Friday, May 20, 2011

குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? விடுதலை இராசேந்திரன்


குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா?

மின்னஞ்சல்அச்சிடுகPDF
பயனாளர் தரப்படுத்தல்: / 9
குறைந்தஅதி சிறந்த 

2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்போது, அவர், இந்தியாவிலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன. தமிழின உரிமை பேசும் நமது தோழர்களும்கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.

பிரபல இந்தி நடிகையான ஷெர்லின் சாப்ரா என்பவர், குஜராத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, நரேந்திர மோடியைத் தூக்கி வைத்துப் புகழ்ந்து, தான் அவரை சந்தித்ததே இல்லை என்றும், அவரிடம் உதவியாளராகப் பணியாற்றக் கூட தயாராக இருப்பதாகவும் பேசினார். அவர் பேசிய இடம் குஜராத் தொழிலதிபர்கள் நடத்திய நிகழ்ச்சி.

அடுத்ததாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ள அன்னா அசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி - குஜராத் மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று. தமிழ்நாட்டில், குருமூர்த்திகளும் சோ இராமசாமிகளும் தீவிரப் பரப்புரை செய்து வருகிறார்கள். இந்தியாவின் பிரதமர் பதவி வேட்பாளருக்கு மோடியை முன்னிறுத்துவதே, இந்தப் பரப்புரையின் உள்நோக்கம். இந்த நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, மோடியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வும் நடந்தது. அதுதான் சஞ்சீவ் ராஜேந்திரபத் என்ற குஜராத்தின் முன்னாள் அய்.பி.எஸ். போலீஸ் அதிகாரி தாமாகவே முன்வந்து உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு. குஜராத் கலவரத்தைப் பற்ற வைத்தவரே மோடி தான் என்பது இவரது குற்றச்சாட்டு.

கலவரத்தின்போது உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய மோடி, ‘முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் என்பதே வழக்கு. அந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், இருந்தவர், இந்த அதிகாரி. கொடூரமான குஜராத் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கரை சேர்ந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு, இது ஒரு பேரிடி.  இந்த அதிகாரி, பிரமாண வாக்குமூலமாக வழக்கை தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் - அது கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சபர்மதியில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் கலவர பூமியானது. அப்படி ஒரு கலவரம் இந்தியாவில் நடந்ததே இல்லை. மூன்றே நாட்களில் குஜராத்தின் 19 மாவட்டங்களில் 2500 முஸ்லீம்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் ஹேரன் பாண்டி. இவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்தான். அவராலேயே இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் படுகொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் நியமிக்கப்பட்டு விசாரித்தது. ஆனால், ஆட்சி நிர்வாகம் மோடியிடம் இருந்ததால் உயர் அதிகாரிகள் உண்மையை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நேர்மையாக செயல்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவே பதிவு செய்ய மறுத்தது. இந்த நிலையில்  ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.பி.சவந்த் மற்றும் ஹோஸ்பர்ட் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட ‘குடிமக்கள் பேராயம்’ என்ற சுயேச்சையான விசாரணை மையம் பல உண்மைகளைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தது.

இந்த நீதிபதிகள் முன் தோன்றி மோடிக்கு எதிராக சாட்சியளித்தவர்களில் ஒருவர் வருவாய்த் துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா, பிப். 27 ஆம் தேதி  மோடி தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று  - மோடி உத்தரவிட்டதாகவும் கூறினார். பின்னர் மர்மமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டார். மோடிக்கு ஆதரவாக உண்மைகளை மறைத்த காவல்துறை அதிகாரிகளான பி.சி. பாண்டே, பி.கே. மிஸ்ரா, அசோக் நாராயணன் போன்ற பார்ப்பன அதிகாரிகளுக்கு அவர்கள் பதவி ஓய்வுக்குப் பிறகு, வேறு பதவிகளை பரிசாக வழங்கினார் மோடி. இப்போது மனுதாக்கல் செய்துள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் ராஜேந்திரபத், மோடி நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று அரசு தரப்பில் மறுக்கப்பட்டது.

