Tuesday, August 2, 2011

30 வகை வெரைட்டி ரைஸ்!



சோளம் மசாலா ரைஸ்
தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், உதிர்த்த சோளம் - ஒரு கப், பச்சைப் பட்டாணி - ஒரு கப், முந்திரி துண்டு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் முந்திரியை நன்றாக வறுத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் கடுகு, சீரகத்தை வெடிக்க விடவும். பிறகு, சோளம், பட்டாணி, அரிசி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, கரம்மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். நன்கு வதங்கியதும், 5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். 3 விசில் வந்ததும், வெந்த சாத கலவையைக் கடாயில் கொட்டி எலுமிச்சை சாறு, வறுத்த முந்திரி, மல்லித்தழை, சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கிளறி, தயிருடன் பரிமாறவும்.
காராமணி ரைஸ்
தேவையானவை: அரிசி - ஒன்றரை கப், காராமணி - அரை கப், வெங்காயம், தக்காளி - தலா 1 (பொடியாக நறுக்கவும்), சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காராமணியை ஊறவைத்து குக்கரில் வேக விட்டு, வடிக்கட்டி ஆறவிடவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அதில், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வறுபட்டதும் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேகவைத்த காராமணி, உப்பு, எலுமிச்சை சாறு, தக்காளித் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும். வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு பரவும்படி கிளறிக் கொள்ளவும். பிறகு மூடி 2 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்
நெய் சாதம்
தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், ஜாதிக்காய் பொடி (விருப்பப்பட்டால்) - அரை டீஸ்பூன், பூண்டு, கிராம்பு - தலா 1 (நசுக்கிக் கொள்ளவும்), இஞ்சி - அரை துண்டு (பொடியாக நறுக்கவும்), முந்திரி - சிறிது, நெய் - 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து ஜாதிக்காய் பொடி, இஞ்சி, பூண்டு, முந்திரி, கிராம்பு போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பிறகு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும். அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, வதக்கியவற்றுடன் போட்டு, 2 நிமிடம் கிளறவும். பிறகு அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஆறியதும் மல்லித்தழை தூவவும். வெங்காய பச்சடி அல்லது தயிர் பச்சடி தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.
பீன்ஸ் புலாவ்
தேவையானவை: அரிசி - ஒரு கப், பீன்ஸ் - அரை கப் (பொடியாக நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும்), உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 4 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 2, (மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்) சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கிராம்பு - 2, பிரிஞ்சி இலை - 2, ஏலக்காய் - 2, பட்டை - ஒரு துண்டு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தண்ணீர் - 6 கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி உப்புத் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தை மொறு மொறுவென்று வறுத்து, எண்ணெயை வடித்து விட்டு தனியாக வைக்கவும். பிறகு முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும். மீதி எண்ணெயில் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பெருங்காயத்தூள், கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை, மிளகு எல்லாவற்றையும் சேர்த்து வறுக்கவும். அதனுடன், பச்சைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து, நன்றாகப் பரவும்படி கிளறி, திராட்சையை சேர்க்கவும். பிறகு அதில் 6 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும். முக்கால் பங்கு வெந்ததுமே தீயைக் குறைத்து மூடியால் மூடி சமைக்கவும். தேவைப்பட்டால், தண்ணீர் சேர்க்கலாம். மூடியை எடுத்துவிட்டு பீன்ஸ், வறுத்த முந்திரி துண்டு, வதக்கிய வெங்காயம் (அலங்கரிக்க சிறிது தனியாக எடுத்து வைக்கவும்), கரம்மசாலா தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து லேசாக கிளறவும். மல்லித்தழை, வெங்காயத்தை தூவி பரிமாறவும்.
குடமிளகாய் புலாவ்
தேவையானவை: அரிசி - ஒரு கப், குடமிளகாய் - 2, பஜ்ஜி மிளகாய் - 1, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), மல்லித்தழை - கால் கப், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சீஸ் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்து ஆறவிடவும். தேவையான அளவு உப்பை கலந்து கொள்ளவும். குடமிளகாய், பஜ்ஜிமிளகாயைத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், மிளகுத்தூள் போட்டு வறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பஜ்ஜி மிளகாய் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். குடமிளகாய் துண்டுகளை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். காய்கறி கலவை ரொம்பவும் குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும். ஆறிய சாதத்தை காய்கறி கலவையுடன் சேர்த்து கிளறவும். மல்லித்தழை தூவி, சாப்பிடுவதற்கு முன்பு சீஸ் துருவலை சேர்த்து பரிமாறவும்.
பூண்டு-மிளகாய் சாதம்
தேவையானவை: பச்சைமிளகாய் - 6, பூண்டு பல் - 2 டேபிள்ஸ்பூன், அரிசி - ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, வெங்காயம் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதனிடையே, பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுதை வதங்கி கொண்டிருக்கும் காய்கறி கலவையில் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். ஆறவைத்துள்ள சாதம், உப்பு சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும்.
புதினா சாதம்
தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், கிராம்பு - 2, இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய புதினா - அரை கப், பச்சைமிளகாய் - 3 (கீறிக் கொள்ளவும்), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். மிளகு கிராம்பு, பச்சைமிளகாய் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். புதினா இலைகளைப் போட்டு வதக்கி, ஆற வைத்துள்ள சாதம், உப்பு சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும்.
கேரட்-குடமிளகாய் சாதம்
தேவையானவை: குடமிளகாய் - 2, கேரட் - 1 (மீடியம் சைஸ்), எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தனியா - 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு -- 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்து ஆறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கேரட், குடமிளகாயைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் (காய்கறிகளை அதிக நேரம் வதக்க வேண்டாம்.. குழைந்து விடும்). தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன், வதக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, ஆற வைத்த சாதத்துடன் சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு கலந்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.
கொண்டைக்கடலை சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், தண்ணீர் - 3 கப், வெள்ளைக் கொண்டைக்கடலை - கால் கப், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1 அல்லது 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4 அல்லது 6, கறிவேப்பிலை - சிறிது, கடலைப்பருப்பு - சிறிது, வறுத்த முந்திரி துண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: முந்தைய நாள் இரவே கொண்டைக்கடலையை ஊறவைத்து மறுநாள் வேகவைக்கவும். அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும். தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகைப் போட்டு, வெடித்ததும் சீரகம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாயை சேர்க்கவும். வேக வைத்துள்ள கொண்டக்கடலை, வறுத்து அரைத்த பொடி, வறுத்த முந்திரி, எலுமிச்சை சாறு, தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, ஆற வைத்துள்ள சாதத்தின் மீது கொட்டி நன்றாகக் கலந்து பரிமாறவும்.
அவல் வெஜ் புலாவ்
தேவையானவை: நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு - அரை கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), கெட்டி அவல் - 2 கப், தக்காளி - 2 (அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்), தேங்காய் பால் - அரை கப், கரம்மலாசா தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை, மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி சாறுடன், தேங்காய் பால் கலந்து அதில் அவலைப் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும் (அவல் மூழ்கும் அளவுக்கு தக்காளி சாறு, தேங்காய் பால் கலவையை விட்டால் போதும்). கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் காய்கறித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். காய்கறிக் கலவை வதங்கியதும், ஊறிய அவலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும். வித்தியாசமான சுவையில் வெரைட்டியான புலாவ் ரெடி!
ஸ்வீட் ரைஸ்
தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், குங்குமப்பூ - சிறிது, சர்க்கரை - ஒரு கப், முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 3, நெய் - தேவையான அளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, பால் - சிறிதளவு.
செய்முறை: பாலில் குங்குமப்பூ, கேசரிபவுடர் இரண்டையும் கரைத்துக் கொள்ளவும். அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, ஏலக்காய்த்தூள், திராட்சை, பருப்பு துண்டுகளைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆற வைத்துள்ள சாதத்தை போட்டு(சாதம் உடைந்து விடாத அளவு) பாலில் ஊறிய கேசரிபவுடர், குங்குமப்பூவையும் சேர்த்து லேசாக கிளறவும். ஆறிய பிறகு சர்க்கரை சேர்த்து கலந்து பரிமாறவும்.
தேங்காய்ப் பால் புலாவ்
தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், தேங்காய்ப் பால் - இரண்டரை கப், கேரட் துருவல் - அரை கப், தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு துருவல் - கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்), பச்சைப் பட்டாணி - கால் கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, உடைத்த முந்திரி துண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியைக் கழுவி, தண்ணீருக்குப் பதிலாக தேங்காய்ப் பால் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். இஞ்சி, பூண்டு துருவல், பச்சைமிளகாய், கேரட் துருவல், பட்டாணி சேர்த்து கிளறவும். தக்காளியைப் போட்டு மேலும் சிறிது நேரம் வதக்கவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, ஆற வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாகக் கிளறி, நெய்யில் வறுத்த முந்திரியைத் தூவி பரிமாறவும்.
