Wednesday, February 2, 2011

அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

Post under விம‌ர்ச‌ன‌ம் நேரம் 08:46 இடுகையிட்டது பாலைவனத் தூது

சாண் ஏறினால் முழம் சறுக்கும் கதையாக அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது.

விலைவாசி உயர்வால் அல்லலுறுவது சாதாரணமக்களுக்கு வாடிக்கை என்றால் கலைஞர் போன்ற ஆட்சியாளர்களுக்கு இதுவேடிக்கையாக மாறிவிட்டது.

வெங்காயத்தின் விலை ஏற்றத்தைக் குறித்துக் கேட்டால் 'பெரியாரிடம்' கேளுங்கள் என நகைச்சுவையாக கூறுகிறார் அவர்.

மேல்தட்டு கனவான்களின் செழிப்பான வாழ்க்கைதான் இந்தியாவின் வளர்ச்சியாக அடையாளங் காட்டப்படும் வேளையில் துயரத்தி உழலும் சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றி யார் கவலைப்படுகின்றார்கள்.

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வின் திரை மறைவில் சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்களை நுழையவிட முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

வெங்காயம் உள்பட பல அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததும், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில மையங்களிலிருந்து வெளியான கருத்துக்களும் மேற்கண்ட சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பூண்டு, சில காய்கறிகள் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறியதற்கான காரணம் மர்மமாகவே உள்ளது.

தேசிய விவசாய கூட்டுறவு சந்தையியல் கூட்டமைப்பின் மேலாண்மை இயக்குநர் சஞ்சீவ் சோப்ரா கூறியது என்னவெனில், இவ்வளவுதூரம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததற்கு காரணம் என்னவென்று புரியவில்லையாம்.

இந்தியாவில் பெரிய வெங்காயம் அதிக உற்பத்தியாகும் மாநிலங்களான மஹாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தானில் பருவநிலை தவறி மழைப் பெய்ததால் வெங்காயத்தின் உற்பத்தியை கடுமையாக பாதித்தது. ஆனால், விலை ஏற்றத்திற்கு இது காரணமல்ல .

வெங்காய விலை உயர்வுக்கு காரணம் பதுக்கல்தான் எனவும், இந்தியாவில் போதுமான வெங்காயம் கையிருப்பாக உள்ளதாக வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பெய்த மழை வெங்காயத்தின் உற்பத்தியை பாதித்த பொழுதிலும், கடந்த ஆண்டை விட 10 லட்சம் டன் அதிகமாக வெங்காயம் உற்பத்திச் செய்யப்பட்டுள்ளது என ஆனந்த் சர்மா தெரிவிக்கிறார்.

வழக்கத்திற்கு மாறாகவே 20 சதவீத வெங்காயம் சந்தைக்கு வந்ததாக சஞ்சீவ் சர்மாவும் ஒப்புக்கொள்கிறார். பதுக்கி வைப்பதுதான் விலை உயர்வுக்கு காரணம் என்பது உறுதி .ஏற்றுமதியை தடைச்செய்து, இறக்குமதிக்கு சுங்கவரியை நீக்கியபிறகு வெங்காயத்தின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. ஆனால், விலை உயர்வுக்கு காரணம் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களை கண்டறிவது அத்தியாவசியமல்லவா?

சில்லறை வியாபாரத்தை கபளீகரிக்க களமிறங்கியுள்ள பெரும் நிறுவனங்கள் இதன் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் நடந்த ஊழல் அரசியல் சீரழிவை மட்டுமல்ல, அரசு கொள்கை முடிவுகளில் தரகு முதலாளிகள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்பதையும் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.

இந்தியாவின் சில்லறை வியாபாரத்தின் மீது நோட்டமிட்டுள்ள சர்வதேச தரகு நிறுவனங்கள் அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி வட்டமிடுகிறார்கள்.

அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்தபொழுது விடுத்த கோரிக்கை என்னவெனில், இங்குள்ள சில்லறை வியாபாரத்தின் வாசலை திறந்துவிடவேண்டும் என்பதாகும்.

ஒபாமாவுக்கு முன்பு பிரிட்டனின் பிரதமர் டேவிட் காமரூனும், ஒபாமாவுக்கு பிறகு பிரான்சு அதிபர் சர்கோஸியும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஜி-20 நாடுகளின் மாநாடும், உறுப்பு நாடுகளிடம் சில்லரை வியாபாரத் துறையில் நடைமுறையிலிருக்கும் தடைகளை மாற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. பெரிய நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசுகளுக்கிடையேயான தவறான உறவுக் குறித்த தகவல் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான நீரா ராடியாவின் டேப்பில் மட்டுமல்ல, சில தினங்களுக்கு முன்னால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணமும் கூறுகிறது.

2008 ஜனவரியில் அமெரிக்க-ஸ்பெயின் வர்த்தக அதிகாரிகள் ஒரு உத்தியை கையாண்டனர். சில்லரை வியாபாரத்தில் உணவுப் பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்துவதே அந்த உத்தி.தரகு முதலாளிகள் வேடிக்கை பார்க்க சாதாரண மக்களை துயரத்தில் ஆழ்த்தும் விலைவாசி உயர்வு எதேச்சையானதா?

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஒரு புறம் ஏறிக்கொண்டிருக்க நமது வர்த்தக அமைச்சர் ஆனந்த்சர்மா, போதிய உணவுப்பொருட்கள் கிடங்கில் உள்ளன எனக் கூறியதற்கு விமர்சகர்கள் வேறொரு பொருள் கொள்கின்றனர். அது என்னவெனில், நுகர்வோருக்கு பொருட்களை கொண்டு சேர்க்க வலுவான கட்டமைப்பு இல்லையாம். அதுவும் சரிதான். ஆனால், பொது விநியோகமுறையை வலுப்படுத்துவதற்கு பதிலாக நமது வர்த்தக அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? இதர துறைகளை சார்ந்த அமைச்சர்களை அழைத்து கூட்டம்போட்டு சில்லறை வியாபாரத்தில் தரகு முதலாளிகளை கொண்டுவருவது பற்றி ஆலோசித்துள்ளார்.

வெங்காய விலை உயர்வுக்கும், வெளிநாட்டு முதலீடுகளை சில்லறை வியாபாரத்தில் அனுமதிப்பதற்கும் சம்பந்தமில்லை என ஆனந்த் சர்மா கூறினாலும், அதனை நம்ப இயலவில்லை. அரசின் தலையீட்டால் வெங்காயத்தின் விலை குறைந்தபொழுது தக்காளி மற்றும் பூண்டின் விலை திடீரென மீண்டும் உயர்ந்துள்ளதை கவனிக்கவேண்டும்.

உற்பத்தியுடன் தொடர்பில்லாத திட்டமிட்ட விலை உயர்வாகவே இது கருதப்படுகிறது.

விலை உயர்வை பற்றி அரசு உண்மையிலேயே கவலைக் கொள்கிறது என்றால், என்ன செய்திருக்க வேண்டும்? தனியார் தரகு முதலாளிகளை சில்லறை வியாபாரத்தில் நுழைய அனுமதிக்காமல், பொதுவிநியோக கட்டமைப்பை வலுப்படுத்தியிருக்க வேண்டும். அரசுக்கு முக்கியம் சாதாரண மக்கள் படும் துயரமா? அல்லது வெளிநாட்டு தரகு முதலாளிகளான வால்மார்ட்டும், டெஸ்கோவுமா? என்பது விரைவில் நிரூபணமாகும். இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் தற்காலிகம்தான்.

பொதுவிநியோக முறையை சரிச்செய்யவேண்டும் என்ற சிந்தனைக்கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை.அதேவேளையில் தரகு முதலாளிகளுக்கு சில்லறை வியாபாரத்தை திறந்துவிட அனுமதிப்பதுக் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

இவ்வழியில் பயணித்த அமெரிக்கா, பிரான்சு, பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே போன்ற நாடுகள் அதன் பலனை அனுபவிக்கின்றன. வியாபார தரகு முதலாளிகள் வருகைப் புரிந்ததன் காரணமாக சில்லறை வியாபாரிகள் மட்டுமல்ல, விவசாயிகளும் நசிந்துபோயினர்.

உணவுப்பொருட்களின் விலை உயர்வு நமக்கு சுட்டிக்காட்டுவது என்னவெனில் தனியார் குத்தகைதாரர்களுக்கு மூக்கணாங்கயிறு கட்டி, பொதுவிநியோக முறையை வலுப்படுத்துவதே! ஆனால் தற்போது நடந்துவரும் நிகழ்வுகள் எதிர்காலத்தைக் குறித்த பீதியை ஏற்படுத்துகின்றன.

விமர்சகன்
http://paalaivanathoothu.blogspot.com

No comments:

Post a Comment