Friday, June 3, 2011

பிரதமர் மவுனம் எப்போது கலையும்?


பிரதமர் மவுனம் எப்போது கலையும்? பா.ஜ., காட்டம்
print e-mailஎழுத்தின் அளவு:   A+  A-
Bookmark and ShareShare  

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2011,23:26 IST
லக்னோ: "சன் டிவி' நெட்வொர்க்கில் மலேசிய நிறுவனமான மேக்சிஸ் முதலீடு செய்த விவகாரம் ஊழலே. இதற்கு தயாநிதி பதிலளித்த விதம் ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் தாமதம் காட்டாமல் பிரதமர் தன் மவுனத்தைக் கலைக்க வேண்டும்' என, பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்க அவர் காலதாமதம் ஏற்படுத்தினார். ஆனால், ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு கைமாறியபோது, ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழங்கப்பட்டது. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், "சன் டிவி' குழுமத்தைச் சேர்ந்த, "சன் டைரக்ட்' கம்பெனியில், 599.01 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் வெளிவந்ததும், தயாநிதி மறுத்தார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் பல கோணங்களில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் தயாநிதி நடவடிக்கை குறித்து தொடர்ந்து பா.ஜ., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. தயாநிதி மீது சி.பி.ஐ., விசாரணை கோரி பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று நிருபர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: தயாநிதி குடும்பத்திற்கு சொந்தமான, "சன் டிவி' நெட்வொர்க்கில், மலேசிய நிறுவனமான மேக்சிஸ் முதலீடு செய்தது ஊழலே அன்றி வேறில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தயாநிதி காட்டிய சலுகைக்கு பிரதிபலனாகவே இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. தான் அமைச்சர் பதவியில் இல்லாதபோது, அந்த முதலீடு செய்யப்பட்டதாக தயாநிதி வெளியிட்டுள்ள மறுப்பு ஏற்கத்தக்கதல்ல.

மலேசிய நிறுவனத்தின் இந்த அன்னிய முதலீட்டிற்கு, மத்திய அமைச்சரவையின் பொருளாதார முதலீட்டுக் குழு 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுமதி வழங்கியுள்ளது. அப்போது, தயாநிதி அமைச்சராகத் தான் இருந்தார். ஏர்செல் நிறுவனத்திற்கு குறைவான கட்டணத்தில் லைசென்சும், அதிக அளவில் ஸ்பெக்ட்ரத்தையும் தயாநிதி ஒதுக்கியுள்ளார். என்ன விலைக்கு ஏர்செல் நிறுவனத்திற்கு லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன என்பதை தயாநிதி விளக்க வேண்டும். எங்களைப் பொறுத்தமட்டில், 14 பகுதிகளில் சேவையைத் துவக்க ஏர்செல் நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 2001ம் ஆண்டு விலைக்கு அந்த நிறுவனத்திற்கு கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு அடர்த்தி அதிகமாக இருந்த போது, இப்படி செய்யப்பட்டுள்ளது. இது லஞ்சமே அன்றி வேறில்லை. இதன் மூலம் பிரதிபலனை எதிர்பார்த்து சலுகை காட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தன் மவுனத்தைக் கலைத்து, நியாயமான சி.பி.ஐ., விசாரணை நடப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த மூன்று நாட்களாக பிரதமர் எதுவும் பேசவில்லை.தனது தவறை அவர் தொடரக்கூடாது. முன்னர் அவர், அப்பாவி எனக் கூறி ராஜாவை ஆதரித்தார். தற்போது அவர் சிறையில் உள்ளார். இனியாவது பேச வேண்டும். இந்தப் பிரச்னையில் சி.பி.ஐ., விசாரணைக்கு அவர் உத்தரவிடவில்லை எனில், "ஊழல் பேர்வழிகளை காப்பவர் மன்மோகன்' என்ற முடிவுக்கு, மக்கள் வந்து விடுவர். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

No comments:

Post a Comment