- தோழர்கள் |
திங்கள், 28 ஜூன் 2010 15:02 |
Thank s By
http://www.satyamargam.com
عباد بن بشر மதீனா நகரம். ஒருநாள் இரவுநேரத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் இல்லத்தில் பின்னிரவுத் தொழுகை தொழுது கொண்டிருந்தார்கள். அது மஸ்ஜிதுந் நபவீயை ஒட்டிய வீடு. கதவைத் திறந்து நுழைந்தால் பள்ளிவாசல். அங்கிருந்து மிக இனிமையான குரலில் குர்ஆன் ஓதும் ஒலி மிதந்து வந்தது. இனிமையாக, மிக இனிமையாக, நபியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) கொண்டு வந்து அளித்ததைப் போன்று, தூய்மையாய், துல்லியமாய் குர்ஆன் ஓதும் ஓசை அது. தனது தொழுகை முடிந்ததும், அன்னை ஆயிஷாவிடம் நபியவர்கள், "ஆயிஷா, அது அப்பாத் பின் பிஷ்ருடைய குரலா?" என்று விசாரித்தார்கள். "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" மிகவும் புளகாங்கிதமடைந்த நபியவர்கள் இறைஞ்சினார்கள், "யா அல்லாஹ்! அவரது அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பாயாக!" அதைவிட வேறென்ன வேண்டும் ஒருவருக்கு? எத்தகைய பிரார்த்தனை, எத்தகைய மாமனிதரிமிருந்து! இது மட்டுமல்ல. ஒருமுறை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, "மூன்று அன்ஸார்கள் உள்ளனர். அவர்களது தரம் ஒப்பற்றது. அவர்கள் ஸஅத் பின் முஆத், உஸைத் பின் அல்ஹுதைர் மற்றும் அப்பாத் பின் பிஷ்ரு" என்று கூறினார்கள். அத்தகைய நற்பேறு, நற்சான்று பெற்றவர் அப்பாத் பின் பிஷ்ரு, ரலியல்லாஹு அன்ஹு. முதல் அகபா உடன்படிக்கையைத் தொடர்ந்து, "முஸ்அப் இப்னு உமைர் எனும் தம் தோழரை நபியவர்கள் யத்ரிபிற்கு பிரச்சாரத்திற்காக அனுப்பி வைத்தார்கள், மதீனாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது", என்றுஹபீப் பின் ஸைத் வரலாற்றில் பார்த்தோம். முஸ்அப் (ரலி), யத்ரிப்(மதீனா) வந்தபோது அப்பாத் பின் பிஷ்ரு சிறுவர். ஏறக்குறைய பதினைந்து வயதுதான் இருக்கும். வயதிற்கேற்ற துடிப்பு, கபடமற்ற குணம், புத்துணர்வு எல்லாம் அமைந்திருந்த ஒரு விறுவிறுப்பான சிறுவர் அவர். முஸ்அப் யத்ரிபில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்க, ஒருநாள் அப்பாத் அவரைச் சந்தித்தார். முஸ்அப் பிரமாதமாகக் குர்ஆன் ஓதக் கூடியவர். அழகிய குரலில் குர்ஆனை ஓதி, மக்களுக்கு இஸ்லாத்தை அறிவிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இஸ்லாத்தின்பால் மக்களை அழைக்க அவர்கள் உபயோகித்தது குர்ஆன். அதுதான் பிரதானமான பிரச்சார சாதனம் அவர்களுக்கு. இறைவனின் வார்த்தைகளைவிட உயர்ந்தது வேறென்ன இருக்க முடியும்? குர்ஆன் எனும் அந்த அதிசயம் அவர்களைக் கவர்ந்தது. சிறுவர் அப்பாதும் அப்படியே கவர்ந்து இழுக்கப்பட்டார். நெஞ்சை