Thursday, June 2, 2011

நன்றி தினமணி சரியான சிந்தனை...

Last Updated : 03 Jun 2011 05:26:26 AM IST
நன்றி தினமணி சரியான சிந்தனை...

உலகமயம், பொருளாதாரத் தாராளமயம் என்பவைதான் தாரக மந்திரம் என்கிற அடிப்படையில் செயல்படுகிற ஆட்சியில், சாமானிய மக்களைப் பற்றி, கிராமப்புற விவசாயிகள் பற்றி அடித்தட்டு மக்கள் பற்றிச் சிந்திக்கக்கூட சில பொருளாதார நிபுணர்களும், பொறுப்புள்ள பதவி வகிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. அதற்குக் காரணம் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் வெளிப்படுத்தியிருக்கும் சில கருத்துகள்தான்.
""வங்கிகள் தங்களுடைய கடன் பிரிவுக்கு சிறப்பு மேலாண்மைக் கல்லூரிகளில் (பிசினஸ் ஸ்கூல்) எம்.பி.ஏ. படித்த பட்டதாரிகளையே பணிக்கு அமர்த்துவது சரியல்ல'' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே. சக்ரவர்த்தி.
அதற்கு அவர் கூறியிருக்கும் காரணமும் மிகவும் பொருத்தமானது. பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த, தொடக்கத்திலிருந்தே கான்வென்டில் படித்து வளர்ந்த உயர் மத்திய தர அல்லது பணக்கார வீட்டுப் பிள்ளைகளே பெரும்பாலும் இந்தப் படிப்பை முடித்து வேலைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு நேர்மையையும் நாணயத்தையும் தங்களுடைய உயிரினும் மேலாக மதிக்கும் சாமானியத் தொழிலாளர்கள், கை உழைப்பாளிகளின் தேவைகளும் வாழ்க்கை முறைகளும் தெரிவதில்லை. வங்கிகளில் கடனுக்காக அவர்கள் விண்ணப்பிக்கும்போது, அவர்களுடைய குடும்பப் பின்னணியைப் பார்த்து அவர்கள் மீது சந்தேகப்பட்டு கடன் வழங்க மறுத்துவிடுகின்றனர் அல்லது ஜாமீன் கேட்கின்றனர்.
ஏற்கெனவே கடன் வாங்கியவர்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் மிகவும் கெடுபிடியாக வசூல் செய்து நோகடித்துவிடுகிறார்கள்.
மிகப்பெரிய தொழிலதிபர்கள் கடன் ரத்துக்கு தனித்தனியாக விண்ணப்பித்து நேரத்தை வீணடிப்பதில்லை. மாறாக, தங்களுடைய கடன் பிரச்னையை இந்த தேசத்தின் தொழில்துறைக்கே நேர்ந்துவிட்ட மிகப்பெரிய சோதனையாகச் சித்திரித்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்கம் நடத்திவிடுகிறார்கள். அவற்றில் அமைச்சர்களும் அதிகாரிகளும் பொருளாதார ஆலோசகர்களும் கலந்துகொண்டு உச்சு கொட்டி அவர்களுடைய கோரிக்கைகளைப் பரிவோடு ஆமோதிக்கிறார்கள்.
இந்த நாட்டைப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து காப்பாற்றுவதற்காக தொழிலதிபர்கள் வாங்கிய கடன்களை வசூலிக்காமல் நிறுத்தி வைக்கவும், வட்டி, அபராத வட்டி ஆகியவற்றைத் தள்ளுபடி செய்யவும், மேற்கொண்டு தொழில் செய்ய முதலீட்டு ஊக்குவிப்பு வழங்கவும், ஏற்றுமதித் தொழிலானால் அதற்கு தனி மானியம் போன்றவற்றை வழங்கவும் பரிந்துரை செய்யவைத்து கோடானு கோடி ரூபாயை ""காந்தி கணக்கில்'' எழுதிவிடுகிறார்கள்.
இந்த நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளுக்கு பட்ஜெட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மத்திய, மாநில அரசுகள் தரும் சலுகைகளை ஊன்றிப் பார்க்கும்போது இது தெரியும்.
சிறு வியாபாரிகள், புதிய தலைமுறை தொழில் முனைவோர்கள் வாங்கும் கடன்கள் அவர்களுடைய சொந்த முன்னேற்றத்துக்கான கடன்களாகவே கருதப்படுகின்றன. எனவே கடன் சுமையைக் குறைக்கவோ, தள்ளுபடி செய்யவோ ""அருகதையற்ற தண்டச் செலவுகளாகவே'' அவற்றைக் கருதுகின்றனர். மானியங்களால்தான் இந்த நாட்டின் செல்வமே கொள்ளைபோகின்றன என்று சில பொருளாதார ஆலோசகர்கள் பேசி வருகிறார்கள்.
