Saturday, October 2, 2010

சுறா மீன்

ஞாயிறு கொண்டாட்டம்
சுறா மீன்

First Published : 26 Sep 2010 12:00:00 AM IST


வானத்தில் விமானம் பறந்து செல்வதைப் போல கடலுக்குள் தனிக்காட்டு ராஜாவாக ஜாலியாக சுற்றிக் கொண்டிருப்பவையே சுறா மீன்கள். மிக ஆழத்திலும் கடலின் மேற்பரப்பிலும் பவனி வரும் இம்மீன்கள் மற்ற மீன்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட உடலமைப்புகளை உடையது என்றும் இதன் சிறப்புக்களையும் பற்றி ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது...""உலகம் முழுவதும் 300 வகைகள் இருந்தாலும் அவையனைத்தும் 8 வெவ்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண வகை மீன்களுக்கும் சுறா மீன்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருப்பது இதன் சிறப்பம்சம். மற்ற மீன்களுக்கு உடலில் முட்கள் இருக்கும். ஆனால் சுறாக்களுக்கு மென்மையான திசுக்களை உடைய விரைவில் மக்கிப் போகும் தன்மையுடைய எலும்புகளே இருக்கின்றன.எந்த மீனாக இருந்தாலும் அவை தண்ணீரில் மிதப்பதற்கு அதன் வயிற்றில் உள்ள காற்றுப் பைகளே சுருங்கி விரிந்து உதவும்.ஆனால் சுறாவுக்கோ அதன் ஈரல்களில் உள்ள லேசான எண்ணெய் தான் மிதப்பதற்கு உதவுகிறது. இந்த எண்ணெய் தண்ணீரைவிட லேசானது.           தண்ணீரில் மிதக்கும்போது தனது உடலை நிலை நிறுத்திக் கொள்ள உடலின் முன்புறத்தில் உள்ள துடுப்புகளைப் பயன்படுத்தி விமானம் போல பேலன்ஸ் செய்து கொள்கிறது. கடலுக்கு அடியில் மிக ஆழத்தில் செல்பவையாக இருந்தாலும் நினைத்தவுடன் கடலின் மேற்பரப்புக்கு வந்துவிடும் சிறப்பும் வேறு எந்த மீனுக்கும் இல்லை. நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவமைப்புக்கும் கட்டுமானத்துக்கும் இம்மீன்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் பெரிதும் பயன்படும்.மற்ற மீன்கள் செதில்கள் மூலமே சுவாசிக்கும்.கடலின் ஆழத்தில் வசிக்கும் சுறாக்கள் செதில்களாலும் மற்ற சுறாக்கள் அதனது தோலின் மூலமாகவும் சுவாசிக்கின்றன.             முட்டையிடும் சுறாக்களும் உண்டு,குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்யும் சுறாக்களும் உண்டு. குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்யும் சுறாக்கள் 5 மாதம் வரை கருவுற்று 6வது மாதத்தில் குட்டி போடுகின்றன. இவை 5 வருடங்கள் கழித்தே முதிர்ச்சியடைந்தாலும் சுமார் 25 வருடங்கள் வரை உயிர்வாழக் கூடியவை.திமிங்கிலம் போன்று தோற்றமளிக்கும் ஒரு வகை பெரிய சுறா தான் திமிங்கில சுறா எனப்படுகிறது. நுண்ணிய மிதவை உயிரினங்களைத் தண்ணீரின் வழியாக உறிஞ்சி உண்பது தான் இதன் விருப்ப உணவு. இச்சுறாக்களை இறைச்சிக்காகவும் அதன் துடுப்புகளுக்காகவும் பெருமளவில் வேட்டையாடுகின்றனர். இவற்றின் துடுப்புகளில் இருந்து செய்யப்படும் சூப்புகளுக்கு ஆசிய நாடுகளில் அதிக தேவையிருப்பதால் சில நாடுகளில் இதன் துடுப்புகளை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு உடலை கடலில் எறிந்து விடுகின்றனர். இவற்றின் ஈரலில் உள்ள எண்ணெய் வைட்டமின் ஏ ஆகவும் பயன்படுகிறது.மற்ற மீன்களைவிட தோற்றத்திலும்,உடலமைப்பிலும் பல்வேறு சிறப்புக்களை உடைய இந்த விநோத ஜீவன் மனிதர்களைக் கடிப்பதில்லை'' என்றார்.

No comments:

Post a Comment