Friday, March 9, 2012

நார்வே தரும் பாடம்!

, செய்தி கொடுத்ததdinamani kku  நன்றி. 
First Published : 10 Mar 2012 01:15:22 AM IST

Last Updated : 10 Mar 2012 02:03:50 AM IST

பூதாகரமாக்கப்பட வேண்டியவை சின்ன விவகாரங்களாக ஒதுக்கப்படும் அதேவேளையில், சில சின்ன விவகாரங்கள் பூதாகரமாக்கப்படுகின்றன. சிறிய விவகாரங்கள் பெரிதாவதற்குக் காரணம் அவற்றின் உணர்ச்சிகரமான சிக்கல். அத்தகைய ஒன்றுதான், குழந்தைகளை வளர்க்கத் தெரியவில்லை என்று சொல்லி, இந்தியப் பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரித்து, காப்பகத்தில் வளர்த்து வரும் நார்வே அரசின் நடவடிக்கை!
 இந்தச் சின்ன விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு, அந்தக் குழந்தைகள் அநாதைகளும் அல்ல, நாடு அற்றவர்களும் அல்ல. அந்தக் குழந்தைகள் இந்தியா திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு விவகாரம் பெரிதாகிப்போனது.
 ஆனாலும் நார்வே அரசாங்கம் அசைந்து கொடுக்கவில்லை. அண்மையில், ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித்த நார்வே வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜோனஸ் கர் ஸ்டோர், இந்த விவகாரத்தைப் பின்னோக்கிச் சென்று மறுஆய்வு செய்வோம் என்று கூறினார். அரசாங்கத்தின் விதிமுறைகளை அல்ல, அதனை எவ்வாறு கையாள்வது என்பதைத்தான் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் சொல்கின்றாரே தவிர, நார்வே அரசின் நடைமுறையை அவர் குறை சொல்லவே இல்லை. நார்வே அரசு மற்றும் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, அவர்கள் செய்த நடவடிக்கை சரியானது என்றே திடமாக நம்புகின்றன.
 இந்தக் குழந்தைகள் இருவரையும், சித்தப்பா அருணபாஸ் பட்டாசார்யாவிடம் ஒப்படைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகிறது. அவர் சிறந்த தந்தையாக இருப்பார் என்று குழந்தைகள் பாதுகாப்புத் துறை நம்புவதால், மார்ச் 23-ம் தேதி நார்வே நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
 சகாரியா, அனுரூப் தம்பதிகளுக்கு குழந்தைகளை வளர்க்கத் தெரியவில்லை என்று அறிக்கை அளித்த நார்வே அரசின் குழந்தைகள் பாதுகாப்புத் துறை, இதுவரை திருமணம் ஆகாதவரும் பல் மருத்துவருமான சித்தப்பா சிறந்த பெற்றோராக இருக்க முடியும் என்று நம்புகின்றது என்றால், இந்தச் சம்பவம் குறித்து நாமும் இவ்வேளையில் மறுஆய்வு செய்யத்தான் வேண்டும்.
 "தாய் தன் குழந்தைக்கு கையால் உணவை ஊட்டினார்' என்பதும், "தந்தையுடன் ஒரே கட்டிலில் உறங்கினான்' என்பதும்தான் இவர்கள் செய்த குற்றம் என்பது இக்குழந்தைகளின் பெற்றோர் சொல்வதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள நேரிட்டவை. ஒரு தாய் தன் குழந்தைக்கு கையால் உணவு ஊட்டுவது இந்தியக் கலாசாரம்தானே? ஒரு குழந்தை தன் தந்தையுடன் உறங்கினால் என்ன தவறு? இந்த உணர்வுதான் நம்மை இந்தப் பிரச்னையைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
 நார்வே அரசின், குழந்தைகள் பாதுகாப்புத் துறை அளித்த நீண்ட அறிக்கை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் அபிக்யான் பள்ளியில் எப்போதும் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டதையும், தனிமையில் தனது கரங்களைத் தரையில் ஆத்திரத்துடன் அடிப்பதையும் கண்ட ஆசிரியர்கள் அந்தக் குழந்தைக்கு ஏதோ மனக்குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, குழந்தைகள் பாதுகாப்புத் துறைக்குத் தெரிவித்தனர். குழந்தைகள் பாதுகாப்புத் துறை சுமார் 6 மாதங்கள் இந்தப் பெற்றோரைக் கண்காணித்திருக்கிறது. இவர்கள் குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து கண்காணித்து, தனது அறிக்கையை அரசுக்குத் தெரிவித்தது. அதன் பிறகுதான் அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியது.
 உணவைக் கையால் ஊட்டியதைக் குற்றமாகச் சொல்கிறார்கள் என்று தாய் சொல்வதைக் கேட்கிறோம். ஆனால் அந்த அறிக்கையில், குழந்தை மலஜலம் கழித்தால் அந்த நாப்கினை மாற்றுவதற்கான டயாபெர் டேபிள்-கூட அந்த வீட்டில் இல்லை என்கிறது அறிக்கை. என்னுடன் ஒரே கட்டிலில் உறங்கியதைக் குற்றமாகச் சொல்கிறார்கள் என்று தந்தை சொல்வதைத்தான் நாம் கேட்கிறோம். ஆனால், அவர் எப்போதும் வேலை, வேலை என்று வெளியூர் சென்றுகொண்டிருக்கிறார். குழந்தையுடன் செலவிடும் நேரம் குறைவு என்று குறிப்பிடுகிறது அறிக்கை.
 மேலோட்டமாகத் தெரியவரும் இந்த அறிக்கையின் சில விவகாரங்கள், பெற்றோரால் இந்தக் குழந்தை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணரும்படிச் செய்கின்றன. குழந்தைகள் பாதுகாப்புத் துறை அறிக்கை நமக்கு முழுமையாகத் தெரியவந்தால், ஒருவேளை, நார்வே அரசு மேற்கொண்ட முடிவு சரியானதுதான் என்ற முடிவுக்கும்கூட வர நேரிடலாம்.
 குழந்தைக்கு கையால் உணவை ஊட்டுவதும், தந்தையுடன் உறங்குவதும் இந்தியக் கலாசாரமாக இருக்கலாம். ஆனால், மலஜலம் கழித்த குழந்தையை உடனே மாற்றுடைக்கு தயார்படுத்தாமலும், குழந்தையுடன் உரையாடி, விளையாடாமல் எப்போதும் வேலையாய் இருப்பதும் எந்தக் கலாசாரத்தின்படியும் புறக்கணிப்புதானே? குழந்தைகளைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளாமல் இருப்பதன் அடையாளம்தானே? பெற்றோரின் இந்தப் பொறுப்பின்மையை நிதானமாக ஆய்வு செய்து, அறிக்கை கொடுத்து, நடவடிக்கையும் எடுத்த நார்வே அரசை, ஏதோ குற்றவாளிபோல பார்க்கும் நிலை ஏற்பட்டதற்குக் காரணம், நாம் உணர்ச்சியால் வாரிச்செல்லப்பட்டுவிட்டோம் என்பதுதான்.
 இந்தியாவில் எத்தனை பெற்றோருக்கு குழந்தைகளை வளர்க்கத் தெரியும்? கலாசாரம் வேறு, புறக்கணிப்பு அல்லது பொறுப்பின்மை வேறு. நாம் காலாகாலமாகப் பின்பற்றி வந்த குழந்தைகள் வளர்ப்புமுறை தவறா என்று சிலர் கேட்கக்கூடும். நாம் காலாகாலமாக வாழ்ந்த அதே வாழ்க்கையையா இப்போது வாழ்கிறோம்? நமக்கு வசதியானவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்வதுபோல, மேலைநாட்டுக் கலாசாரத்தில் இருக்கும் நல்ல அம்சங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நமது குழந்தை வளர்ப்பு முறை பற்றி சிந்திக்க வேண்டி இருக்கிறது.
 பள்ளியில் படிக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் மனஉளைச்சலைப் பற்றி, அரசாங்கத்தை விடுங்கள், நம்மில் எத்தனை பேர் கவலைப்படுவோம்? நார்வே அரசின் செயல்பாட்டில் இருந்து நாம் படிக்க வேண்டியவை நிறையவே இருக்கின்றன போலத் தெரிகிறதே!

No comments:

Post a Comment