- தோழர்கள் |
செவ்வாய், 17 ஆகஸ்டு 2010 13:50 |
Thank s By
http://www.satyamargam.com
عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் பாடவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் குர்ஆன், ஹதீஸ் இன்னபிற இஸ்லாமிய சம்பந்தமான வகுப்புகள் பள்ளிவாசலில் நடைபெற, மக்கள் கலந்து கொண்டு ஞானம் கற்றுக் கொள்வார்கள். விண்ணப்பம், நேர்முகத் தேர்வு, சம்பந்தமற்ற நன்கொடைகள் என்று எதுவுமில்லாத உண்மையான பல்கலை அது. ஆசான்களாகத் திகழ்ந்தவர்களும் பண்பட்ட தோழர்கள்; அமர்ந்து கற்றுக் கொண்டவர்களும் ஞானத்தாகத்தால் உந்தப்பட்டவர்கள். இஸ்லாம் ஒரு சம்பிரதாயமாக அல்லாமல் வாழ்வும், நெறியுமாக அப்படித்தான் படித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். அந்தக் குழுவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் இருந்தார். அனைவரும் அவரிடம் அன்பும் மரியாதையும் நெருக்கமுமாக இருப்பதை, வகுப்பில் அமர்ந்திருந்த ஃகைஸ் பின் உபாத் கவனித்தார். அழகிய, அற்புதமான, முற்றிலும் கவனத்தைக் கவரக்கூடிய உரையொன்றை அந்தப் பெரியவர் நிகழ்த்த, மக்கள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். ஃகைஸையும் அந்த ஆழ்ந்த உரை மிகக் கவர்ந்தது. நிகழ்வு முடிந்து பெரியவர் விடைபெற்றுச் சென்றார். கூட்டத்தில் சிலர் அவரைப் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டனர். "யாரேனும் சுவனவாசி ஒருவரைப் பார்க்க வேண்டுமா? அதோ அந்தப் பெரியவரை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" மிகவும் ஆச்சரியமடைந்தார் ஃகைஸ்! அந்தப் பெரியவர் யாரென்று அவருக்குத் தெரியவில்லை. அதனால் விசாரித்தார். "யார் அவர்?" "அவர் பெயர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம்" சுவனவாசி என்று தீர்க்கமாகப் பேசிக் கொள்கிறார்கள்! அப்படியென்ன அவரிடம் விசேஷம்? ஆவல் மிகுந்தது ஃகைஸிற்கு. மேலும் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. உடனே அவரைப் பின்தொடர ஆரம்பித்தார். அந்தப் பெரியவரின் இல்லம் மதீனாவிற்கு வெளியே அமைந்திருந்தது. பெரியவர் மெதுவாக நடந்து தன் இல்லத்தை அடைய, பின்தொடர்ந்து அவரது வீட்டிற்கே வந்துவிட்டார் ஃகைஸ். "நான் உள்ளே வந்து தங்களைச் சந்திக்க அனுமதியளிக்க முடியுமா?" வெளியிலிருந்து ஃகைஸ் கேட்டார். யார், எவர் என்று கேட்டுக்கொண்டு அனுமதியளிக்கப்பட்டது. "என்ன வேண்டும் மகனே?" என்று அன்புடன் விசாரித்தார் அப்துல்லாஹ். "தாங்கள் பள்ளிவாசலிலிருந்து வெளியேறியதும், மக்கள் உங்களைப் பற்றிப் பேசுவதைச் செவியுற்றேன். 'யாரேனும் சுவனவாசி ஒருவரைப் பார்க்க வேண்டுமா? அதோ அந்தப் பெரியவரை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று உங்களைக் காண்பித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதனால் நான் உங்களைப் பின்தொடர ஆரம்பித்தேன். என்ன காரணத்தினால் மக்கள் தங்களைப் பற்றி அப்படிச் சொல்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறேன்" என்று உண்மையை மறைக்காமல் தான் வந்த நோக்கத்தை அப்படியே விவரித்தார் ஃகைஸ். பெருமையோ, புளகாங்கிதமோ, ஆனந்தமோ எதுவுமே இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்த