மட்டும் அல்ல, அப்பாதின் ஆழ்மனதின் கருவறையைத் தட்டி எழுப்பியது அது. முஸ்அப்பின் அழகிய குரலில் வெளிவந்த குர்ஆன் வாசகங்கள், மனதை அடித்துப் புரட்டிப் போடும் அதன் கருத்து, எல்லாமாய்ச் சேர்ந்து அல்லாஹ்வின் மீதும் அவனது வார்த்தைகளின் மீதும் அளவிலாத பக்தியிலும், பற்றிலும் விழுந்து விட்டார் அப்பாத். தவிர இருவரிடமும் அமைந்திருந்த நற்பண்பும் நற்குணங்களும், இருவரின் மனங்களையும் ஒரேகோட்டில் ஒன்றிணைத்து மிகவும் அன்னியோன்யமாகிவிட்டனர். பின்னர் நபிகள் நாயகம் யத்ரிப் குடிபுகுந்து, மதீனாவில் இஸ்லாம் பிரகாசமாய்ப் பரவ ஆரம்பித்தது. குர்ஆன் கற்றார் அப்பாத். காலையோ, மாலையோ; ஓய்வோ, அலுவலோ; ஓதினார், ஓதிக் கொண்டே இருந்தார். எந்த அளவென்றால் தோழர்கள் மத்தியில் அவர் ஓர் இமாமாக அடையாளம் காணப்படுமளவு. அவரை, 'குர்ஆனின் தோழன்' என்றார்கள் தோழர்கள். வெறும் முகத்துதி இல்லை அது. அதை மனதில் இறுத்திப் பார்த்தால் 'குர்ஆனின் தோழன்' எனும் பட்டத்தின் உயரம் புரியும். அதைப் பெற்றார் அப்பாத். சரி, இத்தனையும் அவர் பெற்றது முதுமையடைந்தா? முதுமையடையும் அளவிற்கு அப்பாதின் ஆயுளில் அவகாசமெல்லாம் இருக்கவில்லை. எல்லாம் இளமையில், மிக இளமையில். இது இங்ஙனமிருக்க, ஹிஜ்ரீ நான்காம் ஆண்டு. யூதர்களின் கோத்திரமான பனூ அந்-நதீர் (بنو النظير), பிரச்சினை அப்பொழுதுதான் முடிவடைந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. செய்தி ஒன்று வந்து சேர்ந்தது நபியவர்களுக்கு. நஜ்து மாகாணத்தில் கத்தஃபான் கோத்திரத்தின் பிரிவினர் - முஹாரிப், ஃதஅலபா எனும் இரு அரபு குலத்தினர் இருந்தனர். இவர்களுக்கு மதீனாவில் முஸ்லிம்கள் பலமடைந்து வருவது ஒருவித ஆத்திரத்தை, கோபத்தை தோற்றுவித்தது. அதென்ன இஸ்லாம் என்று புதிய அமைப்பு, அரசாங்கம்? போய் ஒருகை பார்த்துவிடுவோம் என்று மதீனாவைத் தாக்கப் படை திரட்ட ஆரம்பித்தனர். இந்தச் செய்தி வந்துசேர, நபிகள் நாயகம் உடனே ஆலோசனை நிகழ்த்தினார்கள். மதீனாவரை எதிரிப் படைகள் வந்து தாக்க வாய்ப்பளிக்காமல் முன்னேறிச் சென்று எதிரிகளை அவர்களது தளத்திலேயே சந்திக்க முடிவெடுக்கப்பட்டது. உடனே ஆயத்தமானார்கள் முஹம்மது நபி. 700 வீரர்கள் கொண்ட படை ஒன்று புத்துணர்ச்சியுடன் தயாரானது. உதுமான் பின் அஃப்ஃபான் ரலியல்லாஹு அன்ஹுவை மதீனாவின் நிர்வாகப் பிரதிநிதியாக்கி விட்டு, படை நஜ்து நோக்கிக் கிளம்பியது. மதீனாவிலிருந்து நஜ்து வெகுதொலைவிலிருந்த பகுதி. கடினமான நிலப்பரப்பை நடந்தே கடக்க வேண்டிய நிலை முஸ்லிம்களுக்கு. உளத் திடத்தை, ஈமானை நன்கு சோதிக்கும் படையெடுப்பு அது. முஸ்லிம் வீரர்களுக்கு சரியான காலணிகளும் இல்லை, அனைவருக்கும் போதிய சவாரி வசதியும் இல்லை. ஆறு பேருக்கு