ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து புதன்
இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். எனவே தான் இம்மாதத்திற்கு ஸஃபர்-பயணம் என்ற பெயர் வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இம்மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அந்த மாதம் (ஸஃபர்) பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்படி நம்புவதற்கும், அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா? என்று அல்குர்ஆன் நபிவழி அடிப்படையில் நாம் ஆய்வு செய்வதற்கு முன், இது ஒரு மூட நம்பிக்கை தான் என்பதற்குரிய வேறு சில காரணங்களைப் பார்ப்போம்.
ஒரு நேரம், ஒரு நாள், ஒரு மாதம் எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது என்று நம்புவதும், அல்லது எல்லோருக்கும் கெடுதி செய்யக்கூடியது என்று நம்புவதும், இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதிக்கு மாற்றமானதாகும். ஒருவருக்கு மிகவும் நன்மைகள் வந்தடைந்த நாள், இன்னொருவனுக்கு கேடுகள் வந்தடைந்த நாளாக இருப்பதைத் தான் நடைமுறையில் நாம் காண முடிகிறது. ஒரு நாளில் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்திருக்கும்; அவருக்குப் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் அதே நாளில் மரணமடைந்திருப்பார். நல்லநாள் என்று ஒன்று இருக்குமானால் உலக மக்கள் அனைவருக்கும் அந்த நாளில் நல்லவையே நடக்க வேண்டும்; கெட்ட நாள் என்று ஒன்று இருக்குமானால் உலக மக்கள் அனைவருக்கும் அந்த நாளில் கெட்டவை மட்டுமே சம்பவிக்க வேண்டும். எந்த நாளாக இருந்தாலும் அதில் சிலருக்கு நல்லவை ஏற்படுவதும், சிலருக்கு கெட்டவை ஏற்படுவதும் தான் நடைமுறை உண்மை. இதைப் புரிந்து கொள்ள பெரிய ஆதாரம் தேவையில்லை. தங்கள் வாழ்க்கையிலேயே அனைவரும் அனுபவரீதியாக உணர முடியும்.
ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் நோய் வாய்ப் பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால், ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணம் மகத்தான வெற்றியை ஏற்படுத்தியுள்ளதே. அந்த பயணத்திற்குப் பின்பு தான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது; சிந்திக்க தெரிந்தவர்களுக்கு இவை போதுமானதாகும். இதே ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் தான் நபியவர்கள் குணமடைந்து குளித்தார்களாம். அதனால் நாமும் ஒடுக்கத்துப் புதன் அன்று குளித்து நமது முஸீபத்துக்களை நீக்க வேண்டுமாம். இந்த மூட நம்பிக்கையின் பெயரால் பல மடமைகள் நடக்கின்றன. அதாவது அன்றைய தினம் கடல், குளம், ஏரி, அருவி போன்ற நீர்நிலைகளில் குளிப்பது, பனை ஓலை, பீங்கான் தட்டுகளில் ஏதேதோ எழுதி கரைத்துக் குடிப்பது போன்ற நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிரானதாகும். அந்த நளை பீடை நாள் என்று ஒதுக்குவது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதான செயலாகும்.
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகன் என்னை வருத்தப்படுத்துகிறான். (அதாவது) காலத்தை அவன் திட்டுகிறான். ஆனால் நானோ காலமாக இருக்கிறேன். காலத்தின் அனைத்து அதிகார மும் என் கைவசமே உள்ளது. இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச் செய்கிறேன். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரழி) நூல்: புகாரி 5/4826, 6/6181.
அறியாமைக் கால அரபு மக்கள் எது நடந்தாலும் அதைக் காலத்துடன் இணைத்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். காலம்-தான் அவரை அழித்து விட்டது; மோசமான காலம்; நாசமான காலம் என்றெல்லாம் அறியாமைக்கால மக்கள் பேசி வந்தனர். காலம் என்பது சம்பவங்கள் நிகழும் ஒரு நேரமே தவிர, அதற்கு ஆக்குகின்ற, அழிக்கின்ற ஆற்றல் எதுவும் கிடையாது. இரவு பகல் மாற்றமே காலமாகும். அப்படியிருக்க, ஒருவர் காலத்தை சபிக்கின்றார் என்றால், காலமாற்றத்தை உருவாக்கும், ஆக்கத்தையும், அழிவையும் ஏற்படுத்தும் அல்லாஹ்வையே அவர் சபிக்கின்றார் என்று அர்த்தம். அல்லாஹ்வை அவர் சபிப்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கையும் அவர் ஏற்படுத்திட முடியாது என்றாலும், அல்லாஹ்வின் கோபத்திற்கு அவர் ஆளாகித் தமக்கு தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார். எனவே தான் அல்லாஹ் நானே காலமாக இருக்கிறேன், அதாவது கால மாற்றத்தை ஏற்படுத்துகின்றவன் என்கிறான். (1:பத்ஹுல் பாரி)
ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் பாதுகாவலன் என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 9:51)
அல்லாஹ்வின் விதியை மாற்றக் கூடிய ஆற்றல் கடல், குளம், ஏரி, அருவிகளில் குளிப்பது, மற்றும் ஓலை, தட்டுகளில் எழுதி கரைத்துக் குடிப்பது இவற்றில் இருப்பதாக நம்புவது ஷிர்க் (இணை வைத்தல்) ஆகும். குறிப்பிட்ட தினத்தில் முஸீபத்து இறங்கினாலோ, அவற்றின் பரிகாரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றிருந்தாலோ நபி(ஸல்) அவர்களை விட வேறு யார் அதை அறிவித்துத் தர முடியும்? ஏனெனில் (இறை நம்பிக்கையாளர்கள்) உங்களிலிருந்து ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பப்படுவது அவருக்கு மிக்க வருத்தத்தை ஏற்படுத்தும். மேலும் அவர் உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். இறைநம்பிக்கையளர்கள் மீது கருணையும் இரக்கமும் உடையவர் என்று அல்லாஹ் தனது நெறி நூலாகிய அல்குர்ஆனில் தவ்பா என்ற 9வது அத்தியாயத்தில் 128வது வசனத்தில் கூறுவதை சிந்திப்பீர்களாக!
அகில உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர், நம்பிக்கையாளர்கள் மீது இரக்கமுடையவர், நம்பிக்கையாளர்கள் துன்பப்படுவதை சகிக்காதவர் இந்த நாளின் முஸீபத்தை பற்றி அறிவிக்காமல் சென்றுவிட் டார்களா?
சின்ன நகஸு(சு), பெரிய நகஸு(சு) என்றெல்லாம் கணித்து மக்களுக்குத் தொண்டு(?) செய்கிறோம் என்று கூறுகின்றவர்களும், பால்கிதாபு, மோர்கிதாபு என்று சொல்லி மக்களை மடமையிலேயே நீடித்திருக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களும் கொஞ்சம் சிந்திப்பீர்களாக!
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்: என்மீது சொல்லப்படும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது சொல்லப்படும் பொய்யைப் போன்ற தன்று, யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்! சொல்லப்படும் பொய்யைப் போன்றதன்று, யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்! அறிவிப்பாளர்: முகீரா(ரழி) புகாரி: 1291
ஒடுக்கத்துப் புதனுக்கு சொல்லபப்படுகின்ற காரணமே முதலில் சரியில்லை:
ஸஃபர் மாதத்தின் இறுதியில் குளித்து நபி(ஸல்) அவர்கள் குணமடைந்தது பூரண குணமல்லவே, அதற்கு இருவாரங்கள் கழித்து அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டனரே! (இன்னாலில்லாஹி…) சரியான அறிவிப்பின் படி வியாழக்கிழமை அன்று குளித்து விட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மக்களுக்கு நீண்ட பிரசங்கம் (ஜும்ஆ) செய்தார்கள் என்று தானே உள்ளது (ஆதாரம்: அல்பிதாயா, வன்னி ஹாயா) இந்த அடிப்படையில் ஓடுக்கத்து வியாழன் என்றெல்லவா சொல்ல வேண்டும்?
