Wednesday, July 27, 2011

தாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அல் அன்ஸாரீ தோழர்கள் - 13


தாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அல் அன்ஸாரீ
ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ ‏
அன்று ஒரு முடிவுடன் எழுந்து நின்றார் அவர். அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் திருவிழாவை வேடிக்கை காணத் தயாராவதுபோல் பவுடர், சென்ட் அல்ல - இறந்த உடலைப் பாதுகாக்கும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டார். பிறகு தனது உடலைப் போர்த்திக் கொண்டார். இதுவும் சால்வையோ, அங்கவஸ்திரமோ அல்ல - இறந்த உடலை அடக்கம் செய்யப் போர்த்தும் உடை; கஃபன் உடை!
எதிரே போர்களம் ரணகளமாகிக் கிடந்தது. வாள்கள் உரசும் ஒலி, அது கிளப்பும் தீப்பொறி; பாயும் ஈட்டிகள், அம்புகள், இறந்து விழும் படைவீரர்கள்; துண்டாடப்பட்ட அங்கங்கள், உருண்டு விழும் தலைகள்; களமெங்கும் பரவிக் கிடந்த இரத்தம், போர்வீரர்களின் பேரிரைச்சல்.  படுஆக்ரோஷமுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது யுத்தம்.
அந்தக் கூட்டத்திற்குள் எதிரிப் படைகளை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து மூழ்கினார் அவர். ஒரே நோக்கம். வெற்றி!
ஒன்று எதிரிகளைக் கொன்றொழித்து போரில் வெற்றி! அல்லது வீர மரணம்! மறுவுலகின் நிச்சய வெற்றி!
மரணத்தை நோக்கி மரண அரிதாரம் பூசிக் கொண்டு ஓடிய அவர், தாபித் இப்னு கைஸ் அல் அன்ஸாரீ.
ரலியல்லாஹு அன்ஹு!
* * * * *
யத்ரிபில் வாழ்ந்த இரு பெரும் கோத்திரங்களின் பெயர் நினைவிருக்கிறதா? அஞ்ச வேண்டாம், தேர்வு நடத்தப் போவதில்லை, நினைவுகளைக் கிளறிக் கொள்ளும் கேள்வி மட்டுமே. அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்கோத்திரங்கள்தாம் அந்த இருபெரும் கோத்திரங்கள். அதில் கஸ்ரஜ் கோத்திரத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவர், யத்ரிப் நகரில் உள்ள உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர்தாம் தாபித் இப்னு கைஸ். நுண்ணறிவாளர். பிரமாதமான உள்ளுணர்வு இருந்தது அவருக்கு. எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருந்தது. நாவன்மை! அவருக்கு அசாத்திய நாவன்மை. அதனுடன் கம்பீரக் குரல் வேறு. அவர் பேச ஆரம்பித்தால் கூட்டம் அப்படியே வசப்பட்டு விடும். அத்தகையதொரு திறமை அவருக்கு இயற்கையாய் வாய்க்கப் பெற்றிருந்தது.
ஆனால் அவரையே மக்காவிலிருந்து வந்த ஒருவர் வென்றார். வெறும் வாய்ப்பேச்சினால் அல்ல. அவர் கொண்டு வந்த செய்தி அப்படி. வேறு யார்? முஸ்அப் இப்னு உமைர்தாம். அவர் வந்து யத்ரிப் நகர மக்களுக்கு குர்ஆன் போதிக்க ஆரம்பித்தாரே அதில் தனது இதயத்தை உடனே பறிகொடுத்தவர்களில் தாபித்தும் ஒருவர். முஸ்அப் (ரலி) வாயிலிருந்து வெளிவந்த குர்ஆன் வசனங்களை முதன்முறையாகக் கேட்ட மாத்திரத்திலேயே தாபித்தின் இதயம் அதற்கு அடிமையாகிவிட்டது. அந்த வசனங்களின் சந்தம், மனதையும் மூளையையும் ஒருங்கே பிசைந்தெடுக்கும் அதன் ஆழ்ந்த அர்த்தம், பொதிந்து கிடந்த அறிவுரைகள், திக்கற்ற மனிதனுக்கான வழிகாட்டுதல்கள், "தாகத்தில் தவிக்கும் நாவும் தொண்டையும் குளிர் நீரை ஹா... ஹா... வென்று அள்ளிப் பருகுவது போல்" பருக ஆரம்பித்தார் அவர். வறண்ட நிலம் நீரை ஏக்கத்துடன் ஈர்த்துக் கொள்வதைப்போல் அவரது இதயம் குர்ஆன் வசனங்களை உள்ளிழுத்துக் கொள்ள ஆரம்பித்தது.
அகலத் திறந்து கொண்ட அவரது மனதில் இஸ்லாம் ஆலமர வித்தாக வேரூன்றியது! நேற்றுவரை வெறும் தாபித் ஆக இருந்த அவர் "தோழர்" ஆனார்.
தாபித், ரலியல்லாஹு அன்ஹு!
ஆண்டுகள் இரண்டு கழிந்தன.
நபித்துவத்தின் 14ஆவது ஆண்டு. ரபீஉல் அவ்வல் 23ஆம் நாள் (23.09.622). இஸ்லாமிய வரலாற்றின் புதியதொரு அத்தியாயத்தின் முதல் நாள் அது. யத்ரிபில் இருந்த முஸ்லிம்கள் காத்துக் கிடந்தனர், ஏதோ பிரிந்த குழந்தையைத் திரும்ப அடைவதைப்போல. நகரம் விழாக்கோலத்தில் இருந்தது. எதற்கு?
சற்றேறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் பிரயாணம் ஒன்று துவங்கியிருந்தது. உலக வரலாற்றைப் புரட்டிப்போடும் பிரயாணம். ஹிஜ்ரத் எனும் அந்தப் பெரும்புலப்பெயர்வு, ஸஃபர் மாதம் 27இல் (12.09.622) தொடங்கியது. அன்றுதான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு மக்காவிலிருந்து யத்ரிப் நோக்கிக் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் இருவரையும் எதிர்பார்த்துதான், யத்ரிப் மக்கள் ஊருக்கு வெளியே சென்று, பாலை மணல்மேல் விழிவைத்துக் காத்திருந்தார்கள்.
நபி, தம் தோழருடன் யத்ரிபில் அடியெடுத்து வைக்க, யத்ரிப் மதீனாவானது.
ஆரவாரம், வரவேற்புப் பாட்டு, கோலாகலம்!
வரவேற்பில் பங்கு கொண்டது குதிரை வீரர்களின் படை ஒன்று. அதில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தவர் இருந்தார். தாபித்.
குதிரை வீரர்களின் குழுவினர் நபியவர்களை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வரவேற்றனர். முன்னால் வந்து நின்றார் தாபித். அந்தக் குழுவினருக்கு அவர்தான் பேச்சாளர், பிரதிநிதி. அல்லாஹ்வைப் புகழ்ந்தார், நபியவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பிறகு கூறினார்:
"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சத்தியப் பிரமாணம் அளிக்கிறோம். எங்களையும் எங்கள் குடும்பத்தவரையும்  குழந்தைகளையும் எப்படிக் காப்போமா அப்படி உங்களைக் காக்க உறுதிமொழி ஏற்கிறோம். இதற்காக எங்களுக்குக் கிடைக்கப்போகும் பிரதிபலன் என்ன?"
அகாபாவில் நிகழ்வுற்ற இரண்டாவது உடன்படிக்கையின்போது மதீனா நகரத்து மக்கள் நபியவர்களுக்கு அளித்த அதே உறுதிமொழி. இப்பொழுது மதீனாவில் அகாபாவில் பங்கு பெறாத இவர்கள் நபியவர்களிடம் நேரடியாகக் கூறினார்கள்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அன்று அகபாவில் அளித்த அதே பதிலைக் கூறினார்கள்: "அல்ஜன்னாஹ் - சொர்க்கம்!"
அந்த வார்த்தை, "அல்ஜன்னாஹ்" என்ற அந்த ஒற்றைச்சொல் - கண்கள் மலர்ந்தன, உள்ளங்கள் குளிர்ந்தன, முகத்தில் பேரொளி பிரகாசித்தது! "நாங்கள் திருப்தியுற்றோம் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் திருப்தியுற்றோம்!"
கண்ணுக்குப் புலப்படாத ஒன்று, யாரும் பார்த்திராத ஒன்று, அதுவரை அவர்கள் அறிந்திராத ஒன்று, அதுதான், அதுமட்டும்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது.
அரசில் பங்கோ, அமைச்சர் பதவியோ இத்தியாதிகளோ அல்ல!
அது போதும் எங்களுக்கு! என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள், உயிர் துறக்க வேண்டுமா இந்தாருங்கள்! என்று வரிசை கட்டி நின்றார்கள்; செய்தார்கள். அல்லாஹ்வின் திருநபி சொன்னதெல்லாம் செய்தார்கள். அவர் அதிருப்தியுற்றதையெல்லாம் தூக்கி எறிந்தார்கள்.  தூய உள்ளங்களின் சோலையொன்று உருவானது அங்கு.
தாபித் ரலியல்லாஹு அன்ஹுவின் தனித்திறம் நாவன்மை என்று பார்த்தோமல்லவா? அந்தத் திறமையை, சாகசத்தை இஸ்லாத்திற்குச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள் நபியவர்கள். இறைவனின் திருநபி என்ற வகையில் அவர்களிடம் அமைந்திருந்த அசாத்தியப் பல திறன்களில் ஒன்று "இவன் இது செய்வான்" என்று அறிந்த அதை, சரியான வகையில் முறையில் பயன்படுத்திக் கொள்வது.
அன்றிலிருந்து தாபித் இப்னு கைஸ் நபியவர்களின் பேச்சாளர் ஆகிப்போனார். மற்றொரு தோழர் இருந்தார், ஹஸ்ஸான் இப்னு தாபித். சிறப்பான கவிஞர். அவர் நபியவைக் கவிஞராகிப் போனார்.
