கட்டுரைகள்
அல்லாவினும் பெரியவன் எவனுமில்லை!
First Published : 22 Feb 2012 01:10:57 AM IST
Last Updated : 22 Feb 2012 02:47:31 AM IST
அண்மையில் மிலாதுநபி விழா வந்து சென்றது. உலகத்தின் பாதி மீது தன்னுடைய மார்க்கத்தின் வாயிலாக ஆட்சி செலுத்தும் நபிகள் பெருமானாரின் பிறந்தநாள் விழா அது.
உலகத்தில் பல நபிகள் தோன்றினார்கள்; மோசசிலிருந்து ஏசுவரை எண்ணற்றோரை நபிகள் என்று ஏற்கிறது திருக்குரான். ஆனால், முகம்மதுநபிதான் இறுதி நபி!
முகம்மது நபி "சல்லல்லாகூ அலைஹி வசல்லம்' என்று போற்றப்படுபவர்; சல் என்றால் நபி!
நபிகள் நாயகம் அரபு மண்ணை மட்டுமன்றி, அனைத்துலகத்தையும் மனத்தினில் கொண்டு, ஒரு புதிய வாழ்வியல் நெறியை உருவாக்கினார். அதைத் "தீன்' என்று இசுலாம் சொல்கிறது.
அந்தத் "தீனில்' ஈடுபாடு கொண்டோர் ஒரு கூட்டமாக உருவாவது இயற்கை. அந்தக் கூட்டம் தன் மனம் போன போக்கில் உருவாகிவிடாமல், அதை ஒரு சமூகமாக உருவாக்கியதில்தான், ஓர் அமைப்பைக் கட்டியமைப்பதில் நபிகள் நாயகத்துக்கு உள்ள அளப்பரிய திறனும் மேதைமையும் பளிச்சிடுகின்றன. அதை "உம்மா' என்பார் நபிகள் நாயகம்.
வழிபடு தெய்வத்தை, அதற்குரிய வடிவத்தை வழிபடு மொழியை, வழிபடுவதற்குரிய முறையை, இன்னும் சொன்னால் வழிபடு நேரத்தையும் வழிபடுவோன் முடிவு செய்து கொள்வதில்லை. இவை அத்தனையையும் இசுலாத்தில் நபிகள் பெருமானார்தான் முடிவு செய்திருக்கிறார். இதிலேதான் நபிகளின் அமைப்புக் கட்டும் திறன் ஒளிர்கிறது.
நபிகள் பெருமானார் கட்டியமைத்த "உம்மா'தான் இசுலாத்தின் வலிமைக்கு அடிப்படை. உம்மா என்பது சமூகம்தான்.
இசுலாம் முதலில் இறைமீது நம்பிக்கை கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. இரண்டாவதாக ஐந்து நேரத் தொழுகையை வலியுறுத்துகிறது.
ஐந்து வேளையும் தொழுவதற்கு "பாங்கு' சொல்லி மக்களை அழைக்கும் பாங்கு இசுலாத்துக்கே உரிய தனிச்சிறப்பு. இன்னின்ன நேரங்களில்தான் தொழுவது என்பது வரையறுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால், அவர்களைத் தொழுகைக்கு அழைப்பது இயலக் கூடியதாக இருக்கிறது.
இமாம் தொழுகையை வழிநடத்தும்போது, எப்போது குனிவது, எப்போது நிமிர்வது, எப்போது காது மடல்களைத் தொடுவது, எப்போது மண்டியிட்டு மண்ணில் நெற்றி படுமாறு வணங்குவது இவற்றை எல்லாம் எந்த வரிசையில் செய்வது என்று அனைத்துமே நபிகளால் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன.
இசுலாமியர்கள் கடற்கரையில் பெருந்திரளாகக் கூடி நின்று இரமலான் நோன்பில் தொழும்போது, பட்டாள வீரர்களின் அணிவகுப்பைப் பார்ப்பது போன்ற திகைப்பும் கவர்ச்சியும் ஏற்படுவதற்குக் காரணம் நபிகள் நாயகம் தொழும் முறையைக்கூடத் துல்லியமாக வரிசைப்படுத்தி வைத்திருப்பதுதான்!
ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் முகம்மது நபி (ஸல்) எவ்வாறு தொழுதாரோ, அவ்வாறே அதே பாணியில்தான் இன்று நம்முடைய இளையான்குடிபுதூர் அப்துல்லாவும் தொழுகிறார்.
இசுலாத்தின் அடிப்படை இறைவனுக்கு வடிவமில்லை என்பது. இறைவனுக்கு வடிவம் தேவைப்படுவோர்க்குத்தான் கோயில் தேவைப்படும். வடிவமில்லாத இறைவனை வணங்கப் பள்ளிவாசல் எதற்கு? பள்ளிவாசலில் எங்கும் சுவர்கள்தாமே இருக்கின்றன! மேற்கு நோக்கித் தன்னுடைய வீட்டிலிருந்தும் தொழ முடியுமே! பாங்கு சொல்லி இவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைப்பானேன்?
ஓடுகின்ற தொடர்வண்டியிலும், போர்க்களத்தில் ஒட்டகத்தின் மீதிருந்தும் தொழுவதை இசுலாம் அனுமதிக்கிறது. எனினும், பள்ளிவாசல் தொழுகை இன்றியமையாததாக இருப்பது ஏன்? ஒருவருக்கொருவர் அருகிருந்து தொழும்போதுதான் "உம்மா' என்னும் சமூக அமைப்பைக் கட்டி எழுப்ப முடியும்!
பள்ளிவாசல் தொழுகைபோல், "ஹஜ் யாத்திரையும்' ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது.
வசதியும், உடலும் இடங்கொடுக்கும் ஒவ்வொரு இசுலாமியனும் வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரை மேற்கொண்டு மெக்கா சென்று தொழுது வரவேண்டும்.
பக்கத்து வீட்டுக்காரனோடும், தூரத்து வீட்டுக்காரனோடும் ஒரு பள்ளிவாசலில் கூடித் தொழும்போது ஓர் "உம்மா' உருவாவதுபோல, பக்கத்து நாட்டுக்காரனோடும், தூரத்து நாட்டுக்காரனோடும், மெக்காவில் கபாஆவுக்கு முன்னால் கூடித் தொழும்போது ஓர் அகன்று பரந்த உலகளாவிய "உம்மா' உருவாகாதா?
ஒரே இறை அல்லா; இறுதி நபி முகம்மது நபி: அல்லாவால் அருளப்பட்ட திருக்குரான்! இவையே இசுலாத்தின் இரண்டாங் கடமையான ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றும் உள்ளூர்ப் பள்ளிவாசலிலும், இசுலாத்தின் ஐந்தாங் கடமையான ஹஜ் யாத்திரையின் முடிவில் நிகழ்த்தும் மெக்கா தொழுகையிலும் அனைவரையும் ஒன்று குவிக்கும் சிந்தனை மையங்கள்.
கீழக்கரையில் கட்டப்படும் சிறிய அளவினதான "உம்மா' மேலக்கரையில் மெக்காவில் பேருருக் கொள்கிறது!
நாட்டின் எல்லைக்கோடுகள் தேய்ந்து போகின்றன; மொழிகள் அற்றுப் போகின்றன; இனங்கள் காணாமல் போகின்றன!
இராக்கிலுள்ள இசுமாயிலும், சௌதிஅரேபியாவிலுள்ள சௌக்கத் அலியும், ஆப்பிரிக்காவிலுள்ள அகமதுவும் நம்முடைய காயல்பட்டினத்திலுள்ள காதர்பாட்சா ராவுத்தரும் "அல்லாகூ அக்பர், அல்லாகூ அக்பர்' விண்ணதிர முழங்குகின்றபோது, உருகிக் கரைந்து ஒருமை நிலை எய்தி விடுகின்றனர்!
ஓர் அமைப்பை அதுவும் உலகளாவிய அளவில் கட்டியமைக்கும் திறனில் நபிகள் நாயகத்துக்கு இணையாக யாருமில்லை!
அமைப்புக் கட்டுமானத்தில் எள்ளளவும் சிதைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் பெருநோக்கில், தனக்கு நியாயமாக வந்திருக்க வேண்டிய பெரும்புகழைப் புறந்தள்ளினார் பெருமானார்!
திருக்குரானின் வாசகங்கள் அல்லாவின் வாசகங்கள்! அவை தன் வழியாக வந்து இறங்கின; அல்லாவின் கைகளில் தான் ஒரு கருவி மட்டுமே என்று நபிகள் நாயகம் திண்ணமாகச் சொன்னார்.
தன்னை வணங்குவதையோ, தன்னுடைய சமாதியை வணங்குவதையோ நபிகள் கடுமையாக மறுத்தார் என்பது மட்டுமன்று; அது ஒரு "அராம்'; குற்றம் என்று மிகக் கண்டிப்போடு விலக்கி வைத்தார்.
"எல்லாப் புகழும் அல்லாவுக்கே' என்பதுதான் நபிகள் நாயகம் கற்பித்த வாழ்க்கை முறை!
"தெருவுக்குத் தெரு டிஜிட்டல் பேனர்கள்; சுவர் கொள்ளாத பதினாறு துண்டுச் சுவரொட்டிகள்; நாளிதழ்களில், வார இதழ்களில் திறந்த பக்கமெல்லாம் முழுப் பக்க விளம்பரங்கள்; நிற்பதுபோல், இருப்பதுபோல், நடப்பதுபோல், சிரிப்பதுபோல், சிந்திப்பதுபோல்' ஐயோ எத்தனை எத்தனை கோலங்கள்! ""இளையோர்களின் குலவிளக்கே; முதியோர்களின் தெரு விளக்கே'' என்று எத்தனை எத்தனை துதிகள்!
இவ்வளவுக்குமான விலை கொடுப்பதற்கு ஒருவனுக்கு வசதி இருந்தால், அன்றே அப்போதே அந்தப் புகழை அடைந்து விடலாம். இடைவிடாமல் மக்கள் கண்ணை உறுத்திக்கொண்டே இருப்பதுதான் புகழ் என்று நினைக்கிறார்கள்.
ஒரு பற்பசைக் கம்பெனி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்குக் கடைப்பிடிக்கின்ற உத்திகளை ஒரு மனிதனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக் கடைப்பிடிக்கிறான்! புகழ் என்பது சீரழிந்த சமூகத்தில் ஒரு சந்தைப் பொருளாகிவிட்டது.
ஆனால், நபிகள் நாயகம் தனக்குரிய உண்மை பெரும் புகழை அதன் போக்கிலேயே விட்டிருந்தால், அல்லாவோடு சேர்த்து அவரையும் வணக்கத்துக்குரியவராக உலகம் ஆக்கியிருக்கும். ஆனால், அவர் அதைக் கடுமையாகவும், கண்டனத்தோடும் மறுதலித்து விட்டார்.
நபிகள் நாயகம் இறந்தவுடனே முதற் கலீபாவாகப் பொறுப்பேற்கப் போகும் அபூபக்கர் அந்தத் துயரமான நிகழ்வை அறிவிக்கின்றார்.
""முகம்மது இறந்து விட்டார்; அல்லா இறப்பு அற்றவன்; அவனே வழிபாட்டுக்குரியவன்''.
பிறப்பு இறப்புக்கு உள்பட்ட எந்த மனிதனும் வணக்கத்துக்குரிய நிலையினன் அல்லன் என்னும் நபிகள் நாயகத்தின் அழுத்தமான கொள்கையைத்தான் அபூபக்கர் இங்கே பேசுகிறார்.
நபிகள் பெருமானாரின் புகழ்த் துறவு அளப்பரியது.
திருக்குரானின் ஆசிரியன் அல்லா; அல்லாவின் வாசகங்கள் தன் வழியாக இறங்கின; அவ்வளவே என்று மீண்டும் மீண்டும் அறிவித்தார் நபிகள் நாயகம்!
கோடானுகோடி மக்களை வரும் வரும் காலங்களில் ஆட்படுத்தப்போகும் ஒப்பற்ற சிந்தனைகள், "எந்த ஒன்றையும் ஓதி அறியாத' தனக்கு எப்படித் தோன்ற முடியும் என்பதே நபிகளின் நிலைப்பாடு! ஆகவே அல்லா ஓதுவித்ததைத் திரும்ப ஓதுகின்றவராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் பெருமானார்.
தன்னை ஒன்றுமே இல்லை என்று சுருக்கியும் அல்லாவே எல்லாம் என்று பெருக்கியும் வாழ்ந்த பெருமகனார் நபிகள் நாயகம்.
அல்லாவின் திருக்குரானும் அல்லாவின் தூதர் நபிகள் நாயகமும் எத்தனையோ நாடுகளில் ஊடுருவி வேரூன்றியதுண்டு. அங்கெல்லாம் மார்க்கம் தன்னைத் திருத்திக் கொண்டதில்லை. மண்தான் மார்க்கத்துக்கேற்றவாறு தன்னைத் திருத்திக் கொண்டிருக்கிறது.
இசுலாமியர்களின் கொள்வினை - கொடுப்பினைகள், திருமண உறவுகள், அதில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுகலாறுகள், திருமண முறிவுகள், அவற்றுக்கான முறைகள் ஆகிய அனைத்துமே அவர்களின் ஷரியத் சட்டத்தில் துல்லியமாக வகுக்கப்பட்டிருக்கின்றன.
