Tuesday, April 12, 2011

அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் !


தோழர்கள் - 25printEmail
வரலாறு தோழர்கள்
திங்கள், 07 பிப்ரவரி 2011 23:56
அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித்

أبو سفيان بن الحارث

அன்றைய மதீனாவின் பொட்டல் நிலப்பகுதியில் அவர் குழி தோண்டிக் கொண்டிருந்தார். வியர்வை வழிந்தோட வேலை நடந்துகொண்டிருந்தது. அந்தக் குழியின் நீளம்அகலம்,ஆழத்தையெல்லாம் பார்க்கும்போது மரக்கன்று நடும் உத்தேசமெல்லாம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அது பிரேதம் அடக்கம் செய்யப்படத்தக்கக் குழி என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது. தவிர நபியவர்களின் பள்ளிவாசலிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த அந்தப் பொட்டல்இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் ஜன்னதுல்பஃகீ'.அவரையும் அந்தக் குழியையும் கண்டவர்களுக்கு ஆச்சரியம்! அவரது வீட்டில் அன்று யாரும் இறந்து போனதாகவும் தெரியவில்லை.
பிறகு எதற்கு அவர் தோண்டிக் கொண்டிருக்கிறார்?
அன்று அவரது உள்ளுணர்வு ஏதோ சொல்லியிருந்தது. அதன்மீது திடமான நம்பிக்கை அவருக்கு. வந்து செயலில் இறங்கிவிட்டார். அவர் அதை முடித்து வீடு திரும்புவதற்குள் பழைய செய்திகளை வாசித்துவிட்டு வந்துவிடுவோம்.
oOo
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபின் குடும்பம் பெரியது. பதின்மூன்று மகன்கள்ஆறு மகள்கள் என்று மிகப் பெரியது. ஹம்ஸாஅப்பாஸ்அபூதாலிப்,அபூலஹப் போன்ற பிரபலங்கள்நபியவர்களின் தந்தை அப்துல்லாஹ்வின் சகோதரர்களென நம்மில் பலருக்கும் அறிமுகமானவர்கள். அந்தச் சகோதரர்களில் மற்றொருவர் இருந்தார்;
அல்ஹாரித்!
அப்துல்லாஹ்வுக்கு முஹம்மது பிறந்த அதேகாலகட்டத்தில் அல்ஹாரிதுக்கும் ஒரு மகன் பிறந்தார். அவர் பெயர் அபூஸுஃப்யான்.
அபூஸுஃப்யான்நபியவர்களின் வரலாற்றில் மிகவும் பிரபலமான பெயர் அபூஸுஃப்யான். அன்னை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹாமுஆவியா ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரின் தகப்பனாரும் பத்ருப் போருக்குக் காரணமாய் அமைந்தவரும் இதரப் போர்களில் முஸ்லிம்களுக்கு எதிராய்ப் படைதிரட்டி வந்தவருமான அபூஸுஃப்யான் வேறு. அவர் அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்ப்.
இந்த அபூஸுஃப்யான் நபியவர்களின் பெரியப்பாவான அல்ஹாரிதின் மகன் – அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித். செவிலித் தாய் ஹலீமா அஸ்-ஸஅதிய்யாவிடம் நபியவர்களும் இந்த அபூஸுஃப்யானும் பாலருந்தி வளர்ந்தவர்கள். அவ்வகையில் இருவருக்கும் பால்குடிச் சகோதர உறவும் ஏற்பட்டிருந்தது. தவிர அபூஸுஃப்யானின் தோற்றமும் நபியவர்களின் தோற்றத்தை ஒட்டியிருந்தது என்பது ஆச்சரியமான உபதகவல்.
ஒரே குடும்பம்சமவயதுசகோதர வாஞ்சை என்று நபியவர்களுக்கும் அபூஸுஃப்யானுக்கும் இயற்கையாய் நல்லதொரு நட்பு ஏற்பட்டுவிட்டது. சேர்ந்து உண்டுவிளையாடி வளர்ந்து கொண்டிருந்தார்கள். வாலிப வயதை எட்டியதும் தொழில்திருமணம்குடும்பம் என்று அமைந்து போனாலும் நட்பும் பாசமும் மட்டும் எப்பொழுதும்போல் நீடித்துக் கொண்டிருந்தது.
நாற்பதாண்டுகள் கழிந்திருக்கும்.
ஒருநாள் நபியவர்கள் ஹிரா குகையிலிருந்து ஓடோடி இறங்கிவந்து நடுங்கிக்கொண்டே அந்த அற்புதச் செய்தியைச் சொன்னார்கள். எளிதில் நம்பிவிட முடியாத கடினமான செய்தி. முதலில் அதை அவர்கள் அறிவித்தது தம் மனைவியிடம். பதினைந்து ஆண்டுகால இல்வாழ்க்கையில் தம் கணவரை உள்ளும் புறமும் நன்கு அறிந்து வைத்திருந்த அவர்களின் மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவுக்கு அதில் எத்தகைய சந்தேகமும் தோன்றவில்லை. போர்த்திவிட்டுஇதமாய் அணைத்து ஆறுதல் கூறிஉறுதியுடன் அப்படியே அச்செய்தியை ஏற்றுக் கொண்டார்கள். அடுத்து அவர்களின் மகள்கள்அவர்களுடன் வளர்ந்து வந்த ஸைத்,பெரியப்பா மகன் அலீ என்று மிக நெருக்கமானவர்கள் சங்கடமே இன்றி அத்தகைய அசாதாரண நிகழ்வில் நம்பிக்கை கொண்டதற்கு அடிப்படைக் காரணங்கள் பல இருந்தன.
குரைஷியரின் குல கௌரவங்களான மதுமாதுவன்மனம்கொடுஞ்சினம் போன்றவை எதுவுமின்றி,  அன்றைய அரபியரிடம் அருகிப் போயிருந்த நற்பண்புகள் அனைத்தும் நபியவர்களிடம் குடிகொண்டிருந்தன. இதையெல்லாம் அத்தனை ஆண்டுகாலம் அருகிலிருந்து பார்த்த குடும்பத்தினர்பொய்பேசிஅறியாத தம் குடும்பத் தலைவர் சொன்ன புதுச்செய்தியை அப்படியே ஏற்றுக் கொண்டனர். எனில் நபியவர்களுடன் உண்டு,உறங்கிவிளையாடி வளர்ந்த அபூஸுஃப்யானுக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டுமல்லவாமுதல் ஆளாய் அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஆதரவாய் நின்றிருக்க வேண்டுமல்லவாஅங்குதான் வினோதம் நிகழ்ந்தது!. அப்பட்டமாய் நிராகரித்தார் அபூஸுஃப்யான். இத்தனைக்கும் அபூஸுஃப்யானுடன் பிறந்த மூன்று சகோதரர்கள் - நவ்ஃபல்ரபீஆஅப்துல்லாஹ் ஆகிய மூவரும் 'புதுச்செய்தி'யை ஏற்றுக் கொண்டு முஸ்லிமாகியிருந்தனர்.
என்னமோ சொல்கிறார்எனக்குப் பிடிபடவில்லைஅவராயிற்றுஅவர் மதமாயிற்று” என்று ஒதுங்கிப் போயிருந்தாலும் பரவாயில்லை. எதிரியானார்! பரம எதிரியானார். அத்துணை நெருங்கிய உறவுநட்புபாசம் அனைத்தையும் நொடியில் உதறித் தள்ளிவிட்டு மிகவும் மூர்க்கமான முறையில் களமிறங்கினார்.
அபூஸுஃப்யான், குரைஷி குலத்தின் திறமையான வீரர்களில் ஒருவர். கவிதை புனைவதில் எக்கச்சக்கப் புலமை. பிரமாதமான கவிஞர். ஆனால் இந்தத் திறனையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு, “முஹம்மதை ஒழித்துக் கட்டுகிறேன் பார்” என்று அவர் தொடைதட்டி எதிர்த்து நின்றது பெருஞ்சோகம். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் என்னென்ன தீங்குகள் விளைவிக்க முடியுமோ அத்தனைக்கும் என் திறன் சமர்ப்பணம் என்று குரைஷிகளிடம் அறிவித்துவிட்டார். எவ்விதத் தடுமாற்றமும் இல்லாத தெளிவான குறிக்கோள்.
தொடங்கியது அவர் பணி. முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் துவங்கத் தூண்டிவிடுவதாகட்டும்அந்தப் போர்களில் வாளேந்தி நிற்பதாகட்டும் அதிலெல்லாம் இந்த அபூஸுஃப்யானின் பங்கு பெரும்பங்கு. மிச்சப் பொழுதில் நபியவர்களையும் இஸ்லாத்தையும் தூற்றி மிகவும் கீழ்த்தரமான வசைப்பாடல்கள் அவரிடமிருந்து உருவாக ஆரம்பித்தன. கவிதைக்கும் பாடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தினர் அந்த அரபியர். அவர்களிடையே இத்தகைய பாடல்கள் என்ன செய்யும்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாக்கூச வைக்கும் அப்பாடல்களின் கருநபியவர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு சொல்லி மாளாது. எதிரிகளின் வாளினால் பட்ட புண்களாவது ஆறிப்போகும்ஆனால் அவர்களது நாவினால் ஏற்பட்ட காயம்அது ஆறாத வடுவானது.
இப்படியாக ஓர் ஆண்டு இரண்டாண்டு என்றில்லாமல் இருபது ஆண்டுகள் விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார் அபூஸுஃப்யான். அதன் பிறகே நிகழ்ந்தது அது.
அந்த மாற்றம்!
oOo
முஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தபின் பல போர்கள்பற்பல சச்சரவுகள். மக்காவிலிருந்து மதீனாவரை விடாமல் தொடர்ந்தது குரைஷிகளின் தொல்லைகள். ஒவ்வொன்றும் அடக்கப்பட்டு,முறியடிக்கப்பட்டு உச்சக்கட்டமாய் ஹி்ஜ்ரீ எட்டாம் ஆண்டு நிகழ்ந்தது மக்கா படையெடுப்பு.
முஸ்லிம்களின் பெரும்படை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமையில் மக்கா நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தி உளவறிக்கையாய் மக்காவை வந்தடைந்தது. இனி எந்த எதிர்ப்பிற்கும் வழியே இல்லைஆட்டம் முடிந்தது என்ற நிலையிலிருந்தனர் குரைஷியர். மக்காவின் ஒவ்வொரு வீட்டையும் பதட்டம் சூழ்ந்திருந்தது!
அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் தம் வீட்டில் அமர்ந்திருந்தார். முற்பகல் செய்ததற்குப் பிற்பகல் என ஒன்று வந்துசேரும் என்று அப்பொழுதெல்லாம் அவர் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இப்பொழுதுதான் யோசித்தார்.இதோ இன்னும் சில நாட்களில் முஹம்மது வந்து மக்காவைக் கைப்பற்றப் போகிறார். உலகின் எந்த மூலையில் நான் ஓடி ஒளிவேன்எங்கு இடமிருக்கிறது?’ நினைத்துப் பார்க்கவே பகீரென்றிருந்தது!
எங்குப் போவேன்யாருடன் போவேன்எந்த மக்கள் மத்தியில் சென்று வாழ்வேன்?’ யோசிக்க யோசிக்கப் பதட்டம் கூடியது. தம் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்தார். முஹம்மது விரைவில் வரப் போகிறார். தயாராகுங்கள். நாம் மக்காவைவிட்டுக் கிளம்ப வேண்டும். முஸ்லிம்கள் இங்கு வந்தடையும்போது நான் உயிருடன் இருப்பதைவிட இறந்துவிடுவது மேல்"
அவரைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள் அவர்கள். அரபியர்கள், அரபியர் அல்லாதவர்கள் என்று எல்லோரும் முஹம்மதை நம்பிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்களேஅதை இன்னமும் நீங்கள் உணரவில்லையாநீங்கள் அவர்மீது கொண்டுள்ள விரோதத்தைக் கைவிடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையை உணருங்கள். இதுதான் சரியான தருணம். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்"
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் அபூஸுஃப்யான்.
இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப காலத்திலேயே நீங்கள்தாம் முதல் ஆளாய் அவர்களை ஏற்றுக்கொண்டு ஆதரவாய்ச் செயல்பட்டிருக்க வேண்டும்..." என்று தங்களால் இயன்ற அளவு அவரின் குடும்பமே எடுத்துச் சொல்ல ஆரம்பித்தது. இருபதாண்டுகால நிகழ்வுகள் மனக்கண்ணில் மின்னலாய் ஓடஅன்று காணத் தவறிய உண்மையின் ஒளி இன்று பளிச்சென்று தென்பட ஆரம்பித்ததுவைகறை வெளிச்சமாய்ப் பரவியது.
மத்கூர்!
உரத்து அழைத்தார் அபூஸுஃப்யான். மத்கூர்அவரின் பணியாள். வந்து நின்றவனிடம், ”ஒட்டகங்களும் ஒரு குதிரையும் சேணம் பூட்டிப் பயணத்திற்குத் தயார் செய்!". அவை உடனே தயாராகதம் மகன் ஜாஃபரை அழைத்துக் கொண்டு குதிரையில் ஏறிக்கொண்டுப் படுவேகமாகக் கிளம்பினார்.
மதீனாவிலிருந்து மக்கா வரும் வழியில் அல்-அப்வா என்றோர்  ஊர் உள்ளது. அங்குதான் நபியவர்களுடன் முஸ்லிம்கள் முகாமிட்டிருந்தார்கள். அபூஸுஃப்யானையும் ஜாஃபரையும் சுமந்துகொண்டு அந்த ஊருக்கு விரைந்தது அப்புரவி.
அல்-அப்வாவை நெருங்க நெருங்க அவருக்கு அந்தப் பயம் தோன்றியது. நபியவர்களைச் சந்தித்துப் பேசுவதற்குமுன் யாரேனும் தம்மை அடையாளம் கண்டு கொலை செய்துவிட்டால்அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. முஸ்லிம்களிடம் தாம் சம்பாதித்து வைத்திருந்த வெறுப்பை அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதைப்போல் இறைத்தூதருக்காக அந்தத் தோழர்கள் என்னென்ன தியாகங்கள் செய்வார்கள் என்பதும் நாடறிந்த செய்தி. ம்ஹும்! நபியவர்கள் எனது மாற்றத்தை அறியும்முன் நான் இறந்து போகக்கூடாது’. கவலை அதிகரித்தது.
உடனே குதிரையை விட்டு இறங்கிதன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார் அபூஸுஃப்யான். ஏறக்குறைய ஒரு மைல் தூரம் இருக்கும்நடந்து சென்று கொண்டேயிருக்க எதிரே முஸ்லிம்களின் படை அணி அணியாக மக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஓரமாக ஒதுங்கி அவர்களது கவனத்தைக் கவராமல் நின்றுகொள்ளதோழர்கள் யாரும் தம்மைக் கண்டுவிடக் கூடாதே என்று படபடத்தது மனம். படைகள் நகர்ந்து கொண்டேயிருக்கஅப்பொழுது முஹம்மது நபியும்அவர்களின் தோழர்களுமாய் ஓர் அணி வந்துகொண்டிருந்த்தைப் பார்த்துவிட்டார் அபூஸுஃப்யான்.
அதோ அவர்! எளிமையாய் கம்பீரத்தின் நகல்!
வேகமாய் நகர்ந்து பாதையின் அருகே சென்று நின்றுகொள்ளநபியவர்கள் வெகு அருகே நெருங்கியதும்,விரைந்து சென்று நேருக்கு நேர் அவர்கள் தம்மைக் காணும் வகையில் தம் தோற்றத்தை வெளிப்படுத்தினார் அபூஸுஃப்யான். பார்த்துவிட்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். யாரென்று தெரிந்ததுஅவர் அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் என்பது தெளிவாய்த் தெரிந்தது. ஒரு சொல் பேசவில்லை. உடனே மறுபுறம் திரும்பிக்கொண்டது அவர்களது முகம்.
ஏன் திரும்பிக் கொண்டார்கள்ஒருவேளை நம்மைத் தெரியவில்லையோ?’
உடனே விரைந்து மறுபுறம் சென்றார் அபூஸுஃப்யான். நபியவர்களின் எதிரே நின்றார். மீண்டும் வேறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் நபியவர்கள். இறைத்தூதர் தம் முகம் காண மறுக்கிறார் என்பது நிச்சயமாய்ப் புரிந்தது அவருக்கு. இதென்ன இப்படியொரு வரவேற்பு?’ எப்படியாவது நபியவர்கள் தம் முகத்தைப் பார்த்தால் போதும்பேசிவிடலாம் என்று அபூஸுஃப்யான் மீண்டும் மீண்டும் முயலம்ஹும்,நபியவர்கள் முகம் கொடுப்பதாய் இல்லை. இது அவர் சற்றும் எதிர்பாராதது. தம்மைப் பார்த்ததும் தாம் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளப் போவதை அறிந்ததும் முஹம்மது நபி மனமகிழ்ந்து போவார்கள்;தோழர்களெல்லாம் ஆனந்தமடைவார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார் அவர். ஆனால் இதுஇந்தப் புறக்கணிப்புதாங்கமுடியவில்லை அவரால்.
போர்க்களத்தில் வாளேந்தி கோரத் தாண்டவம் புரிந்த எதிரிகளையெல்லாம் சடுதியில் மன்னித்துவிட்ட நபியவர்கள் இங்கு இவரிடம் இப்படி நடந்து கொண்டதற்கு அழுத்தமான காரணமிருந்தது. ஒருவரது நற்பெயரைகுணநலனைமாண்பைகெடுத்தழிப்பது என்பது உயிர்க் கொலையைவிடக் கொடூரமானது. சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருப்பவனாய் இருந்தாலும் மானம்தான் மனிதனுக்கு முக்கியம் என்றிருக்கும்போது அத்தகைய தீச்செயல் இறைவனின் தூதர்உத்தமத் திருநபிமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்மேல் நிகழ்த்தப்படுமானால் அது குற்றத்தின் உச்சக்கட்டமல்லவாஇறைத் தூதரை நிந்திப்பதென்பது இறைநிந்தனை. எக்காலமாயினும் சரிஅது யாராக இருந்தாலும் சரிஅத்தகு தீங்கு மன்னிப்பிற்கு அப்பாற்பட்ட பாவம்.
இதைத் தோழர்கள் கவனித்துவிட்டனர். நபியவர்களே அவரிடம் பேசவில்லை என்றாகிவிட்டதால் யாரும் அபூஸுஃப்யானின் முகத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. என்ன ஏது என்று ஒரு வார்த்தை கேட்கவேண்டுமே?அனைவரும் திரும்பிக் கொண்டனர். அபூபக்ரு (ரலி) மிகக் கடுமையான முகத்துடன் திரும்பிக் கொண்டார். அடுத்து உமரை நெருங்கிகெஞ்சலாய் அன்பாய்ஆதரவாய் ஏதாவது சொல்லுங்களேன்’ என்று பார்த்தால் அபூபக்ருவைவிடக் கடினமாய் நடந்து கொண்டார் அவர். மேலும் தம் அருகிலிருந்து அன்ஸாரித் தோழர் ஒருவரை அழைத்துஉமர் அவரைப் பற்றி ஏதோ சொல்லபுதுத்தொல்லை உருவானது. அந்தத் தோழர் அபூஸுஃப்யானை நோக்கிக் கடுஞ்சொல் கொண்டு கோபமாய்ப் பேச ஆரம்பித்துவிட்டார்.
அல்லாஹ்வின் விரோதியே! நீதானே நபியவர்களுக்கும் அவரின் தோழர்களுக்கும் விடாது தீங்கிழைத்ததுநீ இழைத்த தீங்கும் குற்றங்களும் இந்தப் பூமி முழுவதையும் நிரப்பும் அளவிற்கான கொடுமைகளாயிற்றே..." என்று தொடர்ந்து கொண்டேபோகதோழர்கள் அனைவரும் அதை அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர். தம்மை அவர் வசைபாடுவது மற்றத் தோழர்களுக்கு திருப்தியளிக்கிறதோ என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார் அபூஸுஃப்யான்.
மிகவும் சங்கடமான அந்தச் சூழ்நிலையில் தம் சிற்றப்பா அப்பாஸைப் பார்த்துவிட்டார் அபூஸுஃப்யான்.அப்பாடா’ என்று அவரிடம் விரைந்து சென்று, “சிற்றப்பா! எனக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் இடையிலுள்ள உறவுமுறைஎன் மக்கள் மத்தியில் எனக்குள்ள செல்வாக்கு இதையெல்லாம் கருத்தில்கொண்டு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்பதை அறிந்தால் நபியவர்கள் மகிழ்வடைவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் என்னிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நீங்களே பார்த்தீர்கள். தயவுசெய்து எனக்காக அவர்களிடம் நீங்கள் சென்று பேசுங்களேன்மனமிரங்குவார்கள் என்று நம்புகிறேன்"
முடியாது"
தெளிவாகச் சொன்னார் அப்பாஸ். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உன்னிடமிருந்து முகத்தை எப்படித் திருப்பிக் கொண்டதைப் பார்த்தேன் அபூஸுஃப்யான். அவரும் உன்னைப்போல் என் சகோதரர் மகன்தான். ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதர். நான் அவர்கள்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இப்பொழுது நான் சென்று பேசுவது முறையல்ல"
நீங்களே முடியாது என்று சொல்லிவிட்டால் வேறு யாரிடம் சென்று நான் முறையிட முடியும்?” அழுதார் அபூஸுஃப்யான்.
நான் ஏதும் செய்வதற்கில்லை“ என்று மட்டும் பதில் வந்தது.
துக்கம் பொங்கி நம்பிக்கை குறைந்தது. அப்பொழுது தோழர்கள் மத்தியில் அலீ (ரலி) தென்பட்டார். இதோ என் மற்றொரு சிற்றப்பாவின் மகன்’ என்று அடுத்து அவரிடம் விரைந்தார் அபூஸுஃப்யான். ஆனால் அலீயிடமிருந்தும் ஏறக்குறைய அதே பதில்தான் கிடைத்தது. அலீயும் கைவிரித்ததும் என்ன செய்வதென்று அவருக்குத் தோன்றவில்லை.
மீண்டும் அப்பாஸிடம் திரும்பி வந்து, “சிற்றப்பா! நபியவர்களிடம் எனக்காகப் பரிந்துரைக்க இயலாவிட்டால் போகட்டும்என்னை எதிரியாய்த் தூற்றிபிறரையும் அதற்குத் தூண்டிக் கொண்டிருக்கிறார் ஒருவர்;தாங்கமுடியவில்லை. தாங்கள் வந்து அவரிடமாவது எனக்காகப் பேச வேண்டும்"
யார் அவர்எப்படி இருப்பார்?” என்று கேட்டார் அப்பாஸ். அங்க அடையாளங்களை விவரித்தார் அபூஸுஃப்யான்.
ஓ! அவர் நுஐமான் இப்னுல் ஹாரித் அந்-நஜ்ஜாரி” என்றவர் அவரைக் கூப்பிட்டனுப்பினார்.
நுஐமான்! இந்த அபூஸுஃப்யான் அல்லாஹ்வின் தூதரின் பெரியப்பா மகன். என் சகோதரனின் மகன். இப்பொழுது நபியவர்கள் இவர்மேல் அளவிலாக் கோபத்தில் இருக்கலாம். ஆனால் விரைவில் ஒருநாள் கருணை கொண்டு மனமிரங்கத்தான் போகிறார்கள். எனவே இப்பொழுது இவரைத் தொந்தரவு புரியாமல் விட்டுவிடுங்கள்" தன்மையாய் எடுத்துக் கூறநுஐமான் ஏற்றுக் கொண்டார். சரிஇனி என்னால் இவருக்குத் தொல்லை இருக்காது” என்று சத்தியம் செய்து தந்துவிட்டுச் சென்றுவிட்டார்.
படை மக்கா நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அல்-ஜஹ்ஃபா என்றோர் இடத்தில் அடுத்து முகாமிட்டார்கள் அனைவரும். நபியவர்களுக்குக் கூடாரம் அமைக்கப்பட்டது. அது எந்தக் கூடாரம் என்று தெரிந்துகொண்டு,அதன் வெளியே அமர்ந்து கொண்டார் அபூஸுஃப்யான். தம் மகன் ஜாஃபரைத் தமக்கும் பின்னால் நிறுத்திக் கொண்டார். கூடாரத்தைவிட்டு வெளியே வந்த நபியவர்கள் அங்கு அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு,இப்பொழுதும் ஒன்று சொல்லவில்லைமுகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்சென்று விட்டார்கள்.
அதற்கடுத்து ஒவ்வொருமுறை படை முகாமிடும் போதெல்லாம் நபியவர்களது கூடாரத்தின் வாசலில் தம் மகனுடன் சென்று அமர்ந்து கொள்ள ஆரம்பித்தார் அபூஸுஃப்யான். நபியவர்களும் ஒவ்வொருமுறையும் அவரிடம் பேசாமல் முகம் திரும்பிக் கொண்டிருந்தார்கள். எப்படியும் அவர்கள் மனமிரங்கி மன்னித்துவிடமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த அபூஸுஃப்யானுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.
அபூஸுஃப்யானைப் போலவே அப்துல்லாஹ் இப்னு அபூ உமைய்யா என்பவரும் நபியவர்களைச் சந்திக்க வந்திருந்தார். இவரும் நபியவர்களுக்கு நெருங்கிய உறவினர்தான். இவரின் தாயார் நபியவர்களுக்கு அத்தை உறவு. இவரும் இறைத்தூதரைப் பற்றி சகட்டுமேனிக்குப் பழிதூற்றித் திரிந்து கொண்டிருந்தவர். இவர்கள் இருவரையுமே சந்தித்துப்பேசாமல் நபியவர்கள் தவிர்த்துக் கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா தம் கணவரிடம் பேசினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் இருவரும் உங்களின் இரத்த சொந்தங்களாயிற்றே! மனமிரங்கக் கூடாதா?”
தேவையில்லை! என் பெரியப்பா மகன் எனக்கு ஏகப்பட்ட அவதூறு புரிந்தான். என் அத்தை மகன் என்னை மக்காவில் என்னவெல்லாம் பேசினான் என்றுதான் உனக்குத் தெரியுமே"
நபியவர்கள் இவ்விதம் கூறியது அபூஸுஃப்யானுக்குத் தெரியவந்தது. அவ்வளவுதானாவேறு வழியில்லையா?’ மனம் உடைந்துபோய் தம் மனைவியிடம் வந்து, “ஒன்று நபியவர்கள் என்னிடம் மனமிரங்க வேண்டும். இல்லையாஅல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன்என் மகனை அழைத்துக் கொண்டு நடந்தே பாலைவனத்தை அடைந்துதாகத்தினாலும் பசியினாலும் மாய்ந்து மடியப் போகிறேன்"
அபூஸுஃப்யான் இப்படிக் கூறினாராம் என்று இந்தச் செய்தி நபியவர்களை எட்டியது. அதிலுள்ள தீவிரம்,உண்மையை ஏற்றுக் கொண்டு இலேசாக இளகியது அவர்களது மனம். கூடாரத்தின் வெளியே காத்திருந்த அபூஸுஃப்யானை அடுத்தமுறை நபியவர்கள் பார்த்தபோது முகத்தில் முந்தைய கடுமை இல்லை. அப்படியே இலேசாய் ஒரு புன்னகை பூத்தால் போதுமே’ என்று அபூஸுஃப்யான் எதிர்பார்க்கஅதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை.
இறுதியில் அலீ பின் அபுதாலிப் (ரலி)அபூஸுஃப்யானிடம் ஓர் ஆலோசனைக் கூறினார். நபி யூஸுஃபை அடையாளம் கண்டுகொண்ட அவரின் சகோதரர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும்நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மையுடையவராகத் தேர்வு செய்திருக்கின்றான்’ என்று. அதையே நீங்களும் நபியவர்களிடம் நேருக்கு நேராய்ச் சொல்லுங்கள். அது இறைவசனமல்லவாஅதனால் அல்லாஹ்வின் தூதர் அதற்குச் சிறப்பான பதிலைத் தவிர வேறு எதுவும் சொல்லவே மாட்டார்கள்"
அது சிறப்பான ஆலோசனை. அபூஸுஃப்யானுக்குப் பிடித்துப்போனது. அடுத்தமுறை நபியவர்களிடம் அந்த இறை வசனத்தை அப்படியே உரைத்தார் அபூஸுஃப்யான். தம் சகோதரர்கள் தம்மிடம் அப்படிக் கூறியதும் நபி யூஸுஃப் அழகிய பதிலொன்று சொல்லியிருந்தார். குர்ஆனில் பதிவாகியுள்ள அதே பதிலை நபியவர்கள் கூறினார்கள். இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்”.
பேரானந்தம் அடைந்தார் அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு!
முஸ்லிம்களின் படை மக்காவினுள் நுழைந்தது. வரலாற்றின் மாபெரும் வெற்றி நிகழ்வு அது. அந்தப் படையினருடன் அபூஸுஃப்யானும் இணைந்து கொண்டு பின்தொடர்ந்தார் - முஸ்லிம்களுடன் முஸ்லிமாய். நபியவர்கள் கஅபாவில் நுழையகூடவே இவரும். அன்றிலிருந்து அப்பொழுதிலிருந்து நபியவர்களின் ஒவ்வொரு அடியையும் அப்படியே பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தது அவரது வாழ்க்கை.
oOo
மக்காவின் தென்கிழக்கே சில மைல்கள் தொலைவில் ஹவாஸின் எனும் கோத்திரத்தினர் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குச் செய்தி வந்து சேர்ந்தது - முஸ்லிம்கள் மக்காவைக் கைப்பற்றிவிட்டனர். கஅபா ஆலயத்தில் இருந்த சிலைகளெல்லாம் அப்புறப்படுத்தப் பட்டன"
அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது அச்செய்தி. அடுத்ததாய் முஸ்லிம்கள் இங்கும் வந்துவிடப் போகிறார்கள் என்ற அச்சம். அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்நாமே முந்திச் சென்று அவர்களை எதிர்கொண்டு முறியடித்துவிட்ட்டால்அதுதான் சரி என்று முடிவு செய்தான் மாலிக் பின் அவ்ஃப் அந்-நத்ரீ என்பவன். உடனே தகீஃப் கோத்திரத்தினருடன் பேசி அவர்களை இணைத்துக் கொண்டான். அத்துடன் நஸ்ரு,ஜுஷாம்பனூ ஸஅத் பின் பக்ரு எனும் கோத்திரத்தினரும் சேர்ந்து கொண்டனர். அவ்ஸாபனூ ஹிலால்பனூ அம்ரு இப்னு ஆமிர்அவ்ஃப் இப்னு ஆமிர் ஆகிய கோத்திரத்திலிருந்து சிலர் நாங்களும் வருகிறோம்’ என்று கைகோத்துக் கொண்டனர். மாலிக் பின் அவ்ஃப் தலைமையில் பெரும் படை திரண்டது. படைக்குப் போர் வீரர்கள்போர்த் தளவாடங்கள் என்பதோடுபெண்கள்குழந்தைகள்கால்நடைகள் என்று தங்கள் மனைவி,மக்கள்சொத்துகளுடன் களமிறங்கினார்கள் அவர்கள். அப்படிப் போருக்குச் செல்வதால் ஒவ்வொரு வீரனும் தோற்கவே கூடாது என்று வெறியுடன் போரிடுவான் என்பது அவர்களது திட்டம்.
மக்காவை வெற்றிகொண்டு பதினைந்து நாள்கள்கூட ஆகியிருக்கவில்லை. அதற்குள் இத்தகைய போர் மேகம். முஸ்லிம்கள் தரப்பும் போருக்குத் தயாரானது. அவர்களும் முன்னர் எப்பொழுதும் இல்லாத அளவிற்குப் பெரும் படையாய்த் திரண்டனர். மக்காவில் புதிதாய் இஸ்லாத்தில் இணைந்த குரைஷியர்கள் இரண்டாயிரம் பேர் படையில் கலந்துகொள்ளபன்னிரண்டாயிரம் வீரர்களின் அணிவகுப்பு எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டது.
மக்கா நகருக்கும் தாயிஃப் நகருக்கும் இடையே ஹுனைன் என்றொரு பள்ளத்தாக்கு. ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் பத்தாம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை மங்கி இருள் பரவும் இரவில் அங்கு வந்தடைந்தது முஸ்லிம்களின் படை.
இருள் விலகா அதிகாலை நேரம். வாகாய்ப் பதுங்கிக் காத்திருந்தனர் ஹவாஸின் படையினர். முஸ்லிம்கள் சற்றும் எதிர்பாரா தருணத்தில் தொடங்கியது எதரிகளின் தாக்குதல். ஒரே சீராய் ஒரே அணியாய் வந்து இறங்கி அம்பு மழை பொழியவாள்கள் பலரை வெட்டபலத்த சேதம்களேபரம்குழப்பம். எதிரிகளின் கை ஓங்கிக் கொண்டே வந்தது. முஸ்லிம் படையினரில் பல போர் வீரர்கள் சிதைந்து ஓடிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது கோவேறு கழுதையான அஷ்ஷஹபாவின்மீது வெகுதிடமாய் அமர்ந்துகொண்டுமலைபோன்ற உறுதியுடன் வாளை ஏந்திக்கொண்டு தம்மையும் சுற்றியுள்ளவர்களையும் தற்காத்துக் கொண்டு வேங்கை போல் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் - போர் முழக்கத்தோடு:
"அல்லாஹ்வின் தூதன் நான்; பொய்யில்லை! - நான்
அப்துல் முத்தலிபின் (பேரப்)பிள்ளை!
"
இதுநாள்வரை முஸ்லிம்களின் எதிரணியில் இஸ்லாத்தையும் நபியவர்களையும் எதிர்த்து நின்று கொண்டிருந்தாரே அபூஸுஃப்யான் இப்பொழுது முதன்முறையாய் நபியவர்களின் தலைமையில் இஸ்லாத்திற்காகக் களத்தில் நின்று கொண்டிருந்தார். பிரம்மாண்டமாய்த் திரண்டிருந்த எதிரிப்படைஅவர்கள் தாக்குதலின் கொடூரம் இதையெல்லாம் கண்டு மனதில் அச்சம்திகைப்பு என்பதெல்லாம் ஏற்படுவதற்குப் பதிலாய்ச் சரேலென அவரை உற்சாகம் தொற்றியது.
அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இறைத்தூதருக்கு எதிராய் நான் இதுநாள்வரை புரிந்த செயல்களுக்கெல்லாம் பரிகாரம் காண இதோ என் எதிரே தங்கத் தாம்பாளத்தில் வாய்ப்பு. அல்லாஹ்வையும் அவன் தூதரையும் மகிழ்விக்கும் வகையில் எனது செயல்கள் அமையப்போவதைக் காணப் போகிறார்கள் அவர்கள்"
வீரமுடன் களத்தில் முன்னேறிக் கொண்டிருந்த நபியவர்களைப் பார்த்து, ‘நபியே! உமக்கு என் தாயும் தந்தையும் அர்ப்பணம்’ என்றவாறு தம் குதிரையிலிருந்து குதித்து இறங்கினார். வாளை உருவி அதன் உறையை இரண்டாய் உடைத்துத் தூக்கி எறிந்துவிட்டு அடைந்தால் வெற்றி! இல்லையெனில் வீர மரணம்! என்று ஓடினார். இருபது வருடங்களாக அந்தத் தூதரை இழித்துத் தூற்றி வாழ்ந்தவர்முஸ்லிம்களுக்கு எதிரான ஒவ்வொரு போரிலும் சிரத்தையாய்ப் பங்கெடுத்துக் கொண்டவர்அந்த நபியவர்களைக் கொன்றொழித்தால்தான் நிம்மதி என்று வாழ்ந்து கொண்டிருந்தவர்இன்று நபியவர்களுக்காக தம் உயிரே துச்சம் என்று போர்க்களத்தில் வீறுகொண்டு ஓடினார் அபூஸுஃப்யான் ரலியல்லாஹு அன்ஹு!
யுத்தம் உக்கிரமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நபியவர்கள் அமர்ந்திருந்த கழுதையின் கடிவாள வாரை ஒருபுறம் அப்பாஸ் (ரலி) பிடித்துக் கொண்டு போரிட்டுக் கொண்டிருந்தார். பாய்ந்து சென்று மறுபுறம் நின்று கொண்டார் அபூஸுஃப்யான். நபியவர்கள் அமர்ந்திருந்த கோவேறுக் கழுதையின் சேணத்தை இடக் கை பத்திரமாகப் பற்றிக் கொள்ள அவரது வலக் கை வாள் சுழற்ற ஆரம்பித்தது. மிகச் சிறந்த போர்வீரர் அல்லவா?பொறி தூள் கிளம்பியது.
தமது வலப்புறம் ஒருவர் படு தீவிரமாய் மூர்க்கமுடன் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்த நபியவர்கள்,எதிரிகளோடு போரிட்டுக் கொண்டே அப்பாஸிடம் கேட்டார்கள், “யார் அவர்?”
உம்முடைய பெரியப்பா மகன்உம் சகோதரன்அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித். அல்லாஹ்வின் தூதரே தாங்கள் அவரிடம் மனமிரங்குங்கள்"
நான் அவரை ஏற்றுக்கொண்டேன். எனக்கு எதிராய் அவர் இழைத்த ஒவ்வொரு துளி விரோதத்தையும் அல்லாஹ் மன்னித்தருள்வானாக!"
ஆண்டாண்டுகளாக இழைத்து வந்த பாவத்தை அல்லாஹ் மன்னித்தருள அவனின் தூதரே இறைஞ்சிவிட்டாரே! யாரை எதிர்த்து இருபது ஆண்டுகளாக கேவலமான பாடல்கள் பாடிவந்தாரோ அவரே முழுதும் மனமிரங்கிவிட்டாரே! இது போதாது? இவ்வுலகில் உய்ய வேறென்ன வேண்டும்? நபியவர்கள் உரைத்தது கேட்டதும் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் பொங்கியது அபூஸுஃப்யானுக்கு! பரபரப்பில் குதூகலித்தவருக்கு வாகனத்தில் அமர்ந்திருந்த நபியவர்களின் கால்கள்தான் கண்ணில் பட்டன. நொடிப்பொழுதில் அக்காரியம் செய்தார் அபூஸுஃப்யான். சட்டென குனிந்து முத்தமிட்டு விட்டார். (தம் காலை அபூஸுஃப்யான் முத்தமிட்டது நபியவர்களுக்குத் தெரியுமா தெரியாதா என்பது பற்றித் தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை).
அல்லாஹ்விடம் நபியவர்கள் அபூஸுஃப்யானுக்காகப் பிரார்த்தித்துவிட்டுக் கூறினார்கள்:
என் சகோதரரே! முன்னேறிச் செல்லுங்கள். துணிவுடன் போரிடுங்கள்!
அந்த வார்த்தைகள் மேலும் உற்சாக நெருப்பைப் பற்ற வைத்தன. தோழர்களுடன் முன்னேறி முன்பைவிட மூர்க்கமாய்ப் போரிட ஆரம்பித்தார் அபூ ஸுஃப்யான். அப்பொழுது நபியவர்களின் கட்டளையின்படி அப்பாஸ் தமது உரத்த குரலால் முஸ்லிம் வீரர்களை அழைக்க ஆரம்பித்தார். தடுமாறி விலகி ஓடிய முஸ்லிம்களெல்லாம் சுதாரித்துக் கொண்டு திரண்டு ஓடிவந்தனர். போரின் போக்கை அல்லாஹ் திசை மாற்றினான். சிதறி ஓடியது எதிரிகளின் படை. பல மைல்களுக்கு அவர்களைத் துரத்திச் செல்ல ஆரம்பித்தனர் முஸ்லிம்கள்.
ஹுனைன் நிகழ்வுகள் குர்ஆனில் பதிவாகிப் போயின:
"பல களங்களில் (நீங்கள் குறைந்த எண்ணிக்கையிலிருந்தும்) அல்லாஹ் உங்களுக்கு உதவியளித்தான். ஆனால்ஹுனைனில் உங்களைப் பெருமையில் ஆழ்த்திய உங்களது பெரும்பான்மை, உங்களுக்குப் பயனின்றிப் போனது. பரந்துபட்ட பூமி அப்போது உங்களுக்குச் சுருங்கிப் போனது. நீங்கள் (களத்தில் நபியை விட்டுவிட்டு) புறமுதுகு காட்டி ஓடினீர்கள்"
"பின்னர்அல்லாஹ் தன் தூதரின் மீதும் (உறுதியான) இறைநம்பிக்கையாளர்கள் மீதும் தன் அமைதியருளைப் பொழிந்தான். நீங்கள் பார்க்க முடியாத படையொன்றை அனுப்பி இறைநிராகரிப்பாளர்களை வேதனை செய்தான் ..." (9:25-26).
oOo
வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்த அபூஸுஃப்யான் மாறிப் போனார்முழு முற்றிலுமாய் மாறிப் போனார். நபியவர்களின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதே இல்லை. அந்த மாற்றத்தை நபியவர்கள் கவனிக்கத் தவறவில்லை. ஒருநாள் அவர் பள்ளிவாசலினுள் நுழைவதைக் கண்ட நபியவர்கள் தம் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவிடம், “ஆயிஷா! இவர் யார் என்று தெரிகிறதா?”
தெரியாது அல்லாஹ்வின் தூதரே” என்றார் அவர்.
இவர் என் பெரியப்பா ஹாரிதின் மகன் அபூஸுஃப்யான். பாருங்கள்பள்ளிவாசலுக்குள் முதல் ஆளாய் நுழைகிறார்கடைசி ஆளாய் வெளியேறுகிறார். குனிந்த தலை நிமிருவது இல்லைபார்வையை உயர்த்துவதே இல்லை"
தாம் முன்னர் புரிந்த செயல்கள் அவரது நினைவில் புகுந்து அவரை வெட்கப்பட வைத்தன. அஞ்ஞானக் காலத்தில் புரிந்த தவறுகள் அவருக்கு வலித்தது. இருபது ஆண்டுகளாகத் தவறவிட்டுவிட்ட நன்மைகளுக்காக மனம் அடித்துக் கொண்டது. கற்க இயலாமற்போன இறைவசனங்கள் அவரை விசனப்பட வைத்தன. குர்ஆன் கற்க ஆரம்பித்தார். இராப் பகலாய் அதைக் கற்பதும் ஓதுவதுமாய் அதில் மூழ்கியே போனார் அபூஸுஃப்யான். உலக வாழ்க்கையையும் அதன் கவர்ச்சியையும் தூக்கி முதுகுக்குப் பின்னால் எறிந்துவிடமனமும் கவனமும் என அனைத்தும் அல்லாஹ்அவன் தூதர்இறை மார்க்கம் என்றாகிப் போனது அவரது வாழ்க்கை.
வரலாற்றுச் சிறப்புமிக்க 'இறுதிப் பேருரை'யில் அல்லாஹ்வின் தூதர்இந்த வரலாற்றில் இடம்பெறுகின்ற இருவரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்:
"... கேட்டுக் கொள்ளுங்கள். இன்றோடு அறியாமைக்கால மூடவழக்கங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. இரத்தத்திற்கு இரத்தம் எனும் கொலைப்பழி ஒழிக்கப் படுகிறது. அதை என் குடும்பத்திலிருந்து தொடங்குகிறேன். என் தந்தையின் உடன்பிறந்த ஹாரிதின் மகன் ரபீஆவைக் கொலை செய்தவர்களைப் பழி தீர்க்கும் கடமை எனக்கிருந்ததுஅவர்களை நான் மன்னித்து விட்டேன்.
இன்றிலிருந்து வட்டி முற்றாக ஒழிக்கப்படுகிறது. அதையும் என் குடும்பத்திலிருந்தே தொடங்குகிறேன். என் சிற்றப்பா அப்பாஸிடம் வட்டிக்கு வாங்கிய எவரும் அவருக்கு வட்டி செலுத்தத் தேவையில்லை ..."
அடுத்த ஆண்டுகளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்னுயிர் நீத்தார்கள். பரிதவித்துப் போனார் அபூஸுஃப்யான். தாயை இழந்த சிறு குழந்தையைப் போன்ற சோகம் தாக்கியது. அழுதார். தாங்கவியலா அச்சோகத்தில் விம்மியழுதார். திறம்வாய்ந்த கவிஞராதலால் சோகம் இரங்கற்பாவாக வெளிப்பட்டது. கேட்பவரை ஆழ்துயரத்தில் ஆழ்த்தும் விசனம் அப்பியிருந்தது அக்கவிதையில்.
காலம் தன் கடமைப்படி நகர்ந்து கொண்டேயிருக்கஉமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்று ஆட்சி புரிந்து கொண்டிருந்த நேரம். ஒருநாள் அபூஸுஃப்யானின் உள்ளுணர்வு அவரிடம் அச்செய்தி சொல்லியது. ஜன்னதுல் பஃகீக்குச் சென்று குழிதோண்ட ஆரம்பித்துவிட்டார்.
மூன்று நாள் கழிந்திருக்கும். தம் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்து, “நான் மரணமடைந்ததும் எனக்காக யாரும் கேவி அழக்கூடாது. அல்லாஹ்வின்மேல் ஆணையாகக் கூறுகிறேன்நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நொடியிலிருந்து எந்தப் பாவமும் புரியவேயில்லை" சொல்லிவிட்டு கபடமற்றவராய் சாந்தமுடன் மரணத்தைத் தழுவினார் அபூஸுஃப்யான்.
கலீஃபா உமர்அவரது ஜனாஸாத் தொழுகையை நடாத்தி வைக்க அபூஸுஃப்யான் தயார் செய்துவைத்திருந்த குழியிலேயே அவரது நல்லடக்கம் நடைபெற்றது. அந்திம காலத்திலும் வாழ்வே நிதர்சனம் என்று நாமெல்லாம் குழிக் கணக்கில் வயலும் தோப்பும் வாங்கிக் குவிக்கதம் சவக்குழியைத் தாமே தோண்டி இறுதிப் பயணத்துக்கு ஆயத்தமாயிருந்தார் அபூஸுஃப்யான இப்னுல் ஹாரித்.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.
அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித்

அன்றைய மதீனாவின் பொட்டல் பகுதியில் அவர் குழி தோண்டிக் கொண்டிருந்தார். வியர்வை வழிந்தோட வேலை நடந்துகொண்டிருந்தது. அந்தக் குழியின் நீளம், அகலம், ஆழத்தையெல்லாம் பார்க்கும்போது மரக்கன்று நடும் உத்தேசமெல்லாம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அது பிரேதம் அடக்கம் செய்யப்படும் குழி என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது. தவிர நபியவர்களின் பள்ளிவாசலிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த அந்தப் பொட்டல், இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் ‘ஜன்னதுல் பஃகீ. அவரையும் அந்தக் குழியையும் கண்டவர்களுக்கு ஆச்சரியம்! அவரது வீட்டில் அன்று யாரும் இறந்து போனதாகவும் தெரியவில்லை.
பிறகு எதற்கு அவர் தோண்டிக் கொண்டிருக்கிறார்?
அன்று அவரது உள்ளுணர்வு ஏதோ சொல்லியிருந்தது. அதன்மீது திடமான நம்பிக்கை அவருக்கு. வந்து செயலில் இறங்கிவிட்டார். அவர் அதை முடித்து வீடு திரும்புவதற்குள் பழைய செய்திகளை வாசித்துவிட்டு வந்துவிடுவோம்.
oOo
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபின் குடும்பம் பெரியது. பதின்மூன்று மகன்கள், ஆறு மகள்கள் என்று மிகப் பெரியது. ஹம்ஸா, அப்பாஸ், அபூதாலிப், அபூலஹப் போன்ற பிரபலங்கள், நபியவர்களின் தந்தை அப்துல்லாஹ்வின் சகோதரர்களென நம்மில் பலருக்கும் அறிமுகமானவர்கள். அந்தச் சகோதரர்களில் மற்றொருவர் இருந்தார்;
அல்ஹாரித்!
அப்துல்லாஹ்வுக்கு முஹம்மது பிறந்த அதே காலகட்டத்தில் அல்ஹாரிதுக்கும் ஒரு மகன் பிறந்தார். அவர் பெயர் அபூஸுஃப்யான்.
அபூஸுஃப்யான்? நபியவர்களின் வரலாற்றில் மிகவும் பிரபலமான பெயர் அபூஸுஃப்யான். அன்னை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா, முஆவியா ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரின் தகப்பனாரும் பத்ருப் போருக்குக் காரணமாய் அமைந்தவரும் இதரப் போர்களில் முஸ்லிம்களுக்கு எதிராய்ப் படைதிரட்டி வந்தவருமான அபூஸுஃப்யான் வேறு. அவர் அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்ப்.
இந்த அபூஸுஃப்யான் நபியவர்களின் பெரியப்பாவான அல்ஹாரிதின் மகன் – அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித். செவிலித் தாய் ஹலீமா அஸ்-ஸாதிய்யாவிடம் நபியவர்களும் இந்த அபூஸுஃப்யானும் பாலருந்தி வளர்ந்தவர்கள். அவ்வகையில் இருவருக்கும் பால்குடி சகோதர உறவும் ஏற்பட்டிருந்தது. தவிர அபூஸுஃப்யானின் தோற்றமும் நபியவர்களின் தோற்றத்தை ஒட்டியிருந்தது என்பதும் ஆச்சரியமான உபதகவல்.
ஒரே குடும்பம், சமவயது, சகோதர வாஞ்சை என்று நபியவர்களுக்கும் அபூஸுஃப்யானுக்கும் இயற்கையாய் நல்லதொரு நட்பு ஏற்பட்டுவிட்டது. சேர்ந்து உண்டு, விளையாடி வளர்ந்து கொண்டிருந்தார்கள். வாலிப வயதை எட்டியதும் தொழில், திருமணம், குடும்பம் என்று அமைந்து போனாலும் நட்பும் பாசமும் மட்டும் எப்பொழுதும்போல் நீடித்துக் கொண்டிருந்தது.
நாற்பதாண்டுகள் கழிந்திருக்கும்.
ஒருநாள் நபியவர்கள் ஹிரா குகையிலிருந்து ஓடோடி இறங்கிவந்து நடுங்கிக்கொண்டே அந்த அற்புதச் செய்தியைச் சொன்னார்கள். எளிதில் நம்பிவிட முடியாத கடினமான செய்தி. முதலில் அதை அவர்கள் அறிவித்தது தம் மனைவியிடம். பதினைந்து ஆண்டுகால இல்வாழ்க்கையில் தம் கணவரை உள்ளும் புறமும் நன்கு அறிந்து கொண்டிருந்த அவர்களின் மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவுக்கு அதில் எத்தகைய சந்தேகமும் தோன்றவில்லை. போர்த்திவிட்டு, இதமாய் அணைத்து ஆறுதல் கூறி, உறுதியுடன் அப்படியே அச்செய்தியை ஏற்றுக் கொண்டார்கள். அடுத்து அவர்களின் மகள்கள், அவர்களுடன் வளர்ந்து வந்த ஸைத், பெரியப்பா மகன் அலீ என்று மிக நெருக்கமானவர்கள் சங்கடமே இன்றி அத்தகைய அசாதாரண நிகழ்வில் நம்பிக்கை கொள்ள, அதற்குக் காரணங்கள் பல இருந்தன.
குரைஷியரின் குல கௌரவங்களான மது, மாது, வன்மனம், கொடுஞ்சினம் போன்றவை எதுவுமின்றி,  அன்றைய அரபியரிடம் அருகிப் போயிருந்த நற்பண்புகள் அனைத்தும் நபியவர்களிடம் குடிகொண்டிருந்தன. இதையெல்லாம் அத்தனை ஆண்டுக்காலம் அருகிலிருந்து பார்த்த குடும்பத்தினர், பொய்பேசிஅறியாத தம் குடும்பத் தலைவர் சொன்ன புதுச்செய்தியை அப்படியே ஏற்றுக் கொண்டனர். எனில் நபியவர்களுடன் உண்டு, உறங்கி, விளையாடி வளர்ந்த அபூஸுஃப்யானுக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டுமல்லவா? முதல் ஆளாய் அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஆதரவாய் நின்றிருக்க வேண்டுமல்லவா? அங்குதான் வினோதம் நிகழ்ந்தது!. அப்பட்டமாய் நிராகரித்தார் அபூஸுஃப்யான். இத்தனைக்கும் அபூஸுஃப்யானுடன் பிறந்த மூன்று சகோதரர்கள் - நவ்ஃபல், ரபீஆ, அப்துல்லாஹ் ஆகிய மூவரும் 'புதுச்செய்தி'யை ஏற்றுக் கொண்டு முஸ்லிமாகியிருந்தனர்.
“என்னமோ சொல்கிறார்? எனக்குப் பிடிபடவில்லை? அவராயிற்று, அவர் மதமாயிற்று” என்று ஒதுங்கிப் போயிருந்தாலும் பரவாயில்லை. எதிரியானார்! பரம எதிரியானார். அத்துணை நெருங்கிய உறவு, நட்பு, பாசம் அனைத்தையும் நொடியில் உதறித் தள்ளிவிட்டு மிகவும் மூர்க்கமான முறையில் களமிறங்கினார்.
அபூஸுஃப்யான் குரைஷி குலத்தின் திறமையான வீரர்களில் ஒருவர். கவிதை புனைவதில் எக்கச்சக்கப் புலமை. பிரமாதமான கவிஞர். ஆனால் இந்தத் திறனையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு, “முஹம்மதை ஒழித்துக் கட்டுகிறேன் பார்” என்று அவர் தொடைதட்டி எதிர்த்து நின்றது பெருஞ்சோகம். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் என்னென்ன தீங்குகள் விளைவிக்க முடியுமோ அத்தனைக்கும் என் திறன் சமர்ப்பணம் என்று குரைஷிகளிடம் அறிவித்துவிட்டார். எவ்விதத் தடுமாற்றமும் இல்லாத தெளிவான குறிக்கோள்.
தொடங்கியது அவர் பணி. முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் துவங்கத் தூண்டிவிடுவதாகட்டும்; அந்தப் போர்களில் வாளேந்தி நிற்பதாகட்டும் அதிலெல்லாம் இந்த அபூஸுஃப்யானின் பங்கு பெரும்பங்கு. மிச்சப் பொழுதில் நபியவர்களையும் இஸ்லாத்தையும் தூற்றி மிகவும் கீழ்த்தரமான வசைப்பாடல்கள் அவரிடமிருந்து உருவாக ஆரம்பித்தன. கவிதைக்கும் பாடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தினர் அந்த அரபியர். அவர்களிடையே இத்தகைய பாடல்கள் என்ன செய்யும்? பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாக்கூச வைக்கும் அப்பாடல்களின் கரு, நபியவர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு சொல்லி மாளாது. எதிரிகளின் வாளினால் பட்ட புண்களாவது ஆறிப்போகும்; ஆனால் அவர்களது நாவினால் ஏற்பட்ட காயம்? அது ஆறாத வடுவானது.
இப்படியாக ஓர் ஆண்டு இரண்டாண்டு என்றில்லாமல் இருபது ஆண்டுகள் விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார் அபூஸுஃப்யான். அதன் பிறகே நிகழ்ந்தது அது.
அந்த மாற்றம்!
oOo
முஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தபின் பல போர்கள், பற்பல சச்சரவுகள். மக்காவிலிருந்து மதீனாவரை விடாமல் தொடர்ந்தது குரைஷிகளின் தொல்லைகள். ஒவ்வொன்றும் அடக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டு உச்சக்கட்டமாய் ஹி்ஜ்ரீ எட்டாம் ஆண்டு நிகழ்ந்தது மக்கா படையெடுப்பு.
முஸ்லிம்களின் பெரும்படை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமையில் மக்கா நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தி உளவறிக்கையாய் மக்காவை வந்தடைந்தது. இனி எந்த எதிர்ப்பிற்கும் வழியே இல்லை, ஆட்டம் முடிந்தது என்ற நிலையிலிருந்தனர் குரைஷியர். மக்காவின் ஒவ்வொரு வீட்டையும் பதட்டம் சூழ்ந்திருந்தது.
அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் தம் வீட்டில் அமர்ந்திருந்தார். முற்பகல் செய்ததற்குப் பிற்பகல் என ஒன்று வந்துசேரும் என்று அப்பொழுதெல்லாம் அவர் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இப்பொழுதுதான் யோசித்தார். ‘இதோ இன்னும் சில நாட்களில் முஹம்மது வந்து மக்காவைக் கைப்பற்றப் போகிறார். உலகின் எந்த மூலையில் நான் ஓடி ஒளிவேன்? எங்கு இடமிருக்கிறது?’ நினைத்துப் பார்க்கவே பகீரென்றிருந்தது!
‘எங்குப் போவேன்? யாருடன் போவேன்? எந்த மக்கள் மத்தியில் சென்று வாழ்வேன்?’ யோசிக்க யோசிக்கப் பதட்டம் கூடியது. தம் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்தார். “முஹம்மது விரைவில் வரப் போகிறார். தயாராகுங்கள். நாம் மக்காவைவிட்டுக் கிளம்ப வேண்டும். முஸ்லிம்கள் இங்கு வந்தடையும்போது நான் உயிருடன் இருப்பதைவிட இறந்துவிடுவது மேல்"
அவரைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள் அவர்கள். “அரபியர்கள் அரபியர் அல்லாதவர்கள் என்று எல்லோரும் முஹம்மதை நம்பிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்களே, அதை இன்னமும் நீங்கள் உணரவில்லையா? நீங்கள் அவர்மீது கொண்டுள்ள விரோதத்தைக் கைவிடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையை உணருங்கள். இதுதான் சரியான தருணம். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்"
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் அபூஸுஃப்யான்.
“இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப காலத்திலேயே நீங்கள்தாம் முதல் ஆளாய் அவர்களை ஏற்றுக்கொண்டு ஆதரவாய் செயல்பட்டிருக்க வேண்டும்..." என்று தங்களால் இயன்ற அளவு அவரின் குடும்பமே எடுத்துச் சொல்ல ஆரம்பித்தது. இருபதாண்டுகால நிகழ்வுகள் மனக்கண்ணில் மின்னலாய் ஓட, அன்று காணத் தவறிய உண்மையின் ஒளி இன்று பளிச்சென்று தென்பட ஆரம்பித்தது; வைகறை வெளிச்சமாய்ப் பரவியது.
“மத்கூர்!”
உரத்து அழைத்தார் அபூஸுஃப்யான். மத்கூர், அவரின் பணியாள். வந்து நின்றவனிடம், ”ஒட்டகங்களும் ஒரு குதிரையும் சேணம் பூட்டிப் பயணத்திற்குத் தயார் செய்" அவை உடனே தயாராக, தம் மகன் ஜாஃபரை அழைத்துக் கொண்டு குதிரையில் ஏறிக்கொண்டுப் படுவேகமாகக் கிளம்பினார்.
மதீனாவிலிருந்து மக்கா வரும் வழியில் அல்-அப்வா என்றோர்  ஊர் உள்ளது. அங்குதான் நபியவர்களுடன் முஸ்லிம்கள் முகாமிட்டிருந்தார்கள். அபூஸுஃப்யானையும் ஜாஃபரையும் சுமந்துகொண்டு அந்த ஊருக்கு விரைந்தது அப்புரவி.
அல்-அப்வாவை நெருங்க நெருங்க அவருக்கு அந்தப் பயம் தோன்றியது. நபியவர்களைச் சந்தித்துப் பேசுவதற்குமுன் யாரேனும் தம்மை அடையாளம் கண்டு கொலை செய்துவிட்டால்? அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. முஸ்லிம்களிடம் தாம் சம்பாதித்து வைத்திருந்த வெறுப்பை அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதைப்போல் இறைத்தூதருக்காக அந்தத் தோழர்கள் என்னென்ன தியாகங்கள் செய்வார்கள் என்பதும் நாடறிந்த செய்தி. ‘ம்ஹும்! நபியவர்கள் எனது மாற்றத்தை அறியும்முன் நான் இறந்து போகக்கூடாது’. கவலை அதிகரித்தது.
உடனே குதிரையை விட்டு இறங்கி, தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார் அபூஸுஃப்யான். ஏறக்குறைய ஒரு மைல் தூரம் இருக்கும்; நடந்து சென்று கொண்டேயிருக்க எதிரே முஸ்லிம்களின் படை அணி அணியாக மக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஓரமாக ஒதுங்கி அவர்களது கவனத்தைக் கவராமல் நின்றுகொள்ள, தோழர்கள் யாரும் தம்மைக் கண்டுவிடக் கூடாதே என்று படபடத்தது மனம். படைகள் நகர்ந்து கொண்டேயிருக்க, அப்பொழுது முஹம்மது நபியும், அவர்களின் தோழர்களுமாய் ஓர் அணி வந்துகொண்டிருந்த்தைப் பார்த்துவிட்டார் அபூஸுஃப்யான்.
‘அதோ அவர்! எளிமையாய் கம்பீரத்தின் நகல்!’
வேகமாய் நகர்ந்து பாதையின் அருகே சென்று நின்றுகொள்ள, நபியவர்கள் வெகு அருகே நெருங்கியதும், விரைந்து சென்று நேருக்கு நேர் அவர்கள் தம்மைக் காணும் வகையில் தம் தோற்றத்தை வெளிப்படுத்தினார் அபூஸுஃப்யான். பார்த்துவிட்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். யாரென்று தெரிந்தது; அவர் அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் என்பது தெளிவாய்த் தெரிந்தது. ஒரு சொல் பேசவில்லை. உடனே மறுபுறம் திரும்பிக்கொண்டது அவர்களது முகம்.
‘ஏன் திரும்பிக் கொண்டார்கள்? ஒருவேளை நம்மைத் தெரியவில்லையோ?’
உடனே விரைந்து மறுபுறம் சென்றார் அபூஸுஃப்யான். நபியவர்களின் எதிரே நின்றார். மீண்டும் வேறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் நபியவர்கள். இறைத்தூதர் தம் முகம் காண மறுக்கிறார் என்பது நிச்சயமாய்ப் புரிந்தது அவருக்கு. ‘இதென்ன இப்படியொரு வரவேற்பு?’ எப்படியாவது நபியவர்கள் தம் முகத்தைப் பார்த்தால் போதும், பேசிவிடலாம் என்று அபூஸுஃப்யான் மீண்டும் மீண்டும் முயல, ம்ஹும், நபியவர்கள் முகம் கொடுப்பதாய் இல்லை. இது அவர் சற்றும் எதிர்பாராதது. தம்மைப் பார்த்ததும் தாம் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளப் போவதை அறிந்ததும் முஹம்மது நபி மனமகிழ்ந்து போவார்கள்; தோழர்களெல்லாம் ஆனந்தமடைவார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார் அவர். ஆனால் இது, இந்தப் புறக்கணிப்பு, தாங்கமுடியவில்லை அவரால்.
போர்க்களத்தில் வாளேந்தி கோரத் தாண்டவம் புரிந்த எதிரிகளையெல்லாம் சடுதியில் மன்னித்துவிட்ட நபியவர்கள் இங்கு இவரிடம் இப்படி நடந்து கொண்டதற்கு அழுத்தமான காரணமிருந்தது. ஒருவரது நற்பெயரை, குணநலனை, மாண்பை, கெடுத்தழிப்பது என்பது உயிர்க் கொலையைவிடக் கொடூரமானது. சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருப்பவனாய் இருந்தாலும் மானம்தான் மனிதனுக்கு முக்கியம் என்றிருக்கும்போது அத்தகைய தீச்செயல் இறைவனின் தூதர், உத்தமத் திருநபி, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்மேல் நிகழ்த்தப்படுமானால் அது குற்றத்தின் உச்சக்கட்டமல்லவா? இறைத் தூதரை நிந்திப்பதென்பது இறைநிந்தனை. எக்காலமாயினும் சரி; அது யாராக இருந்தாலும் சரி; அத்தகு தீங்கு மன்னிப்பிற்கு அப்பாற்பட்ட பாவம்.
இதைத் தோழர்கள் கவனித்துவிட்டனர். நபியவர்களே அவரிடம் பேசவில்லை என்றாகிவிட்டதால் யாரும் அபூஸுஃப்யானின் முகத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. என்ன ஏது என்று ஒரு வார்த்தை கேட்கவேண்டுமே? அனைவரும் திரும்பிக் கொண்டனர். அபூபக்ரு (ரலி) மிகக் கடுமையான முகத்துடன் திரும்பிக் கொண்டார். அடுத்து உமரை நெருங்கி, கெஞ்சலாய் ‘அன்பாய், ஆதரவாய் ஏதாவது சொல்லுங்களேன்’ என்று பார்த்தால் அபூபக்ருவைவிடக் கடினமாய் நடந்து கொண்டார் அவர். மேலும் தம் அருகிலிருந்து அன்ஸாரித் தோழர் ஒருவரை அழைத்து, உமர் அவரைப் பற்றி ஏதோ சொல்ல, புதுத்தொல்லை உருவானது. அந்தத் தோழர் அபூஸுஃப்யானை நோக்கிக் கடுஞ்சொல் கொண்டு கோபமாய்ப் பேச ஆரம்பித்துவிட்டார்.
“அல்லாஹ்வின் விரோதியே! நீதானே நபியவர்களுக்கும் அவரின் தோழர்களுக்கும் விடாது தீங்கிழைத்தது? நீ இழைத்த தீங்கும் குற்றங்களும் இந்தப் பூமி முழுவதையும் நிரப்பும் அளவிற்கான கொடுமைகளாயிற்றே..." என்று தொடர்ந்து கொண்டேபோக, தோழர்கள் அனைவரும் அதை அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர். தம்மை அவர் வசைபாடுவது மற்றத் தோழர்களுக்கு திருப்தியளிக்கிறதோ என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார் அபூஸுஃப்யான்.
மிகவும் சங்கடமான அந்தச் சூழ்நிலையில் தம் சிற்றப்பா அப்பாஸைப் பார்த்துவிட்டார் அபூஸுஃப்யான். ‘அப்பாடா’ என்று அவரிடம் விரைந்து சென்று, “சிற்றப்பா! எனக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் இடையிலுள்ள உறவுமுறை, என் மக்கள் மத்தியில் எனக்குள்ள செல்வாக்கு இதையெல்லாம் கருத்தில்கொண்டு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்பதை அறிந்தால் நபியவர்கள் மகிழ்வடைவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் என்னிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நீங்களே பார்த்தீர்கள். தயவுசெய்து எனக்காக அவர்களிடம் நீங்கள் சென்று பேசுங்களேன்; மனமிரங்குவார்கள் என்று நம்புகிறேன்"
“முடியாது"
தெளிவாகச் சொன்னார் அப்பாஸ். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உன்னிடமிருந்து முகத்தை எப்படித் திருப்பிக் கொண்டதைப் பார்த்தேன் அபூஸுஃப்யான். அவரும் உன்னைப்போல் என் சகோதரர் மகன்தான். ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதர். நான் அவர்கள்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இப்பொழுது நான் சென்று பேசுவது முறையல்ல"
“நீங்களே முடியாது என்று சொல்லிவிட்டால் வேறு யாரிடம் சென்று நான் முறையிட முடியும்?” அழுதார் அபூஸுஃப்யான்.
“நான் ஏதும் செய்வதற்கில்லை“ என்று மட்டும் பதில் வந்தது.
துக்கம் பொங்கி நம்பிக்கை குறைந்தது. அப்பொழுது தோழர்கள் மத்தியில் அலீ (ரலி) தென்பட்டார். ‘இதோ என் மற்றொரு சிற்றப்பாவின் மகன்’ என்று அடுத்து அவரிடம் விரைந்தார் அபூஸுஃப்யான். ஆனால் அலீயிடமிருந்தும் ஏறக்குறைய அதே பதில்தான் கிடைத்தது. அலீயும் கைவிரித்ததும் என்ன செய்வதென்று அவருக்குத் தோன்றவில்லை.
மீண்டும் அப்பாஸிடம் திரும்பி வந்து, “சிற்றப்பா! நபியவர்களிடம் எனக்காகப் பரிந்துரைக்க இயலாவிட்டால் போகட்டும்; என்னை எதிரியாய்த் தூற்றி, பிறரையும் அதற்குத் தூண்டிக் கொண்டிருக்கிறார் ஒருவர்; தாங்கமுடியவில்லை. தாங்கள் வந்து அவரிடமாவது எனக்காகப் பேச வேண்டும்"
“யார் அவர்? எப்படி இருப்பார்?” என்று கேட்டார் அப்பாஸ். அங்க அடையாளங்களை விவரித்தார் அபூஸுஃப்யான்.
“ஓ! அவர் நுஐமான் இப்னுல் ஹாரித் அந்-நஜ்ஜாரி” என்றவர் அவரைக் கூப்பிட்டனுப்பினார்.
“நுஐமான்! இந்த அபூஸுஃப்யான் அல்லாஹ்வின் தூதரின் பெரியப்பா மகன். என் சகோதரனின் மகன். இப்பொழுது நபியவர்கள் இவர்மேல் அளவிலாக் கோபத்தில் இருக்கலாம். ஆனால் விரைவில் ஒருநாள் கருணை கொண்டு மனமிரங்கத்தான் போகிறார்கள். எனவே இப்பொழுது இவரைத் தொந்தரவு புரியாமல் விட்டுவிடுங்கள்" தன்மையாய் எடுத்துக் கூற, நுஐமான் ஏற்றுக் கொண்டார். “சரி, இனி என்னால் இவருக்குத் தொல்லை இருக்காது” என்று சத்தியம் செய்து தந்துவிட்டுச் சென்றுவிட்டார்.
படை மக்கா நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அல்-ஜஹ்ஃபா என்றோர் இடத்தில் அடுத்து முகாமிட்டார்கள் அனைவரும். நபியவர்களுக்குக் கூடாரம் அமைக்கப்பட்டது. அது எந்தக் கூடாரம் என்று தெரிந்துகொண்டு, அதன் வெளியே அமர்ந்து கொண்டார் அபூஸுஃப்யான். தம் மகன் ஜாஃபரைத் தமக்கும் பின்னால் நிறுத்திக் கொண்டார். கூடாரத்தைவிட்டு வெளியே வந்த நபியவர்கள் அங்கு அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, இப்பொழுதும் ஒன்று சொல்லவில்லை, முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்; சென்று விட்டார்கள்.
அதற்கடுத்து ஒவ்வொருமுறை படை முகாமிடும் போதெல்லாம் நபியவர்களது கூடாரத்தின் வாசலில் தம் மகனுடன் சென்று அமர்ந்து கொள்ள ஆரம்பித்தார் அபூஸுஃப்யான். நபியவர்களும் ஒவ்வொருமுறையும் அவரிடம் பேசாமல் முகம் திரும்பிக் கொண்டிருந்தார்கள். எப்படியும் அவர்கள் மனமிரங்கி மன்னித்துவிடமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த அபூஸுஃப்யானுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.
அபூஸுஃப்யானைப் போலவே அப்துல்லாஹ் இப்னு அபூ உமைய்யா என்பவரும் நபியவர்களைச் சந்திக்க வந்திருந்தார். இவரும் நபியவர்களுக்கு நெருங்கிய உறவினர்தான். இவரின் தாயார் நபியவர்களுக்கு அத்தை உறவு. இவரும் இறைத்தூதரைப் பற்றி சகட்டுமேனிக்குப் பழிதூற்றித் திரிந்து கொண்டிருந்தவர். இவர்கள் இருவரையுமே சந்தித்துப்பேசாமல் நபியவர்கள் தவிர்த்துக் கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா தம் கணவரிடம் பேசினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் இருவரும் உங்களின் இரத்த சொந்தங்களாயிற்றே! மனமிரங்கக் கூடாதா?”
“தேவையில்லை! என் பெரியப்பா மகன் எனக்கு ஏகப்பட்ட அவதூறு புரிந்தான். என் அத்தை மகன் என்னை மக்காவில் என்னவெல்லாம் பேசினான் என்றுதான் உனக்குத் தெரியுமே"
நபியவர்கள் இவ்விதம் கூறியது அபூஸுஃப்யானுக்குத் தெரியவந்தது. ‘அவ்வளவுதானா? வேறு வழியில்லையா?’ மனம் உடைந்துபோய் தம் மனைவியிடம் வந்து, “ஒன்று நபியவர்கள் என்னிடம் மனமிரங்க வேண்டும். இல்லையா, அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன், என் மகனை அழைத்துக் கொண்டு நடந்தே பாலைவனத்தை அடைந்து, தாகத்தினாலும் பசியினாலும் மாய்ந்து மடியப் போகிறேன்"
அபூஸுஃப்யான் இப்படிக் கூறினாராம் என்று இந்தச் செய்தி நபியவர்களை எட்டியது. அதிலுள்ள தீவிரம், உண்மையை ஏற்றுக் கொண்டு இலேசாக இளகியது அவர்களது மனம். கூடாரத்தின் வெளியே காத்திருந்த அபூஸுஃப்யானை அடுத்தமுறை நபியவர்கள் பார்த்தபோது முகத்தில் முந்தைய கடுமை இல்லை. ‘அப்படியே இலேசாய் ஒரு புன்னகை பூத்தால் போதுமே’ என்று அபூஸுஃப்யான் எதிர்பார்க்க, அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை.
இறுதியில் அலீ பின் அபுதாலிப் (ரலி), அபூஸுஃப்யானிடம் ஓர் ஆலோசனைக் கூறினார். “நபி யூஸுஃபை அடையாளம் கண்டுகொண்ட அவரின் சகோதரர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மையுடையவராகத் தேர்வு செய்திருக்கின்றான்’ என்று. அதையே நீங்களும் நபியவர்களிடம் நேருக்கு நேராய்ச் சொல்லுங்கள். அது இறைவசனமல்லவா? அதனால் அல்லாஹ்வின் தூதர் அதற்குச் சிறப்பான பதிலைத் தவிர வேறு எதுவும் சொல்லவே மாட்டார்கள்"
அது சிறப்பான ஆலோசனை. அபூஸுஃப்யானுக்குப் பிடித்துப்போனது. அடுத்தமுறை நபியவர்களிடம் அந்த இறை வசனத்தை அப்படியே உரைத்தார் அபூஸுஃப்யான். தம் சகோதரர்கள் தம்மிடம் அப்படிக் கூறியதும் நபி யூஸுஃப் அழகிய பதிலொன்று சொல்லியிருந்தார். குர்ஆனில் பதிவாகியுள்ள அதே பதிலை நபியவர்கள் கூறினார்கள். “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்”.
பேரானந்தம் அடைந்தார் அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு!
முஸ்லிம்களின் படை மக்காவினுள் நுழைந்தது. வரலாற்றின் மாபெரும் வெற்றி நிகழ்வு அது. அந்தப் படையினருடன் அபூஸுஃப்யானும் இணைந்து கொண்டு பின்தொடர்ந்தார் - முஸ்லிம்களுடன் முஸ்லிமாய். நபியவர்கள் கஅபாவில் நுழைய, கூடவே இவரும். அன்றிலிருந்து அப்பொழுதிலிருந்து நபியவர்களின் ஒவ்வொரு அடியையும் அப்படியே பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தது அவரது வாழ்க்கை.
oOo
மக்காவின் தென்கிழக்கே சில மைல்கள் தொலைவில் ஹவாஸின் எனும் கோத்திரத்தினர் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குச் செய்தி வந்து சேர்ந்தது - “முஸ்லிம்கள் மக்காவைக் கைப்பற்றிவிட்டனர். கஅபா ஆலயத்தில் இருந்த சிலைகளெல்லாம் அப்புறப்படுத்தப் பட்டன"
அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது அச்செய்தி. அடுத்ததாய் முஸ்லிம்கள் இங்கும் வந்துவிடப் போகிறார்கள் என்ற அச்சம். அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்? நாமே முந்திச் சென்று அவர்களை எதிர்கொண்டு முறியடித்துவிட்ட்டால்? அதுதான் சரி என்று முடிவு செய்தான் மாலிக் பின் அவ்ஃப் அந்-நத்ரீ என்பவன். உடனே தகீஃப் கோத்திரத்தினருடன் பேசி அவர்களை இணைத்துக் கொண்டான். அத்துடன் நஸ்ரு, ஜுஷாம், பனூ ஸஅத் பின் பக்ரு எனும் கோத்திரத்தினரும் சேர்ந்து கொண்டனர். அவ்ஸா, பனூ ஹிலால், பனூ அம்ரு இப்னு ஆமிர், அவ்ஃப் இப்னு ஆமிர் ஆகிய கோத்திரத்திலிருந்து சிலர் ‘நாங்களும் வருகிறோம்’ என்று கைகோத்துக் கொண்டனர். மாலிக் பின் அவ்ஃப் தலைமையில் பெரும் படை திரண்டது. படைக்குப் போர் வீரர்கள், போர்த் தளவாடங்கள் என்பதோடு, பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் என்று தங்கள் மனைவி, மக்கள், சொத்துகளுடன் களமிறங்கினார்கள் அவர்கள். அப்படிப் போருக்குச் செல்வதால் ஒவ்வொரு வீரனும் தோற்கவே கூடாது என்று வெறியுடன் போரிடுவான் என்பது அவர்களது திட்டம்.
மக்காவை வெற்றிகொண்டு பதினைந்து நாள்கள்கூட ஆகியிருக்கவில்லை. அதற்குள் இத்தகைய போர் மேகம். முஸ்லிம்கள் தரப்பும் போருக்குத் தயாரானது. அவர்களும் முன்னர் எப்பொழுதும் இல்லாத அளவிற்குப் பெரும் படையாய்த் திரண்டனர். மக்காவில் புதிதாய் இஸ்லாத்தில் இணைந்த குரைஷியர்கள் இரண்டாயிரம் பேர் படையில் கலந்துகொள்ள, பன்னிரண்டாயிரம் வீரர்களின் அணிவகுப்பு எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டது.
மக்கா நகருக்கும் தாயிஃப் நகருக்கும் இடையே ஹுனைன் என்றொரு பள்ளத்தாக்கு. ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் பத்தாம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை மங்கி இருள் பரவும் இரவில் அங்கு வந்தடைந்தது முஸ்லிம்களின் படை.
இருள் விலகா அதிகாலை நேரம். வாகாய்ப் பதுங்கிக் காத்திருந்தனர் ஹவாஸின் படையினர். முஸ்லிம்கள் சற்றும் எதிர்பாரா தருணத்தில் தொடங்கியது எதரிகளின் தாக்குதல். ஒரே சீராய் ஒரே அணியாய் வந்து இறங்கி அம்பு மழை பொழிய, வாள்கள் பலரை வெட்ட, பலத்த சேதம், களேபரம், குழப்பம். எதிரிகளின் கை ஓங்கிக் கொண்டே வந்தது. முஸ்லிம் படையினரில் பல போர் வீரர்கள் சிதைந்து ஓடிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது கோவேறு கழுதையின் மீது வெகு திடமாய் அமர்ந்துகொண்டு, மலைபோன்ற உறுதியுடன் வாளை ஏந்திக்கொண்டு தம்மையும் சுற்றியுள்ளவர்களையும் தற்காத்துக் கொண்டு வேங்கை போல் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் - கூடவே போர் முழக்கத்தோடு:
அல்லாஹ்வின் தூதன் நான்; பொய்யில்லை!
நான் அப்துல் முத்தலிபின் (பேரப்) பிள்ளை!
இதுநாள்வரை முஸ்லிம்களின் எதிரணியில் இஸ்லாத்தையும் நபியவர்களையும் எதிர்த்து நின்று கொண்டிருந்தாரே அபூஸுஃப்யான் இப்பொழுது முதன்முறையாய் நபியவர்களின் தலைமையில் இஸ்லாத்திற்காகக் களத்தில் நின்று கொண்டிருந்தார். பிரம்மாண்டமாய்த் திரண்டிருந்த எதிரிப்படை, அவர்கள் தாக்குதலின் கொடூரம் இதையெல்லாம் கண்டு மனதில் அச்சம், திகைப்பு என்பதெல்லாம் ஏற்படுவதற்குப் பதிலாய்ச் சரேலென அவரை உற்சாகம் தொற்றியது.
“அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இறைத்தூதருக்கு எதிராய் நான் இதுநாள்வரை புரிந்த செயல்களுக்கெல்லாம் பரிகாரம் காண இதோ என் எதிரே தங்கத் தாம்பாளத்தில் வாய்ப்பு. அல்லாஹ்வையும் அவன் தூதரையும் மகிழ்விக்கும் வகையில் எனது செயல்கள் அமையப்போவதைக் காணப் போகிறார்கள் அவர்கள்"
வீரமுடன் களத்தில் முன்னேறிக் கொண்டிருந்த நபியவர்களைப் பார்த்து, ‘நபியே! உமக்கு என் தாயும் தந்தையும் அர்ப்பணம்’ என்றவாறு தம் குதிரையிலிருந்து குதித்து இறங்கினார். வாளை உருவி அதன் உறையை இரண்டாய் உடைத்துத் தூக்கி எறிந்துவிட்டு அடைந்தால் வெற்றி! இல்லையெனில் வீர மரணம்! என்று ஓடினார். இருபது வருடங்களாக அந்தத் தூதரை இழித்துத் தூற்றி வாழ்ந்தவர், முஸ்லிம்களுக்கு எதிரான ஒவ்வொரு போரிலும் சிரத்தையாய்ப் பங்கெடுத்துக் கொண்டவர், அந்த நபியவர்களைக் கொன்றொழித்தால்தான் நிம்மதி என்று வாழ்ந்து கொண்டிருந்தவர், இன்று நபியவர்களுக்காக தம் உயிரே துச்சம் என்று போர்க்களத்தில் வீறுகொண்டு ஓடினார் அபூஸுஃப்யான் ரலியல்லாஹு அன்ஹு!
யுத்தம் உக்கிரமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நபியவர்கள் அமர்ந்திருந்த கழுதையின் கடிவாள வாரை ஒருபுறம் அப்பாஸ் (ரலி) பிடித்துக் கொண்டு போரிட்டுக் கொண்டிருந்தார். பாய்ந்து சென்று மறுபுறம் நின்று கொண்டார் அபூஸுஃப்யான். நபியவர்கள் அமர்ந்திருந்த கோவேறுக் கழுதையின் சேனத்தை இடக் கை பத்திரமாகப் பற்றிக் கொள்ள அவரது வலக் கை வாள் சுழற்ற ஆரம்பித்தது. மிகச் சிறந்த போர்வீரர் அல்லவா? பொறி தூள் கிளம்பியது.
தமது வலப்புறம் ஒருவர் படு தீவிரமாய் மூர்க்கமுடன் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்த நபியவர்கள், எதிரிகளோடு போரிட்டுக் கொண்டே அப்பாஸிடம் கேட்டார்கள், “யார் அவர்?”
“உம்முடைய பெரியப்பா மகன், உம் சகோதரன், அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித். அல்லாஹ்வின் தூதரே தாங்கள் அவரிடம் மனமிரங்குங்கள்"
“நான் அவரை ஏற்றுக்கொண்டேன். எனக்கு எதிராய் அவர் இழைத்த ஒவ்வொரு துளி விரோதத்தையும் அல்லாஹ் மன்னித்தருள்வானாக"
ஆண்டாண்டுகளாக இழைத்து வந்த பாவத்தை அல்லாஹ் மன்னித்தருள அவனின் தூதரே இறைஞ்சிவிட்டாரே! இது போதாது? நபியவர்கள் உரைத்தது கேட்டதும் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் பொங்கி நிறைந்தது!
“என் சகோதரரே! முன்னேறிச் செல்லுங்கள். துணிவுடன் போரிடுங்கள்!”
அந்த வார்த்தைகள் மேலும் உற்சாக நெருப்பைப் பற்ற வைத்தன. தோழர்களுடன் முன்னேறி முன்பைவிட மூர்க்கமாய்ப் போரிட ஆரம்பித்தார் அபூ ஸுஃப்யான். அப்பொழுது நபியவர்களின் கட்டளையின்படி அப்பாஸ் தமது உரத்த குரலால் முஸ்லிம் வீரர்களை அழைக்க ஆரம்பித்தார். தடுமாறி விலகி ஓடிய முஸ்லிம்களெல்லாம் சுதாரித்துக் கொண்டு திரண்டு ஓடிவந்தனர். போரின் போக்கை அல்லாஹ் திசை மாற்றினான். சிதறி ஓடியது எதிரிகளின் படை. பல மைல்களுக்கு அவர்களைத் துரத்திச் செல்ல ஆரம்பித்தனர் முஸ்லிம்கள்.
ஹுனைன் நிகழ்வுகள் குர்ஆனில் பதிவாகிப் போயின:
"பல களங்களில் (நீங்கள் குறைந்த எண்ணிக்கையிலிருந்தும்) அல்லாஹ் உங்களுக்கு உதவியளித்தான். ஆனால், ஹுனைனில் உங்களைப் பெருமையில் ஆழ்த்திய உங்களது பெரும்பான்மையால் உங்களுக்குப் பயனின்றிப் போனது. பரந்துபட்ட பூமி அப்போது உங்களுக்குச் சுருங்கிப் போனது. நீங்கள் (களத்தில் நபியை விட்டுவிட்டு) புறமுதுகு காட்டி ஓடினீர்கள்"
"பின்னர், அல்லாஹ் தன் தூதரின் மீதும் (உறுதியான) இறைநம்பிக்கையாளர்கள் மீதும் தன் அமைதியருளைப் பொழிந்தான். நீங்கள் பார்க்க முடியாத படையொன்றை அனுப்பி இறைநிராகரிப்பாளர்களை வேதனை செய்தான் ..." (9:25-26).
oOo
வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்த அபூஸுஃப்யான் மாறிப் போனார்; முழு முற்றிலுமாய் மாறிப் போனார். நபியவர்களின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதே இல்லை. அந்த மாற்றத்தை நபியவர்கள் கவனிக்கத் தவறவில்லை. ஒருநாள் அவர் பள்ளிவாசலினுள் நுழைவதைக் கண்ட நபியவர்கள் தம் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவிடம், “ஆயிஷா! இவர் யார் என்று தெரிகிறதா?”
“தெரியாது அல்லாஹ்வின் தூதரே” என்றார் அவர்.
“இவர் என் பெரியப்பா ஹாரிதின் மகன் அபூஸுஃப்யான். பாருங்கள், பள்ளிவாசலுக்குள் முதல் ஆளாய் நுழைகிறார், கடைசி ஆளாய் வெளியேறுகிறார். குனிந்த தலை நிமிருவது இல்லை; பார்வையை உயர்த்துவதே இல்லை"
தாம் முன்னர் புரிந்த செயல்கள் அவரது நினைவில் புகுந்து அவரை வெட்கப்பட வைத்தன. அஞ்ஞானக் காலத்தில் புரிந்த தவறுகள் அவருக்கு வலித்தது. இருபது ஆண்டுகளாகத் தவறவிட்டுவிட்ட நன்மைகளுக்காக மனம் அடித்துக் கொண்டது. கற்க இயலாமற்போன இறைவசனங்கள் அவரை விசனப்பட வைத்தன. குர்ஆன் கற்க ஆரம்பித்தார். இராப் பகலாய் அதைக் கற்பதும் ஓதுவதுமாய் அதில் மூழ்கியே போனார் அபூஸுஃப்யான். உலக வாழ்க்கையையும் அதன் கவர்ச்சியையும் தூக்கி முதுகுக்குப் பின்னால் எறிந்துவிட, மனமும் கவனமும் என அனைத்தும் அல்லாஹ், அவன் தூதர், இறை மார்க்கம் என்றாகிப் போனது அவரது வாழ்க்கை.
வரலாற்றுச் சிறப்புமிக்க 'இறுதிப் பேருரை'யில் அல்லாஹ்வின் தூதர், இந்த வரலாற்றில் இடம்பெறுகின்ற இருவரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்:
"... கேட்டுக் கொள்ளுங்கள். இன்றோடு அறியாமைக்கால மூடவழக்கங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. இரத்தத்திற்கு இரத்தம் எனும் கொலைப்பழி ஒழிக்கப் படுகிறது. அதை என் குடும்பத்திலிருந்து தொடங்குகிறேன். என் தந்தையின் உடன்பிறந்த ஹாரிதின் மகன் ரபீஆவைக் கொலை செய்தவர்களைப் பழி தீர்க்கும் கடமை எனக்கிருந்தது; அவர்களை நான் மன்னித்து விட்டேன்.
இன்றிலிருந்து வட்டி முற்றாக ஒழிக்கப்படுகிறது. அதையும் என் குடும்பத்திலிருந்து தொடங்குகிறேன். என் சிற்றப்பா அப்பாஸிடம் வட்டிக்கு வாங்கிய எவரும் அவருக்கு வட்டி செலுத்தத் தேவையில்லை ..."
அடுத்த ஆண்டுகளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்னுயிர் நீத்தார்கள். பரிதவித்துப் போனார் அபூஸுஃப்யான். தாயை இழந்த சிறு குழந்தையைப் போன்ற சோகம் தாக்கியது. அழுதார். தாங்கவியலா அச்சோகத்தில் விம்மியழுதார். திறம்வாய்ந்த கவிஞராதலால் சோகம் இரங்கற்பாவாக வெளிப்பட்டது. கேட்பவரை ஆழ்துயரத்தில் ஆழ்த்தும் விசனம் அப்பியிருந்தது அக்கவிதையில்.
காலம் தன் கடமைப்படி நகர்ந்து கொண்டேயிருக்க, உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்று ஆட்சி புரிந்து கொண்டிருந்த நேரம். ஒருநாள் அபூஸுஃப்யானின் உள்ளுணர்வு அவரிடம் அச்செய்தி சொல்லியது. ஜன்னதுல் பஃகீக்குச் சென்று குழிதோண்ட ஆரம்பித்துவிட்டார்.
மூன்று நாள் கழிந்திருக்கும். தம் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்து, “நான் மரணமடைந்ததும் எனக்காக யாரும் கேவி அழக்கூடாது. அல்லாஹ்வின்மேல் ஆணையாகக் கூறுகிறேன், நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நொடியிலிருந்து எந்தப் பாவமும் புரியவேயில்லை" சொல்லிவிட்டு கபடமற்றவராய் சாந்தமுடன் மரணத்தைத் தழுவினார் அபூஸுஃப்யான்.
கலீஃபா உமர், அவரது ஜனாஸாத் தொழுகையை நடாத்தி வைக்க அபூஸுஃப்யான் தயார் செய்துவைத்திருந்த குழியிலேயே அவரது நல்லடக்கம் நடைபெற்றது. அந்திம காலத்திலும் வாழ்வே நிதர்சனம் என்று நாமெல்லாம் குழிக் கணக்கில் வயலும் தோப்பும் வாங்கிக் குவிக்க, தம் சவக்குழியைத் தாமே தோண்டி இறுதிப் பயணத்துக்கு ஆயத்தமாயிருந்தார் அபூஸுஃப்யான இப்னுல் ஹாரித்.
ரலியல்லாஹு அன்ஹு!

No comments:

Post a Comment