதிகபட்சம் 16 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கின்றன. நாலில் ஒரு பகுதி சந்தைகள் 6 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடைபெறுகின்றன. பத்தில் ஒரு பகுதி சந்தைகள் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடக்கின்றன.
 மூன்றில் இரு மடங்குக்கும் மேற்பட்ட மக்கள், சந்தைகளுக்கு நடந்து சென்றே பொருள்களை வாங்குகின்றனர். மூன்றில் ஒரு பங்கு மக்கள் சைக்கிளில் சென்று வாங்குகின்றனர். மற்றவர்கள் மாட்டு வண்டிகளிலும், மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களிலும் வந்து வாங்குகின்றனர்.
 இந்த சந்தைகளுக்கு வரும் மக்கள் வெறும் சரக்குகளை வாங்கிப் போக மட்டும் வருவதில்லை. சமூக, கலாசார பரிவர்த்தனைகளுக்காகவும் வருகின்றனர்.
 இங்குதான் கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள் பேசித்தீர்க்கப்படுகின்றன. வாய்க்கால் வரப்பு தகராறுகளும் சுமுகமாக முடிகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இங்கேயே வரன் பார்ப்பதும் உண்டு. வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களையும் இங்கேயே பேசி முடிக்கின்றனர்.
 கால்நடைகளை வாங்குவது விற்பது, அவற்றுக்குத்தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை வாங்குவது போன்றவற்றுக்கும், உழவுக்கருவிகள் வாங்கவும் இந்த சந்தைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.
 பாத்திரங்களுக்குக் கலாய் பூசுவது, விவசாயக் கருவிகளைப் பழுதுபார்ப்பது, கைப்பிடி போடுவது, சாணை பிடிப்பது என்று எல்லாமே இந்தச் சந்தைகளில்தான்.
 அடுத்து என்ன பயிர்ச் சாகுபடி செய்யலாம், அதற்குத் தேவைப்படும் பணத்துக்கு என்ன செய்யலாம் என்றுகூட இங்குதான் பேசி முடிவு செய்கின்றனர்.
 விவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று தங்கள் அலுவலகங்களுக்கு வந்து கேட்க வேண்டும் என்று கூறாமல் அரசே இந்த சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்துத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று திட்டக் கமிஷனின் செயல்திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.
 திட்டக்கமிஷனின் செயல்திட்டக்குழு தங்களைப் போகச் சொன்ன இடத்துக்கு, வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இந்திய அரசு.
 கிராமப்புற இந்தியா, மத்திய அரசிடமிருந்து அந்த அளவுக்கு அன்னியப்பட்டுப் போயிருக்கிறது. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்று நாட்டின் விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இன்னமும் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தேசிய சாம்பிள் சர்வே (என்.எஸ்.எஸ்.) அமைப்பு தெரிவிக்கிறது.
 அப்படி அதைக் கேள்விப்பட்ட 30 சதவீதம் பேரிலும் 81 சதவீதம் பேருக்கு அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லையாம். காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசு நடத்தும் கொள்முதல் நிலையங்களில்தான் அமலில் இருக்கிறதே தவிர, விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமான சந்தைகளில் அல்ல.
 எனவேதான், குறைந்தபட்ச ஆதரவு விலை என்றாலே என்னவென்று தெரியாத விவசாயிகள், எதிர்கால சந்தையை எப்படித் தங்கள் நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழு சரியாகவே கேட்டிருக்கிறது.
 இதற்குப் பதில் சொல்ல முடியாத அரசு, உணவு தானியத்தில் ""எதிர்காலத்துக்கான ஊக பேரம் கூடாது'' என்று மட்டும் தடை செய்திருக்கிறது, அவ்வளவே. அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது நமது மத்திய ஆட்சியாளர்களின் இந்திய கிராமங்கள் பற்றிய நுண்ணறிவு. என்ன செய்வது மண்ணின் மணம் தெரியாமல் ஹார்வேர்ட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு வந்த பொருளாதார நிபுணர்களின் திட்டமிடலின் லட்சணம் அப்படி.
 பின்குறிப்பு: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவால் பாரம்பரியமாக சமுதாய மக்களால் நடத்தப்படும் 12 லட்சம் சில்லறைக் கடைகளை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசு; அது மட்டும் அல்ல, கிராமப்புற உணவுப் பாதுகாப்பு வளையத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது. 2012-ம் ஆண்டு தொடங்கி எதிர்வரும் காலத்துக்கு ஐக்கிய முன்னணி அரசு இந்த நாட்டுக்கு அளித்திருக்கும் கொடை இதுதான்!

