Saturday, July 30, 2011

24-முஸ்அப் இப்னு உமைர்


தோழர்கள் -printEmail
வரலாறு தோழர்கள்
செவ்வாய், 25 ஜனவரி 2011 15:17
ன்றி  சத்தியமார்க்கம்.காம் 
مصعب بن عمير
கோபத்தின் உச்சியில் தாய் கத்தினார், "போ... இத்துடன் நம் உறவு முறிந்தது. இனி நான் உனக்கு அம்மாவே இல்லை"
நிதானமாய்த் தாயை நோக்கித் திரும்பி வந்த மகன், "ஆனால் மனதார நான் உங்கள்மீது அளவில்லாத பாசம் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. முஹம்மது அவனுடைய இறுதித் தூதர். இதை நீங்களும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுபோதும்"
அந்த பதில் தாயின் கோபத்தை உக்கிரப்படுத்தியது. 'ஒரே இறைவனாமே?'
"அந்த நட்சத்திரங்களின் மீது ஆணையாகக் கூறுகிறேன். உன் மதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கெல்லாம் என் புத்தி கெட்டுப்போகவில்லை, என் தராதரமும் குறைந்துவிடவில்லை. எக்கேடோ கெட்டு்ப் போ. நான் உனக்கு அம்மாவும் இல்லை, நீ எனக்கு மகனும் இல்லை"
அதற்குமேல் என்ன பேசுவது? வெளியேறினார் மகன்.
அம்மாவுக்கும் மகனுக்கும் அப்படி என்ன பெரிய பிரச்சனை? பெரிதாக ஒன்றுமில்லை.
நம்பிக்கை! ஒரே இறைவன் மீது நம்பிக்கை! அவனுக்கு இணை துணையில்லை என்ற நம்பிக்கை! அதுமட்டுமே பிரச்சனை.
oOo
ஒருநாள் ஹிரா குகையிலிருந்து இறங்கி வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், மக்காவில் ஏகத்துவம் சொல்ல ஆரம்பித்தார்களா, தெளிவான மனங்களில் "நச்”சென்று அச்செய்தி சென்று பதிந்து கொண்டது. மெதுமெதுவே மக்காவில் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியது. ஏழைகள், அடிமைகள், வெகுசில பிரபலங்கள், முஹம்மது நபியின் சில உறவினர்கள் என்று சிறிய இஸ்லாமியக் குழு ஒன்று உருவாக அந்தச் சின்னஞ்சிறு குழுவுக்கெதிராய்க் குரைஷிகளின் பென்னம்பெருங்கோத்திரமே தொடை தட்டிப் பூதாகரமாய் எழுந்து நின்றது.
செய்தி அப்படி. பன்னெடுங்காலமாக கஅபாவில் வைத்துப் பூஜிக்கப்பட்ட 360 கடவுளர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த ஒற்றைச் செய்தி!
சிறிது சிறிதாய் அந்த இஸ்லாமியச் செய்தி மக்காவில் பரவப்பரவ, நாளும் பொழுதும் அந்நகரில் இதுவே பேச்சு. ”புதிதாய் இது என்ன மதம்?” என்று இரவு உறங்கும்வரை கோபத்துடன் பேசிவிட்டு, தூங்கியெழுந்து காலையில் மீண்டும் அதையே தொடர்ந்தார்கள். கூட்டங் கூட்டமாய்க் குரைஷிகள் இஸ்லாத்தை எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்ததை அக்கூட்டங்களில் ஓர் இளைஞர் மிக ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முஸ்அப் இப்னு உமைர்!
மக்காவில் மிக அழகிய இளைஞர்களில் ஒருவர் அவர். நல்ல வசீகரத் தோற்றம். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த கொழுந்து. வறுமையென்றால், "கிலோ என்ன விலை?” என்ற அளவிற்கு சொகுசும் ஆடம்பரமும் வசதியுமாய் அமைந்த வாழ்க்கை. குணாஸ் பின்த் மாலிக் என்பவர் அவரின் தாயார். கரடுமுரடான சுபாவம்; மக்களைப் பயமுறுத்தும் அளவிற்கு 'அகன்ற வாய்'. ஆனால் மகன் மீது அளவற்ற பாசம். "அனுபவிடா மகனே! என் செல்லம்!” என்று தங்குதடையில்லாமல் சுகபோகத்தில் மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். விலையுயர்ந்த ஆடைகள், சிறந்த கால்நடைகள், வேளா வேளைக்கு அருமையான உணவு, மிகச் சிறந்த நறுமணப் பொருட்கள் என்று எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி செல்வ சுகத்தில் திளைத்துக் கொண்டிருந்தார் மகன். முஸ்அப் கடந்து சென்ற தெருவில் நுழைபவர், "ஹும்! முஸ்அப் இப்னு உமைர் இந்தத் தெருவில் உலாத்திவிட்டுப் போயிருக்கிறார் போலிருக்கிறதே” என்று எளிதாய் மோப்பமிட்டுச் சொல்லிவிடுமளவிற்கு அவர் பூசிக்கொள்ளும் நறுமணம் மிதந்து கொண்டிருக்கும்.
சுருக்கமாய் இக்கால உவமை சொல்வதென்றால்,  பணக்கார வீட்டின் உல்லாசப் பிள்ளைகள் என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்ளாத குறையாய் 'லேட்டஸ்ட் ஸ்டைலின்' அத்தனை அம்சங்களையும் சுமந்து கொண்டு, ஷாப்பிங் மால்கள், கடற்கரை என்று சுற்றிக்கொண்டிருக்கிறதே இன்றைய வாலிபக் கூட்டம், அப்படி மக்காவில் வலம் வந்து கொண்டிருந்தார் முஸ்அப்.
அக்காலத்தில் குரைஷிகள் கூடும் பொதுஇடங்களில் தவறாமல் முஸ்அப் உண்டு. முஹம்மது நபி, அவர் உரைக்கும் மார்க்கம், அதைப் பற்றி குரைஷிகளின் கோபம், ஆத்திரம், எதிர்ப்பு என்பதெல்லாம் அவர் காதில் விழுந்து கொண்டிருந்தது. கேட்கக் கேட்க ஆர்வம் தொற்றியது. 'யார் அவர்? என்னதான் அது?'
மக்காவில் அல்-அர்கம் எனும் தோழர் ஒருவர் இருந்தார். அவருக்கு அப்பொழுது இருபது வயதிருக்கும். அல்-மக்ஸும் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இஸ்லாத்திற்கு மிக முக்கிய எதிரியாய் உருவானானே அபூஜஹ்லு, அவனுடைய அதே கோத்திரம். இந்த அல்-அர்கமிற்கு ஸஃபா குன்றுக்கு அருகே வீடு ஒன்று இருந்தது.
ஆரம்பத் தருணங்களில் முஸ்லிம்கள் ஓரிடத்தில் குழுமுவதே மிகப் பெரும் பிரச்சினையாக இருந்ததா, எத்தகைய தற்காப்பு வசதியும் இன்றி, நலிந்த நிலையில் இருந்த அவர்களை இந்த அர்கமின் வீட்டில்தான் ஒன்றுகூட்டினார்கள் நபியவர்கள். அது ஒரு முதலாவது இஸ்லாமியப் பாடசாலையாக உருவெடுத்தது. நபியவர்கள் தமக்கு அருளப்பெறும் இறை வசனங்களை அம்மக்களுக்கு அறிவிக்கவும் உபதேசம் புரியவும் முஸ்லிம்கள் கூடி இறைவழிபாடு செய்யவும் அளவளாவிக் கொள்ளவும் என்று அல்அர்கமுடைய அந்த வீடு - தாருல் அர்கம் - முதல் பல்கலையாகப் பரிணமித்தது.
சதா காலமும் முஸ்லிம்களை நோட்டமிட்டு, அவர்களுக்குத் துன்பம் இழைக்கவும் இடையூறு விளைவிக்கவும் என்னென்ன சாத்தியமோ அத்தனையும் செய்து திரிந்து கொண்டிருந்த குரைஷிகள், தங்களது மூக்கிற்கு அருகிலேயே ஸஃபா குன்றின் அடிவாரத்திலுள்ள அர்கமின் வீட்டில் முஸ்லிம்கள் ரகசியமாய்க் கூடி, தங்களது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்ததை கவனிக்கத் தவறியது ஓர் ஆச்சரியம். அத்தகைய திட்டத்தை நபியவர்கள் நிறைவேற்றியது அதைவிட ஆச்சரியம்!
'என்னதான் அது?' என்று ஆர்வம் ஏற்பட்டதும் முஸ்அப் இப்னு உமைர் விசாரிக்க ஆரம்பித்தார். தேடி விசாரித்துக் கொண்டு ஒருநாள் இரவு அர்கமின் அந்த வீட்டை அடைந்து – கதவு தட்டப்பட்டது. அங்கு குர்ஆன் வசனங்களை நபியவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவிப்பதும் பிறகு அனைவரும் சேர்ந்து ஏக இறைவனை வழிபடுவதுமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. முஸ்அபின் காதில் அவை விழுந்தன. எவை? குர்ஆன் வசனங்கள். அவை நேராய்ச் சென்று தாக்கியது அவரது இதயத்தை. அடுத்து அந்த மாற்றம் சடுதியில் நிகழ்ந்தது.
'இது அற்புதம்! இது உண்மை! இதுவே ஈருலகிற்கும் வழிகாட்டி' என்று இஸ்லாத்தினுள் நுழைந்தார் இளைஞர் முஸ்அப் இப்னு உமைர், ரலியல்லாஹு அன்ஹு!
oOo
நபியவர்களிடம் துவங்கிய பாலபாடம், அவரைச் செழுமைப்படுத்த ஆரம்பித்தது. முற்றிலும் புதிய முஸ்அபை அவரது நெஞ்சினுள் செதுக்கிக் கொண்டிருந்தன குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும். சொல்லிக் கொள்ளும்படி எவ்வித இலட்சியமும் இன்றி உல்லாசமாய்த் திரிந்து, சொகுசை அனுபவித்துக் கொண்டிருந்த முஸ்அப், இஸ்லாத்திற்கு அளித்த உழைப்பு அபரிமிதமானது. அதற்காக அவர் உதறித் தள்ளியவை சாமான்யமானதல்ல!
முஸ்அபின் தாயார் குணாஸ் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறையாக மகனைக் கவனித்துக் கொண்டார் என்று பார்த்தோமல்லவா? அதே அளவு அவர் மூர்க்கமானவருங்கூட. முஸ்அப் தம் தாயின் மனோபாவத்தையும் கோபத்தையும் நன்கு உணர்ந்திருந்தவர். எனவே தாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடக்கத்தில் அப்படியே மறைத்துக் கொண்டார். எப்பவும்போல் வீட்டிலும் மக்காவிலும் உலாத்திக் கொண்டிருப்பவர், யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து தாருல் அர்கம் சென்றுவர ஆரம்பித்தார்.
ஆனால் எத்தனை நாள் மறைக்க முடியும்? ஒருநாள் குரைஷிகளில் ஒருவன் முஸ்அப், தாருல் அர்கத்துக்குச் செல்வதையும் 'புதியவர்கள்' வழிபடுவதைப்போல் வழிபடுவதையும் கண்டு விட்டான். "முஸ்லிம்களுடன் சேர்ந்துவிட்டானா இவனும்! என்ன அநியாயம்? வைக்கிறேன் உனக்கு ஆப்பு” என்று உடனே அவன் சென்று சேர்ந்தது முஸ்அபின் தாயாரிடம். தன் மகன்மேல் எத்தகு அன்பும் பாசமும் கொண்டிருந்த தாய் அவர்? அதெல்லாம் ஒரே நொடியில், வந்தவன் தெரிவித்த ஒரே வார்த்தையில் தலைகீழாகிப் போனது. "என்ன? என் மகன் முஸ்லிமாகி விட்டானா?”
எப்பவும்போல் சாதாரணயமாய் முஸ்அப் வீட்டினுள் நுழைய, துவங்கியது களேபரம். மூர்க்கமான தாய், இளமைத் துடிப்புள்ள மகன், வட்டமேசை மாநாடு போலவா பேச்சுவார்த்தை நடந்திருக்கும்? ஏகப்பட்ட களேபரம். மகனை அடித்துத் துவைக்க கையை ஓங்கிய குணாஸ் நிறுத்திக் கொண்டு, "நீ சாதாரணமாய்ச் சொன்னால் கேட்க மாட்டாய். இரு வருகிறேன்” என்று சங்கிலியொன்றை எடுத்து வந்து வேலையாட்களின் உதவியுடன் அவரை வீட்டின் மூலையொன்றில் தள்ளி விலங்கிட்டார்.
"இஸ்லாத்தைக கைவிடு. இல்லையெனில் கை, கால்களில் விலங்குதான்"
இளவரசனைப்போல் வலம் வந்து கொண்டிருந்தவர் தம் வீட்டிலேயே பெற்றத் தாயால் சிறை வைக்கப்பட்டார். உண்மையின் விலை என்றுமே மிக அதிகம். பரிசுக்கேற்பத்தானே போட்டியின் கடுமை? மறுமையின் பேரின்பம் என்பது பண்டிகைக்காலத் தள்ளுபடியுமல்ல; இலவச இணைப்புமல்ல. அந்த உண்மை முஸ்அபின் மனதினுள் திடம் வளர்த்தது.
இதனிடையே மக்காவில் இதர முஸ்லிம்கள் குரைஷிகளிடம் அடைந்துவந்த துன்பமும் உச்சநிலையை அடைந்து விட்டிருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நபியவர்கள் ஒருகட்டத்தில் முஸ்லிம்கள் அபிஸீனியாவிற்கு (இன்றைய எத்தியோப்பியாவிற்கு)ப் புலம்பெயர அனுமதியளித்திருக்கும் செய்தி, வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த முஸ்அபின் காதில் வந்துவிழுந்தது. விலங்கு உடைத்துத் தப்பித்தார் முஸ்அப். துவங்கியது அவரது முதற் பயணம். இஸ்லாத்திற்காகப் புலம்பெயர்ந்த முதல் முஸ்லிம்களில் முஸ்அப் ஒருவரானார். கரிய இருளில் மக்காவிலிருந்து தப்பித்து, செங்கடலின் துறைமுகத்திற்கு வந்து படகுகளில் எத்தியோப்பியாவிற்குத் தப்பித்தார்கள் - அவர்கள் - பதினொரு ஆண்கள், நான்கு பெண்கள்.