ஓர் ஓட்டகம் என்ற நிலை. முறைவைத்துதான் தோழர்கள் சவாரி செய்தார்கள். நடந்து நடந்து பாதங்கள் தேய்ந்து அபூ மூஸா(ரலி)வின், கால் நகங்களே விழுந்து விட்டன. அனைவருக்கும் கடுமையான வலி, காயம். அதற்கெல்லாம் அசரவில்லை அவர்கள். கிழிந்த துணிகளைக் கால்களில் கட்டிக் கொண்டார்கள். தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். அதனால் 'தாத்துர் ரிகாஉ - ஒட்டுத் துணிப்போர்' என்று இந்தப் படையெடுப்பிற்கு வரலாற்றில் பெயரே ஏற்பட்டு விட்டது. பாலையில், கோடையில், பாறையில் - எதற்கு இந்த வலி? எதற்கு இந்த பிரயத்தனம்? நபி! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர் சொல்கிறாரா? போதும். அவர் வாக்கு வேத வாக்கு. அவ்வளவுதான். வேறெந்த அசௌகரியமும் அவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. செய்து முடிக்க வேண்டும். அதில் செத்து மடிந்தாலும் சரியே! அப்படித்தான் அவர்கள் இஸ்லாத்தைப் புரிந்து கொண்டிருந்தார்கள், வாழ்ந்தார்கள், இறந்தார்கள். நம்முடைய நிகழ்காலமோ அக்காலத்தில் கனவில்கூட காண இயலாத சௌகரியத்தையும் சொகுசையும் விரல் நுனிக்கே கொண்டு வந்திருக்க, மார்க்கம் என்பது சம்பிரதாயமான அடையாளமாக மட்டுமே இன்று நம்முள் எஞ்சி நிற்கிறது. நடந்து, விரைந்து கத்தஃபான் கோத்திரத்தினரது நக்லா எனும் பிராந்தியத்தை வந்து அடைந்தது முஸ்லிம்களின் படை. முஸ்லிம்கள் படையெடுத்து வருவது தெரியாது இருக்குமா என்ன அவர்களுக்கு? செய்தியறிந்த அவர்கள் தங்களின் பெண்களை எல்லாம் விட்டுவிட்டு, மலைக் குன்றுகளுக்கு ஏறி ஓடிவிட்டிருந்தனர். முஸ்லிம்களின் படை வந்தடைந்ததும் மெதுவாய் அவர்களிலிருந்து ஒரு கூட்டம் இறங்கி வந்து எதிர் தரப்பில் தயாரானது. அவர்களும் போர் தொடங்கவில்லை, முஸ்லிம்களும் தொடங்கவில்லை. அஸ்ருத் தொழுகை நேரம் நெருங்கி விட்டிருந்தது. எதிரிகள் தாக்கக்கூடும் என்ற நிலை இருக்கும்போது அனைவரும் ஒரே நேரத்தில் தொழுகையில் ஈடுபட இயலாது என்ற நிலை. இங்கு இந்தப் படையெடுப்பில்தான் போர்க் காலங்களிலும், அச்சமான தருணங்களிலும் தொழக்கூடிய தொழுகை முறை "ஸலாத்துல் கவ்ஃப்" அறிமுகமானது. ஒருபாதிப் படையினர் காவல் காக்க, மறுபாதிப் படையினர் தொழுகையின் முற்பகுதியில் கலந்து கொண்டு தொழுது முடிக்க, பின்னர் இவர்கள் காவல் காக்க முதல்பாதிப் படையினர் தொழுகையின் பிற்பகுதியில் கலந்து கொண்டு தொழுது முடித்தனர். முஸ்லிம்களின் படையினரைவிட எதிரிகள் தரப்பில் கூடுதல் ஆள்பலம் இருந்ததுதான். ஆனாலும் அவர்கள் போரில் இறங்கவில்லை. திகைப்பு இருந்தது அவர்களுக்கு. நபியவர்களைப் பற்றியும் முஸ்லிம்களின் வீரமும் வெற்றியும் கேள்விபட்டிருந்தார்களா? நாம் சென்று தாக்கலாம் என்று நினைத்தால் அவர்களே