உங்கள் உடலை நேசியுங்கள்
அழகான இந்த உலகில் பிறந்திருப்பதே மகிழ்ச்சியானதாகும். அதுவும் எந்த உடல் குறையும் இல்லாமலும், உடல் உறுப்புகள் சீராக இயங்கப் பெற்றிருப்பதும் மிகப் பெரிய வரமாகும். ‘உலகிலேயே மிகப்பெரிய அதிசயம் மனிதன்’ என்றார் மரியாமான்ஸ். இந்த வலுவான நோயற்றஉடலினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர வீணாக்கக்கூடாது. இவ்வுடலினைப் போற்றவேண்டும். உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் நலம் சிறக்கும். இதனால் உங்களுக்கு எதையும் சாதித்துக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.
உங்கள் உடல்தான் உங்கள் முதன்மையான சொத்து
சில மாணவர்கள் என்னிடம் வந்து நான் ஓர் ஏழை, எப்படி IPS தேர்வில் வெற்றி பெறமுடியும் என்று கேட்கிறார்கள். எப்படி ஏழை என்று கேட்டால், என்னிடம் பணம் இல்லை, என் தந்தையிடமும் பணம் இல்லை என்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்பது, உங்களது இரண்டு கண்களையும் விற்றுவிடுங்கள் 100 கோடி ரூபாய் தருகிறேன் என்று யாராவது கேட்டால் உங்களது கண்களைத் தருவீர்களா? தரமாட்டேன் என்பார் அந்த இளைஞர். ஆக, உன் கண்களின் மதிப்பு 100 கோடி ரூபாய். கைகள், கால்கள் எல்லாம் உள்ளன. பலகோடி ரூபாய் மதிப்புள்ள உடலை வைத்திருக்கும் நீ ஏழை என்று சொல்லக் கூடாது என்று அறிவுரைகூறி அனுப்புவேன். இந்த உடல் விலைமதிப்பற்ற சொத்து. இதை வைத்து பணம், பெயர், புகழ், நன்மதிப்பு என்று எதையும் சம்பாதிக்க முடியும்.
‘ஏழையாக பிறப்பது தவறில்லை. ஆனால் ஏழையாகவே சாவதுதான் குற்றம். உடல்நலம் இருந்தால் ஏழையால் செல்வந்தனாக மாறமுடியும். அப்படி தனது வாழ்க்கையை அமைக்காதவன் ஒரு குற்றவாளி. அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கலாம்’ என்றார் மைக்ரோ சாப்ட் கம்பெனியின் நிறுவனர் பில்கேட்ஸ்.
‘ஃபோர்டு கார் கம்பெனி நிறுவனர் ஹென்றி ஃபோர்டு. அவர் வாழ்ந்த காலத்தில் அவர்தான் உலகில் மிகப்பெரிய பணக்காரர். அவரது சொத்துகள் என்ன என்பது பற்றிய விவாதம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடந்தது. அவரது கார் கம்பெனி 90 சதவீதம், வீடு மற்றும் தோட்டம் 5 சதவீதம், வங்கிக் கணக்கு 5 சதவீதம் என்று பல மாணவர்கள் சொன்னார்கள். ஒரு மாணவன் கருத்தினைச் சொன்னான். கார் தொழிற்சாலை, வீடு, தோட்டம், வங்கி இருப்பு அனைத்தும் 5 சதவீதம்தான், மீதி 95 சதவீதம் என்ன? என்று பேராசிரியர் கேட்டார், அது தான் ‘ஹென்றி ஃபோர்டு’ என்றான் அம்மாணவன். ஹென்றி ஃபோர்டின் எல்லாச் சொத்துக்களையும் பறிமுதல் செய்தாலும் கூட, மீண்டும் ஒரு புதிய கார் தொழிற்சாலையைத் தொடங்க அவரால் முடியும் என்பது தான் அம்மாணவனின் வாதம்.
உடல்நலம் மிக்கவர் யாரும் ஏழையாக இருக்க முடியாது. உடல்நலம் கெட்டவர் யாரும் செல்வந்தனாகவும் இருக்க முடியாது.
எனவே தான் சொல்கிறேன், உங்கள் உடலை நேசியுங்கள். உடல்நலத்தைக் காக்கும் நூறு சதவீதப் பொறுப்பையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல்நலன் உங்கள் கையில். துரித உணவுக் கடைகள் உங்கள் உடல்நலத்தை நிர்ணயிக்க அனுமதிக்காதீர்கள். அங்கீகாரம் இல்லாத போலி மருத்துவர்கள், விஞ்ஞான அறிவும் பயிற்சியும் இல்லாத உள்ளூர் மருத்துவர்கள், மந்திரவாதிகள், மூட நம்பிக்கைக்காரர்கள் ஆகியோரிடத்தில் உங்களது உடல்நலத்தை அடமானம் வைக்காதீர்கள். உங்களது உடல்நலத்தை நீங்களே உறுதி செய்யுங்கள். நீங்கள் தான் உங்களுக்கு முதல் மருத்துவர்.
இவ்வுலகில் நீண்ட நாட்கள் உயிருடன் வாழ்ந்து சாதனை படைத்தவர்கள் அனைவருமே வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் தான். தங்களது உடலை நேசிப்பவர்கள்தான் வாழவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தங்களது உடலை வெறுப்பவர்கள் யாரும் வாழ ஆசைப்படமாட்டார்கள். தங்களது உடலை வெறுப்பவர்கள், மற்றவர்களையும் வெறுத்து இவ்வுலகையும் வெறுப்பார்கள். இவர்களிடம் ஓர் எதிர்மறைமனப்பான்மைதான் இருக்கும். நீங்கள் அவ்வகையைச் சார்ந்தவர்கள் அல்ல என்றஉறுதிமொழியை எடுத்துக் கொண்டுள்ளீர்கள். ஏனென்றால் நீங்கள் உங்கள் உடலை நேசிக்கிறீர்கள். உங்கள் உடலை மதிக்கிறீர்கள். அதைப் பயன்படுத்த விரும்புகிறீர்களே தவிர அதை வீணாக்க விரும்பமாட்டீர்கள். இந்தப் புத்தகத்தை இதுவரை நீங்கள் படித்திருப்பதே அதற்குச் சான்று.
உலகில் அதிகமான காலம் உயிர் வாழ்ந்த நமோஜீ தானே என்ற ஜப்பானியரை 2008ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று பேட்டி கண்டனர். எவ்வளவு நாள் வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர். “நான் என்றும் வாழ வேண்டும், நான் சாகவிரும்பவில்லை”. அவருக்கு 112 வயதிலும் சாக விருப்பமில்லையாம். நீங்களும் 100 வயதிலாவது இப்படி ஒரு வாக்குமூலத்தை இவ்வுலகிற்குத் தரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். 100 வயது வரை வாழப்போகும் உங்களது இன்றைய வயதை ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் ஒரு குழந்தை என்பது உங்களுக்குப் புரியும்.
உங்கள் உடலை நீங்கள் நேசித்தால் உங்கள் உடல்மீது உங்களுக்கு மரியாதை ஏற்படும். உங்கள் உடலை கட்டிக் காப்பீர்கள். உடல் என்றும் இளமைத் தோற்றத்துடன் இருக்கும். நமோஜீ தானேவைப் போல என்றும் வாழ ஆசைப்படுங்கள்.