பெரிய தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்களின் பணத் தேவைகள் இந்த நாட்டின் தொழில்துறை உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பெருக்கும் மூல காரணியாகக் கருதப்பட்டு அவற்றுக்கு உரிய மரியாதைகளுடன் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்குக் காரணமே மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் கண்ணோட்டம் என்றால் தவறில்லை. இதில் ஒரு சில விதி விலக்குகளும் இருக்கக்கூடும்.
அடுத்தபடியாக இன்னொரு எச்சரிக்கையையும் துணை கவர்னர் சக்ரவர்த்தி விடுத்திருக்கிறார். ""வளாக நேர்காணல்கள்'' (கேம்பஸ் இன்டர்வ்யூ) முறை மூலம் கல்லூரிகளுக்கே நேரடியாகச் சென்று மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்வதை நிறுத்துமாறு கூறியிருக்கிறார். இப்படி நீங்கள் தேர்வு செய்யும் மாணவர்கள் பாடம் படிப்பதிலும் அதைத் தெளிவாக விடைத்தாளில் எழுதுவதிலும் வல்லவர்களாக இருப்பார்கள்; ஆனால் உலகைப் பற்றிய எதார்த்தமான அறிவோ, அனுபவமோ சிறிதும் இன்றி இருப்பார்கள். அதற்குப் பதிலாக தேர்வாணையங்கள் நடத்தும் பொதுத் தேர்வுகள் மூலம் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பையும் சேர்ந்தவர்களைத் தேர்வு செய்யும்போது மண்ணின் மணத்தோடு நெஞ்சில் உரமும் ஈரமும் உள்ள நல்ல இளைஞர்கள் வேலைக்குக் கிடைப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.
மத்திய, மாநில அரசுகள் தேர்வாணையத்தின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளை வேலைக்கு எடுப்பது நின்றுவிட்டது. அரசு வேலைகள் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்பணி ஒப்படைப்பாக பல துறைகளில் நிறைவேற்றப்படுகின்றன. ரயில்வே போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் தங்களுடைய பல்வேறு பிரிவுகளையே இழுத்துமூடும் அளவுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களையே நம்பியிருக்கின்றன. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் இனி அரசு அலுவலகங்களில் நிரந்தர வேலை பெறுவது என்பது கானல்நீராகிவிட்ட நிலைமை.
சமூகநீதி பற்றி மூச்சுக்கு முன்னூறு முறை ஓலமிட்டவர்களோ இப்போது தங்களுடைய குடும்பத்தவர் ""நிரந்தர பண வசதியோடு நிலையான வாழ்க்கைக்குச் சொந்தமாகிவிட்டார்கள்'' என்றதும் சமூக நீதியை மறந்துவிட்டார்கள்.
வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் எல்லோருக்கும் பொதுவானது. இதில் மாநிலக் கண்ணோட்டமோ ஜாதி, மத, மொழிக் கண்ணோட்டமோ இருப்பது கூடாது.
இதை வலியுறுத்துவதற்கு முக்கிய காரணம் வங்கித்துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் வேலைக்குத் தேவைப்படுகின்றனர். இதை வங்கி நிர்வாகங்கள் எப்படி நிரப்பப்போகின்றன என்பது கேள்விக்குறி. சமூகநல அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் ஏன், அரசியல் கட்சிகளும் விழிப்போடு இருந்தால்தான் இந்த வேலை வாய்ப்புகள் முறையாக, கிடைக்க வேண்டியவர்களுக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் போலவே ""முதலில் (முதலோடு) வந்தவர்களுக்கு முன்னுரிமை'' என்று அளிக்கப்பட்டுவிடும். எனவே இது ""சமூகப் போராளிகள்'' தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய விஷயம்.
கருத்துகள்

 துணை கவர்னர் சக்ரவர்த்தியின் சிந்தனை மிக அருமை. நன்றி தினமணி. 
By thamarai 
6/3/2011 9:04:00 AM
 நமது நாட்டை நிஜமாகவே நேசிக்க தெரிந்தவர்கள், நமக்கு தேவை. அடித்தள மக்களின் உணர்வுகளை, அறியாதவர்கள் வேண்டியதில்லை.. அந்த வகையில் மக்களிடம், ,உணர்வுபூர்வமான அணுகுமுறையை கொண்ட பணியாளர்களே வங்கிக்கு அவசியம். அதையே, யோசிக்கப்பட வேண்டும். தக்க தருணத்தில், தகுந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன. 
By பி.டி.முருகன் திருச்சி 
6/3/2011 8:32:00 AM
 ""வளாக நேர்காணல்கள்'' (கேம்பஸ் இன்டர்வ்யூ) முறை மூலம் கல்லூரிகளுக்கே நேரடியாகச் சென்று மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்வதை நிறுத்துமாறு கூறியிருக்கிறார். இப்படி நீங்கள் தேர்வு செய்யும் மாணவர்கள் பாடம் படிப்பதிலும் அதைத் தெளிவாக விடைத்தாளில் எழுதுவதிலும் வல்லவர்களாக இருப்பார்கள்; ஆனால் உலகைப் பற்றிய எதார்த்தமான அறிவோ, அனுபவமோ சிறிதும் இன்றி இருப்பார்கள். அதற்குப் பதிலாக தேர்வாணையங்கள் நடத்தும் பொதுத் தேர்வுகள் மூலம் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பையும் சேர்ந்தவர்களைத் தேர்வு செய்யும்போது மண்ணின் மணத்தோடு நெஞ்சில் உரமும் ஈரமும் உள்ள நல்ல இளைஞர்கள் வேலைக்குக் கிடைப்பார்கள் என்று கூறியிருக்கிறார். 
By தீபக் 
6/3/2011 7:43:00 AM
 நல்லதொரு அருமையான உடனடியாக செயல்படுத்த வேண்டிய தலையங்கம் 
By Ramani.N 
6/3/2011 7:21:00 AM
 தினமணியின் அபூர்வமான தலையங்கங்களில் இதை முதன்மையானதாகக் கருதுகிறேன்.சமூகப் போராளிகள் கையில் எடுக்க வேண்டிய முக்கியமான பிரச்னை இது என்பதில் சந்தேகமில்லை.நாட்டின் சொத்து தொடர்ந்து சிலரது நலன்களுக்கு வாரி வழ்ங்கப்படுவது ஒரு போதும் அனுமதிக்கப் படக்கூடாதது.மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த உங்கள் பணி பாராட்டுக்குரியது.தொடர்க!.-வழக்கறிஞர் இராதகிருட்டிணன் 
By ந.இராதாகிருட்டிணன் 
6/3/2011 7:19:00 AM
 "கவர்னர் கே . சக்ரவர்த்தி காலை காட்டுங்கள் பாத பூஜை செய்யவேண்டும் அவர் கருத்துக்கு " ஓர் கிராமத்திலிருந்து ச.ஜெயகணேசன் செல் என் 8056083970 ௦ தினமணிக்கு நன்றி 
By S.Jayaganesan 
6/3/2011 6:36:00 AM
 What is awesome statement , we are having little due to this people even though china captured all our near by place if need in future to crush us. 
By அலெக்ஸ் 
6/3/2011 5:41:00 AM


No comments:

Post a Comment