Sunday, July 31, 2011

கிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து !

ன்றி http://pettagum.blogspot.com

Tuesday, July 5, 2011

கரப்பான் பூச்சி 'ஸ்பிரே' + சமையல் கேஸ்

கிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து !

கரப்பான் பூச்சி 'ஸ்பிரே' + சமையல் கேஸ்

'மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த அந்த இல்லத்தரசி, மே 13-ம் தேதியன்று வழக்கம்போல கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து சமையலை ஆரம்பித்தார். அப்போது, சமையல் மேடையில் அலைந்த கரப்பான் பூச்சியைக் கண்டவர், அதற்கான 'ஸ்பிரே’வை எடுத்து அழுத்தினார். அடுத்த நொடியே குபீரென தீப்பற்றி, கேஸ் சிலிண்டரும் வெடிக்க... 65 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காப்பாற்றச் சென்ற கணவருக்கும் தீக்காயங்கள்’

- இப்படி ஒரு தகவல், இன்டர்நெட்டில் 'தீ'யாக உலா வருகிறது. ஆனால், நாம் பலமாக 'வலை' வீசி தேடியும் எங்கேயுமே 'செய்தி'யாக அது பதிவாகியிருப்பதைக் காண முடியவில்லை. அதேசமயம், 'கேஸ் ஸ்டவ் எரியும்போது கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே அடித்தால் தீ விபத்துக்கான வாய்ப்பு இருக்கிறதா?' என்கிற கேள்வி நமக்கு எழ, சென்னை, எழும்பூரிலிருக்கும் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஷ் கண்ணனிடம் அதைப் பற்றிக் கேட்டோம்.

''கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே என்றில்லை... சென்ட், பாடி ஸ்பிரே, ரூம் ஸ்பிரே, நக பாலிஷ் என்று ஆல்கஹால் கலந்த பொருட்களை கிச்சனுக்குள் பயன்படுத்தவே கூடாது. அனைத்து ஸ்பிரேக்களுமே 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தி லேயே வெடிக்கக் கூடியவைதான். ஸ்பிரேக்களை சூரிய வெப்பத்தில் வைப்பதும் ஆபத்தானது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் என்று தெரிந்தும் இவற்றை கிச்சனுக்குள் அனுமதிப்பது எமனை வரவழைப்பதற்குச் சமம்!'' என்று எச்சரித்தவர், அடுப்படி ஆபத்து களைப் பற்றி பட்டியலே இட்டார்!

''கிச்சனில் சமையல் செய்யும்போது புடவை, சுடிதார், நைட்டி என்று எந்த உடை யானாலும், அதை காட்டனில் அணிய வேண்டும். ஒருவேளை ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், இந்த வகை துணிகள் உடம்போடு ஒட்டிக் கொள்ளும்; எளிதில் அகற்ற முடியாது. அது காயங்களை இன்னும் தீவிரமாக்கும்.

கிச்சன் பிளாட்ஃபார்ம் மேலாக ஒரு செல்ஃப் வைத்து, சமையல் பொருட்களை வைத்து, எடுப்பது கூடாது. கையை எட்டி மேலே இருக்கும் பொருட்களை எடுக்கும்போது, ஸ்டவ் எரிந்து கொண்டிருந்தால், உடையில் எளிதில் தீ பிடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன'' என்று அறிவுறுத்திய ராஜேஷ் கண்ணன்,

''கேஸ் சிலிண்டரை நூறு சதவிகிதம் பயன்படுத்த எண்ணி, படுக்கை வாட்டில் வைத்தெல்லாம் பயன் படுத்துவார்கள் சிலர். இது ஆபத்தானது. லீக்கேஜ் இருந்தால் வெடித்து விடும். அதேபோல பவர் கட் ஆனதும் மிக்ஸி, கிரைண்டர் ஸ்விட்ச்களை உடனடியாக ஆஃப் செய்துவிட வேண்டும். இல்லையெனில் நீங்கள் வெளியில் சென்றிருக்கும் சமயமாக பார்த்து கரன்ட் வந்தால்... மிக்ஸி, கிரைண்டர் தானாக 'ஆன்’ ஆகி, ஒரு கட்டத்தில் மோட்டாரின் வெப்பம் அதிகமாகி, வெடிக்கும் ஆபத்தும் உள்ளது'' என்று சொன்னார்.

''குழப்பமான மனநிலையும் விபத்துக்கான காரணிகளுள் ஒன்றுதான்'' என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தாரா, ''குழப்பமான மனநிலையில் கிச்சனுக்குள் நுழைந்து பொங்கும் பாலை பார்த்துக் கொண்டேஇருப்பது, கேஸை 'ஆன்’ செய்துவிட்டு பற்ற வைக்க மறப்பது போன்றவையும் விபத்துக்கான விதைகளே. செல்போனில் மூழ்கியபடி சமைப்பதும் ஆபத்தே! ஒன்று சமைத்துவிட்டுப் பேசலாம். அல்லது, பேசிவிட்டு சமைக்கலாம். தூக்க மாத்திரைகள், அலர்ஜி மாத்திரைகள் சாப்பிட்ட பிறகு அலர்ட்னெஸ் குறைவாக இருக்கும். அது மாதிரியான சமயங்களில் கிச்சனில் நுழைவதைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்'' என்று அக்கறையோடு டிப்ஸ்களைத் தந்தார் தாரா!

Saturday, July 30, 2011

35-அம்ரிப்னுல் ஜமூஹ்


தோழர்கள் - printEmail
வரலாறு தோழர்கள்
புதன், 20 ஜூலை 2011 18:17
ன்றி  சத்தியமார்க்கம்.காம் 
عمرو بن الجموح
பூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு வெகுகாலம் முன்பே அதைப்போன்ற நிகழ்வொன்று உஹதுப் போரின் போது மதீனாவில் நிகழ்ந்தது. கச்சைக் கட்டிக்கொண்டு போருக்கு விரைய தயாராக இருந்தவர் அம்ரிப்னுல் ஜமூஹ் ரலியல்லாஹு அன்ஹு. அபூதல்ஹாவை முதுமை சூழ்ந்திருந்தது என்றால், இந்தத் தோழருக்கு முதுமையும் உடல் ஊனமும்.

தம் தந்தை போருக்குத் தயாராவதைக் கண்ட அவரின் மகன்கள் பதற்றமடைந்தனர். முதுமை, வலுவற்ற உடல்வாகு, கால் ஊனம் போன்ற நிலையில் உள்ள தங்களின் தந்தை ஜிஹாதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர் என்பது அவர்களுக்கு நன்றாகப் புரிந்தது. ஆயினும் அவரது உள்ள உறுதியும் துணிவும் அவர்களுக்குக் கலக்கம் அளித்தன. எப்படியும் அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. தந்தையை அணுகி,

"அன்பிற்குரிய தந்தையே! தங்களைப் போன்றவர்கள் போரில் கலந்து கொள்ளாமல் விலகிக்கொள்ள அல்லாஹ் தனது இறைமறையில் தெளிவாக விலக்கு அளித்துவிட்டானே. பிறகு ஏன் இந்தச் சிரமம், பிரயாசை?"

அனுசரணையான தம் மகன்களின் பேச்சு ஆறுதலுக்குப் பதிலாய் அவருக்குக் கடும் சீற்றத்தைத்தான் உண்டாக்கியது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்க விந்தி விந்தி விரைய ஆரம்பித்தார் அவர்.

இறைவனுக்காக தனது உயிரை மாய்த்துத் தீருவேன் என்று அடம்பிடித்து விரையும் அளவிற்கு ஒருவர் இருந்தால் அவர் எத்தனை ஆண்டு காலம் இஸ்லாத்தில் மூழ்கித் தோய்ந்து போய்க் கிடந்தார்? எந்தளவு இராப் பகலாய் நுணுகி நுணுகிப் பயின்றார்? அதெல்லாம் எதுவும் இல்லை. கடுமையான சந்தர்ப்பத்தில் தெளிவான சிந்தனை. அதைத் தொடர்ந்து இறை உவப்பும் சொர்க்கமும் மட்டுமே இலக்கு என்ற குறிக்கோள். தீர்ந்தது விஷயம்.
oOo
மதீனாவில் இருந்த முக்கியக் கோத்திரங்களுள் ஒன்றாக விளங்கிய பனூ ஸலமாவின் தலைவர்களுள் ஒருவர் அம்ரிப்னுல் ஜமூஹ். அக்காலத்தில் அவரைப் போன்ற மேல்குடி வகுப்பினர் தத்தமது வீடுகளில் தங்களுக்கே என தனித்துவமான கடவுள் சிலை ஒன்றைத் தங்களது சிறப்பு வழிபாட்டிற்காக வைத்திருப்பார்கள். அபூதர்தா ரலியல்லாஹு இவ்விதம் தமக்கென ஒரு சிலை வைத்திருந்தார் என்பதை அவரது வரலாற்றில் படித்தது நினைவிருக்கலாம். அதைப்போல் அம்ரிப்னுல் ஜமூஹ்விடமும் ஒரு சிலை இருந்தது. அதன் பெயர் மனாத். உயர்ரக மரத்தினால் செய்யப்பட்டிருந்த சிலை அது. வெகு சிரத்தையாக தனது கடவுளைப் பாதுகாத்து பராமாரித்து வந்தார் அவர். ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் அதற்கு நறுமணத் தைலங்கள் பூசுவது, பட்டாடை அணிவிப்பது என்று சிறப்பான கவனிப்பு நடைபெறும். பண்டிகைக் காலம், விசேஷ நிகழ்வுகள் என்றாலோ மிருகங்களைப் பலி கொடுத்துச் சிறப்பு வழிபாடு. எந்த ஒரு நல்லது கெட்டது என்றாலும் அந்தச் சிலையுடன்தான் ஆலோசனை.

இவ்விதம் தானுண்டு, தன் சிலை உண்டு என்று அம்ரிப்னுல் ஜமூஹ் வாழ்ந்து கொண்டிருந்தபோது மதீனாவினுள் இஸ்லாமிய மீளெழுச்சி நிகழ ஆரம்பித்தது. அப்போதே அவருக்கு உத்தேசம் அறுபது வயதிருக்கும்.

முஸ்அப் இப்னு உமைர் எனும் இளைஞர் ஒருவர் மக்காவிலிருந்து வந்து, தம் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு புதிய மதம் பற்றிப் பிரச்சாரம் புரிவதையும், அதை ஏற்றுக்கொண்ட சில மக்கள் அந்த மதத்தைப் பின்பற்ற ஆரம்பித்து இருப்பதையும் அரசல் புரசலாக அறிந்திருந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். ஆரம்பத்தில் அதைக்கேட்டு அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் மெதுமெதுவே வீடு வீடாக, தெருத் தெருவாக, கோத்திரம் கோத்திரமாக மதீனாவில் மாற்றமொன்று வேகமாய் நிகழ ஆரம்பித்து, அது அவரது வீட்டின் கதவையும் வந்து தட்டியபோதுதான் சத்தியம் அவரை எட்டியது.

அம்ரிப்னுல் ஜமூஹ்வுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் முஅவ்வத், முஆத், கல்லாத். இந்த மூன்று மகன்களுக்கும் அணுக்கத் தோழர் ஒருவர் இருந்தார் - முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு. மதீனத்தின் இந்த நான்கு இளைஞர்களும் முஸ்அப் இப்னு உமைரின் ஏகத்துவப் பிரச்சாரத்தினால் கவரப்பட்டு, உண்மையுணர்ந்து, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டனர். முஆத் இப்னு அம்ரு இரண்டாம் அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்டு நபியவர்களுக்குப் பிரமாணம் அளித்த எழுபது பேரில் ஒருவர்.

அம்ரிப்னுல் ஜமூஹ்வுக்கும் அணுக்கத் தோழர் ஒருவர் இருந்தார் - அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஹரம். இவரின் சகோதரி ஹிந்தை மணமுடித்திருந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். ஹிந்தும் தம் மகன்களுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார். தம் வீட்டினுள்ளேயே நிகழ்ந்துவிட்ட இந்த மாற்றங்கள் எதுவும் அறியாமல் அம்ரு மட்டும் தம் பணி, தம் கடவுள் என்று தம் சோலியில் மும்முரமாய் இருந்து கொண்டிருந்தார்.

‘நம் கணவரையொத்த முக்கியஸ்தர்கள், தலைவர்கள், மிட்டா மிராசுகள் எல்லாம் ஒவ்வொருவராய் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஏகத்துவப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டிருக்க, நம் கணவர் மட்டும் உருவ வழிபாட்டிலேயே நீடித்துக்கொண்டிருக்கிறாரே?’ என்று பெரும் கவலையாக இருந்தது ஹிந்துக்கு. அம்ருவின் மீது ஏகப்பட்ட அன்பு, மரியாதை, பாசம் எல்லாம் அவருக்கு இருந்ததால் தம் கணவர் நிரந்தர நஷ்டவாளியாகி விடுவாரோ என்று புழுங்கிக் கொண்டிருந்தார்.

நிகழ்காலப் பெண்களுக்கு இதில் ஒளிந்திருக்கும் உண்மை புரிவது நல்லது. நிலம்-நீச்சு, கார்-பங்களா என்று கணவனின் இகலோக வெற்றிக்கும் அந்தஸ்திற்கும் கவலைப்படும் குறுகிய கண்ணோட்டம் அக்காலப் பெண்களிடம் இல்லை. மாறாக மறுமையின் வெற்றியே வெற்றி என்ற தெளிவு அவர்களிடம் இருந்தது. அதை நோக்கி குடும்பத்தைக் கட்டி இழுத்தார்கள். அதனால்தான் போரில் தங்கள் வீட்டு ஆண்களை இழந்து துக்கம் சூழ்ந்தபோதும் அதையும் மீறி அவர்களால் துணிவுடன் நிமிர்ந்து நிற்க முடிந்தது. வெற்றி வீரர்களால் அந்தச் சமுதாயம் பெருகி வழிந்தது.

அதே நேரத்தில் அம்ருவுக்கும் கவலை உருவாகிக் கொண்டிருந்தது. மக்காவிலிருந்து கிளம்பிவந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் இளைஞன் முஸ்அபின் சொல்பேச்சுக் கேட்டு, ஏற்கெனவே மதீனாவில் பலர் தங்களின் பண்டைய வழக்கமான உருவ வழிபாட்டிலிருந்து மாறிப்போய்விட்டனர். அதைப்போல் தம் மகன்களும் கெட்டுப்போய், அந்த முஹம்மதின் மார்க்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு.

ஒருநாள் தம் மனைவி ஹிந்தை அழைத்தார். "நீ மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் ஹிந்த். பிரச்சாரகர் முஸ்அபை நம் மகன்கள் சந்திக்காமல் பார்த்துக்கொள். நான் அவரைப்பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை இவர்கள் தன்னிஷ்டத்திற்கு எந்த முடிவும் எடுப்பதை நான் விரும்பவில்லை"

"அப்படியே ஆகட்டும்!" என்றார் ஹிந்த்.

