பையன் பல்லாவரம். பெண் பெசண்ட் நகர். வசதியான குடும்பத்துப் பெண். இருவரும் முஸ்லிம்கள். படிக்கும்போது முகிழ்த்த நட்பு காதலாகத் துளிர்த்தது. பெண் வீட்டாரிடம் இருவரும் தம் காதல் குறித்துத் தெரிவித்துத் திருமணத்திற்காக ஏங்கியுள்ளனர்.
ஏற்கெனவே மாப்பிள்ளை பேசி முடிவாகிவிட்டது; இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை என்று பெண் வீட்டார் கதவை அழுத்தமாகச் சாத்திவிட்டனர். பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் பெரிய இடத்துப் பெண்ணின் திருமணமும் நடந்து முடிந்துவிட்டது. இப்போது அவள் ஐந்து மாத கர்ப்பிணி.
இந்நிலையில், அப்பெண் தன் பழைய காதலனுடன் பெங்களூர் ஓடிவிட்டாள். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கிக்கொண்டு, "நாங்கள் சேர்ந்துவாழ விரும்புகிறோம். பிரித்தால் தற்கொலை செய்து கொள்வோம்'' என்று பையனும் பெண்ணும் மிரட்டல் விடுக்கிறார்கள்.
என்ன செய்யப்போகிறோம்...?
பெண் படித்துக்கொண்டிருந்தபோது டியூஷன் சென்டர் போவது வழக்கம் .இதுவும் சென்னையில்தான். அங்கு டியூஷன் எடுத்த ஆசிரியர் இந்து. மாணவி முஸ்லிம். இருவருக்கும் இடையே ஆசிரியர் - மாணவி என்ற உறவுக்கு மேலே காதல் தலைதூக்கியது. பெண்ணின் வீட்டாருக்கு விவரம் தெரியுமோ தெரியாதோ, ஒரு கல்லூரி விரிவுரையாளருக்கு மணமுடித்து வைத்துவிட்டனர். மாப்பிள்ளை முஸ்லிம். சேர்ந்துவாழ்ந்தனர். அடையாளமாக வயிற்றில் ஏழு மாதக் குழந்தை.
இந்நிலையில் திடீரெனப் பெண் காணாமல் போய்விட்டாள். பிறகுதான் தெரிந்தது, அவள் தன் பழைய காதலனுடன் எங்கேயோ சுற்றித் திரிகிறாள் என்று. பின்னர் வீடு திரும்பிய அவளை, விவாகரத்துச் செய்துவிட வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். கணவனோ, மனைவியை மன்னித்து ஏற்கத் தயார்.
என்ன செய்யப்போகிறோம்...?
பிராமணப் பெண். பையன் முஸ்லிம். தேனி மாவட்டம். கல்லூரியில் உருவான காதல், இரு வரையும் கண்காணாத இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. இருவரும் இப்போது சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது மட்டும் தெரியும். எங்கே, எப்படி, திருமணம் ஆனதா, இல்லையா எதுவும் பையன் வீட்டாருக்குத் தெரியாது.
கிட்டத்தட்ட இதே பாத்திரம், வேலூர் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில்.
தினகரன் நாளிதழில் வந்த ஒரு செய்தி என்ன செய்யப்போகிறோம்...?
இப்படி ஒன்றல்ல; இரண்டல்ல. பல நூறு சம்பவங்கள். நகரம், கிராமம் என்ற வித்தியாசமில்லாமல் நம் குடும்பங்களில் அரங்கேறிவருகின்றன. மேலைநாட்டுக் கலாசாரம், சின்னத்திரை, வண்ணத்திரை என்றெல்லாம் காரணங்களைச் சொல்லிவிட்டால் போதுமா? மலைப் பாம்பாய் வாய் பிளந்து மிரட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பேராபத்தைச் சமுதாயம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது? இந்த வைரஸுக்கு வைத்தியம் என்ன?