நம் வாசலில் வந்து நின்று கொண்டு சவால் விடுகிறார்களே என்ற அச்சம் மிகுத்து விட்டது. அது, அந்த அச்சம், அதை அப்படியே சாதகமாக்கிக் கொண்டு மேற்கொண்டு போர் நிகழ்த்தாமல் மதீனா திரும்பினார்கள் முஹம்மது நபி. மீண்டும் நெடிய பயணம். வழியில் கணவாய் ஒன்றைக் கடந்தது படை. அங்கேயே தங்கி இரவில் ஓய்வெடுக்க முடிவெடுத்தார்கள் நபியவர்கள். ஒட்டகங்களை இளைப்பாற விட்டு, தங்குவதற்குக் கூடாரமெல்லம் அமைத்தபின், நபியவர்கள் தமது படையினரிடம் கேட்டார்கள். "இன்றிரவு நமது படையைக் காவல் காக்கப் போவது யார்?" அப்பாத் இப்னு பிஷ்ரு, அம்மார் பின் யாஸிர் ஆகிய இருவரும் எழுந்து காவலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அம்மார் பின் யாஸிர் முஹாஜிர். மக்காவிலிருந்து மதீனா ஹிஜ்ரத் மேற்கொண்டவர். அப்பாத் இப்னு பிஷ்ரு மதீனா நகரின் அன்ஸாரி. இருவரையும் உடன் பிறவா சகோதரர்களாக்கி வைத்திருந்தார்கள் நபியவர்கள். இத்தகைய உறவு பற்றி அபூதர்தா வரலாற்றில் வாசித்தது நினைவிருக்கலாம். சகோதரர்களின் காவல் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அலுத்துக் களைத்திருந்த படை உறங்கச் சென்றது. இந்தப் படையெடுப்பின்போது எதிரித் தரப்புப் பெண் ஒருவரை முஸ்லிம் வீரர் ஒருவர் பிணைக் கைதியாகக் கைப்பற்றியிருந்தார். அந்தப் பெண்ணின் கணவனோ அப்பொழுது மலைக் குன்றில் ஏறி ஓடி ஒளிந்திருந்தான். முஸ்லிம்களின் படை திரும்பிச் சென்றவுடன் கீழிறங்கி வந்தவன், தன் மனைவி கைப்பற்றப்பட்டு சென்றது அறிந்தான். ஆவசேமுற்றவன், முஹம்மதையும் அவரது படையினரையும் சென்று பிடித்து சிலரது இரத்தத்தைச் சிந்தாமல் திரும்ப மாட்டேன் என்று தனது கடவுளர்களான அல்-லாத், அல்-உஸ்ஸாமேல் ஆணையிட்டு விட்டு, முஸ்லிம்களின் படை சென்ற பாதையில் பின்தொடர ஆரம்பித்தான். இங்கு, கணவாயின் முகப்பிற்குக் காவல் காக்கச் சென்றார்கள் சகோதரர்கள் இருவரும். அப்பாத் இப்னு பிஷ்ரு அம்மாரிடம் கேட்டார்: "இரவின் எந்தப் பாதியில் நீ உறங்க விரும்புகிறாய். முற்பாதியிலா? பிற்பாதியிலா?" "நான் முற்பாதியில் உறங்குகிறேன்" என்ற அம்மார், அப்பாதைக் காவல் காக்க நிறுத்திவிட்டு படுத்தார், உறங்கி விட்டார். அத்தகைய களைப்பு, அசதி. ஏதும் அரவமற்ற, அமைதியான, அழகான இரவு. நட்சத்திரங்கள் மினுமினுக்கும் வானம். சில் வண்டுகளின் ரீங்காரம். அலாதியான ஏகாந்த நிலை அது. அப்பாதின் மனம் ஏங்க ஆரம்பித்தது. உறங்க அல்ல, குர் ஆன் ஓத! இந்த அமைதியான இரவில் குர்ஆன் ஓதித் தொழுதால்? எத்தகைய கடுமையான பயணம்? எத்தகைய அலுப்பு களைப்பு ஒவ்வொருவருக்கும்? ஆனால் இந்த எண்ணம் தோன்றியவுடன் உடனே தயாராகி தொழ ஆரம்பித்து விட்டார் அப்பாத். அவருக்குக் களைப்பைப் போக்கும் அருமருந்தும் குர்ஆனல்லவா? மெய்மறந்து