பாங்கு சொல்லி அழைக்கும் முறையில்கூட ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளாக எந்த மாற்றமுமில்லை. இசுலாம் அவ்வளவு கட்டிறுக்கமானது. இவற்றையெல்லாம் கவனிக்காமல் அவர்களுடைய "ஷரியத் சட்டத்தை' ஒதுக்கிவிட்டு, ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்தை இசுலாமியர்கள் ஏற்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் ஷாபானு என்னும் முஸ்லிம் பெண்ணின் திருமண முறிவு வழக்குத் தீர்ப்பில் இந்தியாவுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்துக்குப் பரிந்துரை செய்தார். ஆனால், ராஜீவ் காந்தி காலத்தில் 1986-ல் நாடாளுமன்றம் குறுக்கிட்டு அதைத் தடுத்துவிட்டது!
"மகர்' என்னும் முறையை விடுத்து, இந்துத் திருமண முறிவுக்குப்போல், சீவனாம்சம் வழங்க வேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு நாடாளுமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது.
இந்துப் பெண்ணின் திருமண முறிவு உரிமை விடுதலை பெற்ற இந்தியாவில் நேரு காலத்தில்தான் சட்டமாக்கப்பட்டது.
ஆனால், திருமண நாளிலேயே பின்னொருநாள் திருமண முறிவு நேரிட்டால், அதற்கான வழிவகை என்ன என்று சிந்தித்தவர் நபிகள் நாயகம்! முறிவு செய்யப்பட்ட பெண்ணுக்கு "மகர்ப் பணம்' வழங்க வேண்டும் என்பது நபிகள் கண்ட தீர்வு. அந்த "மகர்' திருமணப் பொழுதிலேயே முடிவு செய்யப்படுவது இசுலாத்தின் தனித்தன்மை!
திருமணம் என்பதை ஆண் பெண்ணுக்கிடையேயான ஓர் ஒப்பந்தம் என்ற அளவிலேயே இசுலாம் பார்க்கிறது. முறிவு செய்த ஆண் "மகர்' வழங்காவிட்டால் குற்றமே ஒழிய முறிவு குற்றம் கிடையாது!
ஒவ்வொரு மக்கள் கூட்டமும் ஒவ்வொரு வகையான ஒழுகலாறுகளைக் கடைப்பிடிக்கிறது.
இசுலாமியர்கள் கடைப்பிடிக்கும் ஒழுகலாறுகள், விதிமுறைகள், சட்டங்கள் ஆகிய அனைத்தும் அல்லாவினால் சொல்லப்பட்டு நபிகளின் வழியாக இறங்கியவை.
அவற்றில் திருத்தம் செய்பவன் அல்லாவை விடப் பெரியவனாக இருக்க வேண்டும். அல்லாவினும் பெரியவன் எவனுமில்லை. ஆகவேதான் அந்த அமைப்பு எந்த விலகலையும் அனுமதிப்பதில்லை.
ஒரு வாழ்க்கைமுறை அல்லது ஒழுகலாறு நாடு கடந்து இனங்கடந்து, மொழி கடந்து சென்று உலகெங்கணும் ஆங்காங்கே வேரூன்றிய போதும், வேரூன்றிய இடங்களின் போக்குகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியாதபடி, நபிகள் பெருமானார் ஓர் உலகளாவிய "உம்மா'வைக் கட்டியமைத்ததில் அவருடைய சிந்தனைப் பாடுகள் மட்டும் புலப்படவில்லை. அதில் நபிகள் நாயகத்தின் ஈடு இணையற்ற மேதைமையும் ஒளிர்கின்றது!
""லாஇலாஹ இல்லல்லாஹ்
முகம்மதுர் ரசுலுல்லாஹ்''
கட்டுரை ஆசிரியர் திரு. பழ கருப்பையா அவர்களுக்கும் அந்தக் கட்டுரையை பிரசுதித்த தினமணி நாளிதழுக்கும் என் மனம்மார்ந்த நன்றி
2/23/2012 2:49:00 AM
2/23/2012 2:46:00 AM
2/22/2012 11:23:00 PM
2/22/2012 8:44:00 PM
2/22/2012 5:25:00 PM
2/22/2012 2:45:00 PM
2/22/2012 2:40:00 PM
2/22/2012 2:17:00 PM
2/22/2012 12:22:00 PM
2/22/2012 11:45:00 AM
2/22/2012 10:53:00 AM
2/22/2012 9:30:00 AM
2/22/2012 9:07:00 AM
2/22/2012 8:12:00 A