எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 14th August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும்.
ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான இப்புனித ரமலான் மாதத்தில் ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக வீண்விவாதம், தேவையற்ற சச்சரவுகள் இவைகளை விட்டும் தவிர்ந்தவர்களாக இறைவழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி இறையருளை பெறவேண்டும் என்பது தான் நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
“யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’
என வானவர் தலைவர் ஜீப்ரயீல் (அலை) அவர்களே துஆ, செய்து நபி (ஸல்) அவர்களும் ‘ஆமீன்’ என்று கூறியிருக்கிறார்கள் என்றால் இந்த மாதத்தின் சிறப்பையும் இந்த மாதம் நமக்கு பாவமன்னிப்புகள் வழங்கப்படுகின்ற ஒரு அற்புத மாதமாக இருக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி)
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன (புகாரி)
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது (புகாரி)
இப்படிப்பட்ட புனித ரமலான் மாதத்தில் நாம் அரும்பாடுபட்டு செய்கின்ற நன்மைகளும், பாவமன்னிப்புக் கேட்டு செய்கின்ற பிரார்த்தனைகளும் முறையாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் நமது நம்பிக்கை சார்ந்த இஸ்லாத்தின் அடிப்படைகளை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் இஸ்லாத்தின் அடிப்படையான “ஏகத்துவம் என்றால் என்ன? என்பதைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக ‘வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது என்றால் என்ன?’ என்பதைப் பற்றி இனி பார்ப்போம்.
வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது!
“தவ்ஹீதுல் உலூஹிய்யா” என்று அழைக்கப்படுகின்ற இவ்வகை தவ்ஹீதைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது மிக அதிகம் இருக்கிறது. முதல் வகை தவ்ஹீதான ‘படைத்துப் பரிபாலித்தலில் இறைவனை ஒருமைப்படுத்துல்’ என்பதைச் சரியாக புரிந்துக் கொண்ட முஸ்லிம்களில் பலர் இந்த வகைத் தவ்ஹீதையும் அடுத்து வரக்கூடியதையும் சரியாகப் புரிந்துக் கொள்ளாத காரணத்தினாலேயே இன்று இஸ்லாமிய சமூகத்திலே ஷிர்க், சமாதி வழிபாடுகள் போன்றவை மலிந்து காணப்படுகின்றன.
நம்மவர்களில் பெரும்பாலானவர்களிடம் ‘வணக்கம்’ என்றால் என்று கேட்போமேயானால் அவர்களிடமிருந்து உடனே வரக்கூடிய பதில், ‘தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் போன்றவைகள் என்பதாகும். இவைகளும் வணக்கம் தான். இதல்லாமல் இறைவன் எந்தெந்த செயல்களையெல்லாம் தனக்காக மட்டுமே செய்ய வேண்டும் என கட்டளையிட்டிருக்கானோ அவைகளும் வணக்கமாகும். இவ்வாறு, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கே செய்து அவனையே வணங்க வேண்டும் என்றும் நம்பிக்கை கொள்வதற்கு “தவ்ஹீதுல் உலுஹிய்யா” என்று பெயர்.
அல்லாஹ் மட்டுமே இப்பேரண்டத்தை படைத்து, பரிபாலித்து உணவளித்துக் கொண்டிப்பவன் ஆகையால் அவன் மட்டுமே வணக்கத்திற்கு முழு தகுதியுடையவன் ஆவான். வணக்கம் என்பது அல்லாஹ்தஆலாவிற்கே முழு உரிமையுள்ள ஒன்றாகும். எனவே அவனுடைய படைப்பினங்களான நாம் அவனை மட்டுமே வணங்க வேண்டும்.
புரிந்துக் கொள்ளுதலில் தவறிழைத்தலே இணைவைப்புக்கு காரணமாகின்றது!
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும், அதாவது தொழுகை, நோன்பு வைத்தல், ஜக்காத் கொடுத்தல், பிரார்த்தனை செய்தல், மன்றாடுதல், உதவி கோருதுல், நேர்ச்சை செய்தல், குர்பானி கொடுத்தல், பேரச்சம் கொள்ளுதல் இன்னும் பிற அனைத்து வகையான வணக்கக்கங்களையும் அவனுக்கே செய்து அவனையே வழிபடவேண்டும். இதில் எந்த ஒன்றையும் அல்லாஹ் அல்லாத இறை நேசர்களுக்கோ, நபிமார்களுக்கோ, ஷைகுகளுக்கோ, பீர்களுக்கோ அல்லது வேறு யாருக்குமே செய்யக்கூடாது. இவைகள் அனைத்துமே இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய வணக்கங்கள் தான் என்று புரிந்துக் கொள்வதில் ஏற்பட்ட தவறின் காரணமாக அல்லாஹ் அல்லாத பிறருக்கு இவ்வணக்க வழிபாடுகளைச் செய்து அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த முஷ்ரிக் ஆகின்றனர்.
இந்த வகை தவ்ஹீதை ஏற்றுக்கொள்வதில் தான் எல்லாக் காலகட்டங்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றி, அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களை முன்னர் வாழ்ந்த முஷ்ரிக்குகளும், இணை வைப்பவர்களும் நிராகரித்து வந்தனர். இந்த முஷ்ரிக்குகள் இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் உள்ள அனைத்துப் படைப்பினங்களையும் படைத்து பரிபாலித்து வருபவன் அல்லாஹ்வே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தனர். ஆனால் அவனுக்கே முழு உரிமையான வணக்கங்களை அவனல்லாது பிறருக்கு செய்து வந்தனர்.
“மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள். அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?” (அல்-குர்ஆன் 43:87)
அவர்களாகவே பதிய கடவுளர்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவைகள் அவர்களை அல்லாஹ்வுக்கு நெருக்கமாக்கி வைக்கும் என்று அவைகளை வழிபட்டு அல்லாஹ்வால் மன்னிக்கப்படமாட்டாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் செய்த குற்றவாளியாகினர்.
மேலும் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளில் பலர் கூட, படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் அல்லாஹ் மட்டுமே என்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆயினும் இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களை இறைவனல்லாது முன்சென்ற இப்ராஹீம், இஸ்மாயீல் போன்ற நபிமார்கள் மற்றும் நல்லோர்களின் சிலைகளுக்கு செய்து வந்ததனர். மேலும் இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவர்கள்! அதற்காகத் தான் இவர்களின் சிலைகளை நாங்கள் வழிபடுகின்றோம் என்றும் கூறினர்.
“அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்” (39:3)
படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று நம்பிக் கொண்டிருந்த இந்த மக்களிடையே தான் நபி (ஸல்) அவர்கள் போர் புரிந்தார்கள். அவர்களை சிறைபிடித்தார்கள்! காரணம், படைத்துப் பரிபாலிக்கும் தன்மை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்ற தவ்ஹீதை ஏற்றுக் கொண்டிருந்த மக்கத்து முஷ்ரிக்குகள், மற்ற இரு தவ்ஹீது வகைகளான வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது மற்றும் இறைவனின் பண்புகளில், பெயர்களில் இறைவனை ஒருமைப்படுத்துவது ஆகியவற்றில் தவறிழைத்து அவற்றில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்ததே ஆகும்.
அல்லாஹ்தான் தங்களை படைத்தவன், உணவளிப்பவன் மற்றும் தங்களின் உயிர்களை வாங்குபவன் என்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தாலும் தங்களின் நேசர்களாக, பாதுகவலர்களாக கருதியவர்களை அல்லாஹ்வோடு சேர்த்து வணங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை. ஆகையால் மக்கத்து முஷ்ரிக்குகள் அல்லாஹ்வின் ஆட்சியையும் சக்தியையும் அறிந்திருந்தனர். ஆயினும், அவர்கள் தங்களுக்குத் தேவைகள் அல்லது துன்பங்கள் வரும் போதெல்லாம் தங்களுடைய பலவிதமான வணக்க வழிபாடுகளான தான தர்மங்கள், நேர்ச்சைகள் மற்றும் அறுத்துப் பலியிடுதல் ஆகியவற்றை அவர்களுக்கு அர்ப்பணித்தனர்.
சில மக்கத்து காஃபிர்கள் ‘மறுமை நாளையும்’ ‘தீர்ப்பு உண்டென்றும்’ வேறு சிலர் ‘களா கத்ரை’யும் நம்பினர். முந்தைய இஸ்லாமிய கவிதைகளில் இவற்றிற்கு ஏராளமான சான்றுகளும் இருக்கின்றன. மக்கத்து காஃபிர்கள் தவ்ஹீதையும் இறைவனையும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவர்கள் இறைவனை விட்டு விட்டு மற்றவர்களுக்கு வணக்கத்தைச் செலுத்தியதன் காரணமாகவே இறைவன் அவர்களை இறை நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்) என்று விவரிக்கிறான்.
எனவே வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவதன் முக்கியத்துவம் என்னவெனில் இறைவனை வணங்குவதில் ஒருமையை கட்டிக் காத்தலாகும். வணங்குவதற்கு அவன் ஒருவனே தகுதியுடையவன் ஆதலாலும் அவன் ஒருவனே நமக்கு நன்மை அளிக்கக்கூடியவன் ஆகையாலும் அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் இறைவன் ஒருவனை முன்னிறுத்தியே செய்ய வேண்டும். மேலும் இறைவனை வணங்குவதில் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே எந்தவித இடைத்தரகரும் தேவையில்லை. மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் நபிமார்கள் எடுத்துக் கூறிய செய்தியின் முக்கியத்துவம் அனைத்துமே வணக்க வழிபாடுகளில் இறைவன் ஒருவனையே முன்னிறுத்தப்பட வேண்டும் என அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்-குர்ஆன் 51:56)
“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள். வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்” (அல்-குர்ஆன் 16:36)
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
No comments:
Post a Comment