Saturday, June 4, 2011

நம்மிடமிருந்து கோடிகளைச் சுருட்டும் டெலிகாம் நிறுவனங்கள்!


நம்மிடமிருந்து கோடிகளைச் சுருட்டும் டெலிகாம் நிறுவனங்கள்!


37,00,80,000 ரூபாய் சுருட்டல்! 
சுருட்டியது யார்? 
செல்போன் சேவை தரும் நிறுவனங்கள். 
சுருட்டியது யாரிடமிருந்து? 
செல்போன் பயன்படுத்தும் நம்மிடமிருந்து.

நிஜமாகவா என்று அதிர்ச்சி அடைபவர்களுக்கு ஒரு கேள்வி. VAS என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டாலும் பரவாயில்லை. VAS என்ற பெயரில் உங்களுக்கே தெரியாமல் அவ்வப்போது பணம் திருடப்படுகிறது என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். 

Value Added Service என்பதின் சுருக்கமே VAS.
மாதம் இருபது ரூபாயில் இருந்து தினமும் இருபது ரூபாய் வரை பணம் கறக்கும் இந்த வசதிகளைப் பற்றி நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

உங்களுக்கு ஃபோன் செய்யும்போது குறிப்பிட்ட பாடலை காலர் டியுனாக ஒலிக்க விடுவது, தூங்கி எழுந்தவுடன் ராசிபலன் சொல்வது, காதல் டிப்ஸ் கொடுப்பது, மருத்துவ ஆலோசனை சொல்வது, கிரிக்கெட் ஸ்கோர் சொல்வது, டிராபிக் ஜாம் என அலறுவது உட்பட ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கட்டணம்.

இப்படி பல சேவைகள் இருப்பதும், அதற்க்கென்று தனித்தனி கட்டணங்கள் இருப்பதும் தவறில்லை. ஆனால் இந்த சேவைகளை நீங்கள் கேட்காமலேயே, உங்கள் தலையில் கட்டி, உங்களிடம் சொல்லாமலேயே, பணத்தையும் எடுத்துக் கொள்வதில்தான் புத்திசாலித்தனமான சுருட்டல் துவங்குகிறது.

இராஜபாளையத்தை அடுத்துள்ள சொக்கநாதன் புத்தூர் என்ற சின்ன கிராமத்திலிருந்து என் சித்தப்பா சென்னை வந்தார். வேட்டி மடிப்புக்குள் செல்போன் வைத்திருக்கும் அவரை மொபைலில் அழைத்தபோது, லேட்டஸ்ட் பாடல் காலர் டியுனாக ஒலித்தது. அவரிடம் எப்படி இந்தப் பாட்டை காலர் டியுனா வச்சீங்க என்றேன். அவ்வளவுதான் பொங்கிவிட்டார். 

அட நீ வேறப்பா..இந்த பச்சை பட்டனை அமுக்கினா பேசலாம். சிவப்பு பட்டனை அழுத்தினா கட் பண்ணலாம். இதுதான் எனக்குத் தெரியும். என்கிட்ட போய் இந்த பாட்டு எப்படி வந்ததுன்னு கேட்டா எனக்கு எபபடித் தெரியும்? நான் இந்தப் பாட்டையெல்லாம் கேக்கறதே இல்ல. ஆனா அப்பப்போ பாட்டு மாறிக்கிட்டே இருக்கு. திடீர் திடீர்னு 30 ரூபா போயிடுது. இத எப்படி தடுக்கறதுப்பா என்றார் பரிதாபமாக..


கடந்த வாரம் ஐதராபாத் செல்ல வேண்டியிருந்தது. புறப்படும் முன் எனது மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். 98ரூபாய்க்கு ஏதோ பாக்கேஜ் இருக்கிறது, ஒரு மாதம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்கள். நானும் பணத்தை கட்டிவிட்டு, எப்போது ஆக்டிவேட் ஆகும் என்றேன். ஈஸி ரீசார்ஜ் செய்தாச்சு சார். நீங்க உங்க போனில் என்னைக்கு செட்டப் செய்கிறீர்களோ, அன்றிலிருந்து ஒரு மாதம் வேலிடிட்டி என்றார்கள். காரில்தான் பயணம். உடன் வந்த நண்பர் டாட்டா கார்ட் இணைப்புடன் லேப்டாப் கொண்டு வந்திருந்ததால், நான் எனது ஃபோனில் இன்டர்நெட்டை ஆக்டிவேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று.

