Friday, April 15, 2011

சட்டப்பேரவைத் தேர்தல் 2011-ன் கதாநாயகனாக தேர்தல் ஆணையம்


 நாங்க மாறிட்டோம்.. நீங்க?

First Published : 16 Apr 2011 02:10:22 AM IST


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகளவு வாக்குப்பதிவுக்குக் காரணம் இரண்டு மட்டுமே. இந்த இரண்டு காரணங்களுக்கும் வாழ்த்தப்பட வேண்டியவை ஊடகமும், தேர்தல் ஆணையமும்தான்.
தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் (4.7 கோடி பேர்) 18 வயது முதல் 29 வயதுக்குள் உள்ளவர்களின் எண்ணிக்கை 22 விழுக்காடு. இன்றைய இளைஞர்கள் அரசியலில் ஈடுபாடு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை, இவர்கள் பத்திரிகை படிக்கிறவர்களாகவோ, அல்லது தொலைக்காட்சிகளைப் பார்க்கிறவர்களாகவோ இருக்கிறார்கள் என்பதும். இணையதளத்தில் தங்கள் வலைதளங்களுக்குள் புகும் முன்பாக, கூகுள் அல்லது யாகு தரும் செய்திகளையும் போகிறபோக்கில் பார்க்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்றாலும், இவர்களுக்கு நாட்டில் நடக்கும் ஊழல்கள் பற்றிய தகவல்கள் நிச்சயம் போய்ச் சேர்ந்திருக்கிறது. தேர்தல் குறித்த செய்திகளும் போய்ச் சேர்ந்திருக்கிறது. இவர்கள் தங்கள் எதிர்ப்பை அல்லது ஆதரவைப் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற விழிப்புணர்வுக்கு ஆளானார்கள். இதற்கான முக்கிய காரணம் தகவல் தொழில்நுட்பம்தான்.
இந்த இளைஞர் கூட்டத்தில் வழக்கமாக வாக்களிக்க வருவோர் மட்டுமன்றி, பெருவாரியாக வாக்களிக்க வந்த காரணத்தால்தான் வழக்கமான 65 விழுக்காடு வாக்குப்பதிவு இந்த முறை 77.8 விழுக்காடு என உயர்ந்தது. அதற்காக இவர்கள் எதிர்க்கட்சியைத் தேர்வு செய்தார்கள் என்பதை உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இன்றைய இளைஞர்களின் மனப்போக்கு வித்தியாசமானது. கதாநாயகர்களுடன் மட்டுமல்ல, வில்லன்களுடனும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வித்தியாசமான மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். இவர்கள் ஊழல்பேர்வழிகளுக்கு எதிராகத் திரண்டார்கள் என்று ஒரேயடியாக நம்புவதற்கு இல்லை.
இரண்டாவது காரணம் தேர்தல் கமிஷன். மிகப்பெரிய பாராட்டுதலுக்கு உரியதாகவும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2011-ன் கதாநாயகனாகவும் இருப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே.
இந்தமுறை தேர்தல் காலத்தில், ஊடகம் பார்த்தோரும், பத்திரிகை படித்தோரும் பேசிக்கொண்டவை அனைத்தும்- அது வீட்டுச் சமையல்கூடமாக இருந்தாலும் டீக்கடையாக இருந்தாலும்- தேர்தல் கமிஷனின் நியாயமான, நேர்மையான நடவடிக்கைகள் பற்றித்தான். என்னதான் தமிழக முதல்வர் கருணாநிதி புலம்பித் தீர்த்தாலும், மக்கள் அதன் நடவடிக்கைகளால் மனம் மகிழ்ந்தார்கள். தங்கள் வீட்டுச்சுவர்கள் நாசப்படுத்தப்படாத ஒரே காரணத்துக்காகத் தேர்தல் கமிஷனுக்கு மதிப்பளித்தார்கள். எங்குபார்த்தாலும் ஒலிபெருக்கிகள் இல்லாத சூழலைப் பாராட்டினார்கள். வீடுதேடி வந்து பத்திரிகை வைத்துவிட்ட ஒரே காரணத்துக்காக கல்யாணத்துக்குப் போய் தலையைக் காட்டுவதுபோல, தேர்தல் கமிஷனின் நேர்மைக்காகவே வாக்குச் சாவடிக்கு வந்த பொதுமக்களும், அறிவுஜீவிகளும் அதிகம். அந்த அளவுக்கு நம்பகத்தன்மையை உருவாக்கியது தேர்தல் ஆணையம்.
இந்த முறை பூத் சிலிப்புகளைத் தேர்தல் ஆணையமே வழங்கியது. அழகாகப் படத்துடன்கூடிய ரசீதுகளை அளித்தது. வாக்குச் சாவடிக்கு வந்தவர்களில் பெரும்பாலோர், தேர்தல் ஆணையம் அளித்த இந்த பூத் சிலிப்புகளை வைத்துக்கொண்டுதான் வாக்களித்தார்கள் என்பது நாளிதழ், தொலைக்காட்சி பார்த்த எவராலும் யூகிக்க முடியும். முன்பெல்லாம் ஏதோ ஒரு அரசியல் கட்சியினர் அவர்கள் சின்னத்துடன் பூத் சிலிப் கொடுக்கும்போது அதைக் கொண்டு வருவதில் தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது வாக்காளர் பொதுமனிதராக வாக்குச்சாவடியில் வரிசையில் கூச்சமின்றி, தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் நிற்கமுடிந்தது. இதற்காகவே வோட்டுபோட வந்தவர்களும் அதிகம்.
மேலும், இந்தப் புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல் புதிய சூழலை உருவாக்கியுள்ளது. பூத் ஏஜன்டாக இருப்பவர் தனது வரையறைக்கு உள்பட்ட நான்கு அல்லது ஐந்து தெருக்களுக்கான வாக்காளர்களைப் பெயர் வைத்து அறிவதில்லை. மாறாக, புகைப்படத்தை வைத்தே அறிந்துகொள்ளும் சூழல். இதனால் யார் வாக்களிக்க வரவில்லை என்பதை அவரால் மிகத் தெளிவாகச் சொல்லிவிட முடியும். கிராமங்களில் அத்தகைய சூழலில், மறுநாள் சந்திக்கும்போது, வயற்காட்டுக்குப் போகும்போது, நீ வோட்டுபோடவே வரவில்லையே என்று எல்லார் முன்னிலையிலும் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்கிற கூச்சமும்;எல்லாரும் போய்ப் போட்டுவரும்போது நாம் மட்டும் சும்மா இருப்பதா என்கிற பெருந்திரள் மனநிலையையும் (மாஸ் சைக்காலஜி) உருவாக்கியதில் தேர்தல் ஆணையம் மிகப்பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் எந்தவொரு கட்சியாலும் தங்கள் பிரசாரத்துக்கு கூட்டத்தைக்கூட கூட்ட முடியவில்லை என்கிறபோது, இந்த அதிகபடியான வாக்காளர்கள் அரசியல் ஈடுபாட்டால் வாக்களிக்க வரவில்லை என்பது நிச்சயம். அரசியல்வாதிகள் தங்கள் பொய்முகங்கள் கிழிந்து அம்பலப்பட்டுக் கிடக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் பேச்சைக் கேட்கவே பணம் கொடுத்து ஆள்திரட்டும் நிலை, கட்சிக்காரர்களுக்கு ஏற்பட்டது.
ஆனால், இந்த கூடுதல் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்திருந்தபோதிலும், ஊழலுக்கு எதிராக அல்லது விலைவாசி உயர்வுக்கு எதிராக என எதுவாக இருந்தாலும், தங்கள் கடமையாற்றும் உணர்வால் உந்தப்பட்டு வந்தவர்கள் இவர்கள், இந்த உணர்வை ஊட்டியவர்கள் தேர்தல் ஆணையமும், ஊடகங்களுமே.
மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரியாகவே ஆற்றியிருக்கிறார்கள். இதே கடமை உணர்வு அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களும் பொறுப்புணர்வுடன் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனையும், தேச நலனையும், வருங்காலச் சந்ததியினரின் (தங்களுடைய வருங்காலச் சந்ததியினரை அல்ல) நலனையும் கருத்தில்கொண்டு செயலாற்றினால், இங்கே ஒரு நல்லரசு அமையும். இந்தியா வல்லரசாக உலக அரங்கில் மிளிரும்.
நன்றி
இடுகையிட்டது  

No comments:

Post a Comment