பெண் கல்வி.
முஸ்லிம் பெண்கள் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்; பிரச்சினைகளைத் துணிவோடு எதிர்கொண்டு சாதிக்க வேண்டும் என்பதற்காகப் பெண் கல்வியை அனைவரும் வலியுறுத்துகிறோம். அது உண்மையும்கூட.
இப்போதெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமன்றி, முஸ்லிம் ஊர்களிலும்கூட சமுதாயக் கண் மணிகள் நிறையவே படிக்கின்றனர். உயர்கல்வியில் தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டனர். இளநிலைப் பட்டப் படிப்புக்கும் மேலாக, உயர்நிலைப் பட்டப்படிப்பிலும் முஸ்லிம் மாணவிகள் ரேங்க் ஹோல்டர்களாக ஜொலிக்கின்றனர். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், கல்வி ஒரு பக்கம் வளர்ந்தால், மறுபக்கம் கலாசாரச் சீரழிவு தேள் போல் கொட்டுகிறதே! முன்பு நம் இல்லங்களை அலங்கரித்த ஒழுக்கம், நாணம், அடக்கம் ஆகிய உயர் பண்பாடு களெல்லாம் சிறிது சிறிதாக மலையேறத் தொடங்கிவிட்டனவே!
நாம் என்ன செய்யப்போகிறோம்?
இதற்காகப் பெண் கல்வியை ஓர் எல்லைக்குள் முடக்கிவிட முடியுமா? அப்படியானால், நம் வீட்டு ஆண் பிள்ளைகளும்கூட மாற்றார் தோட்டத்து மான்களுக்குப் பின்னால் ஓடிப்போய் விடுகிறார்களே! ஆண்களும் படிக்கக் கூடாது என்று தடை போட்டுவிட இயலுமா?
கோ எஜுகேஷன்தான் இதற்கெல்லாம் காரணம். எனவே, ஆண்கள் பள்ளியில் ஆண்களையும், பெண்கள் பள்ளியில் பெண்களையும் சேர்த்துவிட்டால், இந்தப் பிரச்சினை வராது என நாம் கூறலாம். ஆனால், இது எல்லா இடங்களுக்கும் பொருந்துமா? பெண்களுக்கெனத் தனியாகப் பள்ளியோ கல்லூரியோ இல்லாத பல ஊர்களில் நம் குழந்தைகள் உயர்கல்வி கற்பது எப்படி?
அடிப்படை மார்க்கக் கல்வி.
சிறு வயதிலேயே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான அடிப்படைக் கருத்துகளை குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்துவிட்டால், இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுத்து விடலாம். உண்மைதான். சிறு வயதிலேயே "குர்ஆன் மதரசா' எனப்படும் ஆரம்ப அரபிப் பாடசாலையில் குழந்தைகள் சேர்ந்து, குர்ஆன் ஓதக் கற்று, மார்க்கச் சட்டங்களையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் அறிந்து கொண்டால், பின்னாளில் எவ்வளவு பெரிய படிப்புகளைப் படித்தாலும் பிள்ளைகள் கெட்டுப்போகாமல் இருப்பார்கள். முந்தைய தலைமுறையினர் அப்படித்தான் வளர்ந்தார்கள்.
இதற்குக் காரணம் இல்லாமலில்லை. பசு மரத்தில் ஆணி அறைந்தார் போன்று, இளம் உள்ளத்தில் இறையுணர்வு, இறையச்சம், மறுமை நம்பிக்கை, பெற்றோரின் உரிமைகள், பிள்ளைகளின் கடமைகள், பாலியல் தவறுகளால் விளையும் தீமைகள் உள்ளிட்ட பால பாடங்களைப் பதித்துவிட்டால், அது என்றென்றும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும்.
