Thursday, February 3, 2011

சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்...!!!

எந்தப் பிரச்னை ஆனாலும் அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் குற்றம்சாட்டி, சுட்டு விரலை மக்கள் நீட்டும்போது, மற்ற விரல்கள் அனைத்தும் அவர்களை நோக்கியே உள்ள உண்மையை உணராமல் போய்விடுகின்றனர்.
நம் நாட்டில், அடிப்படைப் பிரச்னைகளான குடிநீர் தட்டுப்பாடு, மின்தட்டுப்பாடு, தரமற்ற சாலைகள், கடுமையாக உயரும் விலைவாசி போன்ற பல்வேறு காரணங்களுக்காக, அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் அவ்வப்போது குறை சொல்லும் நம் மக்கள், அதற்கு அஸ்திவாரமாக தாம் செய்யும் குற்றத்தை ஏனோ மறந்து விடுகின்றனர்.
நமது முன்னோர்கள் காலத்தில், அரசியலுக்கு வந்த வசதி படைத்தவர்கள் எல்லாம் தங்களது சொந்த பணங்களை சமூக முன்னேற்றத்துக்காகச் செலவு செய்தனர். வசதியே இல்லாத சாமானியர்களும் அரசியலுக்குள் நுழைந்து நம் நாட்டுக்காக அதிகமாக உழைத்தனர்.
ஆனால் இன்றோ, அரசியல் மூலம் பொதுசேவைக்கு வருபவர்கள் ஆதாயம் தேடும் முயற்சியில்தான் வருகின்றனர். அரசியல் தொழிலாகிவிட்டது. எவ்வளவு முதலீடு செய்கிறார்களோ அதற்கேற்ப ஆட்சிக்கு வந்தபின் அறுவடை செய்கிறார்கள். இதற்குக் காரணம் மக்கள்தான். தேர்தல் நேரங்களில் தங்களது வாக்குகளைப் பணத்துக்காக விற்கிற காரணத்தால், தகுதியில்லாதவர்கள்கூட, அமைச்சரவையில் இடம்பிடித்து விடுகின்றனர்.
புதிதாக அரசியலுக்குள் நுழையும் சினிமாக்காரர்களில் இருந்து, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், ஜாதீயத்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும், முந்தைய ஆட்சியாளர்களைக் குறை சொல்லித்தான் அரசியலுக்குள் நுழைகிறார்கள். ஆனால், அவர்களே ஆட்சி பொறுப்பில் வந்தாலும், ஊழலே புரிகின்றனர்.
ஏன்... அவரவர் கட்சியில் பல்வேறு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதும் கூட, ஜனநாயக முறையில் நடைபெறாமல் பணநாயக முறையில்தான் நடைபெறுகிறது. இதற்கெல்லாம் காரணம் அதிகாரத்துக்கு வந்துவிட்டால் அள்ளிவிடலாம் என்ற நப்பாசைதான்.
ஆனால், எந்தத் தவறுகள் நடந்தாலும் ஒருவரையொருவர் குறைசொல்லி விடுகிறார்கள். அவரவர் மீது உள்ள தவறைப் பற்றிச் சிந்திப்பது இல்லை.
அரசின் எந்தத்துறையாயினும், எந்த வேலையாயினும் கையூட்டு வழங்கினால் மட்டுமே காரியம் நடக்கிறது. கையூட்டு கொடுத்தால்தான் அதிகாரிகள் வேலை செய்கின்றனர் என்கின்றனர் பொதுமக்கள். அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்துத்தானே பணியிடங்களும், பணிமாற்றங்களும் எங்களுக்குக் கிடைக்கிறது. பின்னர் நாங்கள் என்ன செய்வது என்கின்றனர் அதிகாரிகள்.
அரசியல்வாதிகளோ, ஓட்டுக்குப் பணம் கொடுத்தல் உள்பட தேர்தலுக்காகப் பல கோடி ரூபாய் செலவு செய்கிறோம். அதை வட்டியுடன் சேர்த்து எடுக்க வேண்டாமா என எண்ணுகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் சுயநலங்களுக்காக, அடுத்தவர்கள்மீது குறை சொல்கின்றனர். ஆனால், தன்மீது உள்ள களங்கத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், விபத்துகளைத் தவிர்ப்பதற்காகவும்தான் நான்கு வழிச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்போது அங்குதான் விபத்துகள் அதிகம் நடக்கின்றன.
இதற்கு லாபநோக்குடன் திட்டம் போட்ட அரசியல்வாதிகளைக் குறை சொல்வதா? அரைகுறையாகச் செயல்படுத்திய அதிகாரிகளைக் குறை சொல்வதா? பொறுப்பில்லாமல் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனஓட்டிகளைக் குறை சொல்வதா?
கிராமங்களுக்கு பஸ்வசதி கேட்கிறோம். ஆனால், ஏதாவது ஒரு பிரச்னை என்றால் பஸ் உடைப்பில் ஈடுபடுகிறோம். தொற்றுநோய் பரவினால் சுகாதாரத்துறையைக் குற்றம் சொல்லும் நாம், ஊரைச் சுற்றிக் குப்பைகளைக் கொட்டுகிறோம். மலஜலம் கழித்து சுகாதாரக்கேடு செய்கிறோம்.பள்ளி கல்லூரிகளில் தரமான கல்வியை எதிர்பார்க்கும் நாம், மாணவனை ஆசிரியர் கண்டித்துவிட்டால் கூக்குரலிடுகிறோம். தினந்தோறும் மின் தட்டுப்பாடு என அலறும் நாம், விழாக்காலங்கள் உள்பட பல்வேறு நாள்களில் அலங்கார விளக்குகளைப் பயன்படுத்தி மின் விரயம் ஏற்படுத்துகிறோம்.
இப்படி ஒவ்வொன்றுக்கும் அடுத்தவரைக் குற்றம் சொல்லும் பொதுமக்களாகிய நாம், தம்மை தாம் நன்கு பரிசோதித்து கொள்ள வேண்டும். தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இலவசங்களை அறவே வெறுக்க வேண்டும்.
நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்ற எண்ணம் மேலோங்கி, ஒவ்வொரு தனிமனிதனும், தனக்கும் சமுதாயத்தில் கடமைகள் உள்ளன என்பதை உணர்ந்தால் நல்லதொரு சமூகம் உருவாகும்.
நல்லதொரு சமூகம் உருவானால்தான், சிறந்த அரசியல்வாதிகளும், சிறந்த ஆட்சியாளர்களும், ஏன் பெருந்தலைவர்களும்கூட அந்தச் சமுதாயத்தில் இருந்து தோன்றுவார்கள். அப்போதுதான் இன்று வறண்டு கிடக்கும் ஜனநாயகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும்.

வை.இராமச்சந்திரன்

First Published : 03 Feb 2011 01:57:24 AM IST
http://www.dinamani.com

No comments:

Post a Comment