இன்றும் நடைமுறையில் அரசியல் கட்சிகள் நட்சத்திரப் பேச்சாளர்கள்(!) என்பதாகச் சிலரை வைத்துக் கொள்கின்றன. அவர்களுக்குக் கட்சியின் ஊதுகுழல், பிரச்சாரப் பீரங்கி என்று என்னென்னவோ அடைமொழிகள், பட்டங்கள்! போஸ்டரில் விளம்பரங்களில் மின்னுவதைப் பார்க்கலாம். ஆனால் என்ன பிரச்சனையென்றால், கட்சிகள் நியமித்துள்ள அத்தகையவர்களுக்கு  மாற்றுக் கட்சியைத் தூற்றுவதே தொழிலாகவும் ஆபாசமும் நாராசரமுமாக மேடையில் பேசுவதே வாடிக்கையாகவும் ஆகிப்போக - கேட்கும் காதுகளில் இரத்தம் சொட்டாத குறை.
இவர் தோழர். வார்த்தைகள் இறையச்சத்தில் மூழ்கி எழுந்துவர வைரமாய்த்தான் மின்னினார், பார்ப்போம்!
* * * * * *
இறைபக்தியில் மிகைத்தவராய் உருவாகிக் கொண்டிருந்தார் தாபித். இறையச்சம் அவர் மனதில் மாபெரும் சக்தியுடன் புதைந்து கிடந்தது. அதனால் அல்லாஹ்வைக் கோபமூட்டும், அதிருப்தியூட்டும் எத்தகைய சிறு செயலாக இருந்தாலும் பெரும் விழிப்புடன் தவிர்த்துக் கொள்வதில் தவித்துக் கிடந்தார் அவர்
மதீனாவில் ஒருநாள்.
தாபித் இப்னு கைஸ் அளவற்ற வேதனையுடனும் துயருடனும் பயந்துபோயும் பயங்கரமானதொரு நிலையில் உள்ளதைக் கண்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மிகவும் வியப்படைந்தவர்கள், "என்னாயிற்று அபூ முஹம்மது?" என்று விசாரிக்க,
"நான் என்னுடைய மறுமை வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டேனோ என அஞ்சுகிறேன்" என்று பயத்துடன் பதில் வந்தது.
"ஏன்?"
"நாம் ஆற்றிய காரியங்களுக்கு புகழப்படவேண்டும் என்று விரும்புவதை, எல்லாம் வல்ல அல்லாஹ் தடுத்திருக்கிறான். நான் புகழப்படவேண்டும் எனும் விருப்பம் உடையவனாய் என்னை உணர்கிறேன். மேலும் அவன் வீண் தற்பெருமையைத் தடை செய்துள்ளான். எனக்குப் பகட்டில் விருப்பம் இருப்பதைக் காண்கிறேன்" என்றார் தாபித்.
தாபித்திடம் தருக்கோ, அற்பத் தன்மைகளோ இல்லை என்பதை நபியவர்கள் எடுத்துக் கூறினார்கள். தாபித்திற்கு ஆரம்பத்தில் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. இறுதியில் நபியவர்கள் கேட்டார்கள்,
"தாபித் நானொரு உறுதி சொல்கிறேன். அது உமக்கு மகிழ்வளிக்குமா? நீர் நலமே வாழ்வீர், அனைவராலும் போற்றப்படுவீர், வீர மரணம் எய்துவீர், சுவர்க்கம் புகுவீர்"
எத்தகைய தீர்க்கதரிசனம்? அதுவும் யாரிடமிருந்து? புனிதரின் வாயிலிருந்து தெறித்து விழுந்த சொற்களில் தாபித்தின் முகமெங்கும் மகிழ்ச்சி பரவி ஒளி வீசியது!
"நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக!"
"அதுதான் உமது வருங்காலம்"
யாருக்கும் மரணம் என்பது இனிய விஷயமல்ல. என்னதான் உலகில் பற்றற்று இருந்தாலும் அது மனிதனுக்கு வேதனையைக் கொண்டுவரும் நிகழ்வு. அதுவும் அந்த மரணத்தைப் போர்க்களத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்றால், உடல் ரணகளமாகும் என்பது உறுதி. ஆனால் அத்தகைய மரண நிகழ்வை தீர்க்கதரிசனமாக அறியவந்தால் குதூகலம் அடைகிறார்கள் அவர்கள். சந்தேகத்திற்கிடமின்றி உறுதியான செய்தியாக வரும்போது பேரானந்தம் அடைகிறார்கள். அத்தகைய மரணத்திற்காக வாழ்வை நேசித்துக் கிடந்தார்கள் அவர்கள்.
தெளிவடைந்தார் தாபித், ரலியல்லாஹு அன்ஹு!
* * * * *
பனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த குழுவொன்று நபியவர்களைச் சந்திக்க மதீனா வந்தது. அவர்களுடன் முஹம்மது நபி பேசிக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்குமாறு நபியவர்களிடம் பனூ தமீமினர் வேண்டிக் கொண்டனர். அப்பொழுது அபூபக்ரும் உமரும் அங்கிருந்தார்கள். அக்ரஃ பின் ஹாபிஸ் என்பவரைச் சுட்டிக் காட்டினார் அபூபக்ரு. உமரோ, கஅகாஉ இப்னு மஃபத் என்பவரைக் கைகாட்டினார். அது இருவரிடையிலும் இருந்த இணக்கத்தைக் குறைக்கும் விவாதமாக உருவாக ஆரம்பித்தது.
"நீங்கள் வேண்டுமென்றே எனது பரிந்துரையை மாற்ற நினைக்கிறீர்களா?" உமரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார் அபூபக்ரு.
"உங்களை மறுத்துப் பேசும் உள்நோக்கமெல்லாம் எனக்கில்லை" என்றார் உமர்.
மேன்மக்களுள் இருவர் தடுமாறிக் கீழே விழவிருந்ததாக வரலாறு அந்நிகழ்வைக் குறிக்கிறது.
நபியவர்கள் முன்னிலையிலேயே இருவரின் குரல்களும் உயர ஆரம்பித்துவிட்டன. தனக்கு உவப்பான இரு அடியார்களின் பிணக்கை அறுத்தெறிவதுபோல் ஒரு வசனத்தை அருளி எச்சரித்தான் இறைவன். அது குர்ஆனில் அல்-ஹுஜுராத் எனும் 49ஆவது அத்தியாயத்தின் இரண்டாவது வசனமாகப் பதிவாகியுள்ளது.
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நபியின் குரலொலிக்குக் கூடுதலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப்போல், அவரெதிரில் இரைந்து போசாதீர்கள், நீங்கள் இதை உணர்ந்து கொள்ளாவிடின் உங்கள் நற்செயல்களின் நன்மைகள் அழிந்து போகும்"
செவியுற்றார்களே இருவரும், அவ்வளவுதான். அதன் பிறகு முஹம்மது நபியிடம் பேசும் போதெல்லாம்உமரின் குரல் மிக மிகத் தாழ்மையுடன் அமிழ்ந்து போய், அவர் சொல்வதை மறுமுறை சொல்லச் சொல்லி விளங்கிக்கொள்ள வேண்டியதாகிப் போனது நபியவர்களுக்கு.
இந்த இறைவசனத்தால், தான் தாக்கப்பட்டதாக நினைத்து மருகிய மூன்றாமவரும் உண்டு.
இது நிகழ்வுற்ற சில நாட்களுக்குப்பின் தாபித்திடம் திடீரென ஒரு மாறுதல் நிகழ்வுற்றது. யாரிடமும் கலக்காமல் தனித்திருக்க ஆரம்பித்தார். தனது உயிரைவிட அதிகமாய்ப் பாசம் வைத்திருந்த நபியவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டார். வீட்டில் அடைந்து கொண்டு வெளியில் வருவதே இல்லை. தொழுகைக்கு பாங்கு சொல்கிறார்களா, சென்று தொழுதுவிட்டு விரைந்து வந்து வீட்டில் அடைந்து கொண்டார். சில நாட்கள் கழிந்தன. தாபித் தென்படாததைக் கவனித்துவிட்ட நபியவர்கள், "எங்கே தாபித்? யாராவது சென்று விசாரித்து வாருங்களேன்" என்றதும் அன்ஸாரித் தோழர் ஒருவர் விரைந்தார்.
சென்று பார்த்தால், மிகவும் சோர்ந்து போய், குனிந்த தலையுடன் இருண்டு கிடந்தார் தாபித். வந்திருந்த அன்ஸாரித் தோழருக்குக் குழப்பம். ஒருவேளை உடல்நலம் சரியில்லையோ?
"என்ன செய்தி? தங்களுக்கு என்ன ஆயிற்று அபூ முஹம்மது?" என்று விசாரித்தார்.
"படுமோசமான செய்தி" என்று பதில் வந்தது.
"என்ன அது?"
களைப்பாய் அந்த அன்ஸாரித் தோழரை நிமிர்ந்து பார்த்தவர், "உங்களுக்கே தெரியும், எனக்கு இயல்பிலேயே உரத்த குரலென்று. நபியவர்களுடன் நானிருக்கும்போது அவர்களது உரையாடலை எனது குரல் அமிழ்த்தி விடுகிறது. இப்படியிருக்க, நீங்களும் கேட்டீர்களில்லையா அல்லாஹ் என்ன வசனத்தை இறக்கியிருக்கிறான் என்று? போச்சு, எல்லாம் போச்சு. எத்தனை தடவை அல்லாஹ்வின் தூதருடைய குரலைவிட என் குரல் உயர்த்திப் பேசியிருக்கிறேன்! என்னுடைய நற்காரியங்களெல்லாம் வீணாகிப்போய், அழிந்தேன். நரக நெருப்பிற்குரிய மக்களில் ஒருவனாகி விட்டேன் நான்"
ஒற்றை வசனத்தின் அச்சுறுத்தலில் இடிந்து நொறுங்கிப் போனார்கள் அந்த மேன்மக்கள். எச்சரிக்கை செய்யும் எத்தனை வசனங்களையும் எத்தனை முறை ஓதினாலும் பாறையில் வழிந்தோடும் எண்ணெயைப் போலல்லவா நமது மனங்கள் சலனமற்றுக் கிடக்கின்றன?
விரைந்து திரும்பினார் அந்த அன்ஸாரித் தோழர். முஹம்மது நபியைச் சந்தித்து, தாபித்தைத் தான் கண்ட கோலத்தையும் அவர் சொன்னதையும் தெரிவித்தார். அதைக் கேட்டு அன்பும் அக்கறையுமாய்த் தம் தோழருக்கு மெய்ச்செய்தி ஒன்று பதிலாக அனுப்பினார்கள் முஹம்மது நபி (ஸல்).
"நீங்கள் மீண்டும் அவரிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள், 'நீர் நரகவாசியல்ல. ஆனால்சொர்க்கவாசிகளுள் ஒருவர்' என்று"
அந்தச் செய்தி வந்தடைந்து தாபித்தை. அதற்குப் பின்தான் அவருக்கு உற்சாகமான இயல்பு நிலை திரும்பியது.
பத்ரு யுத்தத்தைத் தவிர, நபியவர்களுடன் அனைத்துப் போர்களிலும் தாபித் இடம் பெற்றிருந்தார். பிரமாதமான வீரர். அன்றைய போர்களில் யுத்தம் ஆரம்பிப்பதற்குமுன் இரு தரப்பிலிருந்தும் சிலர் களத்தில் இறங்கி மற்போர் புரிவர். மற்போர் என்றால் விளையாட்டல்ல; வெற்றி, அல்லது மரணம். மிகவும் கடுமையான மற்போர்களிலெல்லாம் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் தாபித். அப்பொழுதெல்லாம் அவர் காத்திருந்த வீரமரணம் வாய்க்கவில்லை.
அது சிறப்பான ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தது.
* * * * *
மக்கா வெற்றியை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) வரலாற்றில் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அதன்பின் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா திரும்பியிருந்தார்கள். முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரம் அரேபிய தீபகற்பத்தில் பரந்து விரியத் தொடங்கி இருந்தது. மக்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருந்த ஸகாத் வரியையும் முஸ்லிமல்லாதவர்கள் அளிக்க வேண்டிய 'கரஜ்' எனும் காப்பு வரியையும் திரட்டுவதற்குத் தன் தோழர்களை நியமித்துப் பல திசைகளுக்கும் அனுப்பி வைத்தார்கள் நபியவர்கள்.
கிளம்பிச் சென்றார்கள் அவர்கள். அந்தந்த கோத்திரத்தினரும் அவர்களை வரவேற்று, தாங்கள் இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வரியை மனமுவந்து அளித்துப் பெருமிதமாகத்தான் நடந்து கொண்டார்கள் - பனூ தமீம் கோத்திரத்தின் ஒரு பிரிவினரைத் தவிர.
பனூ தமீம் கோத்திரத்தினர் இருந்த பகுதிக்கு உயைனா இப்னு ஹிஸ்ன் அல்-ஃபஸாரீ ரலியல்லாஹு அன்ஹுதான் வரி திரட்ட அனுப்பப்பட்டிருந்த அதிகாரி. அவர் அங்கிருந்த அக்கம்பக்கத்துப் பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, பனூ தமீமின் கிளைக் கோத்திரமான பனூ அல்-அன்பாரைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து குதித்தார்கள். அம்புகள், வாள்கள் என்று போருக்கான ஆயத்தத்துடன் முன்னேறி, உயைனாவை நெருக்கித்தள்ளி அப்பகுதியிலிருந்து விரட்டி விட்டனர்.
வரியாவது மண்ணாவது, அதெல்லாம் எதுவும் தரமுடியாது, என்ற போக்கிரித்தனம். அப்பட்டமான எதிர்ப்பு.
விரைந்து மதீனா திரும்பிய உயைனா, முஹம்மது நபியிடம் செய்தியைத் தெரிவிக்க, நபியவர்கள் மிக உடனே ஐம்பது வீரர்கள் கொண்ட படையை உயைனா தலைமையில் அனுப்பி வைத்தார்கள்.
உயைனா தலைமையில் கிளம்பி வந்த படை, பகலில் பதுங்கியும் இரவில் முன்னேறியும் பனூ அல்-அன்பார் கோத்திரத்தினர்மீது திடீர்த்தாக்குதல் நடத்தியது. சுதாரிக்க விடவில்லை அவர்களை. கிடுகிடுவென்று தாக்குதல் நிகழ்த்தி, ஆண்கள், பெண்கள், பாலகர்கள் என்று 62 பேரைக் கைப்பற்றினர். அவர்களது  செல்வமும் கைப்பற்றப்பட்டது. மதீனா கொண்டுவரப்பட்ட போர்க்கைதிகள் ரம்லா பின்த் அல்-ஹாரிதின் இல்லத்தில் தங்கவைக்கப் பட்டனர்.
பனூ தமீம் கோத்திரத்தினருள் ஒரு பகுதியினர் நீண்ட நாட்களுக்கு முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். நபியவர்களுடன் இணைந்து மக்கா, ஹுனைன் போர்களிலும் கலந்து கொண்டவர்கள் அவர்கள். ஆனால் மற்றொரு பகுதியினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இந்த பனூ தமீம் முஸ்லிம்களுக்கு, பனூ அல்-அன்பாரைச் சேர்ந்த தங்களுடைய உறவினர்கள் செய்த  துர்ச்செயலும் அதன் பின்விளைவும் தெரியவந்தன. உடனே தங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெரும்புள்ளிகள் அடங்கிய குழுவொன்றை மதீனாவிற்கு அனுப்பி வைத்தனர்.
அந்தக் குழு மதீனா வந்து, மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குள் சென்று, "பனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் வந்திருக்கிறோம். கைப்பற்றப்பட்ட எங்கள் மக்கள் சம்பந்தமாய்ப் பேசவேண்டும். எங்கே முஹம்மது நபி? வந்து பேசச் சொல்லுங்கள்" என்று பகட்டாரவாரம் செய்ய, நபியவர்களுக்குச் செய்தி எட்டியது. வெளியே வந்த அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, லுஹர் நேரம் நேரம் வந்தது. நபியவர்கள் கிளம்பி மக்களுக்குத் தொழவைத்து முடித்தார்கள். ஸுஃப்பாவில் வந்து அமர்ந்தார்கள். அதன் பிறகே அந்தக் குழுவினர் அவர்களிடம் விரிவாய்ப் பேச முடிந்தது.
தங்களது கோத்திரத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம் படைகளுடன் இணைந்து நட்புறவுடன் போரிட்டதையும், அரபிகள் மத்தியில் தங்களது கோத்திரத்திற்கு உள்ள மரியாதையையும் பெருமதிப்பையும் எடுத்துக் கூறி, "எங்களது பேச்சாளரும் கவிஞரும் அவர்களது பேச்சுத் திறன், கவி வல்லமை கொண்டு உங்களது பேச்சாளர் மற்றும் கவிஞருடன் போட்டியிட வந்துள்ளனர். அனுமதி தாருங்கள்".
பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, அதில் தங்களது சுயபெருமை, கீர்த்தி உரைத்தல் இதெல்லாம் அரபியரின் கலாச்சாரத்தில் ஒரு மேட்டிமையாகக் கருதப்பட்ட கால கட்டம்.
ஒரு புன்னகையுடன் அதற்கு நபியவர்கள் அனுமதி அளிக்க, வந்திருந்த குழுவினர் சார்பாய் அவர்களது தலைசிறந்த பேச்சாளர் உத்தரித் இப்னு ஹாஜிப் எழுந்து நின்றார். "எங்கள் அந்தஸ்தென்ன, பெருமையென்ன, கீர்த்தியென்ன" என்று அவர்களது குலத்தின் அருமை பெருமை பேசும் ஒரே பளபளா பேச்சு. பனூ தமீம் குலத்து மேன்மை, சாதனைகள் எல்லாம் சிறப்பான சொல்லாடலில் பட்டியலிடப்பட்டன. புரியும்படி சுருக்கமாய்ச் சொல்வதென்றால் உறுப்பினரோ, அமைச்சரோ, சட்டசபையில் தன் தலைவரைப் பற்றியும் அரசைப் பற்றியும் அடுக்கடுக்காய் எடுத்துவிடுவாரே அதைப்போல.
பனூ தமீம் குழு புளகாங்கிதத்துடன் பார்க்க, பெருமையுடன் தனது பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்தார் உத்தரித்.
"தாபித்! எழுந்து நின்று அவர்களுக்கு பதிலளியுங்கள்" என்றார்கள் முஹம்மது நபி.
ஆரம்பித்தார் தாபித்.
"புகழனைத்தும் அல்லாஹ்விற்கே. அனைத்து வானங்களும் பூமியும் அவன் படைத்தவை ஆகும். அவை அனைத்திலும் அவன் நாடியதே நடக்கும். அவனுடைய அரியாசனம் அவனது அறிவின் விரிவாக்கம். அவனுடைய கருணையின்றி எதுவுமே நிலைத்திருப்பதில்லை"
"அவன் தன்னுடைய அதிகாரத்தைக் கொண்டு எங்களைத் தலைவர்களாக ஆக்கினான். அவனுடைய படைப்பில் மிகச் சிறந்தவரை தன்னுடைய தூதராகத் தேர்ந்தெடுத்தான். அவர் பெருமதிப்பிற்குரிய பரம்பரையைச் சேர்ந்தவர். மிகவும் நம்பகமானவர். வார்த்தைகளில் உண்மையானவர். செயல்களில் சிறப்பானவர். அவன் அவருக்கு ஒரு வேதத்தை அருளினான், தன்னுடைய படைப்பினங்களுக்கு அவரைத் தலைவராக்கினான். அனைத்துப் படைப்பினங்களுள்ளும் அவர் அவனுடைய நல்லாசிக்கு உள்ளானவர்"
"அந்தப் படைத்தவன்மேல் நம்பிக்கைக் கொள்ளும்படி அவர் அழைப்பு விடுத்தார். அவருடைய மக்களிலிருந்து மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து இங்குக் குடியேறி வந்தார்களே, அவர்களும் பெருமதிப்புடைய அவருடைய உறவினர்களில் சிலரும் நற்காரியங்கள் புரிவதில் சிறப்பானவர்களும் அவர்மேல் நம்பிக்கைக் கொண்டார்கள். அதன் பிறகு, நாங்கள் அன்ஸார்கள் (உதவியாளர்கள்) அவருடைய அழைப்பிற்குச் செவிமடுத்தோம். ஆகவே நாங்கள் இறைவனின் உதவியாளர்கள். அவனுடைய தூதரின் அமைச்சர்கள்"
சுருங்கக் கூறின், "எல்லாம் இருக்கட்டும். எதுவுமே சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும்முன் ஒன்றுமேயில்லை" என்று அப்படியே எதிரணியின் வாயை அடைத்துவிடும் பேச்சு. அவ்வளவுதான்.
அடுத்து அல் ஸப்ரகான் இப்னு பத்ரு எனும் தமீம்குலக்  கவிஞன் எழுந்து கவிதை பாடினான்.
தாபித் இப்னு கைஸை எப்படிச் சிறப்புப் பேச்சாளராகத் தேர்ந்து வைத்திருந்தார்களோ அதேபோல் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) எனும் தோழரைக் கவிஞராகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள் முஹம்மது நபி. அல் ஸப்ரகான் அமர்ந்ததும் ஹஸ்ஸான் எழுந்து, தன் கவித் திறவுகோலைக் கொண்டு மெதுவாகத் திறக்கத் தொடங்கி, சபையினரின் உள்ளங்களை இறுதியில் கட்டிப் போட்டார்.
போட்டி முடிந்தது!
பனூ தமீம் குழுவினருள் அமர்ந்திருந்த அல் அக்ரஃ பின் ஹாபிஸ் என்பவர் எழுந்து, "நான் சத்தியமிட்டுச் சொல்கிறேன்! இந்த முஹம்மது வெற்றியுறப் போகிறார். அவருடைய பேச்சாளர் நாவன்மை மிகைத்தவராய் உள்ளார். அவருடைய கவிஞர், நம் கவியை விஞ்சியிருக்கிறார். சந்தேகமேயில்லாமல் முஸ்லிம்களின் குரல் நம்மைவிட ஓங்கியிருக்கிறது!"
தோற்றுப்போன அணிக்குப் பரிசு வழங்கப் பட்டது. பிணையக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் வந்திருந்த தமீம் குலத்தவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
* * * * *
மீண்டும் முஸைலமா. அப்பாத் பின் பிஷ்ரு (ரலி) வரலாற்றில் நாம் சந்தித்த யமாமா போர்க் களம். தாபித் பின் கைஸும் அன்ஸார்கள் படைப்பிரிவின் ஒரு தலைவர். அபூ ஹுதைஃபாவினால் விடுவிக்கப்பெற்ற ஸாலிம் எனும் தோழர் முஹாஜிரீன் படைப் பிரிவின் தலைவர். காலித் பின் வலீத் அனைத்துப் படைப்பிரிவுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த தலைமைத் தளபதி. அந்தப் போர் எத்தகைய கடினமான சூழ்நிலையை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியிருந்தது, எத்தகைய வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதையும் அப்பாதின் வரலாற்றில் பார்த்தோம்.
எதிரிகளின் கை சற்று ஓங்கியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் நிலைமை மோசமடைந்து எதிரிப்படைகள் தாக்கி முன்னேறிக் கொண்டே தலைமைத் தளபதி காலித் பின் வலீதின் முகாம்வரை வந்து, அவரது கூடாரத்தைக் கிழித்து, அவருடைய மனைவி உம்மு தமீமைக் கொன்று விடும் நிலைகூட ஏற்பட்டுவிட்டது.
புதிதாய் இஸ்லாத்தில் நுழைந்திருந்த பாலைநில பதுவூ அரபிகளும் தோழர்களுடன் இணைந்து போர் புரிந்து கொண்டிருந்தனர். பதுவூ அரபியரின் ஒற்றுமையற்ற பக்குவமற்ற போக்கு, முஸைலமாவின் படைவீரர்களின் கைஓங்க உதவி புரிந்துவிட்டது. இவ்விதம் நிகழ்வுற்றப் போரில் பல தலைசிறந்த தோழர்கள் வீரமரணம் தழுவினர்.
முஸ்லிம்கள் வலுவிழந்து விட்டதாகத்  தோன்றியது தாபித்திற்கு.  முஸ்லிம் படைப் பிரிவுகள் ஒருவரை ஒருவர் குறைகூறுவதும் ஒருவர் மற்றவர்மேல் குற்றம் சுமத்துவதும் கண்டு, அவரால் பொறுக்க இயலவில்லை.
எழுந்து நின்று அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் இறந்த உடலின் மீது பூசும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டவர் பிறகு தனது உடலை போர்த்திக் கொண்டார். இறந்த உடலை அடக்கம் செய்யப் போர்த்தும் கஃபன் உடை!
அனைவரையும் நோக்கி கணீரென்ற தனது உரத்தக் குரலில் முழங்க ஆரம்பித்தார்.
"முஸ்லிம்களே! நான் சொல்வதைக் கேளுங்கள்! நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து போரிட்டிருக்கிறோம். ஆனால் இப்படியெல்லாம் இல்லை. வெட்கக்கேடு! உங்களது ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாத போர்முறை உங்களது எதிரிக்குத் துணிச்சலையும் உற்சாகத்தையும்தான் அளித்திருக்கிறது. வெட்கக்கேடு! அவர்களுடைய தாக்குதலுக்கு அடிபணிந்து கிடக்கிறீர்கள்!
"எதிரிகளிடமிருந்து தீயபழக்கத்தைக் கற்றுக் கொள்ளாதீர்கள்; அது மோசமானது. உங்கள் தோழர்களுக்கு ஒரு கெட்ட உதாரணமாக நீங்கள் ஆகிவிடாதீர்கள்"
பின்னர் வானத்தை நோக்கி இறைஞ்சினார், "யா அல்லாஹ்! பொய்யனை நபியென்று நம்பிக்கிடக்கும் இந்த எதிரிகளுக்கும் எனக்கும் சம்பந்தமற்றவனாக உன் எதிரில் நிற்கின்றேன். இந்த முஸ்லிம்களின் தவறுகளை விட்டு விலகி விட்டவனாக உன்னிடம் வருகிறேன்"
அவ்வளவு தான். மரணத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்.
மறுபுறமோ அப்பாத் பின் பிஷ்ருவின் உணர்ச்சிகரமான அழைப்பைக் கேட்டு அன்ஸாரிகள் குழுமிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இணைந்தார் தாபித்.
எதிரே ரணகளமாகிக் கிடந்த போர்களம். வாள்கள் உரசும் ஒலி, அது கிளப்பும் தீப்பொறி; பாயும் ஈட்டிகள், அம்புகள், இறந்து விழும் படைவீரர்கள்; துண்டாடப்பட்ட அங்கங்கள், உருண்டு விழும் தலைகள்; களமெங்கும் பரவிக் கிடந்த இரத்தம், வீரர்களின் போர் முழக்கம். படு ஆக்ரோஷமுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது யுத்தம்.
அந்தக் கூட்டத்திற்குள் எதிரிப் படைகளை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து மூழ்கினார் தாபித்.
அவருடன் அப்பொழுது இணைந்திருந்த மற்ற தோழர்கள், அல் பர்ரா இப்னு மாலிக், உமர் கத்தாபின் சகோதரர் ஸைத் இப்னு கத்தாப், அபூ ஹுதைஃபாவினால் விடுவிக்கப்பெற்ற ஸாலிம் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர். அவர்களுடன் சிங்கம்போல் களத்தில் புகுந்து சரமாரியாக எதிரிகளைத் தாக்க ஆரம்பித்தார் தாபித். அவருடைய மூர்க்கமான தாக்குதலும் அதில் எதிரிகள் சாய்ந்து விழும் வேகமும் கண்ட முஸ்லிம் படைகளுக்குத் தீப்பற்றியது. துணிச்சலையும் வீரத்தையும் அவர்களுக்கு அது அள்ளிக் கொட்டியது. படு மூர்க்கமுடன் எதிரிகள்மீது பாய ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். அப்பொழுதுதான் எதிரிப் படைகளுக்கு அச்சம் சூழ ஆரம்பித்தது. போர் திசை திரும்பியது. ஆக்ரோஷமாய் எதிரிகளை “மரணத் தோட்டத்திற்குள்” விரட்டிச் சென்றது முஸ்லிம்கள் படை.
நாலாபுறமும் சுழன்று சுழன்று போரிட்டுக் கொண்டிருந்தார் தாபித். ஆயுதங்கள் சுழன்று கொண்டிருந்தன. எதிரிகளைத் தாக்கி முஸ்லிம் படைகள் முழுவெறியுடன் முன்னேறிக் கொண்டிருந்தன. கொளுத்தும் வெயிலில் களத்தில் நெருப்பு பறந்து கொண்டிருந்தது. தாபித்தின் உடலெங்கும் சகட்டுமேனிக்கு விழுப்புண்கள். பெருக்கெடுத்தோடும் குருதி, வழிந்தோடும் வியர்வையுடன் வெற்றிக்கு வித்திட்டுவிட்டு வீரமரணம் எய்தினார் தாபித் இப்னு கைஸ்.
நபியவர்களின் தீர்க்கதரிசனம் அன்று யமாமாவில் முழுதாய் நிறைவேறியது. மரணம் பெருமிதம் கொண்டது! பின்னே? அதை அரவணைக்க, உடையுடுத்தி ஒப்பனையிட்டு ஓடியவராயிற்றே அவர்!
ரலியல்லாஹு அன்ஹு!
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.
Thank s By
http://www.satyamargam.com

No comments:

Post a Comment