பயணமெல்லாம் முடிந்து திடீரென மொபைல் இன்டர்நெட்டுக்கு பணம் கட்டியது ஞாபகம் வந்தது. உடனே கஸ்டமர் கேர் ஆலோசனையின் படி இன்டர்நெட்டை ஆக்டிவேட் செய்தேன். செய்தவுடனேயே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இன்னும் ஒரு நாள்தான் வேலிடிட்டி இருக்கிறது என்றது ஒரு குரல். உடனே இன்டர்நெட் ரீசார்ஜ் செய்த கடையை தொடர்பு கொண்டேன். கடைக்காரரோ கூலாக, ரீ சார்ஜ் செய்த அன்றிலிருந்து ஒரு மாதம் கணக்கு சார். வாங்கின அன்னைக்கே ஆக்டிவேட் செய்து பயன்படுத்தாதது உங்க தப்பு என்றார். சிறிய வாக்குவாதத்திற்குப் பின் கஸ்டமர் கேரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்றார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், அரை நாள் முயற்சித்தால், ஒரே ஒரு முறைதான் கஸ்டமர் கேர் நபரை லைனில் பிடிக்க முடிகிறது. எனது 98 ரூபாய் போயே போச்.

குமார் என்கிற சேல்ஸ் மேனேஜர். ஊர் ஊராக பயணம் செய்பவர். ஊரிலிருந்தால் மோட்டர் பைக்கிலேயே சுற்றுபவர்.  இனி மிஸ்டு கால் பற்றி கவலைப் படவேண்டாம். மிஸ்டு கால் நம்பர்கள் எல்லாம் உங்களுக்கு எஸ்எம்எஸ்ஆக வரும் சேவை ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வந்ததாம். நாம் கேட்காமலேயே இந்த சேவை நமக்கு வந்தது எப்படி என்று குழம்பிய நண்பர், பேலன்ஸ் செய்திருக்கிறார். 30 ரூபாய் அபேஸ் ஆகியிருந்ததாம். எரிச்சலடைந்த குமார், திரும்பத் திரும்ப கஸ்டமர் கேரை தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டாராம். பலன் ஏதுமில்லை. மாதம் 30 ரூபாய் அவருடைய மொபைலில் இருந்து கரைந்து கொண்டே இருக்கிறது.

2005ல் இருந்து இந்த புற வழி சுருட்டல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்போதெல்லாம் ஏதாவது ஒரு சேவை 3 மாதத்துக்கு இலவசம் என்பார்கள். இலவசம் தானே என்று நீங்களும் 3 மாதமும் பயன்படுத்துவீர்கள். நான்காவது மாதம், உங்கள் அக்கவுண்டிலிருந்து அந்த சேவைக்காக பணம் உங்களைக் கேட்காமலேயே உருவப்பட்டுவிடும். இதை நீங்கள் கண்டுபிடித்து கேட்டால் உருவுதல் நிற்கும். இல்லையென்றால் துளித் துளியாக உங்கள் பணத்தை சுரண்டுவார்கள்.

செல்போன் சேவை நிறுவனங்களின் இது போன்ற அராஜகங்களை எல்லாம் கட்டுக்குள் வைக்கத்தான் TRAI (Telecom Regulatory Authority of India) என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. இலவசமாக ஒரு சேவையை சில காலம் வழங்கிவிட்டு, வாடிக்கையாளரின் சம்மதத்தை கேட்காமலேயே திடீரென பணம் வசூலிப்பது கூடாது என்று ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. ஆனால் செல்போன் சேவை கொள்ளையர்கள் அசரவில்லை. இந்த சேவை வேண்டாம். இதற்கு நான் பணம் கட்ட மாட்டேன் என்று வாடிக்கையாளர்கள் SMS அனுப்பினால் பணம் பிடுங்கப்படமாட்டாது என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னார்கள். 

ஒரு பெரிய செல்போன் சேவை நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருந்த நண்பர் ஒருவர் (பெயரை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன்) கூறிய தகவல் என்ன தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் கேட்காமலேயே பணத்தை உருவிக் கொண்டு, ஒரு சேவையை திணிக்கிறோம். இதை கவனித்துவிட்டு, எனக்கு வேண்டாம் என்று எங்களை அணுகுபவர்கள் 200-300 பேர்களே. அவர்களிலும் 50-60 பேர்தான் எங்களுடைய எல்லா இழுத்தடிப்புக்கும் அசராமல், தங்கள் பணத்தை வாபஸ் பெறுகிறார்கள். மற்றவர்கள் அலுத்துப் போய் விட்டுவிடுகிறார்கள் என்றார். ஒரு இலட்சம் பேரிடம், அவர்களின் சம்மதம் இன்றி மாதம் 30 ரூபாய் உருவப்பட்டால் அதற்குப் பெயர் சேவையா? கொள்ளையா?

TRAI சர்வ வல்லமை பொருந்தியதாக கூறப்பட்டாலும், அவ்வப்போது சில அறிக்கைகளுடன் நின்றுவிடுகிறது. செல்போன் சேவை நிறுவனங்களின் இந்த அராஜக பணச் சுருட்டலை கண்டும் காணாதது போலத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தங்கள் மேல் திணிக்கப்படும் இந்த சேவை தேவை இல்லை என்று வாடிக்கையாளர்கள் SMS அனுப்ப வேண்டியதில்லை, என்று ஒரு திருத்தம் கொண்டு வந்தது. ஆனால் கில்லாடி கிரிமினல் செல்போன் நிறுவனங்கள், அதற்கும் ஒரு சால்ஜாப்பு கண்டுபிடித்தன. நாங்கள் வாடிக்கையாளருக்கு போன் செய்தோம். அவர் ஆமாம் என்றார். அதனால்தான் இந்த சேவையைத் தந்தோம் என்று புதுக்கதை சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களோ, எங்களுக்கு எந்த போனும் வரவில்லை என்றார்கள். சிலரோ போன் வந்தது, நான் வேண்டாம் என்றேன். ஆனாலும் எனக்கு அந்த சேவை திணிக்கப்பட்டு பணம் உருவப்பட்டுவிட்டது என்றார்கள்.

வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டதாக கூறிக் கொள்ளும் செல்போன் நிறுவனங்கள், அவற்றை பதிவு செய்து வைப்பது இல்லை.  வேண்டுமென்றே அவை இப்படிச் செயல்படுவதால்  இவற்றை சரி பார்க்கவும் வழியில்லை. எனவே TRAI மீண்டும் தன் கட்டுப்பாடுகளை இறுக்கியது. இனிமேல் ஏதாவது சேவையை ஒரு வாடிக்கையாளருக்கு தந்தால், SMS, Email அல்லது Fax வழியாக எழுத்து பூர்வமாக சம்மதம் பெற வேண்டும். சம்மதம் தரும்போது சேவை பற்றிய முழு விபரங்களையும், கட்டணம் உட்பட அனைத்தையும் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  SMS மற்றும் Email மூலமாக Acknowledgement பெற வேண்டும். எனறு புது விதிகளை உருவாக்கியது. ஆனால் செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த விதிகள் எதையும் கடைபிடிப்பதாகத் தெரியவில்லை. TRAIக்கு அஞ்சுவதாகத் தெரியவில்லை.

ஒரு காய்கறி எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் மாதம் 4000 ரூபாய் சொற்ப வருமானத்திற்கு, காய்கறிகளை சுத்தம் செய்யும் வேலையில் உள்ள கவிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவருடைய மொபைல் போனிலிருந்து தினமும் 20 ரூபாய் போய்க் கொண்டே இருந்ததாம். நண்பர்கள் யாரோ விளையாடுகிறார்கள் என்று அசட்டையாக இருந்தவர், பாதிச் சம்பளம் வெட்டியாக கரைவதை உணர்ந்தவுடன், விஷயம் தெரிந்த பக்கத்துவீட்டுக் காரரிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். அவர் விசாரித்து தெரிந்து கொண்டது என்ன தெரியுமா? கல்பனா GPRS வேண்டுமென்று கேட்டுக் கொண்டாராம். அதனால் தினமும் 20 ரூபாய் பிடித்துக் கொண்டார்களாம். GPRSனா என்ன என்று கேட்கும் அந்த பரிதாபப் பெண்ணை போல பணம் பறிகொடுப்பவர்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கான பேர்.

தினமும் பூ விற்று பிழைப்பு நடத்தும் ஜெயாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
அண்ணா கொஞ்சம் இத இன்னான்னு பாரேன். யாரோ ஒரு பொண்ணு போன் பண்ணுச்சு. இங்கிலீஷ்ல இன்னா பேசுச்சுன்னே புரியல. நான் கட் பண்ணிட்டேன். இப்போ இன்னாடான்னா, 30 ரூபாய் பூடுச்சு என்றாள். போனை வாங்கிப் பார்த்தால் அதில் ஒரு SMS வந்திருந்தது. அதாவது தினசரி மெடிக்கல் டிப்ஸ் தருவதற்க்காக 30 ரூபாய் வசூலிக்கப்பட்டுவிட்டதாம். ஆங்கிலம் தெரியாத ஒரு பெண்ணிடம், ஆங்கிலத்தில் பேசி பணத்தை உருவும் இந்த அராஜகத்துக்கு என்ன பெயர்?

மொபைல் வைத்திருக்கும் அனைவருக்கும், இது போல பணத்தை பறிகொடுத்த சம்பவம் ஒன்றாவது இருக்கும். நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பாடலை உங்கள் காலர் டியூனாக்க விரும்பினால், ஸ்டார் பட்டனை அழுத்துங்கள், என்ற குரலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். நான் தான் ஸ்டார் பட்டனை அழுத்தவே இல்லையே. அப்புறம் எப்படி இந்தப் பாட்டு வந்துச்சு. எனக்கு 30 ரூபா போயிடுச்சே என்று புலம்புபம் இலட்சக் கணக்கானவர்களின் குரலை எங்காவது கேட்டிருக்கிறீர்களா? இது பற்றி எழுதப் போகிறேன் என்றவுடன் இது போல பல புலம்பல்களைக் கேட்டேன்.

TRAI இது குறித்தும் ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தது. ஸ்டார் பட்டனை அழுத்தியதாலேயே வாடிக்கையாளர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று அர்த்தமில்லை. வாடிக்கையாளரிடம் பேசி, அவரை SMS. Email அல்லது Fax வழியாக சம்மதம் பெற வேண்டும் என்று கூறியது. 2009ல் வெளிவந்த இந்த கட்டுப்பாட்டுக்கு எந்த செல்போன் சேவை நிறுவனமும் மதிப்பளிக்கவில்லை.

அதுவும் இந்த ஸ்டார் பட்டன் விவகாரம் வாடிக்கையாளருக்கே மிகத் தாமதமாகத்தான் தெரியவருகிறது. அவருக்கு ஃபோன் செய்யும் யாராவது, பாட்டு மாறியது பற்றி சொன்னால் மட்டுமே அவருக்குத் தெரியும். அதுவரையில் அவருக்கு பணம் பறிபோனதே தெரியாது. தெரியவரும்போது, அந்த சேவை ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்திருப்பதால், அந்த தொகையை திரும்பப் பெற்றதாக ஒரு உதாரணம் கூட கிடையாது.