பிறகு மெதுவாய், "முஸ்அபிடமிருந்து நம் மகன் முஆத் அறிந்து வந்திருக்கும் செய்தியைக் கேட்க விரும்புகிறீர்களா?"

"நீ நாசமாய்ப் போக!" என்று அலறினார் அம்ரு. "எனக்குத் தெரியாமல் நம் மகன் நம் பண்டைய வழக்கங்களை மறந்துவிட ஆரம்பித்து விட்டானோ? அவ்வளவு தைரியமா அவனுக்கு?"

தான் நினைத்ததைப்போல் தம் கணவர் கோபமடைவதைக் கண்டவர், அதை மட்டுப்படுத்த முயன்றார். "அப்படியெல்லாம் எதுவும் இல்லை. முஸ்அபின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றிரண்டில் கலந்து கொண்டிருந்திருப்பான் போலிருக்கிறது. அப்பொழுது அவர் சொல்வதை மனனம் செய்திருக்கிறான்"

"அவன் வீட்டுக்கு வந்ததும் அவனை என்னிடம் அனுப்பு"

முஆத் வீடு திரும்பியதும் அவரின் தாய் நடந்ததை விவரிக்க, தந்தையைச் சென்று சந்தித்தார் அவர். "அந்தப் பிரச்சாரகர் சொன்னதை ஏதோ நீ கேட்டு வைத்திருக்கிறாயாம். அது என்னவென்று சொல்; நானும் கேட்கிறேன்"

சுற்றி வளைத்து ஏதும் சொல்லாமல், நேரடியாக ஆரம்பித்தார் முஆத்:

"அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தின் இறைவன் அல்லாஹ்வுக்கே

(அவன்)அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன்.

(அவன்தான் நியாயத்)தீர்ப்பு நாளின் அதிபதி.

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உதவிகள் அனைத்தையும் உன்னிடமே வேண்டி நிற்கிறோம்.

நீதான் எங்களை நேர்வழியில் நடத்த வேண்டும் -

நீ அருள் புரிந்தோரின் அறவழியில்.(அன்றி உன்) கோபத்திற்கு ஆளானோர் வழியிலன்று; நெறி தவறியோர் வழியிலுமன்று"

குர்ஆனின் முதல் அத்தியாயமான ஃபாத்திஹாவை முழுவதும் ஓதி முடித்தார்; ஆவலுடன் தந்தையைப் பார்த்தார்.

'நியாயமான வார்த்தைகளாய் இருக்கிறதே!' என்று வியந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். "பிரமாதமான வார்த்தைகள். அவருடைய பிரச்சாரம் எல்லாம் இதைப்போன்றவை தாமா?"

"இதைப்போன்றே சிறப்பானவை தந்தையே! நம் குல மக்கள் அவரிடம் சென்று பிரமாணம் செய்து கொண்டதைப்போல் தாங்களும் அவரைச் சந்தித்து ஏற்றுக் கொள்வீர்களா?" என்று உற்சாகமாகக் கேட்டார் முஆத்.

சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார் அம்ரு. பிறகு, "நான் எனது கடவுள் மனாத்திடம் ஆலோசனை பெறவேண்டும். அதன் அனுமதியில்லாமல் நான் எதுவும் செய்ய முடியாது"

விசித்திரமாயில்லை? உருவமற்ற ஏக இறைவன் ஒருவன் என்பதை ஏற்றுக்கொண்டு அவனை வணங்க, உருவச்சிலையிடம் ஆலோசனை புரியவேண்டும் என்று சொல்லுமளவிற்கு அவர்களது அஞ்ஞான வழக்கம் அவருள் வேரூன்றிப் போயிருந்தது.

"தந்தையே! சிந்திக்கவோ, பேசவோ இயலாத ஒரு துண்டு மரக்கட்டை இவ்விஷயத்தில் என்ன முடிவு சொல்லும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்றார் முஆத்.

"நான்தான் சொன்னேனே. அதனிடம் ஆலோசிக்காமல் நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவ்வளவுதான்"

சிலைகள் வாய்திறந்து பேச இயலாதவை என்பதை அறிந்திருந்த அவர்கள் அவற்றிடம் ஆலோசனை கேட்க ஒரு யுக்தி கையாள்வார்கள். கிழவி ஒருத்தியை அழைத்துவந்து சிலைக்குப் பின்னால் நிற்கச் செய்துவிட்டு, சிலையிடம் கேள்வி கேட்க, கிழவி பதில் அளிப்பார். அந்தப் பதில்கள் அந்தக் கடவுளர் பதிலாகக் கருதப்படும். அம்ரிப்னுல் ஜமூஹ் தம் வீட்டிற்கு ஒரு கிழவியை அழைத்து வந்து, தம் மனாத் சிலையின் பின்னால் நிற்க வைத்தார். ஊனமுற்ற காலின் குறையைப் புறக்கணித்து மற்றொரு காலால் நிமிர்ந்து நின்றுகொண்டு சிலையிடம் பேச ஆரம்பித்தார்.

"மனாத்! மக்காவிலிருந்து கிளம்பி வந்து இங்குப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருப்பவரைப் பற்றி நீ நன்கு அறிவாய். அதில் எனக்குச் சந்தேகமில்லை. அவரது பிரச்சாரத்தின் நோக்கம் உனக்குத் தீங்கு புரிவதாய் உள்ளது. நாங்களெல்லாம் உன்னை வழிபடுவதை நிறுத்த வேண்டுமாம். நான் அவர் சொன்ன செய்திகளைக் கேட்க நேர்ந்தது. அவை பிரமாதமாகத்தான் உள்ளன. ஆனால் உன்னைக் கலக்காமல் அவரிடம் நான் பிரமாணம் அளிக்க விரும்பவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்"

சிலையிடமிருந்து ஏதும் பதில் இல்லை. சிலைக்குப் பின்னாலிருந்த கிழவி உறங்கிவிட்டாளோ? சற்று ஏமாற்றமுற்றாலும், "நீ கோபமாக இருப்பதாய்த் தோன்றுகிறது மனாத். உனக்குத் தீங்கு ஏற்படுத்தும் எதையும் நான் இதுவரை செய்ததில்லை. உனது சீற்றம் தணியும்வரை நான் காத்திருப்பேன்" என்று சொல்லிவிட்டார் அம்ரு.

அவரின் மகன்களுக்குத் தங்கள் தந்தை அவரது சிறப்புச் சிலையின்மேல் எத்தகைய அபரிமிதமான பக்தி கொண்டுள்ளார், ஈடுபாட்டுடன் இருக்கிறார் என்பதெல்லாம் நன்கு தெரியும். அந்தச் சிலை அவரது வாழ்வுடன் இரண்டறக் கலந்த ஒன்று. அதன்மீது அவருக்கு இருக்கும் பாசத்தை நீக்கினாலன்றி அவரை நேர்வழியை நோக்கி சிந்திக்க வைக்க இயலாது என்பது உறுதியாகத் தெரிந்தது. மகன்கள் மூவரும் தங்களின் தோழர் முஆத் பின் ஜபலோடு அமர்ந்து பேசித் திட்டம் தீட்டினர்; உற்சாகமுடன் கலைந்தனர்.

ஒருநாள் இரவு அந்த மனாத் சிலையை கடத்திச்சென்று பனூ ஸலமா குடியிருப்புப் பகுதிக்குப் பின்னாலிருந்த ஒரு குழியில் வீசிவிட்டனர் அந்த இளைஞர் குழுவினர். காலையில் எழுந்த அம்ருவுக்குச் சிலையைக் காணாமல் பலத்த அதிர்ச்சி! பல இடங்களில் தேடிப் பார்த்ததில் அது ஒரு குப்பையில் கிடந்தது. பலமான கோபம் ஏற்பட, ஆத்திரம் தீரக் கத்திவிட்டு, அந்தச் சிலையை மீண்டும் வீட்டிற்கு எடுத்துவந்து, கழுவி, குளிப்பாட்டி, நறுமணம் தடவி, பழைய இடத்தில் கொண்டு சென்று நட்டு வைத்தார். "ஓ மனாத்! சத்தியமாகச் சொல்கிறேன், உன்னை இப்படிச் செய்தவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவேன்"

அன்றிரவு மீண்டும் அது நடந்தது. ஒரே வித்தியாசம். மனாத்தை, வேறொரு குழியில் எறிந்திருந்தனர் அந்த இளைஞர்கள். காலையில் எழுந்து, மீண்டும் கூச்சலிட்டு, அரற்றி, அதை எடுத்து வந்து கழுவி, குளிப்பாட்டி அதன் இடத்தில் வைத்தார் அந்த முதியவர்.

மூன்றாவது இரவும் அந்தச் செயல் தொடர்ந்தது. இம்முறை அந்தச் சிலையைத் தேடிக்கொண்டு வந்து வைத்தவர், வாளொன்றை எடுத்து வந்து, அந்தச் சிலையில் கட்டிவிட்டுக் கூறினார், "சத்தியமாகச் சொல்கிறேன். யார் இதைச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் இம்முறை அவர்கள் உன்னைக் களவாட வரும்பொழுது, நீ இந்த வாளைக் கொண்டு உன்னைத் தற்காத்துக் கொள், எனக்குத் தூக்கம் வருகிறது" என்று நிம்மதியாகத் தூங்கச் சென்று விட்டார் அம்ரிப்னுல் ஜமூஹ்.

மீண்டும் வந்து சேர்ந்தது அந்த இளைஞர் படை. சிலையையும் அந்த வாளையும் ஒருங்கே தூக்கிக் கொண்டு சென்று அந்தச் சிலையை, செத்துப்போன ஒரு நாயின் கழுத்துடன் கட்டி வேறொரு குழியில் தள்ளிவிட்டனர்.

காலையில் கண்விழித்த முதியவருக்கு, 'அட என்னடா இது தலைவேதனை, வாளிருந்தும் பிரயோசனமில்லையா?' என்று அதிர்ச்சி. இம்முறை பல இடங்களிலும் அதைத் தேட வேண்டியதாகி விட்டது. இறுதியில் அது கிடந்த குப்பை மேட்டை அணுகி அந்தச் சிலை கிடந்த கோலத்தைப் பார்த்தார். சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர், "நீ மட்டும் உண்மையான ஒரு கடவுளாக இருந்திருந்தால் இப்படி ஒரு செத்த நாயுடன் இங்கு வந்து கிடந்திருக்க மாட்டாயே!"

இளைஞர்கள் அந்த முதியவருக்குத் தெரிவிக்க விரும்பிய செய்தி சரியானபடி அவரை எட்டியது. இஷ்ட தெய்வம் தன்னைக் கைவிட்டு மரணித்துப்போன அந்தக் கடுமையான சந்தர்ப்பத்தில் தெளிவான சிந்தனை உதிக்க வெகுவிரைவில் இஸ்லாத்தினுள் நுழைந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ் ரலியல்லாஹு அன்ஹு.

அதுவரை உருவ வழிபாட்டில் மூழ்கிக் கிடந்த அவரது மனது, அதன்பின் ஏகத்துவ ஒளியில் மிளர ஆரம்பித்தது. சம்பிரதாயமான மாறுதல் என்பதெல்லாம் இல்லாமல் இஸ்லாம் அவரது வாழ்வின் அங்கமாகிப் போனது. எந்த அளவு? இஸ்லாத்திற்காக இந்த உயிர் துச்சம் என்று கருதுமளவு!

உஹதுப் போர் மேகம் மதீனாவைச் சூழ்ந்தபோது, களத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த முஸ்லிம்களில் அம்ரிப்னுல் ஜமூஹ்வின் மகன்களும் முக்கியமானவர்கள். வீட்டிற்கு வருவதும் ஆயுதங்கள் தயார் செய்வதும் செல்வதும் என்று பரபரவென இயங்கிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் தாமும் கவசம் தரிக்க ஆரம்பித்தார். அதைப் பார்த்துத்தான் திகைத்துப் போனார்கள் புதல்வர்கள்.

"அன்பிற்குரிய தந்தையே! தங்களைப் போன்றவர்கள் போரில் கலந்து கொள்ளாமல் விலகிக்கொள்ள அல்லாஹ் தனது இறைமறையில் தெளிவாக விலக்கு அளித்துவிட்டான். பிறகு ஏன் இந்தச் சிரமம், பிரயாசை?"

'அதானே? சலுகைதான் இருக்கிறதே' என்று அமர்ந்திருக்கலாமில்லையா வயது முதிர்ந்த அம்ரிப்னுல் ஜமூஹ்? மாறாய், 'எனக்குக் கிடைக்கக்கூடிய நற்கூலி கைநழுவிப் போவதாவது? சொர்க்க வாசலை விரைந்து காண என் ஊனம் ஒரு தடைக்கல்லா?' என்று நபியவர்களைச் சந்தித்து நியாயம் கேட்க விந்தி விந்தி விரைந்தார் அவர். எத்தகைய இறை பக்தியும் மனோதிடமும் இருந்திருந்தால் தம் உயிரை இழக்க அடம்பிடித்து ஓடியிருப்பார் அவர்?

"அல்லாஹ்வின் தூதரே! என் கால் ஊனத்தைக் காரணமாக்கி நான் நல்லறம் புரிவதை என் மகன்கள் தடுக்கப் பார்க்கின்றனர். நான் சத்தியமிட்டுச் சொல்கிறேன். விந்திக்கொண்டே சொர்க்கம் சென்றடைவதே என் ஆசையாக இருக்கிறது"

அவரது உறுதியை உணர்ந்த நபியவர்கள் கூறினார்கள், "இவரையும் படையில் இணைத்துக் கொள்ளுங்கள். இவருக்கு வீர மரணம் நிகழவேண்டும் என்று அல்லாஹ் நிர்ணயித்து இருக்கலாம்"

இறைத் தூதரின் அனுமதி அமல்படுத்தப்பட்டது. ஏதோ அமைச்சரவையில் மாபெரும் பதவி வந்து வாய்த்ததைப்போல் பேருவகையுடன் வீட்டிற்கு விரைந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். திரும்பி வரப்போகும் உத்தரவாதம் ஏதும் இல்லை என்ற நிச்சய உணர்வுடன் தம் மனைவியிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டவர், கஅபாவை நோக்கித் திரும்பிக் கையேந்தினார்.

"யா அல்லாஹ்! எனக்கு வீர மரணத்தை அளித்தருள்வாயாக. நான் ஏமாற்றமுடன் வீடு திரும்ப வைத்துவிடாதே!"

சற்று யோசித்துப் பாருங்கள். நமது பிரார்த்தனையும் வேண்டுதலும் எல்லாம் இவ்வுலக நன்மை, மேன்மை, உயர்வுக்காகத்தானே அமைகின்றன? நீண்ட ஆயுளுக்குத்தானே நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம்? ஆனால் இவர்?

தம் மகன்கள், தம் பனூ ஸலமா குலத்து வீரர்கள் என்று பெரும் அணி புடைசூழ, உஹது நோக்கிப் புறப்பட்டார் அம்ரிப்னுல் ஜமூஹ்.

துவங்கியது போர்.

உக்கிரமான ஒரு தருணத்தில் நபியவர்களைச் சுற்றி வெகு சில முஸ்லிம் வீரர்கள் மட்டுமே சூழ்ந்து நின்று காத்து, போர் புரியும் கடின சூழல் ஒன்று உருவானது என்று முன்னர் பார்த்திருந்தோம் இல்லையா? அந்தச் சிலருள் முன்வரிசையில் தம் ஒற்றைக் காலில் நின்று கொண்டு வீராவேசமாய் வாள் சுழற்ற ஆரம்பித்தார் அம்ரு.

"நான் சொர்க்கம் புக வேண்டும்; நான் சொர்க்கம் புக வேண்டும்" என்ற வார்த்தைகள் மட்டும் மந்திர உச்சாடமாய் அவரது வாயிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தன. அவரை அடுத்து அவரின் மகன் கல்லாத் நின்று கொண்டிருந்தார். இருவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காத்து வெகு தீவிரமாய்ப் போரிட அரம்பித்தனர். அசராமல் சுழன்று கொண்டிருந்த அவர்களது வாள்கள் இறுதியில் அவர்கள் இருவரும் வெட்டப்பட்டு தரையில் சாய்ந்ததும்தான் ஓய்ந்தன.

போர் ஓய்ந்தபின் களத்தில் உயிர் நீத்துக் கிடந்த முஸ்லிம் வீரர்களைப் பார்வையிட்டுக் கொண்டே வந்த நபியவர்கள், "இவர்களைக் கழுவ வேண்டாம். இவர்களது காயமும் இரத்தமும் அப்படியே இருக்கட்டும். மறுமை நாளிலே இவர்களின் மரணத்திற்கு நான் சாட்சி பகர்வேன். இறைவனுக்காகக் காயம் பட்டவர், அன்றைய நாள் தம் இரத்தம் அழகிய நிறமாக மாறிப் போயிருக்க, மிகச் சிறந்த நறுமணத்துடன் மீண்டும் எழுந்து வருவார். அம்ரிப்னுல் ஜமூஹ்வையும் அவரின் நண்பர் அப்துல்லாஹ் இப்னு அம்ருவையும் ஒன்றாக அடக்கம் செய்யுங்கள். அவ்விருவரும் இவ்வுலகில் மிகுந்த நட்புடன் திகழ்ந்தனர்"

உதிர்ந்த உதிரம் உலர்ந்தும் உலராமலும் உஹதுக் களத்தில் அடக்கம் செய்யப்பட்டார் அம்ரிப்னுல் ஜமூஹ். அவர் வேண்டி நின்ற சொர்க்கம் அவர் வசப்பட்டது.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

- 34-உமைர் இப்னு வஹ்பு


தோழர்கள்printEmail
வரலாறு தோழர்கள்
செவ்வாய், 05 ஜூலை 2011 23:06
عمير بن وهب
த்ருப் போர் முடிந்து சில வாரங்கள் ஆகியிருக்கும். முஸ்லிம்களுக்கு அந்த வெற்றியின் பிரமிப்பு முற்றிலும் விலகாத ஆரம்பத் தருணங்கள் அவை. கூடிக்கூடிப் பேசி மகிழ்ந்தார்கள்; கூடும் போதெல்லாம் அதைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள். வீடெங்கும் தெருவெங்கும் அதே பேச்சு. அப்படியான ஒருநாளில் ...

மதீனாவில் நபியவர்களின் பள்ளிவாசலுக்கு அருகே உமரும் தோழர்களும் – ரலியல்லாஹு அன்ஹும் – அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போரின் ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு நுண்ணிய நிகழ்வையும் ரசித்து ரசித்துச் சொல்லிக்கொண்டார்கள். முஹாஜிர்களின் வீரம், அன்ஸாரிகளின் தீரம், குரைஷிகளின் மூக்குடைப்பு என்று பேச்சு வெகு சுவாரஸ்யமாக நிகழ்ந்து கொண்டிருக்க, தூரத்தில் ஒட்டகத்தில் ஒரு பயணி.

வெகு தொலைவிலிருந்து வந்த அலுப்பில் ‘இந்தா, வரவேண்டிய ஊர் வந்துடுச்சு; இறங்கிக்கொள்’ என்று ஒட்டகம் களைப்பாய் நின்றுகொள்ள, அந்தப் பயணி இறங்கினார். களைப்பையும் மீறி அவரிடம் உத்வேகம் இருந்தது. நபியவர்களின் பள்ளிவாசலை நோக்கி அவர் நடக்க ஆரம்பிக்க, அதை முதலில் கவனித்தவர் உமர். அவரை நன்றாக அடையாளம் கண்டுகொண்டார். சட்டென்று எழுந்து அவரிடம் விரைந்தார்.

அங்கு மக்காவிலும் குரைஷிகள் கூடிக்கூடி அமர்ந்து பேசி அங்கலாய்த்தார்கள். கூடும்போதெல்லாம் அதைப்பற்றிப் பேசி அழுதார்கள். என்ன அரற்றியும் துக்கம் தீராமல் மாய்ந்துகொண்டிருந்தார்கள். அப்படியான ஒருநாளில்,

குரைஷிகள் சிலர் அமர்ந்து கன்னத்தில் கைவைத்து சோகம் பரிமாறிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே உற்சாகமாய் வந்தார் ஒருவர். துக்கமெதுவும் இல்லாமல் அவர் முகத்தில் பொலிவு. அதைப் பார்த்த குரைஷிகளுக்கு ஆத்திரம், கோபம்.

“என்ன மனுசன் நீ? உன் அப்பன் செத்து அந்த எலும்பின் சூடுகூட தணிந்திருக்காது. உனக்கு அதற்குள் சிரிப்பு, மகிழ்ச்சி, உற்சாகம். எப்படி இப்படி? கொஞ்சம்கூட உனக்குத் துக்கம், கோபம், சூடு, சொரணை இல்லையா?”

அவரிடமிருந்து உற்சாகம் மாறாமலேயே பதில் வந்தது. “வருத்தப்படுவதை நிறுத்துங்கள். பத்ரில் பட்ட நஷ்டத்தையெல்லாம் நீங்கள் மறந்து, உற்சாகம் அடையும்படி வெகு விரைவில் ஒரு நல்ல செய்தி வரப்போகுது பாருங்கள்” என்று குடுகுடுப்பைக்காரன் போல் சொல்லிக்கொண்டே சென்றார் அவர். கும்பலாய் அமர்ந்து, ஒப்பாரி வைக்காத குறையாய் அழுதுகொண்டிருந்த குரைஷிகளின் ஒவ்வொரு  கும்பலுக்கும் சென்று அவர் சொன்னது ஒரே செய்திதான். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை பத்ருக் களத்தின் மாயத் தோல்வி தந்த அதிர்ச்சியால் இவருக்கு மனநிலை பாதித்து விட்டதோ என்றுகூட குரைஷிகளில் சிலர் நினைத்து விட்டிருக்கலாம்.

மனப்பிரமை, உளறல் எதுவும் இல்லை. தெளிவாகத்தான் இருந்தார் அவர். பெயர் ஸஃப்வான் இப்னு உமைய்யா. பத்ருப் போரில் தம் தந்தையையும் சகோதரனையும் பறிகொடுத்துவிட்டு, ‘என்ன வாழ்க்கை இது, செத்துப்போனால் தேவலை’ என்று வெகு ஆரம்பத் தருணங்களில் மாய்ந்து மருகிக் கிடந்தவர்தான் அவரும். அப்படியான ஒருநாளில்,

கஅபாவின் ஹஜருல் அஸ்வத் கல் அருகே தனியாக அமர்ந்து துக்கப்பட்டுக் கொண்டிருந்த ஸஃப்வானிடம் வந்தார் ஒருவர். காலை வணக்கம் தெரிவித்த அவரை இழுத்து வைத்து, “இங்கே வந்து உட்கார். பேசுவோம். நேரமும் கழியும்; மனக் கவலையும் குறையும்” என்றார்.

ஆமோதித்து அமர்ந்தார் வந்தவர். அவருக்கும் ஏகப்பட்ட துக்கம் இருந்தது. அவர் பெயர் உமைர் இப்னு வஹ்பு.

oOo 
பத்ரு யுத்தம் பற்றித் தோழர்களின் முந்தைய அத்தியாயங்களில் ஆங்காங்கே பார்த்துக் கொண்டே வந்தோம;. இங்கும் கொஞ்சம்.

இஸ்லாமிய வரலாற்றின் அதி முக்கியமான அந்த முதல் போரில் நஷ்டமடையாத குடும்பம் என்று மக்காவில் எதுவும் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்டோ இழவு. அல்லது அவ்வீட்டினரின் உறவினர் ஒருவர் போரில் சிறைக் கைதியாக பிடிபட்டிருந்தார்.

இந்த யுத்தம் பற்றி முன் அறிமுகம் இல்லாதவர்களுக்காக சிறு குறிப்பொன்றை இங்கே பார்த்துவிடுவோம். ஓயாத ஒழியாத அழிச்சாட்டியம் புரிந்துகொண்டிருந்த குரைஷிகளை ஒடுக்க அபூஸுஃப்யானின் வர்த்தகக் குழுவை மடக்கத் திட்டம் தீட்டினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஏறக்குறைய முந்நூறு தோழர்கள் திரண்டு, மதீனாவிலிருந்து கிளம்பியது படை. தமது வியாபாரம் முடித்துக்கொண்டு கொழுத்த செல்வத்துடன் மக்கா திரும்பிகொண்டிருந்த அபூஸுஃப்யானுக்கு முஸ்லிம்களின் இத்திட்டம் குறித்து தகவல் வந்துவிட்டது. உடனே தம்தம் இப்னு அம்ரு என்பவனை மக்காவிற்கு விரட்டினார். ஆயிரம் பேர் கொண்ட குரைஷிப் படை அணி திரண்டு மதீனா நோக்கி, ஆட்டம் பாட்டத்தோடு ஆரவாரமாக முன்னேறி வர ஆரம்பித்தது.

நபியவர்களின் படை அருகே நெருங்கிவிட்டதை அறிந்த அபூஸுஃப்யான் வெகு சமயோசிதமாக ஒரு காரியம் செய்தார். தம் குழுவினரின் திசையைத் திருப்பி வழக்கமான பாதையிலிருந்து கடலோரப் பாதையில் மக்காவிற்குப் பயணித்து, ‘எல்லாம் நலம்; முஹம்மதின் படையினினரிடமிருந்து நாங்கள் தப்பி வந்துவிட்டோம்; நீங்களும் திரும்பி, நலமே வீடு வந்து சேருங்கள்’ என்று குரைஷிப் படைகளுக்குத் தகவல் அனுப்ப, அங்குதான் முரண்டு பிடிக்க ஆரம்பித்தான் அபூஜஹ்லு.

“அது எப்படி? இவ்வளவு தூரம் வந்தது வந்துவிட்டோம். நமக்கும் அவருக்கும் தீர்க்க வேண்டிய பாக்கி இருக்கிறது. இன்றுடன் முஸ்லிம்களை முழுக்கச் சுருட்டி வீசிவிட்டு இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிவிடுவோம்” என்று அங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு களம் இறங்கிவிட்டான்.

அந்நேரம் போருக்கான ஏற்பாடோ, பெரும் படையை எதிர்க்கும் ஆற்றலுடனோ முஸ்லிம்கள் இல்லை. தம் தோழர்கள் அம்மாரையும், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதையும் உளவு பார்க்க அனுப்பி வைத்தார்கள் நபியவர்கள். அவ்விருவரும் திரும்பிவந்து, “அவர்களது முகாமிலிருந்து வீசும் காற்றிலேயே அச்சம் கலந்திருப்பது தெரிகிறது. குதிரையொன்று செறுமினால்கூட அதன் முகத்தில் போட்டு அடிக்கிறார்கள். அந்தப் பகுதியில் மழையும் பெய்கிறது” என்று தகவல் தெரிவித்தனர்.

தோழர்களிடம் ஆலோசிக்க, “ஒன்றும் பிரச்சினையில்லை. 'நீங்களும் உங்கள் இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் காத்திருக்கிறோம்' என்று யூதர்கள் மூஸா நபியிடம் சொன்னதைப்போல் நாங்கள் சொல்லமாட்டோம். அல்லாஹ்வின் தூதரே! உத்தரவிடுங்கள். களம் இறங்குவோம். தாங்கள் கடலை நோக்கிக் கை காட்டினாலும் நாங்கள் தொடர்ந்து வரத் தயார்” பதில் உத்வேகத்துடன் கிடைத்தது!

முஸ்லிம்கள் தரப்பு முழுவீச்சில் போரில் இறங்க ஏற்பாடுகள் நிகழ ஆரம்பித்தன. முஸ்லிம்களின் பலம்தான் என்ன? என்ன தைரியத்தில் களம் இறங்குகிறார்கள் என்பதை வேவு பார்க்க ஒருவரை அனுப்பி வைத்தனர் குரைஷிகள். அவர் உமைர் இப்னு வஹ்பு. புத்திக் கூர்மையும் சாமர்த்தியமும் நிறைந்தவர் உமைர். சிறப்பான ஒற்றறிந்து முஸ்லிம்களின் நிலவரத்தை மிகச் சரியாக கணித்து வந்து தெரிவித்தார்.

“ஏறக்குறைய முந்நூறு பேர்தான் இருப்பார்கள். அவர்களிடம் போதிய அளவு ஒட்டகங்களும் குதிரைகளும்கூட இல்லை. அவையும் வற்றல் தொற்றல். அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களுக்கும் சரியான உறை இல்லை. இப்படி பலமற்ற நிலையில் இருக்கும் அவர்கள் இழப்பதற்கு என்று உயிரைத் தவிர எதுவும் இல்லை. எனவே இந்தப் போர் நிகழ்ந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் நம்மில் ஒருவரைக் கொன்றுவிட்டே மடிவார் என்று நினைக்கிறேன். நாம் வெற்றியடைந்தாலும் நம்மில் முந்நூறு பேரையாவது இழந்துதான் வெற்றியடைவோம். இந்த வெற்றி எதில் சேர்த்தி என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார். முஸ்லிம்கள் பலவீனமான நிலையில் இருந்தாலும் அவர்களின் மனவுறுதியைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் புத்தி சாதுர்யம் பெற்றிருந்தார் உமைர்.

இந்தத் தகவலும் சரி; அப்பொழுது இஸ்லாத்தை ஏற்காதிருந்த ஹகீம் இப்னு ஹிஸாமின் நல்ஆலோசனையும் சரி, மமதையில் இருந்த குரைஷித் தலைவர்களுக்குச் ‘செவிடன் காதில் விழுந்த சங்கொலி’ போல் ஆகிப்போனது. தொடங்கியது போர்; தொடர்ந்தது இறை அற்புதம்.

குரைஷியர்களின் முக்கியத் தலைவனான அபூஜஹ்லு உட்பட 70 பேர் கொல்லப்பட்டனர். தம் தந்தை உமைய்யா இப்னு கலஃப், சகோதரன் அலீ ஆகியோரை இழந்தார் ஸஃப்வான் இப்னு உமைய்யா. உமைர் இப்னு வஹ்பின் மகன் வஹ்பு முஸ்லிம்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களுள் ஒருவர். அவர்கள் மதீனா கொண்டு செல்லப்பட்டனர். இப்படியாக உயிரிழப்பு, பொருள் இழப்பு என்று கனவிலும் எதிர்பாராத பலத்த தோல்வியுடன் மக்காவுக்குத் திரும்பி வந்தடைந்தனர் குரைஷிகள். அனைவருக்கும் சொல்லி மாளாத சோகம். யாராலும் அத்தகைய தோல்வியை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அவமானம் அவர்களைப் பிடுங்கித் தின்றது.

அப்படியான ஒருநாளில் கஅபாவில் சுவரில் ஸஃப்வான் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தபோதுதான் அங்கு வந்து சேர்ந்தார் உமைர். அங்கு நட்டு வைக்கப்பட்டிருந்த சிலைகளைச் சுற்றி வந்து பிரார்த்திப்பது அவர்களது அஞ்ஞான வழக்கம். ஸஃப்வானைப் பார்த்துவிட்டு, “குரைஷிகளின் தலைவரே, அன்அம ஸபாஹா (வளமுள்ள காலை வணக்கம்)” என்றார்.

“அன்அம ஸபாஹா அபூவஹ்பு. இங்கே வந்து உட்கார். பேசுவோம். நேரமும் கழியும்; மனக் கவலையும் குறையும்”

கூடி அமர்ந்து பத்ரு இழப்பைப் பற்றிப் பேசி, பெரிதாய்க் கவலைப்பட்டுக் கொண்டார்கள் இருவரும். பத்ரில் கொல்லப்பட்டவர்கள் அங்கேயே குலைப் கிணற்றில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். அதையெல்லாம் சொல்லிச் சொல்லி உருகினார்கள்; கைதிகளை நினைத்து வருந்தினார்கள்.

முஸ்லிம்களுக்கு மக்காவில் இழைக்கப்பட்ட கொடுமைகளில் பெரும் பங்காற்றியவர் உமைர் இப்னு வஹ்பு. அவருக்கு இப்போது ஏகப்பட்ட அச்சம் உருவாகியிருந்தது. தாம் முஸ்லிம்களுக்கு முன்னர் இழைத்த கொடுமைகளுக்காக மதீனாவில் தம் மகன் பழிவாங்கப்படுவான் என்றே அவருக்குத் தோன்றியது. தம் கவலையை ஸஃப்வானிடம் சொன்னார். இறுதியில் ஒரு வார்த்தை சொன்னார். அந்த வார்த்தையின் தீவிரமும், அதில் தெரிந்த உண்மையும் ஸஃப்வானை உலுக்கியது; உருவானது ஒரு திட்டம். அது ...
oOo
“பெருந்தலைகள் பல உருண்டு விட்டன. அவர்களே போனபின் வாழ்வதே வீணாகத் தெரிகிறது எனக்கு” என்றார் உமைர்.

இருவரும் சற்று நேரம் சோகமாய் அமர்ந்திருந்தனர். பிறகு உமைரே தொடர்ந்தார், “இந்தக் கஅபாவின் இறைவனின் மீது ஆணையாகச் சொல்கிறேன். எனக்கு மட்டும் கடன் தொல்லைகள் இல்லாதிருந்து, எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் பிள்ளை, குட்டிகள் கஷ்டப்படுமே என்ற நிலை இல்லாதிருந்தால், நான் சென்று அந்த முஹம்மதைக் கொன்று ஒரேயடியாய் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன்.”

அஞ்ஞானத்தில் இருந்தாலும் கடனைத் திருப்பிச் செலுத்துவது அவர்களுக்குப் பெரும் மானப் பிரச்சினை. அது ஒருபுறம். சிறைபிடிக்கப்பட்ட மகன் தவிர வேறு பிள்ளைகளும் இருந்தனர் உமைருக்கு. வறிய நிலையில் உள்ள தமக்கு உயிரிழப்பு என்று ஏதும் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் நிராதரவாகி விடுவார்களே என்ற கவலை மறுபுறம்.

“இன்னும் சொல்லப்போனால் என் மகன் சிறைபிடிக்கப் பட்டிருப்பதால் நான் மதீனாவிற்குப் பயணம் மேற்கொள்வது யாருக்கும் எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத்தாது தெரியுமா? நான் எளிதாய்ச் சென்று காரியத்தை முடித்துவிட முடியும்” என்று மேலும் கூறினார்.

இதை எல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஸஃப்வான் இப்னு உமைய்யாவுக்கு அருமையான வாய்ப்பு ஒன்று கண்ணெதிரே நிழலாடுவது தெரிந்தது. சட்டென்று பற்றிப் பிடித்துக்கொண்டார்.

“இதுதான் உன் பிரச்சினையா? கவலையைவிடு. உன் கடன் என்பது இனி என் கடன். அது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் சரி. நான் திருப்பிச் செலுத்தி விடுவேன். உன் பிள்ளைகளும் இனி என் பிள்ளைகள். நான் உயிருடன் இருக்கும்வரை அவர்களை நான் கவனமாய்ப் பார்த்துக்கொள்வேன். அவர்கள் சொகுசாய் வாழ்க்கையைச் சுவைக்கும் அளவிற்கு என்னிடம் செல்வம் உண்டு உமைர்.”

உமைர் சொன்னதும் சும்மா ஒரு பேச்சுக்கு என்றெல்லாம் இல்லை. தம்முடைய தடைக்கற்கள் நீங்கி விட்டன என்று தெரிந்ததும், உடனே செயலில் இறங்க முடிவெடுத்தார் அவர். ஸஃப்யானின் வாய் வார்த்தையே அவருக்குப் போதுமானதாக இருந்தது.

“அப்படியெனில் நமது இந்தத் திட்டம் மிகவும் ரகசியமாக இருக்கட்டும். காரியம் முடியும்வரை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, ஒட்டகம் ஏறி மதீனா கிளம்பினார். நீண்ட பயணத்திற்குத் தேவையான மூட்டை முடிச்சுடன் தம் பணியாளிடம் சொல்லி, கவனமாக வாளையும் எடுத்துக்கொண்டார். நன்றாக அதைச் சாணை தீட்டி விஷத்தில் தோய்த்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டார். மனம் நிறைய குரோதம்; வாள் முனையில் விஷம். அவரது பயணம் துவங்கியது. குரைஷிகள் பலரும் பயணயக் கைதிகளாகப் பிடிபட்டிருக்கும் தத்தம் உறவை மீட்கும் நடவடிக்கையாக மக்கா -  மதீனா சாலை, பயணியர் போக - வர எனப் பெரும்பாலும் பரபரப்புடன் இருந்த நேரம் அது. எனவே யாரும் அவரது பயணத்தின் உள்நோக்கத்தைச் சந்தேகிக்கவே இல்லை.

ஒட்டகம் அசைந்து அசைந்து ஒருவழியாய் அவரை மதீனா கொண்டு வந்து சேர்த்து, ‘இந்தா, வரவேண்டிய ஊர் வந்துடுச்சு; இறங்கிக்கொள்’  என்று அமர்ந்துகொண்டது. ஒட்டகத்தைக் கட்டிவிட்டு நபியவர்களின் பள்ளிவாசலை நோக்கி நீளமாய் அடியெடுத்து நடக்கும் உமைரையும் அவரது இடையில் தொங்கும் வாளையும் முதலில் கவனித்தவர் உமர் (ரலி). மிகப் பிரமாதமான உள்ளுணர்வு கொண்டவர் அவர். ‘இவன் எங்கே இங்கே? ம்ஹும். என்னவோ ஒன்று சரியில்லை. உள்ளுக்குள் ஏதோ தப்பு இருக்கிறது’ என்று அவரது உள்ளுணர்வு அடித்துச் சொல்லியது.

“இந்த நாய் அல்லாஹ்வின் விரோதி. இவன் பெயர் உமைர் இப்னு வஹ்பு. ஏதோ ஒரு தீய எண்ணத்துடன்தான் இங்கு வந்திருக்கிறான். மக்காவில் இருக்கும்போது நமக்கு எதிராகக் குரைஷிகளைத் தூண்டியவன் இவன். பத்ரு யுத்தத்தின்போது அவர்களுக்காக வேவு பார்த்தவனும்கூட” என்று விரைந்து எழுந்தார்.

அருகிலிருந்த தோழர்களிடம், “விரைந்து சென்று அல்லாஹ்வின் தூதரைச் சுற்றி பாதுகாவல் அமையுங்கள். இந்த இழிந்த பிறவி நபியவர்களுக்கு எந்தக் கேடும் விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்”

அத்துடன் இல்லாமல் இவரே நேராக நபியவர்களை அண்மிச் சொன்னார்: "அல்லாஹ்வின் தூதரே! உமைர் இப்னு வஹ்பு, அல்லாஹ்வின் எதிரி, வாளும் இடுப்புமாய் இங்கு வந்திருக்கிறான். அவனது வருகையில் ஏதோ தீய நோக்கம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது”

“அவன் வரட்டும்!” என்றார்கள் முஹம்மது நபி (ஸல்).

உமைரைப் பிடித்து, தொங்கிக் கொண்டிருந்த அவரது வாளின் இடுப்புத் துணியைக் கழட்டி, வாளுடன் அவரது கழுத்தில் சுற்றி, கச்சையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நபியவர்களிடம் வந்தார் உமர்.

அதைக் கண்டுவிட்டு,  “அவரை விடுவியுங்கள் உமர்” என்றார்கள் நபியவர்கள்.

“அவரை விட்டு விலகி நில்லுங்கள்” என்று அடுத்த உத்தரவு வர, அவரை விடுவித்து விலகி நின்றுகொண்டார் உமர்.

“அன்அமூ சபாஹன் (வளமான காலைவணக்கம்)” என்றார் உமைர்.

“இதைவிடச் சிறப்பான முகமனை அல்லாஹ் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறான் உமைர். அவன் எங்களுக்கு 'சாந்தி'யைக்கொண்டு மேன்மைப்படுத்தி இருக்கிறான். சொர்க்கவாசிகளின் முகமன் அது.”

“அதெல்லாம் தெரியாது. அண்மைக் காலம் வரை நீங்களும் எங்களது முகமனுக்குப் பழக்கமாகியிருந்தவர்தாமே?”

முரட்டுத்தனமான அவரது பதிலைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்த நபியவர்கள், “நீ மதீனா வந்த நோக்கம் என்ன உமைர்?”

“தாங்கள் கைதியாய்ப் பிடித்து வைத்துள்ள என் மகனின் பொருட்டு மன்றாட வந்திருக்கிறேன். அவனை விடுவித்துக் கருணை புரியுங்கள்”

“அதற்கு ஏன் வாள் சுமந்து வந்தாய்?”

“அல்லாஹ்வின் சாபம் இந்த வாள்களின்மேல் உண்டாவதாக!. இவை பத்ரில் எங்களுக்குத் தந்த பயன் என்ன?”

மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்கள் நபியவர்கள். “உண்மையைச் சொல்; எதற்காக மதீனா வந்திருக்கிறாய் உமைர்?”

“நான்தான் முன்னமேயே கூறினேனே! என் மகனை மீட்டுச் செல்ல வந்தேன்” என்று பதில் வந்தது.

“பொய் சொல்கிறாய் உமைர்” என்று விளக்க ஆரம்பித்தார்கள் நபியவர்கள்.

“கஅபா அருகே நீயும் உன் நண்பனும் அமர்ந்து குரைஷிகளுக்கு ஏற்பட்ட இழிவையும் குலைப் கிணற்றில் அடக்கம் செய்யப்பட்ட உறவுகளையும் பற்றிப் பேசி வருந்தினீர்கள். ‘கடன் சுமையும் பிள்ளைகளின் கவலையும் இல்லையெனில் நான் சென்று முஹம்மதைக் கொலை செய்வேன்’ என்று நீ கூறினாய். அதற்கு ஸஃப்வான், 'நீ மட்டும் முஹம்மதைக் கொல்வதாக இருந்தால், உனது கடன் சுமையை ஏற்றுக்கொண்டு உன் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன்' என்று கூறினான். அல்லாஹ் உன்னை அந்தச் சூழ்ச்சித் திட்டத்திலிருந்து தடுப்பானாக!”

அப்படியே திக்பிரமை பிடித்து வாயடைத்துப் போனார் உமைர் இப்னு வஹ்பு. வாய் திறந்தபோது வந்த முதல் வாக்கியம் “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கிறேன்” உமைரின் அத்தனைத் திட்டமும் ஏற்பாடுகளும் சடுதியில் நொறுங்கிப் போனது மட்டுமில்லாமல் நிலைமை அப்படியே தலைகீழாகவும் மாறிப்போனது.

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும் எங்களுக்காக தாங்கள் வானிலிருந்து கொண்டு வந்த வஹீயையும் நம்ப மறுத்தோம். ஸஃப்வானுக்கும் எனக்கும் இடையில் நிகழ்வுற்ற உரையாடல் - அது, என்னையும் அவரையும் தவிர யாருக்கும் அறவே தெரியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதைத் தங்களுக்குத் தெரிவித்திருக்க வாய்ப்பே இல்லை. என்னை இங்கு இட்டுவந்து, நேர்வழியான இஸ்லாத்திற்கு வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”

பிறகு முறைப்படி சாட்சி பகர்ந்து இஸ்லாத்திற்குள் நுழைந்தார் உமைர் இப்னு வஹ்பு, ரலியல்லாஹு அன்ஹு!

தம் தோழர்களிடம் திரும்பிய நபியவர்கள், “உங்கள் சகோதரருக்கு மார்க்கத்தையும் குர்ஆனையும் கற்றுத் தாருங்கள். அவர் மகனை விடுவியுங்கள்”

ஒற்றை வாக்கியத்தில் வில்லன் ஒருவர் சகோதரனாகிப்போன ஆச்சர்யம் நிகழ்ந்தது அங்கு. அதை உரைப்பதற்கு முன்நொடி வரையிலான அனைத்தும் துடைக்கப்பட்டு அழிந்து போகிறது, முழு முற்றிலுமாய். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தோழர்களுக்குப் பேருவகை பொங்கியது! உமர் (ரலி) கூறினார், ”உமைர் இப்னு வஹ்பு நபியவர்களிடம் வந்தபோது, அவரைவிட ஒரு பன்றி எனக்கு உவப்பானதாய் இருந்தது. இப்பொழுது, என் சொந்தப் பிள்ளைகளைவிட நான் இவரை மிக அதிகம் நேசிக்கிறேன்”

அல்லாஹ், அவனுடைய நபி, இவர்களின் விருப்பு வெறுப்பே வாழ்க்கையாய், மன இச்சை அனைத்துமே இறை உவப்பு சார்ந்ததாய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். சுக துக்கம் என்பதன் அர்த்தம் அவர்களது அகராதியில் வேறு.

அடுத்து சில பல நாட்கள், மக்கா, தம் உறவு, ஸஃப்வான் என்று அனைத்தும் அனைவரும் மறந்து ஆன்ம ஞானத் தேடலில் மூழ்கிப்போனார் உமைர். அவர் நெஞ்சமெங்கும் குர்ஆனின் ஒளி ஊடுருவிப் பரவ ஆரம்பித்தது. தம் வாழ்க்கையிலேயே இவைதாம் உயர் தருணங்கள், அர்த்தமுள்ள நாட்கள் என உணர ஆரம்பித்தார் அவர்.

இங்கு இவ்வளவு நடைபெற்றுக் கொண்டிருக்க, இவை எதுவுமே தெரியாமல் குரைஷிகளின் குழுக்களிடம் சென்று, “பத்ரு இழப்பை ஈடுசெய்ய, விரைவில் நற்செய்தி வரப்போகிறது பாருங்கள்” என்று சொல்லித் திரிந்து கொண்டிருந்த ஸஃப்வான், தினமும் மக்கா - மதீனா சாலையில் சென்று நின்றுகொண்டு, கடந்து செல்லும் பயணிகளிடம் எல்லாம், “உமைர் இப்னு வஹ்பு எனக்கு ஏதும் செய்தி சொல்லி அனுப்பினாரா?” என்று கேட்பது வாடிக்கையாகிப் போனது. அவர்களும் உதட்டைப் பிதுக்கிவிட்டுச் சென்றுகொண்டிருந்தார்கள்.

நாளாக, நாளாகக் கவலையும் மன வேதனையும் அதிகமாகி இருப்புக் கொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தார் ஸஃப்வான். அப்பொழுது ஒருநாள் மதீனா செய்தி அறிந்திருந்த ஒரு பயணி உண்மையைச் சொல்லி விட்டுச் சென்றார். “உமைர் இப்னு வஹ்பு பற்றியா கேட்கிறீர்கள்? அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நல்ல பிள்ளையாய் நபியவர்களிடம் பாடம் படித்துக் கொண்டிருக்கிறாரே!”

இடி விழுந்தது போன்ற அந்தச் செய்தியைக் கேட்டு, தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார் ஸஃப்வான். ‘உலகம் முழுவதுமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளும்; ஆனால் ஒருக்காலத்திலும் உமைர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது என்பது அசாத்தியம்’ என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் இத்தகைய செய்தி வந்தால் பிறகு வேறென்ன செய்வார்?

தேவையான இஸ்லாமியப் பாடங்களும் குர்ஆனும் கற்றுத்தேர்ந்த உமைர், நபியவர்களிடம் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! என் வாழ்நாளின் பெரும்பகுதியை அல்லாஹ்விடமிருந்து வந்த சத்தியத்தின் ஒளியை அணைக்கச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். முஸ்லிம்களுக்கு அளவற்ற தொல்லையும் கெடுதலும் புரிந்தேன். எனக்கு இப்பொழுது அனுமதி அளியுங்கள். நான் மக்கா சென்று குரைஷிகளை இஸ்லாத்தை நோக்கி அழைக்கப் போகிறேன். அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு நல்லது. மறுப்பவர்களுக்குக் கேடு காத்திருக்கிறது. அஞ்ஞானத்தின்போது நான் முஸ்லிம்களுக்கு இழைத்த துன்பங்களை ஏகத்துவ செய்தி மறுக்கும் குரைஷிகளுக்கு இப்பொழுது அளிக்கப்போகிறேன்.”

மக்கா வந்து சேர்ந்தவர், நேராக ஸஃப்வான் இப்னு உமைய்யாவின் வீட்டிற்குச் சென்றார்; பேசினார்.

“ஸஃப்வான், குரைஷித் தலைவர்களில் ஒருவன் நீ. அவர்களில் நீ தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றல் உடையவன். கற்சிலைகளை வழிபடுவதும் அவற்றுக்குப் பலிகொடுப்பதும் சரியான செயலாகத் தோன்றுகிறதா உனக்கு? அர்த்தமுள்ள மனிதன் ஒருவனின் மதமாக இது எப்படி இருக்க முடியும்? ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. முஹம்மது அவனுடைய தூதர் என்று நான் உளமாற புரிந்துகொண்டேன், ஏற்றுக்கொண்டேன்”

அப்பொழுது அதெல்லாம் கேட்டு உணரும் மனநிலையில் ஸஃப்வான் இல்லை. நிராகரித்து முகம் திருப்பிக்கொள்ள, வெளியே வந்த உமைர் இப்னு வஹ்பு பரபரவென பகிரங்கமாய்ப் பணி புரிய ஆரம்பித்துவிட்டார். 
என்ன பணி? பழைய பாவங்களை கழுவித் தொலைக்கும் வகையில் தீவிரமான ஏகத்துவப் பிரச்சாரப் பணி. அதற்கு நல்ல பலன் இருந்தது. அதன் பலனாய் அவர்கள் எல்லாம் மெதுமெதுவே இஸ்லாத்தினுள் நுழைய ஒரு புதிய முஸ்லிம்களின் குழுவொன்று சிறு ஊர்வலமாய் மக்காவிலிருந்து மதீனா புலம் பெயர்ந்தது.
oOo
மக்காவை நபியவர்கள் வெற்றியுடன் கைப்பற்றிய தினம். எதிரிகளுக்கும் தீய விரோதிகளுக்கும் மன்னிப்பும் கருணையும் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இதற்குமேல் இந்த ஊரில் வாழ்வது வெட்கக்கேடு, அவமானம் என்று வெளியேறி ஒடினார்கள் சிலர். அவர்களில் ஒருவர் ஸஃப்வான் இப்னு உமைய்யா. மக்காவைக் கைப்பற்ற வந்த முஸ்லிம் படை அணியில் உமைர் இப்னு வஹபும் இருந்தார். தம் நண்பனை உமைர் தேட ஆரம்பிக்க, “அவர் கடல் மார்க்கமாய் வேறு நாட்டுக்கு ஓடிவிட ஜித்தா சென்றுவிட்டாரே” என்று தகவல் கிடைத்தது. அக்காலத்தில் கடல் கடந்து பயணிப்பது பெரும் ஆபத்தான காரியமாய் இருந்தது அரேபியர்களுக்கு. இஸ்லாத்தின்மேல் தாம் கொண்டிருந்த குரோதத்தில் அந்த ஆபத்தெல்லாம் துச்சம் என்று கருதிவிட்டார் ஸஃப்வான்.

நபியவர்களிடம் விரைந்து வந்த உமைர், “அல்லாஹ்வின் தூதரே! ஸஃப்வான் இப்னு உமைய்யா குரைஷிக் குலத்தின் முக்கியஸ்தர் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். தங்களிடமிருந்து தப்பித்து அவர் ஜித்தாவுக்குச் சென்றுவிட்டார். ஆபத்தான கடல் பயணத்திற்கும் அவர் தயாராகி விட்டதாய்த் தெரிகிறது. அவருக்கு மன்னிப்பும் பாதுகாவலும் அளிப்பதாய்த் தாங்கள் தயவுசெய்து உறுதி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அளித்தார்கள் முஹம்மது நபி (ஸல்). “அடையாளமாய் ஏதாவது தாருங்களேன். என் நண்பனிடம் அதை ஆதாரமாய்க் காண்பிப்பேன்.“

மக்காவில் நுழையும்போது தாம் அணிந்திருந்த தம் தலைப்பாகையை அவிழ்த்து அளித்தார்கள் நபியவர்கள். அதைப் பெற்றுக்கொண்டு ஜித்தாவுக்குப் பறந்தார் உமைர் இப்னு வஹ்பு. வேகவேகமாய்ச் சென்றவர் துறைமுகத்தில் படகில் ஏறப்போன ஸஃப்வானைப் பிடித்துவிட்டார். “உன்னை நீயே அழித்துக் கொள்ளுமுன் நான் சொல்வதைக் கேள். நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து உனக்கு வாக்குறுதிப் பெற்று வந்துள்ளேன்.”

“என்னை விட்டுவிடு. பொய் உரைக்கிறாய் நீ”

“ஸஃப்வான்! கருணையில் மிகைத்த, அன்பான ஒரு மனிதரிடம் பேசிவிட்டு நான் உன்னிடம் வந்திருக்கிறேன்” என்று மனம் தளராமல் தொடர்ந்தார் உமைர்.

“என் உயிருக்கு உத்தரவாதமில்லை என்று அஞ்சுகிறேன்” என்றார் ஸஃப்வான்.

“அந்தக் கவலையை விடு. நீ கற்பனையும் செய்ய முடியாத இரக்கக் குணமுள்ளவர் அவர்” என்று தாம் பெற்று வந்திருந்த உத்தரவாதத்தைக் காட்டினார் உமைர். இறுதியில் இணங்கிய ஸஃப்வான் மக்கா வந்து நபியவர்களைச் சந்தித்து நான்கு மாத அவகாசம் பெற்றுக்கொண்டு தாமே சுயமாய் இஸ்லாத்தில் இணைந்தார்.

இஸ்லாத்தின் கொடிய விரோதியாய் இருப்பவர்கள், அல்லது இஸ்லாம் பற்றிய அறிமுகம்கூட இல்லாதிருப்பவர்கள் என்று பலர் ஏதோ ஒரு திருப்புமுனை நிகழ்வில், இஸ்லாத்தை ஏற்கிறார்கள். அத்துடன் நில்லாமல் அப்படியே அதில் புதைந்து வரலாற்றுப் பாடமாகவும் ஆகிவிடுகிறார்கள். இது தோழர்கள் காலத்திலிருந்து இன்றுவரை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. “ஏன் அப்படி?” என்று சார்பற்று சற்றுக் கவனமுடன் சிந்தித்தால் போதும். சத்தியம் அனைத்து மனங்களுக்கும் சாத்தியமாகும்.

வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் இஸ்லாத்திற்கு எதிரான தீய விரோதியாய் இருந்த உமைர் இப்னு வஹ்பு, சத்தியம் ஏற்ற நொடிமுதல் இஸ்லாத்திற்காக உழைக்கும் அசாத்தியப் போராளியாக மாறிப்போனார். தம் மக்களுக்கு ஏகத்துவத்தை எடுத்துச்சொல்லும் செயல் வீரராகிப் போனவர், எந்த முக்கியப் போரையும் தவறவிடாது நபியவர்களுடன் இணைந்து போரிட்ட போர் வீரராகவும் ஆகிப்போனார். அண்டை நாட்டு மக்களுக்குத் தம் தூதுச் செய்தியைச் சொல்ல நபியவர்கள் அனுப்பி வைத்த தோழர்களுள் உமைர் இப்னு வஹ்பும் ஒருவர். இஸ்லாத்தை அழிக்க வாள் ஏந்தி வந்தவர், நபியவர்களின் தூதுச் செய்தியின் ஓலை ஏந்தி இஸ்லாத்தின் பிரதிநிதியாக உயர்வடைந்து போனார்.

ரலியல்லாஹு அன்ஹு!

ன்றி  சத்தியமார்க்கம்.காம் 

- 33-அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ


தோழர்கள் printEmail
வரலாறு தோழர்கள்
திங்கள், 20 ஜூன் 2011 13:42
ன்றி  சத்தியமார்க்கம்.காம் 
عبد الله بن حذافة السهمي
கொப்பரையில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது. சூடாகி விட்டது என்பதை உறுதி செய்து கொள்ள, ஓரிருவர் ஏற்கெனவே அந்த எண்ணெயினுள் தூக்கி எறியப்பட்டிருந்தனர். விழுந்த மாத்திரத்தில் அந்த மனிதர்களின் சதையெல்லாம் கரைந்து கழண்டு போய், எலும்புகள் துருத்திக்கொண்டு, வறுபட்டுக் கொண்டிருந்தன. நிச்சயமாய் எண்ணெய் சூடாகிவிட்டிந்தது. எக்கச்சக்க சூடு.
தீ மேலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ரோமாபுரியின் பைஸாந்தியச் சக்கரவர்த்தி அந்த முக்கியமான போர்க் கைதியைப் பார்த்து கடைசித் தவணையாகக் கேட்டான்:
“உனக்கு இறுதி வாய்ப்பு அளிக்கிறேன். கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொள்கிறாயா?”
வைராக்கியத்துடன் பதில் வந்தது “முடியாது”
மன்னனுக்கு வேறு வழி தோன்றவில்லை. “இழுத்துச் செல்லுங்கள் இவரை; கொப்பரையில் தள்ளுங்கள்”
சேவகர்கள் அந்தக் கைதியை இழுத்துச் சென்றனர். கொப்பரையை நோக்கி நெருங்க நெருங்க, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது. அதைப் பார்த்ததுதான் தாமதம், மகிழ்ச்சியுற்ற சேவகர்கள் உடனே சக்கரவர்த்தியிடம் ஓடினார்கள்.
“மன்னர் மன்னா! கைதியின் கண்களில் கண்ணீர்”
“ஆஹ்! படிந்தார் கைதி. இறுதியில் மரண பயம் வந்து விட்டது பார். அவரை உடனே என்னிடம் அழைத்து வாருங்கள்”
சக்கரவர்த்தியிடம் கைதி மீண்டும் அழைத்து வரப்பட்டார். “இப்பொழுது சொல்! கிறிஸ்துவ மதம் உனக்குச் சம்மதம் தானே?”
அந்தக் கைதி பதிலைச் சொன்னார். அப்படியே ஸ்தம்பித்துப் போனான் அந்த பைஸாந்தியச் சக்கரவர்த்தி!
oOo
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் அருளப்பெற்று, மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பத் தருணங்களிலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா ரலியல்லாஹு அன்ஹு. அப்பொழுது முஸ்லிம்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுஞ்செயல்கள் பற்றி முந்தைய அத்தியாயங்களில் பார்த்துக் கொண்டே வந்தோம். அந்த வன்முறைகளிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள நபியவர்களின் அனுமதியுடன் அபிஸீனியாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டனர் முஸ்லிம்கள்.
அவர்களில் அப்துல்லாஹ்வும் ஒருவர். பின்னர் நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்து, இஸ்லாம் அங்குப் பரந்து விரிய ஆரம்பித்தவுடன், இலகுவான எத்தியோப்பிய வாழ்க்கையைத் துறந்துவிட்டு, அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து கொள்ளவும் அவர்களை அண்மிக் கொள்ளவும் பரபரத்தார்கள் அயல்நாட்டு மண்ணில் வசித்து வந்த அத்தனை தோழர்களும். 
துவங்கியது இரண்டாவது ஹிஜ்ரா. மதீனா வந்தடைந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா.
மதியுகம்; எளிய குணம்; இனிய பண்பு; நாவண்மை; நெஞ்சுறுதியுள்ள போர் மரபு போன்ற சிறப்பம்சங்கள் கொண்டவர் அப்துல்லாஹ். இவருக்குச் சகோதரர் ஒருவர் இருந்தார். குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி). உமர் இப்னு கத்தாப் (ரலி) மகள் ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹாவின் கணவர் இந்த குனைஸ். பத்ருப் போரில் குனைஸ் வீர மரணமடைந்த பின்னர் ஹஃப்ஸா (ரலி) அவர்களை நபியவர்கள் மறுமணம் புரிந்து கொண்டார்கள்.
மதீனா வந்தடைந்தபின் நபியவர்களிடம் நேரடிக் கல்வி பயில ஆரம்பித்தார் அப்துல்லாஹ். அதன்பின் நிகழ்வுற்ற போர்களில் எல்லாம் அயராமல் பங்கெடுத்துக் கொண்டார். வீரமும் விவேகமும் ஞானமும் அவரிடம் பண்பட்டு வளர்ந்து கொண்டிருந்தன.
ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டின்போது இஸ்லாமிய ஆட்சியின் அடுத்தக் கட்டமாக அண்டை நாடுகளுக்கும் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்ல முடிவடுத்தார்கள் நபியவர்கள். இதைப்பற்றி ஃபைரோஸ் அத்-தைலமி(ரலி) வரலாற்றில் ஓரளவு பார்த்தோம். சட்டென நினைவுக்கு வரவில்லையெனில் மீண்டும் அதைச் சற்றுப் பார்த்து விடுவோம்.
தம் தோழர்களை அழைத்து நபியவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஏக இறைவனைப் புகழ்ந்துவிட்டு, “நம் அரேபிய நாட்டு எல்லையைத் தாண்டியுள்ள அரசர்களிடம் உங்களில் சிலரை என் தூதர்களாக அனுப்பிவைக்க விரும்புகிறேன். மர்யமின் மகன் ஈஸாவிடம் இஸ்ரேலிய மக்கள் பின்வாங்கியதைப்போல் என்னிடம் நீங்கள் நடந்து கொள்ள மாட்டீர்கள் அல்லவா?”
"ஆணையிடுங்கள் என்ன செய்ய வேண்டுமென்று; செய்து முடிக்கிறோம். உத்தரவிடுங்கள் எங்குச் செல்ல வேண்டுமென்று; சென்று வருகிறோம். இத்தகைய பணிகள் புரிய தாங்கள் எங்களைத் தேர்ந்துடுத்துள்ளது எங்களுக்குப் பெருமகிழ்வே” என்று எளிதாய் பதில் அளித்துவிட்டார்கள் தோழர்கள்.
மண்ணும் பெண்ணும் பொன்னும் என்று இகலோகமே குறிக்கோளாய் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் சக்தி மிக்க மன்னர்களிடம் இஸ்லாமிய அழைப்புக் கடிதம் அனுப்பிவைக்க நபியவர்கள் முடிவெடுத்தபோது, அதிலுள்ள சோதனைகளையும் ஆபத்தையும் நன்கு உணர்ந்தே இருந்தார்கள். அறிமுகமற்ற தூர தேசங்களுக்குத் தோழர்கள் செல்ல வேண்டும். அந்நாட்டு மக்களின் மொழி, அம் மன்னர்களின் குணாதிசயம் போன்றவை சரியாகத் தெரியாது. அந்த மன்னர்களோ பட்டம், பதவி, செல்வம், அதிகாரம் என்று கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள். ஆளாளுக்குத் தங்களையெல்லாம் கடவுளாகவே பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று ஏகத்துவம் சொல்லி, நபியவர்களின் கடிதத்தைக் கொடுத்தால் அந்தத் தூதர்களுக்கு நேரும் கதி என்பது, ஒரேயடியாகவோ கொஞ்சங் கொஞ்சமாகவோ உயிர் போகும் சாத்தியம் நிறைந்தது.
இவை அத்தனையும் நன்கு உணர்ந்தே தெளிவான பதில் அளித்தார்கள் தோழர்கள். அவர்களில் எட்டு பேரைத் தேர்ந்தெடுத்தார்கள் நபியவர்கள்.
ஹாதிப் பின் அபூபல்தஅ (ரலி) எகிப்து நாட்டுக்குச் செல்ல வேண்டும்; அம்ரு பின் உமைய்யா அத்தமரி (ரலி) எத்தியோப்பியா மன்னன் நஜ்ஜாஷிக்கு; தஹிய்யதுல் கல்பி (ரலி) ரோம நாட்டின் சீஸருக்கு; அலா பின் அப்துல்லாஹ் அல்-ஹத்ரமீ (ரலி) பஹ்ரைன் நாட்டின் அரசர் முன்திர் பின் ஸாவீக்கு; ஷுஜா பின் வஹப் அஸதீ (ரலி) டமாஸ்கஸின் அரசர் ஹாரித் பின் அபூ ஷமார் கஸ்ஸானீக்கு; ஸலீத் பின் கைஸ் பின் அம்ரு அல் ஆமிரீ (ரலி) யமாமாவின் அரசர் ஹௌதா பின் அலீயிடம்; ஓமன் நாட்டு அரசருக்கு அம்ரு பின் ஆஸ் (ரலி); பாரசீகத்தின் பேரரசன் குஸ்ரூவிடம் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) என்று நிர்ணயித்து ஒவ்வொருவரிடமும் கடிதம் எழுதி அளிக்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதரின் தூதர் என்ற தம் பணியை பெருமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார் அப்துல்லாஹ். வீட்டிற்கு வந்து பயணத்திற்குத் தேவையான மூட்டை முடிச்சுக் கட்டிக்கொண்டு, மனைவி, பிள்ளைகளைக் கட்டியணைத்து விடை பெற்றுக்கொண்டு ஒட்டகத்தின் மீது ஏறிக் கிளம்பினார். செல்பவர் வருவாரா மாட்டாரா என்ற நிச்சயமற்ற நிலை அக்குடும்பத்தினருக்கு. பிரியா விடை அளித்தனர். இறைவன் ஒருவனே துணை என்று தன்னந்தனியாக மலை, மேடு, பள்ளத்தாக்கு என்று துவங்கியது அவரது பயணம்.
பாரசீகம் வந்தடைந்து அரசு அதிகாரிகளிடம் செய்தி சொன்னார். “மதீனாவிலிருந்து தங்கள் மன்னனுக்குக் கடிதம் கொண்டு வந்துள்ளேன். அவரைச் சந்திக்க வேண்டும்”
சக்கரவர்த்திக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ‘மக்கா, மதீனாவில் ஏதோ புதிய மதம் தோன்றியிருக்கிறதாம். அதன் பெயர் இஸ்லாம் என்கிறார்கள். முஹம்மது என்பவர் தம்மை இறைவனின் தூதர் என்று சொல்லிக் கொள்கிறார்’ என்பது போலெல்லாம் அம்மன்னன் முன்னரே கேள்விப்பட்டு இருந்திருக்க வேண்டும். "அரசவையை அலங்கரித்துத் தயார் செய்யுங்கள். நம் முக்கியத் தலைவர்களை அங்கு வரச் சொல்லுங்கள். நானும் குளித்து முடித்துவிட்டு வருகிறேன்" என்று உத்தரவிட்டான் அவன்.
அனைவரும் வந்து சேர, அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு மன்னனைச் சந்திக்க அழைத்து வரப்பட்டார். செல்வத்திலும் ஆடம்பரத்திலும் தகதகவென ஜொலித்தது அந்த அரசவை. எங்குத் திரும்பினும் படோடபம். குழுமியிருந்த அவையினர் அங்கமெங்கும் ஆபரணம். பளபளவென ஆடையும் பற்பல விலையுயர்ந்த கற்கள் பதித்த கிரீடமும் கோலுமாய் மாமன்னன் குஸ்ரூ.
இவை எதற்கும் பொருந்தாத ஒரு தோற்றத்துடன் அங்கு வந்து நுழைந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா. அரபு மக்கள் உடுத்தும் கரடுமுரடான உடை; மிக எளிய தலைப்பாகை; கையில் நபியவர்கள் கொடுத்தனுப்பிய கடிதம். அவ்வளவுதான் அவரது அங்க அலங்காரம். தலை உயர்த்தி, நெஞ்சு நிமிர்த்தி நடந்து வந்தார். இறை அச்சம் ஒன்று மட்டும் உடலெங்கும் வியாபித்து விடும்போது மற்றவை எல்லாம் துச்சம் என்றாகிவிடுகிறது.
அவரது கையிலிருந்த கடிதத்தை வாங்கி வரும்படி தம் சேவகனை நோக்கி சைகை புரிந்தான் குஸ்ரூ. “அதெல்லாம் முடியாது” என்று கடுமையாக மறுத்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா. “என் கையால் உன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது எங்கள் நபியின் உத்தரவு. அதை என்னால் மீறமுடியாது. நான்தான் உன்னிடம் கொடுப்பேன்”
நபியவர்களின் ஒவ்வொரு கட்டளையையும் ஒவ்வொரு வார்த்தையையும் எப்படி அச்சு அசலாக அவர்கள் பின்பற்ற முனைந்தனர் என்பது மிகப் பெரும் விந்தை! எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும் சரி; அது யாராக இருந்தாலும் சரி; அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவுமில்லை, சமரசம் செய்து கொள்வோம் என்று சிறிதளவு முனைவதும் இல்லை. பின்னாளில் அவர்கள் அடைந்த கிடைத்தற்கரிய வெற்றியெல்லாம் அந்த உறுதியில்தான் மறைந்து இருந்திருக்கின்றது.
இத்தகைய செயலெல்லாம் குஸ்ரூவும் அவனது அரசவையும் அறியாத ஒன்று. ஆச்சரியத்துடன் அனுமதியளித்தான் குஸ்ரூ. அல்-ஹிராவிலிருந்து எழுத்தர் ஒருவரை வரவழைத்து, அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தைப் படிக்கச் சொல்ல, மொழிபெயர்த்தார் அவர்.
“அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்! அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகச் சக்கரவர்த்தி குஸ்ரூவுக்கு எழுதிக் கொள்வது. இறைவனின் நேர்வழியில் நடப்பவர் மீது சாந்தி உண்டாவதாக ...”
இவ்வளவு மட்டுமே கேட்ட குஸ்ரூவின் முகம் சினத்தால் சிவந்து போனது! கடுஞ்சீற்றம் பொங்கியது! இரத்த நாளங்கள் விம்மிப் புடைத்தன!
"நிறுத்து!" முழுக் கடிதத்தையும் படிக்கவிடாமல் தடுத்து நிறுத்தினான். திகைத்தது அரசவை. எல்லாம் எதற்கு? நபியவர்கள் அந்தக் கடிதத்தில் தன் பெயரை முதலில் குறிப்பிட்டு அதற்குப் பின் குஸ்ரூவின் பெயரைக் குறிப்பிட்டு விட்டாராம். கடிதம் படித்துக் கொண்டிருந்தவரைத் தடுத்து அதைப் பிடுங்கி, சுக்குநூறாகக் கிழித்து காற்றில் பறக்கவிட்டவன், கடும் எரிச்சலுடன் இரைந்தான்.
“என் அடிமை எனக்கு இப்படித்தான் கடிதம் எழுதுவதா?” 
அரபுப் பிரதேசமும் அதன் மக்களும் தன் ஆளுகையின் கீழ் இல்லை என்றிருந்தாலும், அதிகாரமும் செருக்கும் இறுமாப்பும் ‘தான் ஆண்டான்; மற்றவர் அனைவரும் அடிமை’ என்ற எண்ணத்தில்தான் திளைத்திருந்தான் அவன். அரபுகளை, பொருட்படுத்தத்தக்க ஒரு மக்கள் இனமாகக்கூட பாரசீகர்கள் கருதியிருக்கவில்லை. ஏறக்குறைய அதே எண்ணமே ரோமர்களிடம் குடிகொண்டிருந்தது. ஏனென்றால் அவர்களிடையே ‘இருவரில் யார் பெரிய வஸ்தாது?’ என்று போர் நடந்து கொண்டிருந்ததே தவிர, மற்றவர்களை அவர்கள் அந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டதில்லை. 
இத்தகைய மனோபாவத்தில் இருந்தவனுக்கு, மதீனாவில் இருந்து வந்துள்ள முஹம்மதின் கடிதம், குசலம் விசாரிக்கும்; நீதி உரைக்கும் வெண்பா போன்று ஏதாவது எழுதி இருக்கும் என்பன போன்ற அசட்டையான எதிர்பார்ப்பே இருந்தது. ஆனால் நபியவர்களின் கடிதத்தின் ஆரம்ப வாசகமே அவனுடைய ‘தான்’ என்ற அகங்காரத்துக்கு வேட்டு வைப்பதுபோல் அமைந்திருந்தால்? கடிதம் கிழிந்து பறந்து தரையில் விழுந்தது.
“இந்தத் தூதுவனை என் அவையிலிருந்து உடனே வெளியேற்றுங்கள்” கோபத்துடன் அவன் கட்டளையிட, அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா வெளியேறினார்.
வெளியே வந்தவருக்கு அடுத்து என்ன காத்திருக்கிறது என்பது நிச்சயமாகவில்லை. ‘என்னைக் கொலை செய்வார்களா; அல்லது பிழைத்துப்போ என்று விட்டுவிடுவார்களா?’ யோசித்தவருக்கு சரியான பதில் தெரியவில்லை. ஆனால் ஒரேயொரு எண்ணம் மட்டும் பெரும் நிம்மதி அளித்தது.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதரின் ஓலையை நான் சமர்ப்பித்து விட்டேன். நபியவர்களின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். அதுபோதும். உயிர் போனாலும் சரி; மிச்சமிருந்தாலும் சரி” என்று எண்ணிக்கொண்டவர், தம் ஒட்டகத்தின் மீது ஏறிக்கொண்டு மதீனா நோக்கிக் கிளம்பிவிட்டார்.
சற்று நேரம் கழித்து குஸ்ரூவின் கோபம் தானாய்த் தணிந்தது. சற்று நிதானத்திற்கு வந்தான். சேவகர்களிடம், “சரி சரி! அந்த அப்துல்லாஹ்வை அழைத்து வாருங்கள். முஹம்மது வேறு என்ன செய்தி சொல்லி அனுப்பினார் என்று கேட்போம்”
உடனே ஓடி, தேடினார்கள் சேவகர்கள். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அரேபியா நோக்கிச் செல்லும் பாதையிலும் சென்று பார்த்தார்கள். அங்கும் அவர் தென்படவில்லை. அதற்குள் அப்துல்லாஹ் வெகு தூரம் சென்று விட்டிருந்தார்.
“தூதுவர் சென்று விட்டார் அரசே” என்றார்கள் திரும்பிவந்த சேவகர்கள்.
oOo
“தூதுச் செய்தியைக் குஸ்ரூ கிழித்து எறிந்து விட்டான் அல்லாஹ்வின் தூதரே” என்றார் திரும்பி வந்து சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா.
மதீனா வந்தடைந்தவர் பாரசீக அரசனின் அரசவையில் நடந்தவை அனைத்தையும் விவரித்தார். நிதானமாய்க் கேட்டுக்கொண்ட நபியவர்கள் இறுதியில் சொன்னார்கள், “அதைப் போலவே குஸ்ரூவின் சாம்ராஜ்யத்தை அல்லாஹ் கிழித்தெறிவானாக” வேதம் அருளப்பெற்ற நபியின் வாக்கு, பிற்காலத்தில் அப்படியே பலித்தது!
மக்காவிற்குத் தெற்கே அமைந்துள்ள யமன் நாட்டில் பாரசீக அரசாட்சி நிகழ்ந்துகொண்டிருந்ததும் அதன் ஆட்சிப் பொறுப்பு பாதான் என்பவரிடம் ஒப்படைக்கபட்டிருந்ததும் ஃபைரோஸ் (ரலி) வரலாற்றில் விரிவாகப் பார்த்தோம். அந்த பாதானுக்குக் கடிதம் எழுதினான் குஸ்ரூ. “வலுவான இரண்டு வீரர்களைஹிஜாஸ் பிராந்தியத்தில் தோன்றியுள்ளவரிடம் அனுப்பவும். அவரைப் பிடித்து என்னிடம் கொண்டு வரச் சொல்லவும்”
அதன்படி அபாதாவீ, கர்காரா எனும் இரண்டு வீரர்களைத் தேர்ந்தெடுத்து, நபியவர்களிடம் அனுப்பி வைத்தார் பாதான். “தாங்கள் தாமதமின்றி கிளம்பிச் சக்கரவர்த்தி குஸ்ரூவிடம் வரவேண்டியது. இது அரசக் கட்டளை” என்று செய்தியும் அவர்களிடம் அனுப்பப்பட்டது. இதெல்லாம் தவிர, அந்த இருவரிடமும் வேறொரு செய்தியும் சொல்லியிருந்தார் பாதான். 
”அந்த நபி என்பவரைக் கூர்ந்து கவனித்து, அவர் என்னென்ன செய்கிறார் என்பதைத் தங்களால் முடிந்தவரை திடமாக அறிந்துகொண்டு வந்து எனக்குச் செய்தி சொல்லுங்கள்” அரச ஆணையையும் அனுப்பிவிட்டு, இப்படியொரு தகவலையும் பாதான் கோரியதற்கு,  இஸ்லாத்தைப் பற்றி அவர் அதுவரை அரசல் புரசலாய்க் கேள்விப்பட்டிருந்த செய்திகளும் மனதில் குறக்களியும் அவரை அப்படிச் செய்யத் தூண்டியிருக்க வேண்டும்.
வேகமாய் தாயிஃப் நகரை வந்தடைந்தார்கள் அவ்விருவரும். அங்கிருந்த குரைஷி வணிகர்களிடம் நபியவர்களைப் பற்றி விசாரிக்க, ‘அப்படியா சேதி?’ என்று குதூகலித்துப் போனார்கள் அந்த குரைஷிகள். உடனே மதீனா நோக்கிக் கையைக் காண்பிக்க, பாதானின் வீரர்கள் அதை நோக்கிக் கிளம்பியதும், பெரும் குஷியுடன் மக்கா நோக்கி ஓடினார்கள் குரைஷி வணிகர்கள்.
“நற்செய்தி உங்களுக்கு! குஸ்ரூவின் வீரர்கள் முஹம்மதை நோக்கிச் செல்கிறார்கள். இனி முடிந்தது அவர் கதை” 
வல்லரசிடம் வாலாட்டினால் நடக்குமா? அடக்கப்பட்டுவிடுவார் அவர் என்று தீர்மானமே பண்ணி விட்டார்கள் குரைஷிகள். நம்மால் முடியாதது குஸ்ரூவினால் முடிந்தால் நலமே என்ற எண்ணம்தான். வேறென்ன?
மதீனா வந்தடைந்த அந்த இருவரும் நபியவர்களைச் சந்தித்து, பாதான் கொடுத்தனுப்பிய மடலை அளித்தனர். 
“மன்னாதி மன்னர் குஸ்ரூ தங்களை அவரிடம் அழைத்து வரும்படி எங்களை அனுப்பியிருக்கிறார். தாங்களே இணங்கி வந்துவிட்டால் தங்களைப் பற்றி நல்ல விதமாய் அவரிடம் நாங்கள் எடுத்துரைப்போம். தங்களிடம் கருணையுடன் அவர் நடந்து கொள்வார். தாங்கள் வர மறுத்தால் ... அவர் யார், அவருடை சக்தி என்ன, ஆளுமை என்ன, அதிகாரம் என்ன என்பதை எல்லாம் தாங்கள் அறிந்திருப்பீர்கள்... தங்களையும் தங்கள் மக்களையும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார் ...”
அவர்கள் பேசிக்கொண்டேயிருக்க, கூர்ந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் நபியவர்கள். மழுங்க மழித்த தாடையும் நல்ல அடர்த்தியான மீசையுமாக அவர்களின் அந்தத் தோற்றம் முஹம்மது நபிக்கு அறவே பிடிக்கவில்லை. 
“யார் உங்களுக்கு உங்களது தாடியை மழிக்க உத்தரவிட்டது?”
தலைக்கு ஆபத்து தெரிவித்து வந்தால் இவர் தாடியைப் பற்றிக் கேட்கிறாரே! புரியவில்லை அவர்களுக்கு. “எங்கள் இறைவன்” என்று பதில் சொல்லி வைத்தார்கள். குஸ்ரூதானே அவர்களின் கடவுள்.
அமைதியாய் பதில் கூறினார்கள் முஹம்மது நபி, “ஆனால் என் இறைவன் எங்களுக்குத் தாடியை வளர்க்கவும் மீசையைக் கத்தரிக்கவும் உத்தரவிட்டுள்ளான் என்று கூறியவர்கள், “நாளை வரை காத்திருங்கள்; மீண்டும் பேசுவோம்” என்று அறிவித்து விட்டுச் சென்று விட்டார்கள்.
இதனிடையே பாரசீகத்தில் முக்கிய அரசியல் நிகழ்வொன்று நடைபெற்றது. குஸ்ரூவுக்கு ‘ஷிர்வே’ என்றொரு மகன் இருந்தான். அவனுக்குத் தன் தந்தை தன்னிச்சையாகவும் கொடுங்கோலனாகவும் ஆட்சி செய்து வருவது மகா எரிச்சலாயிருந்தது. பாரசீகர்களின் கண்ணியத்துக்குக் குஸ்ரூவின் செயல்பாடுகள் மிகவும் பங்கம் விளைவிப்பதாய்க் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் அவன். இறுதியில், 'ஏதாவது செய்து இந்த அப்பனைப் போட்டுத் தள்ளினால்தான் சரி' என்று தோன்றியது அவனுக்கு. நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் அன்றைய நாளில் தன் தந்தையைக் கொலை செய்து முடிக்க, கடவுள் குஸ்ரூ செத்துப் போனான்.
இந்தச் செய்தியை இறைவன் தன் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் மூலமாக நபியவர்களுக்கு அன்றிரவு அறிவித்துவிட்டான். அதுவும் எப்படி? மிகத் துல்லியமாய், அந்தக் கொலை நிகழ்வுற்ற நாள், இரவின் எந்தப் பொழுது, என்ன தேதி ஆகிய விபரங்களுடன்! மறுநாள் அந்த இரு தூது அதிகாரிகளையும் அழைத்தார்கள் முஹம்மது நபி. “உங்கள் மன்னாதி மன்னர் செத்துப் போய்விட்டார் தெரியுமா?” என்று கொலை விபரங்களை அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிவித்ததும் அதிர்ந்து போனார்கள் அவ்விருவரும்!
“நீர் என்ன சொல்கிறீர் எனப் புரிந்துதான் சொல்கிறீரா? எங்கள் கடவுளுக்குக் கடிதம் அனுப்பினீர்கள் என்ற அற்பமான ஒரு விஷயத்திற்கே உம்மைக் கைது செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீர் என்னடாவென்றால், எங்கள் கடவுள் இறந்துவிட்டார் என்று அபாண்டம் உரைக்கிறீர்? இது தப்பு! மகாக் குற்றம்! அப்படியே நாங்கள் குறித்துக்கொண்டு எங்கள் மன்னன் பாதானிடம் தெரிவிக்கலாமா?”
“ஆம், சொல்லுங்கள். மேலும், என்னுடைய மார்க்கமும் ஆட்சியும் குஸ்ரூவின் கீழுள்ள அனைத்து இராச்சியங்களையும் துடைத்தெறியும் என்பதையும் என் சார்பாக உங்கள் மன்னனுக்குத் தெரிவியுங்கள். எனவே, உங்கள் மன்னன் பாதான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவருடைய அதிகாரத்தில் தற்சமயம் இருப்பதையும் அவருக்குக் கொடுப்பேன் என்றும், அவர் தற்சமயம் நிர்வகித்துக் கொண்டிருக்கும் பகுதிகளுக்கெல்லாம் அவரையே அரசனாகவும் ஆக்கி வைப்பேன் என்றும் தெரிவியுங்கள்”
தன்னைக் கைது செய்ய வந்தவர்களை, அவர்களின் வாயடைத்து, அவர்களின் மன்னனுக்கு அவனுடைய அதிகாரத்தையே மீண்டும் திருப்பித் தரும் விசித்திரம் நடைபெற்று முடிந்தது. மேலும், மற்றொரு மன்னனிடமிருந்து தமக்குப் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த தங்கத்தையும் வெள்ளியையும் ஒரு சிறு பையில் கட்டி, கர்காராவிடம் கொடுத்தனுப்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். “உங்கள் மன்னனுக்கு எனது இந்த அன்பளிப்பை அளியுங்கள்”
கொண்டுவந்த அரச ஆணையை ஒரு கையிலும் பரிசுப் பையை மற்றொரு கையிலும் தூக்கிக்கொண்டு தூதுவர்கள் இருவரும் யமனுக்குத் திரும்பி வந்து, நடந்ததையெல்லாம் பாதானிடம் விவரித்தார்கள். நிகழ்காலம் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் எந்தவொரு தகவல் தொடர்பு வசதியும் இல்லாத அக்காலத்தில் எத்தகைய தலைபோகிற செய்தியாக இருந்தாலும் அது நிலம்விட்டு நிலம் வந்து சேர அதற்கே உரிய காலம்தான் ஆகும். ஆகையினால் பாதானுக்கு அதுவரை குஸ்ரூ கொலையுண்ட செய்தி வந்து சேர்ந்திருக்கவில்லை. எனவே, “இதெல்லாம் ஒரு மன்னன் கூறுகிற செய்தியாக எனக்குத் தெரியவில்லை. என் மனத்திற்கு அவர் ஒரு நபி என்றுதான் படுகிறது. அது மட்டும் உண்மை என்றால், அவர் உங்களிடம் கூறியது நடந்தே தீரும். குஸ்ரூ கொல்லப்பட்டது உண்மை என்றால் இவர் ஒரு நபியும், இறைத்தூதரும் என்பது மெய்யாகிவிடும். அப்படியெல்லாம் இல்லையெனில், அடுத்து அவரை என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவெடுப்போம்” என்றார் பாதான்.
நியாயமான சிந்தனையும், அந்நேரத்திற்கான சரியான யோசனையும் பாதானிடமிருந்து வெளிப்பட்டது. அடுத்து சில நாட்களிலேயே பாரசீகத்திலிருந்து அந்தச் செய்தி பாதானுக்கு வந்து சேர்ந்தது. ஷிர்வேதான் செய்தி அனுப்பியிருந்தான். அட்சரம் பிசகாமல் அப்படியே நபியவர்கள் தெரிவித்திருந்த செய்தி. அதனுடன் மேலும் ஒரு தகவலும் இருந்தது, “மேற்கொண்டு தகவல் வரும்வரை மதீனாவில் இருக்கும் அந்த நபியை ஒன்றும் தொந்தரவு செய்யாமல் இருக்கவும்”
பாதானுக்குத் தெளிவு ஏற்பட்டுவிட்டது. 'முஹம்மது மெய்யாகவே அல்லாஹ்வின் தூதராகத்தான் இருக்க முடியும்' அபாதாவீயை அழைத்து மேலும் தகவல் விசாரிக்க, “அவருக்கென்று எந்த ஒரு பாதுகாவலரும் கிடையாது மன்னரே! மக்களெல்லாம் இயல்பாய் அவரைச் சந்திக்க முடிகிறது. அவரைப்போல் ஒரு மதிப்பையும் அச்சத்தையும் என்னுள் தோற்றுவித்த வேறு எவரையும் நான் இதுவரை சந்தித்துப் பேசியதேயில்லை” என்று மனத்திலுள்ள உண்மையை அப்பட்டமாய் விவரித்தான் அவன்.
ஷிர்வேயின் மடலைத் தூக்கி வீசி விட்டுத் தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்து விட்டார்பாதான். இவ்விதமாக பாரசீகத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு யமனில் நிகழ ஆரம்பித்தது பெருமாற்றம்.
oOo
ஹிஜ்ரீ 19ஆம் ஆண்டு. உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலம். ரோமர்களின் பைஸாந்தியப் படைகளுடன் இடைவிடாது யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ரோமர்கள் தோற்றுக் கொண்டேயிருக்க, ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்கள் வசமாகிக் கொண்டேயிருந்தன. அப்பொழுது ஒரு யுத்தத்தில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவும் படையொன்றில் இணைந்து போரிட்டுக் கொண்டிருந்தார். வலுவான தங்களது சாம்ராஜ்யத்தைப் பாலைவனத்திலிருந்து கிளம்பிவந்த முஸ்லிம்களின் படை விரட்டி விரட்டி அடிப்பதையும் நபித்தோழர்களின் குணாதிசயம், தீவிர இறை நம்பிக்கை, தம்முடைய இறைத்தூதருக்காக அவர்கள் புரிந்து கொண்டிருந்த தியாகம் ஆகியனவும் கதை கதையாக ரோமர்களை அடைந்து ஒருவித பேராச்சரியத்திலும் திகிலிலும் ஆழ்ந்திருந்தனர் அவர்கள்! ‘யார்தான் அவர்கள்? அப்படியென்ன கொம்பு முளைத்திருக்கிறது அவர்களுக்கு?’ என்று பார்க்க, அறிய, பேராவல் ஏற்பட்டுப்போயிருந்தது பைஸாந்திய மன்னனுக்கு. எனவே அவன் தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். “போரில் சிறைபிடிக்கப்படும் முஸ்லிம் வீரர்களைக் கொல்லாதீர்கள்; அவர்களை என் சபைக்கு அழைத்து வாருங்கள்”
அந்த யுத்தத்தில் சில முஸ்லிம்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவும் ஒருவர். அவரை மன்னனின் அரசவைக்குக் கூட்டிச் சென்றார்கள் ரோமப் படையினர்.
“இவர் பெயர் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா. மக்காவில் இஸ்லாத்தில் இணைந்த மூத்தவர்களில் இவரும் ஒருவர். முஹம்மது நபியின் முக்கியமானத் தோழர்களில் ஒருவர்” என்று அப்துல்லாஹ் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார்.
நீண்ட நேரம் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ரோம மன்னன். மிக மிக எளிமையான தோற்றத்தில் ஒருவரைக் கண்டானே தவிர எவ்வித சிறப்பான அலங்காரமோ, கிரீடமோ, அடையாளமோ அவரிடம் தென்படவில்லை.
“நான் உமக்கு ஒரு சலுகை அளிக்க விரும்புகிறேன்” என்றான் அவரை நோக்கி.
“என்ன அது?”
“நீர் கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் நான் உம்மைத் துன்புறுத்தாமல் விடுவித்து விடுகிறேன்; தாரளமான கவனிப்பும் உமக்கு உண்டு”
யோசிக்காமல் சட்டென திடமான பதில் வந்தது. “நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது”
“நீர் ஒரு மதிப்புக்குரிய மனிதராய்த் தெரிகிறீர். உமக்கு என் மகளை மணமுடித்து வைப்பேன்; என் ஆட்சி அதிகாரத்தில், அரசாங்கத்தில் பெரும் பங்கு உமக்கு அளிப்பேன். கிறித்துவ மதத்தை ஏற்றுக்கொள்; அதுபோதும்”
உலக மதிப்பீட்டில் மிகப்பெரும் வாய்ப்பும் சலுகையும் அது. அன்றும் இன்றும் என்றும் தலைவர்களும் பின்தொடர்பவர்களும் எதற்காக ஓடுகிறார்கள்? அக்கால வல்லரசான ரோம அரசாங்கத்தின் மன்னன் தன் மகளை அளிக்கிறேன்; நிலம் அளிக்கிறேன்; பட்டம் பதவி அளிக்கிறேன் என்றெல்லாம் தங்கத் தாம்பாளத்தில் ஏந்தித் தருகிறான். அதுவும் யாருக்கு? மற்றொரு சாம்ராஜ்ய மன்னனுக்கோ, பட்டம், பதவி, அந்தஸ்து ஆகியனவற்றில் உயர்ந்தோங்கி நின்றவருக்கோ அல்ல. மிக மிக எளிமையான வாழ்க்கைத் தரத்தைக்கொண்ட, பாலை நிலத்திலிருந்து வந்திருக்கக்கூடிய ஒரு சாதாரண மனிதருக்கு! எங்கிருந்து வந்தது அவருக்கு இத்தகைய சிறப்பும் அங்கீகாரமும்?
இஸ்லாம்! அதில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத அடிபணிதல்!
இப்பொழுது அந்த இஸ்லாமே அங்கு விலைபேசப்பட்டது. அதை முற்றிலும் உணர்ந்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா. விலங்குகளால் பூட்டப்பட்டிருந்த அவர் முகத்தில் புன்னகை தோன்றியது.
“உன்னிடம் உள்ள அனைத்தும் அதனுடன் அரபுகளிடமுள்ள அனைத்தும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே! அதற்காகவெல்லாம், ஒரே ஒரு நொடிகூட முஹம்மது கற்றுத் தந்த மார்க்கத்திலிருந்து விலக மாட்டேன்”
அளிக்கும் அன்பளிப்பை யாரேனும் மறுக்கும்போது அது ஏற்படுத்தும் வலியிருக்கிறதே, அது சாதாரண மனிதர்களுக்கே கடுமையானது. பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்தின் மன்னர்களுக்கோ அது அவர்களின் கௌரவப் பிரச்சினை. அதை, அந்த கௌரவத்தை அடியுடன் இடித்தது அப்துல்லாஹ்வின் அந்தத் திட்டவட்டமான நிராகரிப்பு. தன் முகத்தில் உமிழ்ந்ததைப் போல் உணர்ந்தான் அந்த மன்னன். கோபம் ஜிவுஜிவு என்று தகித்தது. இதற்குமேல் அவருக்கு அளிக்கவோ, உறுதி கூறவோ ஒன்றுமில்லை என்றும் புரிந்தது.
“எனில் எனக்கு வேறு வழியில்லை. நான் உம்மைக் கொல்ல வேண்டியிருக்கும்”
“அவ்வளவுதானே? உன் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்”
‘என்ன இது? அடங்க மாட்டார் போலிருக்கிறதே? அப்படியானால் இவருக்கு அளிக்கப்படும் மரணம் இலேசானதாக இருக்கக் கூடாது’ என்று நினைத்தவன் அவரைச் சிலுவையில் வைத்துக் கட்டும்படி உத்தரவிட்டான். 
“எங்கே வில்லாளிகள்? அவரது கைகளில் அம்பு எய்யுங்கள்”
சிலுவையில் தொங்கிய அவரது கைகளில் அம்புகள் பறந்து வந்து தைத்தன. குருதி குபுக்கென்று பொங்கி வழிந்து. மன்னன் மீண்டும் அவரிடம் சலுகை பேசினான். “கிறித்துவத்தை ஏற்றுக் கொள்கிறாயா?” திடவுறுதி குறையாமல் மறுத்தார் அப்துல்லாஹ்.
“அவரது கால்களில் அம்பு எய்யுங்கள்” என்று பிறந்து அடுத்த அரச கட்டளை.
இப்பொழுது அவரது கால்களில் அம்புகள் நிலைகுத்தின. மீண்டும் ஒருமுறை அவரிடம் கேட்டான் மன்னன். அப்துல்லாஹ்வுக்கோ மேலும் மேலும் உறுதி பெருகிக் கொண்டிருந்தது. மீண்டும் தெளிவாய் மறுத்தார். மசியவில்லையே இவர். வேறென்ன கொடூரம் புரியலாம் என்று யோசித்தவன், “அவரைச் சிலுவையிலிருந்து விடுவியுங்கள்” என்றான்.
பெரும் அண்டா அளவிலான கொப்பரை நிறைய எண்ணெய் ஊற்றி, கீழே நெருப்புப் பற்ற வைத்தார்கள் சேவகர்கள். தீ, திகுதிகுவென கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. எண்ணெய் கொதிக்கும் வரை காத்திருந்தார்கள். முஸ்லிம் கைதிகளில் இருவரை இழுத்து வரச் சொன்னான் மன்னன். அதில் ஒருவரை கொதிக்கும் அந்த எண்ணெயில் தூக்கி எறிய, விழுந்த மாத்திரத்தில் அவரின் சதையெல்லாம் கரைந்து கழண்டு போய், எலும்புகள் துருத்திக் கொண்டு நின்றன. அவர் அலறுவதற்குக்கூட அவகாசம் இருந்திருக்கவில்லை. அவ்வளவு சூடு. 
இந்தக் காட்சியின் கொடூரம் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவை நிச்சயமாகப் பலவீனப்படுத்தியிருக்கும் என்று நம்பினான் பைஸாந்தியச் சக்கரவர்த்தி. கடைசித் தவணையாக அப்துல்லாஹ்விடம் கேட்டான்.
“இப்பொழுது சொல். இதுவே உமக்குக் கடைசி வாய்ப்பு. கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொள்கிறாயா?”
ஆனால் முன்பைவிட இன்னமும் அதிக வைராக்கியத்துடன் தான் பதில் வந்தது. “முடியாது!”
“இழுத்துச் செல்லுங்கள் இவரை. கொப்பரையில் தள்ளுங்கள்”
சேவகர்கள் அவரை இழுத்துச் சென்றனர். கொப்பரையை நோக்கி நெருங்க நெருங்க, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அதைப் பார்த்ததுதான் தாமதம், மகிழ்ச்சியுற்ற சேவகர்கள் உடனே சக்கரவர்த்தியிடம் ஓடினார்கள்.
“மன்னர் மன்னா! கைதியின் கண்களில் கண்ணீர்”
“ஆஹ்! இறுதியில் மரண பயம் வந்து விட்டது பார். இப்பொழுது நம் வழிக்கு வருவார். அவரை உடனே என்னிடம் அழைத்து வாருங்கள்”
“இப்பொழுது சொல்! கிறிஸ்துவ மதம் உனக்குச் சம்மதம் தானே?”
“நிச்சயமாக இல்லை”
“நீர் நாசமாய்ப் போக! பின் எதற்கு அழுதீர்?”
அவர் உரைத்த பதிலில் அப்படியே ஸ்தம்பித்துப் போனான் அந்த பைஸாந்தியச் சக்கரவர்த்தி.
“மரணமல்ல என் கவலையும் பயமும். அல்லாஹ்வின் உவப்பைப் பெறுவதற்கு, அதற்கென தியாகம் புரிவதற்கு என்னிடம் உள்ளதோ ஒரே ஓர் உயிர். என்னிடம் மட்டும் என் தலையிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கையளவு உயிர்கள் பல இருந்திருந்தால் அவை அத்தனையையும் ஒன்றன் பின் ஒன்றாய், மகிழ்ச்சி பொங்க, இந்தக் கொப்பரையில் கொட்டித் தீர்த்திருக்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன்; கைச்சேதம் கண்ணீராகிவிட்டது”
கொதிக்கும் கொப்பரையின் அருகே நின்றுகொண்டு, வெறும் எலும்பாய் மிதக்கும் சக முஸ்லிமைப் பார்த்துக்கொண்டு, சமரசத்தின் நிழல்கூட விழாமல் அவர் பேசினாரென்றால் அந்த வார்த்தைகளின் ஒவ்வொரு எழுத்தும் சத்தியம். அசாத்திய பலம் கொண்டது அந்த ஈமான்.
மிகவும் யோசித்தான் அந்த மன்னன். ‘என்ன இவர்? என்னுடைய தற்பெருமை, தன்மானத்தையெல்லாம் கொன்று விட்டு, இந்த மனிதர் கொப்பரையில் போய்க் குதித்துவிடத் தயாராக இருக்கிறார். மரணத்திலும் இவர் வென்று விட்டால் எனக்கு முழுத் தோல்வியல்லவா?’
“போகட்டும் போ! என்னுடைய நெற்றியில் முத்தமிடு. நான் உன்னை விடுவித்து விடுகிறேன்”
சற்று நேரம் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா. என்ன பேசுகிறான் இந்தப் பேரரசன்? அவனது தோல்வியை அவனது முகத்தில் படித்துவிட்டார். அவன் கண்களின் கெஞ்சல் புரிந்தது. தம் மரணத்தைவிட அவனுக்கு அவனது தன்மானம் பெரிது என்பது தெரிந்தது. அதைத் திறம்பட உபயோகித்துக் கொள்ள முடிவெடுத்தார்.
“செய்கிறேன். ஆனால் நீ முஸ்லிம் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்”
“அப்படியே ஆகட்டும்”
தனக்குள் சொல்லிக் கொண்டார் அப்துல்லாஹ். “இவன் அல்லாஹ்வின் எதிரி. நான் இவன் நெற்றியில் முத்தமிடுவதால் முஸ்லிம் கைதிகள் அனைவருக்கும் விடுதலை கிடைக்கப்போகிறது; அவர்களது உயிர் காப்பாற்றப்படுகிறது எனில் அதற்காக நான் முத்தமிடுவதில் பாதகம் ஏதும் இல்லை”
மன்னனின் நெற்றியை முத்தமிட்டார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா. விடுதலையானார்கள் முஸ்லிம் கைதிகள்.
வெற்றிகரமாய் மதீனா திரும்பினார்கள் அனைவரும். கலீஃபா உமரிடம் நடந்தை விவரி்த்தார் அப்துல்லாஹ். அதைக் கேட்ட உமர், விடுதலையாகி வந்தவர்களைப் பார்த்தார். பெருமிதம் பொங்கியது அவருக்கு. “ஒவ்வொரு முஸ்லிமும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவின் நெற்றியை முத்தமிடக் கடமைப்பட்டிருக்கிறார். நான் அவர்களில் முந்திக் கொள்கிறேன்”
எழுந்து சென்று அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவின் நெற்றியை முத்தமிட்டார் அமீருல் மூஃமினீன் உமர். 
தோழர்கள் பலரின் வாழ்க்கையிலும் நாம் பொதுவாய்க் காணும் அம்சம் இது. நபியவர்களின் மேல் நம்பிக்கைக் கொண்டு, இஸ்லாத்தை ஏற்று, இறை நம்பிக்கைக் கொண்டு அடிபணிந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள் அவர்கள். அவர்களின் தினசரி வாழ்க்கை என்பது மிகவும் யதார்த்தமாகத்தான் கழிந்து சென்றிருக்கிறது. ஆனால் அவர்களின் உன்னதமெல்லாம் அவர்களின் உள்ளே எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதை உலகத்திற்கு வெளிச்சமிட்டு அறிவிக்க, சொல்லாமல் கொள்ளாமல், அல்லாஹ் சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தந்துவிடுகிறான் பாருங்கள்! அப்பொழுது பிரளயமாய் வெடித்துத் திறக்கிறது அவர்களது தியாகமும் மேன்மையும். தங்களுக்குரிய சிறப்பிடங்களை உறுதிப்படுத்தி வரலாற்றில் நிலைபெற்று விடுகிறார்கள் அவர்கள்.
பின்னர் முஸ்லிம்கள் ஒவ்வொருவராக வந்து முத்தமிட்டனர் - அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவை.
இரு பேரரசர்களை எதிர்கொண்டு, கொஞ்சங்கூட அஞ்சாமல் தீரத்துடன் உரையாடிய அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா, உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.