Tuesday, June 7, 2011

இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?


 
இஸ்லாமிய கொள்கையான ‘ஷரியா’-வின்படி (Sharia) நடக்கும் வங்கிகளைத்தான் இஸ்லாமிய வங்கிகள் என்கிறார்கள். கடனுக்கு வட்டி வாங்குவது ‘ஷரியா’-வின் படி தவறாகும் . இஸ்லாமிய மதத்தின்படி இது குற்றம். ஒருவருக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்காமல், அவர் முதலீடு செய்யும் தொழிலில் கிடைக்கும் லாப நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் இஸ்லாமிய வங்கியின் சிறப்பு. பல நூற்றாண்டுகளாகவே இந்த முறை முஸ்லீம் நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் 20-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் இஸ்லாமிய வங்கிகள் நடைமுறைக்கு வந்தன.
வழக்கமாக வர்த்தக வங்கிகளில் கொடுக்கப்படும் கடனுக்கு வட்டி வசூலிக்கப்படும். இஸ்லாமிய வங்கியைப் பொறுத்தவரை, கடன் கொடுப்பவரும் வாங்குபவரும் பங்குதாரர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் அந்தத் தொழிலை சிறப்பாக நடத்தி லாபம் சம்பாதிக்க வேண்டும். நஷ்டம் ஏற்பட்டால் அதைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை முன்னரே ஒப்புக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்பது இஸ்லாமிய வங்கியின் சிறப்பு. மனை, வீடு போன்ற ஏதாவது சொத்தை ஜாமீனாகக் கொடுத்தால் மட்டுமே இஸ்லாமிய வங்கிகளில் தொழிற்கடன் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்.
சரி, வாகனக் கடனை இஸ்லாமிய வங்கிகள் எப்படிக் கொடுக்கின்றன? வாகனத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இஸ்லாமிய வங்கி முதலில் காரை வாங்கிவிடும். அதனை வங்கி வாடிக்கையாளருக்கு லாபம் வைத்து அதிக விலைக்கு விற்கும். வாகனத்தை வாங்கியவர், அதற்கான தொகையை மாதத் தவணையில் கட்டி வர வேண்டும். முழுவதும் பணம் கட்டி முடிக்கும் வரை வாகனத்தின் உரிமை இஸ்லாமிய வங்கியிடம் இருக்கும்.
இஸ்லாமிய வங்கிகள் வீட்டுக் கடனை வழங்கும் விதமும் வித்தியாசமானது. வாடிக்கையாளர் வாங்க விரும்பும் வீடானது, வங்கி மற்றும் வாடிக்கையாளரின் பெயரில் கூட்டுச் சொத்தாக பதிவு செய்யப்படும். இதில், யார் எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்றும் குறிப்பிடப்படும். பிறகு இந்தச் சொத்து வாடிக்கையாளருக்கு வாடகைக்கு விடப்படும். இந்த வாடகைத் தொகை, சொத்தில் வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, வங்கிக்கு உரிய பங்கை (அதிகரிக்கப்பட்ட விலையில்) மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைக் கட்டி வாடிக்கையாளர் அந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம். இது கிட்டத்தட்ட வீட்டுக் கடனுக்காக நாம் கட்டும் இ.எம்.ஐ. போல் இருக்கும். வாடிக்கையாளரால் பணத்தைச் சரியாகக் கட்ட முடியவில்லை என்றால் அந்த வீட்டை விற்று, வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரித்துக் கொள்ளப்படும்.
ஈரான், மலேசியாவில் இஸ்லாமிய வங்கிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஜப்பான், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவது முக்கியமான விஷயம். வர்த்தக வங்கி மற்றும் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கும் தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன், இஸ்லாமிய வங்கிகள் சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாகச் சொன்னார்.
”உலகம் முழுக்க கடந்த ஐந்தாண்டுகளில் வர்த்தக வங்கிகளின் வளர்ச்சி 2%-மாக உள்ளது. இதே காலத்தில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 12-15%-மாக இருக்கிறது. இப்போது உலக அளவில் இஸ்லாமிய வங்கிகள் நிர்வகித்து வரும் சொத்துகளின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகம். சர்வதேச நிதியம் (IMF- International Monetary Fund) மற்றும் உலக வங்கிகளின் நிதி நிர்வாக அமைப்பான பேசல் (Basel) இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை அங்கீகரித்துள்ளன” என்றார்.
தற்போது இந்தியாவில் ஷரியா கொள்கை அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய வங்கி ஒன்றை ஆரம்பிக்க ஐ.டி.பி.ஐ. வங்கி முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகளைக் கொண்டு வர வேண்டும் என்றால் அவற்றுக்கென பிரத்தியேக சட்டம் தேவை என ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு இஸ்லாமிய வங்கிகள் வந்தால் நம் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.

இஸ்லாமிய நாடுகள் இணைந்து 1975-ம் ஆண்டில் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியை உருவாக்கின. அதே ஆண்டில் வர்த்தக ரீதியிலான இஸ்லாமிய வங்கி, துபாய் இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் உருவானது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. 


No comments:

Post a Comment