அபிஸீனியா வந்து சேர்ந்து 'அப்பாடா' என்று மூச்சு வாங்கி நிதானமாய் சுவாசிக்கத் துவங்கினார்கள் முஸ்லிம்கள். சில மாதங்களிலேயே மக்காவில் நிலைமை சீரடைந்துவிட்டது என்று தவறான தகவல் வந்து சேர்ந்தது. பெருமகிழ்வுடன் அபிஸீனியாவிலிருந்து முஸ்லிம்கள் மக்கா திரும்ப, அவர்களுடன் சேர்ந்து திரும்பினார் முஸ்அப். வந்து சேர்ந்தால் 'மாட்டினீர்களா?' என்று முன்பைவிடக் காட்டமாகக் கொடூரம் துவங்கியது!
துவண்டு போனார்கள் முஸ்லிம்கள். 'இது சரிவராது' என்று இரண்டாம் முறையாக பயணம் துவங்க நாள் குறிக்கப்பட்டது. இம்முறை அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் புலம் பெயர்ந்தனர். 79 ஆண்கள், 9 பெண்கள் என்று சில குறிப்புகளும் 83 ஆண்கள், 18 பெண்கள் என்று வேறு சில குறிப்புகளும் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த ஆண்களில் மீண்டும் முஸ்அப் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை.
"ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள்" என்று இரண்டு சொற்களை எழுதுவதும் படிப்பதும் மிக எளிது. படைத்துக் காக்கும் ஒரே இறைவனை வழிபடுவதற்காக சொந்த மண்ணிலிருந்து அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு நாடோடியாய் வெளியேறுவது இருக்கிறதே, அது மகா வலி!
சில காலம் கழித்து மீண்டும் மக்கா திரும்பினார் முஸ்அப். முதலில் பெற்றோருடன் அனைத்து சௌகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர் அவர். அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டுப் போனவர் இப்பொழுது திரும்பி வந்ததும் எவ்வித வசதியுமில்லை, குரைஷிகளின் இஸ்லாமிய எதிர்ப்பால் பிழைப்புக்கு வழியுமில்லை. வறுமை அவரை நன்றாகத் தழுவி அணைத்துக் கொண்டது.
அபிஸீனியாவிலிருந்து முஸ்அப் திரும்பிவந்ததை அறிந்ததும் மீண்டும் அவரைப் பிடித்து சிறைவைக்க முயன்றார் அவரின் தாய் குணாஸ். தன் சேவகர்களை அனுப்ப, இம்முறை சிலிர்த்து நின்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தார் முஸ்அப்.
"இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். யாராவது என்மேல் கையை வைத்துப் பார்க்கட்டுமே, கொலை விழும். ஒருவரையும் விடமாட்டேன்"
அந்த வார்த்தைகளின் உண்மை அவர் முகத்தில் தெரிந்த வீரம் பார்த்துத் திகைத்து நின்றுவிட்டார் குணாஸ். நிச்சயம் முஸ்அப் அதைச் செய்வார் என்று தெரிந்தது.
கோபத்தின் உச்சியில் அவர் கத்தினார், "போ... இத்துடன் நம் உறவு முறிந்தது. இனி நான் உனக்கு அம்மாவே இல்லை"
நிதானமாய்த் தாயை நோக்கித் திரும்பிய மகன், "ஆனால் மனதார நான் உங்கள்மீது அளவில்லாத பாசம் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. முஹம்மது அவனுடைய இறுதித் தூதர். இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுபோதும்"
"அந்த நட்சத்திரங்களின் மீது ஆணையாகக் கூறுகிறேன். உன் மதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கெல்லாம் என் புத்தி கெட்டுப்போகவில்லை, என் தராதரமும் குறைந்துவிடவில்லை. எக்கேடோ கெட்டு்ப் போ. நான் உனக்கு அம்மாவும் இல்லை, நீ எனக்கு மகனும் இல்லை"
அதற்குமேல் என்ன பேசுவது? வெளியேறினார் முஸ்அப் இப்னு உமைர், ரலியல்லாஹு அன்ஹு.
ஏழ்மை நிலையிலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்குக் குரைஷிகள் இழைத்த கொடுமைகள் ஒருபுறம் என்றால், முஸ்அபுக்குக் கடின வாழ்க்கை வேறு பரிமாணத்தில் தண்டனை அளித்தது. எப்பொழுதாவது கிடைக்கும் சொற்ப உணவை உண்டுவிட்டு, கந்தலாய் இருந்த துணியைக் கொண்டு மானத்தை மறைத்துக் கொண்டு மனம் நிறைய திருப்தியுடன், அசைக்க இயலாத இறைநம்பிக்கையுடன் முற்றிலும் வேறுபட்ட முஸ்அபாக உருவாக ஆரம்பித்தார் அவர்.
ஒருநாள் தோழர்கள் சூழ அமர்ந்திருந்தார்கள் நபியவர்கள். அங்கு வந்தார் முஸ்அப். அவரைக் கண்டதுமே தோழர்களின் தலை கவிழ்ந்தது. பலர் கண்களில் கண்ணீர். வேறொன்றுமிலலை, கோலம்! முஸ்அபின் அலங்கோலம்!
நவநாகரீக ஆடைகள் பூண்டு, திரியும் தெருவெல்லாம் நறுமணம் பரப்பிச் சென்ற முஸ்அப், வறுமையின் இலக்கணமாய்க் கிழிந்து தொங்கிய மோசமான ஆடையுடன் நின்றிருந்தார். அவரை அன்புடன் ஆதுரவாய் நோக்கிய நபியவர்கள், "மக்காவில் முஸ்அபைப் போன்று பெற்றோரால் சீராட்டி வளர்க்கப்பெற்ற இளைஞனை யாரும் கண்டிருக்க மாட்டார்கள். இப்பொழுது அவர் அனைத்தையும் அல்லாஹ்விற்காகவும் அவனது நபிக்காகவும் உதறித்தள்ளி விட்டு நிற்கிறார்"
இவ்விதமாய்க் காலம் நகர்ந்து கொண்டிருக்க வரலாற்றின் முக்கிய நிகழ்வொன்று நடைபெற்றது.
முதல் அகபா உடன்படிக்கை!
oOo
முஸ்அபை, தம் வீட்டில் விருந்தினராக இருத்திக் கொண்டவர் அஸ்அத் இப்னு ஸுராரா. இவர் கஸ்ரஜ் கோத்திரத்தின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர். அவரது வீடு முஸ்அப் இஸ்லாமியப் பிரச்சாரம் புரிய மிகவும் தோதாகிப்போய், அங்கு மக்கள் வருவதும் போவதுமாய் இருந்தனர்.
ஒருநாள் அஸ்அத், முஸ்அபை அழைத்துக் கொண்டு, "இந்த மக்களுக்கும் செய்தி சொல்லுங்கள். அவர்களும் இஸ்லாத்தை அறியட்டும்; ஏற்றுக் கொள்வார்கள்" என்று அப்துல் அஷ்ஹல் குலத்தினரைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அந்தக் குலத்தினருக்குச் சொந்தமான ஒரு பழத்தோட்டம் இருந்தது. கிணறு, பேரீச்ச மரங்கள், அதன் நிழல் என்று வெயிலுக்கு இதமான இடம். தங்களைச் சந்திக்க வந்த அந்த இருவரையும் அந்த மக்கள் அத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, "என்னதான் அது செய்தி? சொல்லுங்கள் கேட்போம்" என்று எல்லோரும் வாகாய் அமர்ந்து கொண்டு செவியுற ஆரம்பித்தார்கள்.
முஸ்அப் இப்னு உமைரை ஒரு சிறு மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அதில் சிலர் முன்னமேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். மற்றவர்களோ 'கேட்டுத்தான் பார்ப்போமே' என்று வந்து சேர்ந்து கொண்டவர்கள். அழகிய முறையில் நற்செய்தி சொல்ல ஆரம்பித்தார் முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு.
மதீனாவில் இருபெரும் கோத்திரங்கள் இருந்தன, ஒன்று அவ்ஸ், மற்றொன்று கஸ்ரஜ். இத்தகவலும் முந்தைய அத்தியாயங்களில் நாம் அறிந்ததே. இதில் அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த இரு முக்கியப்புள்ளிகள் உஸைத் பின் ஹுளைர், ஸஅத் பின் முஆத். இவர்கள் இருவரும் அன்று ஓரிடத்தில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்க, ஒருவன் வேகவேகமாய் அவர்களிடம் வந்தான். "செய்தி தெரியுமா? கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்அத் இப்னு ஸுராரா தெரியுமில்லையா? மக்காவிலிருந்து வந்து என்னவோ புதுமதம் பற்றிப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருக்கும் அவரது விருந்தினரை மிகத் துணிச்சலாய் இங்கு நமது எல்லைக்கு அருகிலேயே அழைத்து வந்துவிட்டார். அதையெல்லாம் கவனிக்காமல் இங்கு நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கிறீர்களே?"
வந்தவன் பற்ற வைத்துவிட்டு நகர, வெகுண்டு எழுந்தார் ஸஅத் பின் முஆத். இவருடைய தாயாரின் சகோதரி மகன்தாம் அஸ்அத் இப்னு ஸுராரா.  அதனால் தன்னுடைய கோபத்தை நேரே சென்று அவர்மேல் கொட்டுவதில் தயக்கம் ஏற்பட்டது ஸஅதுக்கு. உஸைதை அழைத்தார்.
"உஸைத்! நீ ஒரு தைரியசாலி, பலசாலி. மக்காவிலிருந்து புறப்பட்டு வந்திருக்கும் அந்த இளைஞனை மிரட்டி அனுப்பியாக வேண்டும். அங்கிருந்து கிளம்பிவந்து நம் கோத்திரத்துக் கீழ்க்குடி மக்களின் மனதைக் கலைத்துக் கொண்டிருக்கிறான். நம்முடைய கடவுளர்களைக் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறான். இவனை எச்சரித்து, யத்ரிபிலிருந்தே விரட்ட வேண்டும். மீண்டும் ஒருமுறை அவன் இங்கு வந்து நம் இல்லங்களில் கால் வைக்கக் கூடாது. இவன் மட்டும் என் உறவினன் அஸ்அத் இப்னு ஸுராராவின் விருந்தினனாகவும் அவனது அடைக்கலத்தில் இல்லாதும் இருந்திருப்பின் நானே அவனைக் கவனித்து அனுப்பியிருப்பேன். உனக்குச் சிரமம் அளித்திருக்க மாட்டேன். சற்று கவனித்துவிட்டு வாயேன்"
"அவ்வளவுதானே? நான் பார்த்துக் கொள்கிறேன். இன்றோடு இப்பிரச்சனை ஒழிந்தது" என்று தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று கிளம்பி அத்தோட்டத்தை அடைந்து உள்ளே நுழைந்தார் உஸைத் பின் ஹுளைர். அவர் நுழைவதைக் கண்ட அஸ்அத் இப்னு ஸுராரா உடனே முஸ்அபை எச்சரித்தார். "எச்சரிக்கை முஸ்அப்! அதோ வருகிறாரே ஒருவர், அவர் அவரது குலத் தலைவர்களில் ஒருவர். நல்ல புத்திசாலி. மிகவும் நேர்மையானவர். அவர் பெயர் உஸைத் பின் ஹுளைர். அவர் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்று வையுங்கள், அவரது குலத்திலிருந்து பல மக்கள் அவரைப் பின்தொடர்ந்து நுழைவார்கள். அந்தளவு அவருக்குச் செல்வாக்கு. அல்லாஹ்வுக்கு உகந்த முறையில் அவரை இஸ்லாத்திற்கு அழையுங்கள். இனி உங்கள்பாடு, அவர்பாடு"
உஸைதின் தந்தை ஹுளைர் அல்-காதிப், அவ்ஸ் குலத்தின் தலைவராகத் திகழ்ந்தவர். அரபு குலத்தின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்த அவர் நல்ல பலசாலி, சிறந்த வீரர். அவரைப் பற்றிக் கவிஞரொருவர் மெனக்கெட்டுக் கவிதையெல்லாம் எழுதிப் புகழ்ந்து வைத்திருந்தார். அவரது அந்தஸ்து, வீரம், பரோபகாரம் எல்லாம் உயில் எழுதி வைக்கப்படாமலேயே உஸைதுக்கு வந்து அமைந்தது. மிகவும் திறமையான வில்லாளியாகவும் குதிரையேற்றத்தில் சிறப்பானவராகவும் ஆகிப்போனர் உஸைத். எழுத்தறிவு குறைவாய் அமையப்பெற்ற அக்குலத்தில் கல்வியறிவு வாய்க்கப்பெற்ற சிலருள் அவரும் ஒருவர். இதெல்லாம்போக, இயற்கையாய் அமைந்துவிட்ட நேரிய குணங்களும் அப்பழுக்கற்ற சிந்தனையும் எல்லாம் மேன்மையான இணைப்புகளாக அமைந்துவிட்டன.
அஸ்அத் இப்னு ஸுராராவின் எச்சரிக்கை முஸ்அபுக்குப் புரிந்தது. கோபமாய், வேகவேகமாய் நுழைந்த உஸைத், அங்குக் குழுமியிருந்த மக்களைப் பார்த்தார். முஸ்அபை முறைத்தார். 'நீதானா அவன்?'
"உனக்கு எங்கள் பகுதியில் என்ன வேலை? எங்களது கீழ்க்குடி மக்களையெல்லாம் அழைத்துவைத்து மனதைக் கலைக்கிறாயாம். உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன், உயிர் முக்கியம் என்றால் முதலில் இடத்தைக் காலி பண்ணுங்கள்" வீண் மிரட்டலெலாம் இல்லை என்பது அவரது முகத்திலேயே தெரிந்தது; வார்த்தைகளும் மிகக் கடுமையாய் வந்து விழுந்தன.
நிதானமாய், சாந்தமாய் உஸைதைப் பார்த்தார் முஸ்அப். "எதற்கு வீண் பிரச்சனை? அதெல்லாம் வேண்டாம். கோத்திரத் தலைவர்களுள் ஒருவரான உங்களுக்கு நானொரு சிறு கோரிக்கை வைக்கட்டுமா?"
"என்ன அது?"
