Friday, December 24, 2010

குகைவாசிகள் வரலாறு

18:9 குகைவாசிகள் வரலாறு

குகைவாசிகள் வரலாறு    
     ‘அந்தக் குகை’ எனும் பெயர் பெற்ற இந்த அத்தியாயத்தின் எட்டு வசனங்களுக்கான விளக்கத்தை இதுவரை நாம் பார்த்தோம்.
    ஒன்பதாம் வசனம் முதல் 26வது வசனம் வரை கடந்த காலத்தில் நடந்த ஒரு வரலாறு மிகவும் சுருக்கமாகக் கூறப்படுகிறது. இந்த வரலாறு ஒரு குகையுடன் தொடர்புடையதாக இருப்பதால் தான் இந்த அத்தியாயத்திற்கு ‘அந்தக் குகை’ – அல் கஹ்ஃப் என்ற பெயர் வந்தது.
    முதலில் அந்த வசனங்களின் தமிழாக்கத்தைத் தொடராகப் பார்த்து விட்டு அதன் விளக்கத்தைப் பின்னர் பார்ப்போம்.
أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا    
    9. குகை மற்றும் ரகீம் வாசிகள் நமது அத்தாட்சிகளில் மிகவும் அதிசயமானவர்கள் என எண்ணிக் கொள்கிறீரா?
إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا    
    10. அந்த இளைஞர்கள் குகையின் பால் ஒதுங்கியதை நினைவு கூர்வீராக! எங்கள் இறைவா! உன்புறத்திலிருந்து அருளை எங்களுக்கு வழங்குவாயாக! மேலும் எங்கள் காரியங்களில் நேர்வழியை எங்களுக்காகக் காட்டுவாயாக என்று அவர்கள் கூறினார்கள்.
فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا    
    11. அக்குகையில் குறிப்பிட்ட ஆண்டுகள் அவர்களின் காதுகளை நாம் அடைத்தோம். (உறங்கச் செய்தோம் என்பதை காதுகளை அடைத்தோம் என்று கூறப்படுவது அரபு மொழியில் வழக்கமாக இருந்தது.)
ثُمَّ بَعَثْنَاهُمْ لِنَعْلَمَ أَيُّ الْحِزْبَيْنِ أَحْصَى لِمَا لَبِثُوا أَمَدًا    
    12. இரு கூட்டத்தினரில் அவர்கள் தங்கிய காலம் பற்றி நன்கறிந்தவர்கள் யார் என்பதை நாம் அறிவதற்காக பின்னர் அவர்களை நாம் எழுப்பினோம்.
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُم بِالْحَقِّ إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى    
    13. அவர்களது வரலாற்றை உண்மையுடன் நாம் உமக்குக கூறுகிறோம். நிச்சயமாக அவர்கள் இளைஞர்களாவர். அவர்கள் தம் இறைவனை நம்பினார்கள். மேலும் அவர்களுக்கு நேர்வழியை நாம் அதிகப்படுத்தினோம்.
وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَهًا لَقَدْ قُلْنَا إِذًا شَطَطًا    
    14. எங்கள் இறைவன், வானங்கள் மற்றும் பூமியின் இறைவனாவான். அவனையன்றி (யாரையும்) கடவுளாக நாம் பிரார்த்திக்கவே மாட்டோம். அவ்வாறு செய்தால் நாங்கள் வரம்பு மீறிய சொல்லைக் கூறியவர்களாவோம் என்று அவர்கள் (துணிவுடன்) நின்ற போது அவர்களின் உள்ளங்களை நாம் மேலும் பலப்படுத்தினோம்.
هَؤُلَاء قَوْمُنَا اتَّخَذُوا مِن دُونِهِ آلِهَةً لَّوْلَا يَأْتُونَ عَلَيْهِم بِسُلْطَانٍ بَيِّنٍ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا    
    15. நமது சமுதாயத்தினராகிய இவர்கள் அவனை விடுத்து பல கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தங்களுக்காக தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அதிக அநியாயக்காரன் யார்? (எனவும் அவர்கள் கூறினார்கள்.)
وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُم مِّن رَّحمته ويُهَيِّئْ لَكُم مِّنْ أَمْرِكُم مِّرْفَقًا    
    16. இவர்களை விட்டும், அல்லாஹ்வைத் தவிர எவற்றை வணங்குகிறார்களோ அவற்றை விட்டும், நீங்கள் விலகும் போது அந்தக் குகையில் தஞ்சமடையுங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை வாரி வழங்குவான். மேலும் உங்கள் காரியத்தில் எளிமையான போக்கிடத்தை உங்களுக்கு அவன் ஏற்படுத்துவான் (என்று தமக்குள் கூறிக் கொண்டனர்)
وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَت تَّزَاوَرُ عَن كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَت تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ مَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُّرْشِدًا    
    17. சூரியன் உதிக்கும் போது அவர்களது குகையின் வலப்புறத்தில் காய்வதையும் அது மறையும் போது அவர்களின் இடப்புறமாக அது அவர்களைக் கடந்து செல்வதையும் நீர் காண்பீர். அவர்கள் அக்குகையின் விசாலமான இடத்தில் உள்ளனர். இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றாகும். அல்லாஹ் யாருக்கு வழிகாட்டினானோ அவன் தான் நேர்வழி பெற்றவன். யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழிகாட்டும் பொறுப்பாளரைப் பெற்றுக் கொள்ள மாட்டீர்.
وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُم بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا    
    18. அவர்கள் விழித்துக் கொண்டிருப்பவர்களாகக் காண்பீர். அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்களை வலப்புறமும் இடப்புறமும் நாம் புரட்டுவோம். குகையின் வாசலில் அவர்களின் நாய் முன்னங்கால்களை விரித்து வைத்துள்ளது. அவர்களை நீர் பார்த்திருந்தால் அவர்களை விட்டு வெருண்டோடியிருப்பீர். அவர்களைக் குறித்து பயத்தால் நிரப்பப்படுவீர்.
وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُم بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَأْتِكُم بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا    
    19. அவர்கள் தமக்கிடையே விசாரித்துக் கொள்வதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். எவ்வளவு நாட்கள் தங்கியிருப்பீர்கள் என்று அவர்களில் ஒருவர் கேட்டார். ஒருநாள் அல்லது ஒருநாளில் ஒரு பகுதி தங்கியிருப்போம் என்று அவர்கள் கூறினார்கள். நீங்கள் தங்கியது குறித்து உங்கள் இறைவனே நன்கறிந்தவன் என்றும் கூறினார்கள். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் அந்த நகருக்கு அனுப்புங்கள். தூய்மையான உணவு எது என்பதைக் கவனித்து அதிலிருந்து உங்களுக்கு உணவை அவர் கொண்டு வரட்டும். மேலும் அவர் கவனத்துடன் இருக்கட்டும். அவர் உங்களைப் பற்றி எவருக்கும் அறிவித்து விடக்கூடாது (எனவும் கூறினார்கள்.)
إِنَّهُمْ إِن يَظْهَرُوا عَلَيْكُمْ يَرْجُمُوكُمْ أَوْ يُعِيدُوكُمْ فِي مِلَّتِهِمْ وَلَن تُفْلِحُوا إِذًا أَبَدًا    
    20. அவர்கள் உங்களை அறிந்து கொண்டால் உங்களைக் கல்லால் அடித்தே கொன்று விடுவார்கள். அல்லது அவர்களது மார்க்கத்தில் உங்களை மாற்றி விடுவார்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் ஒருக்காலும் வெற்றி பெறவே மாட்டீர்கள் (எனவும் கூறிக் கொண்டார்கள்.)
وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا إِذْ يَتَنَازَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ فَقَالُوا ابْنُوا عَلَيْهِم بُنْيَانًا رَّبُّهُمْ أَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِينَ غَلَبُوا عَلَى أَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِم مَّسْجِدًا    
    21. அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும் கியாமத் நாளில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும் அவர்கள் அறிந்து கொள்வதற்காக (இவர்களைப் பற்றி) அவர்களுக்கு (அவ்வூராருக்கு) நாம் வெளிப்படுத்தினோம். அவர்கள் தமது காரியத்தில் தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொண்டதை நினைவு கூர்வீராக! இவர்கள் மீது ஒரு கட்டடத்தை எழுப்புங்கள் என்று கூறினார்கள். அவர்களைப் பற்றி அவர்களின் இறைவன் நன்கறிந்தவன். இவர்கள் மீது நாம் ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்துவோம் என்று காரியத்தில் மிகைத்தவர்கள் கூறினார்கள்.