ஆனால், இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் இதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது தான் பெரும் கொடுமை. காலையில் எழுந்தவுடன் அரைகுறையாகக் காலைக் கடனை முடித்துக் கொள்ளும் மழலையர், புத்தக மூட்டைகளைச் சுமந்துகொண்டு பள்ளிக்குச் சென்றுவிடுவர். பல வீடுகளில் குழந்தைகள் பள்ளிக் கூடத்துக்குச் செல்லும்வரை பெரியவர்கள் எழுந்தே இருக்கமாட்டார்கள்.
மதியம் அல்லது மாலை நேரம் வீடு திரும்பியபின் சிறிது நேர விளையாட்டு. பின்னர் மீண்டும் வீட்டுப்பாடம். அத்துடன் டியூஷன். பெரியவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பே குழந்தைகள் உறங்கிவிடுவார்கள். இப்படி தந்தை - மகன் சந்திப்பே பல நாட்கள் நடக்காமல் போய்விடுவதும் உண்டு. இந்த நிலையில் மதரசாவுக்குக் குழந்தைகளை அனுப்ப நேரம் எங்கே? இப்படி பெற்றோர் அலுத்துக்கொள்கிறார்கள்.
தனி உஸ்தாதை நியமித்து வீட்டிலேயே மார்க்க வகுப்பு நடத்தலாம். ஆனால், இது எல்லாருக்கும் சாத்தியமா? வசதி இல்லாதோர் எத்தனையோ பேர்! வசதி இருந்தாலும் உஸ்தாது கிடைக்க வேண்டும். அவர் பொறுப்போடு வந்து கற்பிக்க வேண்டும். குழந்தைகளும் பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.
நாலு நல்ல வார்த்தை
இதுதான் இல்லை. வளரும் பிள்ளைகள் நாலு நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டுமல்லவா? அந்த வாசலும் அடைபட்டுக் கிடக்கிறது. பள்ளி, கல்லூரிகளின் வகுப்பு நேரங்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயானைக் கேட்பதற்குக்கூட அவகாசம் அளிப்பதில்லை. விடுமுறை நாட்களோ வெளியூர் பயணங்கள், குடும்ப நிகழ்ச்சிகள், ஸ்பெஷல் கிளாஸ்கள் எனக் கழிந்துவிடுகின்றன.
மாணவிகளின் நிலை இதைவிட மோசம். மார்க்க உரைகளைக் கேட்பதற்கான முகாந்தரமே அவர்களுக்குக் கிடையாது. ஜும்ஆ இல்லை; சிறப்பு பயான்கள் இல்லை; நல்ல புத்தகங்கள் நம் வீடுகளில் கிடைப்பதில்லை. பல வீடுகளில் இஸ்லாமிய இதழ்களோ நூல்களோ மருந்துக்குக்கூட கண்ணில் படுவதில்லை.
தொலைக்காட்சி உரைகளிலோ -சிலவற்றைத் தவிர- விவரங்களைவிட விரசங்களே அதிகம். அடையாளப்படுத்தவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காசு கொடுத்து நடத்துகிறார்கள். தற்புகழ்ச்சிதான் அதில் மிகைக்கிறது; இறைநெறிகள் சொற்பமே. குறிக்கோல் விளம்பரம். அதில் உண்மையான குறிக்கோல் அடிபட்டுப்போகிறது.
தேர்ந்தெடுப்பு முக்கியம்.
இதற்கு ஒரே தீர்வாக, முஸ்லிம்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்கலாம் என்றால், அங்கு மட்டும் என்ன வாழ்கிறது என்றே கேட்கத் தோன்றுகிறது. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் பலவற்றில், பெயருக்குக்கூட இஸ்லாத்தைக் காண முடியவில்லை. அரபி மொழி வகுப்புகளோ, இஸ்லாமிய நீதி போதனை வகுப்புகளோ அங்கு நடப்பதில்லை. நடக்கும் ஒருசில இடங்களிலும் வேண்டா வெறுப்பாக நடத்தப்படுகின்றன; மாணவர்கள் வருவதில்லை.
பாடத்திட்டத்திலேயே இஸ்லாமியப் பாடங்கள் இடம்பெற்றிருக்கும் முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் சில உள்ளன. எல்.கே.ஜி.யில் தொடங்கி மேல்வகுப்புவரை குர்ஆன் பாடங்களும் மார்க்க விளக்கங்களும் அங்கு வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பள்ளிகளைக் கைவிட்டு எண்ணிவிடலாம். அவற்றிலும், பள்ளிப் பாடங்களின் தரம் குறையாவண்ணம், தீனிய்யாத்தையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
இதுதான் இன்றைய எதார்த்தம். மறைக்க வேண்டியதில்லை. இந்தச் சூழ்நிலையில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களும் மாணவிகளும் "காதல்' வலையில் சிக்கிக்கொண்டு சீரழிவது நாளுக்கு நாள் பெருகி வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. சுருங்கச்சொன்னால், மார்க்கமே இல்லாத மற்ற மாணவர்களின் நிலைதான் நம் பிள்ளைகளின் நிலையும்.
என்ன செய்யப்போகிறோம்...?
சமுதாய இளவல்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? நம் வீட்டுப் பெண்கள் மாற்றானுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் அவலம் தொடரலாமா? நம் இளைஞர்கள் மாற்றாளுடன் இல்லறம் நடத்தி, நம் வாரிசுகள் அவளது மடியில், அரவணைப்பில், இணைவைப்பில் வாழ்ந்துவரும் கொடுமை நீடிக்கலாமா? சமூக ஆர்வலர்களும் சீர் திருத்தவாதிகளும் சீரியஸாகச் சிந்திக்க வேண்டிய விவகாரமாகும் இது.
இதைத் தடுத்து நிறுத்த வழிகாணத் தவறினோம் என்றால், ஒரு தலைமுறையே மார்க்க மில்லாத தலைமுறையாக, வேற்று மதத் தலைமுறையாக மாறிவிடும் அபாயம் உண்டு. இதன் பாவம் இன்றைய தலைமுறையையே சாரும். நம்மை அல்லாஹ் சும்மா விடமாட்டான். அனைவரும் யோசியுங்கள். நல்ல முடிவு காணுங்கள். சுனாமி எச்சரிக்கை செய்தாகி விட்டது. தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்வது ஒவ்வொரு வரின் கடமை ஆகும்.
நான் ஒன்று சொல்வேன். பெற்றோர் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுதான் முதல் தரமான முக்கியமான நடவடிக்கையாக இருக்கும். பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகத் தந்தை கடுமையாக உழைக்கிறார். உறக்கத்தைத் தியாகம் செய்கிறார். உணவைக்கூட உதறித் தள்ளுகிறார். மகனுக்கு, அல்லது மகளுக்கு வேண்டிய எல்லா வசதி களையும் செய்து கொடுக்கிறார். படிக்க வைக்கிறார்; பட்டமும் பணியும் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால், அவனது எண்ணவோட்டத்தைக் கணிக்கத் தவறிவிடுகிறார்.
தாயும் நாவுக்கு ருசியாகச் சமைத்துப் போடுகிறாள். வகை வகையான ஆடை அணிகலன்களை அணிவித்து அழகு பார்க்கிறாள். பிள்ளையின் மனம் கோணாமல் நடந்துகொள்கிறாள். ஆனால், பிள்ளைகளின் அசைவுகளைக் கண்டு விழித்துக்கொள்ள தவறிவிடுகிறாள். பேணி வளர்த்தல் என்பது உணவு உடையில் மட்டும் அல்ல. பண் பாடு, நாகரிகம், கலாசாரம், மறுமை வாழ்க்கை அனைத்தையும் கண்காணித்துச் சீரமைப்பதும் வளர்ப்புதான்.
நம் வீட்டுப் பிள்ளைகள் யார் யாருடன் பழகுகிறார்கள்? யாருடன் அதிகமாகத் தொலை பேசியில் பேசுகிறார்கள்? ஏன் குழப்பமாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன பிரச்சினை? முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதன் பின்னணி என்ன? தடுமாற்றம் தெரிகிறதே! கலகலப்பு இல்லையே! எதிலும் ஒட்டுதல் காணவில்லையே? காரணம் என்ன?. இப்படியெல்லாம் யோசிக்க வேண்டும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச வேண்டும். நீங்கள் காட்டும் பாசத்தால் அவர்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் உங்களிடம் கொட்ட வேண்டும். அதைக் கேட்டு அவர்களைப் பெற்றோர்கள் நல்வழிப்படுத்த வேண்டும்.
அடுத்து எப்பாடு பட்டேனும், சிறு வயதிலேயே அடிப்படை மார்க்கக் கல்வியை நம் குழந்தை களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அவரவர் சூழ்நிலைக்கும் வசதி வாய்ப்புக்கும் ஏற்றவாறு இதற்கு நேரம் ஒதுக்கியாக வேண்டும். மார்க்க அறிவும் இறையச்சமும்தான் பிள்ளைகளைத் தீமைகளிலிருந்து காக்கும் கேடயமாகும்.
வேலைக்குச் செல்லும் பெண்களே!
படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. முஸ்லிம் பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் வேலைக்குச் செல்கிறார்கள். இவர்கள் திருமணத்திற்குமுன், பணியாற்றும் இடத்திலேயே ஆண் துணையைத் தேடிக்கொண்டுவிடுகிறார்கள். அவன் முஸ்லிமா இல்லையா, நல்லவனா ஏமாற்றுக்காரனா என்பதையெல்லாம் பரிசோதித்துப் பார்க்காமல், இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை, ஒரு பெண்ணின் பொருளாதாரத் தேவைகளைத் தந்தையோ கணவனோதான் நிறைவேற்ற வேண்டும். பிறந்த வீட்டில் தந்தையும் உடன்பிறப்புகளும் அதற்குப் பொறுப்பு. புகுந்த வீட்டில் கணவன் பொறுப்பு. தன் தேவைகளைத் தானே நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு ஒரு பெண்ணை நமது மார்க்கம் ஒருபோதும் தவிக்க விடவில்லை.
முஸ்லிம் பெண் தன்னையும் தன் குழந்தை களையும் தானே கவனித்தாக வேண்டும் என்ற நிலை மிகவும் அபூர்வமாக எப்போதாவதுதான் ஏற்படும். பெற்றோர், உடன்பிறப்புகள், கணவன், உறவினர், அரசாங்கம் என யாருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் ஒரு பெண் திண்டாடுகின்ற நிலையில்தான், அவள் வேலை செய்து, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரும்.
தகப்பன் அல்லது கணவனின் கையாலாகாத் தன்மை, ஆடம்பரம் மற்றும் சொகுசு வாழ்க்கை, சுய தம்பட்டம், அடங்காத் தன்மை போன்ற காரணங்களுக்காக இளம்பெண்கள் வேலைக்குச் செல்வதும், அதை முன்னிட்டு குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்ற வழிவகுப்பதும் தேவைதானா? யோசியுங்கள். ஆக, கற்பா கல்வியா என்று வந்தால் கற்பையே தேர்ந்தெடுங்கள். இது ஆண்களுக்கும்தான்.
வள்ளலாரும், வழிகேடர்களும்!!.
படத்தில் குடும்பத்துடன் இருக்கும் இஸ்லாமியர் அமானுல்லா, வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளாருக்கு கோயில் கட்டி, வணங்கி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அன்றாடம் பூஜையும், அன்னதானமும் வழங்கி வருவதால் ஏரியா முழுக்க வள்ளலார் நாமம் வரிசை கட்டுகிறது.