"சற்று இங்கு வந்து அமருங்கள். நான் என்ன சொல்லிவருகிறேன் என்பதைச் செவியுறுங்கள். நான் சொல்வது உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையா, ஒன்றும் பாதகமில்லை. உங்களுக்கு எந்தத் தொல்லையும் தராமல் நாங்கள் கிளம்பிச் சென்றுவிடுகிறோம்"
வீண்வாக்குவாதம், வீண்பேச்சு, மிரட்டலுக்கு பதில் மிரட்டல், பதிலுக்குக் கோபம், அதட்டல், என்று எதுவுமே இல்லாமல் நேரடியாய் மிக இலகுவாய் அவர் மனதைத் தட்டினார் முஸ்அப். "நல்லது. உன் கோரிக்கை அப்படியொன்றும் மோசமில்லை" என்று ஏற்றுக் கொண்டார் உஸைத். அதற்காக, தான் பணிந்துவிட்டதாகவோ, கோபம் தணிந்துவிட்டதாகவோ அவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாதே! தான் கொண்டுவந்திருந்த ஈட்டியைத் தரையில் செங்குத்தாய்ச் செருகி நட்டுவைத்தார். எந்நேரமும் அது அவர்களைத் தாக்கத் தயங்காதாம் -  அதற்கு அதுதான் அர்த்தம். "உம், சொல்"
முஸ்அப் உஸைதைக் கூர்ந்து நோக்கி, முழுக் கவனத்துடன் நிதானமாய்ச் சொல்ல ஆரம்பித்தார். ஏகத்துவம், அல்லாஹ் முஹம்மது நபிக்கு அளித்துள்ள நபித்துவம், அற்ப இம்மை என்ன, நிரந்தர மறுமை என்ன, போன்ற இஸ்லாமிய அடிப்படைகளை அழகாய்ச் சொன்னார், தெளிவாய் அறிவித்தார். இறைவனிடமிருந்து வந்திறங்கிய குர்ஆன் வசனங்கள் சிலவற்றை ஓதிக் காண்பித்தார். அவ்வளவுதான். நீண்ட நெடிய பிரசங்கம், தர்க்கம், அது-இது என்று வேறொன்றுமே பேசவில்லை!
உஸைத் இப்னு ஹுளைர் மனதினுள் அப்படியே தெள்ளத்தெளிவாய்ப் புகுந்து அமர்ந்து கொண்டது அந்தச் செய்தி. 'அவ்வளவுதானா? இதுதான் இஸ்லாமா? இந்த எளிமையை மறுத்தா அங்குக் குரைஷிகளும் இங்கு சில மக்களும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்?' அங்குக் கூடி அமர்ந்திருந்தவர்கள் உஸைதின் முகத்தில் தென்படும் மாறுதலை அப்பட்டமாய்க் கண்டனர். 'அல்லாஹ்வின்மீது ஆணையாக! இவரது முகத்தில் தென்படும் களிப்பும் உவப்பும்... இதோ இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளப் போகிறார்' என்பதை அனைவராலும் எளிதாய் யூகிக்க முடிந்தது.
சுற்றி வளைக்கவில்லை உஸைதும். "நீர் சொன்ன செய்திகள் என்ன அருமை! குர்ஆனின் வசனங்கள் என்று சிலவற்றை ஓதினீர்களே எவ்வளவு சிறப்பாய் உள்ளது அது! சொல்லுங்கள், ஒருவன் முஸ்லிமாக என்ன செய்யவேண்டும்?"
"அதொன்றும் பெரிய விஷயமில்லை. ஒரு குளியல். உடைகளைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் வாய்விட்டு சாட்சி, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே; முஹம்மது அவனுடைய தூதரென்று சாட்சி பகர்கிறேன்'. அதன் பிறகு இரண்டு ரக்அத் தொழுகை. அவ்வளவுதான்"
'அவ்வளவுதானே' என்று விருட்டென்று எழுந்தார் உஸைத். அருகிலிருந்த கிணற்றுக்குச் சென்று தண்ணீர் மொண்டு தம்மைச் சுத்தம் செய்து கொண்டு திரும்பினார். கலிமா உரைத்தார். இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு, 'இதோ இன்றிலிருந்து இஸ்லாமியப் பணிக்கு நான் தயார்' என்று தலை உயர்த்தி நின்றார், உஸைத் பின் ஹுளைர், ரலியல்லாஹு அன்ஹு!
அத்துடன் இல்லாது தம் நண்பர் ஸஅத் பின் முஆதையும் தந்திரமாக முஸ்அபிடம் அனுப்பி வைக்க, ஏறக்குறைய அதே உரையாடல் முஸ்அப்-ஸஅதினிடையே நிகழ்ந்தது. ஸஅதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்; அவரது கோத்திரத்தின் பெரும்பகுதியினர் அவரைத் தொடர்ந்தனர்.
இந்நிகழ்வு, உஸைத் பின் ஹுளைர் (ரலி)வரலாற்றிலும் இடம்பெறுகிறது.
தோழர் ஹபீப் பின் ஸைத் வரலாற்றினிடையே அதைப்படித்தது நினைவிருக்கலாம். ஒரு புனித யாத்திரை மாதத்தில் யத்ரிபிலிருந்து மக்கா வந்திருந்த பன்னிரெண்டு ஆண்கள் கொண்ட குழுவொன்று நபியவர்களை அகபா பள்ளத்தாக்கில் சந்தித்தது. சிலர் மூலமாய் முஹம்மது பற்றியும் அவரது நபித்துவம் பற்றியும் அவர்கள் ஏற்கெனவே இஸ்லாம் பற்றி அறிந்திருந்தனர். அவர்கள் நபியவர்களுடன் அகபாப் பள்ளத்தாக்கில் சந்திப்பு நிகழ்த்தி, பேசினார்கள். உண்மை, வந்தவர்களின் உள்ளங்களைத் தைக்க, பெருமகிழ்வுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஹம்மது நபியுடன் உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அது, முதல் அகபா உடன்படிக்கை.
இப்படி அங்கிருந்து கிளம்பி வந்து நம்பிக்கை தெரிவித்து உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்ட அன்ஸார்களுக்குக் குர்ஆனும் இஸ்லாமிய போதனைகளும் அளிக்கவும் மதீனாவில் மற்றவர்களுக்கு ஏகத்துவப் பிரச்சாரம் புரியவும் ஒருவரை அனுப்பி வைக்கவேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. வயதில் மூத்தத் தோழர்கள், நபியவர்களுக்குத் தோழமையினாலோ உறவினாலோ நெருக்கமான தோழர்கள் என்று பலர் இருந்தபோதும் அப்பணிக்கு முஸ்அப் இப்னு உமைர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இவன் இது செய்வான்' என்பதை நன்கு அறிந்திருந்த நபியவர்களின் சரியான தேர்வு முஸ்அப்.
"அங்கு மற்றவர்களுக்கும் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லுங்கள்" என்றார்கள் முஹம்மது நபி.
"அப்படியே ஆகட்டும் அல்லாஹ்வின் தூதரே” என்று உடனே கிளம்பினார் முஸ்அப். கட்டிக் கொள்ள, பெட்டிப் படுக்கை, மூட்டை, முடிச்சு என்று எதுவும்தான் இல்லையே. இருந்த ஊரிலேயே அனைத்தையும் இழந்திருந்தவர் அவர்.
யத்ரிபில் கஸ்ரஜ் கோத்திரத்தின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர் அஸ்அத் இப்னு ஸுராரா. அவர், "வாருங்கள் தூதரின் தூதரே” என்று முஸ்அபைக் கட்டியணைத்து வரவேற்றுத் தம் வீட்டில் இருத்திக் கொண்டார். அமைதியாய்த் துவங்கியது புரட்சிப் பணியொன்று. முஸ்அப் இஸ்லாமியப் பிரச்சாரம் புரிய அவ்வீடு மிகவும் வசதியாக அமைந்து போனது. மக்கள் தனியாய், குழுவாய் என்று வந்துவந்து செய்தி அறிந்து சென்றனர். அமைதியான அப்பிரச்சாரங்களுக்கு நல்ல பலன் இருந்தது. யத்ரிப் நகரில் இஸ்லாம் பரவலாய் அறியப்பட்டு மேலும் பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். அங்கு மக்காவிலோ, தாயிஃப் நகரிலோ இருந்ததைப் போலான எதிர்ப்பெல்லாம் இல்லாமல் இங்கு யத்ரிப் நகரம் இஸ்லாமிய விதை, விருட்சமாய் தழைத்தோங்க வளமான விளைநிலமாய்ப் பண்பட்டிருந்தது.