வாடிக்கையாளர் புகார் தந்தால் ஒரு மாதத்துக்குள் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சேவை நிறுவனத்தின் மேல் தவறு இருந்தால், அடுத்த இரண்டு மாதத்துக்குள் பிரச்சனையை தீர்க்க வேண்டும். TRAIயின் இந்த விதி முறைகளை மேலோட்டமாகப் பார்த்தால் சேவை நிறுவனங்கள் தப்ப முடியாது என்பது போலத் தோன்றும். ஆனால், அடுத்த வரியை படித்தால் உங்களுக்கு நம்பிக்கையே போய்விடும். அதாவது சேவை நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை குறித்த காலத்துக்குள் எடுக்கத் தவறினால், அவர்களுக்கு அபராதமோ, தண்டனையோ எதுவுமே கிடையாது, என்பது தான் அது. அதாவது TRAI என்பது அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று செல்போன் சேவை நிறுவனங்களைப் பார்த்து சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறது. அதற்கு மேல் எதையும் செய்வதற்கு TRAIக்கு அதிகாரமில்லை.

மொபைல் சேவை நிறுவனங்களின் இந்த அராஜக போக்கால் எவ்வளவு பணம் சுருட்டப்படுகிறது என்பது பற்றி ஒரு சிறிய புள்ளி விபரம் பார்ப்போம். ஒரு சேவையை வழங்குவதற்கு முன்னால் உங்களிடம் அதற்க்கான அனுமதி பெற்ப்படுகிறதா? என்ற கேள்வியுடன், இந்தியா முழுவதும் மாநிலம் வாரியாக ஒரு புள்ளிவிபரக் கணக்கு எடுக்கப்பட்டது. அதன்படி 23.89% சதவிகித மக்களிடம், அவர்களின் அனுமதி இல்லாமலேயே சேவை(VAS) வழங்கப்பட்டு பணமும் சுரண்டப்படுகிறது. அதாவது 18504000 நபர்களிடம எந்த அனுமதியும் இன்றி குறைந்தது ஆளுக்கு 20 ரூபாய் உருவப்படுகிறது. கணக்கிட்டால் பகீர் என்றிருக்கும்.  18504000 x 20 = 37,00,80,000 ரூபாய்.

இந்த கூட்டுக் கொள்ளையில் Airtel, Aircel, Idea, Vodfone உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு. இவர்களை தட்டிக் கேட்க வேண்டிய TRAI அமைப்பு, அவ்வப்போது சில சட்ட திட்டங்களை கூறிவிட்டு, வேடிக்கை பார்க்கிறது.

இதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், கடந்த ஆண்டு (2010) TRAI அமைப்பால் 3285 புகார்கள் பெறப்பட்டு அவை சம்பந்தப்பட்ட செல்போன் சேவை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக, பாராளுமன்றத்தில் திரு.சச்சின் பைலட்(Minister of State for Communications and Information Technology) கூறினார். 771 மில்லியன் மக்களில் எத்தனை பேருக்கு TRAI என்ற அமைப்பு தெரியும். கரிசல்காட்டு விவசாயிக்கும், காய்கறியும், பூவும் விற்றுப் பிழைக்கும் சாதாரணர்களுக்கும் பணம் பறிபோனதே தெரியவில்லை.அவர்கள் TRAIக்கு இமெயில் அனுப்பி புகார் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அபத்தம். எனவே நமது அரசாங்கம் இந்த பணச் சுருட்டலை தடுக்க, கடுமையான சட்ட திட்டங்கள் வகுத்து, செல்போன் சேவை நிறுவனங்களை அடக்கி வைக்க வேண்டும்.

அது வரையில் வாடிக்கையாளர்களாகிய நாம்தான் விழிப்புடன் இருந்து, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டும். செல்போன் சேவை என்ற பெயரில் கொள்ளையடிப்பவர்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்ப வேண்டும்.
கம்ப்யூட்டர் உலகம் (மே ) இதழில் நான் ( r.selvakkumar )எழுதிய கட்டுரை

No comments:

Post a Comment