Thursday, September 15, 2011

இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம் என்ற நூலில் எம்.என். ராய் தரும் சில முக்கிய குறிப்புகள்: ராஜகிரி கஸ்ஸாலி


இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம் என்ற நூலில் எம்.என். ராய் தரும் சில முக்கிய குறிப்புகள்:

இந்தியாவிற்குள் இஸ்லாம் நுழைந்த தருணத்தில் அதுதன் முற்போக்குப் பாத்திரத்தை செய்து முடித்திருந்தது. கல்வி அறிவும் பண்பாடும் கொண்டு விளங்கிய அறாபியர்களிடமிருந்து அதன் தலைமை பறிக்கப்பட்டிருந்த போதும் அதன் தொடக்க கால புரட்சிகரக் கோட்பாடுகளின் தோற்றமும் வளர்ச்சியும் அதன் கொடிகளில் பொறிக்கப்பட்டே இருந்தது. வெற்றிகொள்ளப்பட்ட மக்களின் ஆதரவு இல்லையென்றாலும் கூட அவர்களின் அனுதாபத்தையும் சம்மதிப்பையும் பெறாமல் ஒரு நீண்ட வரலாறும் பண்டைய பண்பாடும் கொண்ட மாபெரும் மக்கள் திரளை ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு அவ்வளவு எளிதில் அடிபணிய வைத்துவிட முடியாது.

11ஆம், 12ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் எண்ணற்ற மத அதிருப்தியாளர்கள் தோன்றியிருக்க வேண்டும். இவர்கள்தான் இசுலாமின் நற்செய்தியை ஆர்வத்தோடு வரவேற்றிருக்கக் கூடும். பார்ப்பனிய ஆட்சியாளர்களின் ஒடுக்கு முறைக்கு உள்ளாகியிருந்த ஜாட்டுகள், இதர விவசாய சாதிகளின் உதவியோடுதான் முஹம்மத் பின் காஸிம் சிந்துப் பகுதியை வெற்றிகொண்டார்.

இந்தியாவில் பௌத்தத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மோசமான பொருளாதாரச் சீரழிவு, அரசியல் ஒடுக்குமுறை, அறிவுஜீவிகளின் அராஜகம், ஆன்மீக குழப்பம் ஆகிய சிக்கல்களில் நாடு வீழ்ந்து கிடந்தது. நடைமுறையில் முழுச் சமூகமும் இந்த சீரழிவிலும் சிதைவிலும் பங்கெடுத்திருந்தது. இதனால் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக சமத்துவம் வழங்கிய இஸ்லாமிய கொடியின் கீழ் உடனடியாக அணி திரண்டனர்.

இஸ்லாத்தை விமர்சிக்கின்ற ஹேவல் இந்தியாவில் இஸ்லாம் பரவியது குறித்து முன்வைத்துள்ள சுவையான சான்று பின் வருமாறு: இஸ்லாம் மதத்தை தழுவிக் கொண்டவர்களுக்கு நீதி மன்றத்தில் ஒரு முஸ்லிமுக்குக் கிடைத்த அனைத்து உரிமைகளும் கிடைத்து வந்தன. அங்கு நீதிமன்றங்களில் அறாபியச் சட்டங்களையோ பழக்க வழக்கங்களையோ அவர்கள் நடைமுறைப் படுத்தவில்லை. குர்ஆனே அனைத்து வழக்குகளையும் தீர்மானித்து வந்தது. மதமாற்றம் என்ற வழி முறையானது இந்துச் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே, குறிப்பாக பார்ப்பனியத்தின் கடுமையான விதிமுறைகளால் அசுத்தமான வர்க்கங்கள் என கருதப்பட்டு வந்த மக்களிடையே வலுவான பாதிப்பை செலுத்தி வந்தது.

முஹம்மதியர்களின் படையெடுப்பின் போது இந்தியாவில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் இந்துச் சட்டங்கள் மீதோ, பார்ப்பரிய வைதீகத்தின் மீதோ விசுவாசம் கொள்வதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. இந்தப் பாரம்பரியத்தை கை கழுவி விட்டு, இந்துப் பிற்போக்குச் சக்திகளின் ஒடுக்கு முறைக்கு எதிராக தங்களுக்குப் பாதுகாப்புத் தர முன்வந்த இஸ்லாமின் சமத்துவ சட்டங்களை ஏற்றுக்கொள்ள அம்மக்கள் தயாராக இருந்தனர். இந்தியாவில் இஸ்லாம் அடைந்த வெற்றிக்குப் புறக் காரணிகளை பொறுப்பாக்க முடியாது. தன் இறை நம்பிக்கையை உண்மையாகப் பின்பற்றியவர்களுக்கு சமமான ஆன்மீகத் தகுதியை வழங்கிய இறைத் தூதரின் சமூகத் திட்டமும் இஸ்லாமுமே ஒரு அரசியல் சமூகக் கட்டளையாக உருவாகியிருந்தது. அதற்கு ஒரு தலையாய இலட்சியப் பணியை கையளித்திருந்தது. உலகத்தை உள்ளது உள்ளபடியே ஏற்றுக் கொள்ளும் ஒரு சராசரி மனித மனத்திற்கு போதுமான மகிழ்ச்சியைத் தரும் ஒரு வாழ்க்கை முறை இஸ்லாமிடம் இருந்தது.

இந்தியாவின் மீது நடை பெற்ற முஸ்லிம் படையெடுப் பிற்கான அகக் காரணிகளையும் புறக் காரணிகளையும் ஒரு தீவிர ஆய்விற்கு உட்படுத்துவது இன்றைக்கு நடைமுறையில் ஒரு மதிப்பு வாய்ந்த செயலாக அமையும். இதன் மூலம் இந்துக்கள் முஸ்லிம் படையெடுப்பின் ஆக்க பூர்வமான விளைவுகளை ஆதரிக்கக் கூடிய ஒரு நிலைக்கு வந்து விடுவார்கள்.

(நூல் பக்: 69, 70, 71, 72, 73)

Thanks:Meelparvai

No comments:

Post a Comment