அழகிய குரலில் உணர்ச்சி ததும்ப சூரத்துல் கஹ்ஃப் ஓத ஆரம்பித்தார் அப்பாத். மனமும் உடலும் முற்றும் முழுக்க தொழுகையில் லயித்து விட்டிருந்தது. அருவி நீராய் சலசலத்து அழகியதொரு ரீங்காரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது அவரது குரல். நேரம், சூழல், நிலை அனைத்தையும் மறந்து வேறோர் உலகத்தில் பாய்ந்து விட்டிருந்தது அவரது மனது. அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தான் முஸ்லிம் படையைப் பின்தொடர ஆரம்பித்திருந்த அந்தக் கைதியின் கணவன். அவனைக் கவனிக்கவேயில்லை அப்பாத். கணவாயை நெருங்கியவன் அப்பாத் தொழுது கொண்டு நிற்பதைக் கண்டு, அங்குதான் முஸ்லிம் படைகள் தங்கியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்தவன், தாமதிக்கவில்லை. தனது அம்பை எடுத்து வில்லில் பூட்டி, குறி பார்த்தான். எய்தான். குறி சற்றும் தப்பவில்லை. தொழுது கொண்டிருந்த அப்பாதை அம்பு தைத்தது. ஓதிக் கொண்டிருந்த அப்பாத் பதட்டமோ பதைப்போ எதுவும் கொள்ளாமல் அம்பைத் தனது உடலில் இருந்து பிடுங்கி எறிந்து விட்டு, தனது கிராஅத்தைத் தொடர்ந்தார். தன் அம்பு குறி தப்பி விட்டதா? ஒன்றும் புரியாமல் மறுமுறை அம்பை எய்தான் அவன். இதுவும் அவர் உடலில் வந்து தைத்தது. மீண்டும் அதேபோல் அதைப் பிடுங்கி எறிந்து விட்டுத் தொழுகையை தொடர்ந்தார் அப்பாத். வலித்திருக்காது? இரத்தம் பீறிட்டிருக்காது? அது என்ன சிறிய கொண்டை ஊசியா? வலித்தது! குருதி பெருக்கெடுத்தது! ஆனால் அந்த வலி, அந்த அவஸ்தை எதுவும் அவர் மனதில் நிறைந்திருந்த குர்ஆனைத் தாண்டி மூளையில் பதிவாகவில்லை. மூன்றாவது முறையாகவும் அம்பை எய்தான் அவன். இம்முறை அதைப் பிடுங்கிய அப்பாத், ஸஜ்தா நிலையை அடைந்து தொழுது முடித்து, தவழ்ந்து நகர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அம்மாரைத் தட்டி எழுப்பினார். "எழுந்திரு அம்மார். எனக்குக் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது" திடுக்கிட்டு விரைந்து எழுந்தார் அம்மார். அப்பொழுதுதான் மற்றொருவரும் அங்கு காவலுக்கு இருப்பதைக் கண்ட அவன், அதற்கு மேல் நிற்காமல் ஓடிவிட்டான். அப்பாதை நெருங்கி, பார்த்தார் அம்மார். மூன்று காயங்களிலிருந்தும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. "ஸுப்ஹானல்லாஹ்! முதல் முறை தாக்கப்பட்டவுடனேயே ஏன் என்னை எழுப்பவில்லை அப்பாத்?" என்று ஆச்சரியம், அதிர்ச்சி விலகாமல் கேட்டார் அம்மார். "தொழுகையில், ஓதிக் கொண்டிருந்தேன். சூராவின் நடுவில் இருந்தேன். அதை முழுதும் ஓதி முடிக்குமுன் நிறுத்த நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்! நான் குர்ஆன் ஓதுவது