அப்போது உளவுத் துறையில் துணை ஆணையாளர் என்ற நிலையில் தான் அவர் இருந்தார். எனவே உயர்அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கூட்டத்துக்கு அவர் எப்படி வந்திருப்பார் என்பது, அரசு தரப்பு எழுப்பும் மறுப்பு. அப்போது உளவுத் துறையின் தலைமை ஆணையர் ஜி.சி. ராஜ்கர் விடுப்பில் இருந்தார். எனவே தன் சார்பாக இராஜேந்திர பத்தை, கலந்து கொள்ளுமாறு அவர் பணித்ததால், பத், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். மோடியின் கட்டுப்பாட்டில் இருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இராஜேந்திர பத் அக்கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று தடாலடியாகக் கூறிவிட்ட பிறகு, நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு, இப்போது நேரடியாகவே இராஜேந்திர பத் மோடிக்கு எதிரான வலிமையான சான்றுகளுடன் நீதிமன்றம் வந்து விட்டார். இந்த அதிகாரியின் வாகன ஓட்டுனரும், மோடி கூட்டிய கூட்டத்தில், அவர் பங்கேற்றதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி வரும், மனித உரிமைப் போராளியும், பெண் பத்திரிகையாளருமான தீஸ்த்தா செட்டால் வத், மோடிக்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டு, இப்போது தான் முதன்முதலாக வந்துள்ளது. உண்மைகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.

மோடி நிர்வாகத்தில் பணிபுரிந்த சிறீகுமார், ராகுல் சர்மா போன்ற நேர்மையான அதிகாரிகள், கலவரங்கள் பற்றி சிறப்பு புலனாய்வில் பதிவு செய்த உண்மையான தகவல்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. உண்மையைப் பேசியதற்காக, மோடி ஆட்சியில், இந்த அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் தனது குற்றச்சாட்டுகளுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் ராஜேந்திர தத்துக்கு ஏற்படுவது நியாயம் தானே! அந்த தயக்கமே, அவரை காலம் கடந்து, நீதிமன்றம் வரக் காரணமாக இருந்துள்ளது. இப்போது உச்சநீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை; சுதந்திரமான அமைப்புகள் நடத்திய விசாரணை களையும் பரிசீலிக்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

மோடி - குஜராத் கலவரத்துக்குப் பிறகு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதே அவரது வெற்றிக்கான காரணம் என்ற பிரச்சாரம் பார்ப்பன வட்டாரங்களில் தீவிரமாக முடுக்கி விடப்படுகிறது!

பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாராளமாகக் கதவு திறந்து விட்டுள்ள மோடியை அவர்கள் நடத்தும் ஊடகங்கள் புகழ் பாடுவதில் வியப்பு எதும் இல்லை.

•    ‘என்.சி.ஏ.பி.ஆர்.’ என்ற பொருளாதார ஆய்வு மய்யம் அண்மையில் குஜராத்தில் சிறுபான்மையினர் நிலை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஏழ்மை, வறுமை, கல்வியின்மை, பாதுகாப்பற்ற நிலையில் - இந்தியாவிலேயே ஒரிசா, பீகார் மாநிலங்களைப்போல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குஜராத்தில் வாழும் முஸ்லீம்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

•    குஜராத்தில் முஸ்லீம்களின் வறுமையின் அளவு உயர்சாதி இந்துக்களைவிட 50 சதவீதம் அதிகம். வங்கிக் கணக்கு வைத்துள்ள முஸ்லீம்கள் எண்ணிக்கை 12 சதவீதம் மட்டுமே. வங்கிக் கடன் வாங்கியவர்கள் 2.6 சதவீதம்.

•    தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முஸ்லீம்கள் புறக்கணிப்பு பெருமளவில் உள்ளது.

•    2002 கலவரத்தால் பாதிக்கப்பட்ட 23000 முஸ்லீம்கள் இப்போதும் தற்காலிக முகாம்களிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். நிரந்தர முகாம்கள்கூட அமைக்கப்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு தரும் இழப்பு ஈடு ரூ.10,000 அல்லது ரூ.15,000 மட்டுமே.

•    கிராம சாலைகள்; வீடுகளுக்கு மின் இணைப்பு; குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், மனித சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம், ஊழல்கள் பெருகி நிற்பது தான்.

•    கடந்த 2 ஆண்டுகளில் மூன்று பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. 17000 கோடி செலவில் குளங்களை வெட்டும் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் பெயர் ‘சுஜாலம் சஃபாலம்’; இதில் வேலை செய்யும் தொழிலாளருக்கு, உள்நாட்டு சந்தையில் கோதுமைக்கான விலை நிர்ணய அடிப்படையில் கூலி வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மொத்தமாக முன் கூட்டியே ஒப்பந்தக்காரர்களுக்கு அரசு வழங்கி விட்டது. ஆனால் தொழிலாளர்களுக்கு அரிசி விலைக்கான கூலியே தரப்படுகிறது. பல குளங்கள் காகிதத்தில் மட்டுமே வெட்டப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்காக வழங்கப்பட வேண்டிய அரிசி - பெருமளவில் மகாராஷ்டிராவுக்கு கடத்தப்படுகிறது.

•    2009 இல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்காக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வேலையும் கிடைக்கவில்லை. வேலை நடப்பதாக கணக்கு எழுதப்பட்டு, பணம் ஒப்பந்தக்காரர்களால் சுருட்டப்பட்டு விட்டது.

•    2010 இல் உருவாக்கப்பட்ட மீன் வளர்ப்புத் திட்ட ஊழல்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.600 கோடி. இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல்கள் நடந்தன.

•    பெருமளவில் அன்னிய தொழில் முதலீடுகளுக்கு குஜராத்தில் மோடி கதவு திறந்து விட்டுள்ளார். அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக கட்டுரைகள் எழுதும் பார்ப்பன குருமூர்த்திகள், மோடி அதே வேலையை செய்யும்போது தொழில் வளர்ச்சி என்று பாராட்டுகிறார்கள். குஜராத்தில் 2003 இல் மோடி அன்னிய முதலீடுகளை வரவேற்கும் திட்டத்தைத் தொடங்கியபோது, ரூ.69 கோடி முதலீடு வந்தது. 2005 இல் ஒரு லட்சம் கோடி; 2007 இல் 4 லட்சம் கோடி; 2009 இல் 12 லட்சம் கோடி; 2011 இல் 21 இலட்சம் கோடியாக பன்னாட்டு மூலதனம் அதிகரித்து நிற்கிறது.

•    இந்த பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்புகிற இடங்களில் நிலம் தாராளமாக ஒதுக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு எந்த வரி விதிப்பும் கிடையாது. தொழிலாளர் நல சட்டங்களிலிருந்தும் விதி விலக்கு. விவசாய நிலங்கள், பழங்குடியினருக்கானவனப் பகுதிகள், பெரும் தொழில் நிறுவனங்களின் வசமாகி விட்டன. சுற்றுச் சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்றமே தலையிட்டு, பல தொழிற்சாலை களை மூட  உத்தரவிட்டுள்ளது. உடனே - மோடி ஆட்சி, அவர்களுக்கு வேறு இடங்களை ஒதுக்கித் தருகிறது. இந்த பெரும் தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கிய பிறகு, மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், கல்விச் சேவைகள் மிகவும் குறைந்துவிட்டன. பெண்கள், குழந்தைகள், மைனாரிட்டியினர் வாழ்நிலை மிகவும் பின்னுக்குப் போய்விட்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

•    பெரும் தொழில் நிறுவனங்கள் வந்த பிறகும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. படித்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக சேவையாளர் தீஸ்கா செடல்வாட் ஆய்வு வழியாக அம்பலப்படுத்தியுள்ளார்.