அந்தப் பெரியவர், நிதானமாகக் கூறினார், "மகனே! சொர்க்கத்திற்குள் நுழையப் போவது யார் என்பது அல்லாஹ் ஒருவனுக்குத்தான் தெரியும்" "ஆம். அதை நான் உணர்கிறேன். ஆனால் மக்கள் தங்களைப் பற்றி அப்படிச் சொல்கிறார்கள் என்றால் அதற்கு வலுவானதொரு காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதனால்தான் தங்களிடமே அதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வந்தேன்" "வேண்டுமானால் கனவொன்று சொல்கிறேன் கேள்" என்றார் அவர். அப்துல்லாஹ் இப்னு ஸலாம். ரலியல்லாஹு அன்ஹு. அந்தக் கனவை அவர் ஆரம்பிப்பதற்குமுன் அப்படியே நாம் சற்றுப் பின்னோக்கி நகர்ந்து வேறு சில சங்கதிகளைப் பார்த்துவிட்டு வந்துவிடுவோம். * * * * * யத்ரிபில் கணிசமான யூதர்கள் குடியிருந்து வந்தனர். அந்த மண்ணின் பூர்வகுடிகளான அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் மக்களுக்கு மத்தியில் எங்கெங்கிருந்தோ வந்து யூதர்கள் குடியேறியதற்கு ஒரு காரணம் இருந்தது. மிக வலுவான காரணம். அந்த மண்ணுக்குத்தான் நபியொருவர் வந்துசேரப் போகிறார் என்று அப்பொழுது அவர்களிடம் இருந்த வேதநூல் தவ்ராத் குறிப்புக் கொடுத்திருந்தது. அதன் அடிப்படையில் அங்கு வந்து தங்கி அவருக்காகக் காத்திருந்து சில தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருந்தனர் அவர்கள். அரபுக் குடிகளாகிய அவ்ஸ், கஸ்ரஜ் மக்களெல்லாம் சிலை வணக்கத்தில் மூழ்கிப் போயிருக்க, வேதம் அருளப்பெற்ற மக்களான யூதர்கள் அந்தப் பெருமையையே ஒரு மூலதனமாக ஆக்கிக் கொண்டு, அரபுக் குலததினர் மத்தியில் சிண்டு முடிந்துவிட்டுப் போர் பகையாளிகளாக்கி, தங்களது மேட்டிமையை நிலைநிறுத்தி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் அந்த யூதர்கள் மத்தியில் மிகவும் உள்ளார்ந்த இறைபக்தியுள்ள யூத மார்க்க அறிஞர்களும் இருக்கத்தான் செய்தனர். அவர்களில் அல்ஹுஸொய்ன் இப்னு ஸலாம் என்பவரும் ஒருவர். மெத்தப்படித்த அறிஞர் அவர். அதனால் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல மதிப்பும் செல்வாக்கும் இருந்தது. யூதர்களும் சரி, அரபுகளும் சரி, மற்றவர்களும் சரி அவரிடம் மிகவும் கண்ணியத்துடன் பழகிக் கொண்டிருந்தனர். அவருடைய பக்தி, நேர்மையான நடத்தை, எளிய நடைமுறையெல்லாம் அவருக்கு நல்ல புகழைப் பெற்றுத் தந்திருந்தது. அல்ஹுஸொய்ன் சாந்தமான, அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். அதேநேரத்தில் அவரது வாழ்வு பெரியதொரு குறிக்கோளுடன் நகர்ந்து கொண்டிருந்தது. நேரப் பங்கீட்டுத் திட்டத்திற்கான பட்டப் படிப்பெல்லாம் இல்லாத அந்தக் காலத்திலேயே தனது நேரத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார் அவர். ஒரு பகுதியில் தனது பேரீச்சந்தோட்டத்தில் விவசாயம் செய்வது. வாழ்வதாரத்திற்கு அதுதான் அவரது தொழில். அடுத்த பகுதியில் இறைவழிபாட்டில் ஈடுபடுவதும் யூத வழிபாட்டுக் கூடத்தில் மக்களுக்குச் சமய போதனை ஆற்றுவதுமான செயல்கள். மற்றொரு பகுதியில் தனது வேத நூலான தவ்ராத்தைப் படிப்பது. தெளிவான திட்டமிட்ட வாழ்க்கை. தவ்ராத்தைப் படிப்பார் என்றால் சம்பிரதாயமாக அல்ல; மேலோட்டமாய் ஓதுவதல்ல; அதில் மூழ்கி விடுவார். ஆழ்ந்து ஊன்றிப் படிப்பதுதான் அவரது வழமையாகியிருந்தது. மக்காவில் திருநபி ஒருவர் அவதரிக்கப் போகிறார், முந்தைய நபிமார்களின் செய்திகளையெல்லாம் பூர்த்தி செய்ய வருவார், அவரே இறுதி நபி என்று தவ்ராத் விவரிக்கும் பகுதிகளையும் வசனங்களையும் வாசிக்கும்போது அப்படியே அவரது மனம் சிந்தனையில் மூழ்கிவிடும். அவதரிக்க இருக்கும் நபியின் தோற்றம் எப்படி இருக்கும்; அவரை மக்கள் எப்படிக் கண்டுணர முடியும்; மற்ற அடையாளங்கள் யாவை? பலமான யோசனையாலும் அதில் விளைந்த கவலையாலும் அதைப் பற்றி அதிகமதிகம் தகவல்கள் திரட்ட ஆரம்பித்தார் அல்ஹுஸொய்ன். அவரது வேதத்தில் மற்றொரு தகவல் இருந்தது. 'தான் பிறந்த ஊரிலிருந்து அந்த நபி யத்ரிப் வந்தடைவார்'. இந்த வாசகங்களைக் காணும்போது அவரது உள்ளம் மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பிக்கும். நீண்டநாள் பிரிந்திருக்கும் மனைவியிடமிருந்து வந்த கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பதைப்போல் அந்த வேதப் பகுதியை மீண்டும் படித்துப் பார்ப்பார் அல்ஹுஸொய்ன். அப்படி அந்தத் திருநபி யத்ரிப் வரும்போது அவரைச் சந்திக்கும் பாக்கியம் அமையவும், தான் முதல் ஆளாக அவரிடம் நம்பிக்கை தெரிவிக்கவும், அதற்குரிய ஆயுளை இறைவன் தந்தருள வேண்டுமே என்ற கவலையும் அவரைச் சூழும். அதற்காக மிகவும் பிரார்த்திக்க ஆரம்பித்தது அவரது மனது. பிரார்த்தனை வீணாகவில்லை. பிரமாதமாக நிறைவேறியது. அந்த நாளும் வந்து சேர்ந்தது. அல்ஹுஸொய்னின் அந்த அனுபவத்தை வரலாறு அவரது வார்த்தைகளிலேயே பதிவு செய்து வைத்துள்ளது. மக்காவில் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோன்றிய செய்தி பரவி விரவி ஒருநாள் யத்ரிப் வந்தடைந்தது. அது அல்ஹுஸொய்னின் காதையும் எட்டியது. வந்துவிட்டாரா? அவர்தாமா? உண்மையா அல்லது யாரேனும் பொய்யுரைக்கிறார்களா? உடனே மிகக் கவனமாய்த் தகவல்களைத் திரட்டி அவற்றை ஆராய ஆரம்பித்தார் அல்ஹுஸொய்ன். திருநபியின் பெயர், வமிசாவளி, குணாதிசயம், எங்கு எப்பொழுது எப்படி மக்களை அவர் அல்லாஹ்வின்பால் அழைக்க ஆரம்பித்தார் என்ற தகவல்களெல்லாம் திரட்ட ஆரம்பித்தார். அவற்றையெல்லாம் தமது வேதநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாளங்களுடன் ஒப்பீடு செய்து பார்த்தபோது - தெரிந்துவிட்டது. தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. "மிக நிச்சயமாக இறைவனால் வாக்களிக்கப்பட்ட அவரேதான் இவர்" ஆனால் அல்ஹுஸொய்ன் தனது தீர்மானத்தை மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டாரே தவிர, அவரைச் சார்ந்த மற்ற யூத அறிஞர்களிடமோ, மதகுருக்களிடமோ வெளியிடவில்லை. அவர்தம் மக்களை அவர் மிகவும் அறிந்திருந்ததால் மனதில் பெரியதொரு தயக்கம் இருந்தது. அந்தத் தயக்கம் பொய்யாகவில்லை. குபா எனும் சிற்றூர் மதீனா நகருக்கு வெளியே சற்றேறக்குறைய மூன்றேகால் கி.மீ. தொலைவில் உள்ளது. மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட நபிகள் நாயகம் குபாவை அடைந்ததும் முதலில் அங்குதான் தங்கினார்கள். ஏறக்குறைய 20 நாட்கள் அங்குத் தங்கியிருந்துவிட்டு, பின்னரே யத்ரிப் நகருக்குப் புறப்பட்டதாய் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அப்படி அவர்கள் குபாவில் தங்கியிருக்கும்போது அவர்கள் வந்தடைந்த செய்தியை ஒருவர் யத்ரிப் நகரத் தெருக்களில் அறிவித்துக் கொண்டே ஓடினார். அந்த நேரம் அல்ஹுஸொய்ன் பேரீச்ச மரத்தின்மேலே மராமத்து வேலைகளைக் கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். கீழே அவரின் அத்தை காலிதா பின்த் அல்-ஹாரித் அமர்ந்திருந்தார். இறைநபி வருகை பற்றிய அறிவிப்பைக் கேட்டவுடன் மரத்தின் மேலிருந்த அல்ஹுஸொய்ன் மகிழ்ச்சியில் அலறினார் - "அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!" அதைச் செவியுற்ற அவரின் அத்தை காலிதா பின்த் அல்-ஹாரித்திற்கு மிகவும் எரிச்சல் ஏற்பட்டது. "எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறாய். மூஸா நபி (அலை) அவர்களே இப்பொழுது இங்கு வந்தால்கூட நீ இந்தளவு உற்சாகமடைவாயா என்று தெரியவில்லையே!" "நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் மேல் ஆணையாகச் சொல்கிறேன். இவர் மூஸாவின் சகோதரர். அவர் எடுத்துரைத்த அதே மார்க்கத்தையும் இறை நம்பிக்கையையும்தான் இவரும் எடுத்துரைக்க வந்திருக்கிறார்" என்று தானறிந்த உண்மையை உவகையுடன் எடுத்துரைத்தார் அல்ஹுஸொய்ன். சிறிது நேரம் அமைதியாக இருந்த அவருடைய அத்தை, "தனக்கு முன்னால் அருளப்பெற்றதை நிறைவேற்றுவதற்கும் தன்னுடைய இறைவனின் தூதுச் செய்தியைப் பூர்த்தி செய்வதற்கும் ஒருவர் வரப்போகிறார் என்று நீ அடிக்கடி கூறிக் கொண்டிருப்பாயே, அவர்தாமா இவர்?" "ஆம்!, அவரேதாம்!" "இருக்கட்டும், பார்ப்போம்" என்று ஒருவிதமான இசைவான பதில் வந்தது காலிதாவிடமிருந்து. உடனே குபாவிற்குக் கிளம்பினார் அல்ஹுஸொய்ன். அதிவிரைவு வாகனப் போக்குவரத்து எதுவும் இல்லாத அக்காலக் கட்டத்தில் மூன்றரை கிலோமீட்டர் என்றாலும் அதுவும் ஒரு கணிசமான தொலைவுதான். முஹம்மது நபியைச் சந்தித்துவிட வேண்டுமென்ற பெரும் ஆவல் அவருக்கு. எத்தனை வருடக் காத்திருப்பு? எத்தனை தலைமுறைக் காத்திருப்பு? அதற்குமேல் ஆறப் பொறுக்க முடியாது. இதோ விரைந்து எட்டும் தொலைவிற்கு வந்துவிட்டார். உடனே சென்று சந்திக்க வேண்டியதுதான். அதைவிட தலைபோகும் விஷயம் என்ன இருக்கிறது? அங்குச் சென்று பார்த்தால் அதிகஅளவு மக்கள் குழுமியிருந்தனர். நபியவர்களைத் தரிசிக்கக் கூட்டம் நிறைந்திருந்தது. முண்டியடித்துக் கொண்டு எப்படியோ முன்னேறி திருநபியை நெருங்கிவிட்டார் அல்ஹுஸொய்ன். நபியவர்கள் மக்களுக்கு உபதேசம் நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அதில் அல்ஹுஸொய்ன் காதில் விழுந்த முதல் வாக்கியங்கள்: "மக்களே! ஒருவருக்கொருவர் 'ஸலாம்' (சாந்தி) பகர்ந்து கொள்ளுங்கள். பசித்திருப்பவர்களுக்கு உணவளியுங்கள். மற்றவர்கள் உறங்கும் இரவு நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாகச் சுவர்க்கம் புகுவீர்கள்" எளிமையான அறிவுரை. எளிதில் பின்பற்றத் தக்க அறிவுரை. இந்த மிக எளிய மூன்று அறிவுரைகளையும் நாமெல்லாம் எந்தளவு முழுமையாகப் பின்பற்றுகிறோம்? அதுவும் முகம், மனம் நோகாமல் பின்பற்றுகிறோம்? ஒவ்வொன்றிற்கும் ஆயிரத்தெட்டு சட்டம் பேசி மிகவும் அலுப்படைந்தல்லவா கிடக்கின்றன நமது மனங்கள்! ஆழ்ந்து ஆராயும் பார்வையுடன் நபியவர்களை நோட்டமிட்டார் அல்ஹுஸொய்ன். என்னவொரு தேஜஸ்! பொய்யுரைக்கக் கூடியவரின் முகமில்லை இது! முதல் முறையாகத்தான் பார்க்கிறார். இருப்பினும் தன் சொந்தப் பிள்ளைகளைப்போல் அவரை அடையாளம் தெரிந்தது. திருப்தியுற்றது அவரது மனது. அவரேதாம். சத்தியமாக அவரேதாம். மேலும் நபியவர்களை நெருங்கி, சாட்சி பகர்ந்தார் அல்ஹுஸொய்ன். "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. முஹம்மது அவனுடைய தூதராவார்" அவரை நோக்கித் திரும்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஒருவரைப் பார்க்க வேண்டுமானால் வெறும் முகம் மட்டும் திருப்பிப் பாராமல் முழுவதுமாகத் திரும்பி அவருடன் உரையாடுவதே முஹம்மது நபியின் பழக்கமாகும். எந்தவொரு விஷயத்திலும் அலட்சியம் கிடையாது. அனைவருக்கும் பூரண மதிப்பும் மரியாதையும் அளிக்கும் குணம். "உமது பெயர் என்ன?" என்று வினவினார்கள். "அல்ஹுஸொய்ன் இப்னு ஸலாம்" "இல்லை! உமது பெயர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம்" என்று புதிதாய்ப் பெயரிட்டார்கள் நபியவர்கள். காரணம் இருந்தது. அல்ஹுஸொய்ன் என்றால் "குதிரைக்குட்டி" என்று அர்த்தமாம். இழிசொல்லாக உபயோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது அது. அவரை இறைவனின் அடிமை எனக் கண்ணியப்படுத்தும் புதுப் பெயர் அளிக்கப்பட்டது. "ஆம், இனி நான் அப்துல்லாஹ் இப்னு ஸலாம்! தங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீது ஆணையாகக் கூறுகிறேன், இன்றிலிருந்து நான் வேறு எந்தப் பெயரிலும் அழைக்கப்படுவதை விரும்பமாட்டேன்!" மட்டற்ற மகிழ்ச்சியுடன் கூறினார் அப்துல்லாஹ் இப்னு ஸலாம், ரலியல்லாஹு அன்ஹு! விரைந்து வீடு திரும்பினார் அப்துல்லாஹ். தன் மனைவி, பிள்ளைகள், நெருங்கிய உறவினர்களையெல்லாம் அழைத்தார். எத்தகைய தரிசனம்? அதுவும் யாருடன் சந்திப்பு? என்னதொரு அனுபவம் அது? நடந்ததையெல்லாம் விவரித்து, தான் அறிந்துணர்ந்த உண்மையைக் கூறி, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்புவிடுத்தார் அப்துல்லாஹ். ஏற்றுக் கொண்டார்கள் அவர்கள். அப்துல்லாஹ்வின் அறிவின்மீதும், அவர் உண்மை உரைக்கக்கூடியவர் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது. அனைவரும் முஸ்லிம்களானார்கள். அப்பொழுது அவருடைய அத்தை காலிதா மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி. "வயசான காலத்தில் எனக்கெதற்குப்பா அதெல்லாம்? நான் இப்படியே காலத்தைக் கழித்துவிடுகிறேனே" என்றெல்லாம் தட்டிக் கழிக்கவில்லை. சத்தியம் சரியாகவே அவரது மனதைத் தட்டியது. மறுமையைப் பற்றிய தெளிவான பயம் அவரிடம் இருந்தது. அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் தன் இன யூதமக்களைப் பற்றிய உள்ளுணர்வொன்று அப்துல்லாஹ்வை எச்சரித்துக் கொண்டே இருந்தது. எனவே தன் மக்களிடம், "நாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதைத் தற்சமயம் ரகசியமாகவே வைத்திருப்பது நல்லது. தகுந்த தருணம் வரும், சொல்கிறேன், அப்பொழுது பகிரங்கப்படுத்திக் கொள்வோம்" அனைவரும் அவரது அறிவுரையை ஏற்றுக் கொண்டார்கள். பிறகு ஒருநாள் முஹம்மது நபியைச் சென்று சந்தித்தார் அப்துல்லாஹ் இப்னு ஸலாம். "அல்லாஹ்வின் தூதரே! என் இன மக்களில் பெரும்பாலானோர் உண்மைமையைப் புறந்தள்ளிவிட்டு பொய்யில் புரள்கின்றனர். தங்களிடம் ஒரு வேண்டுகோள். யூதர்களின் தலைவர்களைத் தாங்கள் அழையுங்கள். அவர்கள் வரும்போது நான் ஓர் அறையில் மறைந்து கொள்கிறேன். நான் முஸ்லிமாகிவிட்டேன் என்று முன்னமேயே தெரிந்துவிட்டால் என்னை அவர்கள் தூஷிப்பார்கள், நான் குற்றம் குறையுள்ளவன் என்று பிதற்றுவார்கள், அனைத்து அவதூறும் கற்பிப்பார்கள். ஆகவே நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட செய்தியை அவர்களிடம் தெரிவிக்காமல் என்னுடைய நடத்தையைப் பற்றியும் குணத்தைப் பற்றியும் அவர்களிடம் விசாரியுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுங்கள்" அதன்படி யூதர்களின் தலைவர்கள் சிலரை வரவழைத்தார்கள் முஹம்மது நபி. அப்துல்லாஹ் ஓர் அறையில் மறைந்து கொண்டார். யூதத் தலைவர்கள் வந்து சேர்ந்ததும் நபியவர்கள் அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவர்களுடைய வேத நூல்களில் இறுதி நபியான தான் அவதரிக்கப் போவதன் தீர்க்கதரிசனம் உள்ளவற்றையெல்லாம் எடுத்துக் கூறினார்கள். ஆனால் அவர்கள் போலியான, உண்மைக்குப் புறம்பான வாதங்கள் செய்து குழப்பம்தான் தோற்றுவித்தார்களே தவிர, தர்க்க ரீதியான வாதத்திற்குக் கட்டுப்படவில்லை. நீண்டு தொடர்ந்த உரையாடலுக்குப்பின் அதற்கு மேலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை குறைந்து போனது நபியவர்களுக்கு. அப்பொழுதுதான் அவர்கள் அப்துல்லாஹ்வைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள். "அல்ஹுஸொய்ன் இப்னு ஸலாம் பற்றிய உங்களுடைய அபிப்ராயம் என்ன?" "அவர் எங்களுடைய தலைவர். ஒரு தலைவருடைய மகன். ஒரு மிகச் சிறந்த அறிஞர். ஒரு மிகச் சிறந்த அறிஞருடைய மகன்" என்றார்கள் அவர்கள். மிகையில்லாத உண்மை அது. அவரும் சரி, அவரது தந்தையும் சரி சிறந்தவர்களாய்த் திகழ்ந்து கொண்டிருந்தார்கள். "அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் நீங்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வீர்களா?" அதிர்ச்சியில் குதித்தார்கள் அவர்கள். "இறைவன் காப்பாற்றட்டும்! அவர் அப்படிச் செய்யவே மாட்டார். அத்தகைய தீங்கிலிருந்து அல்லாஹ் அவரைக் காத்தருள்வானாக!" அந்த நேரத்தில் மறைவிலிருந்து வெளியே வந்தார் அப்துல்லாஹ். "எனதன்பு மக்களே! அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள். முஹம்மதை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன், இவர் அல்லாஹ்வின் தூதர் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இவரது பெயரும் விளக்கமும் வருணனையும் தங்கள் வசம் உள்ள தவ்ராத்தின் பக்கங்களில் உள்ளன. இவர் அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு நான் சாட்சி பகர்கிறேன், இவர் மீதும் இவர் சொல்வதன் மீதும் நம்பிக்கைக் கொள்கிறேன். இவரைத் தெளிவாய் நான் அடையாளம் காண்கிறேன்" அவர்தம் மக்களிடம் நற்பேறு பெற்ற அறிஞர்தாமே அவர்? அவரே முஹம்மது நபியைப் பற்றி ஒரு கருத்து தெரிவித்தால் அவர் இன மக்களுக்கு அது உத்தரவாதமான ஒரு வார்த்தையாகத்தானே இருந்திருக்க வேண்டும்? ஆனால், துவேஷம்தான் கண்ணை மறைத்தது யூதர்களுக்கு. "பொய்யன் நீ!" என்று