ஜீரா ஃப்ரைடு ரைஸ்
தேவையானவை: அரிசி - ஒரு கப், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒரு துண்டு, தண்ணீர் - இரண்டரை கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், கிராம்பு, பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், வெங்காயம் - 2 (வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்), நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் நெய் ஊற்றி, சூடானதும் வெங்காயத்தைப் போட்டு, மொறு மொறுவென வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் முந்திரியை வறுத்துக் கொள்ளவும். பிறகு சீரகம், மிளகு, பிரிஞ்சி இலை, கிராம்பு, பட்டைத்தூள் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். அரிசியுடன், தண்ணீரை சேர்த்துக் கொதிக்கவிடவும். சாதம் 75 சதவிகிதம் வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும். வறுத்த வெங்காயம், உப்பு, மசாலா பொருட்கள், முந்திரி சேர்த்து நன்றாகக் கொதித்ததும், தீயைக் குறைத்து தண்ணீர் வற்றும் வரை, பொல பொல வென்று சாதத்தை சமைக்கவும். சூடான வெஜ் கிரேவியுடன் பரிமாறவும்.
மாங்காய் சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், கிளிமூக்கு மாங்காய் (பழுக்காமல், ஸ்வீட்டான மிதமான மாங்காய்) - 4 (தோல்சீவி துருவிக் கொள்ளவும்) கடுகு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, காய்ந்த மிளகாய் - 3, நறுக்கிய மல்லித்தழை - கால் கப், மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகைப் போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வறுத்துக் கொள்ளவும். நன்றாக வறுபட்டதும், மாங்காய் துருவலை போட்டு வதக்கி, மசாலா விழுது, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கழித்து சமைத்த சாதத்துடன் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
இஞ்சி-எலுமிச்சை சாதம்
தேவையானவை: இஞ்சி துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், பாஸ்மதி அரிசி - ஒரு கப், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தூள், இஞ்சி துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் அரிசியைக் கழுவிப் போட்டு, உதிரியாக வடித்துக் கொள்ளவும். சிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறவும். அருமையான சுவையில் இஞ்சி எலுமிச்சை சாதம் ரெடி!
மசாலா பாத்
தேவையானவை: அரிசி - ஒரு கப், வெங்காயம் - 1, பச்சைப் பட்டாணி - அரை கப் (வேக வைக்கவும்), கேரட் - 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கோஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன், பூண்டு - அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (துண்டுகளாக நறுக்கவும்) பொடித்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மசாலா தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், முந்திரி, திராட்சை, வேர்க்கடலையைப் போட்டு வறுக்கவும். சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி துருவல், பூண்டு, வெங்காயம் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், மற்ற காய்கறிகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். மசாலா தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஊற வைத்துள்ள அரிசியை வடிய வைத்து, அதனுடன் சேர்த்து, சாதமாக சமைத்து சூடாகப் பரிமாறவும்.
காலிஃப்ளவர் ரைஸ்
தேவையானவை:
அரிசி - ஒன்றரை கப், காலிஃப்ளவர் - 2 கப் (உதிர்த்துக் கொள்ளவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், கிராம்பு - 2, பச்சைமிளகாய் - 2, தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கிராம்பு, பச்சைமிளகாய் போட்டு வறுக்கவும். உதிர்த்து வைத்துள்ள காளிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும். உப்பு, தக்காளி கெட்சப், மல்லித்தழை சேர்த்து கிளறி வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.
கத்திரிக்காய் சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், கத்திரிக்காய் - 5 (மீடியம் சைஸ்), வெங்காயம் - 3 (மீடியம் சைஸ்), தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். வெங்காயத்தையும், கத்திரிக்காயையும் நடுத்தரமாக நறுக்கவும் (ரொம்பவும் பொடியாக நறுக்கினால் குழைந்துவிடும். சுவையும் இல்லாமல் போய்விடும்). தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், வெங்காயத்தை வதக்கி பிறகு கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். அரைத்த பொடியை தூவி 2 நிமிடம் கிளறவும். பிறகு, ஆறவைத்துள்ள சாதத்தை சேர்த்து லேசாக கிளறி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.