•    குஜராத்தில் மகுவா பகுதியில் விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதியில் பாசன வசதிக்காக அணைகட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை மோடி பூமிக்கடியில் உள்ள சுண்ணாம்புக் கல்லைத் தோண்டி எடுத்து சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து விட்டதால், அப்பகுதி மக்கள் உள்ளூர் பா.ஜ.க. ஆதரவுடன், மோடியை எதிர்த்து போராடி வருகின்றனர். குண்டர்களை வைத்து போராடும் மக்களை ஒடுக்குகிறது மோடி ஆட்சி. 1400 கோடி செலவில் 214 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் இந்தத் தொழிற்சாலைக்காக, 5000 குடும்பங்களைச் சேர்ந்த 30,000 மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.

•    சவுராஷ்டிரா பகுதியில் வாங்கனர் மாவட்டத்தில் ‘ஒர்பட்’ நிறுவனத்துக்கான 40 ஹெக்டர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.40 என்ற விலையில் வழங்கினார் மோடி. அந்தப் பகுதி மக்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதரமான இந்த ஒரே இடத்தை பெரும் தொழில் நிறுவனத்துக்கு ‘தாரை’ வார்த்ததை எதிர்த்து உள்ளூர் மக்கள் கடந்த மார்ச் மாதம் உயர்நீதிமன்றம் போய் தடை வாங்கியுள்ளனர்.

•    உதோராவில் உள்ள ‘கலாச்சாரம் மற்றும் மேம்பாடு ஆய்வு நிறுவனம்’, அரசு ஆவணங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில், 1947-லிருந்து 2004 ஆம் ஆண்டு வரை குஜராத் மக்கள் தொகையில் வளர்ச்சித் திட்டங்களினால்  5 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் 33 லட்சம் ஹெக்டர் நிலம் பெரும் தொழில் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.

•    “சர்வாதிகாரமும் வளர்ச்சியும் கைகோர்த்துக் கொண்டு வரும்போது மக்களுக்கு அத்தகைய ஒரு வளர்ச்சியே தேவை இல்லை. ஜனநாயகம் வாழும் ஒரு சமூகத்தில் வளர்ச்சி சற்று குறைவாக இருப்பினும் அதுவே நன்மை பயக்கும்” என்கிறார் மதச் சார்பற்ற எழுத்தாளரும், சிந்தனையாளருமான ராம் புனியானி.

•    மோடிக்கு எதிராக அங்கே எவரும் பேச முடியாது. சட்டமன்றங்கள்  அவர் புகழ் பாடும் மன்றங்களாகவே  செயல்படுகின்றன.

•    தலித் சமூகத்தின் மீதான அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. தலித் மாணவர்களையும் பிறசாதி குழந்தைகளையும் ஒன்றாக அமர வைத்து ஒற்றுமை பற்றி பேசியதற்காக ஒரு ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். ‘இந்துத்துவாவின் பரிசோதனைக் களம்’ என்று அறிவிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் அச்சத்தின் பிடியில் மைனாரிட்டிகளும் தலித் மக்களும் வாடும் நிலையில், பார்ப்பனர்களும், பட்டேல்களும் பன்னாட்டு நிறுவனங்களுடன் சுரண்டி கொழுத்து வரும்போது வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது என்று பேசுவது என்ன நியாயம்? கருவுற்ற தாய்மார்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய சிகப்பணுக்களின் எண்ணிக்கை குஜராத் மாநிலப் பெண்களிடம் தான் மிகக் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முறையான இட ஒதுக்கீடோ, இலவசக் கல்வியோ, அங்கே இருக்கிறதா? என்ற கேள்விக்கு,  இவர்களிடமிருந்து பதில் இல்லை. இதுதான் மோடி ஆட்சியின் சாதனைகளா?

தகவல்கள்: ‘பிரன்ட்லைன்’ மே 20, 2011
Bookmark and Share

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு படைப்புகளை அனுப்ப‌ இங்கே அழுத்தவும். வேறு எந்த இணையதளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே! நாகரிகமற்ற/பிழையான‌ பின்னூட்டங்கள் குறித்து editor@keetru.com-க்குத் தெரியப்படுத்தினால், அவை நீக்கப்படும்.
Comments (6)
  • கருப்பு
    பெரியார் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த, திராவிட கட்சி ஆண்ட தமிழகத்தில் இல்லையா தலித்கள் மீதான கொடுமை. இன்னும் இருக்கய்யா இங்கே இரட்டை குவளை முறை. கடந்த ஆட்சியாளர்கள் இங்க நடத்தலயா படுகொலைகள். முதலில் உம்ம மாநிலத்தை திருத்துங்க. பிறகு பிளேன் ஏறி குஜராத்க்கும் போகலாம். காஷ்மிருக்கும் போகலாம்.
  • மால்கம் X இராசகம்பீரத்தான்
    திண்ணியமாக இருந்தாலும் சரி, உத்தம புரமாக இருந்தாலும் சரி, அலகாபாத்தாக இருந்தாலும் சரி, அகமதாபாத்தாக இருந்தாலும் சரி, காஷ்மீராக இருந்தாலும் சரி ...இந்தியாவில் நடக்கும் எல்லா அடக்குமுறைகளுக்கும் , ஏகாதிபத்தியத்திற்கு பின்னாலும் பார்ப்பனிய சாதிய அடக்குமுறை சார்ந்த வண்முறை இருக்கும். பார்ப்பன இந்தியா அப்படித்தான்... நரேந்திரமோடி ஜெயாவின் பதவியேற்பில் கலந்து கொண்டதும் கூட அந்த பார்ப்பனிய ஃபாசிசத்தின் வெளிப்பாடுதான் இந்தியாவில் எதிர்க்கப்பட வேண்டியது பார்ப்பானியமும் அதன் சாதியமும் தான்
  • shs
    sariyaaga sonneergal malcom X raasakambeeratthaan avargale.... karuthu kooriyulla karuppum fascisa sinthanai vaathithaan polirukkirathu
  • ஆளூர் ஷாநவாஸ்
    மிகச் சரியான பதிவு. 'மோடி நல்லாட்சி தருகிறார்' என்று நற்சான்று கொடுத்து வரும் சீமான் போன்ற போலி பெரியாரிஸ்டுகளுக்கு மத்தியில், மோடி அரசின் மறுபக்கத்தையும், மோடியின் உண்மை முகத்தையும் தோலுரித்துக் காட்டியிருக்கும் பெரியாரியத் தோழர் விடுதலை ராசேந்திரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
  • தவாஹ் இஸ்லாம்
    நரேந்திர மோடி இவர்தான் இந்தியாவின் மரண வியாபாரி' நரேந்திர மோடி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தவன் பிணக்குவியல்களின் மீதேறி பதவியேற்றுக் கொண்டவன். ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்களைக் கொடூரமாகக் குதறிய சிங்களப் படைகளுக்கு தலைமையேற்ற ராசபக்சேக்கு சமமானவன். குஜராத்தில் ஒடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்களை சிதைத்துச் சீரழித்த இந்துத்துவப் படைகளுக்குத் தலைமை ஏற்றவன். இன்று இந்தியாவைத் தாண்டி எந்த மண்ணிலும் கால்வைக்க முடியாத அளவுக்கு, உலக நாடுகளால் துரத்தியடிக்கப்படும் கறைபடிந்த கரங்களுக்குச் சொந்தக்காரன்.
  • Keetruதகவல்கள்: ‘பிரன்ட்லைன்’ மே 20, 2011


No comments:

Post a Comment