Tuesday, June 7, 2011

வங்கி மைனஸ் வட்டி . அத்தியாயம் 8 (இஸ்லாமிக் பேங்கிங் பகுதி முற்றும்)



அத்தியாயம் 8
மாப்ளே, தங்கச்சி கைமணத்துக்கு ஒரு தங்கக் காப்பே போடலாம். புளிக்கொளம்பு மணம் கமகமன்னு எட்டு ஊருக்குத் தூக்குதே.
அவ நாட்டரசன்கோட்டை கண்ணாத்தா கோவில்லே கண்மலர் நேர்ந்துக்கிட்டு விடிகாலையிலேயே குளிச்சுட்டு போயிருக்காப்பா. மாவிளக்கு வேறே ஏத்தறா.
அப்ப உங்க கைக்குத்தான் காப்பு.
ஏது, இஸ்லாம் பேங்கு பத்தி இனியும் சொன்னா கைக்குக் காப்பு போட்டு, தீவிரவாதின்னு பொடாவிலே உள்ளே தள்ள வச்சுடுவே போலே இருக்கே.
அய்யோ, உங்களைப் போயா? கருவாட்டுக்கடை ஆதீனமிளகி இருக்கானே, என் உசிரு சிநேகிதன். அவனை வேணும்னா போடா வாடான்னு எதுலே வேணாலும் உள்ளே தள்ளலாம். தண்ட வண்டி போட்டு உசிரை வாங்கறான் மாப்ளே. நட்பு வேறேயாம், கடன் வேறேயாம். கடன் அன்பை முறிக்குதோ என்னமோ முழியைப் பிதுங்க வைக்குது. கைமுடையாகும்போது பணம் கொடுத்துட்டு கொடுத்த தொகையை மட்டும் பிற்பாடு வசூலிக்கற மாதிரி யாராச்சும் இருந்தா சொல்லுங்க.
இஸ்லாமிய பேங்கு வகையிலேயா கேக்கறே?
எதுக்குன்னேன். நீங்க இஸ்லாம் பேங்குனா முஷாரகா, முராபாஹா, எல்ஜாரா, இஸ்திஸ்னான்னு நீட்டி முழக்க ஆரம்பிச்சுடுவீங்க. வட்டியே இல்லைதான். ஆனா லாபத்துலே பங்கு, வாங்கின தொகைக்கு வேலை பார்த்து முடிச்சுக் கொடுக்கறதுன்னு ஷரியாவிலே இருந்து சரம் சரமா எடுத்து விடுவீங்க. நமக்கு அதெல்லாம் வேலைக்கு ஆகாதே.
அப்ப உனக்கு அல் க்வார்ட் ஹசன் (Al-Qard Hasan) தான் சரிப்படும்னு தோணுது.
இவர் யாரு மாப்ளே? கமல்ஹாசன், சாருஹாசன், அனுஹாசனுக்கெல்லாம் உறவா?
தேடிக்கிட்டு பரமக்குடிக்கு சவாரி விட்டுடாதே. இது ஒருத்தரோட பேரு இல்லை. இஸ்லாமிய பேங்கு சேவையிலே அல் க்வார்ட் ஹசனும் அடக்கம்.
ஷரியா படிக்கு இருக்கப்பட்ட வரவு செலவு வகையிலே இன்னொண்ணு தானே?
அல் க்வார்ட் ஹசன் மட்டும் தான் முழுக்க முழுக்க ஷரியா படியான இஸ்லாமிய வங்கி நிதி உதவின்னு  புனித குரான், ஹடித், ஷரியா, இதிலெல்லாம் நுண்ணறிவு இருக்கற அறிஞர்கள் சொல்றாங்க.  ஆனா, இதை மட்டும் நடைமுறைப் படுத்தறது சிரமம்கிறதையும் அவங்க உணர்ந்துதான் இருக்காங்க.
அம்புட்டு விசேஷம் இருக்கற விஷயம்னா சொல்லுங்க மாப்ளே. கேக்கலாம்.
க்வார்ட்ங்கற அரபிச் சொல்லுக்கு பங்கு வைக்கறதுன்னு பொருள். ஹசன்ங்கிறதுக்கு நலம், நலத்துக்காகன்னு அர்த்தம். அல் என்கிறது புனிதமானன்னு பொருள்படற அடைமொழி. சமூகத்திலே இருக்கற சக மனுஷனோட நலத்துக்காக தன் சொத்தில் ஒரு பகுதியைப் பங்கு வைக்கறதுங்கறது க்வார்ட் ஹசனோட அடிப்படை.
அப்படீன்னா என்ன மாப்ளே?
உனக்கு பணமுடைன்னு வச்சுக்க. எதுக்கு வச்சுக்கணும். எப்பவும் அதே கேசு தானே. இஸ்லாம் பேங்குலே போய்க் கேட்கலாம். அய்யா, முஷாரகா, முராபாஹா இதெல்லாம் ஒப்பந்தமாப் போட நமக்கு இன்னிக்குத் தேதிக்கு நெலமை ஒத்து வரல்லே. கொஞ்சம் பணம் புரட்ட வேண்டியிருக்கு. கொடுத்து உதவி பண்ணுங்க. இன்னும் மூணு மாசத்திலே  வடமேற்குலே இருந்து எதிர்பார்த்த பணம் வந்துடும்னு கண்டனி ஜோசியர் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லியிருக்கார். அப்போ ஜரூராக் கொண்டாந்து பேங்குலே வாங்கின தொகையைக் கட்டிடறேன்னு நீ சொல்லலாம். வாங்கின தொகையை மட்டும் கட்டினா போதும். ஒரு சல்லிக்காசு அதிகம் கொடுக்க வேண்டியது இல்லே. பேங்கு உன்னோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கும்.
தங்கச்சி வேறே உள்ளே போகும்போதே சிரிச்சுக்கிட்டே போச்சு. நீங்க வேறே ஏதோ அடிச்சு விடறீங்க. மாவிளக்கு அமிர்தமா இருக்குன்னு தங்கச்சி கிட்டே சொல்லுங்க மாப்ளே. ஆமா, இந்த உலகத்திலே தான் இப்படியான இஸ்லாம் பேங்கு சங்கதி எல்லாம் இருக்குங்கறீங்க?
இருக்குப்பா. இருக்கு. இந்தக் கடுங்காப்பியையும் குடிச்சுக்கிட்டே கேட்டு வை.   இஸ்லாம் பேங்க் பத்தி இல்லாததும் பொல்லாததுமாவா இப்படிக் காப்பித்தண்ணி கொடுத்து உனக்கு ஆதியோடந்தமா சொல்லிட்டு இருக்கேன். க்வார்ட் ஹசனையே எடுத்துக்க. முழுத் தொகையை ஒரே முட்டா திருப்பிக் கொடுக்க முடியலியா? கவலையை விட்டுத் தள்ளு. தவணையிலே கடனைத் திருப்பிக் கட்டலாம். அப்பவும் லாபத்திலே பங்கு, உழைப்பு முதலீடுன்னு உன் கிட்டே எதையும் பேங்கு எதிர்பார்க்காது. கொடுத்த பணத்தைத் திருப்பினாப் போதும்.
நம்ம ஊர்லேயும் க்வாட்டர் ஹசன், ஃபுல் ஹசன் எல்லாம் கொண்டு வரணும் மாப்ளே.
க்வாட்டர் இல்லேப்பா. க்வார்ட் ஹசன். இதிலே இன்னொரு மன நிறைவு தரும் விஷயம் இருக்கு. நீ கைத்தொழில் தெரிஞ்சவன். பேங்குலே க்வார்ட் ஹசன் நிதி உதவி வாங்கி தொழில் நடத்தி அமோகமா வந்து பேங்கு கொடுத்த பணத்தை அடைக்கறே. இந்த நிதி உதவியினாலே தானே நாம இந்த நல்ல நிலைக்கு வந்திருக்கோம்னு ஒரு நிமிசம் நினைச்சுப் பார்க்கறே. நீயாவே விருப்பப்பட்டு பேங்குக்கு அன்பளிப்பா, வெகுமதியா ஒரு தொகையையும் சேர்த்துத் தரலாம். க்வார்ட் ஹசன்லே இந்தப் பெருந்தன்மைக்கும் இடம் உண்டு. இந்த மாதிரி கொடுக்கற அதிகப் பணத்தை கொடை – ஹிபா  (Hibah)ன்னு சொல்வாங்க. பேங்கு இப்படியான ஹிபா வாங்கிக்க ஷரியா  எந்தத் தடையும் விதிக்கலே.
பேங்கு முராபாஹா, முஷாரகா, லிஜாரா, இஸ்திஸ்னா, பே சலாம் இப்படி உதவவே இருக்கப்பட்ட முதல் எல்லாம் சரியாப் போயிடுமே. ஏழை பாழைக்கு க்வார்ட் ஹசன் கொடுக்க பணத்துக்கு எங்கே போகும் மாப்ளே?
இஸ்லாம் சொல்ற படிக்கு வட்டியே வேணாம்னு பேங்குலே பத்திரமா வச்சிருக்கறதுக்காக சேமிப்புக் கணக்குலே பணம் போட்டு வைக்கறதை சொன்னேன் இல்லியா? அந்தத் தொகையைப் பயன்படுத்தி பேங்கு முராபாஹா போல நிதி உதவி செய்து லாபத்திலே பங்கு வாங்கிக்கும்னும் பார்த்தோம். இந்த   லாபப் பங்கை எல்லாம் சேமிப்புக் கணக்கு வச்சிருக்கவங்களோடு பேங்கு பகிர்ந்துக்கும்னும் பார்த்தோம். நினைவு இருக்கா?
இல்லாமே என்ன? ஷரியா சொன்னபடிக்கு சப்ளை செய்யறதாப் பார்த்துக் காபித்தூள் வாங்கற கடையை மாத்திட்டீங்க போலே இருக்கு. சிக்கரி வாடை கொஞ்சம் தூக்கலா வருது. இதுவும் நல்லாத்தான் இருக்கு மாப்ளே.
சும்மாவா சொன்னான்? நம்ம மாதிரி செம்மண் பூமிப் பயகளுக்கு   குசும்பு உடம்பொறந்ததாச்சே? நீ மட்டும் என்ன தப்பிப் பொறந்தவனா இல்லே நானா? இருக்கட்டும். அல் க்வார்ட் ஹசன் நிதி உதவி செய்ய பணத்துக்கு பேங்கு எங்கிட்டுப் போகும்னு கேட்டியே? சேமிப்புக் கணக்கு தொறக்கறவங்களும் அல் க்வார்ட் ஹசன் கணக்கு (Al Qard Hasan deposit) திறந்துடுவாங்க. வட்டியும் கிடையாது. லாபத்துலே பங்கு வரும்னும் எதிர்பார்க்கக் கூடாது. சேமிப்புக் கணக்குலே போட்ட தொகை பத்திரமாத் திரும்பி வரும். அம்புட்டுத்தான்.
அம்புட்ட்டுத்தான்னா அம்புட்டுத்தானா?
அப்படிச் சொன்னா விட்டுடறதா? ஒண்ணு சொல்றேன் குறிச்சுக்க. உலகத்திலே எந்த இஸ்லாம் பேங்குலேயும் அல் க்வார்ட் ஹசன் டெபாசிட் போட்டு சேமிச்ச தொகையை மட்டும் வாங்கிட்டுப் போனதா சரித்திரமே இல்லை. முதரபா மாதிரி நிதி உதவியிலே பங்கு பெற முதலீட்டுக் கணக்கு (investment deposit) திறக்கறதையும், பேங்கு அந்தப் பணத்துக்கு காப்பாளாராக (manager of funds) செயல்படறதையும் சொன்னேனே. அப்படி முதலீட்டுக் கணக்கு வச்சு வர்ற அதிக வருமானத்தை விட க்வார்ட் ஹசன் டெபாசிட் வச்சுக்கிட்ட வாடிக்கையாளர்கள் வாங்குறது உண்டு. பணத்தை விடு. க்வார்ட் ஹசன் டெபாசிட்களுக்கு பரிசு (gifts) வழங்கறதையும்  பேங்குகள் செய்யுது. நிதிக் கம்பெனி வெள்ளிக் குத்துவிளக்கும் த்ரீஷா படம் போட்ட கேலண்டரும் அன்பளிப்பு கொடுக்கற மாதிரியான்னு கேட்டுடாதே. இங்கே போட்ட பணம் உத்திரவாதம். மத்தபடி இருபது பெர்சண்ட் வட்டி எல்லாம் கையிலே அடிச்சு வாக்குக் கொடுத்துட்டு ஓடறதும் இல்லே.
அட, அடுத்த குவளை கடுங்காப்பி தங்கச்சி அனுப்பி வச்சுடுத்தே. இதான் நம்ம காப்பித்தூள். நயம் சரக்கு. வாசனை தூக்குது பாருங்க மாப்:ளே.
அட நீ ஒண்ணுப்பா. காப்பிப் பாத்திரத்திலே சுடுதண்ணி ஊத்தி கழுவறபோது கொஞ்சம் கறுப்பா வந்திருக்கும். பீங்கான் கிளாஸ்லே ஊத்தி அனுப்பியிருக்கா.
சும்மா தங்கச்சியை நக்கலடிக்காதீக சொல்லிட்டேன். பகல் சோத்துக்கு பட்டை நாமம்தான் அப்புறம் மாப்ளே.
சரிப்பா கவனிச்சு நடந்துக்கறேன். சந்தோஷம் தானே?
நமக்குத் தெரிஞ்ச பேங்கு நடைமுறையிலே எதைச் சொன்னாலும் அதுக்கெல்லாம் இஸ்லாம் பேங்கு வழிமுறை இதான்னு சொல்றீங்களே? கிரடிட் கார்ட் இருக்குதா உங்க இஸ்லாம் பேங்குலே?
இல்லாமே என்ன? அல் க்வார்ட் ஹசன் அடிப்படையிலே அதுவும் உண்டு. தகுதியானவங்களுக்கு இஸ்லாமிய வங்கி கிரடிட் அட்டை தரப்படும். எல்ஜாரா அடிப்படையிலே தவணை முறையிலே கடனைத் திருப்பி அடைக்கிற கிரடிட் கார்டும் உண்டு. சேவைக் கட்டணத்தை (service charge) முன் கூட்டியே நிர்ணயிச்சு, நீ உடன்பட்டு கார்ட் வாங்கினதும், மாசாமாசம் கட்டச் சொல்லுவாங்க. நம்மூர் கிரடிட் கார்டுலே சர்வீஸ் சார்ஜ் வருஷத்துக்கு ஒரு முறை கட்டினாப் போதும். ஆனா, கடன் நிலுவையிலே போனா, முப்பது பெர்சண்ட் வட்டிக்கு மேலே டாப்பு எகிறிடும்.  அங்கே அந்தத் தொல்லை இல்லே.
சரி, இஸ்லாம் வங்கி, அதுங்க இருக்கப்பட்ட அரபு நாடுகளோட அரசாங்கம். இதுக்கெல்லாம் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது. பெரிய தோதுலே பணத் தேவை ஏற்படலாம். அதை எல்லாம் எப்படி சமாளிக்கறாங்க மாப்ளே?
அதுவா, நம்மூர்னா, மத்திய அரசும் மாநில அரசும் பேங்குகள், கம்பெனிகள் கிட்டே இருந்து கடன் வாங்க பாண்ட் (bond) வெளியிடும். ஒரு வருடத்துலே, ரெண்டு வருடத்துலே வட்டியோடு பணத்தைத் திருப்பித் தரும். அதாவது எழுநூத்து ஐம்பது ரூபாய் கொடுத்து சர்க்கார் பாண்ட் வாங்கினா, ரெண்டு வருஷம் கழிச்சு ஆயிரம் ரூபாயா வர்ற மாதிரி தள்ளுபடி பாண்ட் (discount bond) பெரும்பாலும் இதெல்லாம். மத்திய அரசு கருவூலச் சீட்டுன்னு (treasury bill) 91 நாள், 182 நாள் கழிச்சு திரும்பிப் பணம் தர்றதா குறைந்த காலக் கடன் வாங்கறதும் உண்டு. நம்ம பாண்ட் போல இஸ்லாமிக் வங்கித்துறையிலே சுகுக் (sukuk).
சுகுக்லே அரசாங்கம் எங்கே வருது? இஸ்லாம் பேங்க் எங்கே இருந்து வருது?
அரசு இஸ்லாம் பேங்கோடு போட்டுக்கற கடன் ஒப்பந்தம் க்வார்ட் ஹசனா இருக்கலாம். பேங்க் வாடிக்கையாளர்கள் கிட்டே இருந்து நிதி திரட்ட போட்டுக்கற சுகுக் முதலீட்டுலே பங்குத் தொகையா வாங்கற கடனா இருக்கலாம். அதாவது சுகுக் முதரபா, சுகுக் முஷாரகா, சுகுக் எல்ஜாரா இப்படி. வாடிக்கையாளருக்குப் போட்ட பணத்தைவிட அதிகத் தொகை கிடைக்கும். அரசாங்கமும் கையை இழுத்துப் பிடிச்சுக்காதுங்கறதாலே பேங்கும் க்வார்ட் ஹசன் பாண்ட்லே முதலீடு செஞ்சிட்டு கன்னத்துலே கையை வச்சுக்கிட்டு உக்கார்ந்திருக்க வேண்டியதில்லே.
இதெல்லாம் தடம் மாறிப் போக வழியே இல்லையா?
காசு பணம் விவகாரம் தான் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா எல்லாமுமே. இஸ்லாமிக் வங்கியியல் இதை நியாயத்தோடும் மனிதாபிமானத்தோடும் அணுகணும்னு சொல்றது. அதான் முக்கிய வித்தியாசம். இஸ்லாம் நிதி நடைமுறையிலே குளறுபடியே ஏற்படாதான்னு கேட்டியே? ஆயிருக்கு. ஆனா, அதுக்கு ஷரியாவோ இஸ்லாம் பேங்கோ காரணம் இல்லே.
பின்னே யாரு காரணம் மாப்ளே?
பேங்குலே வாங்கின கடனை செலவழித்த விதம் தான் காரணம். துபாய்லே கவர்மெண்டே முன்கை எடுத்து துபாய் ஓர்ல்ட்னு பெரிய கம்பெனி ஆரம்பிச்சு சுகுக் மூலம் கோடி கோடியா உலகம் முழுவதும் இருந்து கடன் வாங்கி, துபாய்லே பிரம்மாண்டமான கட்டிடங்களை, ஒரு நகரத்தையே புதுசா உருவாக்கற முயற்சியை ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் அகலக் கால் வச்சுட்டாங்க. கடன் தொகை கொடுத்து சுகுக் வாங்கினவங்களுக்கு தவணைக் காலம் முடிஞ்சு பணத்தைத் திருப்பித்தர முடியாம தவியாத் தவிச்சுத் தண்ணி குடிச்சாங்க. அபு தாபி அரசு உறவுக்கரம் நீட்டிக் காப்பாத்தினாங்களோ, பிழைச்சாங்களோ. என்னமோ போ. இன்னொரு கடுங்காப்பி வந்திருக்கு பாரு.
அய்யோ மாப்ளே. இது பச்சைத் தண்ணியாச்சே. தங்கச்சி உங்க டயத்தை வீணாக்காம நடையைக் கட்டுன்னு என்கிட்டே சொல்லுதாக்கும். சரிம்மா புரிஞ்சுக்கிட்டேன். கிளம்பட்டா? சாவகாசமா அப்புறம் பார்க்கலாம் மாப்ளே.
பார்க்கலாம்’பா, இன்ஷா அல்லாஹ்.
(இஸ்லாமிக் பேங்கிங் பகுதி முற்றும்)

No comments:

Post a Comment