Saturday, July 30, 2011

- 32-ஜுலைபீப் جـلـيـبـيـب


தோழர்கள்printEmail
வரலாறு - தோழர்கள்
செவ்வாய், 31 மே 2011 10:36
நன்றி  சத்தியமார்க்கம்.காம் 

மதீனாவில் வாழ்ந்துவந்த அன்ஸாரிக் குடும்பம் ஒன்றின் வீட்டிற்கு ஒருநாள் திடீரென வருகை புரிந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். வரலாற்று ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்படாத குடும்பம் அது. தங்கள் வீட்டு வாசலில் முகமன் கூறி முஹம்மது நபியவர்கள் வந்து நிற்பது கண்டு பரபரத்துப் போனார் அந்தக் குடும்பத் தலைவர். மகிழ்ச்சியில் அவருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

பரஸ்பர குசல விசாரிப்புக்குப் பிறகு, தாம் வந்த செய்தியைச் சொன்னார்கள் நபியவர்கள், "நான் உங்கள் மகள் திருமண விஷயமாய் வந்திருக்கிறேன்"

‘அல்லாஹ்வின் தூதர் என் மகளை மணமுடிக்க விரும்புகிறாரா?’ பரபரத்துக் கிடந்தவர் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனார். "அல்லாஹ்வின் தூதரே! எத்தகு ஆச்சரியமும் மகிழ்ச்சியுமான செய்தி இது!. எங்களது கண்களுக்கு குளிர்ச்சியான காட்சி அமையப் போகிறது!"

அவரது பதில் அவர் தப்பர்த்தம் புரிந்து கொண்டார் என்பதை நபியவர்களுக்கு உணர்த்தியது. விளக்கம் சொன்னார்கள், "நான் தங்கள் மகளை எனக்குப் பெண் கேட்டு வரவில்லை"

"வேறு யாருக்கு?" உற்சாகம் கீழிறங்கிய குரலில் கேட்டார் அந்த அன்ஸாரி.

"ஜுலைபீபுக்குத் தங்கள் மகளைப் பெண் கேட்டு வந்தேன்"

அந்த பதிலைக் கேட்டு அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘என்னது ஜுலைபீபுக்கா?’ புருவம் உயர்ந்து விழிகள் பிதுங்கின அந்த அன்ஸாரிக்கு. அந்த அதிர்ச்சியில் அர்த்தம் இருந்தது.
oOo
இதுவரை வெளியான தோழர்களின் பெயர்களையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொருவர் பெயருடனும் அவரின் தந்தைப் பெயர், குலப்பெயர், கோத்திரப் பெயர் போன்ற ஏதாவது ஒன்று, அல்லது அனைத்தும் நீளமாய் ஒட்டிக் கொண்டிருக்கும். குலம், கோத்திரம் என்பதெல்லாம் அறியாத ஸாலிம் என்ற தோழருக்குக்கூட அவரின் முன்னாள் எசமானன் பெயர் சேர்ந்து கொண்டு, இன்னாரால் விடுவிக்கப்பெற்ற ஸாலிம் என்று ஓர் அடையாளம் தொக்கி நின்றது. அதுதான் அவர்களது வளமை, பெருமை எல்லாம்.

அத்தகைய அடையாளம் எதுவுமே இன்றி ஒருவர் மதீனாவில் வாழ்ந்து வந்தார். ஜுலைபீப்! ஒரே வார்த்தை - ஒரே பெயர். அவ்வளவுதான். அந்தப் பெயரும்கூட அவரின் பெற்றோர் இட்ட இயற்பெயர் இல்லை., காரணப் பெயர்.! இறைவசனம் 33:59இல் 'ஜில்பாப்' எனும் சொல்லை பிரயோகித்திருப்பான் இறைவன். தமிழில் அதற்கு முக்காடு, முன்றானை, தாவணி என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். இந்த ஜில்பாப் என்பதன் குறுஞ்சொல் ஜுலைபீப். அதாவது 'குட்டை தாவணி'. ஜுலைபீப் மிக மிகக் குள்ளமானவர். அதனால் அவருக்கு அந்தப் பெயர் வந்து ஒட்டிக் கொண்டு அப்படியே நிலைத்துப் போய்விட்டது. உயரம்தான் குள்ளமென்றால் அவரது தோற்றமும் எந்த ஒரு கவர்ச்சியும் இன்றி இருந்திருக்கிறது. அதனால் 'தமீம்' (அழகற்றவன்) என்றும் அவரை அழைத்திருக்கிறார்கள்.

உயரம் படு குள்ளம்; கவர்ச்சியற்ற தோற்றம்; அவர் என்ன வமிசம், என்ன குலம் என்பதும் தெரியாது; அவரின் பெற்றோர் யார் என்பது பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. அவர் ஓர் அராபியர் என்பதை மட்டும் அனைவரும் அறிந்திருந்தார்கள். இப்படியான ஒருவர், குலப்பெருமை மாண்புகள் மிகுந்த ஒரு சமுதாயத்தின் மத்தியில் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும்?

அனாதரவான ஒரு பிறவியாக, கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்கானவராக மதீனாவில் வாழ்ந்து திரிந்து கொண்டிருந்தார் ஜுலைபீப். ஆறுதல், அக்கறை, பரிவு என்று எதுவுமே அவர் அறிந்ததில்லை. யாரும் அவரை ஒரு பொருட்டாகக்கூடக் கருதியதில்லை. பொருட்டற்ற ஒரு மனிதனாய் சமூகத்தில் வலம் வருவது எவ்வளவு கொடுமை?

நாம் அறிந்தோ அறியாமலோ நம் மனம் நம்மைப் பற்றிய அங்கீகாரத்துக்கு ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறது. உதாசீனம் ஏற்படுத்தும் காயம் இருக்கிறதே, அது மிகப்பெரிசு. அதற்குமேல் இகழ்ச்சி, கிண்டல், நையாண்டி என்றெல்லாம் ஒரு மனிதன் சந்திக்க நேர்ந்தால் அவனது மனோ நிலையும் அவனது தன்னம்பிக்கையும் எந்த நிலையில் இருக்கும்? இதற்கெல்லாம் ஆளாகிக் கிடந்தார் ஜுலைபீப்.
அஸ்லம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த அபூபர்ஸா என்றொருவர் இருந்தார். அவருக்கு மட்டும் ஜுலைபீபின் மேல் வெறுப்பு ஒருபடி அதிகம். தன் வீட்டின் பக்கம்கூட அவர் நெருங்கக் கூடாது என்று நினைத்திருந்தவர் அவர். ஆண்களிடமிருந்து ஏளனமும் இகழ்ச்சியும் தொந்தரவும் அதிகம் இருந்ததால் பெண்களுக்கு மத்தியில் ஜுலைபீப் அடைக்கலம் தேடியிருந்திருப்பார் போலிருக்கிறது. அதை அறிந்திருந்த அபூபர்ஸா தன் மனைவியிடம் தெளிவான கட்டளையே இட்டிருந்தார். "இதோ பார் ஜுலைபீபை உங்களுக்கு மத்தியில் நான் பார்க்கக்கூடாது. அப்படி நான் பார்த்தேன், அவருக்கு நிகழ்வதே வேறு. பொல்லாதவனாகி விடுவேன் நான்"

எவ்வித மதிப்போ மரியாதையோ இன்றி ஏதோ ஒரு ஜடப்பொருள்போல் ஜுலைபீபின் காலம் கடந்து கொண்டிருந்த வேளையில் மதீனா வந்தடைந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மக்கள் மத்தியில் இஸ்லாம் வேரூன்ற ஆரம்பித்தது. கூடவே அன்பு, அரவணைப்பு, சகோதரத்துவம் போன்ற சொற்கள் எல்லாம் புதுப்பொலிவு அடைய ஆரம்பித்தன. கருணையின் வடிவான நபி, மக்களின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் மதிப்பளிக்கும் அந்த இறைத் தூதர், ஜுலைபீபை அக்கறையாய் இழுத்து அரவணைத்துக் கொண்டார்கள். அன்ஸாரியாகப் பரிணமித்தார் ஜுலைபீப்.

நபியவர்கள் உருவாக்கிய சமூகத்தில் குலம், கோத்திரம், அந்தஸ்து, செல்வாக்கு, புறத் தோற்றம் போன்ற மாயைகள் மனிதனின் ஏற்றத் தாழ்வை நிர்ணயிக்கும் அளவுகோலாய் அமையவில்லை. எல்லாம் மனம். அதனுள் புதையுண்டு கிடக்கும் இறை நம்பிக்கை. அதன் பலனாய்ப் பொங்கியெழும் நல்லறங்கள். அவை, அவை மட்டுமே அளவுகோல். சமூகத்தின் அனைத்துப் போலி அம்சங்களையும் வெட்டிச்சாய்த்து அவை முன்னுரிமை பெற்றன. ஒருவன் யார் என்று அவனது உண்மையான அடையாளத்தை அவை அறிவித்தன.

மிருகங்களுக்கே பரிவு காட்டச் சொன்ன நபியவர்கள், இஸ்லாமிய வட்டத்துள் வந்துவிட்ட தோழர் ஒருவரை எப்படிப் புறந்தள்ளுவார்கள்.? அவருக்கும் வாழ்க்கை உண்டு, அதற்கு ஓர் அர்த்தமும் உண்டு என்பதை உணர்த்த, தாமே கிளம்பிச் சென்றார்கள் பெண் கேட்க.

ஜுலைபீப் பற்றி அனைத்தும் அறிந்திருந்த பெண்ணின் தந்தை அதிர்ந்தார், ‘என்னது ஜுலைபீபுக்கா?’ அல்லாஹ்வின் தூதரிடம் தமது மறுப்பை முகத்துக்கு நேராக எப்படிச் சொல்வது என்று தெரியாமல் சட்டெனச் சமாளித்தார், "பெண்ணின் தாயாரிடம் நான் கலந்து ஆலோசிக்க வேண்டுமே"

நழுவி தம் மனைவியிடம் வந்தார். "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உன் மகளுக்கு திருமணம் நடைபெற விரும்புகிறார்கள்"

அதைக் கேட்டவருக்கு தம் கணவருக்கு ஏற்பட்ட அதே ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. "ஆஹா! எத்தகைய நற்செய்தி இது. நமது உள்ளங்களுக்கு எத்தகைய உவப்பு வந்து சேர்ந்திருக்கிறது"

"அவசரப்படாதே. நபியவர்கள் தாம் மணமுடித்துக் கொள்ள நம் மகள் வேண்டும் என்று கேட்கவில்லை. அவளை ஜுலைபீபுக்குப் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்"

அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் அந்தத் தாய். கிளியை வளர்த்து ஜுலைபீப் கையில் கொடுப்பதாவது? "முடியாது. முடியவே முடியாது. ஜுலைபீபுக்கு நம் மகளை அளிக்க முடியாது" தீர்மானமாகச் சொன்னார் அந்தத் தாய்.

வெளியே காத்திருக்கும் நபியவர்களிடம் செல்வதற்குத் தந்தை திரும்பியபோது, தாயின் உரையாடலைக் கேட்க நேர்ந்த மகள் அவசரமாய் வந்தார். குறுக்கிட்டார்.

"யார் என்னை மணமுடிக்கக் கேட்டது?" தாய் மகளிடம் அனைத்தையும் விவரித்தார்.

நபியவர்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது; அதைத் தம் தாய் திட்டவட்டமாய் மறுத்துள்ளார் என்பதை அறிந்ததும் மிகுந்த குழப்பமும் வேதனையும் அடைந்தார் அந்தப் பெண்.

"அல்லாஹ்வின் தூதரிடமிருந்து வந்துள்ள கோரிக்கையை நிராகரிக்கிறீர்களா? என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்துதான் பேசுகிறீர்களா? இறைத் தூதரின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள். நிச்சயமாய் நமக்கு எந்தவிதக் கேடும் வந்து சேராது"

பெற்றோர் ஒருபுறம் இருக்கட்டும். தம் கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு பெண்ணுக்குக் கனவும் எதிர்பார்ப்பும் இருக்கும்? அப்படியெல்லாம் முழுத் தகுதியுடன் இல்லாமல் சற்றுக் கூடுதல் குறைச்சலாக மணமகன் வந்து அமைந்தாலும் பரவாயில்லை; ஏற்றுக் கொள்வதில் பிரச்சினையிருக்காது. அப்படியெல்லாம் இல்லாமல் அவலட்சணம் என்பது மட்டுமே தோற்றத் தகுதியாய் இருக்கும் ஒருவருக்கு வாழ்க்கைப்பட துணிவதற்கு அசாத்திய மனோதிடம் வேண்டும். அதையும் நபியவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்வது என்பது, அடிபணிதல் என்பதன் உச்சக்கட்டம். அடிபணிந்தார் அந்தப் பெண்.
அதற்குமுன் ஒரு வசனம் சொன்னார்.
oOo
இந்நிகழ்வுக்குச் சிலகாலம் முன் ஒரு திருமணம் நடைபெற்றது. தம் அத்தை உமைமா பின்த் அப்துல் முத்தலிபின் மகள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹாவை, தம்மிடம் அடிமையாய் இருந்தவரும் பின்னர் தாம் மகனாய்ப் பாவித்தவருமான ஸைத் இப்னுல் ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹுவுக்கு மணமுடித்து வைத்தார்கள் நபியவர்கள். நிற, குல ஏற்றத் தாழ்வுகள், ஆண்டான், அடிமை என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாய் அமைந்த திருமணம் அது. பின்னர் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் அந்தத் திருமணம் முடிவுக்கு வந்ததும், பிறகு ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா நபியவர்களுக்கே வாழ்க்கைத் துணையாய் அமைந்ததும் தனி விவரங்கள்.