سَيَقُولُونَ ثَلَاثَةٌ رَّابِعُهُمْ كَلْبُهُمْ وَيَقُولُونَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًا بِالْغَيْبِ وَيَقُولُونَ سَبْعَةٌ وَثَامِنُهُمْ كَلْبُهُمْ قُل رَّبِّي أَعْلَمُ بِعِدَّتِهِم مَّا يَعْلَمُهُمْ إِلَّا قَلِيلٌ فَلَا تُمَارِ فِيهِمْ إِلَّا مِرَاء ظَاهِرًا وَلَا تَسْتَفْتِ فِيهِم مِّنْهُمْ أَحَدًا    
    22. மூன்று பேர். அவர்களில் நான்காவது அவர்களது நாய் என்று கூறுவார்கள். ஐந்து பேர். அவர்களில் ஆறாவது அவர்களின் நாய் என்றும் மறைவானதை யூகம் செய்து கூறுகின்றனர். ஏழு பேர். அவர்களில் எட்டாவது அவர்களின் நாய் என்றும் கூறுகின்றனர். அவர்களின் எண்ணிக்கை குறித்து என் இறைவனே நன்கு அறிந்தவன் என்று கூறுவீராக! குறைவானவர்களைத் தவிர அவர்களை யாரும் அறிய மாட்டார்கள். எனவே அவர்கள் விஷயத்தில் வெளிப்படையாகத் தெரிந்தவை தவிர வேறு விவாதம் செய்ய வேண்டாம். மேலும் அவர்கள் குறித்து இவர்களில் எவரிடமும் விளக்கம் கேட்காதீர்.
وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا    
    23. இதை நாளைக்கு நிச்சயாக நான் செய்பவன் என்று எந்த விஷயம் குறித்தும் நீர் கூற வேண்டாம்.
إِلَّا أَن يَشَاء اللَّهُ وَاذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَى أَن يَهْدِيَنِ رَبِّي لِأَقْرَبَ مِنْ هَذَا رَشَدًا   
  24. அல்லாஹ் நாடினால் தவிர! மறந்து விட்டால் உமது இறைவனை நினைவு கூர்வீராக! இதை விட நெருக்கமான காலத்தில் என் இறைவன் எனக்கு வழி காட்டக் கூடும் என்றும் கூறுவீராக!
وَلَبِثُوا فِي كَهْفِهِمْ ثَلَاثَ مِئَةٍ سِنِينَ وَازْدَادُوا تِسْعًا   
   25. அவர்கள் தங்கள் குகைகளில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள். மேலும் ஒன்பதை அதிகமாக்கினார்கள்.
قُلِ اللَّهُ أَعْلَمُ بِمَا لَبِثُوا لَهُ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَبْصِرْ بِهِ وَأَسْمِعْ مَا لَهُم مِّن دُونِهِ مِن وَلِيٍّ وَلَا يُشْرِكُ فِي حُكْمِهِ أَحَدًا   
    26. அவர்கள் தங்கியது குறித்து அல்லாஹ் நன்கறிந்தவன் என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் மறைவானது அவனுக்கே உரியது. என்னே அவனது பார்வை! என்னே அவனது கேள்வி! அவனைத் தவிர அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளனும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டு சேர்க்க மாட்டான்.
    குகைவாசிகள் குறித்து குர்ஆன் கூறும் வரலாறு இதுதான். திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்திருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் குகைவாசிகளின் வரலாறு குறித்து இவ்வசனங்களில் கூறப்பட்டதைத் தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையும் கூறவில்லை. இவ்வசனங்களில் கூறப்பட்டதை விட மேலதிகமாக யார் எதைக் கூறினாலும் அவை வெறும் கற்பனையே தவிர வேறில்லை. மேற்கண்ட வசனங்களுக்கிடையே இது குறித்து அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று கூறப்படுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலதிகமாக எந்த விளக்கமும் கூறாமல் இருந்தது ஆச்சரியப் படக்கூடிய விஷயம் அன்று.
    எனவே இவ்வசனங்களில் கூறப்பட்டவைகளை மட்டும் அடிப்படையாக வைத்துத் தான் அவர்களின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.
    ஆனால் கவலைப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் எது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள கூட எதையும் மேலதிகமாகக் கூறவில்லையோ அது பற்றி விரிவுரை என்ற பெயரில் கட்டுக்கதைகளைப் புனைந்து எழுதியுள்ளனர்.
    இவ்வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளும் வரலாறு என்ன? விரிவுரை என்ற பெயரில் இட்டுக்கட்டப் பட்டவை யாவை? என்பதை இனி காண்போம்.

தொடர்புடைய ஆக்கங்கள்

No comments:

Post a Comment