Monday, March 19, 2012

வட மாநிலத் தொழிலாளர்களை வாட்டும் வறுமையும் குற்ற முத்திரையும்

சென்னை: சென்னையில் வசிக்கும் பிற மாநில தொழிலாளர்கள் குற்றவாளிகளாகவும், சமூக விரோதிகளாக சித்தரிக்கப்பட்டும், துயரமான வாழ்க்கை வாழ்ந்தாலும், தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அவர்களுடைய பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்று கூறுகிறது தமிழக தொழிலாளர் துறையின் ஆய்வு.
 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழிலாளர் துறை 2010-ல் நடத்திய விரிவான ஆய்வில் அரசுக்கே பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.
 பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் தொழிலாளர்களில் 80 சதவீதத்தினர் சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் கட்டுமான நிறுவனங்கள், குவாரிகள், செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் வேலை செய்கின்றனர்.
 எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 78 சதவீதம்: இவர்களில் 75 சதவீதம் பேர் தரகர்கள் மூலம் பணிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்தத் தொழிலாளர்களின் குடும்பத் தலைவர்களில் 78 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். மீதமுள்ளவர்களில் 10 சதவீதம் பேர் ஆரம்பக் கல்வி மட்டுமே பெற்றவர்கள் என்கிறது அந்த ஆய்வு.
 17 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே எழுத்தறிவு வெறும் 12 சதவிகிதம் மட்டுமே. 54 சதவிகிதம் பேருக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. உதவி செய்யும் ஆட்கள் தமிழகத்தில் ஒரு நாள் கூலியாக சுமார் ரூ. 250 பெறும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்களுக்கு ரூ. 100-120க்கு மேல் கிடைப்பதில்லை என்று சமூக அமைப்புகள் தெரிவிக்கின்றன. தாங்கள் அழைத்து வரும் நல்ல தொழிலாளர்கள், வேறு நல்ல பணிக்கு சென்றுவிடக்கூடும் என்று கருதும் பல தனியார் நிறுவனங்கள் கருதுவதால், தங்களது நிறுவனங்களுக்கு அருகிலேயே அவர்களுக்குத் தாற்காலிக குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்கின்றனர்.
 மோசமான குடியிருப்பு வசதி: ஆனால், அவற்றை குடியிருப்பு என்பதை விட மாட்டுக் கொட்டகை என்று அழைக்கலாம் என்கிறார் ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர். அத்தகைய குடியிருப்புகளில் 92 சதவிகித குடியிருப்புகள் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளால் அமைக்கப்பட்டவை. மீதமுள்ளவர்களில் பல, தகரக் கொட்டகைகள் என்பது இன்னும் அவலம். கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் பெயரளவுக்கே செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான குடியிருப்புகளில் குடிநீர் வசதிகள் இருப்பதில்லை. 69 சதவிகித கைக்குழந்தைகளுக்கு பெற்றோரால் பால் கூட வழங்க முடியாமல் இருப்பதுதான் அதிர்ச்சியான தகவலாகும்.
 30 சதவிகிதத்துக்கும் அதிகமான கைக் குழந்தைகள், தங்களைவிட சில வயது மூத்த பிற குழந்தைகளின் கண்காணிப்பிலேயே பகல் முழுதும் விடப்படுகின்றன. குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவும் இந்த பாதுகாப்பின்மை காரணமாகிவிடுகிறது.
 பரிந்துரைகள்: ஆரோக்கியம், கல்வி, உயிர் பாதுகாப்பு, பாலியல் பாதுகாப்பு முதலிய எந்த அம்சமும் இல்லாமல் புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் வாழ்ந்து வருவதால்,
 2010ல் செய்யப்பட்ட அந்த ஆய்வின் முடிவில் தொழிலாளர் நலத்துறை 8 பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது.
 அந்தப் பரிந்துரைகளில், சிலவற்றை நிறைவேற்றியிருந்தால்கூட, இடம்பெயரும் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படுவதோடு, அவர்களால் ஏற்படுவதாகக் கூறப்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைக் கண்காணிக்க விரிவான புள்ளிவிவரம் கிடைத்திருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 இடம் பெயர்ந்த தொழிலாளர்களை கண்காணிக்கிறோம் என்ற பெயரில், அவர்களது சுதந்திரத்தைக் காவல்துறை பறிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 ஏற்கெனவே சுரண்டலாலும் பாலியல் துன்புறுத்தல்களாலும் கடும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். குற்றவாளி என்ற பார்வையில் காவல் துறையும் பொது மக்களும் இவர்கள் மீது பாரபட்சம் காட்டுவது அதிகரித்தால் அவர்கள் மனம் கசந்து சொந்த ஊர் திரும்பலாம். அது நமது கட்டுமானம் முதல் மெட்ரோ ரயில் வரையிலான தொழில் வளர்ச்சியின் அடித்தளங்களையும் சேர்த்தேதான் பாதிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 சமீபத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி பிகார், மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், வட மாநில, பிற மாநில தொழிலாளர்கள் மீதான கெடுபிடிகளை அதிகரித்துள்ளது காவல்துறை.
 பயம், வேதனை: தமிழகத்தின் பிற மாவட்டங்கள் போக, பிகார், ஒடிசா, ஆந்திரம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் விவசாயம் பொய்ப்பதால், வேலைவாய்ப்பை இழக்கும் மக்கள் புதிய வாழ்வு தேடி தமிழகத்தின் பெரு நகரங்களுக்கு வருகின்றனர்.
 தமிழக தொழில் துறைக்கு புதிய முதுகெலும்பாக அவர்கள் உருவாகியிருப்பதாக வர்த்தகத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். உள்ளூரில் கூலித் தொழிலாளர்களின் ஊதியம் கட்டுப்படியாகாத அளவுக்கு உயர்ந்ததாலும் ஆபத்தான, கடினமான வேலைகளுக்கு ஆள் கிடைக்காததாலும் குறைவான ஊதியத்திற்கு தரகர்கள் மூலம் ஆட்களை கூட்டி வருவது சகஜமாகிவிட்டது.
 இந்நிலையில் சென்னை, திருப்பூர், கோவை போன்ற பெருநகரங்களில் நடைபெறும் குற்றங்களில் பெருமளவில் புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் பங்கு இருப்பதாக காவல் துறை குற்றம் சாட்டுகிறது. அவர்களைக் குற்றவாளிகள் என்ற கண்ணோட்டத்தில் காவல்துறை பார்ப்பது, தொழிலாளர்கள் மத்தியில் பயத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
 
 பரிந்துரைகள்
 மாவட்டந்தோறும் இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிய தனிப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும், இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் அனைவரும் பதிவு செய்யப்பட வேண்டும், மாவட்ட நிர்வாகங்கள் தாற்காலிகமாக ஒரு அடையாள அட்டை வழங்க வேண்டும், அந்த அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மானிய விலையில் உணவு, கல்வி, சுகாதார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கும் சிறப்பு அடையாள அட்டையை வழங்கி கல்வியும், சுகாதார வசதியும் வழங்க வேண்டும்.
 தமிழகத்தில் இருப்பதாகக் கணிக்கப்படும் 10 லட்சம் இடம் பெயர்ந்த தொழிலாளர்களையும் கண்காணிக்க அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை அரசு உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது
Thank s by DINAMANI
 கே.வாசுதேவன் -
First Published : 20 Mar 2012 05:51:16 AM IST

No comments:

Post a Comment