Friday, June 3, 2011

காஷ்மீரில் ராணுவம் மீது போலீஸார் வழக்கு


இந்தியா
காஷ்மீரில் ராணுவம் மீது போலீஸார் வழக்கு

First Published : 03 Jun 2011 01:38:33 AM IST


ஸ்ரீநகர், ஜூன் 2: காஷ்மீரில் வன்முறையில் ஈடுபட்டதாக ராணுவத்தின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லே பகுதியில் உள்ள 3 ஹோட்டல்களில் ராணுவ வீரர்கள் புகுந்து அங்கு தங்கியிருந்தவர்களை விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்ததாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும், யார் என்று அடையாளம் காணப்படாத சில ராணுவ வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விவரம்: காஷ்மீரின் லே பகுதியில் உள்ள மானசரோவர், ஹாலிடே இன், கேதார் விருந்தினர் மாளிகை ஆகிய இடங்களுக்குள் ராணுவ வீரர்கள் மே 30-ஆம் தேதி நள்ளிரவில் சென்றுள்ளனர். அவர்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் ராணுவத்தினர் வழக்கமான அணியும் பெயர் பொறிக்கப்பட்ட பேட்ஜை அணியவில்லை. அங்கு தூங்கிக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை எழுப்பி மிரட்டும் தோனியில் விசாரணை நடத்தியுள்ளனர். இவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இது அங்கு தங்கியிருந்தவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்த சுற்றுலாப் பயணி ஒருவர் அதனை இணைத்து போலீஸில் புகார் அளித்தார். வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டு தூதரகங்கள் மூலம் ராணுவத்தினர் நள்ளிரவில் தங்களை வந்து மிரட்டியதாக புகார் தெரிவித்துள்ளனர். பொதுவாக இது போன்ற விசாரணை நடத்த ராணுவத்தினர் உள்ளூர் போலீஸாரை உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்பது விதி. ஆனால் ராணுவத்தினர் அவ்வாறு செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புகார்களை அடுத்து வன்முறையில் ஈடுபடுதல், ஆயுதங்களை வைத்து மிரட்டுதல், வலுக்கட்டாயமாக சிறை பிடித்தல் போன்ற பிரிவுகளில் ராணுவ வீரர்கள் மீது உள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராணுவம் விளக்கம்: இந்த சம்பவம் தொடர்பாக ராணுவம் விளக்கமளித்துள்ளது. அதில், "ராணுவ வீரர்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. அந்தப் பகுதியில் சாட்டிலைட் போன் உபயோகப்படுத்தும் சமிக்ஞைகள் கிடைத்தன. இதையடுத்து ராணுவத்தினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
லே பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன. அசம்பாவிதம் ஏதும் நிகழக்கூடாது என்பதற்காக ராணுவத் தரப்பில் பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டது' என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜே.எஸ்.பிரார் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமணி

No comments:

Post a Comment