Saturday, July 30, 2011

28-ஸைத் அல்-கைர் இப்னுல் முஹல்ஹில்


தோழர்கள் -printEmail
வரலாறு தோழர்கள்
செவ்வாய், 29 மார்ச் 2011 18:35

زيد الخير بن المهلهل

அன்றைய அரேபியாவில் வாழ்ந்துவந்த பலகோத்திரங்களில் ஆமிர் என்றொரு கோத்திரம். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இந்தக் கோத்திரம் வாழ்ந்துவந்த பகுதியில் கடும் பஞ்சமொன்று ஏற்பட்டது. விளைச்சல் ஏதும் இன்றி, உண்பதற்கு உணவின்றி மக்கள் மாய்ந்து கொண்டிருக்க அவர்களது கால்நடைகளும் இறந்துபோக ஆரம்பித்தன. கடுமையான சோதனை. இதற்குமேல் தாங்கமுடியாது என்ற நிலையில் அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவன் தன் மனைவி, பிள்ளைகளையெல்லாம் அழைத்துக் கொண்டு "பஞ்சம் பிழைப்போம்" என்று கிளம்பிவிட்டான்.
பசியும் வேதனையுமாய் ஹிரா எனும் பகுதியை வந்தடைந்தார்கள் அவர்கள். தற்காலிகமாய் ஓர் இடம் ஏற்பாடு செய்து அங்குத் தம் குடும்பத்தை பத்திரமாய்த் தங்க வைத்தான் அவன். அவர்களிடம், “நான் வரும்வரை இங்கேயே பத்திரமாய்க் காத்திருங்கள்; நான் சென்று ஏதேனும் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, அகப்பட்ட உணவுப் பொருள்களைச் சிறிதளவு எடுத்துக்கொண்டான். மனைவியும் தம் பிள்ளைகளும் பஞ்சத்தில் வாடுவதைக் காணச் சகிக்கவில்லை அவனுக்கு. மனதில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டான், ‘எப்பாடுபட்டாவது ஏதேனும் சம்பாதித்துக்கொண்டே திரும்புவேன். இல்லையா அந்த முயற்சியிலேயே இறந்துபோவது மேல்!’
கிளம்பினான். இவனுடன் நாமும் நடந்து அலைய வேண்டியிருக்கிறது. அவனோ தன்னுடைய பெயரெல்லாம் தெரிவித்து நம்மிடம் அறிமுகம் செய்துகொள்ளும் மனேநிலையில் இல்லை. எனவே நமக்கு அவன் 'நாடோடி'.

கிளம்பியவன், நாள்முழுக்க நடந்து கொண்டேயிருந்தான். எங்கேனும் ஏதேனும் கிடைக்காதா, என்று தேடித்தேடி அலைய, எதுவும் கிடைத்தபாடில்லை. பகல் மறைந்து இரவும் வந்துசேர்ந்தது. அதற்குள் அவன் வெகுதூரம் வந்திருந்தான். ஆளரவமற்ற, அமைதியான அந்த அத்துவானப் பகுதியில் தூரத்தில் ஒரு கூடாரம் மட்டும் தென்பட்டது. அதனருகே கட்டப்பட்டிருந்த ஒரு குதிரையும்.

நாடோடி யோசித்தான். ‘இதைக் களவாட வேண்டியதுதான் வேறு வேழியில்லை'

வேறென்ன செய்வது? ‘கொடிது கொடிது; பஞ்சம் கொடிது’ என்று அங்கு அவன் குடும்பம் தவித்துக் கொண்டிருக்கும்போது, நியாய-தர்மம் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு அவகாசமில்லை. சப்தமெழுப்பாமல் பதுங்கிப் பதுங்கிக் குதிரையை நெருங்கினான். கட்டை அவிழ்த்து, குதிரையின்மீது ஏறப்போகும்போது இருளில் அதட்டலாய் மிதந்து வந்தது அந்தக் குரல் “ஏய்! குதிரையை விட்டுவிட்டு உனது உயிரைக் காப்பாற்றிக்கொள்!”

திடுக்கிட்டவன், அதை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடினான். பிறகு எங்கு வந்து விழுந்து எப்பொழுது உறங்கினான், ஓய்வெடுத்துக் கொண்டான் என்று தெரியவில்லை. மறுநாள் பொழுது விடிந்தது. அலைவதே அலுவல் என்று அலுவல் துவங்கியது. அலைந்தலைந்து பொழுது கழிந்ததே தவிர உணவோ பொருளோ எதுவும் கிடைத்த பாடில்லை. பிரதேசமெங்கும் விரிந்து பரவியிருந்த்து பஞ்சம். அடுத்தநாள், அதற்கடுத்தநாள் என்று ஏழுநாள் கழிந்தது. எடுத்து வந்திருந்த உணவுப் பொருளைச் சிறுக சிறுகவே உண்டுகொண்டு அவனும் நடந்து கொண்டேயிருந்தான். வெறுங்கையுடன் திரும்புவதில்லை என்ற தீர்மானம் மட்டும் மனதில் உறுதியாய் இருந்தது. 

அன்றையநாள் ஏதோ ஓர் ஊர், ஏதோ ஒரு பகுதியை அடைந்தான் நாடோடி. அங்கு ஒட்டகங்கள் மேய்வதற்கான மேய்ச்சல் நிலம் தென்பட்டது. அதனருகே மிகப்பெரிய கூடாரம். அதன் உச்சியில் தோலினால் செய்யப்பெற்ற கும்பம். கூடாரத்தைக் கண்கள் மேய, செல்வச் செழுமைக்கான அடையாளம் தெரிந்தது.

‘இந்தக் கூடாரத்தில் உள்ளவருக்கு நிச்சயமாக நிறைய ஒட்டகங்கள் இருக்கும்.  அவை மேய்வதற்காகவே நிலமெல்லாம் வைத்திருக்கிறார். நல்ல பசையுள்ள மனிதர் போலிருக்கிறது’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். சூரியன் மறையும் நேரம். கூடாரத்தை நெருங்கிப் பார்த்தால், உள்ளே அதன் மத்தியில் ஒரு முதியவர் அமைதியாக அமர்ந்திருந்தார். கண்பார்வை அவருக்கு மங்கலாய் இருந்திருக்க வேண்டும்; அதை இவன் எப்படி ஊகித்தான் என்று தெரியவில்லை. ஆனால் சப்தம் எழுப்பாமல் சென்று அவருக்குப் பின்புறமாய் பூனைபோல் அமர்ந்து கொண்டான் அவன்.
இன்று என் ஜோலி முடிந்தது என்று சூரியன் விடைபெற்றுக் கொண்டது; மெதுமெதுவே இருள் பரவியது. அமைதியாய் நகர்ந்து கொண்டிருந்தது பொழுது. சிறிது நேரம்கழித்து வெளியே குதிரையொலி கேட்டது. அதன்மீது உயர்ந்த நெடிய உருவம், ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஒருவர் அமர்ந்து வந்துகொண்டிருந்தார். அவருக்கு இருபுறமும் இரண்டு சேவகர்கள். அவருக்குப் பின்னால் பெரும் மந்தையாகப் பெண் ஒட்டகங்கள். ஏறக்குறைய நூறு இருக்கும் போலிருந்தது. அவற்றிற்குத் தலைமை தாங்குவதுபோல் ஓர் ஆண் ஒட்டகம்.

‘ஆஹா! இதோ வாசல் தேடிவருகிறது செல்வம். வளம் கொழிக்கும் மனிதர்தாம் இவர்’ என்று நிச்சயமாகத் தோன்றியது கூடாரத்தினுள் பதுங்கியருந்த அந்த நாடோடிக்கு.
குதிரையிலிருந்து இறங்கிய அந்த மனிதர், மடிகொழுத்த ஓர் ஒட்டகத்தைத் தம் சேவகனிடம் காட்டிக் கட்டளையிட்டார், “பால் கறந்து உள்ளே இருக்கும் அந்த முதியவருக்குக் கொடு”

பால் கறந்து எடுத்துச் சென்ற சேவகன் அந்த முதியவரின் அருகே வைத்துவிட்டு வந்துவிட்டான். அமைதியாக அமர்ந்திருந்த அந்தப் பெரியவர் அதை எடுத்து இரண்டு மூன்று மிடறு குடித்திருப்பார். என்ன நினைத்தாரோ அதற்குமேல் குடிக்காமல் அப்படியே நிறைய மீதம் வைத்துவிட்டார். நாடோடிக்கோ அகோரப் பசி. அரவமேயின்றி அந்தப் பாத்திரத்தை லவட்டியவன், பால் முழுவதையும் குடித்துவிட்டு ஓசையெழுப்பாமல் அதை வைத்துவிட்டு மீண்டும் சென்று பதுங்கிக்கொண்டான்.

சற்று நேரம் கழித்து உள்ளே வந்த சேவகன் திரும்பிச் சென்று, “ஐயா! பெரியவர் பால் முழுவதையும் குடித்துவிட்டார்” என்று தெரிவிக்க, அந்தக் குதிரை வீரருக்குப் பெருமகிழ்ச்சி!.

“அப்படியா! இன்னொரு ஒட்டகத்திலிருந்து பால் கறந்து எடுத்துச்செல்”

இம்முறை பாத்திரத்திலிருந்து ஒரு மிடறு குடித்துவிட்டு வைத்துவிட்டார் பெரியவர். பால் பாத்திரத்தை நெருங்கிய நாடோடி மனதில் அந்தக் குதிரை வீரர் சந்தேகமடையக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வு ஓடியது. பாதி பாத்திரமளவு மட்டும் குடித்துவிட்டு மீதியை வைத்துவிட்டான்.

சற்று நேரம் கழிந்தது. மற்றொரு சேவகனை அழைத்துக் கட்டளையிட்டார் அந்தக் குதிரைவீரர், ”ஆடு ஒன்றை அறுத்து இறைச்சி எடு்ததுவா”

அந்த ஆட்டிறைச்சியை நெருப்பில் சுட்டுச் சமைத்து அந்தப் பெரியவருக்குப் பரிமாறினார் அந்தக் குதிரை வீரர். பெரியவர் வயிறாரச் சாப்பிட்டதும் அந்தக் குதிரை வீரரும் இரு சேவகர்களும் சாப்பிட்டு முடித்தனர். சமைத்தாச்சு; சாப்பிட்டாச்சு. அடுத்து என்ன? கால் நீட்டிப்படுத்து அனைவரும் உறங்க ஆரம்பித்துவிட்டனர். அலைந்து களைத்து வந்தவர்களல்லவா? சற்று நேரத்தில் குறட்டையொலி கூடாரமெங்கும் எதிரொலித்தது.

இவ்வளவு நேரமும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பதுங்கியிருந்த நாடோடி, மெதுமெதுவே வெளியே வந்தான். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கட்டப்பட்டிருந்த ஆண் ஒட்டகத்தை அவிழ்த்தான். அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு உந்த, ‘இந்த ராத்திரியில் எங்கே போக?’ என்று கேள்வியெல்லாம் கேட்காமல் நடையைக் கட்டியது அது. அதைப் பார்த்துவிட்டு 'நாதா! எங்கே போகிறீர் எங்களை விட்டுவிட்டு’ என்று ஒன்று பாக்கியில்லாமல் அத்தனைப் பெண் ஒட்டகங்களும் பயபக்தியாய்ப் பின்தொடர ஆரம்பித்தன. “பார்த்தாயா என் பெண்டுகளுக்கு என் மேலுள்ள பாசத்தை” என்பதுபோல் பெருமிதமாக அந்த ஆண் ஒட்டகம் நடைபோட ஆரம்பித்தது. விடியவிடிய தொடர்ந்தது சவாரி.

பொழுது புலர்ந்தது. அதற்குள் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு வெகுதூரம் வந்துவிட்டிருந்தான் நாடோடி. பரந்த பிரதேசத்தில் நாலாபுறமும் திரும்பிப் பார்க்க எவரும் பின்தொடர்வதற்கான சுவடே இல்லை. இருந்தாலும் அவன் நிற்கவில்லை. மேலும் வேகமாய்த் தன் குடும்பத்தை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தான் அவன். நண்பகல் நெருங்கியது. அப்பொழுது வெகுதொலைவில் பருந்தோ பறவையோ போன்று ஏதோ ஒன்று அவனை நோக்கி வேகமாய் வருவது தெரிந்தது. வெகுவேகமாய் வந்து கொண்டிருந்த அது நெருங்க நெருங்க அடையாளம் தெரிந்தது நாடோடிக்கு. குதிரைவீர்ர் தனது குதிரையில் மின்னல் வேகத்தில் அவனை நெருங்கிவிட்டிருந்தார்.

சடேரென ஒட்டகத்திலிருந்து இறங்கி நாடோடி அதைப்பிடித்து ஓரிடத்தில் கட்டிவிட்டு, அம்பை எடுத்து வில்லில் பொருத்திக் கொண்டு ஒட்டகங்களுக்கு முன்னால் சென்று நின்றுகொண்டான். அதைப் பார்த்த அந்தக் குதிரை வீரர் குதிரையை நிறுத்தினார். அங்கிருந்தே கத்தினார்.

“ஒட்டகத்தை அவிழ்த்துவிடு”

“அதெல்லாம் முடியாது. அங்கே ஹிராவில் என் குடும்பம் சாகக் கிடக்கிறது”

“ஒட்டகத்தை அவிழ்க்கவில்லையெனில் செத்தாய் நீ”

“உனக்கென்ன தெரியும் என் பிரச்சினையும் பஞ்சமும்” தான் செய்திருந்த சத்தியத்தை அவருக்கு எடுத்துச் சொல்லி, "முடியாது" என்று மீண்டும் மறுத்தான் அவன்.
“இணங்க மாட்டாயா நீ! சரி, ஒட்டகத்தின் கடிவாள வாரை இழுத்துப் பிடித்துக்கொண்டு நில். அதில் மூன்று முடிச்சுகள் உள்ளன. அதில் எந்த முடிச்சின்மீது எனது அம்பை செலுத்தவேண்டும் என்று மட்டும் சொல்”

நாடோடி குழம்பினான். இருந்தாலும் அந்த மனிதர் சொன்னபடி கடிவாளக் கயிற்றை இழுத்துப் பிடித்து, அதிலிருந்த நடு முடிச்சைக் காண்பித்தான். தொலைவிலிருந்தபடியே குறி பார்த்து அம்பை எய்தார் குதிரை வீரர். கையால் எடுத்துப் பொருத்தியதைப்போல் அந்த முடிச்சின் நடுவில் வந்து பாய்ந்த நின்றது அவருடைய வில்லிலிருந்து புறப்பட்டு வந்த அம்பு. அடுத்த இரண்டு முடிச்சுகளிலும் அதைப்போலவே அம்புகள் பாய்ந்தன. அவ்வளவுதான். அதற்குமேல் இருவருமே ஒன்றும் பேசவில்லை. நாடோடி தனது அம்புகளை எடுத்து அம்பறாவில் போட்டுக்கொண்டு குதிரைவீரரிடம் நடந்துவந்து சரணடைந்தான்.

அவனது அம்புகளையும் வாளையும் பறித்துக் கொண்டார் அவர். “என்னைப் பின்தொடர்ந்து வா"
 

இத்துடன் தன்கதை முடிந்து என்று முடிவாகிவிட்டது அவனுக்கு. இருந்தாலும் சொன்னான், "உங்களிடம் அடைக்கலமான கைதியிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள் வீரரே!"

அவனைத் திரும்பிப் பார்த்தவர், “முஹல்ஹில்லினுடைய பாலைக் குடித்து, அவருடைய உணவையும் நீ உண்டிருக்க, நான் உனக்குக் கேடு செய்வேன் என்று நினைக்கிறாயோ?”

அந்தப் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சியில் தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு. ‘என்ன அந்தப் பெரியவர் முஹல்ஹில்லா?’

“நீர் ஸைது அல்-ஃகைலா?”

“ஆம்” என்றார் அந்தக் குதிரைவீரர்.

இப்பொழுது கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தொலைந்துபோனது. “ஐயா! பெருமைக்குரிய எசமானனாய் இருந்து கொள்ளுங்கள்” இறைஞ்சினான் அவன்.

அமைதியான பதில் வந்தது. “கவலைப் படாதே!”

சாந்தப்படுத்தும் வகையில் தொடர்ந்தார் அவர் “இவை என்னுடைய ஒட்டகங்களாய் இருந்திருந்தால் நான் உனக்கு அப்படியே அளித்துவிட்டிருப்பேன். அவை என் சகோதரிக்குச் சொந்தமானவை. சிலகாலம் என்னுடன் தங்கியிரு. நான் விரைவில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறேன்”

வித்தியாசமான மனிதர்கள் அவர்கள். தம்மிடம் பொறுப்பாய் ஒப்படைக்கப்பட்ட பொருளை கள்வன் ஏதும் களவாடிச் செல்லாமல் படுசிரத்தையாய்ப் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் தங்களது தேவைக்குப் புதிதாய் வேறொருவரிடமிருந்து களவாடிக் கொள்கிறார்கள்.

சொன்னதைப் போலவே மூன்றுநாள் கழித்து பனூ நுமைர் கோத்திரத்திற்குச் சொந்தமான நூறு ஒட்டகங்களைக் கொள்ளையடித்து வந்தார் அந்தக் குதிரை வீரர். அவற்றை நாடோடியிடம் அளித்து, “இந்தா! எடுத்துச் செல். போய் பிள்ளை குட்டிகளுடன் மகிழ்ச்சியாய் இரு”

அத்தடன் இல்லாமல் அவனுக்குப் பாதுகாவலாய் காவலாளிகளையும் அமர்த்தி அந்த நாடோடியை ஹிராவில் அவன் குடும்பத்தாரிடம் பத்திரமாய் விட்டுவரச் சொன்னார் ஸைது அல்-ஃகைல்.

இந்த ஸைதின் காதில் செய்தி ஒன்று வந்து விழுந்தது.
oOo
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்ததும் அக்கம்பத்திலுள்ள கோத்திரங்களுக்கெல்லாம் மெதுமெதுவே செய்தி பரவிக் கொண்டிருந்தது. மக்கா படையெடுப்பிற்குப்பின் அவர்களெல்லாம் நபியவர்களைச் சந்திக்க மதீனா வந்து கொண்டிருந்தனர்.

நஜ்து பிரதேசத்தின் வடக்கே தாயீ எனும் கோத்திரம் வசித்தது. ஸைது அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர். ஸைதின் காதிலும் நபியவர்களைப்பற்றித் தகவல்கள் வந்து விழுந்ததும் 'இது என்ன புதுச் செய்தி? புது வழிபாடு? எல்லாம் மாற்றமாய் இருக்கே’ என்று முனைப்பெடுத்து, தாமும் விசாரிக்க ஆரம்பித்தார். கேட்டறிந்தவரை அது மேலும் மேலும் அவரது ஆர்வத்தைத் தூண்டியது. ஒருநாள் மதீனா சென்று நபியவர்களை சந்தித்துவிடுவது என்று முடிவெடுத்தார். ‘நாங்களும் வருகிறோம்’ என்று அவரது கோத்திரத்தைச் சேர்ந்த மக்கள் இணைந்து கொண்டனர் ஒரு பெரும் குழுவாய் மதீனாவிற்குப் பயணம் கிளம்பினார்கள் அவர்கள். அதில் முக்கியமானவர்கள் ஸுர் இப்து ஸதுஸ், மாலிக் இப்னு ஸுபைர், ஆமிர் இப்னு ஜுவைன் ஆகியோர்.

நெடிய பயணம். மதீனா வந்தடைந்தவர்கள் நேராக நபியவர்களின் பள்ளிவாசலைத்தான் அடைந்தார்கள், தங்களது கால்நடைகளை அதன் கதவில் பிடித்துக் கட்டிவிட்டு, விறுவிறுவென்று உள்ளே நுழைந்தார்கள்.

அங்கே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிம்பரின் மீதிருந்து உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அங்கு அமர்ந்திருந்த மக்கள் ஆழ்ந்த கவனத்துடன் மிக உன்னிப்பாய் அந்தப் பேச்சைக் கேட்டு உள்வாங்கிக் கொண்டிருக்க, பெரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள் ஸைதும் அவரது குழுவினரும்!

“நான் உங்களுக்கு அல்-உஸ்ஸாவைவிட நீங்கள் வழிபடும் அனைத்தையும்விட மேன்மையானவன். உங்களது கடவுளுக்கு அடுத்து நீங்கள் வழிபடும் கறுப்பு ஒட்டகம் இருக்கிறதே அதைவிடவும் நான் மேன்மையானவன்” என்று நபியவர்கள் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டார் ஸைது.

அந்தப் பிரசங்கமெல்லாம் கேட்க கேட்க ஸைது குழுவினரிடம் அவை இருவித மாற்றங்களை நிகழ்த்தின. ஒரு சாரார் இது சத்தியம், இவர் சொல்வதெல்லாம் உண்மை என்பதை உடனே உணர்ந்தனர். மற்றொரு சாராரோ ‘ம்ஹூம்! இதெல்லாம் நமக்குச் சரிப்படாது’ என்று சொல்லிவிட்டனர். நிராகரித்தவர்களில் ஸுர் இப்து ஸதுஸ் ஒருவர். ஆனால் நபியவர்களிடம் மதீனத்து மக்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுடன், அன்புடன் இணைந்திருப்பதைக் கண்டு அவர் மனதில் பொறாமை, பயம் எல்லாம் சூழ்ந்தது. தன்னுடன் இருந்தவர்களிடம் கூறினார்:
“அரபியர்களையெல்லாம் தம் வசப்படுத்தப் போகிறார் இந்த மனிதர். ஆனால் அவர் என்னைக் கட்டுப்படுத்த மட்டும் நான் அனுமதிக்கப் போவதில்லை”

நபியவர்கள் பேசி முடித்ததும் எழுந்து நின்றார் ஸைது. நெடிய கவர்ச்சியான தோற்றத்துடன் நிற்கும் அவரை அங்கு அமர்ந்திருந்த முஸ்லிம்கள் வியப்புடன் பார்த்தனர். உரத்த தெளிவான குரலில் பேசினார் ஸைது.

“ஓ முஹம்மது! வணக்கதிற்குரியவன் அல்லாஹ் ஒருவனே; நீர் அவன் தூதர் என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்”

அவரிடம் நெருங்கி வந்தார்கள் நபியவர்கள். “நீர் யார்?”

“என் பெயர் ஸைது அல்-ஃகைல். முஹல்ஹில்லின் மகன் நான்.”

“ஸைது அல்-ஃகைல்? – ம்ஹும்! இன்றிலிருந்து உமது பெயர் ஸைது அல்-ஃகைர்” என்று முதலில் அவரது பெயரைத் திருத்தினார்கள் நபியவர்கள். ‘குதிரைக்காரன் ஸைது’ எனும் அர்த்தம் தொனிக்கும் அந்தப் பெயருக்கு பதிலாய் ‘நன்மைகளின் ஸைது’ என்ற புதுப்பெயர் நபியவர்களால் அவருக்கு வழங்கப்பட்டது. எந்த ஒரு மனிதனையும் தரக்குறைவாகவோ தரமற்ற பெயரிலோ நபியவர்கள் பேசியதில்லை; விளித்ததில்லை.

“மலைகளும் பள்ளத்தாக்கும் நிறைந்த பகுதியிலிருந்து உம்மை இங்கு வரவழைத்து மனதை மென்மையாக்கி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வைத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” என்று ஸைதை வாழ்த்திய நபியவர்கள் தனது வீடடிற்கு அழைத்துச் சென்றார்கள். கூடவே உமரும் வேறு சில தோழர்களும். ஸைது வாகாய் அமர்ந்து கொள்ள ஒரு திண்டு அளித்தார்கள் நபியவர்கள். ஆனால் அவர்களுக்கு எதிரே சாய்ந்த அமர்ந்து கொள்ள கூச்சமேற்பட்டது ஸைதுக்கு. மறுத்துவிட்டார். மீண்டும் நபியவர்கள் அதை அளிக்க, மீண்டும் மறுத்துவிட்டார். இவ்விதம் மூன்று முறை நிகழ்ந்தது.

அனைவரும் அமர்ந்ததும் நபியவர்கள் ஸைது அல்-ஃகைரிடம், “ஓ ஸைது! எத்தனையோ அரபியர்களைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்களை நேரில் சந்திக்கும்போது அந்தப் புகழுரை அவர்களை மிகைத்திருக்கும். ஆனால் உம்மைப் பற்றி என்னிடம் எப்படி விவரிக்கப்பட்டதோ அந்தப் புகழுரையைவிட பிரமாதமாய் நீர் காணப்படுகிறீர். அல்லாஹ்விற்கும் அவன் நபிக்கும் மகிழ்வளிக்கும் இரு விஷயங்களை உம்மிடம் நான் காண்கிறேன்”

ஆச்சரியத்துடன், “அவை யாவை?” என்றார் ஸைது.

“மதிநுட்பமும் விவேகமும்”

“தனக்கும் தன் நபிக்கும் பிடித்த குணங்களை எனக்களித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” என்ற ஸைது நபியவர்களை நோக்கிக் கூறினார் “அல்லாஹ்வின் தூதரே! முந்நூறு குதிரை வீரர்களை என் தலைமையில் அனுப்பி வையுங்கள். ரோமர்களின் பிரதேசத்தைக் கைப்பற்றி வருகிறேன்”

சுடர்விடும் அவரது ஆர்வத்தைக் கண்ட நபியவர்கள், “எத்தகு நற்குணங்கள் கொண்டவன் நீ” என்று பாராட்டினார்கள்.

ஸைதுடன் தங்கியிருந்தவர்களெல்லாம் ஒவ்வொருவராய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

இஸ்லாத்தை ஏற்காமல் நிராகரித்த ஸுர் இப்னு ஸதுஸ், சிரியா நாட்டிற்குச் சென்று கிறித்தவ மதத்தைத் தழுவிக் கொண்டதாகவும் அக்காலத்தில் கிறித்தவத் துறவிகள் செய்து கொள்வதைப்போல் தனது தலையை மழித்துக் கொண்டார் என்றும் பிற்பாடு செய்தி கிடைத்தது.

சில நாட்கள் மதீனாவில் தங்கியிருந்து இஸ்லாமியப் பாடங்கள் கற்றுக்கொண்டு, பிறகு தங்களது ஊருக்குக் கிளம்பியது ஸைதின் குழு. அலீ (ரலி) யெமனிலிருந்து அனுப்பி வைத்திருந்த ஒரு தங்கக் கட்டியிலிருந்து ஒரு சிறுபகுதியை வெகுமதியாக ஸைதுக்கு அளித்து, பெருமகிழ்வுடன் வழியனுப்பி வைத்தார்கள் நபியவர்கள்!.

அந்நேரத்தில் மதீனாவில் காய்ச்சல் நோய் ஒன்று பரவியிருந்தது.  பயணம் கிளம்பும்முன் அந்தக் காய்ச்சல் ஸைதின் மீதும் படர்ந்தது. ஆனால் அதைப் பொருட்படுத்திக் கொள்ளாமல் பயணம் கிளம்பினார் ஸைது. வழியில் காய்ச்சலின் தீவிரம் அதிகமானது. தன் விதியை உணர்ந்து கொண்டார் ஸைது. “நான் இறைவனைச் சந்திக்கும்முன் முஸ்லிம் போராளியாகும் வாய்ப்பு அமையாது என்ற நம்புகிறேன்” என்ற பெரும் வார்த்தைகள் பெரும் ஆதங்கத்தோடு வெளிப்பட்டன.
தாயீ பிரதேசத்தின் அருகிலிருக்கும் ஃபர்தாவரை வந்துவிட்டார்கள். அது மலைப்பகுதி என்றொரு குறிப்பும் தண்ணீர் கேந்திரம் என்றொரு குறிப்பும் உள்ளது. அப்பொழுது காய்ச்சலின் வேகம் அவரது பயண வேகத்தைக் குறைத்தது. எப்படியாவது தம் மக்களைச் சென்று சந்தித்துவிட வேண்டும்; அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவரது மனமெங்கும் பேராவல். ஆனால் நோய் அவரை வென்றது. தாம் இஸ்லாத்திற்காகப் போராட வேண்டும்; உழைக்க வேண்டும் என்ற ஸைதின் எண்ணம் கைகூடவில்லை. ஆனால் அந்த நற்பெரும் வாய்ப்புகளெல்லாம் பிற்காலத்தில் அவரின் மகன்களுக்குக் கிடைத்தன.

நேர்வழியிலிருந்து பிறழ்ந்துபோன கூட்டங்களுடன் நடைபெற்ற ரித்தா போர்கள் பற்றிப் பார்த்தோமே அதில் ஸைதின் இரு மகன்களான மிக்னஃப் இப்னு ஸைதும் ஹுரைதா இப்னு ஸைதும் இஸ்லாமியப் படைத் தளபதிளுள் நிகரற்ற, பெருவீரரான காலித் பின் வலீத் (ரலி-அன்ஹும்) தலைமையில் பெரும் பங்கெடுத்திருக்கிறார்கள். மற்றொரு மகனான உர்வா இப்னு ஸைதோ, உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலத்தில் பாரசீகர்களுடன் நடைபெற்ற காதிஸிய்யா போர், ஃகுஸ் அல்-நாதிஃப் எனப்படும் பாலப்போர், நுஃகைலா போர் ஆகியனவற்றில் வீர சாகசம் புரிந்தவர்.
நபியவர்களைச் சந்தித்து, சத்தியத்தை ஏற்ற நொடியிலிருந்து எவ்வித பாவமோ குற்றமோ புரியாத நிலையில் மரணத்தைத் தழுவிய ஸைது அல்- ஃகைர், இஸ்லாத்துக்காகப் போராடுவதற்குத் தமக்குக் கிடைக்காத நற்பேற்றைச் சமன் செய்வதற்குத் தம் மூன்று மகன்களை இவ்வுலகில் விட்டுச் சென்றார்.

ரலியல்லாஹு அன்ஹு!
ன்றி  சத்தியமார்க்கம்.காம் 

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment