Saturday, October 2, 2010

மதவாதமா? மதச்சார்பின்மையா?

கட்டுரைகள்
மதவாதமா? மதச்சார்பின்மையா?

First Published : 24 Sep 2010 12:15:52 AM IST


உச்ச நீதிமன்றம் வர இருக்கும் தீர்ப்பை ஒரு வாரம் ஒத்தி வைத்திருக்கிறது என்றாலும், அலாகாபாத் உயர் நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை "பாபர் மசூதி' பிரச்னையில் வழங்கப் போகிறது என்பதை நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. மத்திய அரசும், உத்தரப் பிரதேச மாநில அரசும் பத்து நாள்களுக்கு முன்பிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. நாடு முழுவதிலும் தீர்ப்புக்குப் பிறகு மதரீதியான மோதல் வெடித்துக் கிளம்புமோ என்ற பதற்றமும் அச்சமும் நிலவுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று வெறி பிடித்துக் கூச்சலிடும் கூட்டம் ஒருபுறம். நீதிமன்றத் தீர்ப்பை மதித்து ஏற்க வேண்டும் என்ற மத்திய அரசின் முழுப்பக்கப் பத்திரிகை விளம்பரங்கள் மறுபுறம். நீதிமன்றங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. எனினும் இந்த ஒரு தீர்ப்பு குறித்து மட்டும் ஏனிந்த பதற்றம்? அச்சம்? ஒரு வழக்கின் பயணம் உயர் நீதிமன்றத்துடன் முடிந்து முற்றுப்பெறப் போவதில்லை. தீர்ப்பை ஏற்காதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றம். அதில் மேல்முறையீடு செய்து காத்திருக்கலாம். ஏற்கெனவே இந்த வழக்கு, தீர்ப்புக்காக 125 ஆண்டுகள் காத்திருந்தது. மேலும் சில பல ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடர்வதால் நாட்டில் பெரிதாக எதுவும் நிகழப்போவதில்லை. ஆனால், மதவெறிக் கூட்டம் இதுபற்றியெல்லாம் அக்கறைப்படாமல்,  மக்களிடையே மதஉணர்வைத் தூண்டிவிட்டு மலிவான வழியில் "அரசியல் ஆதாயம்' அடைய நினைப்பதால்தான் பல கோடி வழக்குகளில் ஒன்றான "பாபர் மசூதி வழக்கு' பூதாகாரப்படுத்தப்படுகிறது. இதுவே மதவாத சக்திகளுக்குக் கிடைத்துவிட்ட வெற்றி என்பது வேதனைதரும் உண்மையாகும். இந்த வழக்கின் தீர்ப்பைப் பரபரப்பாக்கியதில் "விஸ்வ இந்து பரிஷத்' அமைப்புக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் முக்கிய பங்குண்டு. இவ்விரண்டு அமைப்புகள்தாம் செப்டம்பர் 24-ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று செய்தி வெளியானவுடன் ""நீதிமன்றத்திற்கு பகவான்  ராமர் பிறந்த இடம் குறித்து தீர்ப்புச் சொல்ல அதிகாரமோ - தகுதியோ கிடையாது'' என பகிரங்கமாக இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராகவும் - நீதிமன்றங்களை அவமதிக்கும்படியும் பேசின; பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டன. இந்த வழக்கின் விவரங்களைப் பார்ப்போம். 1885-ல் பாபர் மசூதிக்கு அருகில் உள்ள இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு பைசாபாத் துணை நீதிமன்றத்தில்தான் முதன்முதலாக பிரிட்டிஷ் அமைச்சருக்கு எதிராக ரகுபர்தாஸ் என்பவர் வழக்குத் தொடுத்தார். 1949 டிசம்பர் 23-ல் நாடு விடுதலை பெற்றதற்குப் பிறகு ஐம்பதுக்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் நுழைந்து "ராமர்' உள்ளிட்ட சில விக்ரகங்களை வைத்துவிட்டனர். பின்னர் அவர்கள் கோபால்சிங் விஸ்ராட் என்பவர் மூலம் 1950 ஜனவரியில் பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ராமர் உள்ளிட்ட விக்ரகங்களை அகற்ற அரசு தடை விதிக்கக் கோரியும் - அந்த விக்ரகங்களுக்கு பூஜை நடத்த அனுமதிக்கக் கோரியும் அந்த வழக்குத் தொடரப்பட்டது. இது இரண்டாவது வழக்காகும். 