சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் கடந்த தேர்தல்களை காட்டிலும் ஓட்டுப்பதிவு சதவிகிதம் கூடியுள்ளதால் அது யாருக்கு சாதமாக அமையும் என்பதில் தி.மு.க., அ.தி.மு.க., இரு அணிகளுமே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. ரிசல்ட் தெரிய ஒரு மாதம் ஆகும் என்பதால் வேட்பாளர்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டசபை தேர்களை விட தற்போது ஓட்டுப்பதிவு சதவிகிதம் கனிசமாக உயர்ந்துள்ளது. 60 சதவிகித ஓட்டு சதவிகிதமே அதிகமாக இருந்த காலம் மாறி பெரும்பாலன மாவட்டங்களில் 80சதவிகிதத்திற்கும் அதிகமாக பதிவாகியது. கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகள் சேர்ந்து மொத்தம் 80.6 சதவிகிதம் பதிவாகியது. இதில் கடலூர் 77, பண்ருட்டி 82, நெய்வேலி 82, விருத்தாசலம் 81, திட்டக்குடி 79, குறிஞ்சிப்பாடி 86, புவனகிரி 80, சிதம்பரம் 77, காட்டுமன்னார்கோவில் 78 சதவிகிதம் ஆகும். 1971ம் ஆண்டு முதல் 2006 வரை நடந்த சட்டசபை தேர்தல்களில் இதுவரை 80 சதவிகிதம் ஓட்டுப்பதிவு நடந்ததில்லை. தேர்தல் கமிஷன் கெடுபிடியால் மக்கள் தைரியமாகவும், நிம்மதியுடனும் வந்து ஓட்டளித்தார்கள், அரசு அலுவலகங்கள் முதல் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துவிட்டது, புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள், நடுநிலையாளர்கள், படித்தவர்கள் என பலதரப்பட்டவர்களும் ஓட்டளித்ததால்தான் இந்த உயர்வுக்கு காரணம் என பல தரப்பட்டவர்கள், பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். ஆனால் ஆர்வமுடன் ஓட்டுபோட்டவர்கள் யாருக்கு போட்டார்கள் என்பது தான் புதிராக உள்ளது. அதிக ஓட்டுப்பதிவு ஆளுங்கட்சியின் மீதான வெறுப்பை காட்டுவதாக அமையும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள் ளது. ஆனால் ஆளுங்கட்சி கூட்டணியினர் மட்டுமே தேர்தலில் பண பட்டுவாடா தாராளமாக்கியதால் கூடுதல் ஓட்டுப்பதிவு அவர்களுக்கு சாதமாகிவிடுமோ என எதிரணியான அ.தி.மு.க., அச்சப்படுகிறது. விலைவாசி உயர்வு, இலவசம், டாஸ்மாக் கடை போன்றவற்றை விரும்பாத நடுநிலையாளர்கள், புதிய வாக்காளர்கள், பெண்கள், படித்தவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அதன் எதிரொளிதான் ஓட்டுப்பதிவு உயர்வுக்கு காரணம் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. எனவே ஓட்டுப்பதிவு சதவிகிதத்தை இரு அணிகளுமே யாருக்கு சாதகமாக அமையும் என்று யூகிக்க முடியாத நிலையில், தினம், தினம் கூறப்படும் புதுப்புது தகவல்களால் குழப்பத்தின் உச்ச நிலைக்கே சென்று வருகின்றனர். ஓட்டு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய நிலையில் கடலூர் மாவட்ட கட்சியினரும், வேட்பாளர்களும் தூக்கமின்றி ரிசல்ட் நினைவாகவே இருந்து வருகின்றனர். வேட்பாளர்கள், கட்சியினரை விட ஓட்டுப்போட்ட பொதுமக்கள் ரிசல்ட் யாருக்கு சாதகமாக அமையும் என்பது குறித்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இரு அணி தலைவர்களும், வேட்பாளர்களும் டென்ஷனில் இருந்துவர, மக்களிடம் தீர விசாரிச்சாச்சு, "நாமதான்' என கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறி வருகின்றனர்.
நன்றி தினமலர் முதல் பக்கம்
No comments:
Post a Comment