Friday, February 4, 2011

ஜும்ஆத் தொழுகை !

876. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்


883. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன."
என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்


912. ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான்(ரலி) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு, இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது.



908. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

931. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் 'நீர் தொழுது வீட்டீரா?' என்று கேட்டார்கள். அதற்கவர் 'இல்லை' என்றார். '(எழுந்து) இரண்டு ரக்அத் தொழுவீராக!" என்று கூறினார்கள்

935. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது 'ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு" என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். 'அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை" என்றும் குறிப்பிட்டார்கள்

881. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"பெண்கள் இரவில் பள்ளிக்குச் செல்வதற்கு நீங்கள் அனுமதியுங்கள்."
இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

No comments:

Post a Comment