கடுமையான மின்வெட்டுக்குக் காரணம் என்ன? தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின்வெட்டுக்கே ஆற்காடு வீராசாமியின் பெயரைச் சூட்டி, ஒரு அமைச்சரின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல்தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பதுபோல பிரச்சினையைச் சுருக்கி சித்தரித்தன ஊடகங்கள். மின்வெட்டு காரணமாக மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, “ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின் பற்றாக்குறையைப் போக்குவேன்” என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தார்.
சென்ற ஆண்டு டிசம்பரில் எப்.ஐ.சி.சி.ஐ. என்ற இந்தியத் தரகு முதலாளிகள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், “2012 இல் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது” என பிரகடனம் செய்தார். 2012ஆம் ஆண்டோ, எட்டு மணி நேர மின்வெட்டுடன் தொடங்கியிருக்கிறது. “2014இல் தமிழகம் மின் உபரி மாநிலமாக இருக்கும்” என்று இப்போது குறி சொல்லியிருக்கிறார் அமைச்சர்.
திட்டமிட்டபடி அனல் மின் நிலையங்கள் உற்பத்தியை தொடங்காதது, இருக்கின்ற மின்நிலையங்களில் பழுது காரணமாக உற்பத்தி குறைந்திருப்பது,
மத்திய மின் தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காதது என்று தற்போதைய மின்பற்றாக்குறைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
2006இல் தமிழகத்தின் மின் தேவை 8500 மெகா வாட். 2012இல் 12,000 மெகாவாட். பெருகியிருக்கும் இந்த மின் தேவையை ஈடு செய்யும் விதத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின் உற்பத்தி பெருக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறது அ.தி.மு.க. கடந்த பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க; தி.மு.க. இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் அரசின் சார்பில் புதிதாக மின் நிலையம் எதுவும் அமைக்கப்படவில்லை என்பதே உண்மை.
இருப்பினும் மின்வெட்டு தீவிரமடைய அடைய, மக்களின் கோபம் இந்தக் கட்சிகளை நோக்கித் திரும்பாமல், அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம், இடிந்தகரை மக்களை நோக்கித் திட்டமிட்டே திருப்பப் படுகிறது. தினமலர், காங்கிரசு அமைச்சர் நாராயணசாமி, ப.சிதம்பரம், பாரதிய ஜனதாக் கட்சி, கருணாநிதி, போலி கம்யூனிஸ்டுகள் ஆகிய அனைவரும் ஒரே குரலில் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தை நடத்துகிறார்கள்.
குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதைதான். கடுமையானதொரு மின்பற்றாக்குறையில் நம்மைத் தள்ளிய குற்றவாளிகள் இவர்கள்தான். அணு மின்சாரம்தான் இதற்குத் தீர்வு என்று அடுத்த படுகுழியையும் இவர்கள் நமக்குத் தயார் செய்கிறார்கள்.
“மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற!” என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்ற பல்வேறு தரப்பினரும், தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்.
மின்வெட்டுக்கு எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாத, கூடங்குளம் இடிந்தகரை மக்களைக் குற்றவாளிகளாக்குகிறார்கள்.
இப்படி ஒருபுறம் மக்களின் கோபம் குறி தவறிப் போக, இன்னொரு புறம், பிப். 16 அன்று தமிழகத்தின் பிரபல நாளேடுகளில் வெளிவந்த ஒரு விளம்பரம் மின்வெட்டு பிரச்சினையின் முக்கியமானதொரு பரிமாணத்தை நமக்கு காட்டியது.
“தமிழகத்தில் மின்பற்றாக்குறையின் அளவு 30%. இந்தப் பற்றாக்குறையை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, இலட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கும், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் 65% மின்வெட்டு விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மின்வெட்டே இல்லை. மேற்கூறிய நிறுவனங்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தோ, தேசியத் தொகுப்பிலிருந்தோ வாங்கிக் கொள்ள ஏதுவாக கம்பித் தடங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றைக் காட்டிலும் தமிழக மின்வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலை குறைவு என்பதால், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த மின்சாரத்தை ஒட்ட உறிஞ்சுகிறார்கள்.
மின்சாரம் என்பது தமிழக மக்களின் பொதுச்சொத்து என்பதை உணர்ந்து, தாங்கள் அனுபவித்து வரும் இச்சலுகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தானாக முன்வந்து விட்டுக் கொடுக்க வேண்டும்”
என்று தமிழகத்தின் ஜவுளி, இஞ்சினியரிங் ஆலைகள், பவுண்டரிகள் மற்றும் சிறுதொழில் முனைவோரின் சங்கங்கள் அந்த விளம்பரத்தில் கோரியிருந்தனர். இதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் செவி சாய்க்கவில்லை.
அரசாங்கமும் இந்த அநீதிக்கு பதிலளிக்கவில்லை.
எனினும் இந்த விளம்பரம், தமிழக மின்வெட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும், அதில் பளிச்சென்று தெரியும் மறுகாலனியாக்க கொள்கையையும் அம்பலப் படுத்துகிறது.
நோக்கியா, ஹூண்டாய், போர்டு, ரெனால்ட், நிஸ்ஸான், டைம்லர், அப்போலோ டையர்ஸ், செயின்ட் கோபெய்ன், நோக்கியா, சீமன்ஸ், மோசர் பேர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், வாசல் முதல் கழிவறை வரை குளிரூட்டப்பட்ட ஆடம்பர மால்கள், ஐ.டி. நிறுவனங்களுக்காக உள்நாட்டுத் தொழில்கள் காவு கொடுக்கப்படுவதை எடுத்துக் காட்டுகிறது.
இனி தமிழகத்தின் மின் உற்பத்தி, விநியோகம் தொடர்பான சில அடிப்படையான புள்ளி விவரங்களைப் பார்ப்போம். 2010-11ஆம் ஆண்டில் தமிழகம் பயன்படுத்திய மொத்த மின்சாரம் 7499 கோடி யூனிட்டுகள். இதில் மாநில அரசுக்கு சொந்தமான மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 2578.40 கோடி யூனிட்டுகள். மீதமுள்ள 4920.60 கோடி யூனிட்டுகளை மத்திய மின் தொகுப்பிலிருந்தும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்தும் தமிழக அரசு வாங்கியிருக்கிறது.
மொத்த மின்சாரத்தில் 18.5% கம்பித்தட இழப்பு மற்றும் திருட்டுக்குப் போய் விடுகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும் வாரியத்துக்கு ஏற்படும் இழப்பு மட்டும் ரூ.2000 கோடி.
மாநில அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு
0.21 காசுகள் (நீர்மின்சக்தி).
அதிக பட்சம் யூனிட்டு ரூ.2.14 காசுகள்(அனல்மின்சக்தி). தமிழகத்திலுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழக அரசு விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு ரூ.3.96. அதிகபட்சம் ரூ.17.00.
201112 கணக்கீட்டின்படி மின்வாரியம் உற்பத்தி செய்கின்ற மற்றும் வாங்குகின்ற மொத்த மின்சாரத்தின் சராசரி அடக்க விலை யூனிட் ஒன்றுக்கு ரூ.5.31. விற்பனை செய்கின்ற மின்சாரத்தின் சராசரி விலை யூனிட் ஒன்றுக்கு 3.81. இந்த வகையில் தற்போது யூனிட் ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1.50. இதனை ஈடு செய்வதற்குத்தான் மின் கட்டண உயர்வு என்று ஜெயா அரசு கூறுகிறது.
தமிழகத்தின் மின்சாரம் வீடுகள் 27%, விவசாயம் 20.93%, வணிக நிறுவனங்கள் 10.43%, தொழிற்சாலைகள் 34.92% என்றவாறு நுகரப்படுகிறது.