தடைபடுவதைவிட நான் மரணிப்பதே மேல். ஆனால், அல்லாஹ்வின் தூதர் படைக்குக் காவலாக இருக்கும்படி என்னைக் கட்டைளையிட்டிருக்க, எனது மரணத்தினால் படைக்கு பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்றுதான் பயந்தேன்" என்று பதில் வந்தது. தொழுகையிலும் குர்ஆனிலும் பின்னிப் பிணைந்து, அனைத்தையும் மறந்து அதிலேயே லயித்துப்போன அந்த மனதை எப்படி விவரிப்பது? ரலியல்லாஹு அன்ஹு! ***** காலம் கழிந்தது. அபூபக்ரு (ரலி) கலீஃபாவாக இருந்த காலகட்டம். பொய்யன் முஸைலமா அட்டூழியத்தை ஹபீப் (ரலி) வரலாற்றிலேயே காண ஆரம்பித்தோம் இல்லையா? இங்கு மீண்டும் அவனது அத்தியாயத்திற்குள் நுழைய வேண்டியிருக்கிறது. பின்னர் மேலும் பல தோழர்களின் வரலாற்றில்கூட இவன்மேல் நாம் இடர வேண்டியிருக்கும். முஸைலமாவை அடக்கப் புறப்பட்ட படைகளுள் ஒரு பிரிவின் முன்னணிப் படைவீரர் அப்பாத் இப்னு பிஷ்ரு. அப்பொழுது முஸைலமாவின் படைகளுடன் யமாமாவில் கடுமையான போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. தினமும் பல உயிரிழப்புகள். இருந்தும் முஸ்லிம் படைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படி முன்னேற இயலவில்லை. எதிரித் தரப்பு கடுமையாய்ச் சண்டையிடுவது ஒருபுறமிருக்க, முஸ்லிம் படைகளுள் முஹாஜிரீன்களும் அன்ஸார்களும் ஒருவரை ஒருவர் குறைகூறி நிற்பதைக் கண்டார் அப்பாத். மட்டுமல்லாமல், போரின்போது பின்னடைவு நிகழ்ந்திருந்தால் ஒருவர் மற்றவர்மேல் குற்றம் சுமத்துவதையும் கண்டார் அப்பாத். இது அன்ஸார்களுள் ஒருவரான அப்பாதிற்கு மிகுந்த ஆயாசத்தை ஏற்படுத்தியது. இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைய வேண்டுமென்றால், அன்ஸார்களையும், முஹாஜிரீன்களையும் தனித்தனிக் குழுவாகப் பிரித்து, தனி அடையாளப்படுத்தி, பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்து, உக்கிரமுடன் போரிட வைக்க வேண்டுமென்று தோன்றியது அப்பாதிற்கு. அவ்விதம் செய்தால் ஒருவர் மற்றவரைக் குற்றம் சுமத்த முடியாது. தவிர தத்தம் குழு சாதித்துக் காட்ட வேண்டுமென்ற உத்வேகம் அதிகமாகும். அதுவே சரியான போர் தந்திரமாயிருக்கும். அன்றிரவு உறங்கிய அப்பாத் கனவொன்று கண்டார். வானம் திறந்து கொள்ள, அதனுள் நுழைந்தார் அப்பாத். அவரை உள்வாங்கிக் கொண்ட வானம் ஒரு வீட்டின் கதவைச் சாத்துவதைப்போல் தன் கதவைச் சாத்திக் கொண்டது. காலையில் கண்விழித்தவர் அதை சகதோழர் அபூ ஸயீத் அல்-குத்ரீ ரலியல்லாஹு அன்ஹுவிடம் தெரிவித்தார். "அபூ ஸயீத்! அல்லாஹ்வின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்! நான் வீர மரணம் அடைவேன் என்றுதான் அதற்கு அர்த்தம் காண்கிறேன்" அது பிழையற்ற