முஸ்அப் பிரமாதமாகக் குர்ஆன் ஓதக் கூடியவர். அவரது வாயிலிருந்து வெளிவந்த குர்ஆன் வசனங்களை முதன்முறையாகக் கேட்கும் மாத்திரத்திலேயே மக்களின் இதயங்கள் அடிமையாகின. அந்த இனிய குரலில் வெளிவந்த குர்ஆன் வாசகங்கள், மனதை அடித்துப் புரட்டிப் போடும் அதன் கருத்து, எல்லாமாய்ச் சேர்ந்து அல்லாஹ்வின் மீதும் அவனது வார்த்தைகளின் மீதும் அளவிலாத பக்தியிலும் பற்றிலும் மதீனத்து மக்கள் ஆழ்ந்து போனார்கள். அவரது நற்குணம், எளிமை, நேர்மை, ஆழ்ந்த இறைபக்தி, தெளிவான ஞானம் இதெல்லாம் மதீனத்து அம்மக்களை வெகுவாய்க் கவர்ந்தது; ஏகத்துவ உண்மை தங்குதடையின்றி அவர்களது உள்ளங்களில் புகுந்தது.
வெறும் பன்னிரெண்டு பேர் வந்து அகபாவில் உறுதிமொழி எடுத்துச் சென்ற சில மாதங்கள் கழித்து, அதற்கடுத்த யாத்திரை காலத்தில் ஆண்-பெண் என்று எழுபது முஸ்லிம்கள் மக்காவிற்குக் கிளம்பினர். அவர்களுடன் முஸ்அபும் மக்கா திரும்பினார். இம்முறையும் அகபாவில் உடன்படிக்கை நிகழ்வுற்றது.
இரண்டாம் அகபா உடன்படிக்கை.
அதைத் தொடர்ந்து வரலாற்றுப் பக்கங்கள் வேகவேகமாய் புரள ஆரம்பித்தன. ஏகப்பட்ட இன்னலுக்கு ஆளாகி, எங்காவது வாசல் திறக்காதா, வழியொன்று பிறக்காதா என்று தவித்துக் கிடந்த முஸ்லிம்கள் மக்காவிலிருந்து யத்ரிபிற்குப் புலம்பெயர ஆரம்பித்தனர். முத்தாய்ப்பாய் அமைந்தது முஹம்மது நபியின் பயணம். யத்ரிப் மதீனாவாகியது.
நபியவர்கள் மதீனா வந்தடைந்தபோது முஸ்அப் இப்னு உமைர் இஸ்லாமியச் செய்தியைச் சென்று சேர்ப்பிக்காத வீடு என்று அங்கு எதுவுமே இல்லை.
oOo
பத்ரு யுத்தம் பற்றியும் அதில் முஸ்லிம்கள் அடைந்த பெருவெற்றி பற்றியும் முன்னரேயே வாசித்தோம். வரலாறு படைத்த அந்தப் போரின்போது நிகழ்ந்த சில நிகழ்வுகளை மட்டும் நாம் இங்குப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுவோம். ஏனெனில் அதற்கு அடுத்து நிகழ்ந்த உஹதுப் போருக்கு நாம் விரைய வேண்டியுள்ளது.
பத்ருப் போரின் இறுதியில் பல குரைஷியர்கள் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். அதில் ஒருவன் அந்-நத்ரு இப்னுல் ஹாரித். கெட்ட விரோதி இவன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபிக்கு எதிராகவும், குர்ஆன் வசனங்கள் மீது அவதூறு சொல்லியும் மக்காவில் அவன் இழைத்துவந்த தீமைகள் ஏராளம். "முஹம்மது சொல்வதையெல்லாம் நீங்கள் யாரும் கேட்கவேண்டாம். இறைவேதம் என்று அவர் அறிவிப்பதெல்லாம் பண்டைய புராணக் கதைகளே. வேண்டுமானால் அதைவிடச் சிறப்பான புத்தகம் கதையெல்லாம் என்னிடம் இருக்கின்றன” என்று எதிர்ப்பிரச்சாரம் புரிந்து திரிந்து கொண்டிருந்தவன். குர்ஆனுக்கு எதிரான அவனது துர்ச்செயல்களைக் கண்டித்து இறைவன் குர்ஆனிலேயே எட்டு இடங்களில் குறிப்பிடுகிறான்.
போர்க் கைதிகளை அழைத்துக் கொண்டு மதீனா திரும்பும் வழியில் அல்-அதீல் எனும் இடத்தில் முஸ்லிம்களின் படை தங்கியது. அங்கு அனைத்துக் கைதிகளையும் பார்வையிட்டார்கள் நபியவர்கள். அந்-நத்ரை அவர்கள் பார்க்க, அந்தப் பார்வை அந்-நத்ரின் இதயத்தினுள் அச்சமொன்றைப் பரப்பியது. அருகிலிருந்தவனிடம் கூறினான், "சத்தியமாகச் சொல்கிறேன். முஹம்மது என்னைப் பார்த்த பார்வையில் என் மரணம் தெரிந்தது. நிச்சயம் அவர் என்னைக் கொல்லப்போகிறார்"
"அப்படியெல்லாம் ஏதும் நடக்காது. நீ வீணாய்ப் பயப்படுகிறாய்"
அந்-நத்ரின் மனம் சமாதானமடையவில்லை. தனக்காக ஏதேனும் பரிந்துரை கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். முஸ்அப் இப்னு உமைர் தென்பட்டார். அவர் அவனுக்கு உறவினர்.
"முஸ்அப்! உன்னுடைய தலைவரிடம் எனக்காக நீ பரிந்துரைக்க வேண்டும். இதர குரைஷியர்களை அவர் நடத்தப் போவதைப்போல் என்னையும் நடாத்த வேண்டும் எனப் பரிந்துரைத்துவிடு. இல்லையென்றால் அவர் என்னைக் கொன்றுவிடுவார் என்றே எனக்குத் தோன்றுகிறது"
அவனைப் பார்த்து முஸ்அப், "அல்லாஹ்வின் வேதத்தைப் பழங்காலக் கட்டுக்கதைகள் என்று அவதூறு பரப்பித் திரிந்தாய். அவனுடைய தூதர் முஹம்மதை ஒரு பொய்யன் என்று அவமானப்படுத்தினாய். முஸ்லிம்களின்மீது நீ கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளோ ஏராளம்"
இடைமறித்தான் அந்-நத்ரு. "முஸ்அப்! போரின் முடிவுமட்டும் குரைஷிகளுக்கு சாதகமாய் அமைந்து நீ ஒரு போர்க்கைதியாய் அவர்களிடம் அகப்பட்டிருந்தால் உனக்காக நான் வாதாடியிருப்பேன், பரிந்துரைத்திருப்பேன், தெரியுமா? நான் உயிரோடு இருக்கும்வரை அவர்களால் உன் உயிருக்குத் தீங்கு ஏற்படாமல் காத்திருப்பேன்"
"நான் உன்னை நம்பவில்லை அந்-நத்ரு. அது ஒருபுறமிருக்க, நான் நீயில்லை. நான் முஸ்லிம். இஸ்லாத்தை நான் ஏற்றுக்கொண்ட மாத்திரத்தில் இஸ்லாத்தின் எதிரி உன்னுடனான எனது உறவு அறுந்துவிட்டது"
நபியவர்கள் உத்தரவுப்படி அந்த இடத்திலேயே அந்-நத்ரின் தலை கொய்யப்பட்டது.
போரில் சிறைபிடிக்கப்பட்ட மற்றொருவர் முஸ்அபின் சகோதரன் அபூ அஸீஸ் இப்னு உமைர். அவரைப் பார்த்துவிட்டார் முஸ்அப். அபூ அஸீஸைக் கைதியாய் அழைத்துச் சென்றுகொண்டிருந்த அன்ஸாரித் தோழரை விரைந்து நெருங்கிய முஸ்அப், "கொழுகொம்பைப் பிடித்திருக்கிறீர்கள். இவருடைய தாயார் கொழுத்த செல்வம் படைத்த பெண்மணி. நன்றாகப் பத்திரமாக இவரைக் கட்டிவையுங்கள். பெரும் தொகையொன்று மீட்புத்தொகையாய் கிடைப்பது நிச்சயம்"
"சகோதரா! என்ன இது கொடுமை” என்று முஸ்அபை நோக்கி அலறினார் அபூ அஸீஸ். ரத்த உறவை நினைவூட்டி, "ஏதாவது சலுகைக்கு ஏற்பாடு செய்வாய் என்று பார்த்தால், இதென்ன ஆலோசனை"
அழகிய பதில் வந்தது முஸ்அபிடமிருந்து. "இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமையும் சகோதர பந்தம் இருக்கிறதே அது இறைமறுப்பில் மூழ்கியுள்ள இரத்த உறவைவிட எல்லாவகையிலும் உசத்தி. இதோ இவர்தாம் என் சகோதரர். நீயல்ல!”
ஆனால் அதே அபூ அஸீஸ் தெரிவித்த மற்றொரு செய்தியும் ஓர் ஆச்சரியம். சிறைபிடிக்கப்பட்டிருந்த அவருக்கு உணவு நேரத்தில் அவரது பசி தணியும் அளவிற்கு ரொட்டி அளித்து உபசரிக்கும் அன்ஸார்கள், தங்களது பசிக்கு வெறும் பேரீச்சம் பழத்தை உண்டிருக்கிறார்கள். நபியவர்களின் உத்தரவு அது. இத்தகைய உபசரிப்பு அபூ அஸீஸிற்கே சங்கடமாகி, தனக்கு அளிக்கப்படும் ரொட்டியை நபித் தோழர் ஒருவரிடம் நீட்டினால் அதிலிருந்து ஒரு சிறு துண்டைக்கூட பிட்டுக்கொள்ளாமல் அப்படியே மீண்டும் தந்துவிட்டிருக்கிறார் அவர்.
இஸ்லாமிய சகோதரத்துவத்தையும் எதிரியையும் செவ்வனே உபசரிக்கும் விதத்தையும் தெளிவாய் விளங்கி வைத்திருந்தார்கள் அவர்கள். ரலியல்லாஹு அன்ஹும்.
oOo
அதற்கு அடுத்த ஆண்டு உஹதுப் போர். இந்த போரைப் பற்றியும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்துக் கொண்டே வந்தோம்.
போருக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. களத்தில் முஸ்லிம்களின் கொடியைச் சுமக்கும் பணியை முஸ்அப் இப்னு உமைரிடம் அளித்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அதை ஏந்திக் கொண்டு படையணியில் முன்னேறிக் கொண்டிருந்தார் முஸ்அப். போர் உக்கிரமாய் நடைபெற்று முஸ்லிம்கள் குரைஷிகளை விரட்டியடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்து மலையுச்சியிலிருந்த சில தோழர்கள் போர் முடிவுற்றுவிட்டதாய்க் கருதி கீழே இறங்கி ஓடிவர, தப்பியோடிய குரைஷிப் படைகள் அதைப் பார்த்துவிட்டனர்.  தப்பியோடிய படையில் ஒரு பகுதியினர் மலையின் பின்புறமிருந்து மேலேறி அங்கிருந்து இறங்கி வந்து முஸ்லிம் படைகளைத் தாக்கத் துவங்க, திசைமாறியது போரின் போக்கு.
முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பையும் களத்தில் நிகழ்ந்த கொடூரங்களையும் வஹ்ஷி பின் ஹர்பு வரலாற்றிலேயே பார்த்தோம். அந்தக் கடுமையான சூழலில் முஸ்அப் கொடியை உயர ஏந்தி, "அல்லாஹு அக்பர்! அல்லாஹ்வே மிகப் பெரியவன்” என்று வேங்கையாய் உறுமிக் கொண்டு களத்தில் வலமும் இடமும் சுழன்று சுழன்று எதிரிகளுடன் போரிட ஆரம்பித்தார். நபியவர்களை நோக்கிச் செல்லும் எதிரிகளின் கவனத்தைத் தம் பக்கம் திருப்பி தானே ஒரு தனிப்படை போல் படு பயங்கரமாய்ச் சண்டை.
அப்பொழுது இப்னு காமிய்யா என்ற குரைஷி முஸ்அபை வேகமாய் நெருங்கி தனது வாளைச் சுழற்ற அது முஸ்அப் இப்னு உமைரின் வலது கையைத் துண்டித்தது. கரம் கழன்று தரையில் வீழ்ந்தது. "முஹம்மது (ஸல்) தூதரே அன்றி வேறல்லர்;  அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்றுபோயினர்" என்ற குர்ஆனின் 3ஆம் அத்தியாயத்தின் 144வது வசனத்தை உச்சரித்துக்கொண்டே கொடியை தன் இடது கையில் ஏந்திக் கொண்டார்; போரைத் தொடர்ந்தார் முஸ்அப்.
ஆனால் அந்தக் குரைஷி அவரது இடது கையையும் துண்டாட, இரத்த சகதியில் வீழ்ந்தது அந்தக் கரமும். அதைப் பொருட்படுத்தவில்லை முஸ்அப். இரத்தம் பீறிட உடம்பில் சொச்சம் ஒட்டிக் கொண்டிருந்த கைகளைக் கொண்டு கொடியை தம் மார்புடன் அனைத்துக் கொண்டு, அதே வசனத்தை மீண்டும் உச்சரித்தார். அப்பொழுது மற்றொருவன் தன் ஈட்டியைக் கொண்டு முஸ்அபைத் தாக்க உயிர் நீத்தார் முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு.
போரெல்லாம் முடிந்து, அனைத்துக் களேபரங்களும் முடிந்தபின் வீழ்ந்து கிடந்த தம் தோழர்களின் உடல்களை பார்வையிட்டுக் கொண்டே வந்தார்கள் நபியவர்கள். அக்களத்தில் குரைஷிப் பெண்கள் நிகழ்த்திய கோரத் தாண்டவமும் நாம் ஏற்கெனவே படித்ததுதான். தாங்கவியலாத சோகக் காட்சி அது. இறந்த தோழர்களைக் கண்டு முஹம்மது நபி பகர்ந்தார்கள், "மறுமையில் நீங்களெல்லாம் வீரத் தியாகிகள் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் சாட்சி பகர்கிறார்"
இறந்தவர்களை அக்களத்திலேயே நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. முஸ்அபின் உடலை முழுவதுமாய்ப் போர்த்தக் கூடிய அளவிற்குக்கூட அவரது உடலில் துணி இல்லை. அதுவும் கிழிந்துபோன கம்பளித் துணி. தலையை மூடினால் கால் மூடவில்லை. காலை மூடினால் தலை மூடவில்லை.
செல்வச் செழிப்பிலும் சுக போகத்திலும் மிதந்து கொண்டிருந்த ஓர் இளைஞர், தாய், தகப்பன், சொத்து, சுகம் என அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு ஏக இறைவனைத் துதித்து வாழப் புகலிடம் ஒன்று கிடைத்தால் போதும் என்று கடல் கடந்து ஓடிய முஹாஜிர், யத்ரிப் மணலில் இஸ்லாமிய விதையைத் தூவி வீடுதோறும் இஸ்லாமிய விருட்சம் வளர்ந்தோங்க வைத்து மதீனத்து வரலாற்றிற்கு வித்திட்டவர், இறைவனும் அவனது தூதரும் மட்டுமே போதுமென்று நெய்யுண்டு, பட்டுடுத்தி, ஜவ்வாது பூசித் திளைத்த அங்கங்களையெல்லாம் துண்டு துண்டாய் இழந்து விட்டு, துண்டு துணியுடன் மடிந்து கிடந்தார் முஸ்அப் இப்னு உமைர் - ரலியல்லாஹு அன்ஹு.
இறுதியில் நபியவர்கள் கூறினார்கள், "அவரது தலையைத் துணியால் மூடிவிட்டு கால்களை இலைகள் கொண்டு மூடிவிடுங்கள்"
முஸ்அப் இப்னு உமைரின் வீர மரணத்தை நினைத்து மறுமையில் தமக்கு எந்தப் பங்கும் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயத்தில் நடுங்கி அழுவார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி). ஒருமுறை அவர் நோன்பு திறக்க அவருடைய பணியாள் உணவு எடுத்து வந்தார். அதைக் கண்டு திடீரென்று பொங்கி அழுதார் இப்னு அவ்ஃப். "முஸ்அப் இப்னு உமைர் இஸ்லாத்தை ஏற்றபின் இவ்வுலகில் எவ்வித சொகுசையோ, நல்ல உணவையோ சுவைக்காமல் அனைத்தையும் மறுமைக்கு சேமித்து எடுத்துச் சென்றுவிட்டார். நமக்கு எல்லாம் இவ்வுலகிலேயே கிடைக்கிறதே மறுமையில் நம் பங்கு கிடைக்காமற் போய்விடுமோ" என்ற அச்சத்தில் விளைந்த அழுகை அது. கிளர்ந்தெழுந்த துக்கத்தில் அன்று அவர் அந்த உணவைக்கூட உண்ணவில்லை.
இப்படி பயந்து அழுதது யார்? சொர்க்கவாசி என்று திருநபி (ஸல்) அவர்களால் நன்மாராயம் வழங்கப்பெற்ற பத்துபேருள் ஒருவர். நம் கண்களெல்லாம் எந்த நம்பி்க்கையில் ஈரம் உலர்ந்து கிடக்கின்றன?
ஒருமுறை கப்பாப் பின் அல்-அரத் (ரலி) சொன்னார். "நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அத்தகையவர்களில் ஒருவர். அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். அவரைக் கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியினால் நாங்கள் அவரது தலையை மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரிந்தன.  அவரது கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரது தலை வெளியே தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரது தலையை மூடி விடும்படியும் அவரது கால்கள் இரண்டின் மீதும் 'இத்கிர்' புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்"
'ஹிஜ்ரத் மேற்கொண்டதற்கான பலனை இவ்வுலகிலேயே அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோமே அதனால் மறுமையில் பங்கேதும் கிடைக்காமல் போய்விடுமோ? முஸ்அப் போன்றவர்களெல்லாம் அனைத்து பலன்களையும் மறுமைக்கு என்று எடுத்துச் சென்றுவிட்டார்களே' என்று பயமும் ஆதங்கமும் கொண்ட விசனம் அது.
இறுதியில் நபியவர்களும் தோழர்களும் மதீனா திரும்ப, பெண்களெல்லாம் தத்தம் தகப்பன், சகோதரன், கணவன் என்று விசாரிக்கத் தொடங்கினார். முஸ்அப் இப்னு உமைரின் மனைவி ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி). இவர் நபியவர்களின் மனைவி ஸைனப் பின்த் ஜஹ்ஷின் சகோதரி. மட்டுமல்லாது ஹம்ஸா இப்னு முத்தலிப் இவர்களுக்குத் தாய் மாமன். ஹம்னாவும் உஹதுப் போரில் கலந்த கொண்டு முஸ்லிம் போர் வீரர்களுக்கு நீர் அளிப்பது, காயங்களுக்கு மருந்திடுவது என்று பரபரப்பாய்ச் சேவை புரிந்து கொண்டிருந்தார்.
ஹம்னா நபியவர்களை நெருங்க, "ஓ ஹம்னா! உன் சகோதரன் அப்துல்லாஹ்வுக்காக வெகுமதி தேடிக் கொள்வாயாக” என்றார்கள் அவர்கள். உஹதுப் போரில் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷும் வீர மரணமடைந்திருந்தார்.
அதைக் கேட்ட அவர், "நாமனைவரும் அல்லாஹ்விற்கே உரியவர்களாய் இருக்கிறோம். அவனிடமே மீள்கிறோம். அல்லாஹ்வின் கருணை அவர் மீது பொழிவதாக. அவன் அவரை மன்னிப்பானாக” என்றார்.
"உன்னுடைய தாய்மாமன் ஹம்ஸாவின் மீது வெகுமதி தேடிக் கொள்வாயாக ஹம்னா” என்றார்கள் அடுத்து.
முதலில் விழுந்தது இடியென்றால் இது பேரிடி. அந்தத் துக்கத்தையும் நிதானமாய் விழுங்கிக் கொண்ட ஹம்னா அதே பதிலுரைத்தார்.
தொடர்ந்தார்கள், "ஓ ஹம்னா, உன் கணவன் முஸ்அப் இப்னு உமைரின் மீது வெகுமதி தேடிக் கொள்வாயாக"
இது, இந்த இழப்பு, இதில் உடைந்துவிட்டார் ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹா. அழுகை கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வெடித்தது. "பெண்ணுக்குத் தன் கணவன் மீது இருக்கும் பிணைப்பு, கணவனுக்கு மனைவியிடம் உள்ளதைவிட அதிகமாகும்” என்றார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
வேங்கை போன்ற தாய்மாமன், உடன் பிறந்த சகோதரன், ஆருயிர்க் கணவன் என்று ஒரே நாளில் அனைவரையும் பறிகொடுப்பது என்பது கொஞ்சநஞ்ச சோகமா என்ன? அழுதார் ஹம்னா.
பின்னாளில் இவரைத் தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு மறுமணம் புரிந்து கொண்டார்கள்.
உல்லாச இளைஞர்கள் ஊர்தோறும் தெருதோறும் நிறைந்திருக்கிறார்கள்தான். சரியான வெளிச்சம் அவ்வுள்ளங்களில் புக வேண்டும். அவ்வளவே! திசைமாறித் திரிந்து கொண்டிருக்கும் அவர்கள் அறிய வேண்டியது சரியான முகவரி மட்டுமே. பல்லாயிரம் கரங்கள் தியாகங்களுக்குத் தயாராகும் - முஸ்அப் இப்னு உமைரைப் போல்.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment