Saturday, October 2, 2010

சொர்க்கத்தின் திறவு கோல்

வெள்ளிமணி
சொர்க்கத்தின் திறவு கோல்

First Published : 10 Sep 2010 12:22:47 PM IST


    அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க, ரமலான் மாதம் முழுவதும் பகல் பொழுதில் நோன்பு நோற்றும், புனித வேத நூலான குர் ஆனை ஓதியும், ஐவேளைத் தொழுகையை பரிபூரணமாக நிறைவு செய்தும், மற்றும் அனைத்து நோன்பு நாட்களின் இரவிலும் தராவீஹ் என்ற சிறப்புத் தொழுகையை தொழுபவர்கள், "ஈதுப் பெருநாள்' அன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டியே அல்லாஹ் இத்திருநாளை மக்களுக்கு அளித்துள்ளான்.    இந்தச் சிறப்பான நாளை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் அனுஷ்டிக்க வேண்டும். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஷவ்வால் மாதம் முதல் நாளன்று பெருநாள் சிறப்புத் தொழுகையும் ஒவ்வொரு இஸ்லாமியரின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.    புண்ணியங்கள் பூத்துக் குலுங்குகின்ற மாதம் ரமலான் மாதமாகும்.  ஹிஜ்ரி வருடத்தில் உள்ள பன்னிரண்டு மாதங்களில் ரமலான் மாதம் மிகவும் சிறப்பான, கண்ணியம் மிக்க மாதமாக இருக்கின்றது. ஏனெனில் அந்த ஒரு மாதத்தில்தான் ஈமான் கொண்ட மக்கள், இறைவன் வகுத்துக் கொடுத்துள்ள ஐந்து கடமைகளில் மூன்றை-அதாவது தொழுகை, நோன்பு மற்றும் "ஜக்காத்' கடமைகளை ஒரு சேர நிறைவேற்றுகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது.    நோன்பில்லாத மற்ற நாட்களில் உண்ண உணவு கிடைக்காத வறியோர்களின் மன நிலையை வசதி படைத்தவர்களுக்கு உணர வைப்பதுதான் ரமலான் நோன்பின் தலையாய நோக்கமாகும். இதன் அடிப்படையில்தான் ஈகைப் பெருநாள், ஈத்துவக்கும் நாளாகிறது. அதன்படி ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்கின்ற நாள் இது என்று சொல்லப்படுகின்றது. நோன்பு வைத்து வசதி படைத்தவர்கள் தனது குடும்பத்தாருடன் அந்நாளில் மகிழ்ச்சியாக இருப்பதைப்போல, வறியோர்களும் அந்நாளில் குறைந்த அளவு மகிழ்ச்சியுடனாவது இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் "ஜக்காத்' என்ற ஏழை வரியை, இஸ்லாமிய மக்களுக்கு அல்லாஹ் கட்டாயக் கடமையாக ஆக்கி உள்ளான்.     குர்ஆனில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை மற்றும் ஜக்காத் கொடுப்பதன் அவசியம் பற்றி அல்லாஹ் விளக்கமாக அருளியுள்ளான். அவைகளில் சில :      "'பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு பொருள் உதவி செய்து வாருங்கள்'' என்றும், ""உங்கள் மேல் விதிக்கப்பட்ட ஜக்காத்தை அதைப் பெறத் தகுதியானவர்களுக்கு முறையாகக் கொடுத்திடுங்கள்'' என்றும் வலியுறுத்தியுள்ளான்.      "செல்வம்' என்பது சென்று கொண்டே இருப்பது ஆகும். அதாவது செல்வம் இன்று நம்மிடம் இருக்கும். அடுத்த நாள் அடுத்தவரிடம் போகும். இப்படியே அதன் பயணம் ஒரு தொடர் கதையைப் போன்றது.  அச்செல்வம் செல்வந்தர்களுக்குள்ளேயே சுழன்று கொண்டு இருப்பது அல்ல! எனவேதான் ஜக்காத்தைப் பெறத் தகுதியானவர்களைத் தேடிச் சென்று கொடுக்க வேண்டும் என்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் செல்வத்தால் ஏழை மற்றும் வறியோர்களுக்கும் பயன் ஏற்பட வாய்ப்பு கிடைக்கும் என்று திருமறையில் அல்லாஹ் அருளியுள்ளான்.     பொருள் வசதி படைத்தவர்கள் தங்கள் மேல் கடன் சுமை இல்லாத நிலையில் தன்னிடம் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் கிடைக்கின்ற வாடகை வருவாய் இவைகளில் கிடைக்கின்ற மொத்த வருமானத்தில் இரண்டரை சதவீதம் எனக் கணக்கிட்டு ஏழை வரியாகக் கொடுத்திட வேண்டும்.     ஜக்காத் கொடுப்பதனால் ஒருவரிடமிருக்கின்ற செல்வம் தூய்மையாக்கப்படுகின்றது என்ற கருத்தும் உள்ளது.      நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ""ஏழை மற்றும் வறியோர்களையும் நீங்கள் நினைவு கூர்ந்து, உங்கள் வாழ்க்கையைச் செம்மையாக வாழ்ந்திடுங்கள்'' என்று கூறியுள்ளார்கள். அவைகளில் சில :1. ஜக்காத் கொடுப்பதால் உங்கள் செல்வம் குறைவது இல்லை. மாறாக அது "பரக்கத்' என்ற அபிவிருத்தி அடைகின்றது.2. தண்ணீர் நெருப்பை அணைத்து விடுவதைப்போல நீங்கள் செய்கின்ற தான தர்மங்கள் உங்கள் பாவத்தை அழித்துவிடுகின்றன.3. உங்கள் கைப் பொருள் உங்கள் கையை விட்டுப் போவதற்கு முன்பு தர்மம் செய்வதில் விரைந்து செயல்படுங்கள். 4. திண்ணமாக ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு திறவுகோல் இருக்கின்றது. ஜக்காத் கொடுப்பது, சொர்க்கத்தின் திறவுகோல் ஆகும்.5. தான தர்மங்கள் செய்வதால் பொருள்கள் மற்றும் செல்வங்கள் பாதுகாக்கப்படுகின்றன.      ஆம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேற்படி அறிவுரைப்படி ஈதுப் பெருநாளைக் கொண்டாடுவோம்!

No comments:

Post a Comment