Monday, March 7, 2011

தொழுகையில் ஏற்படும் மறதி !

1232. 'உங்களில் ஒருவர் தொழத் தயாரானால் அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் (கடைசி) இருப்பில் இருந்தவாறே இரண்டு ஸஜ்தாச் செய்யட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்


1226. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'என்ன விஷயம்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினீர்கள்' என ஒருவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்
தொழுகையில் ஏற்படும் மறதி
1224. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.
அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, மக்களும் நபி(ஸல்) அவர்களோடு எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தருவாயில் நாங்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த இருப்பிலேயே ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள்.


1225. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.
தொழுகை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள். அதன்பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.


1228. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துடன் தொழுகையை முடித்தபோது துல்யதைன்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா? அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா?' எனக் கேட்டார். 'துல்யதைன் கூறுவது உண்மைதானா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, மக்களும் 'ஆம்' என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் பிந்தைய இண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்து, பின் (அதிலிருந்து) எழுந்தார்கள். (தஷஹ்ஹுத் ஓதவில்லை.)
இப்னு அல்கமா கூறுகிறார்: நான் முஹம்மத் இப்னு ஸிரீனிடம் ஸஜ்தா ஸஹ்வில் தஷஹ்ஹுத் உண்டா? எனக் கேட்டேன். அதற்கவர், அபூ ஹுரைரா(ரலி) உடைய அறிவிப்பில் தஷஹ்ஹுத் இல்லைதான் என்றார்'

No comments:

Post a Comment