வரலாறு - தோழர்கள் |
ஞாயிறு, 14 மார்ச் 2010 12:44 |
பத்ருப் போரில் ஏற்பட்ட படுதோல்வியும் தம் பெருந்தலைவர்களது உயிரிழப்பும் மக்கத்துக் குரைஷிகளை அளவற்ற ஆத்திரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியிருந்தன. உயிர் பிழைக்கத் தப்பித்து மதீனாவுக்கு ஓடியது மட்டுமல்லாமல் அரசாங்கம் ஒன்றை நிறுவும் அளவிற்கு வளர்ந்துவிட்ட முஹம்மதை எப்படியாவது கொன்றொழித்தால்தான் பட்ட அவமானத்திற்கும் அடைந்த துன்பத்திற்கும் ஒரு தீர்வு என்ற நிலையிலிருந்தார்கள் அவர்கள். பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்பதே மூச்சாகிப் போயிருந்தது அவர்களுக்கு. ஹிஜ்ரீ 3ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் பெரும்படையொன்று திரட்டப்பட்டு, அது மதீனாவை நோக்கி முன்னேறியது. பெரியவர், சிறியவர், செல்வந்தன், ஏழை என்றெல்லாம் பார்க்காமல் அனைவரும் சேர்ந்து கொண்ட படை. தவிர, உயர்குடியாளர்களின் மனைவியரும் பெண்மக்களுங்கூட படையில் இருந்தனர். அவர்களது பங்கு, படையில் வீரர்களை ஊக்குவித்துத் தூண்டிவிடுவது. போரில் அவர்கள் தளர்ச்சியுற்றாலோ, பயந்துபோய் பின்வாங்கினாலோ அவர்களின் விலாவில் குத்தி, வீரம் தூண்டி அனுப்புவதற்கு அப்பெண்கள். இன்றைய விளையாட்டுப் போட்டிகளில் பார்க்கிறோமே, ஊக்க மங்கைகள், ஏறக்குறைய அதுபோல. இந்தப் பெண்கள் அணியில் அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த், அம்ரிப்னுல் ஆஸின் மனைவி ரய்தாஹ், தல்ஹாவின் மனைவி ஸுலாஃபா ஆகியோரும் அடக்கம். தவிர ஸுலாஃபாவின் மூன்று மகன்கள் முஸாஃபி, அல்-ஹாரிஸ் எனும் அல் ஜுலாஸ், கிலாப் ஆகியோரும் போருக்காகத் தந்தை தல்ஹாவுடன் வந்திருந்தனர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தலைமையில் அப்போதைய மதீனா நகருக்கு வெளியே 8கி.மீ. தொலைவில் உள்ள உஹது மலையடிவாரத்தில் எதிரிகளை எதிர்கொள்ள முஸ்லிம்களின் படை தயாரானது. அங்குப் போர் தொடங்கியது. மூர்க்கமான போர். குரைஷிப் பெண்கள் படைகளின் பின்னால் நின்று கொண்டு ஆவேசமாக மேளம் கொட்டியும் கூக்குரலிட்டும் பாட்டுப் பாடியும் தங்கள் வீரர்களை உசுப்பேத்திக் கொண்டிருந்தார்கள்: "நீ முன்னேறிச் செல், உன்னைக் கட்டியணைத்து, தலையணையில் மஞ்சமும் தஞ்சமும் தருவோம்! நீ பின்வாங்கினாலோ, உன்னைக் கைவிடுவோம்; காதலும் துறப்போம்" அது குரைஷிக் கூட்ட ஆண்களுக்கு மந்திரமாய் வேலை செய்தது. அவர்களுக்குப் பெரும்பாலும் சாதகமாய்ப் போர் நடந்தது. முஸ்லிம்கள் தரப்பில் எழுபது உயிரழப்புகள். அதிலும் முஸ்லிம்களுள் பெருவீரரும் முஹம்மது நபியின் சிற்றப்பாவுமான ஹம்ஸா உட்பட பல சிறப்பான தோழர்கள் உயிரிழந்திருந்தனர். ரலியல்லாஹு அன்ஹும்! அந்த வெற்றி, குரைஷிப் பெண்களை மதிமயக்கி வெறியாட்டம் போட வைத்தது. குலவையிட்டும் நாட்டியமாடியும் போர்க்களத்தில் பேரழிவு நிகழ்த்தினார்கள் அவர்கள். மரணித்துக் கிடந்த முஸ்லிம் வீரர்களின் சடலங்கள், அப்பெண்களால் சின்னா பின்னமாக்கப் பட்டன. குடல்கள் கிழித்தெறியப்பட்டன. கண்கள் நோண்டப்பட்டன. காதுகள் அறுக்கப்பட்டன. மூக்குகள் குடையப்பட்டன. இவ்வளவு குரூரமும் போதாதென்று ஒருத்தி முஸ்லிம் வீரர்களின் அறுக்கப்பட்ட அங்கங்களைக் கழுத்திலும் கைகளிலும் அணிகலனாக அணிந்து கொண்டு ஆனந்தக் கூத்தாடினாள். பத்ருப் போரில் பலியான தங்கள் தந்தை, கணவன், சகோதரன் ஆகியோரது இழப்பிற்கெல்லாம் பரிகாரம் கிடைத்த திருப்தி ஏற்பட்டது அப்பெண்களுக்கு. ஆனால், ஸஅதின் மகள் ஸுலாஃபா سلافة بنت سعد உடைய அனுபவம் எதிர்மாறாய் அமைந்துவிட்டது. போர்க்களத்திலிருந்து கணவனும் திரும்பவில்லை; மகன்களையும் காணவில்லை. சீக்கிரம் வந்து சேர்ந்தால் நடந்தேறிக் கொண்டிருக்கும் கூத்தில் சேர்ந்து கும்மியடிக்க ஆர்வமாயிருந்தவளுக்குக் கவலை அதிகரித்தது. போர், குரைஷிகளுக்கு ஏறத்தாழ சாதகமாய் முடிந்திருந்தாலும் அவர்கள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்படாமலில்லை. மன உளைச்சலுடன் கிடந்த சடலங்களைப் பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு, முதலில் கணவன் தல்ஹாவின் சடலம் இரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு பெருங்குரலெடுத்துக் கத்தினாள். வெறிபிடித்தாற்போல் மகன்களைத் தேட, இரு மகன்கள் உஹது மலையடியில் இறந்து கிடந்தனர். குற்றுயிராய்க் கிடந்தான் அல்-ஹாரிஸ் எனும் அல் ஜுலாஸ். பாய்ந்தோடி மடியில் கிடத்தி, அழுது, அரற்றி ஒப்பாரி வைத்து, "யார் அவன்? உங்களை வெட்டியவன் யார்?" என்று கேட்டவளுக்கு, மரணம் தொண்டையை அடைக்க, "ஆஸிம் இப்னு தாபித்! அவன்தான் என்னை, முஸாஃபியை, மற்றும் ..." என்று சொல்லி இறந்து விட்டான். அது ஸுலாஃபாவிற்கு மாபெரும் சோகம், துக்கம், ஆத்திரம் என அனைத்தையும் அளித்த நிகழ்ச்சி. இழப்பிற்கு ஈடுசெய்யப் புறப்பட்டு வந்த படை ஓரளவு ஈடுசெய்த களிப்புடன் திரும்ப, அவளுக்கு மட்டும் அனைத்தும் முடிந்து போனது. ஆஸிம் இப்னு தாபித் என்பவரால் அவள் குலம் அழிந்திருந்தது. கணவன் மற்றும் மூன்று மகன்கள் என மொத்தக் குடும்பமும். ஆத்திரத்தில் ஊளையிட்டுக் கத்தி சூளுரைத்தாள் ஸுலாஃபா: "கடவுளர்கள் அல்-லாத், அல்-உஸ்ஸாமேல் ஆணையிட்டுச் சொல்கிறேன், யார் ஆஸிம் இப்னு தாபித்தின் மண்டையோட்டைக் கொண்டு வந்து தருகிறீர்களோ, அவர்கள் கேட்கும் தொகையோ, நூறு ஒட்டகங்களோ பரிசாய் அளிக்கப்படும். அந்த மண்டையோட்டில் மதுபானம் அருந்தாதவரை என் ஆத்திரம் தீரப் போவதில்லை" மிகவும் கொடூரமான சபதம் அது. ஸுலாஃபா சபதம்! நோட்டீஸ், வானொலி, தொலைக்காட்சி, இன்டர்நெட் இப்படி எதுவும் இல்லாத அக்காலத்திலேயே மக்கா முழுதும் அது, 'ஸுலாஃபா சபதம்' என மிகவும் பிரசித்தி அடைந்தது. எப்படியும் அந்த ஆஸிமைப் பிடித்துக் கொடுத்துப் பெருந்தொகை கறந்துவிடத் துடித்தது இளைஞர் கூட்டம். இது இப்படியிருக்க, போருக்குப்பின் மதீனா திரும்பிய முஸ்லிம்கள், உஹத் கற்றுத் தந்த பாடங்களைப் பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வாழ்வில் மாபெரும் சோக நிகழ்வு அது. வீர மரணமடைந்தவர்களின் பிரிவும் அவர்களின் மீது குரைஷிகள் அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனமும் பலத்த உளைச்சலைத் தந்தபோதும், அப்பேற்பட்ட நெருக்கடியான காலகட்டத்திலும் களத்தில் நிலைநின்று, வீரத்துக்குத் தம் வாட்களால் உஹது மண்ணில் விரிவுரை எழுதிப் பெருமைக்குரியவர்களும் இருந்தனர். பேச்சுவாக்கில் ஆஸிம் இப்னு தாபித்தின் சாகசம் பரிமாறிக்கொள்ளப்பட, அங்கிருந்த ஒருவர் சொன்னார்: "அட இதிலென்ன வியப்பிருக்கிறது? ஞாபகமில்லையா, பத்ருப் போரின்போது நாமெல்லாம் எப்படிப் போரிடப் போகிறோம் என்று முஹம்மது நபி கேட்டார்களே? அதற்கு இந்த ஆஸிம் வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு நின்று, 'எதிரி நூறு அடி தூரத்தில் இருந்தால் நான் அம்பால் தாக்குவேன். ஈட்டி தாக்கும் தொலைவில் நெருங்கிவிட்டால் ஈட்டி உடையும்வரை சண்டையிடுவேன். பிறகு அவனுடன் நேருக்கு நேர் தனியாக மற்போர் அல்லது வாள்தான்' என்று கூற, நபிகளார் கூறினார்களே, 'அப்படித்தான் போர் புரிய வேண்டும். யார் சண்டையிடுகிறீர்களோ அவர் ஆஸிம் இப்னு தாபித்போல் சண்டையிடட்டும்' என்று ஆஸிமின் போர்த் திறத்தைச் சுட்டினார்களே! மறந்து விட்டீர்களா?" அதைவிடச் சான்றிதழ் தேவையா என்ன? அந்த வீரம்தான் ஸுலாஃபா குடும்பத்தை வேரறுத்திருந்தது. ஆஸிம் (இப்னு தாபித் பின் அபில் அக்லஹ்) மதீனாவின் அவ்ஸ் குலத்தைச் சார்ந்தவர். ஆஸிமின் சகோதரி (ஆஸியா என்ற) ஜமீலாவை உமர் கத்தாப் (ரலி) திருமணம் செய்திருந்தார் (அல்-இஸாபா). தமக்கு ஜமீலா மூலம் பிறந்த ஆண் மகவுக்கு ஆஸிம் என்று பெயர் சூட்டினார் உமர். இந்த ஆஸிம் இப்னு உமரின் மகள் வயிற்றுப் பேரன்தான் பின்னர் உமையாக்கள் காலத்தில் புகழ் பெற்ற கலீஃபாவாகத் திகழ்ந்தவரும் வரலாற்றில், "இரண்டாம் உமர்" என்று போற்றப் படுபவருமான உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்). உஹதுப் போரின் முடிவு குரைஷிகளுக்கு முக்கால்வாசி சாதகமாய் அமைந்து போனது, மதீனாவைச் சுற்றியிருந்த முஸ்லிமல்லாத இதர கோத்திரத்தார் மத்தியில் ஓர் உற்சாகத்தை ஏற்படுத்தியது. முஹம்மத், அவர் சொல்லும் புதிய மார்க்கம், நீதி, நேர்மை, ஆகியனவெல்லாம் அவர்கள் வாழ்ந்துவந்த வாழ்க்கைக்கு பெருஞ்சோதனைகளாக இருந்தன. மதீனாவில் முஸ்லிம்களின் செல்வாக்கும் பலமும் பெருகிக் கொண்டிருந்த நிலையில் சிறுசிறு இனமாய், குழுவாய், பாலையில் விரவிக் கிடந்த அவர்களால் பெரிதாய் ஏதும் முட்டிப் பார்க்க இயலாமல் இருந்தது. "இப்பொழுது முஸ்லிம்களின் முதுகெலும்பு உடைந்து விட்டது" என்று நினைத்தார்கள் அவர்கள். அதனால் தங்களால் இயன்ற காரியங்களில் இறங்கினார்கள். 'அஸது'க் குலமொன்று மதீனாவில் புகுந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டித் தயாராகியுள்ளதை உளவாளிகள் வந்து முஹம்மது நபியிடம் தெரிவித்தனர். அபூஸலமா (ரலி) தலைமையில் ஒரு சிறு படையினரை அனுப்பி வைக்க, அந்த அஸதுக் குலத்தினரின் கொள்ளைத் திட்டம் முறியடிக்கப்பட்டது. அடுத்து ஹுதைல் குலத்தின் காலித் இப்னு ஸுஃப்யான் பெரிய கூட்டமொன்று திரட்டி மதீனாவைத் தாக்க வரும் செய்தியின் துப்புக் கிடைத்தது. அப்துல்லாஹ் இப்னு அனீஸ் (ரலி) எனும் ஒற்றை வீரர் அதனை எதிர்கொள்ள நியமிக்கப் பெற்றார். மதீனா நோக்கி வந்து கொண்டிருந்த படையை உரானாஹ் எனும் இடத்தில் சென்று மடக்கிய அப்துல்லாஹ், காலிதைச் சந்தித்தார். "நானும் ஓர் அரபிதான். மதீனாவிற்கு அந்த முஹம்மதைக் கொல்லச் செல்கிறீர்கள் போலிருக்கிறதே! என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றார். இருவரும் காலாற நடக்க ஆரம்பிக்க, தனிமையான தூரம் வந்தவுடன் காலிதைக் கொன்று விஷயத்தைக் கச்சிதமாய் முடித்து மதீனா திரும்பினார் அனீஸ். ஹுதைல் கோத்திரத்திற்குப் பெரும் கோபத்தை அளித்தது அந்த இழப்பு. ஒருவர் வந்தார், தங்கள் தலைவனை, ஏதோ கிள்ளுக் கீரையைப்போல் கொன்றுவிட்டுச் சென்றார் என்பதை அவர்களால் தாங்க முடியவில்லை. ஆத்திரத்தில் பழிவாங்கத் துடித்தனர். சூழ்ச்சி உருவானது. என்ன செய்தார்கள் என்றால், தங்களின் நம்பிக்கைக்குரிய அதல் மற்றும் அல்-காராஹ் கோத்திரங்களிலிருந்து சிலரைப் பிரதிநிதியாக முஹம்மது நபியிடம் அனுப்பி வைத்தனர். குழுவினர் சிலர் அவ்வப்போது நபிகளாரை வந்து சந்திப்பது வழக்கமாக நடப்பதாகும். உண்மையிலேயே இஸ்லாத்தின் செய்தியினாலும் அதன் உண்மையினாலும் கவரப்பட்டவர்கள் நபிகளாரைச் சந்தித்து, தங்கியிருந்து பேசி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தங்கள் ஊர் திரும்பி, அங்குள்ள மக்களும் ஏற்றுக்கொள்ள, மெதுவாக இஸ்லாம் படர ஆரம்பித்திருந்தது. அப்படி இஸ்லாத்தைத் தெரிந்து கொள்பவர்கள்போல் இந்த இரு குழுவினரும் மதீனா வந்து சேர்ந்தனர். "உங்கள் மார்க்கம் மிகவும் நன்றாக இருக்கிறது. எங்கள் ஊரில் மற்ற மக்களும் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வமாயிருக்கின்றனர். உங்கள் தோழர்கள் சிலரை எங்களுடன் அனுப்புங்கள். அவர்கள் வந்து எங்களுக்கெல்லாம் இஸ்லாம் கற்றுத் தரட்டும். குர்ஆன் ஓதச் சொல்லித் தரட்டும்" என்று கோரிக்கை வைத்தனர். நபியவர்கள் சிறந்த ஆறு பேர் கொண்ட ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்தார்கள். மர்தத் இப்னு அபூ மர்தத், காலித் இப்னுல் புகைர், ஆஸிம் இப்னு தாபித், குபைப் இப்னு அதீ, ஸைத் இப்னுத் தத்தின்னாஹ் மற்றும் அப்துல்லாஹ் இப்னு தாரிக் ரலியல்லாஹு அன்ஹும். குழுவுக்குத் தலைவராக மர்தத் இப்னு அபூ மர்தத் நியமிக்கப் பெற்றார். இதில் குபைப் இப்னு அதீ ஞாபகமிருக்கிறதா? ஸயீத் இப்னு ஆமிர் வரலாற்றை வாசிக்கும்போது படித்தோமே அவரேதாம். குபைப் அப்படி மக்காவாசிகளிடம் மாட்டிக் கொள்ள முகாந்திரமாய் அமைந்த நிகழ்வு இங்குத் தொடங்குகிறது. நல்லவிதமாக அந்த இரு குழுக்களுடனும் இந்த ஆறு தோழர்களும் பிரயாணப் படலானார்கள். அர்-ராஜி எனும் பகுதியில் அமைந்திருந்த சுனை நீருற்றின் அருகே வந்ததும் இளைப்பாறத் தங்கினார்கள் அனைவரும். பாலையும் வெயிலும் மிகுத்திருக்கும் பிரதேசமான அரேபியாவில் நீர் கிடைக்கும் இடமே பிரயாணிகளின் சோலை. அவர்களுக்கும் அவர்களது வாகன மிருகங்களுக்கும் அடுத்துப் பிரயாணம் தொடரப் போதிய நீர் வேண்டுமில்லையா? "நன்றாக ஓய்வெடுத்துவிட்டுப் பிறகு பிரயாணம் தொடருவோம்" என்று முஸ்லிம்களை அங்கு அமர வைத்துவிட்டு, சிலரிடம் இரகசியமாக ஹுதைல் மக்களுக்குச் செய்தி சொல்லி அனுப்பப்பட்டது. உற்சாகமுடன் கிளம்பி வந்தது 100 பேர் கொண்ட ஹுதைல் கோத்திரத்தின் பனூ லிஹ்யான் எனும் கிளைக் கூட்டமொன்று. தேர்ந்த வில் வீரர்கள் கூட்டம் அது. திகைத்து ஆச்சரிமடைந்த ஆறு தோழர்களும் சுதாரித்துக் கொண்டு அருகிலிருந்த குன்றிலேறி ஆயுதமேந்திப் போராடத் தயாராகிவிட்டார்கள். நூத்திச் சொச்சம் பேர் சூழ்ந்திருந்தாலும் வேறு வழியில்லை; சண்டையிட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலை. அதல் மற்றும் அல்-காராஹ் மக்கள் நைச்சியம் பேசினார்கள்: "இதோ பாருங்கள். எங்களுக்கு உங்களைக் கொல்லும் நோக்கமெல்லாம் இல்லை. உங்களைப் பிடித்து மக்காவாசிகளிடம் விற்றால் ஏதோ கொஞ்சம் பணம் பார்ப்போம். அல்லாஹ்வின் மேல் சத்தியமாகச் சொல்கிறோம். நாங்கள் உங்களைக் கொல்ல மாட்டோம்" யோசித்தார்கள் ஆறு பேரும். இக்கட்டான சூழ்நிலை. எதிரிகளை நம்புவதா வேண்டாமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. வெகு நாட்களுக்கு முன்னரே ஆஸிமும் இறைவனிடம் ஒரு சத்தியப் பிரமாணம் செய்திருந்தார். போகிற போக்கில் நாம் இந்த இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விபரம்: "நான் இறைமறுப்பாளர் எவரையும் தொட மாட்டேன்; எந்த இறைமறுப்பாளரும் என்னைத் தொடக் கூடாது" அவரது இறை விசுவாசத்தின் ஒரு வித்தியாசப் பரிமாணம் அது. அப்படிப்பட்ட ஆஸிம் எதிரிகளை நம்ப ஒப்புக் கொள்வாரா? எனவே, "இறைவனுக்கு இணை வைப்பவர்களின் வாக்குறுதி, சத்தியத்தையெல்லாம் நம்ப முடியாது. முடிந்தவரை சண்டையிட்டுப் பார்ப்போம்" என்று ஆஸிம் உறுதிபடக் கூறினார். குழுத்தலைவர் மர்ததும் காலிதும் ஆஸிம் கூறியதை ஏற்றனர். குபைப், ஸைத், அப்துல்லாஹ் ஆகிய மூவருக்கும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறும் எதிரிகளின் வாக்குறுதியை நம்பிப் பார்க்கலாம் என்ற நிலைப்பாடு. விளைவின் தாக்கம் ஆஸிமைப் பொருத்தவரை ஒருபடி மேல் இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஏனெனில் அவருக்கும் ஸுலாஃபாவின் சூளுரை நன்றாகவே தெரியும். எதிர்த்து இடப்போகும் சண்டையில் மரணம் என்பது நிச்சயமான ஒன்று. அதன் பிறகு? இரைந்து பிரார்தித்தார்: "யா அல்லாஹ்! உனது மார்க்கத்திற்காகவே நான் சண்டையிடுகிறேன். என்னுடைய எலும்போ, சதையோ எதுவுமே என் எதிரிகளின் கைகளில் சிக்கிவிடாமல் காப்பாற்று!" அது எப்படி சாத்தியம்? அதெல்லாம் தெரியாது. அவரது நம்பிக்கையே பிரதானம்! பிரார்த்தனை புரிந்தார் ஆஸிம். தாக்கினார்கள் எதிரிகள். எதிர்த்துச் சண்டையிட்டார்கள் தோழர்கள் மூவரும். ஆள் பலத்தில் மிகுந்திருந்த எதிரிகள் வெல்ல, வீரமரணம் எய்தினர் மூவரும். குபைப், ஸைத், அப்துல்லாஹ் ஆகிய மூவரும் எதிரிகளின் வாக்குறுதியை நம்பலாம் என்று முடிவெடுத்தவர்கள் சரணடைந்தனர். ஆனால் குன்றிலிருந்து இறங்கி வந்து கைதிகளாக ஆனதுமே அப்துல்லாஹ்விற்கு எதிரிகளின் நயவஞ்சகம் புரிந்து விட்டது. கட்டப்பட்டிருந்த கைகளை எப்படியோ விடுவித்துக் கொண்டவர், வாளொன்று ஏந்திப் போரிடத் தயாராகிவிட்டார். ஆனால் எதிரிகளின் அம்புகளும் கற்களும் அவரைக் கொன்றன. குபைபும் ஸைதும் தப்பித்து விடாமல் கடுமையான காவல் போடப்பட்டது. கொல்லப்பட்ட நால்வரில் ஆஸிம் இப்னு தாபித் இருந்தது முதலில் ஹுதைல் மக்களுக்குத் தெரியவில்லை. பின்னர்தான் அவர்களில் ஒருவன் அடையாளம் கண்டு சொன்னான். உற்சாகம் பற்றிக் கொண்டது அவர்களுக்கு. ஸுலாஃபா சபதம் அவர்களுக்கும் தெரிந்திருந்த செய்திதான். ஆறுதல் பரிசுக்காகக் காத்திருந்தவனுக்கு முதல் பரிசே கிடைத்தைப்போல் ஆகிவிட்டது அவர்களின் நிலை. ஸுலாஃபாவின் மதுபானத்திற்கு ஆஸிமின் மண்டையோட்டை, புதுக்கோப்பையாக அளித்துவிட்டால் கிடைக்கப் போகும் அளவற்ற பரிசுத் தொகையை நினைத்து அவர்களுக்கு அளவிலா உற்சாகம். அதற்குள் செய்தி மக்காவிற்கும் பரவிவிட்டது. குரைஷிகள் உடனே ஆளனுப்பிவிட்டார்கள். "கொண்டு வா மண்டையோட்டை. ஸுலாஃபா துயர் துடைத்து, சபதம் நிறைவேற வைப்போம். இந்தா பணம்" என்று வெகு தாராளமானப் பரிசுத் தொகையும் அனுப்பி வைத்தார்கள். தலை மகிழ்ச்சியில் கிறுகிறுக்க தலை அறுக்கச் சென்றான் ஹுதைல் ஒருவன். ஆனால் எங்கிருந்தோ வந்து மொய்த்திருந்தது தேனீக்கள் மற்றும் குளவிகளின் பெருந்திரளொன்று, ஆஸிம் இப்னு தாபித்தின் சடலத்தின் மேல். மேகம்போல் அவை அவர் மேல் மொய்த்திருந்தன. ஆச்சரியத்துடன் நெருங்கியவனை குளவிகளும் தேனீக்களும் கொட்ட ஆரம்பித்தன. விரைந்து பின்வாங்கினான். மீண்டும் நெருங்க அவை மீண்டும் கொட்டின. அவனோடு வேறு சிலரும் சேர்ந்து கொண்டு வேறு என்னென்வோ செய்து நெருங்கப் பார்த்தார்கள், ம்ஹும் முடியவில்லை அவர்களால்!. எந்தப் பக்கம் நெருங்கினாலும் பூச்சிகள் பறந்து வந்து தாக்கின. கொட்ட வரும் பூச்சிகளை வாள் கொண்டா வெட்ட முடியும்? ஒருவன் ஆலோசனை சொன்னான், "அப்படியே விடுங்கள். இரவானதும் பூச்சிகள் பறந்து விடும். அப்பொழுது வந்து தலையைக் கொய்யலாம்" கைக்குப் பிணமன்றிப் பைக்குப் பணம் கிடைக்காதல்லவா? தூரத்தில் அமர்ந்து காத்திருந்தார்கள் அவர்கள். மாலை வந்தது, இருளும் வந்தது, கூடவே பெருந்திரளான மேகக் கூட்டமும் வந்தது. பாலை அரேபியாவில் அத்தி பூக்காது. ஆனால் அத்தி பூத்தாற்போல் மழை பெய்யும். மழையென்றால் பேய் மழை. இடி, மின்னலுடன் கூடிய கனமான மழை. அப்படியொரு பெருமழை திடீரென்று பெய்ய ஆரம்பித்தது. மலை இடுக்குகளிலிருந்து மழை நீர் பெருக்கெடுத்து வழிந்துவர, ஆறாக வெள்ள நீர் சேர்ந்து பாய்ந்தோட ஆரம்பித்தது. அந்தப் பகுதி முழுதும் அணை உடைந்ததுபோல் வெள்ளம். வேறொன்றும் செய்ய இயலாமல் அனைவரும் அஞ்சி ஓரமாய் ஒடுங்கிக் கிடந்தனர், மழை நிற்கட்டும்; பொழுது விடியட்டும் என்று. மறுநாள் பொழுது துல்லியமாய்ப் புலர்ந்தது. நீரும் வடிந்திருந்தது ஆனால் ஆஸிம் இப்னு தாபிதின் சடலம்? அதைத்தான் காணவில்லை. தேடிப் பார்த்தார்கள். சுற்று முற்றும் ஓடிப் பார்த்தார்கள். காணவேயில்லை. வெள்ள நீர் பத்திரமாய் அவரை எங்கோ அடித்துச் சென்று விட்டிருந்தது. இறைவன் ஆஸிமின் துஆவை அப்படியே நிறைவேற்றியிருந்தான். அற்புதம் அது! வரலாறு வியந்து குறித்து வைத்துள்ளது! இறுதியில் மீதமிருந்த குபைப் மற்றும் ஸைத் ஆகிய இருவரும் மக்காவாசிகளுக்கு விற்கப்பட்டனர். பின்னர் உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு இந்த நிகழ்ச்சி பற்றித் தெரியவந்தபோது கூறினார்கள், "அல்லாஹ் தன் உண்மையான சேவகர்களை எப்பொழுதுமே காப்பாற்றுவான். ஆஸிம் தன் வாழ்நாளில் 'இறை நிராகரிப்பாளர் எவரையும் தொட மாட்டேன்; என்னைத் தொட விடமாட்டேன்' என்று சபதம் பூண்டிருந்தார். அதை அல்லாஹ் அவரது மரணத்திற்குப் பிறகும் காப்பாற்றி விட்டான்". அல்லாஹ்விடம் உரிமை பாராட்டிய, அல்லாஹ்வும் அன்பு பாராட்டிய உன்னதமானவர்களுள் ஒருவர் ஆஸிம் பின் தாபித். ரலியல்லாஹு அன்ஹு! இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்! < தோழர்கள்-1 | தோழர்கள்-2 | தோழர்கள்-3 > நன்றி சத்தியமார்க்கம்.காம் |
Thursday, July 14, 2011
தோழர்கள். ஆஸிம் இப்னு தாபித் (عَاصِمَ بْنَ ثَابِتِ بْنِ أَبِي الْأَقْلَحِ)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment