Saturday, October 2, 2010

வெள்ளிமணி

வெள்ளிமணி
காந்தியடிகள் போற்றிய கலீஃபா

First Published : 08 Oct 2010 12:00:00 AM IST

Last Updated :

ரலாறு என்பது மனித குலத்தின் வளர்ச்சி! அதன் அமைப்புகளை ஆராய்ந்தறிந்து கூறும் உயிருள்ள தொகுப்பு! இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்களின் வரலாற்றைக் காண்போம் (கலீஃபா-தலைவர்).  அரபு நாடுகளில் அவர்களின் இயற்பெயரை விட, அவர்களுடைய தந்தையின் பெயரை குறிப்பிட்டு, "இன்னாருடைய மகன்' என்று கூறுவதே பிரபல்யம் பெற்று விளங்குகிறது. உதாரணம்; உமறு இப்னு கத்தாப் (கத்தாபின் மகன் உமறு). "இப்னு' என்றால் மகன் என்றும், "பின்த்' என்றால் மகள் என்றும் பொருள்படும். இப்படி அழைப்பது அரபிகளின் மரபு. ஆகையால் இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்களை "உமறு இப்னு கத்தாப்' என்றே அந்நாட்டு வழக்கப்படி எல்லோரும் அழைத்து வந்தனர்.  கலீஃபா உமர் (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைவிட பதிமூன்று வயது இளைஞர். இவர் ஆரம்பக் காலகட்டங்களில் நபிகளார் அவர்களையும், அவர்களது மார்க்கத்தையும் கண்மூடித்தனமாக எதிர்த்து வந்தார்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக கையில் வாளுடன் சென்ற உமர், தம் சகோதரி இஸ்லாத்தை ஏற்ற செய்தி கேட்டு ஆத்திரமடைந்தார். அவர், தன் சகோதரி வீட்டை அடைந்தபோது, அந்தச் சகோதரி, "குர்ஆன்' ஓதுவதைக் கேட்டார். குர்ஆன் வாசகங்களில் தம் மனதைப் பெரிதும் பறி கொடுத்தார்; இறை வசனங்களில் அவர் உள்ளம் பெரிதும் உருகியது. அவர் மனம் மாறி நபிகளாரிடம் சென்று இஸ்லாத்தில் இணைந்து கொண்டார்.  நபிகளார் அன்று முதல் உமரை, "பாரூக்' (உண்மையையும், பொய்யையும் பிரித்தவர்) என அழைத்தார். நபிகளார், மதீனமா நகரில் முதன் முதலாக இறைவனைத் தொழ ஒரு பள்ளிவாயிலை உருவாக்கினார். ஐந்து நேரமும் இறைவனைத் தொழ மக்களை பள்ளிவாயிலுக்கு அழைக்க, உமர், தம் கனவில் கண்ட "அதான்' முறையில், ""ஒருவரை "பாங்கு' சொல்லச் செய்வன் மூலம் தொழுகைக்கு அழைக்கலாம்'' என்று ஒரு யோசனையைக் கூறினார். நபிகளாரும் அதை ஏற்றதால், அம்முறை இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. உலக முடிவு நாள் வரை அது தொடரும்.  போர் செலவுகளுக்கென தம் சொத்தில் சரிபாதியைப் போர் நிதியாக நபிகளாரிடம் அளித்துள்ளார் உமர். நபிகளார் மறைவுக்குப் பின், அபூபக்கர் (ரலி) அவர்களை முதல் கலீஃபாவாக அறிவித்தவர் உமர்தான். இவர் பெரும் செல்வந்தராக இருந்த போதிலும், மிக எளிமையான வாழ்வே வாழ்ந்து வந்தார்.  உமர் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவாக பொறுப்பில் அமரச் செய்தனர். கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம், உலக வரலாற்றில் போற்றப்படுவதாக அமைந்திருந்தது. நமது தேசப்பிதா மகாத்மா காந்திஜீ, ""கலீஃபா உமரின் ஆட்சிபோல் நமது இந்திய திருநாட்டில் அமைய வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.  மைக்கேல் ஹெச்.ஹார்ட் என்னும் அமெரிக்க வரலாற்று ஆசிரியர், ""அந்த நூறு பேர்'' என்ற ஒரு நூலில், முதலிடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய வரலாற்றை எழுதியுள்ளார். அவ்வரலாற்று நூலில் இரண்டு முஸ்லிம் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஒன்று நபிகளார் வரலாறும், மற்றொன்று கலீஃபா உமர் (ரலி) அவர்களின் வரலாறும் ஆகும்.  கலீஃபா உமர் (ரலி) அவர்கள், நீதி வழுவாது ஆட்சி செலுத்தி வந்தனர். அதற்கு ஒரு சான்றினைக் காண்போம். கலீஃபாவின் மகன் அப்துல்லா, ஒரு நாள் காரணமின்றி ஒருவனை அடித்துவிட்டார். கலீஃபா முறைப்படி விசாரித்து, தம் மகன் குற்றவாளி எனக் கண்டறிந்தார்; தான் பெற்ற மகன் என்று பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்க உத்தரவிட்டார் என்பது வரலாறு.  மக்களின் குறைகளை நேரடியாகத் தெரிந்து கொண்டு களைய, கலீஃபா உமர் (ரலி), இரவில் நகர் வலம் செல்வது வழக்கம். ஒருநாள் இரவு ஒரு பெண் பானையில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சிக் கொண்டிருந்தார். குழந்தைகள், ""நம் அம்மா நமது பசியைப் போக்கத்தான் அடுப்பில் சோறு சமைத்துக் கொண்டிருக்கிறார்'' என எண்ணியவர்களாக பசி மயக்கத்தில் உறங்கிப் போய் விடுகின்றனர். இது குறித்து அப்பெண்ணிடம் காரணம் கேட்டபோது, அப்பெண்ணின் குடும்பத்தில் வறுமை வாட்டுவது தெரிய வருகிறது. உடனே அரசு சேமிப்புக் கிடங்குக்குச் சென்று, தமது தோளில் ஒரு மூட்டை மாவை சுமந்து வந்தார் கலீஃபா உமர்(ரலி). அதைக் கொண்டு அப்பெண், தனது குழந்தைகளின் பசியைப் போக்கினாள். இக்காட்சி, கலீஃபாவின் உள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  கலீஃபா உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற இன்னொரு சம்பவத்தைக் காண்போம். வழக்கம்போல் கலீஃபா நகர் வலம் வரும்போது, ஒரு நாட்டரபியின் இல்லத்தில் முக்கி முனகி அழும் குரல் கேட்கிறது. கலீஃபா, ""என்ன?'' என்று வினவுகின்றார். நாட்டரபியின் மனைவிக்குப் பேறு காலம் நெருங்கிவிட்டதையும், அவருக்கு உதவ வேறு பெண் இல்லை என்பதையும் அறிந்து கொண்டார் கலீஃபா உமர்(ரலி). உடனே தன் அரண்மனை சென்று, மனைவி உம்முகுவ்தூமை அழைத்து வந்து, அப்பெண்ணுக்கு மருத்துவம் பார்க்கச் செய்தார். கலீஃபாவின் மனைவியின் உதவியால், நாட்டரபியின் மனைவி ஓர் ஆண் குழந்தையை நல்லபடியாகப் பெற்றெடுத்தாள். அப்பொழுது கலீஃபாவின் மனைவி உம்மு குல்தூம் அவர்கள், மகிழ்ச்சியின் மிகுதியால், ""அமீருல் முஃமினீன் அவர்களே! தங்களின் நண்பருக்கு குழந்தை பிறந்துவிட்டது. அவருக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்'' என்று வெளியில் நின்று கொண்டிருந்த கலீஃபா அவர்களிடம் கூறினார்கள்.  இந்த உரையாடலைக் கேட்ட அந்த நாட்டரபி, பெரிதும் வருந்தினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவ்வாறெல்லாம் நமக்குப் பேருதவி செய்தவர் கலீஃபா உமர் (ரலி) அவர்களே என அறிந்து அந்நாட்டரபி பயந்து நடுங்கியவராக கலீஃபாவிடம் மன்னிப்பு கேட்டார்.  ஆனால் கலீஃபா அவருக்கு ஆறுதல் கூறி, மறுநாள் அரசவைக்கு வரும்படி அழைத்தார்; அந்நாட்டரபிக்கு உதவித் தொகைகளை வழங்கினார்.  இவ்வாறு நேர்மை- நீதி- இரக்க குணம் ஆகியன அனைத்து நற்குணங்களும் ஒருங்கே அமையப் பெற்று, எதற்கும் அஞ்சா நெஞ்சுரம் கொண்டவராய், தமது நண்பர்களுடன் கலந்தாலோசித்து நல்லாட்சி செய்ததால்தான் உலகத் தலைவர்கள், கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சியைப் புகழ்ந்துரைத்துள்ளார்கள்.  எனவே, பண்டைப் பெருமை பேசி நின்றிடாமல், பண்டைய வாழ்வோடு, இன்றைய வாழ்வையும் ஒப்பிட்டு நேர்மையும்- நீதியும் தன்னலமற்ற தன்மையில் இன்னோரன்ன பிற நற்பண்புகளும் வாய்க்கப்பெற்று நமது வருங்காலத்தை வகுக்க வேண்டும்! அதற்கு எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக!

No comments:

Post a Comment