வெற்றிக்கு வழிகள் - பகுதி-3 - வேண்டாமே தாழ்வு மனப்பான்மை
உங்களால் ஒரு செயலைச் செய்ய முடியாவிட்டால் “ஐயோ! இந்தச் செயலை நம்மால் செய்து முடிக்க இயலவில்லையே!” என்ற ஏக்கமும் கவலையும் வந்து விடுகிறது. இதனால் உங்கள் மனம் பேதலித்துப் பலவகை உணர்ச்சி களினால் தத்தளித்துத் தடுமாறுகிறது. நீங்கள் மட்டுமல்ல உங்களைப் போன்று எத்தனையோ பேர் உள்ளக் கிளர்ச்சிகளினாலும், மன எழுச்சி களினாலும், தடுமாறித் தவித்துக் கொண்டிருக் கிறார்கள். காரணம், அவர்கள் உள்ளத்தைச் செம்மைப்படுத்தாததுதான்! ஒருவருக்கு இருக்கும் ஆற்றல் மற்றவருக்கு இருக்கும் என்று கூறமுடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு குறைபாடு இருந்து கொண்டுதான் இருக்கும்.
ஒருவர் ஒல்லியான தேகத்தைப் பெற்ற வராக இருப்பார். இன்னொருவர் குள்ளமான தேகத்தைப் பெற்றவராக இருப்பார். மற்றொருவர் அடர்த்தியான கறுப்பு நிறத்தைக் கொண்டவராக இருப்பார். கொடிய பிணி யினால் பாதிக்கப்பட்டவராக இருப்பார். மூளை வளர்ச்சி குன்றியவராக இருப்பார். திக்குவாயை உடையவராகவும், கீச்சுக்குரலை உடையவ ராகவும், இருப்பார். அனைவராலும் வெறுக்கத் தக்க தடித்த, அகலமான மூக்கைக் கொண்ட வராக இருப்பார்.
பெண்களில் ஓரிருவர் ஆண்களின் குரல் பேசுபவர்களாக இருப்பார்கள். ஓரிருவர் முகத்தில் மீசை முளைப்பதும் உண்டு. மனிதர் களுக்குள் இப்படி எத்தனையோ குறை பாடுகள் இருக்கின்றன. இவர்கள் எல்லோருமே தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டு, தங்கள் செயல் பாடுகளை முடமாக்கி விட்டால், அவர்களால் முன்னேற்றப்பாதைக்குச் செல்ல முடியுமா?
படத்தில் இருப்பது: உங்களை யாரும் தாழ்வாக எண்ண முடியாது, உங்களுடைய அனுமதி இல்லாமல் - எலியனெர் ரூஸ்வெல்ட்.
தங்கள் மன உறுதியினால், தங்களிடம் உள்ள குறைபாடுகளைப் பொருட்படுத்தாமல், உறுதியோடு முயன்றால் வேகமாக முன்னேறுவார்கள். அவர்களுக்கு இந்த மன உறுதியைத் தருவது அவர்களிடமுள்ள தன்னம்பிக்கைதான்!
இந்தத் தன்னம்பிக்கையைத் தவிடு பொடியாக்கிடச் சிலர் வந்து விடுகிறார்கள். உடல் ஊனமுற்றவர், எந்த ஊனமும் உடல் இல்லாமல் இருக்கும் ஒருவரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகிறார். கறுப்பு நிறத்தை உடை யவர், சிவப்பு நிறத்தை உடையவரைப் பார்த்து ஏங்குகிறார். இப்படி ஒருவர் மற்றவரைப் பார்த்து ஏங்கும் போது, அங்கே அவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மை தோன்றி விடுகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் மற்றவரோடு நம்மை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. இவ்வாறு ஒப்பீடு செய்யும்போது, தன்னம்பிக்கைக் குறைவு ஏற் பட்டுத் தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது.
எனவே நீங்கள் மற்றவரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருக்கும் வரை தன்னம்பிக்கை ஒளி உங்கள் வாழ்வில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். நீங்கள் நீங்களாகவே இருந்தால் தான் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைக்க முடியும். இப்படி நீங்கள் நீங்களாகவே மாறும் போது உங்களை வருத்தி, கவலையடையச் செய்த தாழ்வு மனப் பான்மை உங்களைத் தோற்கடிக்க முடிய வில்லையே என்று எண்ணித் தாங்க முடியாத தோல்வியால் வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிற்கும்.
தாழ்வு மனப்பான்மைக்குக் காரணம், ஒப்பீடு செய்யும் மனோபாவம் தான்! இந்த ஒப்பீடு மற்றவரோடு செய்யும் கொள்கையைச் சிறுவயதிலிருந்தே நாம் கடைப்பிடித்து வருகிறோம். “நீயும் தான் இருக்கிறாயே, மக்கு! வகுப்பில் அவன்தான் முதல்!” என்று பெற்றோர் கள் திட்டும்போது, அதைக் கேட்கும் மகன் மகிழ்ச்சியின் உச்சிக்கா போவான்? மீள முடியாத துக்கத்தில் ஆழ்ந்து விடுவான்.
கருத்தொருமித்த இல்வாழ்க்கையில் தேவையில்லாமல் புகுந்து கணவன் மனைவி ஆகியோரைப் பிரிக்கத் துடித்துத் துணையாக இருப்பதும் இந்தத் தேவையில்லாத ஓப்பீடுதான் தன்னுடைய கணவன் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு பெண் ணுக்குத் தன்னைப் பற்றித் தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது. “என் கணவர் அரசு அலுவலகத் தில் சாதாரண எழுத்தராகப் பணியாற்றி வரு கிறார். எண்ணிச்சுட்ட பலகாரமாய் பட்ஜெட் வாழ்வு! அதோ, காரிலே கம்பீரமாகப் போய்க் கொண்டிருக்கிறாரே அவர் பிரபலமான ஒரு ஜவுளிக்கடையின் அதிபர் உம்.ம்…. ஒரு ஜவுளிக் கடை அதிபர் நமக்குக் கணவராக வந்து வாய்த்திருக்கக் கூடாதா? என்று மனதிற்குள் நினைக்கிறாள். தனக்குக் கிடைத்த வாழ்க்கையில் திருப்தி காணாமல் – நிம்மதி தேடாமல் எட்டாத பழத்திற்குக் கொட்டாவி விட்ட கதையாக ஆகும் போது, தாழ்வு மனப்பான்மை அங்கே கொடி கட்டிப் பறக்கிறது.
கணவனும் அப்படித்தான்! ‘இவளைத் திருமணம் செய்து கொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்’! அதோ போகிறாளே! அவளைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் என் வாழ்க்கை செழிப்பாக அமைந்திருக்குமே! என்று ஏக்கப் பெருமூச்சு விடுவதற்குக் காரணம், வாழ்க்கையில் என்றைக்கும் துன்பத்தைத் தருகின்ற இந்த ஒப்பீடுதான்!
தமிழோடு மற்ற மொழியிலுள்ள இலக் கணங்களை ஒப்பிட்டு ஒப்பிலக்கணம் என்ற அருமையான நூலைப் படைத்தனர். இந்த ஒப்பீடு, மொழியின் செம்மைக்கும், வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவி செய்யும். ஆனால் ஒரு மனிதனோடு, மற்றொரு மனிதனை ஒப்பிட்டுக் கூறிக் குறைகளைச் சுட்டிக் காட்டும் போது மன உறுதியில்லாதவர் மனதில் தாழ்வு மனப்பான்மை வெள்ளமெனப் பெருகி ஓடும் என்பதில் துளியும் ஐயமில்லை.
என்னால் யாருக்கும் ஒரு பயனுமில்லை. இந்த உலகம் என்னை ஒதுக்கி வைத்து விட்டது. என்னை யாரும் கண்டு கொள்வதே இல்லை. மற்றவரைப் புகழ்ந்து பேசும் உலகம் என்னை மட்டும் ஏன் பேசுவதில்லை? என்றெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உங்களைத் தாழ்வு மனப்பான்மை ஆட்டிப் படைக்கும்.
உங்களைப் பற்றி நீங்களே மிகவும் இழிவாக நினைத்துக் கொண்டிருந்தால் அதைத் தாழ்வு மனப்பான்மை என்று எண்ணாமல், உயர்வு மனப்பான்மை என்று எப்படிச் சொல்ல முடியும்!
இந்த உலகம் என்னைப் புகழ்ந்து பேச வேண்டும். என்னை எல்லோரும் கண்டு கொள்ள வேண்டும். இந்த உலகம் என்னை ஒதுக்கி வைக்கக் கூடாது. என்னால் இந்த உலகத்திற்கே நன்மை என்றùல்லாம் நீங்களாகவே சில தீர்மானங்களைப் போட்டு உங்கள் உள்ளம் என்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்குக் காரணம், உங்களிடமுள்ள தாழ்வு மனப்பான்மையே!
உங்களைக் கேவலப்படுத்துவதற்காக, வேண்டுமென்றே பிறர் உங்களை மட்டம் தட்டும் போதோ அல்லது கேலியாகப் பேசும்போதோ அவைகளை நீங்கள் நம்பி விடுகிறீர்கள். மற்றவர்கள் பேசும் மட்டமான பேச்சுக்கள் உங்கள் மனதில் அம்புகளாக மாறி விடுகின்றன. அவைகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் போதோ அல்லது அவைகளைக் கண்டு வருத்தப்படும் போதோ, தாழ்வு மனப்பான்மை என்ற சைத்தான் உங்கள் உள்ளத்தில் வந்து உட்கார்ந்து விடுவான்.
இந்தத் தாழ்வு மனப்பான்மையை உங்களிடமிருந்து போக்க முடியாதா? ஏன் முடியாது? எவர் எதைச் சொன்னாலும், உலகமே உங்களை எதிர்த்தாலும் நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். நீங்கள் உங்கள் மேல் வைக்கும் தன்னம்பிக்கையால் தாழ்வு மனப்பான்மை உங்களை விட்டு ஓடி விடும். இந்த உலகம் உங்களைப் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அதைக் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள்! அவைகளைத் துச்சமென மதியுங்கள், உங்கள் மனதைப் பற்றியிருந்த தாழ்வு மனப்பான்மை என்ற அச்சம் கண் காணாத இடத்திற்குச் சென்றுவிடும். எந்தக் காலத்திலும் உங்களைப் பற்றிய தளராத நம்பிக்கையோடு நீங்கள் செயல்படுங்கள். தாழ்வு மனப்பான்மையை அடியோடு தகர்த்தெறியுங்கள். வெற்றிமகள் உங்களுக்கு மாலை சூட்டி மகிழ்ந்திட விரைவில் வந்திடுவாள்!
- தாராபுரம் சுருணிமகன்
நன்றி : தன்னம்பிக்கை இணையதளம்
படித்ததில் பிடித்தது: நீங்கள் உங்களை யாருடனும் ஒப்பிடாதீர்கள், அப்படி ஒப்பிட்டீர்களானால், உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொள்கிறீர்கள்.
தோழமையுடன்
மஹ்மூதா மைந்தன்
No comments:
Post a Comment