வீடுகளுக்கு ரூ.1.85 முதல் ரூ.2.90 வரை; வணிக நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5.05 முதல் ரூ.6.00 வரை; தொழில் துறைக்கு ரூ.3.30 முதல் ரூ.4.05 வரை என்ற விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதில் வீடுகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு குறைந்த பட்சம் ரூ.2.00 இல் தொடங்கி அதிகபட்சம் ரூ.5.75 என்று உயர்த்தவிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து பெறப்படும் உண்மை என்ன? மாநில அரசானது, மின் உற்பத்தி நிலையங்களைத் தானே நிறுவாமல், தனியார் முதலாளிகளிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதால்தான் மின்சாரத்தின் விலை பன்மடங்கு அதிகரிக்கிறது. தமிழக மின்வாரியத்தின் 9% மின்சாரத் தேவையை நிறைவு செய்து விட்டு, வாரியத்தின் வருவாயில் 35 சதவீதத்தை தனியார் முதலாளிகள் விழுங்கிவிடுகின்றனர் (இந்தியா டுடே, பிப்,29, 2012).
மின் கட்டண உயர்வுக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், ‘தனியார் முதலாளிகளிடமிருந்து மின்சாரம் வாங்குவது ஏன்?’ என்று மக்கள் கேட்டதற்கு, “அவ்வாறு வாங்கவில்லையென்றால், 18 மணி நேர மின்வெட்டை அமல்படுத்த வேண்டியிருக்கும்”
என்று பதிலளித்திருக்கிறார் தமிழக மின்வாரியத்தின் நிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால் (தினமலர், ஜன30, 2012). தமிழக மின்வாரியத்தின் தற்போதைய கடன் 56,000 கோடி ரூபாய் என்றும் இவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த 56,000 கோடி கடன் வந்தது எப்படி? விவசாயத்துக்கான இலவச மின்சாரம்தான் இதற்கு காரணம் என்று பலரும் இதற்கு பதிலளிக்கக் கூடும். அது உண்மைதானா என்பதை விவரங்களிலிருந்து பின்னர் பார்ப்போம். விவசாயத்துக்கு ஆற்றுத் தண்ணீரை விவசாயிகளுக்கு இலவசமாகத் தரக்கூடாது என்று கூறுவதும், இலவச மின்சாரம் கூடாது என்று கூறுவதும் ஒன்றே. நீர்ப்பாசனம் என்பது விவசாயத்துக்கான அடிப்படைக் கட்டுமான வசதியாகும். இதனை செய்து தருவது அரசின் கடமை. கால்வாய் அல்லது ஏரிப்பாசன வசதிகளை அரசு செய்து தரத் தவறியதால், தனது சொந்தச் செலவில், கிணறு/பம்புசெட் போட்டுக் கொள்ளும் விவசாயிக்கு மின்சாரத்தை வழங்குவது அரசின் கடமை. அது இலவசமல்ல, சலுகையுமல்ல.
ஆறு வழிச்சாலைகள், சலுகை கட்டணத்தில் சரக்கு ரயில்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம்தண்ணீர் உள்ளிட்ட வசதிகள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன்கள், பிட்டர்டர்னர் முதல் பொறியியல், மேலாண்மைத் துறைகள் வரையிலான அனைத்திலும் தகுதியான நபர்களை உருவாக்கி முதலாளிகளுக்கு வழங்கும் கல்லூரிகள், ஏற்றுமதி மானியங்கள், இறக்குமதி வரிச்சலுகைகள்
என மக்களின் வரிப்பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொட்டுகின்ற அரசு, இவற்றையெல்லாம் முதலாளிகளுக்கான ‘இலவசம்’ என்று அழைப்பதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
யூனிட் 17 ரூபாய் வரை விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்தை, ரூ.3.30 விலையில் கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தமிழக அரசு, இதனை மானியம் என்று கூறுவதில்லை. அதனால் ஏற்படும் இழப்பையும் கணக்கிட்டுக் கூறுவதில்லை. இதைத்தான் மின்வெட்டுக்காக சிறு தொழிலதிபர்கள் கொடுத்துள்ள விளம்பரம் அம்பலப்படுத்துகிறது.
அதேபோல, கம்பித்தட இழப்பு என்று கூறப்படும் சுமார் 18.5 சதவீதத்தில் பெரும்பகுதி ஆலை முதலாளிகள் செய்யும் மின்சாரத் திருட்டாகும். துணை மின்நிலையங்களிலிருந்தே நேரடியாகவே மின்சாரம் திருடப்பட்டாலும், அந்த மின்சாரமும் ‘இழப்பு’ என்று காந்திக் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகிறது. இவை ஒருபுறமிருக்க, “தகவல் தொழில் நுட்பத்தின் துணையுடன் இயங்கும் தொழில்களுக்கான (ITES) மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 5 ரூபாயிலிருந்து ரூ.3.50 ஆக குறைக்க வேண்டும்” என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது தமிழ்நாடு மின்வாரியம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மின்சாரத்தின் விலை என்ன என்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ள யாருமறியாத இரகசியம். இவை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பற்றிய விவரங்கள்.
இனி வாங்கப்படும் மின்சாரத்துக்கு வருவோம். மின் வாரியம் அளிக்கும் விவரங்களின்படியே, அரசாங்க மின்சாரத்தின் விலையை விட தனியார் மின்சாரத்தின் கொள்முதல் விலை பன்மடங்கு அதிகமாக இருப்பதுதான் மின் வாரியத்தின் நட்டத்துக்கு காரணம். இன்டிபென்டென்ட் பவர் புரொடியூசர்ஸ் (சுயேச்சையான மின் உற்பத்தியாளர்கள்) என்று அழைக்கப்படும் தனியார் முதலாளிகளிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து கொண்டும், மெர்ச்சென்ட் பவர் கார்ப்பரேசன்
(வணிக மின் உற்பத்திக் கழகங்கள்) என்று அழைக்கப்படுவோரிடம் சந்தை விலையிலும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது அரசு. மின்சாரத்தின் வெளிச்சந்தை விலை சென்ற ஆண்டில் மட்டும் குறைந்த பட்சம் யூனிட் ரூ.1.10 இல் தொடங்கி ரூ.12.00 வரை ஏறி இறங்கியுள்ளது.
இதில் எப்போதுமே குறைந்த பட்ச விலையைக் கூறுவது அரசு மின் நிலையங்களாகவும், அதிக பட்ச விலையைக் கோருவது தனியார் முதலாளிகளுமாகவே இருக்கின்றனர்.
இன்று மின் வெட்டை சமாளிப்பதற்காக யூனிட் ரூ.4.50 விலையில் குஜராத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு வாங்கி வருகிறது. இதில் 235 மெகாவாட் மட்டுமே வந்து சேர்வதாகவும் 265 மெகாவாட் மின்தட இழப்பில் போய்விடுவதாகவும் கூறுகிறார் அமைச்சர் நத்தம் விசுவநாதன். இதனால், வாங்குகின்ற மின்சாரத்தின் உண்மையான விலை யூனிட்டுக்கு
10 ரூபாய் ஆகிவிடுகிறது.
இதே மின்சாரத்தை தமிழகத்தின் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அரசு வாங்க முடியும். தமிழகத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் மட்டும் 6007 மெகாவாட். தனியார் அனல் மின் நிலைய உற்பத்தித் திறன் 1180 மெகாவாட். “சென்ற ஆண்டு யூனிட் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை கொடுத்து 1500 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடம் வாங்கினோம். 10,000 கோடி ரூபாய் அவர்களுக்கு பாக்கி வைத்திருப்பதால், இந்த ஆண்டு எதுவும் செய்வதற்கில்லை” என்று கூறுகிறார் ஒரு மின்வாரிய அதிகாரி. (டைம்ஸ் ஆப் இந்தியா, பிப்.23, 2012)
இதுநாள் வரை யூனிட் 5 ரூபாய்க்கு தங்களிடம் மின்சாரத்தை வாங்கிவந்த மின்வாரியம், இப்போது ரூ.3.50 கேட்பதாகவும், இதன் காரணமாக 800 மெகாவாட் அனல்மின் உற்பத்தியை முடக்கவேண்டியிருக்கும் என்றும் சென்ற ஆண்டு மே மாதம் தமிழக அரசிடம் தெரிவித்திருக்கிறது தனியார் மின் உற்பத்தியாளர் சங்கம். (டைம்ஸ் ஆப் இந்தியா, மே 30, 2011) “மின்சாரத்தின் விலையைக் கூட்டி விற்பதன் மூலம் மின் வாரியத்தை நட்டத்தில் தள்ளுகின்ற தமிழ்நாட்டிலுள்ள 5 தனியார் அனல் மின் நிலையங்களை உடனே அரசுடைமை ஆக்கு” என்று தீர்மானமே இயற்றி தி.மு.க. அரசுக்கு அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர் சங்கம் (தி இந்து, 19.5.2008).
தனியார் மின் நிலையங்களை அரசுடைமை ஆக்குவது இருக்கட்டும்,
முதலில் கூரை ஏறிக் கோழி பிடித்தார்களா என்று பார்ப்போம். 20052010 காலகட்டத்தில் மின் தேவை 3977 மெகாவாட் அதிகரித்தது என்றும், ஆனால் வெறும் 290 மெகாவாட் அளவிற்கு மட்டுமே புதிதாக உற்பத்தி செய்யப்பட்டதென்றும் 200910 க்கான கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை கூறுகிறது. இது ஒன் றைத் தவிர 20012010 காலகட்டத்தில்,
(அதாவது அ.திமு.க; தி.மு.க. இரு ஆட்சிகளிலும்) புதிதாக ஒரு மெகாவாட் கூட உற்பத்தித்திறன் கூட அதிகரிக்கப்படவில்லை.
இந்தப் பத்தாண்டுகளில் ஜெயாவும் கருணாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் கொண்டு வந்து இறக்கியிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், சென்னையிலும் மற்ற பெரு நகரங்களிலும் பெருகியிருக்கும் ஆடம்பர மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், நடுத்தர வர்க்கத்தினரிடையே பெருகியிருக்கும் விதவிதமான மின் உபகரணங்கள், ஏ.சி.மிசின்கள் ஆகிய இவற்றுக்கான மின்சாரத்தை யார் கொடுப்பது? இதற்காகவேனும் மாநில அரசு தனது சொந்த அனல் மின்நிலையங்களைத் தொடங்கவேண்டும் என்று அ.தி.மு.க; தி.மு.க அரசுகளுக்குப் புரியாததற்குக் காரணம் அறியாமையா, நிர்வாகத் திறமையின்மையா?
இரண்டுமல்ல. புதிதாக அரசுப் பள்ளிகளோ கல்லூரிகளோ திறக்காமல், மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளைக்கு கல்வியைத் திறந்து விட்டிருப்பதற்கு எது காரணமோ, அதுதான் அரசு தனது சொந்த முதலீட்டில் மின்நிலையங்களைத் தொடங்காததற்கும் காரணம். “மருத்துவம், கல்வி ஆகியவற்றைப் போலவே, மின்சாரமும் ஒரு விற்பனைச் சரக்கு. பொதுநல நோக்கிலோ அல்லது சமூக நோக்கிலோ அரசாங்கம் மக்களுக்கு மின்சாரத்தை குறைந்த விலையில் வழங்குவது கூடாது. அதன் விலை சர்வதேச சந்தை விலையோடு ஒத்திருக்கவேண்டும். அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மின் துறையில் முதலீடு செய்ய இயலும்” என்ற உலக வங்கியின் ஆணைப்படி 2003 இல் பாரதிய ஜனதா அரசு புதிய மின் சட்டத்தை இயற்றியது.
அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட 1948 மின்சாரச் சட்டம், மின்சாரம் என்பதை விவசாயம், தொழில், மற்றும் வீட்டு உபயோகங்களுக்கான அத்தியாவசியத் தேவையாகவும், லாப நோக்கமின்றி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவையாகவும் வரையறுத்தது. இதன் காரணமாகத்தான் பல மாநிலங்களின் குக்கிராமங்கள் வரை மின்கம்பிகள் சென்றன. 2003 சட்டமோ மின்சாரத்தை லாபமீட்டும் சரக்காகவும், மின் விநியோகத்தை வணிக நடவடிக்கையாகவும் வரையறுத்தது. மாநில மின் வாரியங்கள் மின் உற்பத்தி, மின் கடத்துதல், மின் விநியோகம் என்று மூன்று நிறுவனங்களாக உடைக்கப்பட்டன. மின் உற்பத்தி தனியார் மயமாக்கப்பட்டது.
இன்று அனைத்திந்திய அளவில் தனியார் மின் நிலையங்களின் உற்பத்தி 48,000 மெகாவாட். நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் இது 23% ஆகும். அடுத்த சில ஆண்டுகளில் தனியார் உற்பத்தி மேலும் 30,000 மெகாவாட் அதிகரிக்க இருக்கிறது. அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கும் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளை அனுமதிக்க இருக்கிறது மன்மோகன் அரசு. தமிழ்நாட்டில் மட்டும் 18,140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 10 வணிக மின் உற்பத்திக் கழகங்களுக்கு
(அனல் மின்சாரம்) தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் கார்ப்பரேட் முதலாளிகளின் பங்கு மென்மேலும் அதிகரிப்பதையே இவை காட்டுகின்றன. இது அதிகரிக்க அதிகரிக்க மின்சாரத்தின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அரசின் கையிலிருந்து அவர்கள் கைக்கு முழுவதுமாக மாறிவிடும். ‘மேட்டூர் நீர்மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு 20 காசு’ என்று தமிழக மின்வாரியம் கூறினாலும், ‘கூடங்குளம் அணுமின்சாரம் அஞ்சே காசுகள்’ என்று அப்துல் கலாம் கூவினாலும், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு நாம் செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு என்பதைத் தீர்மானிப்பவர்கள் கார்ப்பரேட் முதலாளிகளாகத்தான் இருப்பார்கள்.
மருத்துவம், கல்வி முதலான துறைகளில் மக்களின் இரத்தத்தைப் பிழிந்து காசாக்கத் தெரிந்த முதலாளிகள், கரெண்டு பில்லுக்கான காசை நம் எலும்பைப் பிழிந்தேனும் எடுத்துவிடுவார்கள்.
மின்சாரம் தனியார்மயம் என்பது உழைக்கும் வர்க்கத்தின் மீதும், உள்நாட்டு சிறு தொழில்கள் மற்றும் விவசாயத்தின் மீதும் நிரந்தரமான மின்வெட்டைத் திணித்துவிடும்.
இன்றைய மின்வெட்டுக்கு முக்கியக் காரணம், மின்சாரம் வாங்குவதற்கு தமிழக மின்வாரியத்திடம் பணமில்லை என்பதே; மின்சாரப் பற்றாக்குறை என்பது இரண்டாவது காரணம்தான். மின்சாரத்தின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் நாளை பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகளின் கைகளுக்கு முற்றிலுமாக மாறிவிடும்போது, அவர்கள் சொல்லும் சர்வதேச சந்தை விலைக்கு மின்சாரத்தை வாங்க நம்மிடம் பணமிருக்காது. எனவே மின்வெட்டு நம்மீது திணிக்கப்படும். அந்த மின்வெட்டிலிருந்து நம்மைக் காப்பாற்ற எந்த அணு சக்தியாலும் முடியாது. அதற்கு மக்கள் சக்தி தேவைப்படும். இன்று கூடங்குளத்தைக் கூடாதென்று நிறுத்தி வருகிறதே, அதே மக்கள் சக்திதான்!
______________________________________________
No comments:
Post a Comment