அன்றைய அரபு மக்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாகக் கருதி இருந்தனர். அந்த நாளில் எந்த நல்ல காரியங்களையும் நடத்தாது இருந்தனர். மடமை எண்ணத்தை தகர்த்தெறியும் வகையில் அறிவுப் பேரொளி அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள், நான் ஷவ்வாலில் தான் திருமண முடிக்கப்பட்டேன். ஷவ்வாலில் தான் என் இல்லறத்தைத் துவங்கினேன். நபி(ஸல்) அவர்களுக்கு என்னை விட உகந்த மனைவியாக யார் இருந்தார்கள்? என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்.
………..நீங்கள் பீடை மாதம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்ற ஷவ்வாலில் திருமணம் முடித்த நான் எவ்வளவு மகிழ்வோடு வாழ்ந்து இருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா (ரழி) கேட்டது இன்று ஸஃபர் மாதத்தை பீடையாகக் கருதுவோருக்கு பொருந்தாதா? சிந்தியுங்கள்!
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் இந்த ஒடுக்கத்து புதனில் புதைந்து இருக்கின்றன. இக்கேள்விகள் அனைத்தும் சாதாரணமானவை அல்ல; இறை நம்பிக்கையா? இறை நிராகரிப்பா (குஃப்ரா)? என்பதை எடை போடும் ஜீவாதார மான கேள்விகள்.
எனவே ஒடுக்கத்து புதனை ஓரங்கட்டுவோம்; அதன் நிழலில் கூட நிற்க மாட்டோம் என சபதம் ஏற்போம். அல்லாஹ் போதுமானவன்.
நன்றி: அந் நஜாத்காம் & Engr.Sulthan
|
Sunday, January 22, 2012
ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து புதன்
Saturday, January 21, 2012
வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி!
Thank s by Akbar Ali
PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவது.
குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.
புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவையில்லை.
-----------------------------------------------------------------------------------
முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.
Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf
3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும், இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Card நகல்), சமர்ப்பிக்க வேண்டும்.
காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை(உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)
விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://passport.gov.in/pms/PPForm.pdform.pdf
காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.
கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். கட்டண விவரம் கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது.
http://passport.gov.in/cpv/FeeStructure.htmStructure.htm
காலையில் விண்ணப்பித்தால் மாலை 5 மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.
PCC குறித்த முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளதுhttps://passport.gov.in/pms/PoliceClearanceCertificate.htm
விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் தான் நேரில் செல்ல வேண்டுமென்பதுமில்லை,விண்ணப்பிப்பவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை யாரேனும் கொண்டுசென்றாலும் போதுமானது.
மதுரை பாஸ்போர்ட் அலுவலக முகவரி.
Passport Office, Bharathi Ula Veethi, Race Course Road, Madurai-625 002.
website: http://passport.gov.in/madurai.html
மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும்.
திருச்சி பாஸ்போர்ட் அலுவலக முகவரி
Passport Office, Water Tank Building, W.B. Road , Tiruchirappalli. Pin Code 620 008, Fax: 0431-2707515 E-mail: rpo.trichy@mea.gov.in. Website:http://passport.gov.in/trichy.html
திருச்சி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலக முகவரி
Passport Office, First Floor, Corporation Commercial Complex, Opp. Thandumariamman Koil, Avinashi Road, Coimbatore - 641018
Phone: 0422-2304888 ,2309009, Fax: 0422-2306660, E-mail: rpo.cbe@mea.gov.in, Tele-enquiry: 0422-2309009 , 2304888, Web-site: http://passport.gov.in/coimbatore.html
கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை பாஸ்போர்ட் அலுவலக முகவரி
Regional Passport Office,IInd Floor, Shastri Bhavan, 26, Haddows Road, Chennai - 600 006
Phones : 91-44-28203591 , 28203593, 28203594, 28240696
Fax : 91-44-28252767
E-mail : rpo.chennai@mea.gov.in Website: http://passport.tn.nic.in/about_us.htm
சென்னை, கடலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், காரைக்கால், கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலுர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி!
passport.gov.in
Subscribe to:
Posts (Atom)