இந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்காக தனியார் நிறுவனத்துக்குத் தரப்படும் கட்டணத்தை, பொது மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தினால், நிரந்தரமான முதலீடாக அது இருக்கும் என்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன்பெறுவர் என்றும் தனது பிரசாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது ஆளுநர் உரையில்கூட, ""கடந்த அரசின் காப்பீட்டுத் திட்டம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. எனவே, அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி, அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்'' என்று குறிப்பிடப்பட்டது.ஆனால், அதே காப்பீட்டுத் திட்டம் புதிய சட்டையுடன் மீண்டும் களத்தில் இறக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வெளிப்படுத்துகிறது. முந்தைய திட்டத்தில் இல்லாத கூடுதல் பயன்கள் இருக்கின்றன என்பதற்காக இத்திட்டத்தைப் பாராட்டலாம் என்றாலும், இத்திட்டத்தால் அரசு மருத்துவமனைகள் மறுவாழ்வு பெறும் வாய்ப்பை இழந்துவிட்டனவே என்று நினைக்கும்போது பாராட்ட நா எழவில்லை.ஒரு குடும்பத்துக்கு நான்கு ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வரை பயன் கிடைக்கும் வகையிலும் பரிசோதனைச் செலவுகள் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவச் செலவுகள் ஆகியவற்றை ஏற்கும்விதத்திலும் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. என்றாலும், இத்திட்டத்தில் சிகிச்சைகளின் எண்ணிக்கையை 642-லிருந்து 950-ஆக உயர்த்தியிருப்பது, இத்திட்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் பரப்பை விரிவு செய்கிறதா அல்லது காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியத் தொகை அதிகரிக்க உதவி செய்கிறதா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.காப்பீடு செய்வோருக்கு எந்த அளவுக்குப் பலன் அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு பிரீமியத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் உயர்த்தி நிர்ணயிக்கும் என்பது நிச்சயம். இதனால் சென்ற ஆட்சியில் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிடக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டால் மட்டுமே இத்திட்டம் சாத்தியம். அதாவது மக்கள் வரிப்பணம் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படாமல், பிரீமியத் தொகை என்கிற பெயரில் காப்பீட்டு நிறுவனங்களை வளப்படுத்த அல்லவா பயன்படும்!தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதை நிறைவேற்ற வேண்டும் என்றால், ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையும் குறைந்தது 7 சிறப்புப் பிரிவுகளை உள்ளடக்கியதாக, சில ஆயிரம் வெளிநோயாளிகள் மற்றும் சில நூறு படுக்கை வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும். தற்போது தனியார் காப்பீடு மூலமாக நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும்படி அரசே வழி வகுக்குமானால் அரசு மருத்துவமனைக்கு ஏழைகளும்கூட வர மாட்டார்கள். அதன் பிறகு, மருத்துவக் கல்லூரிக்கான அனுமதி பெறுவதற்குப் போதுமான நோயாளிகள்கூட இல்லாத நிலைதான் உருவாகும்.இன்றைய அரசு மருத்துவமனைகள் சுகாதாரமானதாக இல்லை என்பது உண்மை. இங்கே வந்தால் டாக்டர்கள் இருப்பதே இல்லை, அல்லது லஞ்சம் கொடுத்தால்தான் கவனிக்கிறார்கள் என்கிற நிலை இருப்பதும் உண்மை. அரசு மருத்துவமனையில் பரிசோதனைக் கருவிகளை புதிதாக வாங்கிக் கொடுத்து, அவற்றை அரசு மருத்துவ ஊழியர்கள் மற்றும் அரிமா, ரோட்டரி போன்ற தன்னார்வ அமைப்புகள் மற்றும் மக்கள் பங்கேற்புடன் செயல்பட வழிவகுத்தால், ஊழல் குறையும்: இந்த இயந்திரங்கள் அடிக்கடி பழுது ஆகாது. நோயாளிகள் பயன்பெறுவர்.அரசு மருத்துவமனைகளில் ஊழல் நடக்கிறது, செயல்பாடு சரியில்லை என்றெல்லாம் காரணம் கூறி ஓர் அரசு தப்பித்துக்கொள்ளக்கூடாது. ஊழல் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவும் திறம்பட செயல்படுத்துவதற்காகவும்தான் மக்கள் தங்களுக்கு வாக்களித்து அதிகாரத்தைத் தந்திருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அரசு அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்காக, ஆட்சியைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட முடியுமா என்ன?பலன்களும் சிகிச்சையின் எண்ணிக்கையும் விரிவாக்கப்பட்ட இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஊழல் இருக்காது என்று தமிழக முதல்வர் நிரூபிக்க விரும்பினால், அவர் இத்திட்டத்தை முழுமையாக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் போன்ற அரசு காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்திட்டத்தைத் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அளித்தால், அந்த நிறுவனங்கள் ஊழலுக்கு இடம் அளிப்பது ஒருபுறம் இருக்க, தனியார் மருத்துவமனைகள் கொழிக்கத்தான் வழிவகுக்கும்.மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒரு வியாபாரம். அதில் லாபம் இல்லையென்றால் தனியார் யாரும் கடை விரிக்க வரமாட்டார்கள். இந்த எளிய உண்மையைப் புரிந்துகொண்டால், அரசு மருத்துவமனைகளை ஏன் சிறப்பாகச் செயல்பட வைக்க வேண்டும் என்கிற காரணம் புரியும். எந்தப் பிரச்னையிலும் துணிந்து செயல்படும் முதல்வர் ஜெயலலிதா, இந்தப் பிரச்னையில் பயப்படுவது அர்த்தம் இல்லாதது. தனியார் காப்பீட்டுத் திட்டம் இல்லை என்று யாரும் கவலைப்படப் போவதில்லை. திமுக செய்யும் பிரசாரங்கள் இந்தப் பிரச்னையில் எடுபடப்போவதும் இல்லை! காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் ஊழல் நடப்பதற்கும் அதனால் தனது பெயர் களங்கப்படுவதற்கும் முதல்வர் இடம் கொடுத்துவிடக்கூடாது.
than s by

No comments:
Post a Comment