Tuesday, June 7, 2011

பிறர் குறைகளை மறைப்பவர்



உண்மை முஸ்லிமின் நற்பண்புகளில் ஒன்று பிறரது குற்றங் குறைகளை மறைத்தலாகும். இஸ்லாமிய சமூகத்தில் கீழ்த்தரமான விஷயங்கள் பரவுவதை அவர் விரும்பமாட்டார். திருமறையும், நபிமொழியும் முஸ்லிம்களின் குற்றம் குறைகளை தூண்டித்துருவி ஆராய்ந்து அவர்களது கவுரவத்துக்கு பங்கம் விளைவிக்கும் குழப்பவாதிகளை வன்மையாகக் கண்டிக்கிறது.
இஸ்லாமிய சமூகத்தில் வாழ்பவர் இழிவான, கீழ்த்தரமான விஷயங்களில் ஈடுபடுவதிலிருந்து மிகவும் வெட்கி விலகியிருப்பார். நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ‘பிறரது அந்தரங்கத்தில் தலையிடாமை’ என்ற பண்பை ஏற்று பாவங்களை பகிரங்கப்படுத்துவதிலிருந்து தனது நாவை காத்துக்கொள்வார். தன்னுடைய பாவத்தையும் அல்லது பிறரின் பாவத்தையும் அதை அவரே பார்த்திருந்தாலும் சரியே அல்லது பிறர் கூற கேட்டிருந்தாலும் சரியே, அதை வெளிப்படுத்தக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எனது உம்மத்தினர் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். அந்தரங்கத்தை பகிரங்கப் படுத்துபவனைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு செயலைச் செய்கின்றான். அல்லாஹ் அவனது செயலை மறைத்துவிட்ட நிலையில் காலையில் அவன் ”ஓ! நேற்றிரவு நான் இன்னின்ன காரியத்தைச் செய்தேன்” என்று கூறுகிறான். அல்லாஹ் அவனது குறையை நேற்றிரவு மறைத்திருந்தான், அல்லாஹ் மறைத்ததை இவன் காலையில் பகிரங்கப்படுத்துகிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்களிடம் ஒரு கூட்டத்தினர் ”எங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள அண்டை வீட்டார் மது அருந்து கிறார்கள், சில தீயசெயல்களையும் செய்கிறார்கள். நாங்கள் இதைப் பற்றி ஆட்சியாளரிடம் தெரிவிக்கலாமா?” என்று கேட்டனர். உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் கூறினார்கள் வேண்டாம்!. நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: ”எந்த ஒரு மனிதர் முஸ்லிமிடம் ஒரு குறையைக் கண்டு மறைத்து விடுகிறாரோ அவர் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை கப்ரிலிருந்து உயிரோடு மீட்டவராவார்” என்று கூறினார்கள். (அல்அதபுல் முஃப்ரத்)
மனிதனின் பலவீனங்கள் என்ற நோய்களுக்கான மருந்தாகிறது அவர்களது குறைகளை ஆய்வுசெய்து அதை பகிரங்கப்படுத்தி அவர்களை இழிவுபடுத்துவதல்ல. இது எவ்வகையிலும் நிவாரணமாகாது. உண்மை நிவாரணம் என்னவெனில், இம்மனிதர்களிடம் சத்தியத்தை எடுத்துரைத்து, நன்மைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி, தீய செயல்களின் மீது அவர்களுக்கு வெறுப்பை ஊட்ட வேண்டும். சண்டை, சச்சரவுகளை பகிரங்கப்படுத்தக் கூடாது. நேசமும் மென்மையும் கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளால்தான் மூடிய இதயங்களைத் திறந்து, தூய்மைப்படுத்த முடியும். இதனால்தான் முஸ்லிம்களின் குற்றம் குறைகளை தேடித்துருவி ஆராய வேண்டாமென இஸ்லாம் தடை செய்துள்ளது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۚ إِنَّ اللَّـهَ تَوَّابٌ رَّحِيمٌ  القرآن الكريم 49:12

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். அல் குர்ஆன் 49:12
இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களிடம் ஒரு மனிதர் இழுத்துக் கொண்டு வரப்பட்டார். இழுத்து வந்தவர்கள், ”இவருடைய தாடியிலிருந்து மது சொட்டுகிறது” என்று கூறினார்கள். இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் ”நிச்சயமாக நாங்கள் குற்றங்களை துருவித்துருவி ஆராய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளோம். எனினும் ஏதேனும் தவறுகள் வெளிப்பட்டால் நாங்கள் தண்டிப்போம்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூத்)
அதாவது முஸ்லிம்களின் குறைகளை துருவிப் பார்ப்பதும், அவர்களது பலவீனமான செயல்களையும் குறைகளையும் கண்டறிந்து பகிரங்கப்படுத்துவதும், அது சம்பந்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அவர்கள் வாழும் சமுதாயத்தையும் பாதிக்கும். ஒரு சமுதாயத்தில் மானக்கேடான காரியங்கள் பெருகி அவர்களுக்கு மத்தியில் புனையப்பட்ட பேச்சுகள் பரவிவிட்டால் அந்த சமுதாயத்தில் ஒற்றுமைக்கேடு உருவாகி பாவங்கள் இலேசாகி குரோதமும், வஞ்சமும், சூழ்ச்சியும் வேரூன்றி அச்சமுதாயத்தையே குழப்பங்கள் சூழ்ந்து கொள்ளும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.” (முஸ்னத் அஹ்மத்)
நபி (ஸல்) அவர்கள் ”நாவால் ஈமான் கொண்டு இதயத்தில் ஈமான் நுழையாதவர்களே! இறைவிசுவாசிகளை நோவினை செய்யாதீர்கள், அவர்களது குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். எவன் தனது சகோதர முஸ்லிமின் குறைகளை துருவித் துருவி ஆராய்கிறானோ அவனது கெªரவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். எவன் தனது சகோதரனின் குற்றம் குறைகளை ஆராய்கிறானோ அவன் தனது வீட்டுக்கு மத்தியில் இருந்தபோதும் அல்லாஹ் அவனை கேவலப்படுத்தி விடுவான்.” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)
நபி (ஸல்) அவர்கள் தங்களது இதயத்தில் ஈமான் நுழையாமல் நாவினால் மட்டும் ஈமான் கொண்டவர்களே! என்று கூறியது எவ்வளவு கடுமையான வார்த்தை? இது பிறர் குற்றங்குறைகளை தூண்டித் துருவி ஆராய்பவர்கள் உண்மையில் நாவினால் மட்டுமே ஈமான் கொண்டிருக்கிறார்கள்; அவர்களது இதயத்தில் ஈமான் நுழைந்திருந்தால் இத்தகைய காரியத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்ற பொருளைத் தருகிறது.
தனது இரட்சகனின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு தனது ஈமானை வலுப்படுத்துவதில் ஆர்வமுடைய முஸ்லிம் தனக்குத் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடமாட்டார். தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் தனது மூக்கை நுழைக்காமல்  பிறரைப் பற்றி பேசப்படும் வதந்திகளில் ஆர்வம் காட்டாமல் விலகி நிற்பார். இவ்வாறான இழி குணங்களிலிருந்து மனிதனை மேம்படுத்தி வைத்திருக்கும் இஸ்லாமிய நற்பண்புகளை பற்றிப் பிடித்துக் கொள்வார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மூன்று குணங்களை விரும்புகிறான், மூன்று குணங்களை வெறுக்கிறான். உங்களிடம் அவன் விரும்பும் மூன்று குணங்கள்:
1. அவனையே நீங்கள் வணங்க வேண்டும் 2. அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது 3. நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும், நீங்கள் பிரிந்துவிடக் கூடாது.
அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தின் உறுப்பினர் பூமியில் அல்லாஹ்வின் ஏகத்துவக் கலிமாவை உறுதிப்படுத்துவது மற்றும் அதைப் பரப்புவது போன்ற உன்னதமான செயல்களுக்காக தங்களை அர்ப்பணித்து, நாலா திசைகளிலும் ஏகத்துவக் கொடியை உயர்த்திக் கொண்டிருப்பார். மக்களிடையே ஏகத்துவத்தை ஸ்திரப்படுத்துவதில் தனது நேரங்களைச் செலவிடுவார்.

No comments:

Post a Comment