Monday, June 6, 2011


சி.பி.ஐ.,யிடம் சிவசங்கரன் பரபரப்பு வாக்குமூலம் : தயாநிதிக்கு முற்றுகிறது நெருக்கடி?



பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011,23:36 IST
புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., வசம் , "ஏர்செல்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். "ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதற்கு, தயாநிதி கொடுத்த நெருக்கடியே காரணம்' என்று, வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகீர் வாக்குமூலத்தால், தயாநிதிக்கு நெருக்கடி முற்றுகிறது

காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், கடந்த 2004-07ம் ஆண்டு, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அந்த காலகட்டத்தில், "டிஷ்நெட் வயர்லெசு'க்கு (ஏர்செல்)14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. கடந்த, 2006ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரன், தான் நடத்தி வந்த ஏர்செல் கம்பெனிக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். லைசென்ஸ் கோரி தாக்கல் செய்யப்பட்ட மொத்தம், 14 மனுக்கள், 2006ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்துள்ளன. அவர் பலமுறை முயன்றும், லைசென்ஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய நிறுவனங்கள், 74 சதவீதம் வரை முதலீடு செய்யலாம் என்று, மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, சிவசங்கரனின் ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த, "மேக்சிஸ்' கம்பெனிக்கு கைமாறியது.

ஏர்செல் நிறுவனமாக இருந்த போது கோரிய லைசென்ஸ், அது மலேசிய நிறுவனத்திற்கு கைமாறிய உடனேயே, 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், "சன் டைரக்ட்' கம்பெனியில், முதலீடு செய்தது.இந்த, "சன் டைரக்ட்' நிறுவனம், வீடுகளுக்கு நேரடி, "டிவி' ஒளிபரப்பு செய்யும், "டிடிஎச்' நிறுவனம். தயாநிதியின் சகோதரர் கலாநிதி நடத்தும், "சன் டிவி' குழுமத்தின் ஒரு அங்கம். இதனால் பாதிக்கப்பட்ட சிவசங்கரன், சி.பி.ஐ.,யில் புகார் தெரிவித்தார்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து, சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது. முதலில் வருபவர்களுக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில், அனுபவம் இல்லாத கம்பெனிகளுக்கு எல்லாம் ஒதுக்கீடு அள்ளிவீசப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி, கடந்த 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை நடந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்து, முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இதனால், இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்தது.

இதைத்தொடர்ந்து கடந்த, 2003-04ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ÷ஷாரியிடம், கடந்த பிப்ரவரி 25ம் தேதி சி.பி.ஐ., விசாரணை நடத்தி, அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த ஒதுக்கீடுகள் குறித்து விசாரணை நடத்தியது.இதைத்தொடர்ந்து கடந்த மாத மத்தியில், தொழில் அதிபர் சிவசங்கரன், சி.பி.ஐ., வசம் அளித்த மனுவில்,"எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அதனால், ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின், "மேக்சிஸ்' நிறுவனத்திற்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். இதற்கு தயாநிதி மாறனே காரணம்' என்று புகார் செய்திருந்ததாக செய்திகள் வெளியாகின. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால், சி.பி.ஐ., எந்நேரமும் சிவசங்கரனிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

வாக்குமூலம்: இந்நிலையில், சிவசங்கரன் நேற்று, சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகி, தான் தெரிவித்த புகார் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில், ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் விண்ணப்பித்தது முதல், உரிமம் கிடைக்காததால், மலேசிய நிறுவனத்திற்கு விற்றது வரை, நடந்த அனைத்து உண்மைகளையும் விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மலேசிய நிறுவனத்திற்கு, ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்கு, தயாநிதி கொடுத்த நெருக்கடியே காரணம்' என்று, அவர் உறுதிப்பட தெரிவித்ததாக கூறப்படுகிறது.சி.பி.ஐ., வசம் சிவசங்கரன் எங்கே வாக்குமூலம் அளித்தார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், ஏர்செல் நிறுவனம் மலேசிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டதற்கு பிறகு, சன் "டிவி'க்கும் மேக்சிஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்த நிதி பரிவர்த்தனைகள் குறித்து, சி.பி.ஐ., பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த துவங்கியுள்ளது. இதனால், தயாநிதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தயாநிதி மறுப்பு: இந்நிலையில், தயாநிதி தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில்,"நான் குற்றமற்றவன் என்பதை முறையான அமைப்பிடம் நிரூபிப்பேன்' என்றார்.

பிரதமர் மவுனம் கலைந்தது : ""தயாநிதி விவகாரத்தை, சட்ட அமலாக்க நிறுவனங்கள் கவனித்து வருகின்றன. பாரபட்சம் இல்லாமல் நடுநிலையுடன் அவர்கள் செயல்பட அனுமதிக்கப்படுவர்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தயாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளிக்காமல், மவுனம் காத்து வருகிறார். அவர் வாய் திறக்க வேண்டும் என, பா.ஜ., உட்பட எதிர்க்கட்சிகள் கோரி வந்தன.

இந்நிலையில், நேற்று நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ""தயாநிதி விவகாரத்தை, சட்ட அமலாக்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் கவனித்து வருகின்றனர். அவர்கள் நடுநிலையுடன் செயல்பட அனுமதிக்கப்படுவர். ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். இருந்தாலும், லஞ்சத்தை ஒரே அடியாக ஒழிக்க, கையில் மந்திரக்கோல் எதுவும் கிடையாது.""யோகா குரு பாபா ராம்தேவிற்கு எதிரான போலீஸ் நடவடிக்கை துரதிருஷ்டவசமானது. இருந்தாலும், அதைத் தவிர வேறு வழியில்லை. லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்தப் பிரச்னை, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment