Thursday, June 23, 2011

வைட்டமின் என்றால் என்ன?

வைட்டமின்

 
1 Votes

மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றன.
ஆனால், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையில்கூட மனித உடலின் உணவுத் தேவை பற்றி எதுவும் கண்டறியப்பட்டிருக்கவில்லை. சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதை மட்டுமே மனிதர்கள் அறிந்திருந்தனர். அந்த உணவுப் பொருட்களில் என்னென்ன உணவுச் சத்துகள் இருக்கின்றன என்பது பற்றி எதுவும் தெரியாது.
பின்னர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருட்களை வேதியல் முறையில் பகுத்தாய்வதில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியது. இதனால், இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருட்களை அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுப்பதும், அவற்றின் வேதியல் அமைப்பை கண்டறிவதும், அவற்றை செயற்கையான முறையில் உற்பத்தி செய்வதும் சாத்தியமானது.
அந்த வளர்ச்சியின் விளைவாக, ஆராய்ச்சியாளர்களால் உணவிலுள்ள சத்துப் பொருட்களை அவற்றினுடைய சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்க முடிந்தது. அதனால், இதுபோல சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்ட உணவுச் சத்துகள் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மிகவும் துல்லியமாக பரிசோதித்தறிவதும் சாத்தியமானது.
இதுபோன்ற முறையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தரசம் (மாவுப் பொருள்), புரதம், கொழுப்பு, தாதுப் பொருட்கள் ஆகிய உணவுச் சத்துகள் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் திட்டவட்டமாக கண்டறிந்தனர். இந்த உணவுச் சத்துகள் அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றின் வேதியல் அமைப்புகளும் கண்டறியப்பட்டன. அதேபோல, அவற்றை செயற்கையாக தயாரிக்கும் முறைகளும் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள் துணை உணவு காரணிகள் சிலவற்றைக் கண்டறிந்தனர். உயிர் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒரு அமைனை (Amine  அமைன் என்பது வேதிப் பொருட்களில் ஒரு வகை) கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தப் பொருளுக்கு விட்டமைன் (Vital + Amine = Vitamine) என்று பெயர் சூட்டினர். அதைத் தொடர்ந்து மற்ற விட்டமைன்களைக் கண்டறியும் ஆராய்ச்சி முழு வேகமடைந்தது.
வைட்டமின் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு சத்துப்பொருள். பெரும்பாலான வைட்டமின்கள் வளர்சிதை மாற்றச் செயல்களில் முக்கியப் பங்கு எடுத்துக்கொள்கின்றன. எனவே, வைட்டமின்கள் பற்றாக் குறையாகும்போது சில முக்கியமான வளர்சிதை மாற்றச் செயல்கள் நிகழாமல் போகின்றன. இதனால், உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment