வரலாறு - தோழர்கள் |
செவ்வாய், 09 நவம்பர் 2010 00:45 |
سُرَاقَةُ بْنُ مَالِكٍ الْمُدْلَجِيُّ உச்சி வெயில் கொளுத்தும் நண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர். வழக்கமற்ற அந்நேரத்தில் தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவின் வீட்டிற்கு வந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். "வெகு நிச்சயமாய் ஏதோ ஒரு முக்கியமான விஷயம். இல்லையெனில் இந்நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் வரமாட்டார்களே" என்று ஆச்சரியத்துடன் அவரை வரவேற்றார் அபூபக்ரு. "அனுமதி கிடைத்துவிட்டது" என்றார்கள் நபியவர்கள். "அல்லாஹ்வின் தூதரே, தோழமை?" "ஆம்! தோழமை" அதைக் கேட்டு அழுதார் அபூபக்ரு! மறுநாள் காலை. குரைஷியர்கள் கண்விழிக்கும்போது அவர்களைக் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்துவதற்குக் காத்திருந்தது அந்தச் செய்தி. பரபரப்புத் தொற்றியது மக்காவில். குரைஷிக் குலத்தலைவர்களால் அச்செய்தியை நம்ப முடியவில்லை. "அது எப்படி முடியும்?" பரபரப்புடன் நாலாபுறமும் குழுக்கள் பறந்தன. அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்ப, இறுதியில் பரிசுத் தொகை பறையறிவிக்கப்பட்டது, "நூறு ஒட்டகங்கள். முஹம்மதுவை உயிருடனோ அன்றியோ கொண்டு வருபவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் பரிசு" மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையிலுள்ள பதினெட்டுப்பட்டி மக்களுக்கும் தகவல் சென்று சேர்ந்தது. * * * * * ஹிஜ்ரீ, ஹிஜ்ரத், புலப்பெயர்வு என்றெல்லாம் முந்தைய தோழர்களுடைய வரலாற்றில் வாசித்துக் கொண்டே - நின்று விரிவாய்த் தெரிந்து கொள்ள நேரமில்லாமல் - வந்துவிட்டோம். இங்குப் பார்த்துவிடுவோம். மக்காவில் இஸ்லாமிய அழைப்புத் துவங்கிய நாளாய் முஸ்லிம்களுக்குத் தொடங்கிய துன்பமும் சோதனையும் பொறுத்துக் கொள்ளவியலாத நிலையை எட்டியிருந்தன. அந்நிலையில் மதீனாவிலிருந்து வந்த மக்களுடன் அகாபாவில் ரகசிய உடன்படிக்கை ஏற்பட, மதீனாவில் முஸ்லிம்களுக்கு இணக்கமான சூழ்நிலையொன்று மெதுவே உருவாக ஆரம்பித்திருந்தது. நபியவர்கள் மக்காவிலிருந்த முஸ்லிம்களிடம் தலையசைக்க, குரைஷிகளின் கவனத்தைக் கவராமல் தனித்தனியாகவும் சிறுசிறு குழுக்களாகவும் முஸ்லிம்கள் மதீனாவிற்குப் புலம்பெயர ஆரம்பித்தனர். இதற்கும் முன்னர் ஒரு குழுவினர் அபிஸீனியாவுக்குப் போய்விட்டிருந்தனர். அபூபக்ரு தாமும் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்துவிடலாம் என்று ஒருநாள் நபியவர்களிடம் அனுமதி கேட்டார். "அவசரப்படாதீர்கள். அநேகமாய் அல்லாஹ் உங்களுடன் ஒரு சிறந்த தோழரை உடன் அனுப்பிவைப்பான்" என்று மட்டும் முஹம்மது நபியிடமிருந்து பதில் வந்தது. "பயணத் தோழரா? அது யாராக இருக்கும்?" ஆர்வத்துடன் கூடிய எதிர்பார்ப்பு ஒன்று அவர் மனதில் உருவானது. ஆனால் ஏதோ புரிந்தது போலவும் இருந்தது. பயணத்திற்குத் தயாராய் இரு ஒட்டகங்களை ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டார். ஒன்று தனக்கும் மற்றொன்று யாரென்று தெரியாத அந்தப் பயணத் தோழருக்கும். இதனிடையே முஸ்லிம்கள் மதீனாவிற்கு நழுவுவதையும் முஹம்மது தமது பிரச்சாரத்தை நிறுத்தவே போவதில்லை என்பதையும் உணர்ந்த குரைஷிகள், "இதெல்லாம் சரிப்படாது, ஓர் இறுதி முடிவுக்கு வந்தாகவேண்டும்" என்று கொடூரத் திட்டமொன்று வகுத்தனர். "நமது அனைத்துக் கோத்திரத்தில் இருந்தும் ஆளுக்கொரு கை போட்டு அவரைக் கொன்றுவிடலாம். அதற்குப் பழி தீர்க்க வேண்டுமெனில் அனைவரையும் எதிர்க்கும் நிர்ப்பந்தம் முஹம்மதின் பனூ ஹாஷிம் கோத்திரத்திற்கு ஏற்படும். எனவே அவர்கள் போரிலெல்லாம் இறங்க முடியாது. வேண்டுமானால் கொலைக்குப் பகரமாய் ஈட்டுத் தொகை அளித்து விடுவோம்" திட்டமிடுவோரை எல்லாம் மிகைத்தத் திட்டமிடுவோன், வானவர் தலைவர் மூலமாய்ச் செய்தி அனுப்பிவைத்தான் நபியவர்களுக்கு - அதனுடன் சேர்த்து அனுமதியும். தாருந்நத்வாவில் குரைஷிகள் கூடி சதித்திட்டம் தீட்ட, இங்கு நபியவர்கள் அமைதியாய், மிகத் தெளிவாய், படு துல்லியமாய் எதிர்த் திட்டம் வகுத்தார்கள். அபூபக்ருவின் இல்லத்திற்குக் காலையிலோ மாலையிலோ நபியவர்கள் வருகை என்பது தவறாத வழக்கம். அந்தளவு தோழமை. மிகவும் அலாதியான தோழமை. இருவருக்கும் இடையே இருந்த அணுக்கம் ஓர் அழகிய உன்னதம். ஆனால் அன்று நண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரத்தில் அபூபக்ருவின் வீட்டிற்கு வந்தார்கள் நபியவர்கள். அந்நேரம் அங்கு அவரின் இரு மகள்கள் அஸ்மா, ஆயிஷா - ரலியல்லாஹு அன்ஹுமா - மட்டுமே இருந்தனர். "விஷயம் வெகுமுக்கியம் போலிருக்கிறது. இல்லையெனில் இந்நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் வரமாட்டார்களே" என்று ஆச்சரியத்துடன் அவரை வரவேற்றார் அபூபக்ரு. அவரது கட்டிலில் அமைதியாக அமர்ந்து "உங்களுடன் உள்ள இவர்களை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்" என்றார்கள் நபியவர்கள். "அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இவர்கள் என்னுடைய மகள்கள்தாம். என்ன விஷயம்?" "நான் புலம்பெயர எனக்கு அனுமதி கிடைத்துவிட்டது" "அல்லாஹ்வின் தூதரே, தோழமை?" நானும் உங்களுடன் வர அனுமதியுண்டா என்பதை அப்படிக் கேட்டார் அபூபக்ரு. "ஆம்! தோழமை" அழுதார் அபூபக்ரு; ஆனந்தத்தால் அழுதார்! மகிழ்ச்சியிலும் இப்படி அழமுடியுமா என்பதை ஆச்சரியத்துடன் பார்த்தார் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா. "அல்லாஹ்வின் தூதரே! இதோ என்னுடைய இரு ஒட்டகங்கள். இத்தருணத்திற்காகவே நான் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன்" "அவற்றிக்கான விலைக்கே நான் பெற்றுக் கொள்வேன்" என்றார்கள் முஹம்மது நபி. இதென்ன பேச்சு? அப்படியெல்லாம் இல்லை, "இது நான் தங்களுக்கு அளிக்கும் நன்கொடை" என்றார் அபூபக்ரு. "ஓ அபூபக்ரு! இந்தப் பயணம் அல்லாஹ்விற்காக மேற்கொள்ளப்படும் பயணம். அதற்கு உண்டாகும் செலவை நான் எனது பணத்திலிருந்த அளிக்கவே விரும்புகிறேன். ஏனெனில் எனது செலவிற்கு உண்டான வெகுமதியை நான் இறைவனிடம் ஈட்ட விரும்புகிறேன்" இறைவனின் தூதர், இறைவனுக்காகத் தான் அடைந்த துன்பம், மேற்கொள்ளப் போகும் அசாத்தியச் சோதனைகள் என்பதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இறைவனின் அளவற்ற வெகுமதி – அதை எவ்வகையிலெல்லாம் ஈட்ட முடியுமோ அவ்வகையிலெல்லாம் ஈட்டுவதற்கு முன்நின்றார் அந்த மாமனிதர் - ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்! பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைக் கிடுகிடுவென செய்தார்கள் அஸ்மாவும் ஆயிஷாவும். உணவை எடுத்து வைத்து உண்பதற்கான விரிப்பு அடங்கிய பயண மூட்டை தயாரானது. அந்த மூட்டையின் பையை எதைக் கொண்டு கட்டுவது என்று யோசித்த அஸ்மா தமது இடுப்பு வார்த்துணியை இரண்டாகக் கிழித்து அதில் ஒன்றைக்கொண்டு கட்டினார். அன்றிலிருந்து அவருக்கு, "தாத்துந் நிதாக்கைன் - வாரிரண்டு வனிதை" என்று பட்டமே ஏற்பட்டுவிட்டது. மக்காவில் தன்னைக் காணவில்லை என்றதும் குரைஷிகளுக்கு நிச்சயமாய் மதீனா நினைவிற்கு வரும்; மதீனாவுக்குச் செல்வோர் அனைவரும் பயணிக்கும் பாதையைத் தவிர்ப்பதே உசிதம்; அதற்கு மாற்றுவழி தெரியவேண்டும். அதற்கென அப்துல்லாஹ் இப்னு உரைகத் என்பவரை நியமனம் செய்து கொண்டார்கள் நபியவர்கள். அப்துல்லாஹ் ஒரு மிகத் தேர்ந்த வழிகாட்டி. முஸ்லிம் அல்லன் என்றபோதிலும் நம்பிக்கைக்கு உரியவன். அவனிடம் இரு ஒட்டகங்களையும் ஒப்படைத்து, "இதைப் பாதுகாப்பாக பராமரிக்கவும் குறிப்பிட்ட நாளன்று குறிப்பிட்ட இடத்திற்கு இவற்றை ஓட்டிக் கொண்டு வரவும்" என்றும் தகவல் அறிவிக்கப்பட்டது. நபிகள் புலம்பெயர்ந்து மதீனாவுக்குச் செல்ல உருவான திட்டம் அலீ, அபூபக்ரு மற்றும் அவர் குடும்பத்தினர் - ரலியல்லாஹு அன்ஹும் - தவிர வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. இரவு கவிழ்ந்தது. முஹம்மது நபியை அவரது வீட்டில் புகுந்து கொலை புரிய குரைஷிகளின் கூட்டணிக் கூட்டம் பதுங்கிவர, அலீயைத் தமது கட்டிலில் உறங்க வைத்து, குரைஷிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தமது வீட்டிலிருந்து வெளியேறினார்கள் நபியவர்கள். அபூபக்ருவின் வீட்டிற்கு வர, அவர் தயாராய்க் காத்திருந்தார். அவரது வீட்டின் பின்புறமிருந்த ஒரு சிறு வாயிலின் வழியே இருவரும் வெளியேறினார்கள். அங்கிருந்து உடனே மதீனா கிளம்பாமல் மக்காவிலிருந்து மதீனா நகருக்குச் செல்லும் பாதையின் நேரெதிர்த் திசையில் - யமனுக்குச் செல்லும் வழியில் - இருவரும் பயணித்து தவ்ருக் குகையை அடைந்து, பதுங்கிக் கொண்டார்கள். நபியவர்களின் வீட்டிற்கு வெளியே பதுங்கியிருந்த கொலைக் கும்பல், நபியவர்கள் தப்பித்துவிட்டதை அறிந்து எழுப்பிய கோபக் கூச்சல் ஊரெங்கும் தெருவெங்கும் மூலை முடுக்கெங்கும் பரவி மக்காவில் அன்றைய தலைப்புச் செய்தியானது. "முஹம்மது இரவோடு இரவாக மக்காவிலிருந்து வெளியேறி விட்டார்" குரைஷிக் கூட்டத் தலைவர்களால் அச்செய்தியை நம்ப முடியவில்லை. "அது எப்படி முடியும்? வீடு வீடாகத் தேடுங்கள்" என்று ஓட ஆரம்பித்தார்கள். நபியவர்களின் பனூ ஹாஷிம் கோத்திரத்தார் வீடுகளில்தான் முதலில் தேடினர். பிறகு தோழர்களின் வீடுகள். அபூபக்ருவின் வீட்டின் கதவைத் தட்ட அஸ்மா வெளியே வந்தார். அப்பொழுது இளவயதினர் அவர். அபூஜஹ்லு கோபத்துடன், "ஏய் பெண்ணே, உன் அப்பன் எங்கே?" என்றான். "அவர் இப்பொழுது எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது" என்றார் அஸ்மா. தேடிக்களைத்த கோபத்திலும் எரிச்சலின் உச்சத்திலும் இருந்த அபூஜஹ்லு, பெண் என்றெல்லாம் பாராமல் அஸ்மாவின் முகத்தில் ஓங்கி அறைய, அவரது காதணி தெறித்து விழுந்தது. சீற்றத்தில் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது குரைஷித் தலைவர்களுக்கு. முஹம்மது நிச்சயமாய் மக்காவில் ஒளிந்தில்லை, வெளியேறிவிட்டார் என்பது அவர்களுக்கு உறுதியானது. ஜி.பி.எஸ்., இணையம், சாட்டிலைட் போன்ற நவீன வசதிகள் இல்லாத அக்காலத்தில் அவர்களிடம் வேறு வசதி இருந்தது. பாலையில் உள்ள வழித்தடத்தின் அடிச்சுவட்டைக் கொண்டே தொலைந்தவர்களைக் கண்டுபிடிப்பது, பின்தொடர்வது ஆகிய சாமர்த்தியம் சிலருக்கு இருந்தது. வழித்தட வித்தகர்கள். அவர்களையெல்லாம் திரட்டிக் கொண்டு முஹம்மது எந்தப் பாதையில் தப்பித்திருப்பார் என்று தேடத் துவங்கியது அக்கூட்டம். தேடி, பின்பற்றி, சரியாகத் தவ்ருக் குகை அமைந்துள்ள மலையின் அடிவாரம்வரை வந்துவிட்டது அக்குழு. "அடிச்சுவடு இங்கு முடிகிறது. இதைத் தாண்டி அவர்கள் சென்றிருக்க முடியாது" என்றார்கள் அந்த நிபுணர்கள். குகை என்றவுடன் நம் கற்பனையில் மலை, மலையில் ஒரு பொந்துதான் தோன்றும். தவ்ருக் குகை அப்படியில்லை. ஒரு குழிபோல் ஆழமாயிருக்கும். அங்குதான் மறைந்திருந்தார்கள் முஹம்மது நபியும் அபூபக்ரும். குகையின் வாயில்வரை வந்துவிட்டது அக்கூட்டம். அபூபக்ரு நிமிர்ந்து பார்த்தால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கும் அவர்களுடைய கால்கள் தெரிந்தன. திகிலில் வருந்தி கண்ணீர் விட்டார் அபூபக்ரு. "ஏன் அழுகை?" என்பதுபோல் அவரை இதமாய்ப் பார்த்தார்கள் நபியவர்கள். அபூபக்ரு கிசுகிசுப்பான குரலில் கூறினார். "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மேல் ஆணையாகக் கூறுகிறேன். நான் எனக்காக அழவில்லை. தங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மட்டுமே என் அச்சம்" திடமான ஆறுதல் வார்த்தைகள் வெளிப்பட்டன நபியவர்களிடமிருந்து "வருந்தாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" அல்லாஹ் அபூபக்ரின் உள்ளத்திற்கு சாந்தியை அருளினான். மேலே நின்று கொண்டிருந்தவர்களின் கால்களைப் பார்த்தபடி மெல்லிய குரலில் கூறினார், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது அவர்களது கால்களைக் குனிந்து பார்த்தாலே போதும், நம்மைக் கண்டு விடுவார்கள்" "இருவருடன் துணைக்கு மூன்றாவதாக அல்லாஹ் இருக்க என்ன கவலை அபூபக்ரு?" எத்தகைய உறுதி அது? எத்தகைய ஆழ்மன நம்பிக்கை அது? இதற்குள் மேலே நின்று கொண்டிருந்த ஒருவன் கூறினான், "நாம் இந்தக் குகைக்குள் இறங்கி அங்கு என்ன இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்" அதைக் கேட்ட உமைய்யா இப்னு ஃகலஃப் ஏளனமாய்ச் சிரித்து, "இங்கே பார், குகையின் வாசலை ஒரு சிலந்தி வலை அலங்கரித்துக் கொண்டிருப்பதை. அந்த வலைக்கு முஹம்மதைவிட வயது அதிகம் இருக்கும்" படு இலேசான படைப்பினத்தைக் கொண்டு, ஆளரவமற்ற பாழடைந்த குகை என்ற எண்ணத்தை பராக்கிரம எதிரிகளின் மனதில் ஏற்படுத்தி, வெகு சுலபமாய் அற்புதம் நிகழ்த்தினான இறைவன். யார் அறிவார் அவன் வீரர்களை? ஆனால் அபூஜஹ்லுக்கு மட்டும் குறுகுறுப்பு இருந்து கொண்டேயிருந்தது. "அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸாவின் மீது சத்தியமாகச் சொல்கிறேன், முஹம்மது இங்குதான் எங்கேயோ இருக்கிறார். நம்மைப் பார்த்துக் கொண்டும் நாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறார். அவருடைய மந்திர வித்தைதான் நாம் அவரைக் காணமுடியாமல் நம் கண்களைக் கட்டிப் போட்டுவிட்டது" அவன் கண்களை மறைத்தது மந்திரமா அல்லது அறியாமையா? என்னவென்று சொல்வது? அபூபக்ருக்கு அப்துல்லாஹ் என்றொரு மகன் இருந்தார். சிறப்பான புத்திக் கூர்மையுள்ளவர். இந்த நிகழ்வின்போது அவர் பதின்ம வயதுச் சிறுவர். பிரமாதமான உளவுவேலை புரிந்தார் அப்துல்லாஹ். பகலெல்லாம் குரைஷியர்களுடனேயே வலம் வந்து அடுத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், அவர்களுடைய திட்டம் என்ன, எவ்வளவு குடைச்சலில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து கொள்வது அவர் வேலை. இரவு படர்ந்ததும் குரைஷியர் கண்களில் படாமல் தவ்ருக் குகைக்கு வந்துவிடுவார். மக்காவின் நிகழ்வுகளையெல்லாம் அவர்களுக்கு அறிவித்துவிட்டு இரவு முழுவதும் அவர்களுடனேயே குகையில் தங்கிக் கொள்வார். பிறகு பொழுது புலரும் முன்னரே கிளம்பி தனது வீட்டிற்கு வந்துவிடுவார். இவருக்கு இந்தப் பணி என்றால், ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பவருக்கு வேறொரு பணி இருந்தது. அபூபக்ரிடம் பணியாளாக இருந்தார் ஆமிர் இப்னு ஃபுஹைரா. அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்த தோழர். இரவானதும் ஆட்டு மந்தையொன்றை மேய்ச்சலுக்கு ஓட்டுவதுபோல் ஓட்டிக் கொண்டு தவ்ருக் குகைக்கு வந்துவிடுவார். ஆட்டுப்பால் நபியவர்களுக்கும் அபூபக்ருக்கும் உணவாகிவிடும். பிறகு விடிந்ததும் அப்துல்லாஹ் கிளம்பிச் சென்றவுடன் தமது மந்தையை ஓட்டிக்கொண்டு ஆமிர் மக்கா வந்துவிடுவார். அதிலொரு தந்திரமும் இருந்தது. வழித்தட வித்தகர்கள் இருந்தார்கள் என்று பார்த்தோமல்லவா? குரைஷிகளுக்கு ஏதேனும் சிறு சந்தேகம் ஏற்பட்டு அப்துல்லாஹ்வின் வழித்தடத்தைப் பின்பற்றிவிட்டால்? எனவே அப்துல்லாஹ் குகைக்கு வந்து திரும்பிய வழித்தடத்தையெல்லாம் வீடுதிரும்பும் ஆடுகள் கலைத்துக் கொண்டே வந்துவிடும். இத்தகைய எளிய உத்திகள் ஆத்திரத்தில் புத்திமட்டுப் போன எதிரிகளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. இவ்விதமாய் மூன்று இரவுகள் கழிந்தன. அதற்கு அடுத்தநாள் காலை முன்னரே பேசி வைத்துக் கொண்டபடி வழிகாட்டி அப்துல்லாஹ் இப்னு உரைகத் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு தவ்ருக் குகைக்கு வந்துவிட்டான். அவர்களுடன் ஆமிர் இப்னு ஃபுஹைராவும் சேர்ந்து கொள்ள, இஸ்லாமிய வரலாற்றுப் பயணம் துவங்கியது - ஹிஜ்ரீ பிறந்தது. * * * * * துடித்துக் கொண்டிருந்த குரைஷிகள் தங்களது முயற்சியை அவ்வளவு எளிதில் கைவிடுவதாய் இல்லை. முஹம்மது நபியை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையில் உள்ள சுத்துப்பட்டுப் பதினெட்டுப் பகுதிகளுக்கும் ஆள் அனுப்பினார்கள். "முஹம்மது தப்பித்துவிட்டார். அவரை உயிருடனோ உயிரன்றியோ கண்டுபிடித்துக் கொண்டு வருபவர்களுக்கு சிறப்பான நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும்" ஒட்டகங்களை சர்க்கஸில் பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு நூறு ஒட்டகங்களின் மதிப்பு புரிவது சற்றுச் சிரமம். அக்காலத்தில் அது மிகப்பெரிய பரிசுத் தொகை. எவ்வளவு பெரிசு? நூறு கார்கள் அதுவும் சிறப்பான பென்ஸ் கார்கள் பரிசாகக் கிடைப்பதை நினைத்துப் பாருங்கள், அனுமானம் கிடைக்கும். மக்காவிலிருந்து சற்றுத் தூரத்தில் குதைத் என்றொரு ஊர். அங்கு முத்லஜ் எனும் பதுஉக் கோத்திரத்தினர் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் வழக்கமாய்க் கூடிப்பேசும் பகுதி ஒன்று இருந்தது. அங்கு வந்த குரைஷியரின் தூதுவன் தண்டோரா அடிக்காத குறையாய் "நூறு ஒட்டக" அறிவிப்பை உரத்து வெளியிட்டான். 'அம்மாம்' பெரிய பரிசு அறிவிப்பைக் கேட்டு அனைவரின் மூக்கும் ஆசையில் ஒட்டகம் போல் "புஸ் புஸ்” என்று மூச்சுவிட, ஒருவரின் கவனத்தை அது மிக அதிகமாய்க் கவர்ந்தது. அவர் ஸுராக்கா இப்னு மாலிக். ஸுராக்கா உயரமான ஆஜானுபாகுவான தோற்றம். சிறந்த குதிரைவீரர். தவிர சிறந்த கவிஞரும்கூட. கவிதை பாடியா தப்பித்தவர்களைப் பிடிக்கப் போகிறார்? அவரது அறிவுப் புலமையைப் பற்றிய அபிப்ராயம் நம் மனதில் ஏற்படத் தெரிந்து கொள்ளவே இந்தத் தகவல். மற்றபடி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவரது முக்கியமான மற்றொரு தகுதியை. இவரும் ஒரு வழித்தட வித்தகர். அதில் பிரமாதமான ஆற்றல் அவருக்கு உண்டு. எப்படியும் தான் அந்தப் பரிசை அடைந்துவிட வேண்டும், நிச்சயமாய் "என்னால் முடியும் தம்பி” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார். ஆனால் படு கவனமாய்த் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். "யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது ஸுராக்கா. அதோபார் அனைவரது கண்களிலும் பேராசை ஜொலிப்பதை. எல்லோரும் அந்தப் பரிசைப் பெறப் போட்டியில் இறங்கிவிட்டால் ஆளுக்கு ஓர் ஒட்டகமோ அரை ஒட்டகமோதான் கிடைக்கும். எனவே அமைதி, அமைதி..." என்று எதுவும் பேசாமல் சாந்தமாய் அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். அப்பொழுது அங்கு வந்தான் அவர்கள் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவன். "அல்லாஹ்வின்மேல் ஆணையாகச் சொல்கிறேன். மூன்று பேர் என்னைத் தாண்டிச் செல்வதைப் பார்த்தேன். அவர்கள் முஹம்மது, அபூபக்ரு, மற்றும் அவர்களுடைய வழிகாட்டி என்று நினைக்கிறேன்" "ஆஹா, இதென்ன புதுக் குழப்பம்" என்று மருகிய ஸுராக்கா, அவனது ஐயத்தோடு கூடிய பேச்சைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, "அட, அவர்களா? நானும் பகலில் பார்த்தேன், அவர்கள் தங்களது மந்தையிலிருந்து ஓடிவிட்ட ஒட்டகத்தைத் தேடிப் பகல் முழுதும் அலைந்து கொண்டிருந்தவர்கள்" என்று அப்படியே வாயை அடைத்தார் ஸுராக்கா. "இருக்கலாம்" என்று முனகிக்கொண்டே அமைதியாகிவிட்டான் அந்த மனிதன். இப்பொழுது உடனே எழுந்து சென்றால் மேலும் சந்தேகம் ஏற்படும் என்று தோன்றியது. படபட இதயத்தை அடக்கிக்கொண்டு காத்திருந்தார். பிறகு பேச்சு திசைமாறி அவரவரும் வேறுவேறு விஷயங்களில் மூழ்கிவிட, "இதுதான் சமயம்" என்று அங்கிருந்து கம்பி நீட்டினார் ஸுராக்கா. வேகமாக ஆனால் அதே சமயம் தமது பதற்றத்தை அடக்கிக் கொண்டு வீட்டை அடைந்தார். தம் பணிப்பெண்ணை அழைத்துக் கிசுகிசுக்க, ஒரு குதிரையும் அவரது ஆயுதங்களையும் யார் கண்ணிலும் படாமல் கொண்டு சென்று அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் குதிரையை நிறுத்திக் கட்டிவிட்டு, அதன் அருகில் ஓரிடத்தில் ஆயுதங்களை மறைத்து வைத்தாள் அப்பணிப்பெண். "முடிந்தது வேலை" என்று அவள் வந்து சொன்னதும், "ஒரே புழுக்கமாக இருக்கிறது, காலாற நடந்திட்டு வர்ரேன்" என்பதுபோல் யார் கவனத்தையும் கவராமல் கிளம்பினார் ஸுராக்கா. அந்தப் பள்ளத்தாக்கை அடைந்து தமது கவசத்தை அணிந்துகொண்டு, ஆயதங்களையும் பூட்டிக்கொண்டு பரிதியில் ஏறி அமர்ந்து, "ஹை... ஹை.." என்றதும் விருட்டென்று கிளம்பியது குதிரை. அதுவரை கட்டிக்காத்த நிதானத்தையெல்லாம் குதிரையின்மேல் வடிகாலாய் அவர் இறக்க, பாலைவனத்தில் பறந்தது குதிரை. கடும் வேகத்தில் குதிரை ஓடிக்கொண்டிருக்க, திடீரென அது நிகழ்ந்தது. தடுமாறித் தரையில் விழுந்தது குதிரை! ஒன்றும் புரியவில்லை ஸுராக்காவிற்கு. "ஏன் என்னாச்சு உனக்கு?” என்று அந்த அதிர்ச்சியில் அவருக்கு வார்த்தை தடுமாறியது. ஏதோ ஒரு தீங்கு இருப்பதாய் அவர் உள்மனதில் எண்ணம் தோன்றியது. குதிரையைத் தட்டி எழுப்பி மீண்டும் ஏறிக் கொண்டார். ஓட ஆரம்பித்தது குதிரை. சிறிது நேரத்தில் அதேபோல் மீண்டும் தடுமாறி விழுந்தது. அக்கால அரபியருக்கு சகுனம், தீக்குறி இதிலெல்லாம் நம்பிக்கை அதிகம். ஸுராக்காவிற்கும் அந்நம்பிக்கை அதிகம் இருந்தது. இரண்டாவது முறையும் அசந்தர்ப்பமாய் இப்படி நிகழவே அவருக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. தேடலை இத்துடன் முடித்துக் கொள்வோம் என்றே முடிவெடுத்துவிட்டார். ஆனால் நூறு ஒட்டகங்களும் அசைந்து அசைந்து அவர் மனக்கண்ணில் அணிவகுத்துச் செல்ல, உடலில் படிந்திருந்த மணலையெல்லாம் தட்டிவிட்டுக் கொண்டு மீண்டும் குதிரையைக் கிளப்பினார். சற்று நேரத்தில் முஹம்மது நபியும் அவருடன் இருந்தவர்களும் கண்ணில் தென்பட ஆரம்பித்தார்கள். அப்பாடா, ஒருவழியாய் விழுந்து எழுந்து நெருங்கிவிட்டோம் என்று தோன்றியது. குதிரையில் அமர்ந்தவாறே தமது வில்லில் அம்பைப் பொருத்தி நாணிழுத்து அவர்கள் மீது குறிபார்க்க, இம்முறை வேறோர் அதிசயம் நிகழ்ந்தது. நின்ற நிலையில் குதிரையின் கால்கள் மணலில் புதைய ஆரம்பித்தன! புழுதிப்புகை எழுந்து பார்வையை மறைத்தது! குதிரையை அடித்து உதைத்து உந்தினால், அது ஓர் அங்குலம் கூட நகரவில்லை! என்னவோ தனது குளம்புகளை பூமியில் வைத்து ஆணியில் அறைந்ததைப்போல் அப்படியே நின்று கொண்டிருந்தது குதிரை. அதற்குமேல் ஸுராக்காவால் முடியவில்லை. நபியவர்களை நோக்கி உரத்தக் குரலில் இறைஞ்சினார். "நீங்கள் இருவரும் உங்கள் இறைவனிடம் என் குதிரையின் கால்களை விடுவிக்கும்படி இறைஞ்சுங்கள். நான் உங்களைப் பின்தொடர மாட்டேன், இது சத்தியம்" இதையெல்லாம் நபியவர்களும் அபூபக்ரும் மற்றவரும் பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள். ஸுராக்காவின் கோரிக்கையை ஏற்று நபியவர்கள் இறைவனிடம் இறைஞ்ச, குதிரையின் கால்கள் மணலிலிருந்து விடுபட்டன. அதைக் கண்டு "அப்பாடா” என்று மகிழ்ந்தார் ஸுராக்கா. அத்துடன் திரும்பி இருக்கலாமில்லையா? பிரச்சினை தீர்ந்ததும் சத்தியம் மறந்தது; மீண்டும் ஒட்டகங்கள் வரிசையாய் மனக்கண்ணில் அசைந்தாடி வந்தன. அந்த இடத்தில் மணல் ஏதோ தொந்தி போலும் என்று மீண்டும் குதிரையில் பின்தொடர ஆரம்பித்தார். ஆனால் இம்முறை இன்னம் ஆழமாய்க் குதிரையின் கால்கள் மணலில் புதைந்தன! இனி செய்வதற்கு ஏதுமில்லை, உயிர் பிழைத்தால் புண்ணியம் என்று முடிவெடுத்துவிட்டார் ஸுராக்கா. "முஹம்மதே! எனது பொருட்கள், உணவு, ஆயுதங்கள் அனைத்தையும் தந்து விடுகிறேன்; எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், நானும் இனி உங்களைத் தொடரமாட்டேன், மற்றவர்கள் உங்களைத் தொடர்ந்து பிடிக்க வருவதையும் தடுப்பேன், தயவுசெய்து இம்முறை உங்கள் இறைவனிடம் சொல்லி என்னைக் காப்பாற்றுங்கள்" "உனது பொருட்கள் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை, ஆனால் மற்றவர்கள் எங்களைப் பின்தொடராமல் தடுத்தால் போதும்" பரிதாபகர நிலையில் இருந்த ஸுராக்கா தலையாட்டினார். நபியவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார்கள்; குதிரையின் கால்கள் மணலிலிருந்து விடுபட்டன. பெரிய ஆசுவாச மூச்சு வெளிப்பட்டது ஸுராக்காவிடமிருந்து. முஹம்மது நபியிடம், "கொஞ்சம் பொறுங்கள், நான் உங்களிடம் சற்றுப் பேசவேண்டும். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் எந்த உபத்திரவமும் புரிய மாட்டேன்" "உனக்கு எங்களிடமிருந்து என்ன வேண்டும்?" "முஹம்மதே! அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன், உங்களது மார்க்கம் விரைவில் மேலோங்கப் போகிறது, அது எனக்கு நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது. நீங்கள் வலிமையுள்ளவராய்த் திகழப் போகிறீர்கள். நான் அந்த சமயம் உங்களது ராஜாங்கத்திற்கு வருகை தந்தால் என்னை நீங்கள் கௌரவிக்க வேண்டும். அந்த வாக்குறுதியை நீங்கள் எனக்கு எழுத்திலும் தரவேண்டும்" தான் துரத்தி வந்த முஹம்மது நிச்சயம் ஒரு சாதாரண மனிதர் அல்லர் என்பதை நடந்த நிகழ்வுகள் ஸுராக்காவிற்கு உறுதிப்படுத்திவிட்டன. இதுவரை நபியவர்களைப்பற்றி அவர் கேள்விபட்டிருந்ததையும் இப்பொழுது இந்த அதிசயங்களையும் கொண்டு யூகித்தபோது, விரைவில் முஹம்மது நபியின் அரசாட்சி அரேபியாவெங்கும் பரவப்போவது திண்ணம் என்பது அவருக்கு உறுதியாகிவிட்டது. அப்பொழுது தன்னை அடையாளம் தெரியாமல் முஹம்மது நபி மறந்துவிட்டால்? அதனால் அந்தக் கோரிக்கையை எழுப்பினார் ஸுராக்கா. நபியவர்கள் விவரிக்க, ஆமிர் உலர்ந்த எலும்பொன்றில் எழுத, ஸுராக்காவிற்கு வாக்குறுதிவழங்கப்பட்டது. பெருமகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட ஸுராக்காவிடம் நபியவர்கள் கூறினார்கள், "குஸ்ரூவின் கடகங்கள் உன் கரங்களை அலங்கரிக்கப்போவதைக் கற்பனை செய்து கொள் ஸுராக்கா" "யார்? பாரசீக நாட்டின் சக்கரவர்த்தி குஸ்ரூவா? அவரது கடகங்களா?” ஒன்றும் புரியாமல் ஆச்சரியத்துடன் கேட்டார் ஸுராக்கா. "ஆம். பாரசீக நாட்டின் சக்கரவர்த்தியும் ஹுர்முஸின் மகனுமான குஸ்ரூவேதான்" என்று பதில் வந்தது. அது தீர்க்கதரிசனம்! மகா தீர்க்கதரிசனம்! தாம் பிறந்து, 53 வருடங்கள் வளர்ந்த மண்ணைத் துறந்து, அசந்தர்ப்பமான சூழ்நிலையில் வேறு ஊருக்குப் புலம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கிறார் ஒருவர். அவரோ அவர் எடுத்தியம்பும் மார்க்கமோ எத்தகைய வலுவான நிலையிலும் அப்போது இல்லை. அந்நிலையில் பாரசீக வல்லரசை ஆளும் சக்ரவர்த்தியின் கடகங்கள் அரபு நாட்டுப் பாலைவனத்தில் வசிக்கும் ஒரு பதுஉ அரபியிடம் வந்து சேரும் என்று அவர் சொல்லக் கூடியதெல்லாம் வெறும் ஆச்சரியமல்ல. அதையும் தாண்டி ஆச்சரியமானது. வீட்டிற்குப் போய்ச் சேருவோம் என்று திரும்பலானார் ஸுராக்கா. வழியில் அவரது கோத்திரத்து மக்கள் சிலர் முஹம்மது நபியைத் தேடிக் கண்டுபிடிக்க வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடமெல்லாம், "எல்லோரும் திரும்பிச் செல்லுங்கள். நான் வழித்தட விற்பன்னன் என்பது உங்களுக்கெல்லாம் நன்கு தெரியும். இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு மணலையும் சல்லடையிட்டுத் தேடிவிட்டேன். முஹம்மது இந்தப் பக்கம் சென்றதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை" "அப்படியா! ஸுராக்காவே சொல்லியாச்சு, இன்னம் என்ன" என்று திரும்பினார்கள் அவர்கள். தமக்கும் முஹம்மது நபிக்கும் இடையில் நடைபெற்ற விஷயத்தை மிகவும் ரகசியமாய் வைத்துக் கொண்டார் ஸுராக்கா. அவர்கள் நலமே மதீனா சென்று அடைந்தவிட்டார்கள், இனி குரைஷிகளால் அவர்களுக்கு ஏதும் ஆபத்தில்லை என்பது உறுதியானவுடன்தான் நடந்ததைத் தம் மக்களிடம் சொன்னார். அந்தச் செய்தி அப்படியே மிதந்து மக்காவில் அபூஜஹ்லு காதில் வந்து விழுந்தது. உடனே கிளம்பி ஓடினான் அபூஜஹ்லு. ஸுராக்காவைச் சந்தித்து, "இப்படி வாய்ப்பைக் கைநழுவ விட்டுவிட்டாயே, உருப்படுவாயா நீ" என்பதுபோல் திட்டித் தீர்த்தான். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார் ஸுராக்கா. இறுதியில் கூறினார், "அபுல்ஹகம், அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். மணலில் எனது குதிரை எப்படிப் புதையுண்டது என்பதை அன்று நீ பார்த்திருக்க வேண்டும். முஹம்மது, அல்லாஹ்வினுடைய தூதர்தான் என்பதை எந்தவிதச் சந்தேகமும் இன்றி நீ அறிந்து கொண்டிருப்பாய். அவரை யாரால் தடுத்து நிறுத்தமுடியும்?" அந்தளவு உணர்ந்திருந்தால் அபுல்ஹகம், அபூஜஹ்லு என்று ஆகியிருக்க மாட்டானே! காலம் உருண்டது. அடுத்த சில ஆண்டுகளில் பற்பல மாற்றங்கள் பரபரவென்று நிகழ்ந்தன. எதிரிகள் துரத்திக் கொண்டுவர, மக்காவிலிருந்து இருளில் வெளியேறிய நபியவர்கள் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புடைசூழ, அவர்களது வாள்கள் மினுமினுக்க, ஈட்டிகள் தகதகக்க, யுத்தமின்றி மக்காவைக் கைப்பற்றினார்கள். எந்த ஊரிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களாய் வெளியேறினார்களோ அதே ஊருக்குள் வெற்றி வீரராய் நுழைந்தார்கள். அகந்தையிலும் அகங்காரத்திலும் தங்கள் இஷ்டத்திற்குத் திரிந்து கொண்டிருந்தார்களே குரைஷி குலத்தலைவர்கள், அவர்களெல்லாம் பணிவுடனும் பயத்துடனும் மரியாதையுடனும் நபியவர்களிடம் கருணை வேண்டிக் காத்து நிற்கும் அபூர்வக் காட்சி மக்காவில் அரங்கேறிக் கொண்டிருந்தது. "உங்கள் அனைவருக்கும் விடுதலை, எனக்கு உங்களிடம் எதுவும் தேவையில்லை. பழிவாங்குதல் இல்லை!" "அனைவரும் மன்னிக்கப்பட்டீர்கள், அனைவருக்கும் மன்னிப்பு!" நபியவர்கள் அறிவிக்க, அறிவிக்க குரைஷிகள் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் மயங்கிவிழாத குறை. வரலாற்றுப் பக்கங்களில் ரத்தத்தையும் கொடூரத்தையும் அக்கிரமத்தையும் நிறைத்தவர்கள் இஸ்லாத்தினுள் நுழைந்து பச்சிளங் குழந்தைகளாய் மறுவாழ்வைத் துவங்க, மற்றொரு அத்தியாயமொன்று மக்கா மணலில் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. தீயாய்ப் பரவிய இச்செய்தி நாலாதிசையிலும் பரவி குதைதில் இருந்த ஸுராக்காவையும் அடைந்தது. "வேறென்ன அத்தாட்சி வேண்டும்? இன்னம் எதற்குக் காத்திருக்க வேண்டும். இவர் நபி! ஏக இறைவனின் இறுதி நபி! செல்வோம், ஏற்போம், இணைவோம்" என்று புறப்பட்டார் ஸுராக்கா இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு. கிளம்புமுன், ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளுக்குமுன் பாலை வெளியில் நபியவர்களிடமிருந்து எழுத்தில் பெற்றுக்கொண்ட வாக்குறுதியையும் மறக்காமல் எடுத்துக் கொண்டார். அப்பொழுது ஜிஃரானா பகுதியில் இருந்தார்கள் நபியவர்கள். இதர தோழர்கள் சூழ ஒட்டகத்தின்மேல் அமர்ந்து சவாரித்துக் கொண்டிருந்தார்கள் முஹம்மது நபி. அப்பொழுது வேகமாய் யாரோ ஒருவர் முஹம்மது நபியை நோக்கி முன்னேறுவதைக் கண்டு, தோழர்களின் ஈட்டிகளின் பின்புறம் எச்சரிக்கை உணர்வுடன் அவரை இடித்துத் தடுத்தன. "பின்னால் போ, பின்னால் போ, என்ன வேண்டும் உனக்கு?" என்று தோழர்கள் தடுத்து நிறுத்த முயல, அதற்கெல்லாம் அசரவில்லை ஸுராக்கா. அனைவரையும் தள்ளிக்கொண்டு நபியவர்களை நெருங்கிவிட்டார். ஒட்டகத்தின்மேல் இருந்த நபியவர்களிடம், தம்மிடமிருந்த வாக்குறுதிப் பிரமாணத்தைக் கைகளில் ஏந்தி உயர்த்திக் காட்டி, உரத்துக் கூவினார், "அல்லாஹ்வின் தூதரே, நான்தான் ஸுராக்கா இப்னு மாலிக். இதோ தாங்கள் எனக்கு எழுதி அளித்த வாக்குறுதி" அவரை நன்கு அடையாளம் தெரிந்துகொண்டு, அன்புடன் வரவேற்றார்கள் நபியவர்கள். "அருகே வா ஸுராக்கா! உனக்களிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேறும் நாள் இது. கருணை உன்மேல் பொழியும் நாள் இது" நபியவர்களிடம் கலிமா பகர்ந்து இஸ்லாத்தில் நுழைந்தார் ஸுராக்கா. அனைவருக்கும் ஏராளமாய்ப் பொருட்செல்வம் வழங்கப்பட்டதைப்போல் ஸுராக்காவுக்கும் ஏராளமாய் அளிக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நபியவர்களின் இவ்வுலக வாழ்வு முடிவிற்கு வந்தது. மாபெரும் சோகமொன்று ஸுராக்காவையும் சூழ்ந்தது. தாம் ஒருகாலத்தில் அந்த உத்தம நபியை கொல்வதற்காகக் கிளம்பிய செயலை நினைத்து நினைத்து சொல்லமாட்டாத் துக்கம் பொங்கும். "கேவலம் ஒரு நூறு ஒட்டகங்களுக்காக அந்த உத்தமரைக் கொல்ல நினைத்தேனே, உலகத்திலுள்ள அத்தனை ஒட்டகங்களையும் மதிப்பிட்டாலும் அவரது நகத்துணுக்கிற்கு ஈடாகுமா?" என்று எண்ணிக் கொள்வார். இறுதியில் நபியவர்களின் தீர்க்கதரிசன வார்த்தைகளும் நினைவிற்கு வரும், "குஸ்ரூவின் கடகங்கள் உன் கரங்களை அலங்கரிக்கப்போவதை கற்பனை செய்து கொள் ஸுராக்கா" எப்படி அது முடியும்? எப்படி அது சாத்தியம்? ஆனால் அது நடக்கும் என்று அவரது உள்மனம் மட்டும் சர்வ நிச்சயமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தது. * * * * * அடுத்து அபூபக்ரு ரலியலலாஹு அன்ஹு முதலில் கலீஃபாவாக பொறுப்பேற்றுக் கொண்டதும் புறப்பட்டது முஸ்லிம்களின் படை. பாரசீகத்தின் வாசலைத் திறந்து வேகமாய் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். சிறிது சிறிதாக முஸ்லிம்கள் வசமாக ஆரம்பித்தது பாரசீகம். அதற்கடுத்து உமர் அல்கத்தாப் ரலியல்லாஹு அன்ஹுவின் காலத்தில் மேலும் வீரியத்துடன் போர் நடைபெற ஆரம்பித்தது. முஸ்லிம்களின் படை சூறாவளியாய்ப் பாரசீகத்தில் நுழைய, கோட்டைகளும் எதிரிப் படைகளும் எதேச்சாதிகார ஆட்சியாளர்களும் தகர்க்கப்பட்டு, அந்தப் பேரரசு ஒரு முடிவிற்கு வர ஆரம்பித்தது. உமர் அல்கத்தாபின் காலத்தில் பாரசீகர்களுடன் நடைபெற்ற போர்களில் வெகு முக்கியமான ஒன்று அல்-காதிஸிய்யாப் போர். ஹிஜ்ரி 15ஆம் ஆண்டு நிகழ்வுற்ற அப்போர் இஸ்லாமிய வரலாற்றின் அதிமுக்கியப் போர்களில் ஒன்று. பாரசீகப் படைகளுக்கு எதிராக ஸஅத் பின் அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு தலைமையில் படையொன்றை அனுப்பி வைத்தார் உமர். காதிஸிய்யாவில் நான்கு நாட்கள் நடைபெற்ற அப்போர் படு உக்கிரம். தோழர்கள் அப்போரில் பறை சாற்றிய வீரம் அசாத்தியமானது. நாமெல்லாம் அவசியம் படித்துணர வேண்டிய சுவையான வீர வரலாறு அது. அப்போரில் முஸ்லிம்கள் மிகத் தெளிவான வெற்றியை அடைந்தனர். அவர்களின் வசம் ஏராளமான பொருட் செல்வம் வந்து சேர்ந்தது. வெற்றிச் செய்தியையும் அரசாங்கக் கருவூலத்திற்குச் சேரவேண்டிய ஐந்தில் ஒரு பங்கையும் மதீனாவிற்கு அனுப்பிவைத்தார் ஸஅத். உமரின் எதிரே அவை குவிக்கப்பட்டன. திகைப்புடன் அதை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார் உமர். குஸ்ரூவின் தங்கக் கிரீடம்! அதில் பதிக்கப்பட்டிருந்த முத்து சிரித்தது. அவனது ஆடைகள் தங்க இழைகளால் நெய்யப்பட்டிருந்தன. அவனது கச்சை தகதகவென உயர் ரகக் கற்களால் மின்னியது. விலைமதிப்பற்ற அவனது கடகங்கள், மற்றும் எண்ணற்ற விலையுயர்ந்த பொருள்கள் என்று அனைத்தும் பரப்பிக் கிடந்தன. தொடக்கூட இல்லை, தன்னிடம் எப்பொழுதும் இருக்கும் பிரம்பினால் அந்தச் செல்வக் குவியல்களைக் கிளறிப் பார்த்தார் உமர். திரும்பி, தன்னுடன் இருந்த தோழர்களிடம், "இந்தளவு செல்வத்தைச் சரியான முறையில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் மக்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள்" அங்கு அலீ ரலியல்லாஹு அன்ஹுவும் இருந்தார். "தாங்கள் செல்வத்தின்மீது சிறிய ஆசையோ பேராசையோ கொள்வதில்லை. எனவே உங்கள் குடிமக்களும் பேராசைக்கு அப்பாற்பட்டவர்களாய் இருக்கிறார்கள். தாங்கள் அதை அனுபவிக்கும் எண்ணம் கொண்டவராய் இருந்திருந்தால் அவர்களும் அப்படியே ஆகிவிட்டிருப்பார்கள்" அவர்கள் அனைவரின் மேன்மையறிய இந்த வாக்கியம் போதாது? அங்குக் குழுமியிருந்த மக்கள் மத்தியில் ஸுராக்கா இப்னு மாலிக் இருந்தார். "இங்கே வாரும்" என்று அவரை அழைத்தார் உமர். குஸ்ரூவினுடைய ஆடை, மேலங்கி, ஆகியனவற்றை அணிந்து கொள்ளச் சொன்னார். "இதோ விலையுயர்ந்த அவனது காலணி, இட்டுக் கொள்ளுங்கள்" வாளைச் செருகி வைத்துக் கொள்கின்ற இடுப்புக் கச்சை இருந்தது. அதை அவரே எழுந்து ஸுராக்காவிற்கு அணிவித்தார். பின்னர் பாரசீக வல்லரசின் சக்கரவர்த்தி, பராக்கிரம அரசன் குஸ்ரூவின் கிரீடம் ஸுராக்காவின் தலையினில் சூட்டப்பட்டது. இறுதியில் அவனது கடகங்கள் அவரது கையில் அணிவிக்கப்பட்டன. களிப்புடன் ஸுராக்காவையே பார்த்துக் கொண்டிருந்த உமர் அவரை முன்னும் பின்னும் நடக்கச் சொல்லி வேடிக்கை பார்த்தார். "சபாஷ்! முத்லஜ் குலத்தைச் சேர்ந்த நமது பதுஉச் சகோதரர், பாரசீகச் சக்ரவர்த்தி குஸ்ரூவின் கிரீடத்தையும் கடகங்களையும் பூண்டுள்ள இந்நாள் எத்தகைய நன்னாள். ஸுராக்கா இதனைப் பூண்டுள்ள உமக்கும் உம்முடைய கோத்திரத்து மக்களுக்கும் இது எத்தகைய நற்பேறு" முஸ்லிம்கள் குரல் பொங்கி எழுந்தது, "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்" "போதும், அவற்றைக் களையுங்கள் ஸுராக்கா" கூறிவிட்டு விண்ணை நோக்கித் தனது கைகளை உயர்த்தி இறைஞ்சினார் உமர், "யா அல்லாஹ்! என்னைவிட மிக உயர்ந்தவரும் உனது அன்பிற்கும் கனிவிற்கும் பாத்திரமான உன் தூதர் வசம் இந்தச் செல்வம் வந்தடைய நீ நாடவில்லை. அடுத்து வந்த அபூபக்ரு! அவரும் என்னைவிட மிக உயர்ந்தவர், அவர் வசமும் இந்தச் செல்வம் வந்தடைய நீ நாடவில்லை. இப்பொழுது இவற்றை எனது ஆட்சியில் அருளியிருக்கிறாய். நீ அதை எனக்கு ஒரு தண்டனையாக ஆக்கிவிடாமல் இருக்க உன்னிடமே பிரார்த்திக்கிறேன்" அழுதார் உமர். கூடியிருந்தவர்கள் அவர்மேல் இரக்கம் கொள்ளுமளவிற்கு அழுதார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபை அழைத்து, "இன்று மாலைக்குள் இவை அனைத்தையும் விற்றுவிட்டு அதனை முஸ்லிம்களுக்குப் பகிர்ந்து அளித்துவிட வேண்டும்" தனக்கென்று அதில் பங்கு எதுவுமே தேவையில்லை என்பதையும் உறுதிபட அறிவித்தார் உமர். ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்குமுன் நபியவர்கள் அறிவித்த முன்னறிவிப்பு அட்சரம் பிசகாமல் அன்று அங்கு நிறைவேறியது! தீர்க்கதரிசனம் மெய்யானது! அந்த திருப்தியை நெஞ்சில் சுமந்து, உடம்பில் சுமந்திருந்த செல்வச் சுமையை கழட்டிக் கொடுத்தார் ஸுராக்கா இப்னு மாலிக். ரலியல்லாஹு அன்ஹு! |
Thank s By
http://www.satyamargam.com
oOo இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ். |
No comments:
Post a Comment