Monday, July 25, 2011

அரசு மருத்துவமனைகள் மட்டும் விதிவிலக்கா என்ன?


விபத்தல்ல, அலட்சியம்

First Published : 25 Jul 2011 03:03:37 AM IST

Last Updated : 25 Jul 2011 03:24:46 AM IST


அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றிப் புறக்கணிக்கப்படுகின்றன என்பதற்கு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் நேரிட்ட விபத்தும், அந்தச் சம்பவத்தில் மூச்சுத் திணறல் காரணமாக மூன்று உள்நோயாளிகள் இறந்ததுமே சான்றுகள்.
 ÷இது விபத்து என்றும், இத்தகைய சம்பவங்கள் எந்தவொரு சிறந்த உள்கட்டமைப்பு உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும்கூட நிகழும், நிகழ்ந்தும் இருக்கின்றன என்று அரசுத் தரப்பிலோ அல்லது அரசு மருத்துவமனை ஊழியர்கள் அமைப்போ கூறலாம். அந்த வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத் தோன்றினாலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள எல்லா மருத்துவமனைகளிலும் இத்தகைய விபத்துகள் வெவ்வேறு விதங்களில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதும், இதற்கு அடிப்படைக் காரணம் மருத்துவமனைகள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதுதான் என்கிற உண்மையை அவர்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
 ÷மாநிலத் தலைநகரில், குறிப்பாக ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அடிக்கடி வந்துபோகும் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனைகளிலேயே இத்தகைய பராமரிப்புக் குறைபாடு இருக்கிறது என்றால், மாவட்ட அளவிலான மருத்துவமனைகள் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.
 ÷புதிய மருத்துவமனைகள், புதிய மருத்துவக் கல்லூரிகள், மாணவர் விடுதிகள் கட்டுவது எல்லாவற்றையும் பொதுப்பணித் துறைதான் மேற்கொள்கிறது. இவர்கள் கட்டும் ஒரு கட்டடம்கூட முழுதாக ஓராண்டுக்குக்கூட நன்றாக இருந்ததில்லை. சென்னையில் உள்ள மூன்று மருத்துவமனைகளிலும், காமராஜ் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றும்கூட நின்றுகொண்டிருக்கையில், அண்மையில் கட்டப்பட்ட கட்டடங்கள் விரிசல் விட்டும், கதிரொளித் தடுப்புப்பலகைகள் உடைந்தும், கழிவறைக் குழாய்கள் இடம்பிறழ்ந்தும் கிடக்கின்ற அவலத்தைக் கண்கூடாகக் காண முடியும்.
 ÷குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்த கதையாக, பொதுப் பணித்துறையிடம் ஒப்படைக்கப்படும் பராமரிப்புப் பணிக்கும் அதே கதிதான் ஏற்படுகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் இந்த விபத்து குறித்துக் குறிப்பிடும்போது, ""பொதுப்பணித்துறைதான் பராமரிப்புப் பணிகளைச் செய்து வருகிறது. ஏ.சி. பராமரிப்பு தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த தேதியில் அவர்களும் வந்து சோதித்துப் பார்த்திருக்கிறார்கள்'' என்கிறார்.
 ஒப்பந்தப் பணிகள் எப்படி நடக்கின்றன என்பது நமக்குத் தெரியாதது அல்ல. இந்த ஒப்பந்தத்தை எடுத்த ஒப்பந்ததாரர், உள் ஒப்பந்தமாக அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஏ.சி. மெக்கானிக்கை மிகக் குறைந்த தொகைக்கு நியமித்திருப்பார். அந்த மெக்கானிக்கும் கடனே என்று வந்து போயிருப்பார்.
 ÷புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் விரிசல் என்றால் அது குறித்து, புகார் தெரிவிக்கவும், குறிப்பிட்ட கட்டட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமை மருத்துவர் கடிதம் எழுத முடியும். உள்ஒப்பந்தங்களால் பராமரிப்புப் பணிகள் சரியில்லை என்று அரசுக்குக் கடிதம் எழுதவும் முடியும். ஆனால், அவர்கள் யாரும் அதைச் செய்ய விரும்புவதில்லை. நல்லது செய்யப்போய், பெரிய இடத்துக்கு விரோதமாகி எங்கேயாவது இடமாற்றம் செய்துவிட்டால் என்ன செய்வது என்ற சுயநலக் கவலையில் மெத்தனமாக இருப்பதுதான் இத்தகைய பராமரிப்புப் குறைபாட்டுக்கும், மரணங்களுக்கும் அடிப்படைக் காரணம்.
 ÷மருத்துவத் துறைக்கு அரசு பெரும் நிதியை ஒதுக்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.15,592 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 2011-12-ம் ஆண்டுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்கள். அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், இவை யாவும் விழலுக்கு இறைத்த நீராகத்தான் இருக்கிறது. அரசுக் கட்டடம் என்றாலே ஒரு பங்கு மணல் கூடுகிறது. வெறும் ஏ.சி. கருவிகள் மட்டுமல்ல, அரசு மருத்துவமனையின் மருத்துவப் பரிசோதனைக் கருவிகளும் அடிக்கடி (சில இடங்களில் எப்போதும்) பழுதாகிக் கிடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் சம்பந்தப்பட்ட ஊழியர்தான் என்று சொன்னால் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்குக் கோபம் வருகிறது.
 ÷தமிழ்நாட்டின் எந்த ஓர் அரசு மருத்துவமனையிலும் உள்ள சாக்கடைகள், கழிவறைகள் போல நோய்பரப்பும் இடம் வேறு எதுவுமே இருக்க முடியாது. கேட்டால், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழைகள் இவற்றை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்ன செய்வது? என்று சொல்வார்கள்.
 ÷இதே ஏழைகளைத்தான் அரவிந்த் கண் மருத்துவமனை, சங்கர நேத்ராலயா போன்ற மருத்துவமனைகள் கிராமத்துக்கே போய் அழைத்து வருகிறார்கள். அவர்களும் எந்தக் கழிப்பறையையும் முறையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள்தான். மாற்றுஉடை இல்லாதவர்கள்தான். ஆனாலும் அந்தப் பொதுக் கழிப்பறைகள் சுத்தமாக இருக்கின்றன. எச்சில் துப்பக் கூச்சமும், அசிங்கம் செய்ய அச்சமும் தருகிற தூய்மை அங்கே இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் பராமரிப்புத்தான். அங்கேயும் ஏ.சி. கருவிகள் வழக்கமாகப் பழுதுபார்க்கப்படுகின்றன. ஆனால், அந்த ஏ.சி. கருவிகள் 40 விழுக்காடு கமிஷன் தனியாக வாங்கிக் கொண்டு வாங்கப்பட்டவை அல்ல.
 ÷தனியார் மருத்துவமனைகளிலும் பராமரிப்புக் குறைபாடுகளால் ஏதோ ஒரு நேரத்தில் விபத்து நேரிடலாம். அப்படி நேர்ந்தால், அந்த விபத்துக்குக் காரணமானவர்கள் அடுத்தநாள் அங்கே வேலையில் இருக்க மாட்டார்கள், இருக்க முடியாது. ஆனால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று பேர் சாவுக்குக் காரணமான பராமரிப்புக் குளறுபடிக்கு எந்த ஊழியரை அல்லது மருத்துவரைப் பொறுப்பாக்கினாலும், அவருக்கு ஆதரவாகப் போராட்டம் நடக்கும். இந்த விபத்துக்குக் காரணம் அரசு ஊழியர் அல்ல, அரசுதான் என்பார்கள்.
 அரசு ஊழியர் யாராவது தவறு செய்தால், "ஏதோ தவறு நடந்துவிட்டது. இதற்காகத் தவறு செய்தவரின் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது. பாவம் பிழைத்துப் போகட்டும்' என்று மேலதிகாரிகள் நினைக்கிறார்களே தவிர, தங்களுக்குச் சம்பளம் தரும் பொதுமக்களைப் பற்றியோ அவர்களுக்குத் துரோகம் இழைக்கப்படுகிறது என்பது பற்றியோ யாரும் கவலைப்படுவதாக இல்லை.
 துணிச்சலும் நேர்மையும் உள்ள ஒரு தலைமையின் அடிப்படைத் தகுதி - தவறைத் தட்டிக்கேட்கவும், தண்டிக்கவும் தயங்காத கண்டிப்பான நிர்வாகத் திறமை. ஊரை ஆளும் முறைமை இந்தியாவில் ஓரிடத்தும் இல்லை. அரசு மருத்துவமனைகள் மட்டும் விதிவிலக்கா என்ன?
நன்றி:
கருத்துகள்

 எங்கு எல்லாம் ஊழல் தலை விரித்து ஆடுகிறதோ அங்கு எல்லாம் இந்த மாதிரி விபத்துக்கள் ஏற்படத்தான் செய்யும். அரசு துறை என்றால் அலட்சியம், சுரண்டல் எனபது ஆட்சியில் வழக்கமாகி விட்டது. இதை பற்றி அரசும் பத்திரிக்கைகளும் பேசுவார்கள். பிறகு இந்த செய்தி மறந்துபோகும். இன்றைய அவசர உலகத்தில் இவை எல்லாம் சாதரணமான நிகழ்சிகளாக இருந்துகொண்டு இருக்கின்றது. 
By natarajan,சிதம்பரம் 
7/25/2011 2:31:00 PM
 அரசு துறை என்றால் அலட்சியம், சுரண்டல் எனபது திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் வழக்கமாகி விட்டது மருத்துவ துறை சேவை சார்ந்த துறை ஆனால் இப்பொழுது பணம் கொட்டும் துறையாக மாறி விட்டது 
By mirudan 
7/25/2011 11:16:00 AM
 எங்கு எல்லாம் ஊழல் தலை விரித்து ஆடுகிறதோ அங்கு எல்லாம் இந்த மாதிரி விபத்துக்கள் ஏற்படத்தான் செய்யும்.அதை பற்றி அரசும் பத்திரிக்கைகளும் மூன்று நாட்கள் பேசுவார்கள்.பிறகு வேறு ஒரு தலைப்பு செய்தி வந்தவுடன் இந்த செய்தி மறந்துபோகும். எங்கும் நேர்மை, எதிலும் நேர்மை,எப்போதும் நேர்மை, இருந்தால் நாம் எதைபற்றியும் கவலைபடதேவை இல்லை. இந்த மாதிரியான விபத்துக்கள்,ரயில் விபத்துக்கள்,சாலை விபத்துக்கள் போன்றவை நம்முடைய தினசரி வாழ்கையின் ஓர் அங்கமாகவே அமைந்துவிட்டது. இன்றைய அவசர உலகத்தில் இவை எல்லாம் சாதரணமான நிகழ்சிகளாக இருந்துகொண்டு இருக்கின்றது. 
By இரா.இராவணன் 
7/25/2011 6:38:00 AM
 Let us face it. These hospitals and other public buildings are old. Electrical wiring is aging. TN Electrical Inspectorate should pass strict guidelines to all public buildings and hospitals to go for total replacement of all aged wiring and instal protective devices. Hospitals 'should not go' for central ac. Technology has advanced, but Govt. is penny wise pound foolish. Presently, fuse carriers have thick unrated wires, as per electrician's wish, which cannot protect. All important public places should have good circuit-breakers, fire-alarms, sprinklers, centrally monitored cctv cameras,addl. emergency electr. cut-off devices in main corridors etc.The pity is, the Fire-officer says he submitted a report ( in early 2010) and his responsibility is over! 
By KANNAN 
7/25/2011 5:34:00 AM


No comments:

Post a Comment