Saturday, October 2, 2010

என்று குறையும் இந்தப் புகைச்சல்?

கட்டுரைகள்
என்று குறையும் இந்தப் புகைச்சல்?

First Published : 20 Sep 2010 12:00:00 AM IST


பொது இடங்களில் புகைபிடிக்க மத்திய அரசு தடைவிதித்து வரும் காந்தி ஜயந்தி தினத்துடன் இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடிகின்றன. ஆனால், பொது இடங்களில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே தவிர குறைந்ததாகத் தெரியவில்லை.   இரு ஆண்டுகளில் பொது இடங்களில் புகை பிடித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை வேண்டுமானால் தொடலாம். ஆனால், நாள்தோறும் பல லட்சம் பேர் இன்னமும் பொது இடங்களில்தான் புகைத்துக் கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்கள், திரையரங்குகள் மற்றும் தேநீர் கடைகள் போன்றவற்றில் புகைபிடிப்போர் தொடர்ந்து எவ்வித அச்சமுமின்றி தங்கள் பணியைச் செவ்வனே தொடர்கின்றனர்.   தீயவற்றைப் பார்க்க, கேட்க, பேசக் கூடாது என வலியுறுத்தி கண், காது, வாயைப் பொத்திக் கொண்டிருக்கும் மூன்று பொம்மைகள் பிரபலமானவை. பொது இடங்களில் குழந்தைகள், முதியவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என எவர் குறித்தும் கவலைப்படாமல், தங்களை மறந்து புகைபிடிப்பவர்களோ நம்மை மூக்கைப் பொத்தவைத்து நான்காவது பொம்மையாக்கி விடுகின்றனர்.   மதுவைப்போலவே புகையிலைப் பொருள்களையும் மாணவப் பருவத்தினர் அதிகம் பயன்படுத்துவது அண்மைக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.   கவலைக்கு மருந்து, ஸ்டைலுக்காக, டென்ஷனைக் குறைக்க, விளையாட்டாக ஒரு பொழுது என தங்களுக்குத் தாங்களே சமாதானம் கூறிக் கொண்டு இளம் பருவத்தினர் விளையாட்டாகத்தான் இப்பழக்கத்தைத் தொடங்குகின்றனர்.    ஆனால், சில நாள்களுக்குப் பின்னர் அவர்கள் விட நினைத்தாலும் இப் பழக்கம் அவர்களை விடுவதில்லை. இப் பழக்கத்துக்கு மாணவிகளும், மகளிரும்கூட அடிமையாகி விடுகின்றனர். நம்புவதற்கே கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை என்ற அதிர்ச்சித் தகவல்களை ஆய்வறிக்கைகள் மூலம் அறிய முடிகிறது.   விஷம், தீ போன்றவற்றை மனித உயிர்களைக் கொல்லும் நேரடியான எதிரிகள் என்றால் சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருள்களை மறைமுக எதிரிகள் எனக் குறிப்பிடலாம். காரணம், அவை தங்கள் மீது பற்றுவைத்து தங்களைப் பற்ற வைப்பவர்களின் உதட்டோடு உறவாடி பகையைத் தீர்த்துக் கொள்(ல்)பவை.   விலையேற்றத்தை ஊதித்தள்ள இயலாமல் அனைத்துத் தரப்பினருமே தவிக்கின்றனர். ஆனால், புகைபிடிப்பவர்களுக்கோ எந்தக் காலத்திலும் விலையேற்றம் ஒரு தடையாகவோ, பிரச்னையாகவோ இருப்பதாகவே தெரியவில்லை. விண்ணை முட்டும் விலைவாசி உயர்விலும் அவர்கள் இடைவிடாமல் ஊதித்தள்ள சளைப்பதுமில்லை, அஞ்சுவதுமில்லை. பேருக்கு ஒரு சட்டம் இயற்றி, அதைத் தங்கள் ஆட்சியின் சாதனைப் பட்டியலில் பத்தோடு பதினொன்றாக ஆக்கிக் கொள்ளாமல் பொது இடங்களில் புகைபிடிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டுமானால் தண்டனையை அரசு கடுமையானதாக்க வேண்டும்.  அபராதத் தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்.   அப்போதுதான் பொது இடங்களில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை முற்றிலும் குறையும். புகைமூச்சு விடும் பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விடுவர்.   புகையிலைப் பொருள்கள் அவற்றைப் பயன்படுத்துவோருக்கு மட்டுமன்றி அருகில் இருப்போர் மற்றும் புகையை சுவாசிப்போருக்கும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்களை ஏற்படுத்துகின்றன என அறிவுறுத்தப்பட்டாலும், புகைபிடிப்போர் பிறரை நினைத்துப் பார்ப்பதுமில்லை; தங்களைக் குறித்தும் கவலைப்படுவதுமில்லை.   இப்போது இழுத்துவிடும் ஒவ்வொரு மூச்சுப் புகையும் நாளடைவில் துன்பத்தில் இழுத்துவிடும் நோய்களின் தூதுவர்கள் என, புகைபிடிப்போர் யோசித்துப் பார்க்க வேண்டும். புகையிலைப் பொருள்களை பொது இடங்களில் பயன்படுத்த மட்டுமல்லாது அவற்றுக்கு முற்றிலும் தடைவிதிக்க வேண்டும். மாறாக, அவற்றைப் பொது இடங்களில் மட்டும் பயன்படுத்தத் தடைவிதிப்பது விஷ மரத்தை வேரோடு அழிக்காமல் இலைகளையும், கிளைகளையும் அகற்றிக் கொண்டிருப்பதற்குச் சமம்.   புகையிலைப் பொருள்களில் மண்டையோடு சின்னத்தைப் பொறிப்பதா வேண்டாமா என மிகப் பெரும் ஆராய்ச்சியில் இறங்கி மண்டையை உடைத்துக் கொள்வதற்குப் பதிலாக அத்தகைய பொருள்களே வேண்டாம் என அரசு முடிவெடுக்கலாமே!   இளைய சமுதாயம் என்னும் வருங்கால இந்தியத் தூண்கள் நலமாகவும், வளமாகவும் உருவாக வேண்டுமானால் அவர்கள் உலகில் நல்ல எண்ணங்களையும், நல்லவற்றையும் விதைக்க வேண்டும்.   அதே நேரம் இதுபோன்று உடலுக்கும், உயிருக்கும் மிகப்பெரும் கேடு விளைவிக்கும் புகையிலைப் பொருள்கள்போன்ற விஷ(ய)ங்கள் அவர்கள் பார்வையில் படாதிருக்க வேண்டும். அதற்கு ஒரேவழி புகையிலைப் பொருள்களுக்குத் தடைவிதிப்பதல்ல, புகையிலைக்கே தடைவிதிப்பதுதான்! மா. ஆறுமுககண்ணன்

No comments:

Post a Comment