ஆக்ரோஷத்துடன் எதிர்க்குரல் கிளம்பியது. "நீ கீழ்த்தரமானவன். கீழ்த்தரமானக் குடும்பத்தில் பிறந்தவன். நீ சரியான அறிவில்லாதவன். அறிவில் குறைந்த குடும்பத்தில் பிறந்தவன்.." என்று சகட்டுமேனிக்கு தூஷிக்க ஆரம்பித்து விட்டார்கள். சற்றுமுன் - சில விநாடிகளுக்கு முன்வரை அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருந்தவர்கள், அப்படியே தலைகீழாக மாறி, சகிக்க இயலாத அவதூறு வார்த்தைகளைச் சகட்டு மேனிக்குப் பொழிய ஆரம்பித்தனர். எல்லாம் நமக்குப் பரிச்சயமான அரசியல் காட்சி போலத்தான். கட்சி மாறியதும் அதுவரை புகழ்ந்தவரை இகழ்வதும், இகழ்ந்தவரைப் புகழ்வதும் பார்த்திருக்கிறோம். ஆனால், இது அதையும் மிகைத்திருந்தது. காட்சி மாறவில்லை, நேரம் மாறவில்லை. அங்கேயே, அக்கணமேயே அப்படியே தலைகீழாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள் அந்த யூதர்கள்! "நான் அப்பொழுதே சொன்னேனில்லையா. அவர்களில் பெரும்பாலானவர்கள் விசுவாசமற்றவர்கள். வெட்கங்கெட்டவர்கள், நம்பிக்கைத் துரோகம் இழைப்பவர்கள். தாங்களே நேரில் அதைக்கண்டு கொண்டீர்கள்" என்று முஹம்மது நபியிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அப்துல்லாஹ். அல்லாஹ்வும் தனது வசனத்திலேயே அதை வெளிப்படுத்தியுள்ளான். "முன்மறை வழங்கப் பெற்றவர்கள், (பெற்றெடுத்தப்)பிள்ளைகளைத் தாம் அறிவதைப் போல் (உம்மை, இம்மறையை, இலக்கு மாற்றத்தைப் பற்றிய) உண்மைகளை அறிவார்கள். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், திண்ணமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்" (சூரா அல்-பகரா 2:146). அது என்னவோ, யூதர்களிடம் அப்படியொரு இனவெறி இருந்தது. பின்னர் எந்தவொரு இணக்கமான திட்டத்திற்கும் உடன்படாமல் மதீனாவில் கெட்டழிந்துப் போனார்கள். நல்லவர்களும் சிலர் இருந்தார்கள். அவர்களுக்கு உண்மை கண்ணை மறைக்கவில்லை. முஸ்லிம்களாகி, தலைமுறை தலைமுறைகளாகக் காத்திருந்தவரைப் பெற்றுப் பெரும்பேறு பெற்றனர். அதன்பின், யூத அறிஞராக இருந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் இப்பொழுது பேரார்வமுள்ள இஸ்லாமிய மாணவனாகிப் போனார். முந்தைய தோழர்கள் வரலாற்றில் நாம் கண்டதுபோல் இவரும் முஹம்மது நபியிடமிருந்து ஊற்றெடுத்துக் கொண்டிருந்த ஞானத்தை அள்ளி அள்ளிப் பருக ஆரம்பித்துவிட்டார். குர்ஆன் அவரது மூச்சாகிப் போனது. தொடர்ந்து வாசிப்பது, அதன் கருத்தை ஆழ்ந்து யோசிப்பது, உள்வாங்குவது என்றாகிப் போனது அவரது வாழ்க்கை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மேல் அவரது நெஞ்சத்தில் ஆழமான பாசம் பரவிக் கலந்தது. நபியவர்களிடம் மிகவும் ஒன்றிப்போய் நெருங்கி நெருங்கி ஒரு நிழல் போலவே ஆகிப்போனார். நற்காரியங்களில் மிகைத்து, சொர்க்கம் புகவேண்டும் என்பதுதான் அவரது தலையாய நோக்கமாய் மாறிப் போனது. அந்நிலையில்தான் நபியவர்கள் அந்த நற்செய்தியை அவருக்கு உறுதிப்படுத்தினார்கள். * * * * * "மகனே! சொர்க்கத்திற்குள் நுழையப் போவது யார் என்பது அல்லாஹ் ஒருவனுக்குத்தான் தெரியும். வேண்டுமானால் கனவொன்று சொல்கிறேன் கேள்" என்று கூற ஆரம்பித்தார் அப்துல்லாஹ் இப்னு ஸலாம். "தயவுசெய்து