கொத்துமல்லி சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், கொத்துமல்லி - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), பச்சைமிளகாய் - 5, சின்ன வெங்காயம் - 5 (தோலுரித்து வைக்கவும்), பூண்டு - 5 பல், இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - ஒரு சிறிய துண்டு, பட்டை - ஒரு துண்டு, சீரகம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1 (அரிசியைத் தவிர மேலே தந்துள்ள எல்லா பொருட்களையும் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்), சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 3 (பொடியாக நறுக்கவும்) பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 1, முந்திரி - 6 (உடைத்துக்கொள்ளவும்). நெய் (அ) எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை முறுகலாக வறுத்து எடுக்கவும். முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, பூண்டு, சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து, மேலும் 2 நிமிடம் வதக்கவும். அதனுடன், 3 கப் தண்ணீர் ஊற்றி, ஊற வைத்த அரிசியை வடித்து போட்டு வேகவிடவும் (அ) குக்கரில் சமைக்கவும். சிறிது வறுத்த முந்திரியையும், வதங்கிய வெங்காயத்தையும் தூவி பரிமாறவும்.
சின்ன வெங்காய சாதம்
தேவையானவை: காய்ந்த மிளகாய் - 20 (இரண்டாக கிள்ளிக்கொள்ளவும்), கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், புளி விழுது - 2 டீஸ்பூன், அரிசி - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகைப் போடவும். வெடித்ததும், கடலைப் பருப்பு, மிளகாய்துண்டுகள், புளிவிழுது, உப்பு, மஞ்சள்தூள், அரிசி சேர்த்து 5 கப் (1:5 என்ற விகிதத்தில்) தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். உரித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும்வரை சமைக்கவும். காரசாரமான சின்ன வெங்காய சாதம் ரெடி.
கிரீன் ரைஸ்
தேவையானவை: அரிசி - 3 கப், மல்லித்தழை - ஒரு கட்டு, கறிவேப்பிலை - சிறிது, ஏலக்காய், கிராம்பு, பட்டை - தலா 2, பூண்டு - 3 பல், இஞ்சி - ஒரு துண்டு, வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 6, மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, கரம்மசாலா தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம் இவற்றை விழுதாக அரைக்கவும். மீதி வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு வறுத்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதைக் கொட்டி, கரம்மசாலா தூள், மிளகாய்த்தூள் போட்டு கிளறவும். உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கியதும் ஆற வைத்துள்ள சாதத்தைப் போட்டுக் கிளறவும். அதிக நேரம் கிளற வேண்டாம். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
சூப்பர் டேஸ்ட்டி ரைஸ்
தேவையானவை: உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப், வறுத்த சீரகத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு - 3 டேபிள்ஸ்பூன், கரம்மசாலா தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 3 (நீளவாக்கில் நறுக்கவும்), பச்சைப் பட்டாணி - கால் கப் (வேகவைத்துக் கொள்ளவும்), கறிவேப்பிலை - சிறிது, சீரகம், கடுகு - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகத்தை வெடிக்க விடவும். கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பச்சைமிளகாயை சேர்க்கவும். அதில் சாதம், வேகவைத்த பட்டாணியை சேர்த்து 2 நிமிடம் கிளறவும். கரம்மசாலா தூள், தனியாத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
காரசார சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, தேங்காய் துருவல், வடித்த சாதம், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் கிளறவும். மீதி பொருட்ளை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கடாயில் உள்ள சாதத்துடன் சேர்த்து ஒரு நிமிடம் லேசாக கிளறி இறக்கவும்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாதம்
தேவையானவை: அரிசி - 2 கப், சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1 (சதுரமாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்), மல்லித்தழை - சிறிது, குடமிளகாய் - 1 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), வெங்காயம் - 1, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - இரண்டரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். தனியா, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, அரை டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். ஒரு நிமிடம் கழித்து வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். பின்னர், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் குடமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கி, வேக வைத்துள்ள சக்கரைவள்ளிக்கிழங்கை சேர்த்து கிளறவும். வறுத்து அரைத்த மசாலாவைத் தூவவும். சாதம், உப்பு, சர்க்கரை சேர்த்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.