மொழிபெயர்ப்பு. விடிந்ததும் போர் தொடர்ந்தது. போர்க்களத்தில் இருந்த ஒரு முகட்டின்மேல் விரைந்து ஏறி நின்றார் அப்பாத். இறைந்து அழைத்தார். "அன்ஸார் மக்களே! வாருங்கள், மற்றவர்களைவிட விரைந்து முன்னேறுங்கள்! உங்களது வாளின் உறைகள், இடுப்பில் தொங்குகிறதே அதை உடைத்து எறியுங்கள். தேவையில்லை அது இனி! நீங்கள் உயிருடன் நின்று கொண்டிருக்க, இஸ்லாத்தை எதிரிகள் கைப்பற்ற அனுமதிக்காதீர்கள்!" அது பலமான கூவல்! உணர்ச்சிகரமான அழைப்பு! விண் அதிர கதறிக் கொண்டிருந்தார் அப்பாத். சரியாய் வேலை செய்தது அது. விளக்கை நோக்கி விரையும் விட்டிலாய் நானூறு அன்ஸார்கள் அங்கு வந்துக் குழுமி விட்டனர். அதன் தலைமையில் தாபித் பின் ஃகைஸ், அல் பர்ரா இப்னு மாலிக் மற்றும் அபூ துஜானா, ரலியல்லாஹு அன்ஹும். இந்த அபூ துஜானா நபியவர்களின் வாளை ஏந்திய பெருமை பெற்றவர். இந்த வீரர்களுடன் ஓர் அணியாய் முன்னேறிச் சென்றார் அப்பாத். எதிரிகளின் படை வரிசைக்கு இடையில் புகுந்து, தனது வாளால் சரசரவென்று அவர்களை வெட்டிக் கொண்டே விறுவிறுவென்று ஓடிக் கொண்டிருந்தார் அவர். முஸ்லிம்கள் ஆக்ரோஷத்தின் உச்சத்தில் போரிட்ட நாள் அது. எதிரிப்படை அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தெறித்து ஓடிக் கொண்டிருந்தது பொய்யன் முஸைலமாவின் படை. இறுதியில் பொய்யன் கூட்டத்து மனோ திடமெல்லாம் அன்று நொறுங்கி விட்டிருந்து. பின்வாங்கிய அவனது படை, ஒரு பழத்தோட்டத்திற்குள் சென்று புகுந்து கொண்டது. அங்கு வைத்து முஸைலமாவைக் கொன்று, போரை முஸ்லிம்கள் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். பின்னர் அந்தத் தோட்டம், "மரணத் தோட்டம்" என்றே வரலாற்றில் பெயர் பெற்றுவிட்டது. அந்தப் பழத்தோட்டத்தின் சுவரில்தான் அப்பாத் வீரமரணம் எய்தினார். அவரது உடல், போர்க் காயங்களால் அடையாளம் தெரியப்படாத அளவிற்கு சிதிலமடைந்திருந்தது. இரத்தத்தில் மூழ்கி முங்கியிருந்தது அவரது உடல். பிறப்பு அடையாளக் குறிகளைக் கொண்டுதான் அவரது உடலையே அடையாளம் காண முடிந்தது. குர்ஆன், தனது குருதியிலும் ஆன்மாவிலும் கலந்திருந்தவர் அவர். அதன் இனிமையிலும், சந்தத்திலும் மட்டுமே ஆனந்தம் கண்டு, பள்ளிவாசலிலும் தியானத்திலும் அடங்கிவிடவில்லை அந்த மனது. இறை வார்த்தைகளின் அர்த்தம் அணுஅணுவாய் இரத்த அணுவில் கலந்திருந்தது. அதனால்தான் தொழுகையில் மட்டுமல்ல, போர்க் களத்திலும் முன்வரிசையில் வாளேந்தி நிற்க முடிந்தது; மரணம் துச்சம் எனக் கருத முடிந்தது. பொய்யன் முஸைலமாவுக்கு எதிரான அந்தப் போரில் தனது 26ஆவது வயதில் வீர மரணமடைந்தார் அப்பாத் பின் பிஷ்ரு. ரலியல்லாஹு அன்ஹு! இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்! |
No comments:
Post a Comment