Monday, December 12, 2011

வெறும் நதிநீர்ப் பிரச்னை அல்ல; இந்திய ஒற்றுமை சம்பந்தப்பட்ட பிரச்னை, நினைவிருக்கட்டும்!


THANKS  BY தலையங்கம்:இதனால் யாருக்கு லாபம்?

First Published : 12 Dec 2011 02:56:46 AM IST

Last Updated : 12 Dec 2011 04:48:49 AM IST
கேரள எல்லையில் குமுளி அருகே சுமார் 80,000 பேர் போலீஸாரின் தடையுத்தரவை மீறி பேரணி நடத்தியதும், போலீஸார் தடுத்து நிறுத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 பணியில் இருந்த போலீஸாரால் இவர்களைத் தடுக்க முடியவில்லை என்றும்கூட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பேரணியை பொதுமக்கள் நடத்தினார்கள்; இதை அரசியல் அமைப்புகள் நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்றைய தினமும் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தி, எல்லையைக் கடக்க முயன்றுள்ளனர். இவர்களில் 6,000 பேர் மோட்டார் பைக்குகளில் வந்ததாகச் செய்திகளில் குறிப்பிடப்படுகிறது.
 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மக்களின் நலன் கருதி எந்தவொரு பிரிவினை சக்திக்கும் இடம் தராமல் இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பத்திரிகை விளம்பரங்கள் மூலமாக வேண்டுகோள் விடுத்த பின்னர், இத்தகைய பேரணியை அதிமுகவினர் நடத்தியிருக்க வாய்ப்பில்லை. கட்சித் தலைமையை மீறி இத்தகைய பேரணியை நடத்தவும், மறைமுகமாக இயக்கவும்கூட எந்தவொரு அதிமுக மாவட்டச் செயலருக்கும் துணிச்சல் கிடையாது என்பது நிச்சயம். அமைச்சர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.
 அவ்வாறாக அரசியல் சார்பு இல்லாமல் இந்த அளவுக்குப் பெருங்கூட்டம் ஒரு பொது நலனுக்காகத் திரள்கிறது என்பது உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். இருப்பினும், கேரள மக்களையும் அரசையும் மேலும் எரிச்சலூட்டவும், ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதலை முடுக்கிவிடவும்தான் இந்தப் பேரணியும் அத்துமீறல் ஊர்வலமும் பயன்படுமே தவிர, நிச்சயமாக முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தீர்க்க உதவாது. இதுபோன்ற செயல்கள் இரு மாநில நல்லுறவை மேலும் சிக்கலாக மாற்றும்.
 கேரள மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களுக்குத் தமிழகத்தையே சார்ந்துள்ளனர். கறிக்கோழி, முட்டை ஆகியன மட்டுமே ஆண்டுக்கு ரூ.1,780 கோடிக்கு தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதே அளவுக்கு நெல்லும் பிற தானியங்களும் செல்கின்றன. கேரள மாநிலத்துக்கு எந்த வாகனமும் செல்லக்கூடாது என்று மறித்தால் அல்லது அத்தகைய சூழ்நிலையை உருவாக்கினால், அதனால் பெரும் இழப்பைச் சந்திக்கப்போவது தமிழர்களும்தான்.
 கேரள மாநிலத்தவர் தமிழகத்தை நம்பாமல் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்து வாழ்ந்துவிட முடியும் என்றாலும், கர்நாடக மாநிலத்திலிருந்து பொருள்களை வரவழைப்பதில், செலவு அதிகம். இதனால் நெல், காய்கறி, கறிக்கோழி, முட்டை ஆகியவற்றுக்கு கேரள மக்கள் தற்போது கொடுக்கும் விலையைவிட 50 விழுக்காடு அதிகமாகக் கொடுக்கும் நிலைமை உருவாகும். இதைக் கேரள மக்கள் விரும்பவில்லை. விருப்பப்படவும் மாட்டார்கள்.
 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணை நீரால் பயன்பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளைக் காட்டிலும் மிக அக்கறையாகவும்; அரிசி, முட்டை, மாமிசம் பெற தமிழகத்தை நம்பியிருக்கும் கேரள மக்களைக் காட்டிலும் அதிக ஆவேசமாகவும், யாரோ சிலர், ஏதோ ஒரு சக்தி, இந்த விவகாரத்தில் கூச்சல்போட்டு, அக்கறையாக மோதலை உருவாக்கப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
 இந்தப் பிரச்னை போதாதென்று, நாமக்கல் மாவட்டக் கல்லூரிகளில் பயிலும் கேரளத்து மாணவர்களைத் தமிழர்கள் தாக்கியதாக, ஒரு மலையாளப் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி, கேரளத்தில் உள்ள பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஆனால், அந்தச் செய்தி பச்சைப் பொய் என்பதே உண்மை.
 இதே மலையாளப் பத்திரிகைதான், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற செய்தியை மிகைப்படுத்தி, கேரளத்தில் இந்த அணைக்கு எதிரான பிரசாரத்தை முதன் முதலாகத் தொடங்கி வைத்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்பதும், நிலநடுக்கம் ஏற்பட்டு அணை உடைந்தாலும், 50 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி அணை அனைத்து நீரையும் உள்வாங்கி நிற்கும் என்றும் கேரள அரசின் நீர்வளத் துறைக்கு நன்றாகத் தெரியும். இடுக்கி அணையில் புனல் மின்சாரம் தயாரிக்க இயலவில்லை என்பதால்தான் இந்த அணை மீது கேரள அரசுக்குக் கோபம் என்று நாம் நம்பிக்கொண்டிருந்த வேளையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள இன்னொரு கருத்து, இப்பிரச்னையின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது.
 ""முல்லைப் பெரியாறு அணையின் நீர்உயரம் 136 அடியாக இருக்கும்போது நீர்ப்பரப்பு 4,678 ஏக்கர். அணையில் 155 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கும்போது நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர். அதாவது 3,913 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த பல ஆண்டுகளாக நீரில் மூழ்காமல் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் கேரளத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து தங்கும் விடுதிகள் மற்றும் கட்டடங்கள் கட்டியுள்ளனர். 136 அடிக்கு மேலாக தண்ணீரைத் தேக்கினால் இந்த ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்ட விடுதிகள் தண்ணீரில் மூழ்கும். முல்லைப் பெரியாறு அணையைச் செயலிழக்கச் செய்ய இதுவும் ஒரு காரணமாக சிலர் தெரிவிக்கின்றனர்'' என்று முதல்வர் கூறியுள்ளார்.
 சுமார் 4,000 ஏக்கர் பரப்பில் ரிசார்ட் போன்ற விடுதிகள் கட்டியுள்ளவர்கள் யார்? இவர்களின் பின்புலம் என்ன? என்பதைப் பற்றி விசாரித்தால், முல்லைப் பெரியாறு அணையால் யாருக்கு இழப்பு, அதனால் யாருக்கு ஆத்திரம் என்பது வெளிப்படும்.
 நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவது, மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு சீர்கெடுவது இந்திய ஒற்றுமைக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்பதைத்தான். இந்தப் பிரச்னையில் ஏன் தமிழக, கேரள அரசுகளை விடவும் அதிக அக்கறையும் கவலையும் கொள்ள வேண்டியது மத்திய அரசுதான். இது வெறும் நதிநீர்ப் பிரச்னை அல்ல; இந்திய ஒற்றுமை சம்பந்தப்பட்ட பிரச்னை, நினைவிருக்கட்டும்!

No comments:

Post a Comment