புரோட்டீன் புலாவ்
தேவையானவை: வெள்ளைக் கொண்டைக்கடலை, வெள்ளைப் பட்டாணி, பச்சைப் பட்டாணி, வேர்க்கடலை - தலா அரை கப், அரிசி - ஒன்றரை கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு, புதினா, மல்லித்தழை - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். பருப்புகளை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் குக்கரில் வேக விடவும். பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தை வறுத்து, அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேகவைத்த பருப்புகளை போட்டு 2 நிமிடம் வதக்கவும். இதனுடன், ஊறவைத்த அரிசியை வடித்து உப்பு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக விடவும். 2 விசில் வந்ததும் இறக்கி, ஆறியதும் மல்லித்தழை, புதினா தூவி பரிமாறவும்.
தக்காளி பிரியாணி
தேவையானவை: அரிசி - ஒரு கப், தக்காளி - 4, பூண்டு - 4 பல், பச்சைமிளகாய் - 4, பட்டை - 2 துண்டு, கிராம்பு - 2, சீரகம் - அரை டீஸ்பூன், ஏலக்காய் - 2, பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும். தக்காளியைத் தனியாகவும், பூண்டு - பச்சைமிளகாயைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை இவற்றுடன் பூண்டு - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கி, தக்காளி சாறை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து, எண்ணெய் பிரியும்வரை கொதிக்க விடவும். வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி மல்லித்தழை தூவி பரிமாறவும்.
பெங்காலி புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், பிரிஞ்சி இலை - 1, திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், கிராம்பு - 2, ஏலக்காய் - 1, பட்டை - 1, வெங்காயம் - 1, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ - 4 இழை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் வதங்கியதும், சாதத்தை சேர்த்து, உப்பு, சர்க்கரை போட்டுக் கிளறவும். பாலில் குங்குமப்பூவை கரைத்து, இதில் ஊற்றிக் கிளறவும். வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்றாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
கீரை-கேரட் புலாவ்
தேவையானவை: பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு கீரை - ஒரு கப், கேரட் - கால் கப் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), சோம்பு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய் - 1, கிராம்பு - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), பட்டை - ஒரு சிறிய துண்டு, பாஸ்மதி அரிசி - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிது.
செய்முறை: அரிசியைக் களைந்து 15 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் நெய்யை விட்டு, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சைமிளகாய், பட்டை சேர்த்து வறுக்கவும். பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள கீரை, கேரட்டை சேர்த்து 2 நிமிடம் கிளறி, அரிசி, உப்பு, மிளகாய்த்தூள், இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து சமைக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
ராஜ்மா பிரியாணி
தேவையானவை: வேக வைத்த ராஜ்மா - அரை கப், சாதம் - ஒரு கப், தக்காளி - 3, பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கிராம்புத்தூள் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தயிர் - 5 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு தக்காளித் துண்டுகளைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். மசாலாத்தூள், கிராம்புத்தூள், ஏலக்காய்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கிளறியதும், ஒரு டேபிள்ஸ்பூன் தயிர், வெந்த ராஜ்மாவைப் போட்டு நன்றாக கிளறவும். ராஜ்மா மசாலா கிரேவி ரெடி!
பரிமாறும் விதம்: ஒரு சதுர (அ) வட்ட பாத்திரத்தில் முதலில்.. சிறிது சாதத்தைப் பரப்பி, 2 டேபிள்ஸ்பூன் தயிரை பரவலாக ஊற்றி, சிறிது பிரியாணி மசாலாத்தூளை தூவவும். அடுத்து, வேக வைத்த ராஜ்மா மசாலாவை பரப்பவும். கடைசியில் மறுபடியும் மீதமுள்ள சாதத்தை பரப்பி, 2 டேபிள்ஸ்பூன் தயிரை ஊற்றி, மீதம் உள்ள பிரியாணி மசாலாத்தூளை மேலே தூவவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
மகாராஜா புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், தக்காளி ப்யூரி - அரை கப் (தண்ணீர் சேர்க்காமல் அரைத்த ஜூஸ்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 3 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு, மிளகுத்தூள், கிரம்பு போட்டு வதக்கவும். உப்பு சேர்த்து, 2 நிமிடம் கழித்து தக்காளி ப்யூரியை சேர்த்து கிளறவும். நன்றாக இறுகியதும், சாதத்தை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, தேங்காய் துருவல், வடித்த சாதம், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் கிளறவும். மீதி பொருட்ளை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கடாயில் உள்ள சாதத்துடன் சேர்த்து ஒரு நிமிடம் லேசாக கிளறி இறக்கவும்.

No comments:

Post a Comment