 

Thursday, November 3, 2011

இறைவனுக்குத் தேவை இரத்தமல்ல! உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.


03 NOVEMBER 2011


மந்தை மந்தையாக ஆடு, மாடுகள் சந்தைகளில் சரி விலைக்கு விற்பனையாகின்றன. ஆடு, மாடு பண்ணை வைத்திருப்போர் இந்த ஹஜ் காலங்களில் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி விடுகின்றனர். கடந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்ற மாடு இந்த ஆண்டு 9000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. 5000 ரூபாய்க்கு விற்ற ஆடு இந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
 
இப்படி ஆடு மாடுகளின் விலை ஆகாயத்தைத் தொட்டாலும், என்ன விலையேற்றமாக இருந்தாலும், எவ்வளவு விலை எகிறியிருந்தாலும் அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்கு முஸ்லிம்கள் தயங்குவதில்லை. அத்தனை விலை கொடுத்து வாங்குவதுடன் நின்றுவிடுவதில்லை. வைக்கின்ற வைக்கோலுக்கும் புல் கட்டுக்கும் ஒரு தொகை காலியாகி விடுகின்றது.

அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து கட்டி, தீனி போட்டு, கஞ்சி ஊற்றி, கழனி வைத்துப் பராமரித்து வருவதில் அவர்கள் காட்டுகின்ற அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் அளவே இல்லை. கண்ட கண்ட இடங்களில் ஆடு மாடுகள் போடுகின்ற புழுக்கை, சாணி மற்றும் கழிக்கின்ற சிறுநீர் போன்ற அசுத்தங்களை அவ்வப்போது கழுவி துப்புரவு செய்கின்றனர். அதிலும் மழை நேரத்தில் நச நசவென்று ஒரே ஈரப் பதமாக இருக்கும் நாட்களில் இந்த அசுத்தங்களைச் சுத்தம் செய்வதற்காகத் தாய்மார்கள் ஆற்றுகின்ற பணி சாதாரணமானதல்ல!

பிற மதங்களில் மாட்டு சாணம், மூத்திரம் போன்றவை புனிதம் என்று மதிக்கப்படுகின்றன. ஆட்டுப் புழுக்கையும், சிறுநீரும் கூட அவர்களிடம் அசுத்தமல்ல! ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவை அசுத்தமானவை. இந்த அசுத்தம் பட்ட இடங்கள் தொழுவதற்குத் தகுதியற்றவை. மேனியில், ஆடையில் பட்டால் கழுவாமல் தொழக் கூடாது என்ற கட்டுப்பாடு! அதனால் இந்த விஷயத்தில் அவர்கள் சுத்தமாக இருப்பதற்குப் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள்.

இத்தனை உழைப்பும் எதற்கு? இவ்வளவு தியாகமும் எதற்கு? தியாக வரலாற்றின் எதிரொலியாகத் தான்.
"இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்." அல்குர்ஆன் 37:103-108
அல்லாஹ்வே பாராட்டுகின்ற இந்த மகத்தான சோதனையின் மறு பதிப்பு தான் குர்பானி!

இது எதை உணர்த்துகின்றது?

1. அல்லாஹ்வின் பாசத்திற்கு மேல் என்னுடைய பிள்ளைப் பாசம், குடும்பப் பாசம் மீறாது; மிகைக்காது என்பதற்காக, இப்ராஹீம் நபி நிகழ்த்திக் காட்டிய, உள்ளத்தை உலுக்குகின்ற ஓர் உன்னத நிரூபணம். நீர்த்துப் போகாது நெஞ்சில் நிலைத்திருக்கும் நினைவு ஆவணம்.

2. அறுத்துப் பலியிடுதல் என்பது ஒரு வணக்கம்! இதை அல்லாஹ்வுக்காகவே தவிர வேறு யாருக்கும் எதற்கும் செய்யக் கூடாது என்ற படிப்பினையையும் இது உணர்த்துகின்றது.
ஏனெனில் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
"உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!"
அல்குர்ஆன் 108:2
இந்த இரு பாடங்களைத் தான் இப்ராஹீம் நபியின் இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.

இபராஹீம் நபியவர்களின் அறுத்துப் பலியிடுதல் என்ற வணக்கம் மட்டுமல்லாது, அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்வுக்காகவே ஆகியிருந்தன. அந்த ஏகத்துவ வழியைத் தான் அவர்களது மகன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் சந்ததியில் வந்த இஸ்ரவேலர்களும், மற்றொரு மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழியில் வந்த அரபியர்களும் உருத் தெரியாமல் மாற்றி விட்டனர். மக்காவில் வாழ்ந்த மக்களிடம் இணை வைப்பு என்ற ஷிர்க் நுழைந்து விட்டது. இதைத் துடைக்கவும் தூரக் களைந்தெறியவும் அதே இப்ராஹீம் நபியின் சந்ததியில் வந்தவர்கள் தான் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

இதோ அம்மக்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் எதிர் கொண்ட இணை வைப்பு என்ற நோயின் வகைகளை அல்லாஹ் பட்டியலிடுகின்றான்.
"அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்."
அல்குர்ஆன் 17:46
"அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்."
அல்குர்ஆன் 39:45
இன்று நாம் குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாதையில் அழைக்கும் போது சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் புறமுதுகு காட்டுகின்றனர். அல்லாஹ்வை மட்டும் அழையுங்கள் என்று கூறும் போது அவர்கள் முகம் சுழிக்கின்றனர். முஹ்யித்தீன் என்று சொன்னதும் “கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் (அவர்களின் கண்ணியமிக்க ஆன்மாவை அல்லாஹ் தூய்மைப்படுத்துவானாக) என்று கூறி, முகமும் அகமும் பூரித்து விடுகின்றனர்.

முஹ்யித்தீன், காஜா முஈனுத்தீன் போன்றோரின் பெயர்களில் மவ்லிதுகளை ஓதி, ஆடு மாடுகளை அறுத்துப் பலியிட்டு ஆனந்தமடைகின்றனர்.

அப்படியானால் இவர்களின் “பலி’ என்ற வணக்கத்தினால் பலன் என்ன?
இத்தகையவர்களை நோக்கித் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள், தன்னை விலக்கிக் கொண்டதாகப் பிரகடனம் செய்கிறார்கள்.
“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. அல்குர்ஆன் 60:4
"அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்." அல்குர்ஆன் 22:37
அல்லாஹ்வும் ஆடு, மாடு, ஒட்டகங்களின் இறைச்சி தேவையில்லை. இறையச்சம் தான் தேவை என்று கூறுகின்றான்.

இறையச்சம் என்றால் என்ன?

ஒரேயொரு இறைவனை மட்டுமே வணங்குவது தான் இறையச்சம்!
நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?” என்று கேட்டார்.
அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை” என்றனர். அல்குர்ஆன் 23:23, 24
இதுபோன்ற வசனங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவது தான் இறையச்சம் என்று குறிப்பிடுகின்றன. இறையச்சம் என்றால் உடல் நடுங்கி, அஞ்சி, அல்லாஹ்வைத் தொழுது, சில வணங்கங்களைச் செய்வது மட்டும் தான் என்ற அர்த்தத்தை இன்றைய ஆலிம்கள் கொடுக்கின்றனர். இதனால் இந்த மக்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்துக் கொண்டே இதுபோன்ற வணக்கங்களைச் செய்து விட்டுத் தங்களை இறையச்சமிக்கவர்கள் என்று கருதிக் கொள்கின்றனர். அந்தக் கண்ணோட்டத்தில் தான் இன்று ஆடு மாடுகளையும் அறுத்துப் பலியிடுகின்றனர். இதனால் தாங்கள் இப்ராஹீம் நபியின் வழிமுறையைப் பின்பற்றி விட்டதாக நினைக்கின்றனர்.

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், ஏகத்துவத்தை ஏற்காத வரை ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று இப்ராஹீம் நபியவர்கள் ஓங்கி பிரகடனப்படுத்தி விட்டார்கள். இதே அடிப்படையில் உங்களுடைய இறைச்சியும், இரத்தமும் தேவையில்லை, இறையச்சம் தான், அதாவது ஏகத்துவம் தான் தேவை என்று அல்லாஹ்வும் அடித்துச் சொல்லி விட்டான்.
எனவே குர்பானி கொடுத்தால் மட்டும் போதாது. ஏகத்துவவாதியாக மாற வேண்டும். அப்போது தான் நமது குர்பானி ஏற்றுக் கொள்ளப்படும்.

நமது குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட, உண்மையான இறையச்சவாதிகளாக, ஏகத்துவவாதிகளாக மாறுவோமாக!

நன்றி: "ஏகத்துவம்" நவம்பர் 2011

அரஃபா நோன்பு



03 NOVEMBER 2011


துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர்.

அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். 

"அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்."
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977

"அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்." 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: இப்னுமாஜா 1722


அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அதை நடைமுறைப்படுத்தினார்களோ அவ்வாறு தான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்பு நோற்றார்கள். மக்காவில் பிறை காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள வசதிகள் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.

எனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள், நாம் பிறை பார்த்த கணக்குப் படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்றத் தேவையில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நாம் பிறை பார்த்த கணக்குப் படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்க வேண்டும்.

"குர்பானிப் பிராணியின் தோல் உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதைத் தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்."

"ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்."
அறிவிப்பவர்: அலீ(ரலி); நூற்கள்: புகாரி (1716), முஸ்லிம் (2320) 

நன்றி: www.tntjcovai.com

வாழ்க ஜனநாயகம்!!!


கவலைக்கிடமான நிலையில் ஒரு தலைவரோ, கலைஞரோ இருந்தால் நாடே கவலைப்படுகிறது. ஆனால் கவலைக்கிடமாக ஒரு நாடே இருந்தால் கவலைப்பட வேண்டியது யார்?
 அப்படி கவலைக்கிடமாக இருப்பதுகூட பரவாயில்லை, அப்படி இருக்கிறோம் என்கிற உணர்வுகூட அந்த நாட்டை வழிநடத்தும் தலைவர்களுக்கு இல்லாமல் இருந்தால் எப்படி?
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானபோது மிகவும் அகமகிழ்ந்தோம். மிகச் சிறந்த நிர்வாகி, நேர்மையாளர், நடுநிலையாளர், அரசியல் கறை படாதவர் என்றெல்லாம் ஆலவட்டம் சுழற்றினோம். ஆட்சி நிர்வாகத்தை அவரும் கட்சி நிர்வாகத்தை சோனியாவும் பார்த்துக் கொள்ள இந்தியா வல்லரசாகிவிடும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து எல்லோரும் கூடிக் குலவையிட்டோம்.
 இன்றைக்கு நிலவரம் என்ன? காய்கறி, அரிசி, பருப்பு போன்ற அன்றாட உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் நடுத்தர, அடித்தட்டு மக்களின் விழி பிதுங்குகிறது. விலைவாசி கழுத்தை நெரிக்கிறது.
 சமையல் கேஸ், டீசல், பெட்ரோல் விலையை மத்திய அரசு கூட அல்ல, பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயிக்கும் நிலைமை. வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்கிற நிலைமை மாறி, மாதாமாதம் பெட்ரோல் விலை உயர்கிறது. இப்படியே போனால், பங்குச் சந்தையைப்போல, தங்கம், வெள்ளி விலை நிலவரம்போல பத்திரிகைகளில் பெட்ரோல், டீசலின் அன்றாட விலையைப் போட வேண்டிய துர்பாக்கியம்கூட ஏற்படலாம்.
 அருணாசலப் பிரதேசம் எங்களுடையதுதான் என்று வாரத்துக்கு ஒரு முறை அறிவித்துக்கொண்டிருக்கும் சீனா நம்முடைய காஷ்மீர மாநிலத்துக்கு உள்ளேயே வந்து நம்முடைய ராணுவத்தினர் பயன்படுத்தி குளிர்காலம் என்பதால் விட்டுவிட்டு வந்த பதுங்கு குழிகளையே அழித்துவிட்டுப் போகிறது.
 வான் எல்லை மீறி எங்கள் நாட்டுக்குள் வந்துவிட்டீர்கள் என்று கூறி நம்முடைய தரைப்படை வீரர்கள் சென்ற ஹெலிகாப்டரை பாகிஸ்தான் வான்படை வழிமறித்து அழைத்துச் செல்கிறது. இதைப்பற்றி எல்லாம் மத்திய அரசு கவலைப்பட்டு சுறுசுறுப்பாக ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா?
 ஊழல் அதிகரித்து வருவது குறித்து அண்ணா ஹசாரே போன்றோர் கவலைப்படுகின்றனர். விலைவாசி உயர்வு குறித்து நடுத்தர மக்களும் இல்லத்தரசிகளும் கவலைப்படுகின்றனர். சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து நாட்டுப் பற்றாளர்களும் மூத்த குடிமக்களும் கவலைப்படுகின்றனர்.
 தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, நிரந்தர வேலைவாய்ப்பு முறை மறைந்து ஒப்பந்தத் தொழிலாளர் முறை நிலைபெற்று வருகிறதே, வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கவலைப்படுகின்றனர்.
 கிராமப்பகுதிகளில் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் விவசாய வேலைக்குப் பண்ணையாள் கிடைப்பதில்லையே என்று விவசாயிகள் கவலைப்படுகின்றனர். அணைகள் கட்டுதல், பாசன வாய்க்கால்கள் அமைத்தல் போன்ற பணிகளை அரசு குறைத்துக் கொண்டுவிட்டதே, குடிமராமத்தே நின்றுபோய் வெறும் கணக்கெழுதி அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் சாப்பிடும் நிலைமை வழக்கமாகிவிட்டதே என்று வேளாண் குடிகள் கவலைப்படுகின்றனர்.
 ரூபாயின் மாற்று மதிப்பு குறைந்து வருவதால் சீனா போன்ற நாடுகள் சர்வதேசச் சந்தையில் குறைந்த விலையில் பொருள்களைக் குவிப்பதால் நம்மால் அவர்களுடன் போட்டியிட முடியவில்லையே என்று ஏற்றுமதியாளர்கள் கவலைப்படுகின்றனர்.
 நம்முடைய சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அடகு வைக்கும் வகையில் அணுமின் சக்தி திட்டங்களுக்காக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமை சாசனம் எழுதித்தர வேண்டுமா என்று சுயராஜ்ய சிந்தனை உள்ளவர்கள் கவலைப்படுகின்றனர்.
 மின்னுற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகிறது, நிலக்கரி கையிருப்பும் குறைந்து வருகிறது, அணு மின்சக்தி திட்டத்தின் பின்விளைவுகள் பற்றிய அச்சத்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் இல்லையே என்று தொழில்முனைவோர் கவலைப்படுகின்றனர்.
 கல்வி நிலையங்களின் தரம் குறைந்து வருகிறது, உயர் கல்வி பெற விரும்பும் அனைவருக்கும் வாய்ப்பு தர முடியாமல் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே என்று கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர்.
 சுகாதார வசதியில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்; அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், பணியாளர்கள், டாக்டர்கள் இல்லாமல் பிறந்த குழந்தைகள்கூட உயிரிழக்கும் ஆபத்து நேரிட்டுவிட்டதே என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர்.
 வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உலக பணக்காரர்களில் இடம் பெற்றுள்ள இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஊழல் செய்தும் வரி ஏய்ப்பு செய்தும்தான் இதில் இடம் பெற்றனர் என்ற அவமானம் என்று எத்தனையோ விஷயங்கள் கவலைக்கிடமாக இருக்கின்றன.
 இந்த நிலையில் குப்பம்பட்டி வார்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா, யார் வேட்பாளர் என்று கேட்டால் கூட மத்தியக் கட்சித் தலைமையின் முடிவுக்கே விடும் காங்கிரஸ் தலைவர்களுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதால், இந்த நிலைமை எப்போது மாறும் என்கிற கவலை நம்மைத் தொற்றிக் கொள்கிறது.
 இந்த நாட்டின் தலைமை சரியில்லை, முடிவெடுக்க முடியாமல் திணறும் போக்கு நல்லதல்ல என்று விப்ரோ நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் அசீம் பிரேம்ஜி, பெங்களூருவில் கவலை தெரிவித்திருப்பது நூறு சதவீதம் நியாயமே என்று வழிமொழியத்தானே தோன்றுகிறது.

First Published : 03 Nov 2011 03:55:10 AM IST

நன்றி. நல்ல கருத்துகள்
தலையங்கம்:  
Last Updated : 03 Nov 2011 04:01:31 AM IST