திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்!
First Published : 23 Jul 2010 01:05:00 PM IST
உலகமயமாக்கல் பெரும் பொருளாதார இடைவெளியை மனித குலத்தில் தோற்றுவித்துள்ள காலகட்டம் இது. மத நெறியாளர்களும், சமூக ஆர்வலர்களும் அடித்தட்டு மக்களைத் துன்புறுத்தும் பொருளாதார ஆதிக்கத்தால் மிகுந்த கவலையடைந்துள்ளனர். "பணம் இல்லையென்றால் பிணம்தான்' "ஏழை சொல் அம்பலமேறாது' "பணம் பத்தும் செய்யும்' "பணம் பாதாளம் வரை பாயும்' - என்று பணம், சொத்து உள்ளிட்ட உடைமைகளின் வலிமையைப் பழமொழிகளும் பறைசாற்றுகின்றன. இஸ்லாம் மதத்தின் கண்ணோட்டத்தில் பணத்தின் மதிப்புதான் என்ன? சம்பாதித்த பணம் அனைத்தையும் தன்னிடமே பாதுகாப்பாக வைத்துக் கொள்பவனை, ""அவனது சொத்து அவனுக்குப் பயனளிக்காது' என்று திருக்குர்ஆன் (அத்தியாயம் 92, வசனம் 11) எச்சரிக்கிறது. ""பணம் பத்தும் செய்யாது; பாதுகாப்பும் அளிக்காது'' என்பதே இதன் அர்த்தம். அதேசமயம் செல்வத்தை தானமாக வழங்கி, தன்னைத்தானே பரிசுத்தமாக்கிக் கொள்பவர்களை மிக நல்லவர்களாக திருக்குர்ஆன் (92-18) அடையாளப்படுத்துகிறது. பிறருக்குப் பொருள் வழங்கி உதவுவதால் அகமும், புறமும் சுத்தமாகும். இல்லையேல் பொறாமை, கொலை, கொள்ளை அதிகரிக்கும்; உலகம் அசுத்தமாகும். தேவைப்படுவோருக்கு உரியதை வழங்கி, தன்னை பரிசுத்தமாக்கிக்கொள்ளும் இயல்பினரை திருக்குர் ஆன் (87-14) வெற்றியாளராகப் பிரகடனப்படுத்துகிறது. பணம் சம்பாதித்தவரை வெற்றி வாகை சூடியவராக உலகம் புகழ்கிறது. ஆனால் திருக்குர்ஆன், வாரி வழங்குபவரையே சாதனையாளராகப் பிரகடனப்படுத்துகிறது. அளவற்ற பற்றுடன் இறைவனை நம்புவது, தொழுகையைக் கடைப்பிடிப்பது, வறியோருக்கு வழங்குவது என ""மெய்யான இறை மார்க்கத்திற்கு'' திருக்குர் ஆன் (98-5) இலக்கணம் கூறுகிறது. மதத்தின் அடிப்படைக் கூறு என்பது இறைவனை நம்புவதுதான். இதற்கான பகிரங்க அடையாளம் தொழுகை. ஆனால் இவற்றுடன் அறநெறி முடிந்துவிடவில்லை. பிறருக்குப் பொருளுதவி வழங்குவதும் இறைநெறிப் பணியாக வலியுறுத்தப்படுகின்றது. "இரக்க குணத்தை மறுப்போர் மத மறுப்பாளர் ஆவர்' என்கிறது திருக்குர் ஆன் (107-7). அதாவது இறைவனை மறுப்பதும், இரக்கத் தன்மையை மறுப்பதும் ஒன்றாகும். எப்போதும் பணத்தை சேகரித்துக் கொண்டிருப்பதையும், பணக் கட்டுகளை எண்ணிக் கொண்டிருப்பதையும், பணத்தையே நம்பிக் கொண்டிருப்பதையும் வாழ்வின் முழு நோக்கமாய், மூச்சாய்க் கொண்டு இயங்குபவர்களின் போக்கினை, ""வாழ்வின் நோக்கம் சம்பாதிப்பது மட்டுமன்று'' என்று திருக்குர்ஆன் (104-4) மறுத்துரைக்கிறது. "பணம் பாதுகாக்கும்' என்ற கோட்பாட்டை திருக்குர்ஆன் ஒப்புக் கொள்ளவில்லை. ""கல்லறை செல்லும் வரை பணம் சம்பாதிக்கும் ஆசை மனிதனை விடுவதாயில்லை. போட்டி மனப்பாங்குடன் சொத்து குவிப்பது, வெறித்தனமாகச் செல்வம் சேர்ப்பது ஆகியவை வாழ்வின் உயர் குறிக்கோளை இடறச் செய்துவிடும்'' என்கிறது திருக்குர் ஆன் (102-1) நரக நெருப்பைக் கண்ணால் பார்க்கும் வரை இத்தகையோரின் சொத்து சேர்க்கும் வெறி குறையவே குறையாது. ஆனால் வாழ்க்கையின் அட்டகாசங்கள் குறித்து இவர்களிடம் கேள்விக் கணக்குக் கேட்கப்படும். சொத்தையும், பணத்தையும் நேசிப்பவன் மீது "நன்றி கெட்டவன்' (திருக்குர் ஆன்- 100-6) என்று இறைவன் கோபப்படுகிறான். வளங்கள், மனித நலன்கள் அனைத்தும் இறைவனிடமிருந்தே அருளப்படுகின்றன. அணு அளவு தீமை புரிந்தாலும் அதற்குரிய "தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்' என்பதே திருக்குர் ஆன் (99-8) வலியுறுத்தும் வாழ்வியல் கோட்பாடாகும். குறுக்கு வழியில் பல தவறுகள் புரிந்து, பிறரின் உரிமைகளை அபகரித்து, ஆதிக்கம் செலுத்தி, சொத்தைக் குவித்துக் கொண்டு, பிறகு கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை இறைவன் சன்னிதானத்தில் சமர்ப்பிப்பதால் பயன் ஏதும் விளையாது. இலக்கு, நோக்கம் முக்கியம். அதை அடையும் வழியும் முக்கியம். மது விற்பனையில் கிடைத்த பணம், லஞ்சப் பணம் என்று தீய வழியில் கிடைத்த செல்வத்தைக் கொண்டு அறச் செயல் புரிவதாக நடிப்பதன் மூலம் இறையருளைப் பெற முடியாது. பணம் பெறுவதற்குக் கையாளப்படும் வழி மிக முக்கியம். பொது ஜன விரோத வழியை மதம் அங்கீகரிக்கவில்லை. முதலும், கடைசியுமாக மனித குல உபகாரமே மதத்தின் அடிப்படைச் சித்தாந்தமாகும். முதலில் துரோகம்; பிறகு உதவுவது என்பதெல்லாம் ஏற்புடையதல்ல. மனிதன் இயல்பாகவே சொத்து, செல்வம், பணம் போன்றவற்றுடன் அளப்பரிய பிரியத்துடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறான். சமயக் கண்ணோட்டத்தில், செல்வத்திற்கு யாதொரு மதிப்புமில்லை. பணம் இல்லாதோரை இழிவுப்படுத்துவதை சமயம் முற்றாக நிராகரிக்கிறது. இறைவன் தான் நினைத்தோருக்கு செல்வத்தை வாரி வழங்குகிறான். இன்னும் பலருக்கு ஏழ்மையே வாழ்வுப் போக்காகி விடுகிறது. ஆனால் வறியவர்களுக்கு வாழ்வளிப்பதை செல்வந்தர் தம் முதல் கடமையாகக் கருத வேண்டும். இல்லையேல் இறைவன் கட்டளையை மறுத்து நன்றியைக் கொன்ற குற்றம் வந்து சேரும்.பணம் உள்ளோர் தமது சாதனையை எண்ணிப் பெருமை, இறுமாப்பு கொள்ளாமல் வாரி வழங்கிப் பிறரின் வறுமையை நீக்க முயல வேண்டும். சொத்தை இறைவனின் அருட்கொடையாக நம்ப வேண்டும். உலகக் காரியங்களை, நடப்புகளை இறை கருணையே நடத்துகிறது, பணமல்ல என்பதனை மனிதன் உணர வேண்டும்.- ஏ.எம். ரசூல்மொஹிதீன்
No comments:
Post a Comment