ஆரம்பத்தில் ஸைதுடன் திருமணம் புரிந்துகொள்ள ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா ஒப்புக்கொள்ளவில்லை. குரைஷியரின் உயர்குலத்தவரான தாம், அடிமையாய் இருந்த ஸைதை மணந்து கொள்வதா? என்று அவருக்கு அதிகமான தயக்கம் இருந்தது. அப்பொழுது முக்கியமான இறைவசனம் ஒன்று வந்து இறங்கியது.

"மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை..." (33:36).
அதைக் கேட்ட ஸைனப் (ரலி) தம் சுய விருப்பு, வெறுப்புகளை ஓரமாய் ஒதுக்கிவிட்டு உடனே அத்திருமணத்திற்கு உடன்பட்டார்கள். அந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் அறிவுறுத்தும்படியாக அந்த வசனம் வந்து அமைந்தாலும் நம் உலக வாழ்வின் எந்த விஷயத்திற்கும் அதுதான் அடிப்படை என்பது நாம் மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்.

குர்ஆன் வசனங்களை வாழ்க்கையாய் வாழ முற்பட்ட சமூகமில்லையா அது; எனவே, இந்த வசனத்தை அந்த நேரத்தில் தம் பெற்றோருக்கு ஓதிக் காண்பித்தார் அந்த அன்ஸாரிப் பெண். வாயடைத்துப் போயினர் அவர்கள்.

"அல்லாஹ்வின் தூதர் எனக்கு எது நலம் விளைவிக்கும் என்று அறிவுறுத்துகிறார்களோ அதற்கு முழு திருப்தியுடன் அடிபணிகிறேன்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

நபியவர்களுக்கு அந்தப் பெண்ணின் எதிர்விளைவு தெரியவந்தது. அகமகிழ்ந்தவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். "யா அல்லாஹ்! அவளுக்கு நன்மைகளை ஏராளமாய் வழங்குவாயாக. அவளது வாழ்க்கையை கடினமானதாகவும் துன்பமானதாகவும் ஆக்கிவிடாதே"

ஒருவரின் வாழ்க்கை சிறப்புற நபியவர்களின் துஆவைவிட சிறந்த பரிசு எது? ஜுலைபீபை முழுமனத் திருப்தியுடன் மணம் புரிந்து கொண்ட அந்தப் பெண் மரணம் அவர்களைப் பிரிக்கும்வரை உவப்பாய் இல்லறம் புரிந்துள்ளார்.

முற்றிலும் இறைவனுக்கும் அவன் தூதருக்கும் என்று கட்டுப்பட்டுவிட்டதால் அதன் முழுக் கூலியையும் மறுமைக்கு நிச்சயப்படுத்திவிட்டான் போலிருக்கிறது அந்த அல்லாஹுதஆலா. அந்தப் பெண்ணின் பெயர்கூட வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெறாமல் தன்னடக்கத்தில் ஒளிந்துவிட்டது. ஆனால் பிற்காலத்தில் அந்தப் பெண் விதவையானதும் மதீனாவில் இருந்த அன்ஸார்கள் அவரை மறுமணம் புரிந்து கொள்ளப் போட்டியிட்டிருக்கின்றனர். நபியவர்களின் சிறப்புப் பிரார்த்தனைக்கு உட்பட்டவர் என்ற தகுதியும் அவரது அடிபணிதலும் அவரது தகுதியை எங்கோ உயர்த்திவிட்டிருந்தது.
oOo
நபியவர்களின் தலைமையில் படையெடுப்பு ஒன்று நிகழ்வுற்றது. இஸ்லாத்தின் எதிரிகளுடன் நிகழ்வுற்ற போர்களில் ஒன்று அது. போர் முடிந்ததும் போரில் உயிரிழந்தவர்களைப் பற்றி விசாரித்தார்கள் நபியவர்கள்.

தோழர்களிடம், "நீங்கள் யாரையாவது இழந்துவிட்டீர்களா?" இன்னின்னவர் உயிரிழந்தார் என்று தம் உறவினர்கள், தோழர்களின் பெயர்களெல்லாம் சொன்னார்கள் அவர்கள்.

படைப்பிரிவின் மற்றொரு பகுதியினரிடம் விசாரித்தார்கள். அவர்களும் அதைப் போலவே பதில் அளித்தனர். அடுத்தொரு பிரிவினர் தங்கள் மத்தியில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தெரிவித்தனர்.

அனைத்தையும் கேட்டுவிட்டு பதில் அளித்தார்கள் நபியவர்கள். "ஆனால் நான் ஜுலைபீபை இழந்துவிட்டேன். களத்தில் அவரைத் தேடுங்கள்"

விரைந்து எழுந்து தேடினார்கள் தோழர்கள். யுத்தக் களத்தில் உதிரம் உறைந்து கிடந்தார் ஜுலைபீப். அவரைச் சுற்றி ஏழு எதிரிகள் இறந்து கிடந்தனர். அவர்களைக் கொன்று, போரில் வீரமரணம் அடைந்திருந்தார் அவர். உருக்குலைந்த குறுகிய உருவம் பிரம்மாண்டத்தைத் தழுவிக் கிடந்தது. நபியவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அங்கு விரைந்து வந்தவர்கள், "இவர் என்னுடையவர்; நான் அவருடையவன்" எனக்கூறி, வலியுறுத்தும் விதமாய் அதையே மேலும் இருமுறை கூறினார்கள்.

பிறகு அது நடந்தது. தாமே தம் கையால் ஜுலைபீபை ஏந்திக் கொண்டு நடந்தார்கள் நபியவர்கள். இதைவிட பெரும்பேறு என்ன வாய்த்துவிட முடியும் ஒரு மனிதனுக்கு. சற்று ஆழ்ந்து யோசித்தால் நகக்கண்ணும் சிலிர்க்கலாம். பிறகு தாமே குழி தோண்டி அதில் ஜுலைபீபைக் கிடத்த, நல்லடக்கம் நடைபெற்றது.

உருவத்தைப் போலவும் பெயரைப் போலவும் சுருக்கமாய் வாழ்ந்து மறுமையின் நிகரற்ற பெருமைக்கு உரியவராகிப் போனார் ஜுலைபீப்,
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

31-ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ


தோழர்கள் -printEmail
வரலாறு - தோழர்கள்
புதன், 18 மே 2011 07:44
حنظلة بن أبي عامر الأوسي
அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய  மக்களிடத்தில் அவனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு, மதிப்பு. யத்ரிபில் இருந்த மற்றொரு முக்கியக் கோத்திரம் அவ்ஸ். இஸ்லாம் மதீனாவில் எழுச்சி பெறுமுன் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தினரைப் பற்றி, அவ்விரு சாராரும் ஒருவரையொருவர் குத்திக்கொண்டு, வெட்டிப் புரண்டு கொண்டிருந்தார்கள் என்றுமுந்தைய தோழர்கள் வரலாற்றில் அறிமுகம் செய்து கொண்டோம்.
இந்த இரு அரபு கோத்திரங்களுக்கு இடையில் பண்டைய காலம் தொட்டு இருந்துவந்த பகைமையை, அப்பொழுது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மூன்று யூதக் கோத்திரத்தார் தூபமிட்டு நன்றாக ஊதி அணைய விடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஊர் ரெண்டுபட்டுக் கிடந்தால்தான் தங்களுக்குக் கொண்டாட்டம் என்பதை நன்கு அறிந்திருந்த நரித்தனம்.
அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரங்களுடன் வெறும் வாயளவிலான நட்பு என்பதையெல்லாம் தாண்டி, நேசநாடுகளின் கூட்டணிபோல் யூதர்களின் பலமான உதவி இருந்து வந்தது. அவ்வகையில் கஸ்ரஜ் கோத்திரத்தின் மிக நெருங்கிய கூட்டாளி, யூதர்களின் பனூ கைனுக்கா கோத்திரம்.
மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்து வந்த அப்துல்லாஹ் இப்னு உபை யத்ரிபின் அரசனாக முடிசூட்டிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டு அனைத்தும் அவனுக்குச் சாதகமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. அவ்வேளையில் அந்நகருக்குள் மெதுவே அடியெடுத்து வைத்தது இஸ்லாம். அடுத்த சில மாதங்களுக்குள் கடகடவென அங்குப் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்து, ஒருமித்த புதிய முழக்கமாக, "லா இலாஹ இல்லல்லாஹ்" தோன்றிவிட, யத்ரிபின் அரசியலும் மக்கள் உறவும் தலைகீழாகிப்போய், அந்நகர் மதீனாவானது.
காலத்தின் கட்டாயம், வேறு வழியில்லை என்றெல்லாம் சமாதானம் செய்துகொண்டு "நானும் ஏற்றுக்கொள்கிறேன்" என்று முஸ்லிமாக ஆகிப்போனான் அப்துல்லாஹ் இப்னு உபை. ஆனால் சூடவிருந்த கிரீடம் தலை நழுவித் தரையில் விழுந்ததில் ஏற்பட்டுப்போன சோகம் அவனை மனதளவில் நயவஞ்சகனாய் உருவாக்கி, வரலாற்றில் அப்படியே நிலைநிறுத்திவிட்டது.
மதீனாவி்ல் ஆட்சி அமைந்ததும் அங்கிருந்த மூன்று யூத கோத்திரங்களிடமும் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இரு தரப்பிற்கும் மிகவும் இணக்கமான உடன்படிக்கை. ஆனால், இத்தனை ஆண்டுக் காலம் யூதர்கள் யாருக்காகக் காத்திருந்தார்களோ அந்த நபி வந்து சேர்ந்துவிட்டாரே என்று மகிழாமல் அவர்களின் இன உணர்வு அரபு குலத்தில் தோன்றிய நபியை ஏற்றுக் கொள்ளவிடாமல் தடுத்தது. அது கேவலம் என்றால், அதைவிடக் கொடூரம் அவருடன் இணக்கமாக வாழ்ந்திடாமல் குழிபறிக்கும் துஷ்டத்தனத்தில் மூழ்கியது.
என்ன ஆயிற்று? தன்வினை தன்னைச் சுட்டது!
வெகு விரைவிலேயே அந்த மூன்று யூத குலங்களும் மதீனாவிலிருந்து துடைத்து எறியப்பட்டன.
துஷ்டதனத்தின் முதல் நடவடிக்கையில் இறங்கியவர்கள பனூ கைனுக்கா யூதர்கள். அந்த யூதர்களில் ஒருவன், ஒரே ஒருவன் செய்த ஒற்றைக் காரியம் அவர்களின் அழிவில் முடிந்தது. அது என்ன காரியம்; அதற்கு நபியவர்கள் எடுத்த கடுமையான எதிர் நடவடிக்கை என்ன; அது ஏன் என்பனவற்றை எல்லாம் வானொலி, தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களின் தாக்கம் புகாத ஒரு மூலையில் அமர்ந்து படித்துப் பார்த்தால் இன்றைய உலக அரசியலில் நம் கண்பார்வை தெளிவடையவும், கண்ணோட்டம் மாறவும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அது விரிவாய் நபியவர்களின் வரலாறுடன் அறியப்பட வேண்டிய சங்கதி. இங்கு நாம் சுருக்கமாய் அறிந்து கொள்ள வேண்டியது -
அந்த பனூ கைனுக்கா கோத்திரம் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டது. பதினைந்து நாள் நீடித்தது முற்றுகை. தங்களின் தோல்வியும் நபியவர்களிடம் அடையப்போகும் தண்டனையும் அவர்களுக்குத் தெளிவாய்த் தெரிந்தவுடன் அவர்கள் உதவி நாடி அணுகப்பட்டோர் அவர்களுடைய பண்டைய காலத்து நேசஅணியின் இரு தலைவர்களான உபாதா இப்னு ஸாமித் மற்றும் அப்துல்லாஹ் இப்னு உபை. உபாதா நபியவர்களிடம் வந்தார். "அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய விசுவாசம் ஒன்றே ஒன்று மட்டுமே. அது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் ஆகும். இந்த இறை மறுப்பாளர்களுடன் நான் கொண்டிருந்த உறவு அறுந்துவிட்டது. அவர்களுக்கு எனது ஆதரவு என்று எதுவும் இல்லை" தெளிவான வாக்கியங்களுடன் தன் நிலையைச் சொல்லிவிட்டார் உபாதா.
ஆனால் அப்துல்லாஹ் இப்னு உபை?
'ஏற்கெனவே கிரீடம் போச்சு. இப்பொழுது தனது ஆதரவுக் கோத்திரமும் தொலைந்து போய்விட்டால் தன் கதி நிர்கதியாகிவிடுமோ?' என்ற பெரும் கவலை ஏற்பட்டுப் போனது அவனுக்கு. நபியவர்களிடம் சென்றவன் அவர்களது போர்க் கவசத்தைப் பிடித்து உலுக்கி, "எனது நட்புக் கோத்திரத்துடன் நல்லவிதமாய் நடந்து கொள்ளுங்கள்" என்றான். கடும் சினம் கொண்ட நபியவர்கள், "என்னை விடு" என்று சொல்ல, "தாங்கள் அவர்களிடம் நல்லவிதமாய் நடந்து கொள்வேன் என்று சொல்லாதவரை விட மாட்டேன். ஒருகாலத்தில் அவர்களின் 700 வீரர்கள் என்னுடைய எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றியிருக்க, அவர்களை ஒரேநாளில் அழித்துவிட நீர் வந்தீரோ? மாறி மாறித் தோன்றும் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கைக் கொண்டவன் நான்"
"அவர்கள் உன்னுடையவர்கள்" என்று அனுமதியளித்தார்கள் நபியவர்கள்.
உயிரையும் பெண்டுகளையும் பிள்ளைகளையும் மட்டும் எடுத்துக்கொண்டு மதீனாவை விட்டுக் காலிசெய்தனர் பனூ கைனுக்கா. அப்துல்லாஹ் இப்னு உபையின் அராஜக வற்புறுத்தலுக்கு நபியவர்கள் இணங்கியதில் கருணையும் ராஜ தந்திரமும் கலந்திருந்தது - அதுவும் அம்மாமனிதரின் வரலாற்றுடன் படித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. அந்த நிகழ்வை இங்கு நாம் அறிந்து கொள்ள முனைந்தது, அப்துல்லாஹ் இப்னு உபை பிற்காலத்தில் எத்தகைய நயவஞ்சகனாய்ப் பரிணமிக்கப் போகிறான் என்பதற்கான அறிகுறியை.
அதன்பின் நிகழ்வுற்ற போர்கள், இதர நிகழ்வுகள் என்று ஒவ்வொன்றிலும் எத்தகைய கூச்சமோ, அவமானமோ, இறையச்சமோ இன்றி படு அப்பட்டமாய்த் தனது நயவஞ்சகத்தைப் பறைசாற்றி, நயவஞ்சகர்களின் தலைவனாகிப் போனான் அப்துல்லாஹ் இப்னு உபை. மனிதகுல பொற்காலத்தில் உலக மாமனிதருடன் வாழும் நற்பேறு கிடைத்திருக்க, அந்தப் பெருமை எதுவுமே உணராமல் ஈனனாய் அவன் மாறிப் போனது பெரும் அவலம். ஏன் அப்படி? கலிமாவின் தொடர்பு நுனிநாக்குடன் முடிந்து போனதால்! நமக்கு அளவிட முடியாத பாடங்களை இத்தகையோரின் வாழ்க்கையில் விட்டுவைத்திருக்கிறது வரலாறு.
அப்துல்லாஹ் இப்னு உபையின் வரலாற்றில் மேலும் பல உதாரணங்கள் இருந்தாலும் இந்த அத்தியாத்துடன் தொடர்புடைய போரில் நிகழ்ந்த ஒன்றை மட்டும் மேற்கொண்டு சுருக்கமாய்ப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுவோம்.
ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு, ஷவ்வால் மாதம் பலம் வாய்ந்த 3000 போர் வீரர்களுடன் மதீனாவிற்குப் படை திரட்டி வந்து கொண்டிருந்தனர் குரைஷிகள்.
திரண்டுவரும் படைகளை நகருக்குள் வரவிட்டுப் போரிடுவதா, நகருக்கு வெளியே சென்று எதிர்கொள்வதா என்று ஆலோசிக்கப்பட்டு, இறுதி முடிவாக உஹது நோக்கிப் புறப்பட்டது முஸ்லிம்களின் படை. மூவாயிரம் எதிரிகளை எதிர்கொள்ள சுமார் ஆயிரம் போர்வீரர்கள் நபியவர்கள் தலைமையில் திரண்டிருந்தனர். மதீனாவைவிட்டுக் கிளம்பிய படை, அஷ்-ஷைக்ஃகைன் எனும் இடத்தில் இரவில் தங்கியது. மறுநாள் பொழுது புலருமுன் மதீனாவுக்கும் உஹது மலைக்கும் இடையில் அஷ்-ஷவ்த் எனும் இடத்தை அடைந்து, அங்கு ஃபஜ்ரு தொழுகை முடிந்த நேரம். நிறம் காட்டினான் அப்துல்லா இப்னு உபை.
தன் சொல்பேச்சு கேட்கும் 300 வீரர்களுடன் சடாரென்று கிளம்பி, 'எனக்குப் பிடிக்கலே; நான் வீட்டிற்குப் போகிறேன்' என்று மதீனா திரும்பிவிட்டான்! போர்களத்தில் சகாக்களை அனாமத்தாய் அப்படி விட்டுவிட்டுத் திரும்புவது எத்தகைய துரோகம், நயவஞ்சகம்? தெரிந்திருந்தும் தெளிவான திடசித்தத்துடன் அதைச் செய்தான் அவன்.
"ஏன்? என்னாச்சு? எதற்கு இப்படி?" விசாரித்தார்கள் தோழர்கள்.
அதற்கு அவன் கூறிய காரணம், "நபியவர்கள் என் பேச்சிற்கு முக்கியத்துவம் அளிக்காமல், சிறுவர்களின் வார்த்தைகளுக்கு இணங்கிவிட்டார். எனவே நாங்கள் ஏன் இந்த இடத்தில் நம்மை மாய்த்துக் கொள்ள வேண்டும்?"
அப்படி என்ன பேச்சு?
மதீனா நகருக்குள் இருந்து கொண்டு எதிரிகள் நெருங்கியதும் போரிட வேண்டும் என்று கருத்து கொண்டிருந்தவர்களில் அப்துல்லாஹ் இப்னு உபை ஒருவன். மற்றவர்கள் நகருக்கு வெளியே சென்று எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும் என்றனர். ஆனால் தீர கலந்து ஆலோசித்து முடிவெடுத்தபின்தானே அனைவரும் கிளம்பினார்கள்? தவிரவும் அல்லாஹ்வின் தூதர் ஒரு விஷயத்தில் முடிவெடுத்தபின் அதற்கு வேறு என்ன மறுப்பு, எதிர்ப்பு?
இப்படிப்பட்ட அப்துல்லாஹ் இப்னு உபைக்கு மகள் ஒருவர் இருந்தார். ஜமீலா!
oOo
மதீனாவில் வாழ்ந்திருந்த மற்றொரு பெரும் பிரிவான அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவன் அபூஆமிர். இவனது இயற்பெயர் அப்து அம்ரு இப்னு ஸைஃபி. யூதர்களுடன் கொண்ட தொடர்பினாலோ என்னவோ, நபி ஒருவர் தோன்றப் போகிறார் என்று தம் குல மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து கொண்டிருந்தான் அவன். அவ்ஸ் மக்களிடத்தில் அவனுக்கு நல்ல செல்வாக்கு. அவர்கள் அவனைப் பெரியதொரு துறவிபோலவே கருதி 'ராபி' என்று புகழ்ந்து அழைத்துக் கொண்டிருந்தனர்.
நபி தோன்றப் போகிறார் என்று சொல்லிக் கொண்டிருந்த அவன் மனதில் இறைவன் தன்னை ஒரு நபியாக அறிவிக்கப்போகிறான் என்று ஓர் அசட்டுத்தனமான எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மக்காவில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோன்றி, பிறகு அவர்கள் புலம்பெயர்ந்து மதீனா வந்ததும், 'இத்தனை நாள் காத்திருப்பு வீணா?' என்று வெறுத்து நொந்து போனான் அவன். நபித்துவம் என்பது அமைச்சரவைப் பதவியா என்ன?
காத்திருந்த உண்மை கண்ணெதிரே தோன்றிய நொடியில் குருடாகிப் போனது அவன் பார்வை. மதீனாவில் இஸ்லாம் பரவலாகுமுன் அவ்ஸ் குலத்தின் தலையானவர்களுள் ஒருவனாய் இருந்த அவனால் இஸ்லாத்தின் ஒருமைப்பாட்டைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒருநாள் நபியவர்களுக்கு எதிராய்த் தன் பகையைப் பகிரங்கமாய் அறிவித்துவிட்டு, அவன் உறவைச் சேர்ந்த 50 பேருடன் மக்காவிற்கு ஓடிவிட்டான். அவனுக்கு அல்-ஃபாஸிக் என்று புனைப் பெயரிட்டார்கள் நபியவர்கள். அபூஆமிர் அல்-ஃபாஸிக் என்று அவன் பெயரைத் திருத்திப் பத்திரப்படுத்திக் கொண்டது வரலாறு.
மக்காவுக்குச் சென்றவன் அங்கு பத்ரு யுத்தத்தில் தோற்றுப்போய்த் திரும்பிவந்து அமர்ந்து புகைந்து கொண்டிருந்த குரைஷிகளை முடுக்க ஆரம்பித்தான். அவர்களை முஸ்லிம்களுக்கு எதிராய் மீண்டும் போர் தொடுக்கத் தூண்டியதில் இவன் பங்கும் கணிசம்.
"என் அவ்ஸ் மக்களிடத்தில் எனக்கு நல்ல செல்வாக்கு உண்டு. என்னைப் பெரிதும் மதிக்கின்றனர் அவர்கள். நீங்கள் படை திரட்டுங்கள்; கிளம்புங்கள். நானும் இணைந்து கொள்கிறேன். போர்களத்தில் என்னைக் காணும் அவ்ஸ் மக்கள் உடனே நம் பக்கம் இணைந்துவிடுவார்கள். அதன்பின் முஹம்மதின் படை வலுவிழந்துவிடும். வேலை எளிது" என்று ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுத்துக் கொண்டே இருந்தான். ஆனால் அது முற்றிலும் தவறாய் முடிந்துபோகும் என்பதையெல்லாம் அப்போது அவன் அறியவில்லை.
நாளாவட்டத்தில் குரைஷிகளின் படை மீண்டும் உருவானது; தயாரானார்கள்; மதீனா நோக்கிப் புறப்பட்டார்கள் வெறித்தனமாய். அவர்களை எதிர்கொள்ள மதீனாவிலிருந்து கிளம்பிவந்தது முஸ்லிம்களின் படை. உஹது மலையடிவாரத்தில் இருபடைகளும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டன.
குரைஷிகளின் தலைவன் அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்புக்கு அருகில் நின்று கொண்டான் அபூஆமிர். தம் மக்களை நோக்கிக் கத்தினான். "என் அவ்ஸ் குல மக்களே! உங்கள் அன்பிற்குரிய அபூ ஆமிர் அழைக்கிறேன்" என்று முஸ்லி்ம்களை நோக்கி தன் பேச்சால் கவருவதற்கு முயல, "ஓ ஃபாஸிக். உன்னைக் காணும் எந்தக் கண்களும் திருப்தியுறக் கூடாது" என்று சாபமும் கற்களும் அவனை நோக்கிப் பறந்து வந்தன. அவமானப்பட்டு குரைஷிகளிடம் திரும்பிய ஓடிய அவன், "நான் அவர்களை விட்டுக் கிளம்பி வந்த பிறகு அவர்களை ஏதோ இனந்தெரியா தீங்கு சூழ்ந்துவிட்டது என்று நினைக்கிறேன்" என்றான் மூச்சுவாங்க.
துவங்கியது போர். முஸ்லி்ம் படைப்பிரிவில் இருந்த அவ்ஸ் மக்களை எதிர்த்து வெறித்தனமாய்ப் போரிட்டான் அபூஆமிர். ஆயுதங்கள் என்று மட்டும் இல்லாது கையில் கிடைத்த கற்களை எல்லாம் எடுத்து அவர்கள்மேல் வீசினான். மூர்க்கமான போர் ஒருவழியாய் முடிவுக்குவர, குரைஷிகள் எதிர்பார்த்த வெற்றிமட்டும் அவர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று.
தான் நினைத்தது குரைஷிகளின் மூலம் கைகூடவில்லை என்றதும் பின்னர் அவன் ஓடியது ரோமர்களை நோக்கி. அங்குச் சென்று ஆதரவு திரட்டுவோம்; இந்த முஸ்லிம்களை ஒடுக்க இனி இந்த வல்லரசுதான் சரி என்பது அவன் திட்டம். ஆனால் பின்னர் அந்த ரோம வல்லரசே தொலைந்து போகப்போகிறது என்பதை அவனும் உணரவில்லை; ரோமப் பேரரசனும் அறிந்திருக்கவில்லை. பைஸாந்திய அரசன் இருகை விரித்து அபூஆமிரை வரவேற்று, அணைத்துக் கொண்டு, எல்லா ஆதரவும் நான் தருகிறேன் என்று வாக்களித்தான். முதல் கட்டமாய் மெதுமெதுவே அங்கிருந்தபடி மதீனாவில் இருந்த நயவஞ்சகர்களின் கூட்டத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டான் அபூஆமிர்.
"தகுந்த தருணத்தில் முஹம்மதை எதிர்த்துப் போரிட படை திரட்டித் தருவேன்; அதற்கு வாகாய் நமக்கு ஒரு தலைமை இடம் தேவை" என்று அவன் தெரிவிக்க, திட்டம் தீட்டினார்கள் நயவஞ்சகர்கள். மதீனாவுக்குப் புலம்பெயரும்போது நபியவர்கள் முதன்முதலாய் நிர்மாணித்தார்களே குபா பள்ளிவாசல், அதன் அருகிலேயே மற்றொரு பள்ளிவாசலை உருவாக்கினார்கள் அவர்கள். அந்தப் பள்ளிவாசலுக்கு நபியவர்களையே அழைத்துத் தலைமை தாங்கி தொழவைத்துவிட்டால் பள்ளிக்கு அங்கீகாரமும் கிடைத்துவிடும்; முஸ்லிம்களின் கண்பார்வையில் படாமல் நாமும் நல்ல பிள்ளைகள்போல் இந்தப் பள்ளிவாசலில் நமது திட்டங்களை செயல்படுத்தலாம் என்று நீண்டது அவர்களது கனவு.
தபூக் படையெடுப்பிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த நபியவர்களுக்கு இத்திட்டத்தை இறைவன் வஹீ வாயிலாய்த் தெரிவிக்க இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது எதிரிகளின் திட்டம்.
இப்படிப்பட்ட அபூஆமிருக்கு மகன் ஒருவர் இருந்தார். ஹன்ளலா!
oOo
ஃபாஸிக் அபூஆமிரின் மகன் ஹன்ளலாவுக்கும் முனாஃபிக்குகளின் தலைவன் அப்துல்லா இப்னு உபையின் மகள் ஜமீலாவுக்கும் திருமணம் நடைபெற்றது. எப்பொழுது? உஹதுப் போருக்கு மதீனாவில் பரபரப்பாய்த் தயாராகிக் கொண்டிருந்தார்களே முஸ்லிம்கள், அப்பொழுது. திருமணம் என்றதும் பெரும் நிகழ்வுகள், சம்பிரதாயம், ஆடம்பரம், விருந்து, மொய்முறை, லொட்டு லொசுக்கு என்று பழக்கப்பட்டுப்போன நமக்கு, அன்று அவர்களின் வாழ்வும் நடைமுறைகளும் உணர்த்தும் பிம்பம் நமக்கு அறவே அறிமுகமில்லாதவை.
குறிப்பாய் இந்தத் திருமணமும் அதை ஒட்டிய நிகழ்வுகளும் பெரும் ஆச்சரியம்! பார்ப்போம்.
திண்ணைத் தோழர்கள் என்று படித்தோமே நினைவிருக்கிறதா? ஏறக்குறைய ஐம்பது தோழர்கள் அத்திண்ணையில் வசித்து வந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவர்களில் அபூஹுரைரா, கஅப் பின் மாலிக் அல்-அன்ஸாரீ, ஹாரிதா இப்னு அந்-நுஃமான் போன்று ஆன்மிகத்தை முக்கியத் தேடலாகக் கொண்ட தோழர்களுடன் அத்திண்ணையில் வசித்து வந்தவர் ஹன்ளலா இப்னு ஆமிர்.
திருமணம் பகலில் முடிந்துவிட்டது. படையோ போருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது. மணமகன் ஹன்ளலா நபியவர்களிடம் நெருங்கி அனுமதி கேட்டார். 'இப்பொழுதுதான் எனக்குத் திருமணம் முடிந்துள்ளது. ஒரு வாரம் ஒரு மாதம் விடுப்பு வேண்டும். தேன்நிலவு போகவேண்டும்' என்ற கோரிக்கையெல்லாம் இல்லை.
"இன்றிரவு மட்டும் எனக்குப் படையிலிருந்து விலகியிருக்க அனுமதி வேண்டும். காலையில் வந்துவிடுவேன்."
ஹன்ளலா தம் புது மனைவியுடன் முதல் இரவு அனுபவிக்க அனுமதியளித்தார்கள் நபியவர்கள். வீட்டிற்குக் கிளம்பினார் ஹன்ளலா. உஹதுக்குக் கிளம்பியது முஸ்லிம்களின் படை. மதீனாவைவிட்டுக் கிளம்பிய படை, அஷ்-ஷைக்ஃகைன் எனும் இடத்தில் இரவில் தங்கி ஓய்வெடுக்க, இங்கு மதீனாவில் தம் வீட்டில் இல்லறத்தில் ஈடுபட்டார் ஹன்ளலா ரலியல்லாஹு அன்ஹு.
இரவு முடிந்து வைகறைத் தொழுகை நேரம் நெருங்கியது. அஷ்-ஷவ்த் எனும் இடத்தை அடைந்து ஃபஜ்ருத் தொழுதார்கள் நபியவர்களும் படையினரும். மதீனாவில் கணவனும் மனைவியும் எழுந்து குளித்துவிட்டு தொழுதனர். புது தம்பதியர் அல்லவா? இயற்கையான உந்துதலால் மீண்டும் இருவரும் கூடினர். அப்படியே கண்ணயர்ந்தார் ஹன்ளலா. பொழுது புலர்ந்து கதிரவன் எட்டிப்பார்க்க, சட்டென்று விழித்தெழுந்தார் ஹன்ளலா. படை உஹதை அடைந்து போர் துவங்கியிருக்கும் என்ற நினைப்பு அவரைப் பரபரப்பாக்கியது. உடலுறவுக்குப்பின் கடமையான குளியலை குளிப்பதற்கும் அவருக்கு நேரமில்லை; அவகாசமில்லை. கடகடவென கவசம் தரித்தார்; ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டார்;  'சென்று வருகிறேன்' என்று இருசொற்களைப் புதுப்பெண்ணிடம் உதிர்த்துவிட்டு, போர்களத்திற்குப் பாய்ந்தோடினார் ஹன்ளலா ரலியல்லாஹு அன்ஹு.
அதே நேரத்தில் அங்கு வேறோரு பாதையில் 300 பேருடன் மதீனா திரும்பிக் கொண்டிருந்தான் அவருடைய மாமனார் அப்துல்லாஹ் இப்னு உபை. இங்குக் கணவன் கிளம்பியதும் ஜமீலா ரலியல்லாஹு அன்ஹா அக்கம்பக்கத்தவரிடம் ஒரு முக்கியச் செய்தியொன்றை பரிமாறச் சென்றார். அது என்னவென்று தெரிந்து கொள்வதற்குமுன் நாமும் உஹதுக்குச் சென்று வந்துவிடுவோம்.
oOo
உக்கிரமாய் நடைபெற்றுக்கொண்டிருந்த போரில் முஸ்லிம் படைகளுடன் கலந்து களத்தில் குதித்தார் ஹன்ளலா. 'என் பங்குக்கு வந்தேன்; நானும் வாளை நாலு சுழற்று சுழற்றினேன்; தீர்ந்தது என் பங்கு. என் புது மனைவி எனக்காக இன்று மாலை அலங்காரத்துடன் தயாராக நிற்பாள்' என்ற எண்ணம் எதுவும் அவர் மனதில் இருந்ததாகத் தெரியவில்லை. வீடு மறந்தார்; புதுக் குடும்பம் மறந்தார். அவர் கண்களிலும் சிந்தையிலும் நிறைந்திருந்தது அல்லாஹ்வின் எதிரிகள். திரண்டிருந்தது ஒரே எண்ணம், ஒழிக்க வேண்டும் அவர்களை.
ஹன்ளலா களத்தில் குறிவைத்தது, குரைஷிப் படையின் தலைவன் அபூஸுஃப்யானை. படையின் தலைவன் என்பதால் அபூஸுஃப்யானைச் சுற்றி பாதுகாப்பு வளையம் பலமாய் இருந்தது. தவிர அபூஸுஃப்யான் குதிரையில் அமர்ந்து போரிட்டுக் கொண்டிருக்க, ஹன்ளலாவிடம் குதிரையும் இல்லை; கழுதையும் இல்லை. வெறும் காலாட்படை வீரர் அவர். ஆனால் எந்த அசௌகரியமும் ஒரு பொருட்டே இல்லை என்று சுழன்று சுழன்று அபூஸுஃப்யானை நெருங்கி விட்டார் ஹன்ளலா. தம் வாளைச் சுழற்றி அபூஸுஃப்யானை வெட்டி வீழ்த்த முயல மயிரிழையில் உயிர் தப்பினார் அபூஸுஃப்யான். போரின் போக்கே திசை மாறி இருந்திருக்கும். தவறிப்போனது அந்த வீச்சு. அப்பொழுது பக்கவாட்டிலிருந்து வந்த ஷத்தாத் இப்னு அஸ்வத் என்பவன் தன் ஈட்டியை ஹன்ளலாவின் உடலில் செருக அது மறுபுறம் வெளிவந்தது. அப்படியும் விடாது உடலில் குத்திட்டு நிற்கும் ஈட்டியும், வழிந்தோடும் குருதியுமாய் எதிரியைத் துரத்தினார் ஹன்ளலா. ஆனால் மீண்டும் எதிரியின் ஈட்டி அவரைத் தாக்க வீர மரணமடைந்தார் ஹன்ளலா ரலியல்லாஹு அன்ஹு.
அதன்பின் தொடர்ந்த போர்; வெற்றியை நெருங்கிய முஸ்லிம் படை ஒருசிலரின் தவறினால் பாதிப்படைந்தது; ஹம்ஸா ரலியல்லாஹு உட்பட மற்றும் பலர் வீர மரணமடைந்தது; பெருத்த சேதம் நிகழ்வுற்றது - அதெல்லாம் உஹதின் இதரப் பெரும் நிகழ்வுகள்.
ஒருவழியாய் முடிவுற்றது போர். மாண்டவர்கள் போர்க்களத்தில் சிதறிக் கிடக்க, அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த நபியவர்கள் மிகவும் விசித்திரமானக் காட்சி ஒன்றைக் கண்டார்கள். அவர்களது பார்வை ஆச்சரியத்துடன் விண்ணை நோக்கி உயர்ந்தது.
பிறகு தம் தோழர்களிடம் திரும்பியவர்கள், "உங்கள் சகோதரர் ஹன்ளலாவை வானவர்கள் விண்ணுக்குச் சுமந்து சென்றார்கள். சுவர்க்கத்திலிருந்து வெள்ளிப் பாத்திரத்தில் எடுத்து வந்த நீரினால் அவரது உடலைக் கழுவிக் கொண்டுவந்து கிடத்தியுள்ளார்கள். இவரது செய்தி என்ன என்று விசாரித்து வாருங்கள்"
ஹன்ளலா தாம்பத்யத்தில் ஈடுபட்டு, குளிக்கவும் அவகாசமின்றிப் போருக்கு விரைந்த செய்தி பிறகே அவர்களுக்குத் தெரிய வந்தது.
ஸுப்ஹானல்லாஹ்! இந்த நற்பாக்கியத்தை, உன்னதப் பெருமையை என்ன சொல்லி எழுதுவது, விவரிப்பது? இறைவனுக்காக ஓடிப்போய் உயிர் நீத்தவரைக் கழுவிக் குளிப்பாட்ட இறங்கி வருகிறார்கள் வானவர்கள், சுவர்கத்தின் நீரைச் சுமந்து கொண்டு. அதுவும் வெள்ளிப் பாத்திரத்தில்! கஸீலுல் மலாயிக்கா - வானவர்களால் கழுவப் பெற்றவர் என்ற அடைமொழி ஏற்பட்டு ஒட்டிக் கொண்டது ஹன்ளலாவுக்கு. போரில் அன்று இறந்தவர்களை அடக்கம் செய்யும்போது ஹன்ளலாவின் உடலில் இருந்து சொட்டிக் கொண்டிருந்தது நீர். சுவர்க்கத்தின் நீர்.
இங்கு இவர் போருக்குக் கிளம்பி வந்திருக்க அங்கு மதீனாவில் அவர் மனைவி ஜமீலா ரலியல்லாஹு அன்ஹா அக்கம் பக்கத்தவரிடம் சென்றார் என்று பார்த்தோமல்லவா? அவர் நான்கு சாட்சிகளை அழைத்தார். "நேற்று நான் ஹன்ளலாவை மணம் புரிந்துகொண்டேனே அவருடன் எனது தாம்பத்யம் இனிதே நிறைவேறியது" என்று தம் திருமணம் பூர்த்தியானதைச் சொல்லி வைத்தார் அவர். 'இது என்ன விசித்திரச் செய்கை' என்று சற்றுக் குழப்பமாக இல்லை? அதற்கு வலுவான ஒரு காரணம் இருந்தது. கனவு!
ஜமீலா கனவொன்று கண்டிருந்தார். அதை அவரே விவரித்திருந்தார். "நான் கனவொன்று கண்டேன். வானம் திறந்து கொள்ள, ஹன்ளலா அதனுள் புகுந்தார். பிறகு வானம் மூடிக் கொண்டது. ஹன்ளலா இன்று வீர மரணம் அடையப் போவதாக நான் இதற்கு அர்த்தம் கொள்கிறேன்"
இங்கு, சற்று கண்மூடி நாம் சிந்தித்துப் பார்க்க வேணடும். ஒரு பெண், புதிதாய்த் திருமணம் ஆனவர், தம் கணவர் வீர மரணம் அடையப் போகிறார் என்பதை அறிந்து அவருடன் முழுமனதாய் மகிழ்வுடன் தாம்பத்யம் கொள்கிறார். அந்த உறவினால் கரு உருவாகும் சாத்தியங்கள் அத்தனையும் உள்ளன என்பது அவருக்குத் தெரியும். கணவன் இறந்துவிட்டால் மறுமணத்திற்கு அந்தக் குழந்தை ஒரு கூடுதல் தடை என்பதும் யதார்த்தம். இத்தனையும் இருந்தும், கூடினார்; கணவர் போருக்கு விரைய வழி அனுப்பி வைத்தார். "போகாதே போகாதே என் கணவா; பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" என்ற அங்கலாய்ப்பு, அழுகை, ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லை. "என் கணவர் வீர மரணம் அடைந்தார்" என்பதில் அவர்களுக்கு பெரும் பெருமை. அவருடைய வாரிசு இவன்தான் என்பதை உலகுக்கு அறிவிப்பதில் அதைவிடப் பெருமை. நம் பெண்கள் நகை, பட்டு, ஒற்றைவடச் சங்கிலி எனும் செயற்கையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தம் கணவனிடம் இயற்கையாய் என்ன எதிர்பார்க்க வேண்டும், எதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கு இதில் உதாரணம் பொதிந்துள்ளது.
கரு உருவானது. ஜமீலாவுக்கு ஹன்ளலாவின் மகன் பிறந்தார். அவர் பெயர் அப்துல்லாஹ். பின்னர் இந்த ஜமீலாவை தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு மறுமணம் புரிந்து கொண்டார். அவர்களுக்கு முஹம்மது பின் தல்ஹா என்றொரு மகன். அப்துல்லாஹ் பின் ஹன்ளலாவும் முஹம்மது பின் தல்ஹாவும் மிகவும் நெருக்கமாகிப் போனார்கள். ஓர் இழப்பை வேறு சிறப்பானவற்றின் மூலம் அவர்களுக்கு ஈடு செய்தான் இறைவன்.
இவ்வுலகும் வாழ்க்கையும் அவர்களது பார்வையில் முற்றிலும் வேறு. திருமணம், தாம்பத்யம், தொழுகை, வழிபாடு, போர், உயிர் என பேச்சும் மூச்சும் அனைத்துமே இறைவன், அவன் தூதர் என்ற கயிற்றால் கட்டப்பட்டு வாழ்ந்து முடித்திருக்கிறார்கள் அவர்கள். வித்தியாசமான பரிமாணத்துடன் வாழ்ந்த ஒப்பற்ற சமூகம் அவர்கள். நம் நிகழ்கால வாழ்க்கையை அவர்களுடன் எந்த அளவுகோலில் வைத்து ஒப்பிடுவது?
இறை வழியில் போரிடுபவர்களுக்கு உலக அளவுகோலின் எந்த இலக்கணமும் பொருந்துவதில்லை. அவர்களது வாழ்வும் வெற்றி; மரணமும் வெற்றி. இறைவனும் அவன் தூதரும் போதும் என்று உயிரைத் துறக்கிறார்கள் அல்லவா, அப்பொழுது இறைவனின் சிறப்பும் நற்பேறும் நாம் கற்பனை செய்ய இயலா வடிவில் இவ்வுலகிலும் அவர்களுக்கு வந்தடைகிறது; மறுமையிலும் நிரந்தரமாக உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்திவிடுகிறது. எல்லாம் வல்ல இறைவனின் பூரண திருப்தியை அவர்கள் அடைந்துவிடும்பொழுது மற்ற எதுவும் முக்கியத்துவம் இழந்துவிடுகிறது.
பிற்காலத்தில் அப்துல்லாஹ்விடம் "நீ யார்?" என்று யாராவது அவரை விசாரித்தால் பெருமிதமான பதில் வரும் அவரிடமிருந்து, "வானவர்களால் கழுவப்பெற்றவரின் மகன் நான்"
"யார் அவர்?"
"ஹன்ளலா, கஸீலுல் மலாயிக்கா!"
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

நன்றி  சத்தியமார்க்கம்.காம் 

- 30-துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ


தோழர்கள்printEmail
வரலாறு - தோழர்கள்
செவ்வாய், 03 மே 2011 10:26
நன்றி  சத்தியமார்க்கம்.காம் 
الطفيل بن عمرو الدوسي
அரேபியாவில் தவ்ஸ் என்றொரு கோத்திரம். அக்கோத்திரத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் தம் மக்களையெல்லாம் மாய்ந்து மாய்ந்து இஸ்லாத்திற்கு அழைத்துக் கொண்டிருந்தார். அவரின் தந்தை, மனைவி தவிர வேறு யாரும் பெரிதாய் அவர் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. "ஹும்! நல்லாத்தானே இருந்தார். மக்காவுக்குச் சென்று வந்ததிலிருந்து இவருக்கு ஏதோ ஆகிவிட்டது போலிருக்கிறது" என்று உதாசீனப்படுத்திவிட்டு தத்தம் வேலைவெட்டி, வழிபாடு என்று இருந்துவிட்டனர்.
சொல்லிப் பார்த்தார்; விவரித்துப் பார்த்தார்; இறைவசனம் சொல்லி எச்சரித்துப் பார்த்தார்; யாரும் கேட்பதாய் இல்லை. ஆனால் ஓர் இளைஞர் இருந்தார். அவர் படு சூட்டிகை, கெட்டி. சட்டென்று பிடித்துக் கொண்டார் அந்தச் செய்தியை. "இது எனக்குப் புரிகிறது. உன்னதம் இது. நான் ஏற்றுக் கொள்கிறேன்" அவ்வளவுதான். வேறு யாரும் வரவில்லை.
வெறுத்துப் போனது அவருக்கு. ஒருகட்டத்தில் மிகவும் நொந்து மனமுடைந்துபோன அந்த மனிதர், அந்த இளைஞரையும் அழைத்துக் கொண்டு "வா போகலாம்" என்று நபியவர்களைச் சந்திக்க மக்காவுக்குக் கிளம்பிவிட்டார். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து விபரமெல்லாம் கூறினார். தம் மக்களின்மேல் பெரும் கோபம் இருந்தது அவருக்கு.
"இந்த இளைஞர் யார்?" விசாரித்தார்கள் நபியவர்கள்.
"என் கோத்திரம்தான். புத்திசாலிப் பையன். உடனே ஏற்றுக் கொண்டார்"
"உன் பெயர் என்ன?" என்று அந்த இளைஞனிடம் கேட்டார்கள்.
"அப்துல் ஷம்ஸ்" சூரியனின் அடிமை என்று பொருள்படும் பெயர்.
"அது வேண்டாம். இன்றிலிருந்து உன் பெயர் அப்துர் ரஹ்மான்" அருளாளனின் அடிமை என்று பெயர் மாற்றப்பட்டது.
"என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அல்லாஹ்வின் தூதரே! நான் இன்றிலிருந்து அப்துர் ரஹ்மான்"
அந்த மனிதர் நபியவர்களிடம் தொடர்ந்தார்: "அல்லாஹ்வின் தூதரே! தங்களது சத்தியத் தூதுச் செய்தியை மறுத்துவிட்ட என் குல மக்களைத் தாங்கள் சபிக்கவேண்டும்".
அமைதியாக கை, கால், முகம் கழுவி ஒளுச் செய்து கொண்டார்கள் நபியவர்கள்.
"அவ்வளவுதானா நம் மக்கள்" என்று பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் அப்துர் ரஹ்மான். பிற்காலத்தில் அபூஹுரைரா என்ற பெயரில் மிகவும் பிரபல்யமடையப் போகும் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு.
oOo
உக்காள்! மக்காவின் அருகே அமைந்திருந்த சந்தை. ஆண்டுதோறும் கூடும். புனித மாதங்கள் என்று கருதப்பெற்ற துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களில் இந்தச் சந்தையில் அரேபியாவிலுள்ள அனைத்துக் குலம், கோத்திரத்து மக்கள் வந்து குழுமுவார்கள். வியாபாரம், பண்டமாற்று, அது-இது என்று சுறுசுறுப்பாய் இருக்கும். பின்னர் அந்த மக்கள் அப்படியே மக்காவிற்குச் சென்று அஞ்ஞானக் காலத்துக் கடமைகளை கஅபாவில் நட்டுவைத்துள்ள சிலைகளுக்குச் செய்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்புவார்கள். அப்பொழுது அவர்களுக்கு அதுதான் ஹஜ்ஜுக் கடமை. நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் துவங்கி வைத்த ஹஜ்ஜுக் கடமை, நாளாவட்டத்தில் உருமாறி, விக்கிரக ஆராதனையாக மாறிவிட்டிருந்த கொடுமை அது.
உக்காள் போன்றே மஜன்னா, துல்மஜாஸ் என்ற சந்தைகளும் இருந்தன. உக்காள், மக்கா-தாயிஃப் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே அமைந்திருந்தது. மஜன்னா, துல்மஜாஸ் இரண்டும் அரஃபாவுக்கு அருகே அமைந்திருந்தன. இவற்றில் உக்காள் மட்டும் மிகவும் பிரசித்தம்.
ஆண்டுதோறும் திருவிழா, சந்தை என்று நம் ஊர்ப்புறங்களில் கூடும்போது ஏதாவது போட்டி நடத்துகிறார்கள் இல்லையா, அதைப்போல் அந்தக் காலத்தில் அந்தச் சந்தையில் கவிதைப் போட்டி நடைபெறும். இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்குமுன் அரேபிய மக்களின் வாழ்க்கையில் கவிதை பெரும்பங்கு வகித்துக் கொண்டிருந்தது. கதை சொல்ல; வரலாறு விவரிக்க; காதல், வீரம், மூதாதையர் பெருமை, பெருந்தன்மை சொல்ல; மகிழ, தூற்ற, இகழ என்று எதெற்கெடுத்தாலும் கவிதை. அதுவும் அதன் வார்த்தைகளும் அமைப்புகளும் ஏனோதானோ என்றெல்லாம் கிடையாது. சிறந்து விளங்கக்கூடியவை. இந்தச் சந்தையில் கவிதை போட்டா போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொதுமக்கள் மத்தியில் கவிஞர்கள் தங்களது கவிதைகளை வாசித்துக் காட்ட, அதில் வெற்றிபெறும் கவிதைக்குப் பெரும் அந்தஸ்து  கிடைக்கும். என்ன அது? அந்தக் கவிதையை எழுதி கஅபாவின் சுவரில் கட்டித் தொங்கவிடுவார்கள். கோடி ரூபாய் பரிசு என்பதைவிட உயர்ந்த பெருமிதம், அங்கீகாரம் அது அவர்களுக்கு. இத்தகு கவிதைகளுக்கு அல்முஅல்லகாத் - "தொங்கும் கவிதைகள்" என்று பெயர்.
ஆண்டுதோறும் இந்தச் சந்தைகளுக்கு ஆயிரக்கணக்கில் வந்து குழுமும் மக்களை அணுகித் தம் பிரச்சாரத்தைத் தொடர ஆரம்பித்திருந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இறைவசனம் இறங்கிய ஆரம்பத் தருணங்களில் நபியவர்களின் சொந்த பந்தங்களுக்கும் கோத்திரத்தினருக்கும் இஸ்லாமிய அழைப்பையும் இறை எச்சரிக்கையையும் சொல்லும்படி மட்டுமே அமைந்திருந்தன இறை கட்டளைகள். ஏற்ற சிலரைத் தவிர மீதமிருந்த பலர் கச்சைகட்டி எதிர்ப்பைக் காட்டி, சகட்டுமேனிக்கு அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். சொந்தங்களுக்கான பிரச்சாரத்தில் பெரும் முன்னேற்றம் இல்லாமல் போனது நபியவர்களுக்கு.
நபியவர்களுக்குப் பெரும் ஆதரவாய் இருந்துவந்த அவர்களின் அருமை மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹா இறந்ததைத் தொடர்ந்து, குரைஷிகளின் துஷ்டத்தனத்திலிருந்து நபியவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துவந்த பெரிய தந்தை அபூதாலிபும் மறைந்துவிட, பெரும் சிக்கலான சூழ்நிலை உருவாகிப் போனது அவர்களுக்கு. இந்நிலையில், அனைவருக்கும் அழைப்பு விடுக்க இறைக் கட்டளை வந்ததும், தம் பிரச்சாரத்திற்கு நபியவர்கள் தேர்ந்தெடுத்தவை பல்வேறு பகுதிகளிலிருந்து பெருவாரியான மக்கள் வந்து கூடும் இந்தச் சந்தைகள்.
கூட்டம் கூட்டமாய்த் தத்தம் கோத்திங்களாகக் குழுமியிருப்பவர்களை அணுகி, ஏகத்துவ அழைப்பை எடுத்து வைப்பார்கள் நபியவர்கள்; குர்ஆன் வசனங்களை ஓதிக் காண்பிப்பார்கள்; அவர்களுக்கு மத்தியில் உரையாடல் நிகழும்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு குரைஷிகள் அமைதியாக இருந்துவிடுவார்களா என்ன? தங்களது பங்கிற்குத் தங்கள் ஆட்களுடன் அதே சந்தையில் அதே மக்களிடம் எதிர் பிரச்சாரம் புரிய ஆரம்பித்தனர் அவர்கள். "பொய் சொல்கிறார்; ஜோசியம் சொல்கிறார்; மந்திரவாதி; அவர் உரைப்பதெல்லாம் இறைவசனங்கள் அல்ல கவிதை" இப்படிப் பலதரப்பட்ட அவதூறுகள்.
நபியவர்களின் பிரச்சாரத்திற்கு முக்கிய எதிரி ஒருவன் இருந்தான்; அபூலஹப்! இவன் வேறு யாருமல்லன்; நபியவர்களின் சொந்த பெரியப்பா. நபியவர்கள் ஒரு கூட்டத்திடம் தம் பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்டு நகரும்வரை பின்னாலேயே சற்று தூரத்தில் காத்திருப்பான். பின்னர் கூட்டத்தினரிடம்  வந்து, "அந்த மனிதர் உங்களது முக்கிய தெய்வங்களான அல்-லாத், அல்-உஸ்ஸாவை நிராகரிக்கச் சொல்கிறார்; அவருடைய முட்டாள்தனமான செயல்களைப் பின்பற்ற உங்களை அழைக்கிறார்; அவர் பேச்சைக் கேட்காதீர்கள்".
அந்த எதிர்ப் பிரச்சாரத்திற்கு பலன் இருக்கவே செய்தது. மக்கள் குழம்பினார்கள். ஆனால் குழுவாக, கோத்திரமாக இல்லாவிட்டாலும் இடையிடையே தனிப்பட்ட சிலர் செவி சாய்த்தனர்; இணங்கினர். ஆக, சந்தைகளிலும் பெரிதாய் ஏதும் முன்னேற்றம் ஏற்படவில்லை - பின்னர் யத்ரிபிலிருந்து வந்த குழுவினரை நபியவர்கள் சந்தித்து அகபா உடன்படிக்கை ஏற்படும்வரை. 
இந்த உக்காள் சந்தையில் தம் கவிதைகளைப் பாடி முன்னணி வகிப்பவர் ஒருவர் இருந்தார். இலக்கியத்திலும் கவியிலும் பிரமாதமான ஆற்றல் உள்ளவர். தவ்ஸ் கோத்திரம் என்று ஆரம்பித்தோமே, அம்மக்கள் மக்கா நகருக்குத் தெற்கே திஹாமா பகுதியில் வாழ்ந்து வந்தனர். அந்தக் கோத்திரத்தின் முக்கியப்புள்ளிதான் அவர். ஏழைகளுக்கு உதவுவது; அன்னதானம்; தம் மக்களின் நல்லது கெட்டதுக்கு முன்நிற்பது என்று அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர், செல்வாக்கு. சந்தை நேரம், புனித மாதங்கள் என்று மட்டுமல்லாமல் அவ்வப்போது மக்காவுக்கு வந்துபோவதும் அவரது வழக்கம். ஏதாவது வியாபாரம், அலுவல் என்று இருக்கும்போது கிளம்பி வந்துவிடுவார். அப்படியே கஅபாவில் உள்ள சிலைகளுக்கு வணக்கம் வழிபாடு செய்துவிட்டு வந்தால் அவருக்கு ஒரு மனதிருப்தி, மகிழ்ச்சி.
ஒருநாள், "இந்தா புள்ளே, நான் மக்காவரை போய்ட்டு வந்துடறேன்" என்று மனைவியிடம் சொல்லிவிட்டுப் பயணத்திற்கான மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார் அந்த மனிதர். அவர் கிளம்பிய அந்த நேரம் நபியவர்களின்மேல் குரைஷிகளின் பகைமை உச்சத்தில் இருந்த நேரம். நபியவர்களுக்கு எதிராகத் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் அவர்கள் மும்முரமாய் நிறைவேற்றிக் கொண்டிருந்த காலம். வெளியூரிலிருந்து மக்காவுக்கு வரும் யார் காதிலும் முஹம்மது நபியின் பேச்சோ பிரச்சாரமோ விழுந்துவிடக் கூடாது என்று படுகவனமாய் இருந்தார்கள் அந்தக் குரைஷிகள். "நாங்களும் கேட்க மாட்டோம்; மற்றவர்களையும் கேட்கவிட மாட்டோம்". 
இந்தக் காலத்தில் அரசாங்கங்கள் ஊடகங்களுக்கோ, சில கட்சிகளுக்கோ தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் என்று நடந்து கொள்கிறதே அப்படியான ஒரு காரியம். இப்படியான உஷ்ணமான சூழ்நிலையில் இருந்த மக்கா நகருக்குள் அந்த தவ்ஸ் கோத்திரத்து மனிதர் வந்து நுழைய, அவரை அப்படியே அள்ளிக் கொண்டு போனார்கள் குரைஷிகள்.
அவர் யார், அவரது கோத்திரத்தில் அவருக்குள்ள செல்வாக்கு என்னவென்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். மேலும் அவர் சிறந்த கவிஞர் வேறு. ‘இந்த மனிதர் முஹம்மதின் பேச்சைக் கேட்டு மாறிவிட்டால் என்ன ஆவது? முஹம்மதுக்குக் கோத்திர பலம் சேர்ந்துவிடும். போதாதற்கு இந்த மனிதரும் தம் கவித் திறமையை முஹம்மதுடைய புது மார்க்கத்துக்குச் சாதகமாக பயன்படுத்திவிட்டால்?’ என்று அவர்களுக்கு ஏகப் பதற்றம்.
குரைஷிகளின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் இவர் மக்காவினுள் நுழைவதைப் பார்த்ததுமே பெரும் கரிசனத்துடன் ஓடோடி வந்தார்கள். "வாங்க வாங்க. நல்லா இருக்கீங்களா? ஊர்ல புள்ள குட்டிகளெல்லாம் நலமா?" என்று அன்பு ஒழுகப் பேசிப்பேசி ஒரு பெரிய வீடாகப் பார்த்து அங்கு அழைத்துச் சென்று அவரைத் தங்க வைத்தார்கள். ஏதோ, அந்த காலத்தில் அவர்களால் ஆன நட்சத்திர அந்தஸ்து விடுதி.
"எங்கள் ஊருக்கு வருகை தந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. இங்கு ஒருவர் தம்மை நபி என்று அறிவித்துக்கொண்டு எங்களின் அதிகாரத்தை அழித்து, எங்கள் சமூகத்தை உடைத்து ஒற்றுமையைச் சிதைத்து விட்டார். அதைப்போலவே உங்கள் மக்கள்மீது நீங்கள் வைத்திருக்கும் அதிகாரத்திற்கு அவர் வேட்டு வைத்துவிடுவாரோ என்று அஞ்சுகிறோம். தயவுசெய்து அவரிடம் பேசவே பேசாதீர்கள். என்ன ஆனாலும் சரி, அவர் சொல்வது எதையும் காதால் கேட்டுவிடாதீர்கள். பயங்கரமான வார்த்தை ஜாலம் அவருக்கு. மந்திரவாதிபோல் கட்டிப்போட்டு விடுகிறார். இவர் பேச்சைக் கேட்டு, தகப்பனுக்கும் மகனுக்கும் சண்டை; உடன் பிறந்த சகோதரர்களுக்கு இடையில் பகை; கணவன் மனைவிக்கு இடையில் பிரிவினை ..."
மேலும் மேலும் கதைகளாய் ஆள் மாற்றி ஆள் அவரிடம் சொல்லிக் கொண்டேபோக, அந்த மனிதருக்கு மிகவும் பயம் ஏற்பட்டுவிட்டது. இறுதியில் அவரது மனதில் தீர்மானமான முடிவு.
ஒப்புக்காக என்றில்லாமல் கடுமையான தீர்மானம். ‘நபி என்று சொல்லிக் கொள்ளும் அவரை நான் நெருங்கவே போவதில்லை; பேசப்போவதில்லை; அவர் பேச்சைக் கேட்கப்போவதில்லை’
மறுநாள் காலை கஅபா ஆலயத்திற்கு வழிபாடு செய்யக் கிளம்ப வேண்டும். அதற்குமுன் கொத்தாகக் கொஞ்சம் பஞ்சு எடுத்து நன்றாகத் தம் இரு காதுகளையும் அடைத்துக் கொண்டார்.
‘தப்பித்தவறி முஹம்மது பேசுவது காதில் விழுந்துவிட்டால்?’
அதையெல்லாம் பார்த்த குரைஷிகளுக்கு நிம்மதிப் பெருமூச்சு. ‘அப்பாடா! இனிப் பிரச்சினை இல்லை. இவரிடம் முஹம்மதின் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை’.
பஞ்சும் காதுமாய் கஅபா வளாகத்திற்குள் அந்த மனிதர் நுழைந்ததுமே முதலில் அவர் கண்ணில்பட்ட காட்சி அங்கு கஅபா அருகே முஹம்மது நபி நின்று தொழுது கொண்டிருந்ததுதான். ‘இவர்தான் குரைஷிகள் குறிப்பிட்ட மனிதர் போலும்’.
அந்தத் தொழுகையும் அதன் அசைவுகளும் வழிபாடும் மிகவும் வித்தியாசமாய், அவர் இதுவரை அறியாத ஒன்றாய் இருந்தது அவருக்கு. என்ன செய்கிறார் இந்த மனிதர்? என்று நபியவர்களைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். கவனிக்க கவனிக்க நபியவர்களின் தொழுகை காந்தமாய் கவர்ந்து இழுக்க ஆரம்பித்தது. தம்மையறியாமலேயே முன்நோக்கி நகர ஆரம்பித்தார் அந்த மனிதர். யாரைக் கண்டால் ஓடிவிட வேண்டும் என்று நினைத்தாரோ அந்த இறைத் தூதரை நோக்கி நகர ஆரம்பித்தார்.
அருகே நெருங்க நெருங்க வித்தியாசமான ஒலியாய் வார்த்தைகள் கேட்க ஆரம்பித்தன. என்னதான் காதை பஞ்சு கொண்டு அடைத்துக் கொண்டாலும் காது முழுதும் செவிடாகிவிடுமா என்ன? ஓசை நிசப்தம் ஆகிவிடுமா? அவரது மனதிற்குள் கேள்விகள் எழுந்தன. ‘என்ன இது சிறுபிள்ளைத்தனமான பயம்? எப்பேர்ப்பட்ட கவிஞன் நீ? சிறந்த கவிதைக்கும் வார்த்தை ஜால வித்தைகளுக்கும் உன்னால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதா என்ன? இவர் உச்சரித்துக் கொண்டிருப்பதைக் கேட்க உனக்கு என்ன தடை? அவர் ஓதிக் கொண்டிருப்பதைக் கேள். நல்லது என்றால் எடுத்துக் கொள்; இல்லையா, அதெல்லாம் வெற்று வார்த்தைகள் என்று தோன்றுகிறதா விட்டுவிடு. தீர்ந்தது விஷயம்’.
நபியவர்களைக் கவனித்துக் கொண்டே காத்திருந்தார். தம் தொழுகை முடிந்தவுடன் வீட்டிற்குக் கிளம்பியவர்களைப் பின்தொடர்ந்தார் அவர். எதெல்லாம் நடக்கக்கூடாது என்று குரைஷிகள் விரும்பினார்களோ, அவையெல்லாம் முஹம்மது நபி ஒரு வார்த்தைகூட அந்த மனிதரிடம் பேசாத நிலையில் தாமாகவே நிகழ்ந்து கொண்டிருந்தன. நபியவர்களின் பின்னாலேயே அந்த மனிதரும் அவர்களது வீட்டிற்குள் நுழைந்தார்.
சுற்றி வளைக்கவில்லை; அது அந்த மக்களது இயல்பும் இல்லை. நேரடியாக விஷயத்திற்கு வந்தார். "ஓ முஹம்மது! உம்மைப் பற்றி உம் மக்கள் என்னிடம் சில விஷயங்கள் கூறினார்கள். அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். உங்களைப் பற்றி அவர்கள் கூறக் கூற அது எந்தளவு எனக்குள் பயத்தைத் தோற்றுவித்தது என்றால், இதோ பாருங்கள் பஞ்சு, நான் நன்றாக என் காதை அடைத்துக் கொண்டேன். இருந்தாலும் இறைவனின் நாட்டம், நீங்கள் ஓதியவை என் காதில் விழுந்தன. கவனத்தைக் கவரும் சுவாரஸ்யம் அவற்றில் உள்ளன. சொல்லுங்கள், என்னதான் உமது செய்தி?"
முஹம்மது பேசினால் கேட்கக் கூடாது என்று குரைஷிகள் எச்சரித்து இருக்க, இந்த மனிதரும் அப்படியே நினைத்திருக்க, இப்பொழுது தாமே வலியச் சென்று, அதுவும் அந்த நபியவர்கள் வீடு தேடிச்சென்று, ‘சொல்லுங்கள் கேட்கிறேன்’ என்று காதில் அடைத்திருந்த பஞ்சை எடுத்து கையில் சுருட்டி வைத்துக்கொண்டு, அமர்ந்திருந்தார். என்னதான் இவர் விஷயத்தில் பிரச்சாரம் நடந்தது? தொழுகை! அல்லாஹ்வை அவன் சொன்னபடி குனிந்து நிமிர்ந்து தொழுத தொழுகை. இறைவழிபாடு என்பதைத் தாண்டிய உன்னதம் அது!
சூரா இஃக்லாஸ், சூரா ஃபலக் ஆகிய, குர்ஆனின் இறுதி அத்தியாயத்திற்கு முந்தைய இரண்டு அத்தியாயங்களை மட்டும் ஓதினார்கள் நபியவர்கள். அப்படியே ஸ்தம்பித்துவிட்டார் அந்த அரபு மகாக் கவி. சத்தியமாக இவை கவிதை அல்ல. இத்தகு சிறப்பான சொல்லாட்சி மனிதனால் வடிக்க இயலாத ஒன்று.
"இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன்! இத்தகைய அற்புதமான வாசகங்களை இதற்குமுன் நான் கேட்டதே இல்லையே" என்று திகைத்துப் பேசினார். அடுத்து ஏகத்துவத்தை விவரித்தார்கள் நபியவர்கள். ‘இவ்வளவுதானா? இவ்வளவு எளிமையான உயர்ந்த உன்னதமா இஸ்லாம்? இதற்குமேல் இதை நிராகரிக்க நான் என்ன புத்தியில்லாதவனா?’ 
பஞ்சு, காற்றில் பஞ்சாய்ப் பறந்தது. தம் கையை நீட்டி நபியவர்களின் கைமீது வைத்து கலிமா உரைத்தார்; சத்தியமார்க்கத்தில் நுழைந்தார் அவர் -
துஃபைல் பின் அம்ரு, ரலியல்லாஹு அன்ஹு!
மக்காவிற்கு வந்த வேலையும் நோக்கமும் மாறிப்போய் அடுத்து சில நாட்கள் மக்காவிலேயே தங்கிவிட்டார் துஃபைல். இஸ்லாமியக் கல்வியும் போதனைகளும் நபியவர்களிடமிருந்து கேட்டுக்கேட்டுப் பெற்றுக்கொண்டு குர்ஆனின் பகுதிகளை மனனம் செய்து கொண்டார். பிறகு ஒருநாள்,
"அல்லாஹ்வின் தூதரே! என் குலத்தவர் என்னைப் பெரிதும் மதிக்கக்கூடியவர்கள். நான் இப்பொழுது அவர்களிடம் சென்று அவர்களையெல்லாம் இஸ்லாத்திற்கு அழைக்கப் போகிறேன். அனுமதி தாருங்கள்".
விடைபெற்றுக் கொண்டு திஹாமாவுக்குத் திரும்பினார் துஃபைல் பின் அம்ரு.
oOo
துஃபைலின் தந்தை வயது முதிர்ந்தவர். பயணம் கிளம்பிச் சென்ற மகன் நெடுநாள் கழித்துத் திரும்பிய செய்தி அறிந்ததும் விசாரிக்க வந்தார். ‘பயணமெல்லாம் எப்படியிருந்தது, வழிபாடெல்லாம் நல்லவிதமாய் முடிந்ததா?’
அவரிடம் மிக நேரிடையாக, "தந்தையே! உங்களுக்கு ஒரு செய்தி சொல்ல வேண்டும். நான் இனி உங்கள் மதத்தில் இல்லை; நீங்கள் என்னவர் இல்லை"
அவருக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன் மகனே?"
"முஹம்மது எனும் இறைத்தூதரை மக்காவில் நான் சந்தித்தேன். அவர் எடுத்துச் சொன்ன இஸ்லாம் சத்தியமார்க்கம். அதை நான் ஏற்றுக்கொண்டேன்".
தம் மகனின் மீது, அவரது அறிவாற்றல் மீது மிகுந்த நம்பிக்கை அந்தத் தந்தைக்கு. உடனே, "மகனே, உன் மார்க்கமே என் மார்க்கம்" என்று சொல்லிவிட்டார்.
"நல்லது! நீங்கள் சென்று குளித்துவி்ட்டு, உடை மாற்றிக் கொண்டு வாருங்கள். என்ன கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன் என்று தெரிவிக்கிறேன்". 
அப்படியே செய்தார்; இஸ்லாத்தினுள் நுழைந்தார் அந்த முதியவர்.
பிறகு துஃபைலின் மனைவி வந்தார். "இங்கு வா! நான் உனக்கு ஒரு செய்தி சொல்கிறேன். இனி நான் உன்னவன் இல்லை; நீ என்னவள் இல்லை".
"கடவுளே! என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் அப்படி?" என்றார் அவர்.
"இஸ்லாம்! நான் முஹம்மது நபியைச் சந்தித்தேன். அவர் கற்றுத்தந்த மார்கத்தை ஏற்றுக் கொண்டேன். இனி நான் ஒரு முஸ்லிம்".
இவரும் தம் மாமனாரைப் போலவே, "உமது மதமே எனது மதம்; எனக்கு முழுச் சம்மதம்" என்று சொல்லிவிட்டார்.
"வெகு நல்லது! சென்று குளித்துவிட்டுவா. ஆனால் துல்ஷரா அடிவார நீரிலிருந்து குளிக்காதே. மலையடிவாரத்தின் தூய நீரைக் கொண்டு குளி". துல்ஷரா தவ்ஸ் கோத்திரம் வழிபட்டு வந்த சிலை. அந்த நீரை உபயோகிக்கக் கூடாது என்றார் துஃபைல்.
"ஏன்? துல்ஷரா ஏதும் தீங்கிழைக்கும் என்று பயப்படுகிறீர்களா?"
"தீங்கா? துல்ஷராவா? நன்றாகத் தெரிந்துகொள். அது ஒன்றும் செய்ய இயலாதது என்று நான் உறுதியளிக்கிறேன். நான் சொல்வதைக் கேள். மக்களின் கண்பார்வை படாத தூரத்திற்குச் சென்று தூய நீரில் குளித்துவிட்டுவா".
அதன்படி அவர் குளித்துவிட்டு வந்ததும், இஸ்லாத்தைப் பற்றிச் சொன்னார்; குர்ஆன் வசனங்களை ஓதிக் காண்பித்தார். முழு மனதுடன் இஸ்லாத்தினுள் நுழைந்தார் துஃபைலின் மனைவி.
அடுத்து, தம் தவ்ஸ் குலத்து மக்களையெல்லாம் இஸ்லாத்திற்கு அழைக்க ஆரம்பித்தார் துஃபைல் பின் அம்ரு. ஆனால் யாரும் அவர் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. செல்வாக்கு, பேர், புகழ் என்று அவர் குலத்தில் அவர் ஒரு முக்கியஸ்தராய் இருந்தும் இவ்விஷயத்தில் மட்டும் அம்மக்கள், "ஹும்! நல்லாத்தானே இருந்தார். மக்காவுக்குச் சென்று வந்ததிலிருந்து இவருக்கு ஏதோ ஆகிவிட்டது" என்று உதாசீனப்படுத்திவிட்டு தத்தம் வேலைவெட்டி, வழிபாடு என்று இருந்துவிட்டனர்.
சொல்லிப் பார்த்தார்; விவரித்துப் பார்த்தார்; இறை வசனம் சொல்லி எச்சரித்துப் பார்த்தார்; யாரும் கேட்பதாய் இல்லை. ஆனால் இளைஞர் அபூஹுரைரா சட்டென இச்செய்தியைப் பற்றிக் கொண்டார்.
தம் மக்களிடம் மாற்றம் ஏற்படாத நிலையில் ஒருநாள் அபூஹுரைராவுடன் நபியவர்களைச் சந்திக்க மக்காவுக்குக் கிளம்பிவிட்டார் துஃபைல். சந்தித்து விபரம் கூறத் தொடங்கினார். தம் மக்களின்மேல் பெரும் கோபம் இருந்தது அவருக்கு.
"என்ன ஆயிற்று?" என்று விசாரித்தார்கள் நபியவர்கள்.
"அவர்களது இதயங்களில் திரை விழுந்து உண்மையைக் காணவிடாமல் தடுக்கிறது; நம்பிக்கைக் கொள்ளவில்லை அவர்கள். பாவமும் குற்றமும் தவ்ஸ் மக்களை மிகைத்துவிட்டது" குமுறினார் துஃபைல்.
"அல்லாஹ்வின் தூதரே! தங்களது தூதுச் செய்தியை மறுத்துவிட்ட என் குல மக்களைத் தாங்கள் சபிக்கவேண்டும்".
அமைதியாகக் கை. கால், முகம் கழுவி ஒளு செய்து கொண்டார்கள் நபியவர்கள். பார்த்துக் கொண்டிருந்தார் அபூஹுரைரா. "நபியவர்கள் நம் மக்களுக்கு எதிராய்ப் பிரார்த்தனை புரியப்போகிறார்கள்; தொலைந்தார்கள் அவர்கள்" என்று பயம் ஏற்பட்டுப் போனது அவருக்கு.
நபியவர்கள் பிரார்த்தித்தார்கள், "யா அல்லாஹ்! தவ்ஸ் மக்களை நேர்வழியில் செலுத்துவாயாக! தவ்ஸ் மக்களை நேர்வழியில் செலுத்துவாயாக! தவ்ஸ் மக்களை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை எம்மிடம் கொண்டு வருவாயாக" (புகாரி பாகம் 5, அத்தியாயம் 64, எண் 4392).
அவ்வளவுதான். அவ்வளவேதான். சாபமோ, கோபமோ எதுவுமே இல்லை. 
"உம் மக்களிடம் திரும்பிச் செல்லுங்கள். அவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். மென்மையாய் அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இஸ்லாத்திற்கு அவர்களை அழைத்துக் கொண்டே இருங்கள்". என்று துஃபைலிடம் நபியவர்கள் அறிவுறுத்த, அபூஹுரைராவுடன் தமது ஊருக்குத் திரும்பினார் துஃபைல் பின் அம்ரு.
oOo
அதற்குப்பின் வேகமாய் நகர ஆரம்பித்தது வரலாறு. நபியவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து, பத்ரு, உஹது, அகழி யுத்தங்கள் என்று மதீனாவில் ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இங்கு தவ்ஸ் மக்களிடம் பொறுமையாய்ப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருந்தார் துஃபைல். மெதுமெதுவே மாற்றம் நிகழ ஆரம்பித்தது. கோத்திரத்தினர் அனைவரும் என்றில்லாவிட்டாலும் எண்பது குடும்பங்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். இஸ்லாம் அவர்களது மனதில் நன்றாக ஊன்றியிருந்தது. இறுதியில் ஒருநாள் அவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தடைந்தார் துஃபைல். அவர்களையும் துஃபைலையும் கண்டு மிகவும் மன மகிழ்வு ஏற்பட்டது நபியவர்களுக்கு. ஃகைபர் யுத்தம் முடிவுற்றபோது, அதில் கைப்பற்றப்பட்ட செல்வங்களிலிருந்து அந்த தவ்ஸ் குடும்பங்களுக்கும் பங்கு அளித்தார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! இனிவரும் போர்களில் தங்களது படைப்பிரிவின் வலப்புற அணியாக எங்களை நியமித்துக் கொள்ளுங்கள். நாங்களும் இஸ்லாத்திற்காக உடல், உயிர் என்று சேவை புரிவோம். எங்களது முயற்சிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்".
செல்வம், செல்வாக்கு, வசதி என்று இருந்தவர், அனைத்தையும் உதறிவிட்டு இவ்வுலக சௌகரியங்களை எல்லாம் எளிதாய் மறந்துவிட்டு, உடலும் உயிரும் அர்ப்பணம் என்று வந்து நின்றுவிட்டார். மக்கா படையெடுப்பின்போது முஸ்லிம்களின் அணியில் துஃபைலும் ஒருவர். மக்கா நகரை வெற்றி கொண்டு, பின்னர் கஅபாவில் உள்ள சிலைகளை எல்லாம் நபியவர்கள் நீக்கியவுடன், துஃபைலுக்கு அந்த எண்ணம் தோன்றியது. ‘துல்கஃப்பைனை அழிக்க வேண்டும்’
தவ்ஸ் மக்களின் முக்கிய சிலை, துல் கஃபைன். அந்த சிலைக்கு "இரண்டு கை சாமி" என்ற பெயர் இருந்ததாகவும் மற்றொரு குறிப்பு தெரிவிக்கிறது. அதற்கு நிகழும் வழிபாட்டை நிறுத்த வேண்டும், அந்தச் சிலையை அகற்ற வேண்டும் என்று  நபியவர்களிடம் தெரிவிக்க, அனுமதியளித்தார்கள் அவர்கள். கிளம்பினார் துஃபைல் பின் அம்ரு.
"துஃபைல் வருகிறார். நம் சாமி சிலை துல்கஃப்பைனை கொளுத்தப் போகிறாராம்"
தீயிட வருகிறார் துஃபைல் என்ற செய்தி திஹாமாவில் தீயாய்ப் பரவி, தவ்ஸ் குலத்து ஆண், பெண், பிள்ளைகள் என்று கூட்டம் திரண்டுவிட்டது. துஃபைல் துல்கஃப்பைனுக்கு தீங்கு செய்தால், அவரே நாசமாகப்போகிறார் பார் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். 
"துல்கஃப்பைன். நான் உன்னை வணங்குபவன் அல்ல. இதோ உனக்குத் தீயிடுகிறேன்" என்று தீயிட்டார் துஃபைல். பற்றியெரிந்தது சிலை. அத்துடன் அன்று முடிவிற்கு வந்தது உருவ வழிபாடு. துல்கஃப்பைன் சாமியால் துஃபைலுக்கு எந்தத் தீங்கையும் செய்யமுடியவில்லை. தவ்ஸ் கோத்திரத்தினர் அனைவரும் இஸ்லாத்தினுள் நுழைந்தனர்.
மக்காவின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த இரு வாரங்களில் ஹுனைன் பள்ளத்தாக்கில் பெரியதொரு படை முஸ்லிம்களுக்கு எதிரான போருக்குத் தயாரானது. ஹவாஸின் எனும் பதுஉ கோத்திரத்தினர், தகீஃப் எனும் அவர்களின் உபகோத்திரத்தினர் இணைந்துகொண்டு, ‘அழித்து ஒழிப்போம் இந்த முஸ்லிம்களை’ என்று போருக்குத் தயாராகிவிட்டிருந்தனர். மக்காவிலிருந்து பெரியதொரு படையெழுப்பி, ஹுனைன் சென்று அவர்களை எதிர்கொண்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். கடுமையான போர் நிகழ்வுற்று, இறுதியில் முஸ்லிம் படை வெற்றி கண்டது. இச்செய்திகளை ஹகீம் பின் ஹிஸாம், தாபித் பின் கைஸ், அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் ஆகியோரின் வரலாறுகளின் இடையே படித்தது நினைவிருக்கலாம். 
அப்போரில் தோற்று ஓடிய ஹவாஸின் படையினரின் பெரும்பிரிவு ஒன்று தம் தலைவன் மாலிக் இப்னு அஃவ்புடன் தாயிஃப் நகருக்கு ஓடியது. மற்றொரு பிரிவினர் அவ்தாஸ் எனும் பள்ளத்தாக்கிற்குச் சென்றுவிட்டனர். இந்த அவ்தாஸ் பள்ளத்தாக்கில் இருந்த ஹவாஸின் படையை நோக்கி உபைத் அபூஆமிர் அல்அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு தலைமையில் முஸ்லிம் வீரர்களை அனுப்பி வைத்தார்கள் நபியவர்கள். உபைத் அபூஆமிர், அபூமூஸா அல்அஷ்அரீயின் உறவினர். அவ்தாஸ் போரில் எதிரிப் படையினரின் சகோதரர்கள் பத்து பேரில் ஒன்பது பேரை ‘ஒத்தைக்கு ஒத்தை’ சண்டையில் கொன்றார் உபைத் அபூஆமிர். பத்தாவது சகோதரருக்கு அவகாசம் அளிக்க, அவர் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு நடந்த போரில் உபைத் அபூஆமிர் வீர மரணமடைய, பின்னர் அபூமூஸா அல் அஷ்அரீயின் தலைமையில் முஸ்லிம்படை எதிரிகளை வென்றது.
தாயிஃப் நகருக்கு மாலிக் இப்னு அஃவ்புடன் சென்ற படைக்கு அங்கிருந்த தகீஃப் கோத்திரத்தினர் அடைக்கலம் தந்து, தங்களது கோட்டைக்குள் இழுத்துக் கொண்டனர். வலுவான பாதுகாப்புடன் கட்டப்பட்டிருந்த உயர்ந்த கோட்டைகள் அவை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தலைமையில் தாயிஃப் கோட்டைக்கு அணிவகுத்தது முஸ்லிம்படை. இதை எதிர்பார்த்தும், செய்தி அறிந்தும் இருந்த எதிரிகள் தற்காப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, அனைவரும் கோட்டைக்குள் புகுந்துகொண்டு, கதவுகளை இழுத்துப் பூட்டிக்கொண்டனர். அரண்களின் மேல் தயார் நிலையில் காவல் வீரர்கள். 
நெருங்கி வந்த முஸ்லிம் படைகளின்மேல் எதிரிகளின் அம்புமழை சரசரவென பொழிய ஆரம்பித்தது. அதில் முஸ்லிம்களுக்குக் குறிப்பிடத்தக்க உயிர் சேதம். அதைச் சமாளிக்க அம்புகள் பாய இயலாத தூரத்திற்குப் பின்நோக்கி நகர்ந்து நின்று கொண்டது முஸ்லிம்களின் படை.
‘முற்றுகை இடுங்கள்’ என்று நபியவர்கள் கட்டளையிட தாயிஃப் நகர் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டது.
கோட்டைக்கு உள்ளே பாதுகாவலாய் இருக்கும் படையினரைத் தாக்க, தகுந்த போர்த் தளவாடமும் யோசனையும் தேவைப்பட்டன. பீரங்கி போன்ற நவீன வசதிகள் இல்லாத காலம். கட்டை வண்டிகளில் நிறுவப்பட்ட கவண்களில் பெரும் கற்கள் முதலான ஆயுதங்களைக் கோட்டைச் சுவரிலும் அதன்மேல் நிற்கும் வீரர்கள் மீதும் கோட்டையின் உள்ளேயும் வீசித் தாக்கலாம் என்று முடிவானது. அத்தகைய ஆயுத வசதியும் திறனும் அப்பொழுது தவ்ஸ் கோத்திரத்திடம் மட்டுமே இருந்தன. 
உடனே தம் குலத்தாரிடம் விரைந்தார் துஃபைல் பின் அம்ரு. நான்கு நாட்களுக்குள் தவ்ஸ் குல வீரர்கள் தங்களது ஆயுதங்களுடன் தாயிஃபிற்கு விரைந்து வந்தனர். தாக்குதல் துவங்கியது. அந்தக் கட்டை வண்டி ‘டேங்கு’களைக் கவசமாக்கிக் கொண்டு, முஸ்லிம் வீரர்களும் கோட்டையை நெருங்க முயன்றனர். ஆனால் உள்ளே பதுங்கியிருந்த எதிரிகளிடம் மற்றொரு தற்காப்பு உபாயம் இருந்தது. இரும்புத் துண்டுகளை தீயில் சுட்டுப் பொசுக்கி அவற்றை கொதிக்கும் நெருப்புத் துண்டுகளாய் கோட்டைக்கு மேலிருந்து வீச ஆரம்பித்தனர். வந்து விழுந்த அந்த இரும்பு ஆயுதங்கள் கட்டை வண்டிகளைப் பொசுக்கி அவை எரிய ஆரம்பித்தன. கூடவே இடைவிடாத அம்பு மழை. எனவே அதில் பெரும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஏறக்குறைய இருபது நாள் நீடித்தது அந்த முற்றுகை.
பின்னர் உள்ளிருந்து தப்பித்து ஓடிவந்தனர் இருபது அடிமைகள். வந்தவர்கள் நபியவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள, அவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த செய்தி முக்கியமானது. ‘கோட்டைக்கு உள்ளே இருக்கும் எதிரிகள் ஓர் ஆண்டு காலம் முற்றுகையைச் சமாளித்துவிடக்கூடிய வசதிகளுடன் உள்ளனர். அதன்பிறகு அவர்களது கையிருப்புத் தீர்ந்தாலும் இறுதி ஆள் கொல்லப்படும்வரை போராடி மடியக் காத்திருக்கிறார்கள்’ என்ற செய்தி. தம் தோழர்களுடன் ஆலோசனை நிகழ்த்தினார்கள் நபியவர்கள்.
நவ்ஃபல் பின் முஆவியா அத்தைலீ கருத்து தெரிவித்தார்: "இவர்கள் இப்பொழுது பொந்தினுள் நுழைந்து கொண்ட நரி. தாங்கள் நரியின் பொறுமை அழித்தால் அது வெளியே வரலாம். அதை அப்படியே விட்டுவிட்டால் தங்களுக்கு அது எந்த உபத்திரவமும் தராது". மிகச் சரியான உவமை அது என்பதைப் புரிந்து கொண்டார்கள் நபியவர்கள். தவிரவும் அடுத்து புனித மாதங்களும் நெருங்கிக் கொண்டிருந்தன. தாயிஃப் தாமே நம் வசம் வரும் என்பதை உணர்ந்துகொண்டு முற்றுகையை நீக்கிக் கொண்டு தம் படையுடன் மக்கா திரும்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
oOo
கைபர் யுத்தத்தின்போது மதீனாவுக்கு வந்த துஃபைல், குர்ஆன் கற்பது, நபியவர்களுடன் அணுகிக்கொண்டு இஸ்லாம் பயில்வது, கைபருக்குப் பின்னர் நிகழ்வுற்ற போர்களில் எல்லாம் எந்த வாய்ப்பையும் நழுவவிடாமல் நபியவர்களுடன் கலந்து கொள்வது என்று முழு அளவிலான மும்முரமான இஸ்லாமிய வாழ்க்கைக்கு மாறிப்போனார். அவரது கவியும் திறனும் குர்ஆனும் வீரமுமாய் ஆகிப்போனது.
நபியவர்களின் மறைவிற்குப் பிறகு அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கிலாஃபத் காலம். முஸைலமாவின் அட்டூழிய நேரம். என்ன செய்திருப்பார் துஃபைல்? அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்டு இறுதியில் யமாமாவில் நின்று கொண்டிருந்தார். அன்றைய போருக்குமுன் அவர் கனவொன்று கண்டார். வித்தியாசமான கனவு. 
"நான் என் மகன் அம்ருவுடன் போருக்குக் கிளம்பிச் சென்றேன். அப்பொழுது கனவொன்று கண்டேன். என் தலை மழிக்கப்பட்டது. என் வாயிலிருந்து பறவையொன்று வெளிப்பட்டது. ஒரு பெண் தம் பிறப்புறுப்பினுள் என்னை செலுத்திக் கொண்டாள்".
தாம் கண்ட அந்தக் கனவைச் சொல்லி அதற்கு அவரே விளக்கமும் அளித்தார்.
"இதை நான் எப்படி விளங்கிக் கொள்கிறேன் என்றால், என் தலை மழிக்கப்படுவது என்பது என் தலை வெட்டப்படுவதாகும்; என் வாயிலிருந்து பறவை வெளிப்படுவது என்பது என் உயிர்; அந்தப் பெண் நிலத்தைக் குறிக்கிறது, நான் அதனுள் விரைவில் அடக்கம் செய்யப்படுவேன்"
அந்த விளக்கம் பொய்க்கவில்லை. முஸைலமாவுக்கு எதிரான யமாமா யுத்தத்தில் கொல்லப்பட்டு ஷஹீதானார் துஃபைல் பின் அம்ரு.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.