இதில் குறிப்பாக வெங்காயத்தின் விலை 70 ரூபாயிலிருந்து 90 ரூபாய்கள் வரை விற்கப்பட்டது. தற்போது சில மாநிலங்களில் மட்டும் விலை சற்று குறைந்திருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை வெங்காயத்தால் பதம் பார்க்கப்பட்டிருக்கும் ஆளும் வர்க்கம் உடனடியாக வெங்காய ஏற்றுமதியின் மேல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினாலும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளாலும் கூட பெரிதாகப் பயன் ஏதும் இல்லாத நிலையில் பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய தற்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
வெங்காய விலையேற்றம் என்பதை மற்ற பொருட்களின் விலையேற்றங்களில் இருந்து தனியே பிரித்துப் புரிந்து கொள்ள முடியாது. கடந்த சில ஆண்டுகளாகவே மற்ற உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள், சமையல் எண்ணை விலைகளும் தொடர்ச்சியாக உயர்ந்தே வந்துள்ளது. 2008இல் 5.62 சதவீதமாக இருந்த சர்க்கரையின் விலை உயர்வு, 2010இல் 58.94 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2008இல் 5.94 சதவீதமாக இருந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு, 2010இல் 8.33 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2008ல் 1.3 சதவீதமாக இருந்த பருப்பு வகைகளின் விலை உயர்வு, 2010இல் 45.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. (இணைப்பு / சுட்டி – 1).
இதற்கிடையே காய்கறிகளின் இந்த விலையேற்றத்தால் தொழிலாளிகள் அதிகக் கூலி கேட்டுப் போராடும் நிலை வரலாம் என்று கவலை தெரிவித்திருக்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் தலைவரான சக்ரவர்த்தி ரங்கராஜன். இதற்கு மேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று களத்தில் இறங்கியுள்ள அரசு, வெங்காயத்தின் விலை உயர்வுக்கு பதுக்கல்காரர்கள் தான் பெருமளவு காரணம் என்று அறிவித்துள்ளது. நாடெங்கும் உள்ள விவசாயச் சந்தைகளில் இருக்கும் வெங்காய மண்டிகளில் சோதனைகள் நடத்தியுள்ளது. பதுக்கல்காரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் நிதிமந்திரி பிரணாப் முகர்ஜி.
வெங்காயத்தின் உண்மைக் கதை!
ஆனால், இந்தப் பருவத்தில் (kharif season ) விளையும் வெங்காயத்தில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். அதாவது விளைந்த வெங்காயத்தை காயவைக்க முடியாது. மழையும், பனியும் இக்காலத்தில் அதிகம் என்பதால் விளைந்த வெங்காயத்தை எவ்வளவு சீக்கிரம் நுகர்வோரை அடைகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நாட்கள் நீடித்தால் காலநிலை காரணமாக ஈரப்பதம் அதிகரித்து வெங்காயம் அழுகிவிடும். எனவே அறுவடை முடிந்த நாளில் இருந்து அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கு மேல் கையிருப்பில் வைத்திருக்க முடியாது.
இதில் விவசாயி சந்தைக்குக் கொண்டு வருவதில் ஒரு நாளும், உள்ளூர் சந்தையில் இருந்து வெளி மாநில சந்தைகளுக்கு மூன்று நாட்கள் வரையும் ஆகிவிடுகிறது. வெங்காயம் ஈரப்பதத்துடனேயே பயணிப்பதால் அது அழுகல் நிலை ஏற்படுவதற்கு முன்பாகவே நுகர்வோரிடம் சேர்க்க வேண்டும். எனவே இந்த பருவத்தில் வரும் வெங்காயத்தை ஒரு வியாபாரி எத்தனை நாட்கள் ‘பதுக்கி’ வைக்கிறாரோ அந்தளவுக்கு இழப்பு அவருக்குத் தான் ஏற்படும் (இணைப்பு 2ஐ பார்க்க). எனவே பிரணாபின் உண்மையான அக்கறை பதுக்கலின் மேல் இல்லை – எனில், இந்த பதுக்கல்காரர் பூதத்தை அவர் கிளப்பி விடுவதன் காரணத்தை பின்னர் பார்க்கலாம்.
இதற்கிடையே வெங்காய விலை உயர்வு பற்றி தேசிய அளவிலான பத்திரிகைகள் தொடர்ந்து எழுதத் துவங்கின. பொதுமக்களின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் துவங்கிய நிலையில், இதற்கான ஆறுதலையும் விலை உயர்வு பற்றிய தத்துவ விளக்கத்தையும் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்தியில் ஆளும் கும்பல் தள்ளப்பட்டது.
வெங்காய விலை உயர்வு தற்காலிகமானதென்றும், கூடிய விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார் மத்திய விவசாய மந்திரி சரத் பவார். ஒரு படி மேலே போன பிரதமர், ஜனவரி 13ஆம் தேதி “உணவுப் பொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த ஒரே வழி உற்பத்தியைப் பெருக்குவது தான்” என்கிற மாபெரும் பொருளாதார உண்மையைத் தெரிவித்துள்ளார். மான்டேக் சிங் அலுவாலியாவோ இந்திய கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாகத் தான் தற்போது அதிகளவு உணவுப் பொருட்கள் நுகரப்படுகிறது என்றும், அதனாலேயே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார்.
வாங்கும் சக்தி அதிகரிப்பு என்ற மோசடிப் பிரச்சாரம்!
மேலும், ஆளும் வர்க்க ஊதுகுழல்களான முதலாளித்துவ பத்திரிகைகள் சில, மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) அதிகரிப்பதுதான் விலையேற்றங்களுக்கு ஒரு காரணம் என்று எழுதுகின்றன. அதாவது உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பால் கிராமத்து மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதாகவும், இதனால் நுகர்வு அதிகரித்து விலைவாசி உயருகிறது என்றிகிறார்கள் இந்த ‘ஆய்வாளர்கள்’. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு மிகவும் குறைவு என்பது பல ஆண்டுகளாக மாறவே இல்லை. இது உண்மையாகும் பட்சத்தில் கிராம மக்களுக்கு வாங்கும் சக்தி எப்படி அதிகரிக்கும்? விவசாயம்தான் கிராமங்களின் முதன்மையான தொழில் என்பதிலும் மாற்றமேதுமில்லை.
மேலும் இணைப்பு – 1இல் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைக் கூர்ந்து கவனித்தால், இந்த விலையேற்றங்கள் குறிப்பாக 2008ஆம் ஆண்டிலிருந்து துவங்கிய உலகப் பொருளாதார பெரு மந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. அந்தச் சமயத்தில் தான் ஆட்குறைப்பு, வேலை பறிப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை பொரும்பாலான தனியார் நிறுவனங்கள் அமல்படுத்தின. நியாயமாகப் பார்த்தால், வாங்கும் சக்தி குறைந்து போன இந்தக் காலகட்டத்தில் நுகர்வும் குறைந்திருக்க வேண்டும் – விலைகளும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக விலைகளோ தொடர்ந்து நிலையாக உயர்ந்தே வந்துள்ளது.
கிராமப்புறங்கள், நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவற்றால் கொழிப்பதாகவும், அதனால் நுகர்வு அதிகமாகியிருப்பதாகவும், சந்தையில் பொருட்களுக்கான போட்டி அதிகரித்திருப்பதால், விலைகளும் அதிகமாகிறது என்று சொல்கிறார் அலுவாலியா. இந்தப் புளுகை ஐ.நா சபையின் குழுவொன்று இந்தியாவில் நிலவும் வறுமை பற்றி நடத்திய ஆய்வொன்றே தகர்த்தெரிகிறது. உலகிலேயே வறுமையான நாடுகளாகக் குறிப்பிடப்படும் 26 ஆப்ரிக நாடுகளைச் சேர்ந்த ஏழைகளை விட இந்தியாவின் 8 மாநிலங்களில் மிக அதிகளவில் ஏழைகள் இருப்பதாக அந்த ஆய்வு சொன்னது. மேலும், சப் சகாரா பாலைவன நாடுகளைக் காட்டிலும், ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள் இந்தியாவில் தான் அதிகம் என்றும் பிற ஆய்வுகளில் வெளியானது. (இணைப்பு 3- வினவு கட்டுரை / ஐ.நா குழுவின் ஆய்வு பற்றி)
அடுத்து உற்பத்தி குறைந்து போனதே விலையேற்றத்திற்கான முக்கிய காரணம் என்று முதலாளித்துவ பத்திரிகைகள் எழுதுகின்றன. உற்பத்திக் குறைவு என்பது விலையேற்றத்திற்கு ஒரு காரணம் தான் என்றாலும் இப்படிச் சுணங்கிப் போவதற்கு என்ன காரணம்? முதலாளித்துவப் பத்திரிகைகளில் குறித்த காலத்திற்கு மேல் நீண்ட பருவ மழையைக் காரணம் காட்டியிருக்கிறார்கள். அது உண்மை தான் என்றாலும் உண்மையின் ஒரு சிறிய அங்கம் மட்டும் தான்.
வெங்காயத்தின் உற்பத்தி நிலவரமும், உலகமயமாக்கத்தின் பாதிப்பும்!
உலகளவில் இந்தியாவில் தான் அதிகமான நிலப்பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சீனத்திற்கு அடுத்தபடியாக இந்தியா தான் உலகில் அதிகளவில் வெங்காய உற்பத்தி செய்கிறது. மகாராஷ்ட்டிரா, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் தான் இதில் அதிகளவு பங்களிப்பைச் செய்கின்றன. 2008-09 நிதியாண்டில் 8,34,000 ஹெக்டேரில் வெங்காய சாகுபடி நடந்து 1,35,65,000 டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இதுவே 2010-11 நிதியாண்டில் 1.17 லட்சம் டன்களாக உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் 2008ஆம் ஆண்டு இருந்ததை விட 2010ஆம் ஆண்டு வெங்காயத்தின் சாகுபடிப் பரப்பு 20% அளவுக்குக் குறைந்துள்ளது.
அரசாலேயே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளி விவரங்கள் சொல்வது என்னவென்றால், பருவமழைக் கோளாறு காரணமாகவும், சாகுபடிப் பரப்புக் குறைந்ததன் காரணமாகவும், சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது; இதன் காரணமாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதாகும். மேலும், இந்த நிதியாண்டில் நவம்பர் மாதம் வரையில் 11,58,000 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் சென்ற நிதியாண்டு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் அளவு 18,73,002 மெட்ரிக் டன்கள். (EPW Jan 08, 2010 மற்றும் தி இகனாமிக்ஸ் டைம்ஸ்)
இது இரண்டு முக்கியமான விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று – ஏற்றுமதி வெங்காயத்தை உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பி விட்டாலும் அது சந்தையின் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யாது. இரண்டு – சென்ற நிதியாண்டின் உற்பத்தியில் ஏற்றுமதி அளவைக் கழித்து விட்டால் ஏறக்குறைய இந்த ஆண்டின் உற்பத்தி அளவை எட்டுகிறது. இந்த நிதியாண்டின் மொத்த உற்பத்தியில் செய்யப்பட்டிருக்கும் 11லட்சம் டன்கள் ஏற்றுமதி சந்தைத் தேவையில் உண்டாக்கியிருக்கும் இடை வெளியை விட தற்போது ஏற்பட்டிருக்கும் விலையேற்றம் கற்பனைக்கெட்டாத வகையில் அதிகமானதாகும்.
மேலும், ஏற்றுமதி ரகங்கள் உள்நாட்டு ரகங்களை விட தரத்தில் மேம்பட்டதாகும். ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் அளவு குறைந்தது 6 செ.மீ இருக்க வேண்டும். மேலும் எல்லா வெங்காயங்களும் ஒரே சீரான நிறம், அளவில் இருக்க வேண்டும். இந்த வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படாமல் உள்நாட்டுச் சந்தைக்கு திருப்பப்பட்டாலும் கூட, இதன் தரம் கருதி உள்நாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ 70 ரூபாய்களுக்குக் குறையாமல் தான் இருக்கும். (தினமணி தலையங்கம் 21-12-2010).
ஆக, பிரதமர் சொல்வது போல விலையேற்றத்திற்கு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைவு முழுகாரணம் அல்ல. அதைப் பற்றிப் பார்க்கும் முன் உற்பத்தி பரப்பு குறைந்ததற்கான காரணத்தைப் புரிந்து கொள்வதும் அவசியமாகும். விவசாயத்தின் ஒரு பொதுப் போக்காக விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விலக்கப்படுவது உலகமயமாக்கலுக்குப் பின் தீவிரமாக நிகழ்ந்து வருகிறது.
விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்து என்று அனைத்தும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் வைக்கும் கொள்ளை விலைக்குத் தான் வாங்கியாக வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் இருக்கும் விவசாயிகளுக்குப், பயிர்க்கடன்களும் விவசாய இயந்திரங்களை வாங்கவும் வங்கிகள் கடன் கொடுக்க ஆயிரம் நிபந்தனைகள் விதித்தும் மறுத்தும் வருகின்றது. இதனால் கந்து வட்டி கும்பல்களிடம் மாட்டிக் கொள்ளும் அப்பாவி விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். காலம் தப்பிப் பெய்த பருவ மழையால் பயிர்கள் நாசமானதால் கடந்த செப்டெம்பர் மாதம் மூன்று வெங்காய விவசாயிகள், மராட்டிய மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக மழையின் பாதிப்பை அந்த விவசாயி மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அளவில்தான் நமது அரசின் அக்கறை இருக்கிறது.
இதே மாராட்டிய மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் ஒரு பணக்காரக் கிறுக்கன் 65 கோடி மதிப்பிலான 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வாங்க வெறும் ஏழு சதவீத வட்டிக்கு 40 கோடிகளை அள்ளிக் கொடுத்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. ஒரு விவசாயி டிராக்டர் வாங்கக் கடன் கோரினால் அதற்கான வட்டி 12%. (ஆதாரம் – ஹிந்துவில் பி.சாய்நாத்தின் கட்டுரை)
விவசாயப் பொருட்களில் ஊக வணிகம்
ஆக, மன்மோகன் கும்பல் விசனப்பட்டுச் சொல்லும் பருவ மழையோ – அதனால் குறைந்து போன காய்கறி உற்பத்தியோ, கிராமப் புறக் கொழிப்போ – அதனால் பொருட்களுக்கு சந்தையில் உண்டாகியிருக்கும் போட்டியோ, மொத்த உள் நாட்டு உற்பத்திக் குறியீட்டின் வீக்கமோ – அதனால் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் பெருக்கமோ அல்ல காரணம் என்பது தெளிவாகிறது.
சர்வதேசப் பொருளாதார மந்த நிலைக்குக் காரணமான நிதி மூலதனச் சூதாடிகள், ரியல் எஸ்டேட், தங்கம், இரும்பு, வெள்ளி போன்ற மூலப் பொருட்களில் தமது நிதிகளை இறக்கிச் சூதாடத் துவங்கிய போதே உலகளவில் உணவுச் சந்தையிலும் தமது சூதாட்டத்தைத் துவங்கி விட்டிருந்தனர். விவசாய விளை பொருட்களிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களிலும் முன்பேர வர்த்தகத்தை அனுமதிக்குமாறு உலகவங்கியே இந்தியாவுக்குக் கட்டளையிட்டுள்ளது. உலகவங்கியின் முன்னாள் நேரடி ஊழியரும், இந்நாள் மறைமுக ஊழியருமான மன்மோகன் சிங் சுமார் நாற்பது முக்கியமான விவசாய உற்பத்திப் பொருட்களில் முன்பேர வணிகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
சர்வதேச பொருளாதார பெரு மந்தத்தை அடுத்து பங்குச் சந்தைகளிலும், நாணயங்கள், நிதிப் பத்திரங்கள், வீட்டுக்கடன் பத்திரங்களில் நடந்து வரும் பங்குச் சந்தை சூதாட்டங்களில் லாபம் இல்லாத காரணத்தால், இப்போது மக்களின் அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களில் சூதாட்டத்தை முடுக்கி விட்டுள்ளனர் சர்வதேசச் சூதாடிகள். உலகளவில் உணவுப் பொருள் விலையேற்றம் என்பது இதன் காரணமாகத் தான் ஏற்பட்டுள்ளது. தற்போது உலகின் பல பாகங்களில் தொடர்ந்து நடந்து வரும் உணவுக் கலகங்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்தப் பின்னணியிலேயே இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் உணவுப் பொருள் விலையேற்றத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 2009-10 நிதியாண்டில் மட்டுமே இந்தியாவில் நடந்த முன்பேர சூதாட்டத்தின் மதிப்பு சுமார் 78 லட்சம் கோடிகள். நடப்பு நிதியாண்டில் இதன் மதிப்பு 110 லட்சம் கோடிகளை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டுமே விவசாய விளை பொருட்களில் நடந்த முன்பேர வர்த்தகத்தின் அளவு 25 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் மட்டும் விவசாய விளை பொருட்களில் நடந்த முன்பேர வர்த்தகச் சூதாட்டத்தில் புழங்கிய தொகையின் அளவு 6.51 லட்சம் கோடிகள்.
கடந்த ஆண்டின் இறுதி மாதங்களில் துவங்கி இந்த வருடத்தின் துவக்கம் வரையில் உணவுப் பொருட்களில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றத்திற்கான காரணத்தை இந்தப் புள்ளிவிவரங்களே தெளிவாக எடுத்துரைக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் திணிக்க முயற்சி
அடுத்து ‘பதுக்கல்காரர்கள்’ குறித்து பிரணாப் முகர்ஜிக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் அக்கறை குறித்து பார்ப்போம்.
வெங்காய விலையும் பிற காய்கறிகளின் விலைகளும் விஷம் போல் ஏறிக்கொண்டிருந்த நிலையில் விவசாயத் துறை அமைச்சர் ஒரு பக்கம் பார்வையற்றவன் யானையைத் தடவிய கதையாய் விலையேற்றத்தைப் பற்றி உளறிக் கொட்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒருநாளும் இல்லாத திருநாளாய் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா இதில் காட்டிய அக்கறை கவனத்திற்குரியது. மொத்த விவகாரத்திற்கும் காரணம் பதுக்கல்காரர்கள் தானென்றும் சந்தைக்குப் போதுமான வெங்காயம் கையிருப்பில் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
இதற்கான தீர்வாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில்லறை வணிகத்தில் நுழைவதற்காக இருக்கும் கொஞ்ச நஞ்ச கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது பற்றி டிசம்பர் மாத இறுதிவாக்கில் ஆனந்த் சர்மா காபினெட் மட்டத்தில் ஆலோசனைகளைத் துவங்கியிருக்கிறார். அந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். டிசம்பர் 23ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆனந்த் சர்மா, மொத்த விலைக்கும் சில்லறை விலைக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்கவும், பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் இறக்கி விடுவது தான் சரியான தீர்வு என்று அறிவித்துள்ளார்.
பன்னாட்டுக் கம்பெனிகளை சில்லறை வர்த்தகத்தில் அனுமதிப்பதை ஆதரித்துப் பேசும் முதலாளித்துவ ஊடகங்கள், அவ்வாறு செய்வது இடைத்தரகர்களை ஒழித்து விடுமென்றும், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உத்திரவாதப்படுத்தும் என்றும் சொல்கின்றன. ஏற்கனவே பகுதியளவில் சில்லறை வணிகம் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையிலேயே இது போன்ற பகாசுர நிறுவனங்களால் விவசாயிகளுக்குப் பெரியளவில் பலன் ஏதும் கிடைத்து விடவில்லை. மேலும், அசுரத்தனமான மூலதன பலத்துடன் சந்தையில் இறங்கும் இவர்களால் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வரும் சில்லரை வணிகம் ஒழிந்து போய் விடும் அபாயமும் இருக்கிறது.
ஏற்கனவே ரிலையன்ஸ், ஐ.டி.சி, பெப்சிகோ போன்ற நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து வரும் நிலையில், இவர்களை விட அதிகமான மூலதன பலத்துடனும் அளும் வர்க்க ஆசீர்வாதத்துடனும் அமெரிக்காவின் பின்புலத்துடனும் களமிறங்கும் வால்மார்ட்டால் விவசாயிகள் பலனடைவார்கள் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. சுதந்திரச் சந்தையின் கோட்டையான அமெரிக்காவில் விவசாயச் சந்தையை வால்மார்ட்டும் கேரிஃபோர் நிறுவனமுமே கைப்பற்றி வைத்துள்ளது. இந்நிறுவனங்கள் வளர்ந்த அதே வேகத்தில் அமெரிக்க விவசாயிகளின் எண்ணிக்கை படுபாதாளத்தில் விழுந்துள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளில் விவசாயிகளைச் சேர்க்காமல் விடும் அளவுக்கு விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விரட்டப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலோ ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு விவசாயி விவசாயத்திலிருந்து விரட்டப்படுகிறார்.
முதலாளித்துவ நாடுகளைப் பொருத்தவரை நவீன தொழில் நுட்ப உற்பத்தியில், பிரம்மாண்டமான அளவில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்நாடுகளில் 5 சதவீதம் மக்களே விவசாயிகளாக இருக்கின்றனர். தற்போது இந்த உடமை உறவு கூட ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் பெரும் நிறுவனங்கள் விவசாயத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
ஆனால், ஆனந்த் சர்மா வால்மார்ட் தான் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இருக்கும் ஒரே கதி மோட்சம் என்பது போலச் சொல்கிறார். இதுவும் கூட அவராகச் சொல்லவில்லை. சென்ற நவம்பரில் இந்தியாவில் எழுந்தருளிய ஒபாமாவதார் இட்டுச் சென்ற முக்கியமான கட்டளைகளில் ஒன்று சில்லறை வணிகத்திலும் விவசாயத்துறையிலும் பன்னாட்டு மூலதனத்தை இந்தியா அனுமதிக்க வேண்டும் என்பதாகும்.
நவம்பரில் ஒபாமா வருகை – டிசம்பரில் வெங்காய விலையேற்றம் – அதே டிசம்பர் இறுதியில் வால்மார்ட்டை அனுமதிப்பதற்கான் காபினெட் சந்திப்பு. நிகழ்ச்சிப் போக்கு வரிசைக்கிரமமாக அமைந்துள்ளது தற்செயல் இல்லை அல்லவா?
அரசின் திட்டமிட்ட துரோகத்தனத்தால் ஓய்ந்து போன விவசாய உற்பத்தியினால் உயர்ந்து போயிருக்கும் விலைவாசியைக் காரணமாக்கிக் கொண்டு, கிடைக்கும் இடைவெளியில் பன்னாட்டுக் கம்பெனிகளை நுழைக்கும் நரித்தனத்தில் அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே விதைக்கும் உரத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முன் இந்திய விவசாயிகளை கையேந்த விட்டுள்ள அரசு, இப்போது விளைச்சலுக்கான விலைக்கும் அவர்களிடமே கையேந்தச் சொல்கிறது. கீழ்மட்ட அளவில் உணவுப் பொருள் உற்பத்தியைக் கைபற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், இன்னொரு பக்கம் உணவுப் பொருள் வினியோகச் சங்கிலியைக் கைப்பற்றுவதன் மூலம் நுகர்வுச சந்தையையும் கட்டுப்படுத்தும் வெறியுடன் களமிறங்கியுள்ளன.
இயற்கையான காரணிகளையும் அதனோடு செயற்கையான காரணிகளையும் இணைத்து சந்தையில் விலைவாசிகளை தாறுமாறாக ஏற்றுவதும், அதனால் மக்கள் பீதியடைவதை சாதகமாக்கிக் கொண்டு ஒரு பொதுக்கருத்தை உண்டாக்கி அதை தமக்குச் சாதமகாப் பயன்படுத்திக் கொள்வது இவர்களின் புதிய செயல்தந்திரம் அல்ல. சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களில் இதே போன்ற உத்தியை உலகின் வேறு பாகங்களிலும் செயல்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
2008ஆம் ஜனவரி மாதம் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் வர்த்தகத் துறை அதிகாரிகள் மட்டத்தில் நிகழ்ந்த சந்திப்பு ஒன்றில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களுக்கு நுகர்வோர் இடையே வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜூன் மாத வாக்கில் வரலாறு காணாத வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் ஏறியுள்ளது. முழு விபரம் அறிய – (
இப்போது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் உணவுப் பொருள் விலைவாசி உயர்வை வழமையான விலை ஏற்றம் என்பதாக மட்டும் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. இது இந்நாட்டின் உணவுத் தன்னிறவை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் ஆளும் வர்க்கத்தின் துரோகத்தனமான தொடர் நிகழ்ச்சிப் போக்கின் ஒரு அங்கமாகவே புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே விலைவாசி உயர்வுக்கெதிரான மனப்புழுக்கமாக மட்டும் அடங்கி விடாமல், விவசாயத்தை திட்டமிட்டு அழித்த அரசின் துரோகத்தனத்திற்கு எதிரான கோபமாகவும், அரசின் நேரடி ஆசீர்வாதத்துடன் மக்களைக் கவ்விப் பிடிக்க களமிறங்கியிருக்கும் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுக் கம்பெனிகளின் நயவஞ்சகத்தை எதிர்த்து முறியடிக்கும் போராட்டமாகவும் மலர வேண்டும்.
http://www.vinavu.com
________________________________________________________
No comments:
Post a Comment