சொல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ஏராளமான வெகுமதி அளிப்பானாக" என்றார் ஃகைஸ். "ஒருநாள் இரவு நான் கனவொன்று கண்டேன். அதில் ஒரு மனிதர் என்னிடம் வந்து என்னை எழுந்திருக்கச் சொன்னார். நான் எழுந்ததும் அவர் எனது கரத்தைப் பிடித்து அழைத்துச் சென்றார். நாங்கள் நடந்து செல்ல, ஒரு பாதை இடப்புறம் பிரிவதைக் கண்டேன். நான் அதில் செல்ல விழைய, அந்த மனிதர், 'இந்தப் பாதையில் செல்' என்று வேறொரு பாதையில் என்னை அழைத்துச் சென்றார்" "நான் பின்தொடர்ந்தேன். அது மிகப் பசுமையான, பரந்த விசாலமான ஒரு தோட்டத்திற்கு இட்டுச் சென்றது. அந்தத் தோட்டம் குளிர்ந்த காற்றுடன், புத்துணர்ச்சியளித்தது. தாவரங்களெல்லாம் வளர்ந்து பிரமாதமாகத் திகழ்ந்தது. அதன் நடுவே வானை எட்டுமளவு நெடிய இரும்புக் கம்பம் ஒன்று இருந்தது. அதன் உச்சியில் தங்கத்தினாலான வளையம் இருந்தது. அந்த மனிதர் என்னை அந்தக் கம்பத்தில் ஏறச் சொன்னார்". நான், "என்னால் முடியாது" என்றேன். "திடீரென்று எங்கிருந்தோ ஓர் அடிமை வந்து தோன்றினான். அவன் என்னைத் தூக்கி உதவ, நான் கம்பத்தின் மீது சரசரவென்று ஏறி உச்சியை அடைந்துவிட்டேன். அந்த வளையத்தை எனது கரங்களால் பற்றிக் கொண்டு தொங்க ஆரம்பித்தேன். பிறகு காலையில் கண் விழித்ததும் நபியவர்களிடம் சென்று எனது கனவை விவரித்தேன். அவர்கள் அதன் பொருள் எனக்குரைத்தார்கள்". "நீர் இடப்புறம் கண்ட பாதை இடது சாராருக்கு உரியது. அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள். வலப்புறம் கண்ட பாதை வலது சாராருக்கானது. அவர்கள் சொர்க்கத்திற்குரியவர்கள். உமது உள்ளத்தைக் கவர்ந்த தோட்டமும் பசுமையும் புத்துணர்வும் இஸ்லாமிய மார்க்கமாகும். தோட்டத்தின் நடுவில் நீர் கண்ட கம்பம் தொழுகையாகும். அதன் உச்சியில் இருந்த வளையம் உறுதியான ஈமான் - இறை நம்பிக்கையாகும். தங்களது வாழ்நாள் முழுவதும் அதை உறுதியுடன் பற்றிப்பிடித்துக் கொண்டிருப்பவர்களுள் ஒருவராக நீர் திகழ்வீர்". அந்தக் கனவின் அர்த்தம் ஃகைஸிற்குப் புரிந்தது. சொர்க்கமும், நரகமும் நம்மைப் போல் அவர்களுக்கு நுனிநாக்கு சமாச்சாரமல்ல. அவை குர்ஆன் வசனங்களின் தாக்கத்தினாலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விவரிப்பினாலும் மனதுள் ஆழ வேரூன்றிய ஒன்று. அதற்காக மாய்ந்து மாய்ந்து உழைக்கிறார்கள். அத்தகைய சிலருக்கு நபியவர்களின் தீர்க்கதரிசனமும் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி அறிய நேர்ந்தால், அவர்தாம் வாழ்க்கையில் வெற்றியடைந்த மனிதர், அவரே நமக்குச் சிறந்த முன்னுதாரணம் என்று மற்றவர்கள் அவரைத் தேடி ஓடுகிறார்கள், ஆராய்கிறார்கள். ஆனால், வாக்களிக்கப்பட்டவரோ, அந்தச் சத்திய வாக்குறுதியில் அகமகிழ்ந்து பெருமையில் மூழ்கிவிடாமல், பயபக்தியுடன் மிச்ச வாழ்நாளை வாழ்ந்து முடிக்கிறார். இம்மையிலும் புகழடைந்து மறுமையிலும் இறைவனுக்கு உவப்பானவராக பரிணமிக்கிறார். நபியவர்களுக்குப் பிறகு நீண்ட நாள் குன்றாப் புகழுடன் வாழ்ந்திருந்து மிக முதிய வயதில் ஹிஜ்ரீ 43இல் மரணமடைந்தார் அப்துல்லாஹ் இப்னு ஸலாம். ரலியல்லாஹு அன்ஹு! இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ். |
No comments:
Post a Comment