1950 டிசம்பரில் தொடுக்கப்பட்ட இதேபோன்ற வழக்கு 1990 ஆகஸ்டில் மனுதாரரான பரமஹம்ச ராமச்சந்திரதாஸôல் வாபஸ் பெறப்பட்டுவிட்டது. இந்த விவகாரம் குறித்த நான்காவது வழக்கு டிசம்பர் 1959-ல் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இத்தனைக்கும் பிறகுதான் 1961 டிசம்பரில் முஸ்லிம் வக்ஃப் வாரியத்தின் மூலம் பாபர் மசூதியைத் தங்கள் வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இதே பிரச்னைக்காக ஐந்தாவது வழக்கு 1989 ஜூலையில் தொடுக்கப்பட்டது. ஒரு வழக்கு மட்டும் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதால் மற்ற நான்கு வழக்குகளையும் உத்தரப்பிரதேச மாநில அரசின் கோரிக்கையை  ஏற்று உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதன் தீர்ப்பைத்தான்நாடு இப்போது எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. நீதி கேட்டு நெடும்பயணமாக 125 ஆண்டுகள் பயணித்த வழக்கு, இது ஒன்றாகத்தான் இருக்கும். இந்த வழக்குகளின்போது நிலவிய அரசியல் சூழ்நிலையைக் கூர்ந்து கவனித்தால், தாமதத்துக்கான காரணம் புரியும். ஏன் சென்றவாரம்கூட இந்தத் தீர்ப்பைத் தள்ளிவைக்க வழக்குத் தொடுக்கப்பட்டது. இப்போது தீர்ப்பு ஒருவார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது பிரச்னையை முடிந்துவிடாமல் பார்த்துக்கொள்வதில் சிலருக்கு மிகுந்த அக்கறை உள்ளது. 1982-ல் தான் "விஸ்வ ஹிந்து பரிஷத்' அமைப்பு பாபர் மசூதி பிரச்னையைக் கையில் எடுத்தது. ராமர் பிறந்த அயோத்தியில் ஏற்கெனவே இருந்த இந்துக்கோயிலை இடித்துவிட்டு மொகலாய மன்னர் பாபர் மசூதியைக் கட்டினார் என்றும், எனவே பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் பிறந்த அந்த இடத்திலேயே கோயிலைக் கட்டுவோம் எனவும் அந்த அமைப்பு அறைகூவல் விடுத்தது. இதற்காக நாடு முழுவதிலுமிருந்து செங்கற்கள் கூட ஊர்வலமாகத் திரட்டப்பட்டன. கோயில் கட்டுவதற்காக வெளிநாடுவாழ் இந்துக்களிடம் பல நூறு கோடி ரூபாய் நிதி வசூலிக்கப்பட்டது. ராமர் கோயில் பிரச்னை சூடுபிடிக்கத் தொடங்கியவுடன் அதிலிருந்து அரசியல் ஆதாயம் அடைய முதன்முதலாக பாஜகவினர் "பாலம்பூர்' (இமாச்சல பிரதேசம்) தேசிய செயற்குழுவில் ஜூன் 1989-ல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, தங்களை இந்தக் கோயில் கட்டும் இயக்கத்தோடு இணைத்துக் கொண்டனர். பாஜக தலைவர் அத்வானி, குஜராத்தில் தொடங்கிய "ர(த்)த யாத்திரை' பல மாநிலங்களின் வழியாகச் சென்று இறுதியில் பிகார் மாநில அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. எனினும் அதற்குள் ஏராளமான மதக்கலவரங்கள் எண்ணற்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்துவிட்டன. அரசியல் ரீதியாக பாஜக புத்துயிர் பெற்றது. உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. பின்னர் மத்திய அரசையும் ஆறாண்டு காலம் நடத்தியது என்பதெல்லாம் சமீபத்திய வரலாறு. அது ஒருபுறம் இருக்க, மதச்சார்பற்ற கட்சியென்று தன்னை அடையாளங் காட்டிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி,  இந்தப் பிரச்னையில் என்ன நிலை எடுத்தது? 1986-ல் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசு பைசாபாத் மாவட்ட நீதிபதியின் தீர்ப்பை நிறைவேற்றுவதாக கூறிக் கொண்டு, பாபர் மசூதியின் பூட்டுகளைத் திறந்து அனைத்துப் பிரச்னைகளுக்கும் வழிதிறந்துவிட்டது. ஒரு மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பை அலறி அடித்துக் கொண்டு நிறைவேற்றியிருக்க வேண்டியதில்லை. மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஒரு மாவட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு இவ்வளவு மரியாதை அளித்த ராஜீவ் காந்திதான்,  முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்தால் முஸ்லிம் ஆண்கள் அவர்களுக்கு வாழ்வூதியத்தை "ஜீவனாம்சம்' எனும் பெயரில் வழங்கிட வேண்டுமென "ஷாபானு' தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தடம்புரளச் செய்வதற்காகவே அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார் என்பது காட்டும் உண்மை என்ன? இஸ்லாமிய மதவாதிகளின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்தார் என்பதுதானே அதன் பொருள். இதன் மூலம் சிறுபான்மை சமுதாயத்தினரின் நல்லெண்ணத்தைப் பெறுவதுதானே அந்த அவசரச் சட்டத்தின் நோக்கம்? ஷாபானு வழக்கில் இஸ்லாமியர்களின் நல்லெண்ணத்தைப் பெற முயன்ற ராஜீவ் காந்தி அரசு, அயோத்தியா பாபர் மசூதிப் பிரச்னையில் பைசாபாத் மாவட்ட நீதிபதியின் தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இந்துக்களின் நல்லெண்ணத்தையும் - வாக்குகளையும் பெற விழைந்தது.  இதேபோலத்தான் 1989 நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு சில தினங்களே இருந்த சூழலில், ராஜீவ் காந்தி அரசாங்கம் "விஸ்வ ஹிந்து பரிஷத்' அமைப்பினர் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் பூஜை நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தது. பாபர் மசூதிக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாப்பேன் என்று நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறி 450 ஆண்டு பழமை வாய்ந்த - புராதனச் சின்னமான பாபர் மசூதியை கரசேவகர்கள் என்ற வேடத்தில் காலிகள் இடித்துத் தள்ளுவதை வேடிக்கை பார்த்தவர் அன்றைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண்சிங். மசூதி இடித்துத் தள்ளப்படுவதை கண்ணாரக் கண்டு ஆனந்தக் கூத்தாடி அருகிலிருந்து களித்தவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ். இவர்களெல்லாம் பாஜகவின் உயர்மட்டத்  தலைவர்கள். பாபர் மசூதி கரசேவகர்களால் இடித்துத் தள்ளப்படும் என்ற உளவுத்துறையினரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு, பாபர் மசூதி இடிந்து வீழ்ந்தால் ஒரு பிரச்னை முடிவுக்கு வரும் என்று அமைதி காத்தவர் அன்றைய காங்கிரஸ் கட்சிப் பிரதமர் நரசிம்ம ராவ்.  மொத்தத்தில் காங்கிரஸ் கட்சியினரும், பாஜகவினரும் ராமர் கோயில் பிரச்னையில் - பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டதில் ஒரே மாதிரியான நிலை எடுத்ததுபோல தோன்றுவதற்கு காரணம் எது? "வாக்கு வங்கி' அரசியலுக்கு முக்கியத்துவம் அளித்து பெரும்பான்மையாக வாழும் இந்துக்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள இரண்டு கட்சிகளிடையே பெரிய போட்டியே நடக்கிறது. இவர்களை நம்பினால் இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காப்பாற்ற இயலுமா என்ற ஐயம், இன்று இந்திய மக்களுக்கு வந்துவிட்டது. இவ்விரு கட்சிகளுக்கும் மாற்றான ஓர் அரசியல் சக்தி எழும்போதுதான் உண்மையில் மதவாதம் அழிவுறும். சமயச்சார்பின்மை வலுப்பெறும். அயோத்திப் பிரச்னை பற்றிய வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுமா, மீண்டும் ஒத்திவைக்கப்படுமா என்று தெரியாத தொங்கல் நிலை நீடிக்கும் இந்த வேளையில் ஏற்படும் உரத்த சிந்தனைதான் எனது இந்தக் கருத்துகள்.

No comments:

Post a Comment