‘‘எனக்கு திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி சொந்த ஊர். வறுமை காரணமாக, குடும்பம் சென்னைக்குக் குடியேறியது. இங்கே வந்தும், பெரிதாக வளர்ச்சி இல்லை. ஃபோட்டோகிராபராக வேலை செய்தேன். அன் றாடம் வயிற்றுப் பாடு கழிந்தது. திருமணம் முடிந்த பின்னரும் நிலைமையில் முன்னேற்றமில்லை. அப்பதான் ஏழு மலைங்கிறவர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் பற்றிச் சொன்னார். அவரோடு ஒருமுறை வடலூர் போய்ட்டு வந்தேன்.
என்னுள் ஏதோ ஒரு மாற்றம். வாழ்க்கையில் அ துவரை அனுபவித்து வந்த துன்பங்கள் ஒவ்வொண்ணா விலகற மாதிரியான உணர்வு. ஆச்சரியம். எனக்கு அரசுப் பணியும் கிடைத்தது. அன்று முதல் வள்ளலார் பக்தனாக மாறிவிட்டேன்!’’ என்று நெகிழ்ந்தபடி சொல்லும் அமானுல்லா, சென்னை மாநகராட்சியில் தற்போது ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமைகளில் பிரதான பூஜைகள் செய்வது, சொற்பொழிவாளர்களை அழைத்துக் கூட்டம் போடுவது என அமர்க்களப்படுத்தவும் அமானுல்லா தவறுவதில்லை.
இஸ்லாமியரான உங்களுக்கு எதிர்ப்பு வரவில்லையா?
‘‘துவக்கத்தில் உள்ளூர் ஜமாத்திலிருந்து (முஸ்லிம் கூட்டமைப்பு) எதிர்ப்பு வந்தது. ‘உருவ வழிபாட்டை இஸ்லாம் ஏற்பதில்லை. கடவுளுக்கு இணை வைப்பதும், அவனைத் தவிர வேறு யாரையும் வணங்குவதும் கூடாது. இறைவனே மிகப் பெரியவன்; அருளாளன்!’ என்றெல்லாம் சொல்லி, எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
ஆனால் வள்ளலார் மனி தனாக வாழ்ந்து மறைந்தாலும், ஜோதி வடிவில் மட்டுமே காட்சி தருகிறார். அதனை தரிசிப்பதும், புகழைச் சொல்வதும், வணங்குவதும் தவறில்லை என எனது கருத்தை எடுத்துச் சொன்னேன். ஏற்றுக் கொண்டார்கள்!’’ என்று சிரித்தபடியே சொல்லும் அமானுல்லாவுக்கு மனைவி ஜாஸ்மின், பாத்திமா, ஆஷிகா என்று இரு மகள்கள். அவர்களும் குரல் உயர்த்திப் பாடி, கரம் குவித்து ஜோதியை வணங்குவது அற்புதம்..
நன்றி: குமுதம்.
புதியதூது
படிப்பினை பெறவேண்டிய செய்தி:
தமிழ்நாட்டில் ஏகத்துவத்தின் பிரச்சாரம் முப்பது வருடங்களுக்கு மேலாக நடந்து வந்தாலும், சமீபகாலமாக நம் இயக்கங்கள், ஒன்று இரண்டாகி, இரண்டு நாலாகி, நாலு எட்டாகி ஒருவருக்கொருவர் திட்டி தீர்ப்பதிலேயே தங்களின் நேரங்களையும், பத்திரிக்கைகளையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் செலவிட்டு வருகின்றனர். இதனால் ஏகத்துவ பிரச்சாரம் எந்த அளவு பலகீனமாகியுள்ளது என்பதையும், இன்னும் நம் மக்களிடையே எந்த அளவு இந்த பிரசாரத்தை கொண்டு செல்லவேண்டியுள்ளது என்பதின் அவசியத்தை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட முன்வருவார்களா?.
No comments:
Post a Comment